• ஹாய் மக்களே! நம் Nectar Novels தளத்திற்கு நல்வரவு🙏😍😍 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள் nectarnovels.ss@gmail.com 🩷 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...👇 வேதா விஷால் & அனன்யா🙏💖

புதையலைத் தேடி - ஜோதி

siteadmin

Administrator
Staff member
Feb 3, 2026
47
5
8
chennai
புதையலைத் தேடி


"யோவ் தகப்பா!! இன்னும் எவ்வளவு தூரம்யா???" என இத்தனை தூரம் நடந்து வந்ததில் இடுப்பைப் பிடித்தபடி மூச்சு வாங்க ஆகாஷ் நின்றுவிட,

முன்பக்க சொட்டையில் இருந்து ஆறாய் வழிந்த வேர்வையைத் துடைக்கக் கூடத் தோன்றாமல், தன் தொப்பையைத் தள்ளிக்கொண்டு முன்னேறி நடந்து கொண்டிருந்த கோடீஸ்வரன்,

"நீயெல்லாம் இளந்தாரி பயன்னு வெளிய சொல்லிடாத டா வெக்கங்கெட்டவனே!! வேகமா வந்து தொலை!!!" என திட்டிக்கொண்டே மகனை திரும்பியும் பாராமல், முன்னேறி நடந்து கொண்டே இருந்தார்.

தந்தையின் கூற்றில் 'களுக்' என சிரித்த ஶ்ரீ திவ்யா, தன் அண்ணனைக் கண்டு,

"அசிங்கப்பட்டான் அண்ணன்காரன்" என்று வேறு சொல்லி வெறுப்பேற்ற, தங்கையையும் தந்தையையும் ஒருசேர முறைத்த ஆகாஷ், இந்தக் குடும்பத்தில் பிறந்ததற்காக தன் விதியை நொந்துகொண்டே மீண்டும் தன் நடையைத் தொடர்ந்தான்.

கிட்டத்தட்ட அந்த காட்டுக்குள் பல மைல் தூரம் நடந்து வந்திருக்க, அதற்கு மேல் முடியாமல் போக, ஆகாஷும் அவனின் அன்னையான லட்சுமியும் அங்கேயே கால்களை நீட்டி அமர்ந்துவிட்டனர்.

அவர்களை விட்டு சில அடி தூரம் வந்திருந்த கோடீஸ்வரன், தன் கைபேசியில் சேமித்து வைத்திருந்த ஒரு பதிவில், தாங்கள் சரியான இடத்திற்கு வந்துவிட்டோமா என சரிபார்க்க,

"கிழக்க பார்த்த மாதிரி புங்க மரம்!!! அதைச்சுத்தி நாலா பக்கமும் வேப்பமரம்.. இதான்.. இதான்.. இதே தான்!!!" என சரியான இடத்தைக் கண்டுபிடித்துவிட்ட உற்சாகத்தில் கோடீஸ்வரனின் முகத்தில் அப்படி ஒரு தேஜஸ்!!

"பெரிய விஞ்ஞானின்னு நினைப்பு உன் புருஷனுக்கு!!! ஏதோ கொரோனாவைக் கொல்ல கொசுமருந்து கண்டுபிடிச்சிட்ட மாதிரி சந்தோஷத்தைப் பாரு!! நம்ம வீட்டுக்கு நாலு வீடு தள்ளிப்போனாலே, இதே மாதிரி மரம் இருக்கு.. இதெல்லாம் ஒரு லேண்ட்மார்க்ன்னு நம்பி, இந்தாள் நம்ம உசுரை வாங்கிட்டு இருக்காரு!!" என தன் அன்னையிடம் புலம்பினான் ஆகாஷ்.

"அட சும்மா இருடா!! அந்த மனுஷன் காதுல விழுந்தா, அதுக்கும் சேர்த்து வைச்சு நம்மளை செஞ்சிடுவாரு!!" என மகனை அடக்கினார் லட்சுமி!!

"அடியே!! என்ன ஊர்வலம் வந்த மகாராணி மாதிரி காலைநீட்டி ஒய்யாரமா உட்கார்ந்திருக்க?? வா வந்து தேடு!!!" என மனைவியை விரட்டிய கோடீஸ்வரன்,

"உனக்குத் தனியா சொல்லணுமா?? வாடா!! பெரிய சீமைத்துரை!! இந்தா பிடி கடப்பாரை!!! வந்து இந்த மரத்துக்கு அடியில தோண்டு!!!" என மகனையும் அரட்ட,

"வா வா!! வந்து தோண்டு!!" என பின்பாட்டு பாடினாள் ஶ்ரீதிவ்யா.

இருவரையும் முறைத்துக்கொண்டே, கையோடு கொண்டு வந்திருந்த கடப்பாரையைக் கொண்டு புங்கை மரத்தின் அருகே தோண்டினான் ஆகாஷ்.

"வேகம் பத்தலை ப்ரோ!!! இன்னும் ஃபாஸ்டா!!" என்ற ஶ்ரீதிவ்யாவை,

"உங்கொப்பனை வந்து கடப்பாரைக்கு கீழ தலையை மட்டும் வைக்கச்சொல்லு!! எப்படி கும்மாங்குத்து குத்துறேன்னு மட்டும் பாரு!!" என ஆகாஷ் எரிச்சல்பட,

"அட!! இன்னும் ஒரு அடி கூட தோண்டலையா நீ??" என இடையில் வந்தார் கோடீஸ்வரன்.

"ம்ம்!!! ஆறடியா தோண்டுறேன்.. வந்து படுத்துக்கிறியா??? படுத்தாதப்பா.. பொறுமையாத் தான் தோண்ட முடியும்!!! நான் என்ன சூப்பர் மேனா??"

"நோ ப்ரோ!! டெய்லி வீடு வீடா பேப்பர் போடுற தான?? நீ சூப்பர் மேன் இல்லை நீ ஒரு பேப்பர் மேன்!!" என்றாள் மொக்கை ஜோக் அடிப்போர் சங்கத்தின் பிரதிநிதியான ஶ்ரீதிவ்யா.

"நாளைக்கு சிரிக்கிறேன்.. இப்போ வேலையைப் பார்க்குறியா" என்றவன் மீண்டும் தன் தோண்டும் பணியை செவ்வனே தொடர,

"என்னங்க!!! இங்க வாங்களேன்!!! இங்க ஒரு பை இருக்கு.." என தேடி வந்ததைக் கண்டுபிடித்துவிட்ட உற்சாகத்தில் லட்சுமி குரல் கொடுக்க,

"எங்க இருக்கு?? எங்க இருக்கு?? ஐய் இந்தா இருக்கு!!!" என ஶ்ரீதிவ்யா கத்திக்கொண்டே முதல் ஆளாய் அன்னையிடம் ஓடினாள்.

"அப்பாடி!! அப்போ நம்ம தோண்டத் தேவையில்லை!! வேலை மிச்சம்!!" என நிம்மதியுடன் கடப்பாரையைத் தூக்கி எறிந்துவிட்டு ஆகாஷும் அன்னையிடம் விரைந்தான்.

அதற்குள்ளாகவே மனைவியின் கைகளில் இருந்த அந்த பழுப்பேறியிருந்த காகிதப்பையை ஆவலுடன் வாங்கிப் பிரித்திருந்தார் கோடீஸ்வரன்.

"உள்ள என்னப்பா இருக்கு??" என கோடீஸ்வரனின் சொட்டைத் தலையில் இடித்துக்கொண்டு உள்ளே பார்க்க முனைந்த ஶ்ரீதிவ்யாவின் நாசியை வந்து குப்பெனத் தாக்கியது அந்த நாற்றம்.

"அய்ய ச்சீ!!! கருமம்!!!" என அந்த நாற்றத்தை தாங்க மாட்டாமல், ஶ்ரீதிவ்யா பட்டென தலையை நிமிர்த்தவும், அவளின் பின்னால் நின்றிருந்த ஆகாஷின் மூக்கிலே போய் பட்டென்று மோத,

"அம்மாஆஆ!!!" என வலி தாளாமல் ஆகாஷ் ஒருபக்கம் கதற,

தான் பெற்ற இரண்டு பிள்ளைகளின் கதறல்களையும் காதில் வாங்காத கோடீஸ்வரனின் கவனம் எல்லாம் அந்த பழுப்பேறியிருந்த பைக்குள் தான் இருந்தது.

தான் இத்தனை வருடங்களாய் காத்துக்கொண்டிருந்த தருணம்!!! இப்போது கையில் வந்து சேர்ந்ததில் மனிதரின் முகமெல்லாம் மந்தகாசப் புன்னகை!!!

பத்து நாள் பட்டினியாகக் கிடந்த பிச்சைக்காரன் கையில் திருமண விருந்தில் எஞ்சியிருந்த உணவுகளுடன் எச்சில் இலை வந்து கையில் கிடைத்ததைப் போலொரு பரவசநிலையில் இருந்த கோடீஸ்வரன், அந்தப் பையைப் பிரிக்க,

அங்கே அவரைக் கண்டு பப்பரப்பேவென பல்லிழித்தது, பல மாமாங்கமாய் அந்த காகிதப் பையில் காய்ந்து கருவாடாகிப் போயிருந்த ஒரு சுண்டெலியின் எலும்புக்கூடு!!

அதைக்கண்டு பயத்தில்,

"எந்த அம்மே!!!!" எனக் கத்திய கோடீஸ்வரன், அந்தப்பையை பட்டென தூக்கி எறிந்தார்.

இன்னும் குழியான கண்களோடு அந்த எலும்புக்கூடு அவரைப் பார்த்து சிரிப்பதைப் போலே இருக்க,

"கருமம்!!" என சிலிர்த்துக்கொண்ட உடலை அடக்கி அந்த காட்சியில் இருந்து வெளிவர முயன்றவர், இதற்கெல்லாம் காரணமாக இருந்த அவரின் மனைவியின் தலையிலே தன் மோதிர விரலால் ஒரு குட்டு வைத்தார்.

"எதை தேட சொன்னா!! என்ன கருமத்தை தேடி எடுக்குற??"

"ஒழுங்கா தேடு போ!! நமக்கு நேரம் இல்லை!!!" என பாவமாய் வலித்த தலையைத் தேய்த்துவிட்டுக்கொண்ட மனைவியை விரட்டியவர்,

அங்கே அவரைக்கண்டு நக்கலாய் சிரித்துக்கொண்டிருந்த அவரின் வாரிசுகளையும் விரட்டி வேலையைப் பார்க்க அனுப்பினார்.

வேர்க்க விறுவிறுக்க அங்கிருந்த அனைத்து மரங்களின் அடியிலும் தோண்டிக் கொண்டிருக்கும் இந்த கோடீஸ்வரன் குடும்பம் அப்படி என்ன தான் தேடுகிறார்கள் என்று உங்களுக்குத் தோன்றுகிறதல்லவா???

அவர்கள் அனைவரும் இவ்வளவு ஆர்வமாகத்(?) தேடிக் கொண்டிருப்பது ஒரு புதையலைத்தான்!!!!

ஆம்!!! வைரமும் வைடூரியங்களும் நிறைந்த ஒரு புதையலைத் தேடித்தான் புத்தன் காட்டிற்கு(கற்பனை) வந்திருக்கின்றனர் நம் கோடீஸ்வரன் குடும்பத்தினர்.

சிறுவயதிலிருந்தே புதையலைத் தேடும் கதைகளைத் தேடித் தேடி படிக்கும் ஆர்வம் அதிகம் கொண்டிருந்த கோடீஸ்வரனுக்கு, என்றாவது ஒரு நாள் நமக்கும் புதையல் கிடைக்கும் என அதீத நம்பிக்கை கொண்டு, புதையலைக் கேணுபிடித்து வாழ்வில் முன்னேற வேண்டும் என மிகப்பெரிய (?) லட்சியத்துடன் வாழ்ந்து வருகிறார் மனிதர்.

பேரில் இருக்கும் கோடியை, கைகளில் ஏந்தும் நாள் வெகு தொலைவில் இல்லை என நம்பிக்கையுடன் வாழ்ந்து கொண்டிருக்கும் சாதாரண ஒரு ஆட்டோ ஓட்டுநர் தான் கோடீஸ்வரன்.

லட்சுமி எனும் பெயரைக் கொண்ட ஒரே காரணத்திற்காகவே, பெண்ணின் முகத்தைக் கூட பார்க்காமல் திருமணம் செய்து கொண்டவர், லட்சுமியின் வரவில் வீட்டில் செல்வம் செழித்தோங்கும் என நம்பிக் கொண்டிருக்க, பாவம் லட்சுமியோடு சேர்த்து, அவரின் தங்கை சரஸ்வதியையும் படிக்க வைத்து திருமணம் செய்து கொள்ளும் பொறுப்பு, அந்த வீட்டின் மூத்த மாப்பிள்ளையான கோடீஸ்வரனின் தலையில் விழுந்தது தான் மிச்சம்.

என்ன மாயமாவது நடந்து, தான் ஒரு கோடீஸ்வரன் ஆகிவிட மாட்டோமா எனும் நப்பாசையில் வாழ்ந்து கொண்டிருக்கும் சாதாரண மனிதன் தான் இந்த கோடீஸ்வரன்.

இதோ, இப்போது கூட அவரின் ஆட்டோவில் பயணப்பட்ட ஒரு இளைஞன் தன் நண்பனிடம் பேசியதை ஒட்டுக்கேட்டுக்கொண்டு, இந்த புத்தன் காட்டில் புதையல் இருக்கிறது என்று நம்பி, தன் குடும்பத்தைக் கிளப்பிக் கொண்டு வந்து, அந்த காட்டை தூர்வாரிக் கொண்டிருக்கிறார் நம் கோடி!!!

நேரம் வேறு மாலையை நெருங்க, காட்டுப்பகுதி என்பதால் அப்போதே இருட்டத் தொடங்கிவிட்டது!!

இதற்கு மேல் இது வேலைக்காகாது என்று நினைத்த ஆகாஷ், கடுப்புடன் கடப்பாரையைத் தூக்கி எறிந்தவன்,

"அம்மா!! இது வேலைக்காகாது!! எந்திரி!! நம்ம போகலாம்.. இந்த ஆள் இங்கேயே புதையல் காத்த பூதம் மாதிரி நைட்டு புல்லா காட்டுல புலிகளோட புள்ளிங்கோ டான்ஸ் ஆடட்டும்.. நம்ம கிளம்பலாம்" என லட்சுமியை அழைத்துக்கொண்டு செல்லப்போன சமயம்,

"புதையல் கிடைச்சிருச்சு!!!!!!" என்ற ஶ்ரீதிவ்யாவின் சந்தோஷக் கூச்சல் அந்த காடெங்கும் எதிரொலித்து, ஆகாஷின் நடையைத் தேங்கச் செய்தது.

"அப்பனே முருகா!! இந்த முறையும் என்னை ஏமாத்திராத!!! நான் தேடி வந்த புதையல் இதுல கண்டிப்பா இருக்கணும்!!! அப்படி மட்டும் புதையல் கிடைச்சா, உனக்கு இந்த வைரத்தை வைச்சு, கவரிங்ல அச்சு அசல் வைரம் மாதிரியே ஒரு வைரவேல் செஞ்சு காணிக்கையா போடுறேன்!!!" என கடவுளுக்கே கவரிங்கை பரிசளிக்கிறேன் என வேண்டுதல் வைத்த நம் தாராள மணமுடைய கோடி, படபடத்த மனதுடன் மகளின் கைகளில் இருந்த அந்த பழங்காலத்து பெட்டியை நடுங்கும் கரங்களுடன் திறந்தார்.

"பக் பக்!!!"

"டக்!! டக்!!"

"லப்!! டப்!!"

"டப்!! டப்!!" என அங்கிருந்த நால்வரின் இதயமும் பட படவென அடித்துக்கொள்ள, அவர்களின் பார்வையெல்லாம் அந்த பெட்டியின் மீது தான்.

பழமையான பெட்டி என்பதால், துருப்பிடித்துப் போய் திறக்க மறுத்த அந்த பெட்டியுடன் போராடி, ஒரு வழியாய் அந்தப் பெட்டியை கோடீஸ்வரன் திறக்க,

அனைவரின் கண்களும் பெட்டியின் உள்ளே ஒளியை விட வேகமாய் பயணித்து பட்டென செல்ல,

அங்கே!!!

வித விதமாக!!!

வித்தியாசமாக!!!

அழகழகாக!! அற்புதமாக!!!

பல வண்ணங்களில்!!!!

கண்களைக் கவரும் வகையில்!!!!

அந்த பெட்டி முழுக்க நிரம்பியிருந்தது கலர் கலர் கோமணங்கள்!!!!!

தங்கம், வைரம், வைடூரியம் என என்னென்னவோ நினைத்து பலத்த ஆவலுடன் காத்திருந்த கோடியின் குடும்பத்திற்கு, அங்கிருந்த கோமணங்களைக் கண்டு இதயம் ஒரு நொடி நின்றேவிட்டது!!!

இந்தக் கோமணத்திற்கா இத்தனை பாடு!!!

காலையில் இருந்து கடப்பாரையுடன் போராடியதில், கந்திப் போய் இருந்த தன் கரங்களைக் கண்ட ஆகாஷின் பார்வை, கொலைவெறியுடன் கோடீஸ்வரனிடம் திரும்ப,

மனிதர் எப்போதோ இவர்களின் கோபத்தில் இருந்து தப்பித்து கோமணங்களுடன் கம்பி நீட்டியிருந்தார்!!!

"யோவ் தகப்பா!!! உன்னை சும்மா விட மாட்டேன்யா!!!" என கத்திக்கொண்டு வெறியுடன் ஆகாஷும் தந்தையை விரட்டிக்கொண்டு ஓட,

பெண்கள் இருவரும் கடுப்புடன் அவர்களை பின்தொடர்ந்தனர்.

அனைவரும் சென்ற பின் அந்த புங்கை மரத்தின் மேலே இருந்து மெதுவாய் கீழே வந்தது அந்த மூன்றடி அடி உயரத்தில் இருந்த முருகன் கோவில் உண்டியல் போன்ற உருவத்துடன் இருந்த பூதம்!!!

அது மெதுவாய் நிமிர்ந்து புங்கை மரத்தின் உச்சியைக் காண, அங்கே கண்களைப் பறிக்கும் ஒளியுடன் மின்னிக் கொண்டிருந்தது, நம் கோடீஸ்வரன் குடும்பம் தேடிக்கொண்டிருந்த புதையல்!!!

தன் புதையலை பத்திரமாய் பாதுகாத்துவிட்ட திருப்தியில், அங்கு ஓடும் மானிடர்களைக் கண்டு பெரிதாய் சிரித்தது!!!


"ஹாஹாஹா!!!"

"ஹ்ஹாஹாஹா!!!"

"ஹ்ஹாஹாஹாஹா!!!"
-ஜோதி
 

Author: siteadmin
Article Title: புதையலைத் தேடி - ஜோதி
Source URL: Nectar Novels-https://nectarnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.