• ஹாய் மக்களே! நம் Nectar Novels தளத்திற்கு நல்வரவு🙏😍😍 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள் nectarnovels.ss@gmail.com 🩷 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...👇 வேதா விஷால் & அனன்யா🙏💖

நிழலாக துணையாக... 8

VedhaVishal

Administrator
Staff member
Jun 17, 2024
65
252
53
Chennai
நிழலாக துணையாக... 8

புது தில்லி அரசு மருந்துவமனையில் மூன்று நாள் காத்திருப்புக்குப் பின் பிரேதப் பரிசோதனை செய்து ஆறடி உயர வாலிபனை “திறக்க வேண்டாம்” என்ற எச்சரிக்கையுடன் பொட்டலமாகக் கட்டிக் கையில் கொடுத்தனர்.

தகவல் அறிந்ததும் தேவசேனாதிபதி கோவை சென்று பெற்றோருடன் விமானத்தில் டெல்லி சென்றான். ஏற்காட்டில் இருந்து வள்ளியம்மை ஆச்சி, ஐயா மாணிக்கராஜ், மாமன்கள் நால்வரும் வந்தனர்.

சண்முகநாதன், ஆச்சி, ஐயா, தேவா என எல்லோரும் எத்தனையோ சொல்லியும் சாந்திமணி “ஏற்காடு, கோயம்புத்தூர் எங்கன்னாலும் எம்புள்ளைய நடுவீட்ல வெச்சுக் குளிப்பாட்டி அழமாட்டேன். அவன் சிரிப்பும் துடிப்பும் மட்டும்தான் அங்க இருக்கணும். என்ன செய்யணுமோ, அதை இங்கேயே செஞ்சுட்டுப் போகலாம்” எனப் பிடிவாதமாக மறுத்தார்.

ஈமச் சடங்குகளை செய்து முடித்த கையோடு ஆச்சி குடும்பத்தினர் புறப்பட்டு விட, சண்முகநாதன், சாந்திமணி, தேவசேனாதிபதி மூவரும் மேலும் இரண்டு நாள் தங்கி, மற்ற ஃபார்மாலிடிகளை முடித்து, விளையாட்டுக் கழகம் நடத்திய அனுதாபக் கூட்டத்தில் கலந்து கொண்டு தமிழ்நாடு எக்ஸ்பிரஸில் ஏறினர்.

சாந்திமணி செந்தூரன் ஷாப்பிங் செய்த பொருட்கள் இருந்த பையைத் தன்னோடு அணைத்துப் பிடித்தபடியே வந்தார்.

‘செந்தூரன் மீது வைத்திருந்த பாசத்திற்கு சாந்தி எப்படி இதைத் தாங்குவா, அவளுக்கு எதுவும் ஆகாம இருக்கணும்’ என்ற கவலைதான் எல்லோருக்கும்.

ஒருவரது அழுகையை வைத்துப் பாசத்தை அளவிட முடியுமா என்ன? சட்டென அழுவதும் சத்தம்போட்டு சிரிப்பதும், இறுக்கமாக இருப்பதும், கலகலப்பதும் அவரவர் இயல்பு. பெரும்பாலும் உணர்வுகளின் வெளிப்பாடும் அதை ஒட்டியேதான் இருக்கும்.

அதிலுமே அதிர்ச்சி தரும் ஒரு தகவலோ, செய்கையோ என்ன மாதிரியான எதிர்வினையைத் தரும் என்பதைக் கணிக்க முடியாது.

தகவல் கேட்டுக் கிளம்பியதில் இருந்து அழுதபடி இருந்தவர், “அம்மான்னு கத்தி அடங்கிட்டான் ஆன்ட்டீ” என்றதைக் கேட்டு அமைதியானவர்தான். அதன்பின் அதிகம் அழவில்லை.

செந்தூரனின் உடமைகளை திருப்பித்தந்தபோது அவனது சட்டை ஒன்றை அணைத்தபடி சிறிது நேரம் அமர்ந்திருந்தார்.

அந்தப் பை முழுவதும் இரண்டு நைட்டிகள், பர்ஸ் ஒன்று, ஆக்ஸிடைஸ்டு சில்வரில் செய்த கொண்டையிட்டுக் கொள்ளும் குச்சி ஒன்று என செந்தூரன் வாங்கி இருந்த பொருள்கள் அனைத்துமே தனக்காகத்தான் என்று பார்த்ததில், அதை அணைத்தபடியே பிரயாணம் செய்தார்.

வந்த உணவை ஒழுங்காக உண்டார். இரண்டாம் வகுப்பு ஏசியில் பிரயாணம். கூட்டமும் குறைவு. போகியே அமைதியாக இருந்த நேரம், சண்முகநாதன் உறங்கி இருக்க, மேல் பர்த்தில் எதையோ படித்தபடி இருந்த தேவசேனாதிபதி, அம்மா அங்கே இல்லாததை உணர்ந்து கீழே இறங்கி, ஓய்வறையை நோக்கிச் தேடிச் சென்றான்.

வண்டி ஏதோ ஒரு ஆற்றப் பாலத்தின் மீது தடதடத்தபடி விரைந்தது. ஒரு பக்கம் யாரும் இல்லாது இருக்க, அடுத்த பக்கம் போய் ஏசி கம்பார்ட்மென்ட்டின் கதவைத் திறந்த அதே நேரம் எதிர்ப் புறமிருந்து வந்த டீ விற்பனை செய்பவரும், மற்றொரு பிரயாணியும் நிலமை புரிந்து ஓடி வர, தேவா ரயிலின் படிக்கட்டுக் கதவின் வழியே வெளியே பாய்ந்த அம்மாவைப் பார்த்துப் பதறி, பிடிக்கப் போய் தோற்றான்.

தேவசேனாதிபதியைப் இழுத்துப் பிடித்து அமைதிப்படுத்தி, ரயில் சங்கிலியைப் பிடித்து இழுத்தனர்.

மணிக்கு அறுபது அறுபத்தைந்து கிலோமீட்டர் வேகத்தில் ஓடும் அதிவேக ரயிலில் இருந்து வெளியே பாய்ந்து, பறந்த சாந்திமணி போஸ்ட்டில் மோதி, பருவ மழை பொய்க்காது பெய்ததில், பிரவாகித்து ஓடிய கோதாவரியில் அடைக்கலமாகி இருந்தார்.

அந்நேரத்தில் ரயில் அந்தப் பாலத்தைக் கடக்கும் என்பது சாந்திமணிக்கு நிச்சயமாகத் தெரியாது. Sudden impulse எனப்படும் உடனடி உந்துதலில் தன் சோகத்தை, அழுத்தத்தைத் தாள முடியாது எடுத்த முடிவு. ஒரு அழகான கூட்டை கலைத்துப் போட்ட முடிவு. தன் அழுத்தத்தைப் பிறர்மேல் ஏற்றிச்சென்ற முடிவு. செந்தூரனின் இழப்பிற்காவது விபத்து என்ற சமாதானம் உண்டு. இது ஆறாத ரணமாக, புரையோடிய புண்ணாகத் தவிக்க விட்டுச் சென்ற முடிவு.

இரு கரைதொட்டுத் தண்ணீர் ஓடும் அகண்ட கோதாவரியில், ஊர், பேர் தெரியாத இடத்தில், அதிக வசதிகள் எதுவும் அருகில் இல்லாத அத்துவானத்தில் ஓடும் நதியில் எத்தனை நேரம்தான் உடலைத் தேடுவது?

ஆறு நாள் வித்தியாசத்தில் இருவரை இழந்ததில் குடும்பமே சிதைந்து சிதறிவிட்டது. அழவும், ஆறுதல் சொல்லவும் திடமின்றி ஊர் வந்து சேர்ந்தனர்.

தோட்டம் குத்தகையில் இருந்தாலும், வீடு இவர்களிடம்தான் இருந்ததில் ஏற்காட்டிலேயே இருவருக்கும் கர்ம காரியங்கள் நடந்தன.

மருத்துவம் படிப்பவன், மூன்று வாரங்களுக்கு மேலாகக் கல்லூரிக்குச் செல்லவில்லை.
தந்தையும் மகனும் ஆளுக்கொரு
திசையில், அறையில், சோஃபாவில் கண்களில் நீர் கசிய விட்டத்தைப் பார்த்துப் படுத்திருந்தனர்.

செந்தூரனுக்கும் சாந்திமணிக்கும் அவரவர் மறைந்த திதிப்படி கருமாதிகளை செய்து படையலிட்டனர்.

உண்மையில் சண்முகநாதனுக்கு சொத்து, வங்கி, பணம் தொடர்பான ஆவணங்களைத் தவிர, அந்த வீட்டில் எது, எங்கே இருக்கிறது என்றே தெரியவில்லை.

இரண்டரை வருடங்களாகக் கல்லூரி விடுதியில் இருக்கும் தேவசேனாதிபதி அதற்கு மேல் இருந்தான்.

தண்ணீர் முதல் தலையணை வரை சாந்திமணியின் கையில் வாங்கி, அனுபவித்துப் பழகியவர்கள், குடும்பத்தின் அச்சாணியாய் இருந்தவரின் இழப்புக்கு மீண்டும் ஒருகுரல் அழுதனர்.

சிறிய கோட்டின் அருகே பெரிய கோட்டை போட்டதுபோல் சாந்திமணியின் மறைவில் செந்தூரனின் இழப்பு கூட யாருக்கும் பெரிதாகப் படவில்லை.

மனைவியை இழந்து தடுமாறும் சண்முகநாதன் ஒருபுறம் எனில் துஷ்டிக்கு வந்து சென்ற ஓருவர் விடாது, சாந்திமணி தன் கணவர் மற்றும் மகன்களின் மீது காட்டிய பாசத்தை, அவரது உழைப்பை, அவர்களுக்கென ஒவ்வொன்றையும் பார்த்துப் பரிந்து, ஓடி ஓடிச் செய்ததையே சொல்லிச் சொல்லி துக்கம் விசாரித்தது வள்ளியம்மை ஆச்சி குடும்பத்தினருக்கு ஆத்திரத்தை அளித்தது.

“வீட்டுல பொம்பளைங்க வேலை செய்வாங்கதான். அதுக்குன்னு ஆம்பிளைங்களுக்கு ஆத்திர, அவசரத்துக்குக் கூட வீட்டுல என்ன கிடக்குன்னு தெரியாமலா இருக்கும்” என்பது போன்ற முணுமுணுப்பில் தொடங்கியது, காரியங்கள் அனைத்தும் முடிந்த தினத்தன்று பெரிதாக வெடித்தது.

சாந்திமணியின் தந்தை மாணிக்கராஜ் “அவ போய்ட்டா, எனக்கு எதுவுமே புரியலை, தெரியலை, வாழ்வே மாயம்னு பாடினாப்போல ஆச்சா?”

சண்முகநாதன் “என்ன மாமா, என்னாச்சு?”

“உனக்கொரு புள்ள போச்சு, எனக்கொரு புள்ள போச்சு. இன்னும் என்ன ஆகணும்?”

“ஏன் மாமா, இப்படிக் கோவமா பேசறீங்க, நான் என்ன செஞ்சேன், சாந்தி இல்லாம நானே ஒடைஞ்…”

வள்ளியம்மை ஆச்சி, ஆவேசம் வந்ததுபோல் “நீங்கதான் தம்பி செஞ்சீங்க. உங்களாலதான் எம்பொண்ணு தற்கொலை பண்ணிக்கிட்டா”

“அத்த..”

“பெத்த புள்ளையை எமனுக்கு தாரை வார்க்கறது கஷ்டம்தான், வருத்தம்தான். ஆனா, அப்படி ஒருக்கால் புள்ளை செத்துட்டா, இந்த உலகத்துல எல்லாரும் கூடவேவா சாகறாங்க?”

“சாந்திக்கு பசங்க மேல எம்புட்டு உசிருன்னு உங்களுக்குத் தெரியாதா அத்த?”

“யோவ்… என்னத்த உசிரு, ம***ருன்னு, அவளை அப்படி பைத்தியமா அடிச்சதே நீயும் உன் குடும்பமும்தான்” `

அன்றுவரை மருமகனுக்கான மரியாதையை இம்மியும் குறையாது தரும் ஆச்சி, திடீரெனத் தன் தந்தையை மரியாதையின்றி ஏக வசனத்தில் பேசியதில் வெகுண்ட தேவசேனாதிபதி “என்ன ஆச்சி, அப்பாவை ஏன் தப்பா பேசறீங்க, செந்தூ போனதைத் தாங்க முடியாம அம்மா அப்படி செஞ்சதுக்கு எங்கப்பா என்ன செய்ய முடியும்?” என முன்னே வந்து கேட்டுவிட்டான்.

ஆச்சியைக் கேள்வி கேட்ட மருமகனிடம் மாமன்கள் இருவரும் விரோதியைப் போல் பாய்ந்தனர்.

“ஏன், நீங்களே புடிச்சுத் தள்ளி விடலைன்னு வருத்தமோ? ஒரு நேரம் எந்தங்கச்சிய சும்மா இருக்க விட்ருக்கீங்களாடா? ஒலகத்துல இல்லாத மகாபுருசன்னு நினைப்பு. இடுப்பு வேட்டியக் கூட எடுத்துக் கொடுக்கணும். கலியாணம் ஆன புதுசுல எல்லாரும் செய்யறதுதான். எத்தினி நாளைக்கு? அதையே வயசுப் புள்ளைங்களுக்கும் பழக்கி…”

மாமனார், மாமியார், மச்சினர்கள் என குடும்பமாய் மாற்றி மாற்றித் தூற்றியதில் ஆத்திரமடைந்த சண்முகநாதன் “எம் பொண்டாட்டி எனக்கு எதை, எப்ப செய்யணும்னு சொல்லுறதுக்கு நீங்க யாரு? எம் புள்ளைங்களை எப்படி வளர்க்கணும்னு எனக்குத் தெரியும். ஒருத்தன் டாக்டர், ஒருத்தன் இன்ஜினீயர்னு படிக்கறது எப்படி? எம் மகனுங்க என்ன மைனர் மாதிரி அப்பங் காசுல ஊரைச் சுத்தறாங்களா? பெருசா பேச வந்துட்டானுங்க, போவீங்களா?”

செல்வராஜ் காலேஜூக்கு சரிவரப் போகாமல் முதல் வருடத்தோடே படிப்பை நிறுத்திவிட்டு ஊர் சுற்றுவதை சண்முகநாதன் சுட்டிக் காட்டியதில்

“உள்ளதைச் சொன்னா, எங்க மேல எகிறிட்டு வர? வந்தவங்க அத்தினி பேரும் சொன்னது ஒனக்குப் புரிஞ்சுச்சா இல்லியா? புரியலைன்னா உக்கார்ந்து யோசி. வாம்மா போகலாம், ஐயா வாங்க” என காட்டுக்கத்தலாய் கத்தியபடி சிவராஜ் முதலில் வெளியேற, ஏதேதோ சொல்லிக்கொண்டே மற்றவர்களும் பின் தொடர்ந்தனர்.

‘என் சாந்திய நான் சரியா கவனிக்கலையா, அவளை நான் கொடுமையா படுத்தினேன், ராணி மாதிரி பாத்துக்கிட்டேனேடா, இந்த வீட்டுல அவ வெச்சதுதானேடா சட்டம், உங்கம்மாதானேடா நமக்கு எல்லாம், ஏன் சாந்தி இப்டி செஞ்ச? உன்னால உங்க வீட்டு ஆளுங்க எப்படியெல்லாம் பேசிட்டு போறாங்கன்னு பார்த்தியா? நீ இருந்திருந்தா அவங்களுக்கு இந்தத் தெகிரியம் வருமா?” என சண்முகநநாதன் மீண்டும் தன் புலம்பலைத் தொடர்ந்தார்.

இருபது வயது தேவசேனாதிபதி நிலைகொள்ளாது தவித்தான். அவர்களது எந்தப் பிரச்சனைக்கும் ஆறுதலும் எளிமையான தீர்வும் சொல்லும் அம்மாவின் இழப்பு, தன்னை விட அதிகம் வருந்தும் தந்தை, தொடர வேண்டிய மருத்துவப் படிப்பு, அம்மா இல்லாம அப்பா எப்படி தனியா இருப்பார், இவரும் விபரீதமா எதையாவது செஞ்சிக்கிட்டா?’ என்ற பயம் எல்லாம் அவனை ஆட்டுவித்தது.

அதற்காக, இப்படியே இருக்க முடியாதே? இரண்டு நாள்கள் கழித்து சென்னை செல்ல முடிவு செய்து தந்தையிடம் பேசினான்.

ஓரளவு சுதாரித்த சண்முகநாதன்
“நீ விசனப்படாம போய்ட்டு வாடா. உனக்கு என்ன வேணும்னாலும் அப்பா இருக்கேன்” என ஆதரவாகப் பேசி தேவாவை கல்லூரிக்கு அனுப்பி வைத்தார்.

முதலில் வார இறுதிகளில் வந்து சென்ற தேவசேனாதிபதியால் அதைத் தொடர முடியவில்லை.

தோட்டம் குத்தகையில். சேலம் கடையை விற்றாகி விட்டது. செய்வதற்கு வேலையும் இல்லை. சாந்திமணியும் மகன்களும் உடன் இல்லை. ஏவியே பழக்கப்பட்டவரை தனிமை வாட்டியது.

கோவை வீட்டில் போய் இருக்கலாம் எனச் சென்றால், அது இதைவிடக் கொடுமையாக இருந்தது. அந்த வீட்டைக் காலிசெய்து சாமான்களைக் கொண்டுவந்து ஏற்காடு வீட்டில் போட்டவர், எங்கும் தங்காது ஊர் சுற்றினார்.

செல்ஃபோன் மூலம் தேவாவிடம் தினமும் ஒருமுறை பேசிவிடுவார். செந்தூவிற்கும் சாந்திமணிக்கும் முதல் வருட திதியை ஏற்காடு வீட்டில் வைத்து செய்தனர்.

பழசு எல்லாம் மறந்து சண்முகநாதனே நேரில் போய் சொல்லியும் வள்ளியம்மை ஆச்சியின் வீட்டிலிருந்து யாரும் வரவில்லை.

மூன்று மாதங்கள் சென்று மாணிக்கராஜ் இறந்ததற்கு சென்றபோது உறவுகள் எல்லாம் மகள் சாந்திமணியின் திடீர் மறைவுதான் ஐயாவை உடைத்துவிட்டதாகக் கூறினர். பொதுவான பேச்சு வார்த்தைகள் எதவும் இல்லை. தந்தையும் மகனும் வந்த கடமையை ஆற்றிவிட்டுப் புறப்பட்டனர்.
 
Jun 19, 2024
34
47
18
Trivandrum
😍😍😍

அய்யய்யோ இந்த சாந்தியும் இப்படி பண்ணிட்டாங்களே, இறந்து போன மகனை மட்டும் நினைச்சு, உயிரோட இருக்குற கணவனையும், இன்னொரு மகனையும் நினைச்சு பார்க்காம விட்டுட்டாங்களே... 😥😥
 
  • Love
Reactions: VedhaVishal