• ஹாய் மக்களே! நம் Nectar Novels தளத்திற்கு நல்வரவு🙏😍😍 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள் nectarnovels.ss@gmail.com 🩷 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...👇 வேதா விஷால் & அனன்யா🙏💖

நிழலாக துணையாக... 3

VedhaVishal

Administrator
Staff member
Jun 17, 2024
58
208
53
Chennai
நிழலாக துணையாக... 3
தே
வசேனாதிபதி ஒரு திருமணத்திற்குப் போக நினைக்க அவனுக்கே திடீர்த் திருமணம் ஆனதில் அன்று திட்டமிட்ட எதையும் செய்ய மனமில்லாமல் போனது.

நேஹா, நிர்மல் தவிர, வீட்டுத் தோட்டத்திலும் , பசு, பக்ஷி, நாய், குதிரைகளை பராமரிப்பதிலும் வீட்டு வேலைகளில் உதவவும் இன்னும் இரண்டு வேலையாள்கள் இருந்தனர்.
பழத்தோட்டத்துப் பணியாள்கள், க்ளீனிக்கில் உதவுபவர்கள் தனி.

முதலில் திகைத்து நின்ற வீட்டுப் பணியாளர்களுக்குத் தன் திருமணம் குறித்து சுருக்கமாகச் சொன்னான்.

பிறகு “நிர்மல், நீ போய் நம்ம வீட்ல விளைஞ்ச காய்கறி, தோட்டத்துப் பழம் ரெண்டையும் சேலம் கந்தாஸ்ரமத்துல குடுத்துட்டு வா. நல்ல ஸ்வீட்டா ரெண்டு கிலோ, மிக்ஸர் மாதிரி ஏதாவது கொஞ்சம் வாங்கிக்க” என்றான்.

உத்ரா “பசிக்குது டாடீ”

“நேஹா, சாப்பாடு ரெடியா?”

நேஹா காலை உணவா, மதிய உணவா என்று விழித்தாள்.

உத்ரா “தோசை செஞ்சு தரியா டாடீ?”

“மாவு இருக்கா?” என்றவன் உத்ராவிற்கு மட்டும் மெலிதாக, சிறிதாக இரண்டு தோசை வார்த்து தேங்காய் சட்னியுடன் எடுத்து வந்தான்.

சாப்பாட்டு மேஜை மேல் சட்னி, சாம்பார், இருக்க, நேஹா சுடச்சுட தோசை வார்த்து எடுத்து வந்தாள்.

முதல் முறையாக சர்வதேச விமான நிலையத்தில் நிற்பவளைப் போல் தயக்கத்துடன் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த அலர்மேல்வள்ளியை வந்து சாப்பிடுமாறு ஜாடை காட்டினான்.

ஜீப் சாவியுடன் பதினோரு மணிபோல் வெளியேறியவன் திரும்பி வந்தது இரவு ஏழு மணிக்கு.

பதினோரு வருடங்களாகப் பேச்சு வார்த்தை இல்லாத மாமன் மகளுடன் அன்று நடந்த தீடீர் திருமணத்தை, அதிலும் காதல் என அலர்மேல்வள்ளி போட்ட குண்டை, சிந்திக்கவும் ஜீரணிக்கவும் தேவசேனாதிபதிக்குத் தனிமையும் அவகாசமும் தேவைப்பட்டது.

‘சேனாதிபதி ஆர்சர்ட்ஸ்’ ஸுக்குள் சென்றவன், நேரே ஆரஞ்சுப் பழ மரங்கள் வரிசை கட்டி அடர்ந்து நின்ற பகுதிக்குச் சென்று ஆளரவமற்ற இடத்தில் ஜீப்பை நிறுத்தினான்.

முப்பத்தி மூன்று வயது நடக்கிறது. இன்று காலை வரை திருமணம் குறித்த எந்த எண்ணமும் இல்லாதவன், ராணுவத்தில் இருந்தபோது சில பெண் அதிகாரிகள் அவர்களே நேரடியாகவும் , சில அதிகாரிகள் தங்கள் மகளுக்கு உகந்த வரனாகவும் அணுகி இருக்கிறார்கள்தான். இவனுக்குதான் எதிலும் யாரிடமும் நாட்டமில்லை.

தன் குடும்பம், பின்னணி, உத்ரா குறித்த கேள்விகளை தேவசேனாதிபதி அறவே விரும்பவில்லை.

அதோடு உத்ரா பற்றித் தெரிய வந்ததுமே பெரும்பாலும் திருமணம் பற்றி அவனைக் கேட்பதை நிறுத்தி விடுவர் அல்லது நிபந்தனை விதிக்கத் தொடங்குவர்.

‘நானே பாத்து, நானே சம்பந்தம் பேசி, நானே கல்யாணமும் பண்ணி…’ நினைக்கவே அசதியாக இருக்க, சிரித்து மழுப்பிவிடுவான்.

தன்னை விடப் பத்து வயது சின்னப்பெண்ணை எதிர்கொள்ளத் தயங்கி இங்கு வந்து ஒளிந்து கொண்டதில் கொஞ்சம் வெட்கமாகக் கூட இருந்தது.

தேவசேனாதிபதி அலர்மேல்வள்ளியை கடந்த ஏழெட்டு மாதங்களுக்கு முன் புதிதாக வாங்கிய அவளது டாச்ஷண்ட் (Dachshunds) நாய்க்கு வேக்ஸினேஷன் போடுவதற்கென இவனது க்ளீனிக்கிற்கு வந்தபோதுதான் முதலில் பார்த்… தப்பு, தப்பு ,தப்பு, பத்துப் பன்னிரெண்டு வயது சிறுமியாகப் பார்த்தவளை மீண்டும் பார்த்ததாக நினைவு.

அதற்குப் பின் ஒரு ராஜபாளையம், இரண்டு Toy Poodle என வெவ்வேறு நாய்களுடன் அடிக்கடி வரத் தொடங்கினாள். ஒருமுறை அவள் வந்தபோது புதிதாக வாங்கிய ஒரு chiHuahua வோடு க்ளீனிக் மூடும் நேரம் வந்தாள்.

அவள் வெளியில் சென்றதுமே லைட்டை எல்லாம் அணைத்துவிட்டு, உதவியாளர்கள் கதவைப் பூட்டும் வரை வராந்தாவில் நின்றவன், அவளுக்கெனக் காத்திருந்த வண்டியில் குமரனைப் பார்த்ததும்தான் அவள் யாரெனத் தெரிந்து கொண்டான்.

‘நான் யார்னு தெரிஞ்சும் வராளா, இல்ல யாரோ ஒரு டாக்டர்னு வராளா? எதா இருந்தாலும் நாம அமைதியா இருப்போம்’ என்று முடிவு செய்தவன், மீண்டும் அவளைப் பார்த்தது, இன்று அதிகாலையில் பேருந்து நிறுத்தத்தில்தான்.

‘யாரோன்னு போகாம, தெரிஞ்ச முகம், அதுவும் வயசுப்பொண்ணுன்னு உதவி செய்யப் போனது என்னை எங்க கொண்டுவந்து நிறுத்தி இருக்கு’

“பொண்ணு பார்த்து எடுத்துக்கட்டி கல்யாணம் செஞ்சு வைக்க ஆள் இல்லாத உனக்கெல்லாம் இதுபோல அதிரடியா கல்யாணம் ஆனாதான்டா உண்டு” என்று உரக்கவே சொல்லிச் சிரித்தான் தேவசேனாதிபதி.

‘அதெப்படி எல்லார் முன்னாலயும் பட்டுனு என்னை லவ் பண்றேன்னு சொன்னா?”

‘நான் யாருன்னு தெரிஞ்சதாவே வெச்சுப்போம், லவ் பண்ற அளவு என்னைப் பத்தி என்ன தெரியும் அவளுக்கு?’

‘சேச்சே, யாருக்காகவோ வெய்ட் பண்ணினவ அந்த பொறுக்கிப் பசங்களையும் போலீஸையும் பார்த்ததுல பயந்து போய் முழிச்சுக்கிட்டு நின்ன நேரம் நான் போய் தொக்கா மாட்டினேன். செம டயமிங்டா தேவா”

அந்த மாப்பிள்ளைப் பையனின் அவமானத்தை விழுங்கி ஆத்திரத்தை அடக்கிய முகம் தேவாவின் நினைவிலாடியது.

‘அவன் பேரு… ஹான்… பிரகாஷ். நல்ல பேலன்ஸ்டான பையனா தெரிஞ்சான். இருபத்தஞ்சு, இருபத்தாறு வயசுதான் இருக்கும். வசதியானவங்களா தெரிஞ்சுது. பார்க்கவும் ஹேண்ட்ஸமாதான் இருந்தான். அவனை விட்டு எதுக்காக, யாரைத் தேடிப் போனா? இந்தக் காலத்துப் பொண்ணுங்களோட எதிர்பார்ப்பு என்னன்னே புரியலையே’

‘டேய், ஏற்கனவே அவளை விட வயசு ஜாஸ்தி. இதுல பூமர் அங்கிள் பட்டம் வேற கேக்குதா உனக்கு?’

திடீரென, தன்னால் மீண்டும் அந்த வீட்டில் மாட்டிக்கொண்ட அலர்மேல்வள்ளி அங்கிருந்து வெளியேறி, அவள் காத்திருந்த காதலனுடன் சேர்வதற்காகத் தன்னை உபயோகித்துக் கொண்டாளோ என்ற யோசனை எழவும் சிறிது கோபமும் ஏமாற்றமும் எழுந்தது.

“பே ஷரம் (வெட்கமற்றவன்) இடியட், இந்தக் கல்யாணத்துக்கே இவ்வளவு ஃபீலிங்காடா, புடிக்காத பொண்டாட்டி மேல பொஸஸிவ்நெஸ் வேற, விளங்கிரும்டா’

‘எதிரே பார்க்காத, யோசனையே இல்லாம நடந்த கல்யாணம், இதுல பிடித்தம் எங்க வந்தது?’

‘தெருவுல போற யாரோ ஒருத்தின்னா சரி. தெரிஞ்ச பொண்ணு, க்ளையன்ட்ன்னா கூட ஓகே. அதிகம் பழகாததால மாமா பொண்ணுங்கறதைக் கூட விட்டுறலாம். தாலியும் கட்டி, பொண்டாட்டினு ஆன பிறகு அப்டி எப்டி விட முடியும்?’

‘மாமா பொண்ணு!’

இன்று நடந்தவற்றிலேயே தேவசேனாதிபதிக்கு அதிக ஆச்சரியம் அளித்தது, அவனது ஆச்சி வள்ளியம்மையும் மாமன்களும் தன் மறுப்புகளை மீறி அலர்மேல்வள்ளியைத் தனக்குத் திருமணம் செய்து கொடுத்ததைத்தான்.

‘பெரிய மாமா சிவராஜிற்கும் ராதா அத்தைக்கும் அதிக விருப்பமில்லையோ?’

‘ஆமா, நீ வரிசையோட போய் முறைப்படி பொண்ணு கேட்டு, அவங்க மறுத்துட்டாங்க… இதுவே மானம் போன வரைக்கும் போதும்னு அவங்களோட கௌரவத்தை இழுத்துப் புடிக்கறதுக்காக நடந்த கல்யாணம்… ஆடு மாதிரி வகையா போய் சிக்கிட்டு… போவியா’

தன் தாயின் பிறந்த வீட்டுடனான உறவு, சண்டை, விலகல் என ரயில் தொடராய் ஏதேதோ எண்ணங்கள். எங்கெங்கோ சுற்றி, எத்தனையோ அனுபவம் பெற்று, பல இன, மொழிப் பெண்களோடு நட்பு பாராட்டி, வந்த ப்ரபோஸல்களை எல்லாம் மறுத்துக் கடைசியில் முறைப் பெண்ணோடு அதிரடிக் கல்யாணம் நடந்ததை நினைக்கச் சிரிப்பு வந்தது.

மேகங்கள் தாழத் தவழ, குளிர் படர்ந்து பனிக்காற்று வீசியதில் உடல் சூடு வேண்ட, பசித்தது. ஜீப்பிலிருந்து இறங்கி இரண்டு ஆரஞ்சுப் பழங்களைப் பறித்து வந்து உரித்துத் தின்றான்.

உரிக்கும்போதே தோலியில் மஞ்சளாகப் பழுத்திருந்த பகுதியைத் மென்றவனுக்குத் தாயின் நினைவில் பெருமூச்சு எழுந்தது. ஆறாத, தீராத ரணம்! ‘எனக்கு மட்டும் ஏன் இப்படி?’

குளிர்காலம், மலைப் பிரதேசம் ஆதலால் மேகக் கூட்டத்துக்கிடையே வேகமாக அஸ்தமித்த சூரியனைப் பார்த்தவாறே கண்ணயர்ந்தான்.

நரி ஊளையிடும் சத்தம் கேட்டுக் கண்விழித்தவன் மை இருட்டில் தடுமாறி தன் மொபைலை எடுத்து ஆன் செய்து பார்க்க, நிர்மலிடம் இருந்தும் வேறு சில நண்பர்களிடம் இருந்தும் ஏராளமான தவறிய அழைப்புகள். நேரத்தைப் பார்க்க ஏழு மணி.

சேலத்தில் இருக்கும் அவனது தந்தையின் நண்பரும் (அவர் மகனுக்குதான் இன்று திருமணம்) கோவையில் இருக்கும் அவனது தந்தையின் அத்தையும் அழைத்திருக்க, புருவம் சுளித்தான்.

பல வருடங்கள் எந்த விதத் தொடர்பும் இல்லாது கடந்திருக்க, இரண்டு வருடங்களுக்கு முன் அருணாச்சலில் இருந்தவனைக் கண்டு பிடித்து அழைத்தார்.

தேவசேனாதிபதியின் தந்தையின் மறைவுச் செய்தி அறிந்தும் விசாரிக்காதவர் இப்போது ஏன்?

“நீ மிலிட்டரில நல்ல வேலைல இருக்கறதால என் பேத்திய உனக்குக் கட்டிக் குடுக்கலாம்னு இருக்கேன். உன் வயசுதான் அவளுக்கும் ” என்று முடிவு செய்துவிட்டுப் பேசினார். இதில் உத்ராவுக்கான நிபந்தனைகள் தனி!

“வேற இடம் பாருங்க. எனக்கு விருப்பம் இல்லை’ என்று தணிவாகவே மறுத்து விட்டான். இன்று வரை அவ்வப்போது அழைத்துக் கேட்கிறார்.

‘அதற்குள் இந்த பாட்டிக்கு செய்தி சொன்னது யார்?’

தந்தையின் நண்பருக்கு அழைத்துப் பேசி வாழ்த்தைக் குடுத்துப் பெற்றுக் கொண்டான்,

‘எங்க டாடி இருக்க, எப்ப டாடி வருவ?’ என நச்சரிக்கும் உத்ராவிடம் இருந்து இந்நேரம் வரை ஒரு அழைப்பு கூட வராதது ஆச்சரியமளித்தது.

நிர்மலிடம் இருந்து மீண்டும் அழைப்பு வந்தது.

“போலோ பாய்”

“எங்க ஸார் இருக்கீங்க, உடனே வீட்டுக்கு வாங்க ஸார்”

“என்னடா, ஏதாவது பிரச்சனையா, உத்ராக்கு….”

“நீங்க வாங்களேன்”

பழகிய இடம் என்பதால் மை இருட்டிலும் ஏழாவது நிமிடம் வீட்டில் போய் நிற்க, தோட்ட நிர்வாகி, சூபர்வஸர், க்ளீனிக் ஸ்டாஃப், இரண்டு சக மருத்துவ நண்பர்கள், வனச்சரக அதிகாரிகள் மூவர் என கூட்டமாய் வாழ்த்து சொல்ல வந்திருந்தனர். சிலர் மனைவியருடன் வந்திருந்தனர்.

“அஞ்சே நிமிஷம்” என மாடியில் இருக்கும் தன் அறைக்குச் சென்றவன் சரியாய் நான்கு நிமிடங்களில் பிரவுன் பேன்ட், வெள்ளை நிற டீ ஷர்ட், அதன் மேல் காக்கி டெனிம் ஷர்ட் எனக் கச்சிதமாய் தயாராகி உள்பக்கப் படிகளின் வழியே இறங்கி வந்தவன், அலர்மல்வள்ளி டைனிங் டேபிளில் உத்ராவை அமர்த்தி அவளுக்கு சிண்டு போட்டுக்கொண்டிருந்த காட்சியைக் கண்டு ஒரு கணம் அப்படியே நின்றுவிட்டான்.

இவனைப் பார்த்ததும் உத்ரா “டாடீ, இங்க வா”

“என்னடா பம்கின், செம க்யூட்டா ரெடி ஆகி இருக்க”

“நம்ம வீட்டு பார்ட்டிக்காக டாடீ”

“பார்ட்டீன்னு யாருடா சொன்னா?”

மேஜை மீது ஏறி நின்று தேவசேனாதிபதியை அருகே இழுத்து மேலே சாய்ந்தவள், அவன் காதில் “இவங்க பேர் என்ன?” என்றாள் அலரை.

“நீ கேக்கலையா?”

“நேம் இல்ல டாடி. நான் எப்டி புலானா ஹே ?”
(बुलाओ - அழைத்தல்)

தேவசேனாதிபதி பக்கெனச் சிரித்தபடி நிமிர, அலர்மேல்வள்ளி தன்னையே பார்ப்பது தெரிந்தது.

ஹாஃப் ஒயிட்டில் மெரூனும் கருப்பும் கலந்த மெலிதான ஜரிகையுடன் கூடிய பார்டரில் மிக நுணுக்கமாக வேலை செய்யப்பட்ட கலம்காரி சில்க் புடவை அணிந்திருந்தாள். கழுத்தில் நல்முத்து. நல்ல செறிவான கூந்தல், பராமரிக்கப்பட்ட பளபளப்பான, சீரான சருமம், மலைப் பிரதேசத்தில் பிறந்து வளர்ந்தவர்களுக்கே உரித்தான பொலிவு (freshness), சீராக்கப்பட்ட புருவங்களுக்கிடையே அடர் மெரூனில் ஓரளவு பெரிதான பொட்டு, குளிருக்குத் தேவையெனில் உபயோகிக்கக் கையில் ஷால் என வந்த விருந்தினர்களை எதிர்கொள்ள நேர்த்தியாகத் தயாராகி நின்றவளைப் பார்த்தவனுக்குள் மெச்சுதல் எழ, அலர்மேல்வள்ளி திருமணத்திற்கென முழங்கை வரை போட்டிருந்த மெஹந்தி கண்ணில் பட, சட்டென முகம் மாறினான்.

நீண்ட நேரம் தனிமையில் தன் திடீர் சூழலை சிந்தித்து, அதற்கேற்பத் தன்னை சமன் படுத்திக்கொள்ள முயற்சித்தும், மன நிலையில் பெரிய மாற்றங்கள் இல்லாவிட்டாலும், பொறுமையாகக் கையாள வேண்டும் என்ற தீர்மானத்தோடுதான் வீடு திரும்பினான்.

வாழ்த்த வந்து காத்திருக்கும் நலம் விரும்பிகளும், தானும் தயாராகி, உத்ராவிற்கும் உதவிய அலர்மேல்வள்ளியும் தந்த இதம் அவளது மெஹந்தியால் கலைந்து போனது.

அதென்னவோ நன்றாக சிவந்து, அவளது கைகளுக்கு அழகாகத்தான் இருந்தது. அது யாருடனோ நடக்க இருந்த திருமணத்திற்கென, யாருடனோ சென்று சேர்வதற்கென போடப்பட்ட மெஹந்தி, அது தனக்கானது இல்லை என்ற எண்ணம் பீறிட, மீண்டும் இறுகினான்.

“டா…டீ”

தன் கன்னம் பிடித்துத் திருப்பிய உத்ராவிடம் “அப்புறமா அவங்களையே கேளு, இப்ப பார்ட்டிக்கு போகலாம்” என அவளைக் கையில் பிடிதத்துக்கொண்டு முன்னறையை நோக்கி நகர்ந்தான்.

அந்த அங்கணத்தைக் கடந்த பிறகுதான் அலர்மேல்வள்ளி உடன் வரவில்லை என்பதை உணர்ந்தவன், உத்ராவிடம் “அவங்களைக் கூப்பிடு”

“அதான் டாடீ, எப்டி?”

வழக்கம்போல் அவளது அந்தக் கூர்மையான பதிலில் ஈர்க்கப்பட்டு “நீ இருக்கியே…” என்றவன், அலரைத் திரும்பிப் பார்த்து ‘வா’ என்று தலையசைத்தான்.

நிர்மல் வாங்கி வந்த இனிப்பு, காரம், தேவகி செய்த வெங்காய பக்கோடா, டீ, பழசாலட் எனப் பரிமாறி, பதிலுக்கு அவர்களின் கேள்விகள் நிறைந்த பார்வைகளையும் வாழ்த்துகளையும் பெற்றுக் கொண்டனர்.

குறிப்பாக ஓரிருவரைத் தவிர ‘உத்ரா யார்?’ என்ற கேள்வி எல்லோரிடமும் இருந்ததை உணர முடிந்தது. அது அலர்மேல்வள்ளியையும் குழப்பியது தெளிவாகத்(!) தெரிந்தது.

*******************



தேவசேனாதிபதி அந்தப் பழைய காலத்து வீட்டை, மீண்டும் ஏற்காட்டிற்கே வருவதாக முடிவு செய்தபின் அதன் பழமை மாறாது, நவீனப் படுத்தும் திறமையுள்ள பில்டர்களைக் கொண்டு செப்பனிட்டிருந்தான்.

தனியாளாக ஆர்மியின் ஆஃபீஸர்ஸ் மெஸ்ஸில் காலம் தள்ளியவன், உத்ரா வந்தபின், கடைசி எட்டு மாதங்கள் அருணாச்சலப் பிரதேசத்தில் இருந்து மீரட்டிற்கு மாற்றல் வாங்கிக்கொண்டு, குவார்ட்டர்ஸுக்குக் குடிபோனான்.

ஒன்றரை வயது உத்ராவை கவனித்துக்கொள்ளவென வந்த நேஹாவும் நிர்மலும் மீரட்டை சேர்ந்தவர்கள். நம்பகமாக, நேர்மையாக, விஸ்வாசத்துடன் உழைத்தனர்.

தேவசேனாதிபதி “அங்கேயும் இதே வேலை பார்க்கலாம். இதேபோல வருஷத்துல ரெண்டு முறை ஊருக்கு வரலாம். குடி இருக்க இடமும் நிர்மலுக்கு வீட்டுலயும் தோட்டத்துலயும் வேலையும் தரேன். உன் பசங்களை படிக்கவும் வைக்கறேன். விருப்பம் இருந்தா வரலாம்” என்றதற்கு உடனடியாக ஒத்துக்கொண்டனர்.

நேஹாவும் நிர்மலும் காதலித்துத் திருமணம் செய்துகொண்டவர்கள். நிர்மலுக்கு வரதட்சணை காரணமாகத் திருமண வயது கடந்த இரண்டு தங்கைகள் இருந்தனர்.

வரதட்சணை விஷயத்தில் சக்தியை மீறிய எதிர்பார்ப்பு இருந்தில், குடும்பத்தினர் நிர்மலிடம் அதிகம் எதிர்பார்த்தனர். நிரந்தர வேலை, வருமானம், பாதுகாப்பு என்றதும் வந்துவிட்டனர்.

ராணுவத்தில் கால்நடை மருத்துவராக ஷார்ட் சர்வீஸில் ஐந்து வருடங்கள் பணி புரிந்த பின் இங்கு வந்த தேவசேனாதிபதி, வனத்துறை கால்நடை மருத்துவராக ஒப்பந்த அடிப்படையில் பதிந்து கொண்டான்.
பொதுவாக பராமரிப்பிற்கென க்ளீனிக்கிற்கு, (அநேகமாக நாய்கள்தான்) வருபவர்கள்தான் எனினும், நிறைய எண்ணிக்கையில் மாடு, குதிரைகள் வைத்திருப்பவர்கள் அழைத்தனர்.

ராணுவத்தில் இருந்தபோதும் இப்போது வனச்சரக அலுவலகத்திலிருந்தும் எந்நேரமும் அழைப்பு வரலாம் என்பதால், இவன் அப்படி செல்ல நேர்கையில் நேஹா வந்து உத்ராவுடன் இருப்பாள்.

வேலையாட்கள் வந்து புழங்கும் வசதிக்காகவே, உத்ராவை தனி அறையில் உறங்கப் பழக்கி இருந்தான்.

விருந்தினர்கள் சென்றபின், புலாவ், தால் என டின்னர் முடிந்து, ஒன்பது மணிக்குப் பணியாள்கள் அனைவரும் சென்றுவிட, தேவசேனாதிபதி தொலைக்காட்சியில் ஆழ்ந்திருந்தான்.

கண்ணை கசக்கிக் கொண்டே வந்த உத்ரா “டாடீ, நின்னி” என அவன் மடியில் ஏறி அமர்ந்து கொண்டாள்.

“ஓகே பேபி, ஸ்லீப் ” என்றவன், வாகாகப் படுக்க வைத்துத் தட்டிக்கொடுத்தான்.

டைனிங் சேரில் அமர்ந்து பார்த்துக் கொண்டிருந்த அலர்மேல்வள்ளிக்கும் நேற்றிரவில் இருந்து தூங்காததில் தூக்கம் சொக்கியது. காலையில் இருந்து நடந்த எதையும் யோசிக்கவோ, அசைபோடவோ கூடத் தோன்றவில்லை.

அடுத்தடுத்து பங்களாக்கள் இருக்கும் அவளது வீடு இருக்கும் பகுதியை விட கிளியூர் அருவியின் அருகே, பழ மரங்கள் அடர்ந்த தோப்பு என்பதால் குளிர் பல்லைக் கிட்டியது. வீட்டிலிருந்து வந்த உடைகளில் ஒரு ஷால் மட்டுமே இருந்தது. ஸ்வெட்டர், ஸ்வெட் ஷர்ட், ஜாக்கெட், கார்டிகன் என எதையும் காணோம்.

அந்த ஷாலையே போர்த்திக்கொண்டு ஒடுங்கி உட்கார்ந்திருந்தாள். உண்மையில் தாலி கட்டிய கையோடு வண்டியில் ஏறி வந்துவிட்டதில் செருப்பு கூட அணியவில்லை. நல்லவேளையாக அம்மாவிடம் அதைக் கேட்டிருந்தாள்.

அலர் தன்னோடு அந்த வீட்டிலேயே இருப்பாள் என்பதில் உத்ராவிற்கு அத்தனை மகிழ்ச்சி.
முதலில் சிறிது வெட்கப்பட்டாலும், சட்டென ஒட்டிக்கொண்டு அலரையே சுற்றிச் சுற்றி வந்தாள்.

பறவைகள், மாடு, நாய்கள், குதிரை என எல்லாவற்றையும் பெயருடன் அறிமுகம் செய்துவைத்தாள்.

‘வெட்ரினரி டாக்டர் பொண்ணுன்னு ப்ரூவ் பண்ணுது பாரு’ என்று சிரிப்பு வந்தாலும் உண்மையில் இன்று முழுவதும் அலருக்கு உத்ராதான் துணையாக இருந்தாள். சளசளவெற்ற மழலைப் பேச்சும் சிரிப்பும், நிமிடத்திற்கு நாலு கேள்வியுமாய் கலகலத்தாள் குழந்தை.

தேவசேனாதிபதி தூங்கிய குழந்தையை மாடியில் இருந்த அவளது அறையில் படுக்கவைத்தான்.

மதியமே உத்ரா தன் அறையைக் காட்டி இருந்தாள்தான். ஆனால், இரவில் அவள் தனியாகத்தான் உறங்குவாள் என்பதை அலர்மேல்வள்ளியால் ஏற்க முடியவில்லை.

‘அம்மா இல்லாத குழந்தையை யாராச்சும் இப்டித் தனியா படுக்க வைப்பாங்களா?’

மீண்டும் கீழே வந்து பூட்டுகளை சரிபார்த்து, விளக்குகளை அணைத்துத் தண்ணீர் பாட்டிலுடன் படிகளின் அருகே சென்றவன் திரும்பி வந்தான்.

“தூங்கற ஐடியா இருக்கா, இல்ல இன்னிக்கும் ஏதாவது சாகசம் பண்ண உத்தேசமா?”

“...”

“ஹலோ ஒய்ஃப் மேடம்…”

அலர்மேல்வள்ளி “நா… நான் எங்க… நான் உத்ரா கூட போய் தூங்கவா?”

“ஏன், நீயும் நானும் கல்யாணத்தன்னைக்கி ராத்திரியே தனித்தனியா தூங்கினோம்னு ஏற்காடு முழுக்க நியூஸ் பரவணுமா உனக்கு, நம்ம தேவகி அக்கா ஒருத்தர் போதும்”

“...”

“மேல வா”

கணிசமான அளவில் இருந்த அவனது அறைக்குள் நுழைந்து திருதிருவென விழித்தபடி நின்றவளை பார்த்தபடி கதவைச் சாற்றினான்.

“நாளைக்கு உன் திங்ஸ்லாம் இந்த ரூம்லயே செட்டில் பண்ணிக்கணும், சரியா?”

“இல்ல, நான் வேற ரூம்ல…”

“நீதானேடீ உன்னை லவ் பண்றேன் மாமா, விட்டுக் கொடுக்காதன்னு சொன்ன?”

“...”

“என்ன, நேத்து விட்டதைப் புடிக்கப் போகணுமா?”

“...”

கட்டிலில் அமர்ந்தவன் “வா, வந்து படு, ஜல்தி”

“...”

“உனக்காக பெட்ஷீட், தலகாணி உறையெல்லாம் புதுசா போட்டிருக்கு பாரு”

“அந்தக் கதவு பாத்ரூம். நீ படுத்தா நானும் லைட்டை அணைச்சுட்டு தூங்குவேன்” எனவும் பொடக்கென கட்டிலின் ஓரத்தில் படுத்துக்கொண்டாள்.

கனமான ரஜாயை அவள் புறம் தள்ளியவன் “விழுந்து வாராம, ஒழுங்கா, உள்ள நகர்ந்து படுத்துத் தூங்கு. எனக்கு மனுஷங்களுக்கு வைத்தியம் பார்க்கத் தெரியாது”

“...”

“நீ ஏன், யாருக்காக வீட்டை விட்டுப் போன?”

“உங்களுக்காகத்தான் மாமா”

‘@!?#&%?.... ஏஏஏய்ய்ய்…”

“குட்நைட் மாமா”

***************