• ஹாய் மக்களே! நம் Nectar Novels தளத்திற்கு நல்வரவு🙏😍😍 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள் nectarnovels.ss@gmail.com 🩷 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...👇 வேதா விஷால் & அனன்யா🙏💖

நிழலாக துணையாக... 9

VedhaVishal

Administrator
Staff member
Jun 17, 2024
71
276
53
Chennai
நிழலாக-துணையாக 9

ண்முகநாதன் ஊர் ஊராகச் சுற்றினார். பணத்தைப் பற்றிய கவலை இன்றி, தேவாவின் வங்கிக்கணக்கில் தேவைக்கு அதிகமாகவே வரவு வைத்துவிடுவார். எளிமையான பயணங்கள். பிடித்திருந்தால், அதிக நாள்களுக்கு ஒரே இடத்தில் இருப்பது என்றிருந்தார்.

மருத்துவப் படிப்பின் ஐந்தாவது வருடத்தில் இருந்த தேவசேனாதிபதிக்கு அதன் அழுத்தமே அதிகம் இருக்க, ஒரு வார இறுதி, பண்டிகை, விடுமுறை என எங்கும் போக வழியின்றி விடுதியிலேயே காலம் கழித்தான். ஏற்காட்டில் வீடு மட்டுமே இருந்தது. உரிமையாக சென்று புழங்கிய ஆச்சி வீடும் இப்போது அந்நியமாகி இருக்கத் தனிமையைப் பெரிதும் உணர்ந்தான்.

நண்பர்கள், சினிமா, புத்தகங்கள் என எத்தனை இருந்தாலும், எத்தனை நேரம்? உள்ளுக்குள் இருக்கும் வெறுமையை, ஏக்கத்தை யாரிடமும் வாய்விட்டுச் சொல்லவும் முடியவில்லை. பின்னே?

இருபத்தி இரண்டு வயதுப் பையன், ஐந்து வருடங்களாக ஹாஸ்டலில் இருப்பவன் மருத்துவம் படிப்பவன்… ‘அம்மா வேணும், அப்பா வேணும்’ என்று அழவா முடியும்?

பதினெட்டு வயது பூர்த்தியான மறுநொடி அனைவருக்கும் மன முதிர்ச்சி வந்துவிடாது. அதுபோன்றே, பதினைந்து வயதில் ஒருவருக்கு ஒன்றுமே தெரியாது என்றும் சொல்ல முடியாது.

பாதுகாப்பான கூட்டுக்குள் வளர்ந்த தேவசேனாதிபதியின் ஏக்கமும் இழப்பும் யாருக்கும் புரியாமலே போனது.

கடந்த சில மாதங்களாக மைசூரில் தங்கி இருந்த சண்முகநாதன், ஒரு பட்டு உற்பத்தி செய்யும் நிறுவனத்தில் வேலை பார்ப்பதாகச் சொன்னார்.

“ஏம்ப்பா, பணத்துக்கு ஏதாவது…”

“அதெல்லாம் இல்லடா தேவா. கொஞ்சம் உடம்பால உழைச்சா என்னை மறந்து, உங்கம்மாவை மறந்து தூக்கம் வரும்னு தோணிச்சு, அதான்”

“...”

கடைசி கட்டப் படிப்பில் இன்டர்ன்ஷிப்பில் இருந்தவனுக்கு ஒரு வெள்ளியன்று மாலை தந்தை சண்முகநாதனிடமிருந்து அழைப்பு வந்தது.

“தேவா, நீ உடனே கிளம்பி இங்க வா” என்றார், பிடிவாதமாக. மறுநாள் காலை சதாப்தியில் மைசூர் சென்றவனுக்கு, தான் தன் தந்தையின் திருமணத்திற்குச் செல்கிறோம் என்பது தெரியவில்லை.

பிரேமா என்ற கன்னடப் பெண்ணை அறிமுகப்படுத்தியவர், அவர் தன்னோடு வேலை பார்ப்பதாகவும், இருவரும் திருமணம் செய்துகொள்ள விரும்புவதாகவும் தெரிவித்தார்.

அவர் வசிக்கும் வீட்டில் அவர்கள் இணைந்து வாழ்வதற்கான அத்தனை அடையாளங்களும் இருந்தன.

‘எங்கம்மா இருந்த இடத்துல இவங்களா, எப்டிப்பா?’

அம்மாவைத்தான் மாற்றவோ, ஏற்கவோ முடியாது, மனைவி அப்படியல்ல என்பது புரிய,
தேவசேனாதிபதி மௌனமாகத் தலையசைத்தான்.

நாற்பத்தி ஐந்து வயதில், தேவாவின் பெரிய அண்ணனைப் போன்ற தோற்றத்தில், உழைப்பின் வலிமையுடன் திடமாக இருந்த தந்தை ஏன் தனிமையில் தவிக்க வேண்டும்? என எண்ணம் எழ, அவரது திருமணத்தை மனப்பூர்வமாக ஏற்றுக்கொண்டான்.

மறுநாள் நஞ்சுண்டேஸ்வரர் கோவிலில் திருமணம் முடிந்ததுமே, அங்கிருந்து புறப்பட்டுவிட்டான்.

கிளம்பும் முன், அந்தப் பிரேமா சண்முகநாதனின் மூக்குக் கண்ணாடியைத் தன் பட்டுப்புடவைத் தலைப்பில் துடைத்து ஊதிக் கொடுத்தபடி, தேவாவிடம் கன்னடத்தில் எதையோ மாத்தாட, “நீ எப்ப வேணாலும் இங்க நீ வரலாம், போகலாம்னு சொல்றாடா. ரொம்ப நல்ல பொண்ணு” என தன் புத்தம்புது மனைவியைப் பரிவுடன் பார்த்தபடி சிலாகித்தார்.

தன் தந்தை சாந்திமணி ஹோம் சர்வீஸை விட்டு மொத்தமாக விலகி, பிரேமா பிராண்டுக்கு மாறிவிட்டது புரிந்த தேவசேனாதிபதி, அதன்பிறகு அவராகப் பேசினால் பேசுவதோடு நிறுத்திக்கொண்டான்.

கடைசிக் கட்ட தேர்வுகளில் தீவிரமானவன், மாறுபட்ட சூழலில் வாழ விரும்பி, ராணுவத்தில் கால்நடை மருத்துவராக விண்ணப்பித்தான். RVC - REMOUNT VETERINARY CORPSல் தேர்வாகி, ஐந்து வருடங்கள் பணிபுரியும் ஷார்ட் சர்வீஸ் கமிஷன்ட் அதிகாரியாக, சிக்கிம் எல்லையில் பணியில் சேர்ந்தான். அவன் புறப்படும் முன் சண்முகநாதன் சென்னை வந்து அவனைப் பார்த்துவிட்டுச் சென்றார். அவர் மகிழ்ச்சியாக இருப்பது தெரிந்தது.

ஆச்சியின் விலாசத்துக்கு தன் வேலை குறித்துத் தகவல் தெரிவித்ததற்கு எந்தப் பதிலும் இல்லை.

புது மனைவியுடன் ஏற்காடு சென்ற தந்தை, ஆச்சி மற்றும் மாமன்களின் கோபத்தை அணையாமல் பார்த்துக்கொண்டது, பிறகுதான் தெரியவந்தது.

தேவசேனாதிபதிக்கு ராணுவம் எண்ணற்ற அனுபவங்களை, படிப்பினைகளை, பார்வைகளை, கோணங்களை, ஒழுக்கத்தைக் கற்பித்தது.

குறிப்பாக பெண்கள், தாய்மை, அவர்களது உரிமை குறித்தான அவனது பார்வையில் பெரும் மாற்றம் வந்தது. பெண் ராணுவ அதிகாரிகள், கணவன் போர் முனையில் நிற்க, குடும்பத்தை, தன்னை, அந்த ராணுவ தளத்தில் வசிக்கும் மற்ற பெண்களின் சம நிலையை, நலத்திட்டங்களை நிறைவேற்றும் அதிகாரிகளின் மனைவிகள், எங்கோ தொலைவில் இருந்து வருடத்திற்கு ஒன்றிரண்டு முறை மட்டுமே வந்து செல்லும் ராணுவ வீரர்களின் ஆசையை, தவிப்பை, அவனது குடும்பத்தை, அவனது பிள்ளைகளை வருஷம் முழுதும் தூக்கிச் சுமக்கும் மனைவியர், எந்தச் சூழலுக்கும், மொழிக்கும், பள்ளிக்கும், மாற்றத்துக்கும் தயாராக இருக்கும் குழந்தைகள் என எத்தனை விதமான பெண்கள்!

அவர்களும் பிள்ளை பெற்று, பேணி, வளர்த்து ஆளாக்கத்தான் செய்கின்றனர். சொல்லப் போனால், தன் தேவைகளை, வேலைகளைத் தானே செய்யப் பழக்கி, தன்னிறைவு அடைந்தவர்களாக வளர்க்கின்றனர்.

உள்ளே ஓடி வந்த உத்ரா, அழும் தந்தையைப் பார்த்துத் திகைத்து “டாடீ, நோ க்ரையிங் டாடி” என தேவாவின் கழுத்தைக் கட்டிக் கொண்டாள்.

“இல்லடா பம்கின், டாடீ அழலடா”

“இந்த தாதிமா (பாட்டி) யாரு டாடி?”

“என்னோட ஆச்சி டா”

“எனக்கு?”

“...”

உறவுகளைத் திணிப்பதால் ஆகப்போவது ஒன்றுமில்லை என்பதை அனுபவத்தில் உணர்ந்த தேவாவிடம் பதில் ஏதும் இல்லை.

அலர்மேல்வள்ளி “இவங்க உனக்கும் ஆச்சிதான் உத்ரா”

வள்ளியம்மை ஆச்சியைப் பார்த்த உத்ரா “ஹலோ ஆச்சி” என்றவள், வெட்கத்துடன் உள்ளே ஓடி விட்டாள்.

வள்ளியம்மை
“என்னென்னவோ நடந்து போச்சு தேவா. இப்ப எம் மவளும் இல்ல, மருமவனும் அவன் கட்டினவளும் இல்ல. அவங்கவங்க கவலையில செந்தூரன்னு ஒருத்தன் இருந்ததையே மறந்துட்டோம்”

“...”

“எம் மவ ஒரு பொண்ணா இருக்கறதாலதானே அத்தனை வேலை செய்யணும்னு எதிர்பார்த்தீங்கன்ற கோபம். முடிஞ்சா செய், முடியலைன்னா முடியாதுன்னு சொல்லுன்னு எத்தனையோ முறை படிச்சுப் படிச்சு சொல்லியும் உங்கம்மாவும் கேக்காத ஆதங்கம்”

“...”

“அம்மான்னா ஓடாத் தேய்ஞ்சு, மெழுகா உருகி, அன்பா, மென்மையா, பாசமா பேசணும், பொண்டாட்டின்னா கோவில் மாடு மாதிரி புருஷன் சொல்றதுக்கெல்லாம் தலையாட்டணும்னு சொல்லிச் சொல்லி, சாந்திமணி அந்தச் சட்டத்துக்குள்ள தன்னைத் திணிச்சுக்கிட்டா”

“...”

“புள்ள பெத்த எல்லாரும் தன் குழந்தைங்களுக்கு எதுவும் செய்யாமலா வளர்க்கறாங்க. அதுக்குன்னு பெத்ததுக்காக ஆயுசு முழுக்க ஆயா வேலை பார்க்க முடியுமா?”

“...”

“ என்ன தேவா, அப்படிப் பாக்கற, நான் செய்யலையா, இல்ல, உன் அத்தைங்க ரெண்டு பேரும்தான் செய்யலையா, யார் செய்யல?”

“இதுவே செந்தூரனோ, நீயோ ஒரு பொண்ணா இருந்திருந்தா உங்கம்மாவை உங்களுக்குச் செய்ய விட்டிருப்பானா உங்கப்பன், எல்லாம் ஆம்பளைங்கற அதிகாரம். ஆம்பளையா இருக்கறதாலேயே வர்ற அதிகாரம்”

“...”

“கண்டிப்பா மாட்டான். கூடுதலா, எம் மவ எனக்கு செய்வான்னு உசத்தியா பேசி அவளையும் வேலை வாங்கி இருப்பான். காரணம் என்ன தெரியுமா, அவ பொண்ணுங்கறதுதான்”

தேவசேனாதிபதி வள்ளியம்மை ஆச்சியை வியப்பாய் பார்த்தான்.
ஒரு மலைவாழ் சிற்றூரில் வசிக்கும் அந்தக்காலத்து மனுஷி. எத்தனை எளிமையாய் நுணுக்கமாய் பாலின எதிர்பார்ப்பு (Gender expectation) பற்றிப் பேசுகிறார்!

உயர்வு நவிற்சியில் புகழ்ந்து, பீடத்தில் ஏற்றி வைத்து, உன்னாலேதான், உன்னைச் சுற்றிதான் எல்லாம் எனப் பரிவட்டம் கட்டினால், உள்ளம் மகிழ்ந்து, நெகிழ்ந்து செக்குமாடுபோல் உழைக்கத் தயாராகி விடுகிறாள் பெண். இதைக் கேள்வி கேட்டால், அவள் குடும்பத்துக்கு லாயக்கு இல்லாதவளாக, சொகுசு கேட்பவளாக, சோம்பேறியாக, வணங்காதவளாக, வீண் விதண்டாவாதம் புரிபவளாக, அராத்தாக அறியப்படுகிறாள்.

“வெல் செட் ஆச்சி. நீ சொல்லுறது பூராவும் நெசம். எங்கப்பா மட்டுமில்ல, நான் செந்தூரன், ஏன் அநேகமா எல்லா ஆம்பிளைங்களுக்குமே பொண்ணுங்கன்னா இப்படி, இப்படிதான் இருக்கணும்னு ஒரு எதிர்பார்ப்பு இருக்கு”

“ரொம்ப காலமா இந்த சமூகம் வெச்சிருக்கற எழுதாத சட்டமும் அப்படி இருந்தாத்தான் நல்ல பொண்ணுன்னு அவங்களையே நம்ப வெச்சு, அதன் அடிப்படைல அவங்களை நடக்க வெச்சு அதுல குளிர் காயறதும், கொஞ்சம் முன்னப்பின்ன நடந்தா, பேசினா அந்தப் பொண்ணு இப்படித்தான்னு கட்டம் கட்டி முத்திரை குத்திடறோம்”

அலர் “ஏன் மாமா ஆம்பளைக்கு எந்த கட்டுப்பாடும் எதிர்பார்ப்பும் கிடையாதா?”

“ஏன் இல்லாம, நிச்சயமா இருக்கு. ஆனா ரொம்ப குறைவு. இப்ப எங்கப்பா முதல்ல போய், எங்கம்மாக்கும் நாப்பது வயசுதானே, எங்கப்பா செஞ்ச மாதிரி,அவங்க ரெண்டாவது கல்யாணம் பண்ணிக்கிட்டு இருந்தா…”

இடையிட்ட ஆச்சி “அப்படி ஏதாவதுன்னா நானே செருப்பால அடிச்சிருப்பேன். ஆனா, இதெல்லாம் என்ன பேச்சுடா தேவா, சாந்தி உன்னோட அம்மாங்கற நினைப்பிருக்கட்டும்”

தேவசேனாதிபதி கன்னம் வலிக்க வலிக்கச் சிரித்தான்.

“உனக்கு வித்தியாசம் புரியுதா வள்ளி, எப்படிப் பொண்ணுங்கறதாலயே எடைபோடப்பட்டு விமரிசிக்கப் படறாங்களோ, அதேபோல ஆண்ங்கறதாலயே சுலபமா மன்னிக்கப்படறாங்க”

வள்ளியம்மை “நான் சொல்லல, எம்புட்டு அறிவா பேசுறான் பாரு எம் பேரன்”

தேவசேனாதிபதி சட்டென நிமிந்து இரண்டு வள்ளிகளையும் கூர்ந்தான். அலர் மாட்டிக்கொண்ட பாவனையில் நெளிய, ஆச்சி சுதாரித்து “இதென்னடா தேவா, வீட்டுல சாதாரணமா ஒரு பேச்சு வரும்போது சொல்லுறதுதான். அதைவிடு, இந்த உத்ரா யாருன்னு சொல்லு”
 
  • Like
Reactions: Priyakarthiq

Mrs Beenaloganathan

Active member
Mar 21, 2025
234
13
43
46
Bangalore
பெண்ணியம் பற்றிய
பாட்டியின் புரிதலும்
பேரனின் புரிதலும்
பிரமாதம்....

தந்தையின் மகளை
தன் மகள் ஆகிவிட்டான்....
தாயுமானவன் தேவா.....
 
  • Love
Reactions: VedhaVishal