• ஹாய் மக்களே! நம் Nectar Novels தளத்திற்கு நல்வரவு🙏😍😍 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள் nectarnovels.ss@gmail.com 🩷 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...👇 வேதா விஷால் & அனன்யா🙏💖

நிழலாக துணையாக... 7

VedhaVishal

Administrator
Staff member
Jun 17, 2024
64
230
53
Chennai
நிழலாக துணையாக... 7

தேவசேனாதிபதியின் தந்தை சண்முகநாதன், ராஜ் ரோஸ்ட்டர்ஸ் குடும்பத்தினருக்கு நிகரான பணக்காரர் இல்லை. ஆனாலும் அவரது தந்தை தேவசேனாதிபதிக்கு (தேவாவின் தாத்தா) இந்த பழத் தோட்டத்தின் மூலம் நல்ல வருமானம்தான். அதைத் தவிர, சேலத்தில் அப்போதே நவீனமான ஒரு டிபார்ட்மென்டல் ஸ்டோர் வைத்திருந்தார். தோட்டத்துப் பழங்கள், காய்கறிகள் உள்பட அனைத்தும் அங்கு கிடைக்கும்.

சாந்திமணி அவ்வப்போது சைக்கிளில் செல்வதைப் பார்த்திருந்த சண்முகநாதனுக்கு மிகவும் பிடித்துப்போக, கல்லூரி படிப்பை முடித்த கையோடு பெற்றோரை நச்சரித்துப் பெண் கேட்கச் சொன்னார். அவர்களும் மிகத் தாமதமாகப் பிறந்த ஒரே மகனின் ஆசையை நிறைவேற்றத் தயங்கவில்லை.

குறை சொல்லி மறுப்பதற்கு எதுவுமில்லை, ஆசைப்பட்டு கேட்கின்றனர், பையனும் பார்க்க நன்றாகவே இருந்தான், உள்ளூர் வேறு. மகள் பக்கத்திலேயே இருப்பாள் போன்ற பல சாதகங்களோடு ஜாதகமும் பொருந்தியதில், ஒரே மாதத்தில் திருமணம் ஆனது.

சண்முகநாதன் மனைவி மீது அத்தனை ஆசையும் காதலும் வைத்திருந்தார். இருவரும் மனமொத்த தம்பதிகளாகத்தான் இருந்தனர். திருமணமான ஆறே மாதங்களில் சாந்திமணி கருத்தரித்தார். அடுத்து சிவராஜின் மனைவி ராதாவும் குழந்தை உண்டானார்.

சாந்திமணிக்கு தேவசேனாதிபதியும், ராதாவிற்கு செல்வராஜும் பிறந்தனர். இரண்டு பேரன்களின் வரவில் மாணிக்கராஜ், வள்ளியம்மை தம்பதிகளுக்கு அத்தனை பெருமையும் சந்தோஷமும்.

சண்முகநாதனுக்கு ஒரு அதீத எதிர்பார்ப்பு இருந்தது. அது அதிகக் கட்டுப்பாடும், பழமையும் நிறைந்த அவரது பெற்றோரால் கூட வந்திருக்கலாம்.

சண்முகநாதனைப் பொறுத்தவரை பெண் என்றால், அம்மா, அன்பு, தாய்மை என உணர்ச்சி மயமான ஒரு பிம்பம். தாயோ, மனைவியோ வீட்டில் இருப்பவர்களின் மேல் பாசத்தையும் அக்கறையையும் பொழிய வேண்டும்.

‘என் பையன் ஒரு நாள் கூட மீன் இல்லாம சாப்பிட மாட்டான்’ என்று பெருமையாகக் கூறியபடி சமைத்து அன்பொழுகப் பரிமாற வேண்டும்.

உடம்பு சரி இல்லை எனில், ‘சளியாடா கண்ணு, ஐய்யோ, காய்ச்சல் வேற அடிக்குதே ’ என்பது போன்ற உணர்வு வெளிப்பாட்டோடு கஞ்சியும் கஷாயமும், வேவு பிடிக்க வெந்நீரும் விக்ஸுமாய் விசனப்பட வேண்டும்.

அவனது பரீட்சைக்கு அவன் படிப்பதற்கு ‘டீ வேணுமா, பழம் சாப்பிடறியா, பசிக்குதா, முறுக்கு வேணுமா, இப்ப தூங்கு, அஞ்சு மணிக்கு எழுப்பி விடறேன்’ என கூடவே இலவு காத்து இடுப்பு பிடிக்க வேண்டும்.

சண்முகநாதனின் தாய் இந்தக் கோட்பாடுகளின் உச்சமாக இருந்து கணவரையும் மகனையும் மொத்தமாகக் கெடுத்து வைத்திருந்தார்.

‘சேவை எல்லாம் செய், செய், செய்’ என்ற எண்ணத்தில், வளர்க்கப்பட்ட சண்முகநாதன், மனைவியிடமும் அதை எதிர்பார்த்தார். இளமையின் வேகமும், கணவனின் கனிவை, பாராட்டைப் பெறும் உத்வேகமும் சாந்திமணியை உந்தியதில், அவர் நெல் என்றால், இவர் சோறுடன் நின்றார்.

ஆசையும் அன்பும் காட்டிய கணவருக்குச் செய்ய சாந்திமணிக்கும் கசக்கவில்லை.
ஆனால், ஒன்றரை வருட வித்தியாசத்திலேயே செந்தூரன் பிறந்தபோது வள்ளியம்மை மகளை வெகுவாக எச்சரித்துதான் அனுப்பினார்.

“சின்னச் சின்ன குழந்தைங்க. அந்த வேலையே சரியா இருக்கும். வீட்டுல உங்க மாமியார், வேலைக்காரங்க எல்லாரும் இருக்காங்க. நீயே எல்லாம் செய்யணும்னு கிடையாது. மாப்பிள்ளையோட தாளத்துக்கு ஆடிட்டு உடம்பு முடியலைன்னு பின்னால வருத்தப்படாத” என சொல்லிஅனுப்பியதற்குப் பலன்தான் பூஜ்ஜியம்.

காலப்போக்கில் சண்முகநாதனின் பெற்றோர்கள் இருவரும் ஒருவர் பின் ஒருவராய் இயற்கை எய்தினர். பெற்றோரை இழந்த சண்முகநாதன் மனைவியிடம் இன்னும் அதிக சலுகைகளை சேவைகளை எதிர்பார்த்து அதை நிறைவேற்றியும் கொண்டார்.

பெற்றோரின் அன்னியோன்யத்தையும், காலையில் துயிலெழுப்புவது முதல் தங்களின் ஒவ்வொரு தேவையையும் பார்த்துப் பரிந்து செய்த சாந்திமணி தேவசேனாதிபதிக்கும் செந்தூரனுக்கும் தாய்மையின் சின்னமாக, உருவகமாகத் தெரிந்ததில் ஆச்சரியம் எதுவுமில்லை.

தேவைப்படும் நேரத்தில் பிள்ளைகளைக் கண்டிக்கும், தண்டிக்கும் வேலையை செவ்வனே செய்த சண்முகநாதன், அதையே மனைவி செய்கையில் அன்போடு, தேனும் பாலும் ஒழுகப் பேச வேண்டும் என எதிர்பார்த்தார்.

தங்களுக்காக உடலால், மனதால் எதையும் செய்யக் கூடிய அம்மாவை தொட்டதற்கெல்லாம் எதிர்பார்க்க இருவருமே தயங்கியதில்லை.

மாறாக, ஆச்சி வீட்டுக்குச் செல்லும்போதெல்லாம், படிப்புக்கும் சேட்டைக்கும் சொல்பேச்சு கேளாமைக்கும், சொன்ன வேலையைச் செய்யாமல் நெளிவெடுப்பதற்கும், தங்கள் தாயிடம் செமத்தியாக மொத்து வாங்கி, அவர்களை எதிர்த்துப் பேசி, அதைத் துடைத்து விட்டு, உடனேயே இயல்பாக உறவாடும் செல்வராஜையும் குமரனையும் காண இவர்களுக்கு ஆச்சர்யமாக இருக்கும்.

முன்பே ஆச்சியின் அதிகார அழுத்தத்தில் அடங்கி இருக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்த ராதாவும் அபிராமியும் பெற்ற பிள்ளைகளும் தங்கள் இஷ்டம்போல் ஆடுவதில் அவர்களை அடி வெளுத்து விடுவர். செல்வாவும் குமரனும் செய்த சேட்டைகளும் அப்படி என்பது தனி.

வள்ளியம்மை ஆச்சியின் “டேய் தேவா, செந்தூ, அம்மாக்கு உதவி செய்யலுன்னாலும் உபத்திரவம் செய்யாதீங்கடா, ஒரு லோட்டா தண்ணி கூட உங்களால தானே எடுத்துக் குடிக்க முயாதா?” என்பது போன்ற அறிவுரைகளுக்கு வெறுமே தலையாட்டுவதோடு சரி.

அதிலும் செந்தூரன் ‘அதை எங்கம்மா சொல்லட்டும்’ என்றோ, ‘எங்கம்மா எனக்கு செய்யறாங்க, உனக்கென்ன?’ என்றோ ஆச்சியிடமே பட்டென எதிர்த்துக் கேட்டுவிடுவான். அதை சாந்திமணி பெருமிதத்துடன் பார்த்து ரசிப்பதைக் காண ஆச்சிக்குப் பற்றிக்கொண்டுவரும்.

சின்னவன் என்பதோ, பத்து வயது வரை பேபி ஆஸ்த்தமாவில் அவஸ்த்தை பட்டதோ, தன் ஜாடையில், நிறத்தில் இருந்ததோ அல்லது இவை எல்லாமோ, செந்தூரன் என்றால் சாந்திமணிக்குக் கொள்ளை பிரியம்.

அதற்காக தேவசேனாபதியிடம் பட்சமாய் நடந்துகொண்டார், அவனிடம் அத்தனை பாசமில்லை என்று அர்த்தமில்லை. தன் பின்னோடே சுற்றும், அடிக்கடி வந்து மடியில் படுத்து, கழுத்தைக் கட்டிக்கொண்டு, ஊர்க்கதை பேசும் செந்தூரனை சாந்திமணி அவனது பதின்ம வயதுகளிலும் கைக்குழந்தையாகவே பாவித்தார்.

அது மட்டுமின்றி, சாந்தாமணிக்கும் செந்தூரனைக்கும் இடையே ஒரு தாய் தன் பதின்ம வயது மகளுடன் சேர்ந்து எதையெல்லாம் பகிர்ந்து பேசிச் சிரித்து அனுபவிப்பாளோ அதே போன்ற நெருக்கமும் சகஜமும் இருந்தது.

இதனால், தந்தைக்குத் தெரிந்தும் தெரியாமலும் சின்னச் சின்ன சலுகைகளை செந்தூரன் அனுபவித்தான்.

தேவசேனாதிபதி ப்ளஸ் டூவில் நல்ல மதிப்பெண்கள் பெற்று, கால்டை மருத்துவத்தை தேர்ந்தெடுத்தான். அவனது விருப்பம் போலவே MVC எனப்படும் மெட்றாஸ் வெட்ரினரி கல்லூரியில் இடம் கிடைத்து ஹாஸ்டலுக்கு சென்றான்.

தேவா அருகே இல்லாத வெற்றிடத்தை, அவனைப் பிரிந்த ஏக்கத்தை சமன் செய்ய சாந்திமணி செந்தூரனுடன் மேலும் நெருங்கினார்.

இருவருக்கும் வயது வித்தியாசம் குறைவு என்பதால், அடுத்த வருடமே செந்தூரனுக்கு கோவையில் உள்ள பொறியியல் இடம் கிடைத்தது.. அவனைப் பிரிய மனமில்லாத சாந்திமணியின் பிடிவாதத்தில் சண்முகநாதன்
டிப்பார்ட்மென்ட்டல் ஸ்டோரை நல்ல விலைக்கு விற்றுவிட்டு, தோட்டத்தை ஐந்து வருட ஒத்திக்கு விட்டுத் தற்காலிகமாக கோவைக்குக் குடிபோனார்

செந்தூரனுக்கு விளையாட்டில் நல்ல ஆர்வம் இருந்தது. மாநில, அளவிலான தடகளப் போட்டிகளில் கலந்துகொண்டு நிறைய கோப்பைகளைப் பெற்றிருக்கிறான். ஏஷியாட், காமன்வெல்த், ஒலிம்பிக்ஸ் என நிறைய கனவுகள் வைத்திருந்தான்.

இண்டாவது வருடம் தொடங்கவுமே, முதல்முறையாக தேசிய அளவிலான ஓட்டப் பந்தத்தில் கலந்து கொள்வதற்கென டெல்லிக்குச் செல்லத் தேர்வானான்.

முன் பயிற்சி, வெள்ளோட்டங்கள், தேர்வு நிலை, போட்டிகள் என கிட்டத்தட்ட நாற்பது நாள்களுக்கு மேல் டெல்லியில் இருக்க வேண்டும். சாந்திமணிக்கு மகனைப் பிரிய மனதே இல்லை எனினும், அவனது கனவு, லட்சியம், விருப்பம்,முன்னேற்றம் கருதி சம்மதித்தார்.

இரவில் தாமதமாகத் தூங்கக் கூடாது, ஹெல்த்தியாக உண்ண வேண்டும், தனியாக எங்கும் போகக் கூடாது, நண்பர்களோடு சேர்ந்து தவறான எதையும் முயற்சிக்கக் கூடாது போன்றவற்றோடு, தினமும் ஒருமுறையாவது பேசி விட வேண்டும் என்ற கூடுதல் நிபந்தனையுடன் புதிதாக ஒரு மொபைல் வாங்கிக் கொடுத்து வழியனுப்பி வைத்தனர்.

செந்தூரனுக்குமே பெற்றோரை, குறிப்பாக அம்மாவை இத்தனை நாட்கள் பிரிய வேண்டியதை எண்ணி வருத்தம்தான்.

தேவசேனாதிபதி தன் பங்கிற்கு சென்னை இரயில் நிலையத்தில் தம்பியைப் போய் பார்த்து வாழ்த்தி, வழியனுப்பிவிட்டு வந்தான்.

செந்தூரனின் போட்டிகள் அனைத்தும் வெற்றிகரமாக முடிந்து, தமிழகத்தின் சார்பாகவும், தனிப்பட்ட முறையிலும் கோப்பைகளை அள்ளி இருந்தனர். அங்கிருந்து புறப்படுவதற்கு இன்னும் இரண்டு நாட்கள் இருந்தது.

விளையாட்டு வீரர்கள் அவரவர் நட்பு வட்டத்தோடு குழுவாக டெல்லியை சுற்றிப் பார்க்கத் தீர்மானித்தனர்.

“அம்மா, எல்லாரும் போறாங்கம்மா. நான் மட்டும் போகலன்னா எப்படிமா?”

“எனக்கு பதினெட்டு வயசாச்சு மா, நான் மேஜர்.எங்கம்மா பர்மிஷன் தரலைன்னா சொல்ல முடியும், அசிங்கமா பண்ணாதம்மா”

“ப்ளீஸ் மா, ப்ளீஸ்மா, உனக்காக ஏதாச்சும் வாங்கிட்டு வரேன். என்னை குட்டிப் பையன் மாதிரி ட்ரீட் பண்ணாதம்மா, ப்ளீஸ் மா” என சாந்திமணியை பல ‘ப்ளீஸ்’ போட்டு, ‘ப்ளீஸ்’ செய்த பிறகுதான் செந்தூரனுக்கு அரைமனதாக அனுமதி கிடைத்தது.

மறுநாள் காலை சரியாக அவன் புறப்படும் சமயம் அழைத்து “பத்திரமா போய்ட்டு வாடா செந்தூ, பாஷை தெரியாத ஊரு வேற, கவனமா இரு. கூட்டத்தோடயே இரு. நல்லா என்ஜாய் பண்ணிட்டு வா”

“ஜெயில் கைதி மாதிரி கன்டீஷன் போட்டுட்டு என்ஜாய் வேறயாம்மா?” எனக் கேலி செய்து சிரித்தான் செந்தூரன். அதுதான் சாந்திமணி கேட்ட செந்தூரனின் கடைசி சிரிப்பு.

நிகழ்ச்சி ஏற்பாட்டளர்கள், டில்லியைச் சேர்ந்தவர்கள் ஏற்பாடு செய்து தந்த ஒரு கார், மற்றும் மூன்று பைக்குகளில் தமிழகம் மற்றும் கேரளாவைச் சேர்ந்த இரண்டு பயிற்சியாளர்களையும் சேர்த்து மொத்தம் பதினோரு பேர் தலைநகரைச் சுற்றிப் பார்க்கப் புறப்பட்டனர்.

சில சமயம் நம்மை மீறி, நம் சுய விருப்பு, வெறுப்புகளைத் தாண்டி சூழலுக்குத் தக்க முடிவெடுக்க வேண்டியது அவசியமாகிறது. ஊர் சுற்றக் கிளம்பிய அந்தக் குழுவில் எல்லோருமே பதினெட்டு வயதைக் கடந்திருந்தாலும் வண்டி ஓட்டுவதற்கான உரிமம் சிலரிடம்தான் இருந்தது. அவர்களில் செந்தூரனும் ஒருவன்.

செந்தூரன் இருசக்கர வாகனம் ஒன்றில் கோட்டயத்தைச் சேர்ந்த ஒருவனுடன் முன்னே சென்ற வாகனங்களைத் தொடர்ந்தான்.

செங்கோட்டை, ஜந்தர் மந்தர், அமர்ஜவான் ஜோதி, இந்தியா கேட், பாராளுமன்றக் கட்டிடங்கள், ஜன்பத்தின் திபெத்தியன் மார்க்கெட், கன்னாட் சர்க்கிள், பாலிகா பஜார், இடையில் ஆந்திர பிரதேஷ் பவனில் ஆந்திரா மீல்ஸ் என மாலை வரை சலிக்காது சுற்றினர். செப்டம்பர் மாதம் என்பதால், இரவு ஏழரை, எட்டு மணி வரை வெளிச்சம் இருந்தது.

பிரபலமான சரோஜ்நகர் மார்க்கெட்டில் சிறிது ஷாப்பிங் செய்தபின், டெல்லி ஸ்பெஷல் சோளே பட்டூரே, ஆலூ டிக்கி, குல்ஃபியுடன் விரைவாகவே டின்னரை முடித்துக்கொண்டு அவர்கள் தங்கி இருந்த இடத்திற்குப் புறப்பட்டனர்.

காரில் வந்தவர்கள் முதலில் புறப்பட்டுச் சென்றனர். இருசக்கர வாகனங்களில் பின்னால் அமர்ந்து வந்தவர்கள், கையில் பைகளுடன் காத்திருக்க, ஓட்டி வந்த மூவரும் சாலையைக் கடந்து தரிப்பிடத்தில் இருந்து வண்டியை எடுத்து வரச் சென்றனர்.

ஒருவர் பின் ஒருவராக பைக்குகளை ஓட்டியபடி, U டர்ன் எடுத்து, காத்திருப்பவர்களின் அருகே வர குறைந்தது எழுநூறு மீட்டர் தொலைவு இருந்தது.

சற்றே குறுகலான, ஆனால் பரபரப்பான, கடைகள் நிறைந்த சாலை. மூவரில் கடைசியாக வந்த செந்தூரன் வளைவில் திரும்புகையில் அவன் பின்னால் அவனது பைக்கு ஒட்டினாற்போல் திரும்பிய ஒரு அரசுப் பேருந்தின் ஓட்டுனர் இரண்டு நொடி தாமதமாக பிரேக் பிடித்ததில், செந்தூரன் பைக்கோடு தூக்கி வீசப்பட்டான். அதைத் தவிர இன்னொரு பைக்கும் ஆட்டோவும் விபத்துக்குள்ளானது.

மூவரில் செந்தூரன் “அம்மா…” என்ற ஓலத்துடன் அங்கேயே, அக்கணமே உயிரிழந்தான்.