• ஹாய் மக்களே! நம் Nectar Novels தளத்திற்கு நல்வரவு🙏😍😍 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள் nectarnovels.ss@gmail.com 🩷 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...👇 வேதா விஷால் & அனன்யா🙏💖

பொய் சொல்லி பிரபாகரன் - சுஶ்ரீ

siteadmin

Administrator
Staff member
Feb 3, 2026
40
4
8
chennai
பொய் சொல்லி பிரபாகரன்
சுஶ்ரீ

இந்த கலிகாலத்து அரிச்சந்திரன் நான், எனக்கென்ன தெரியும்
பொய் பற்றி, இந்த 45 வருஷமா, என் வயசு 45 நம்புங்க, அப்பறம்
எப்படி போன தடவை ரிடயர்மெண்ட் பத்தி ஏதோ எழுதி
இருந்தேனு கேக்கறீங்களா?அது சும்மா உளவளாய்க்கு.
வேடிக்கையா எழுதினா, அதெல்லாம் பொய்யா என்ன.

ஸ்கூல்ல சேர ஒரு வயசு கூடக் கொடுத்தா அது பெரிய
பொய்யா, அதுவும் அப்பாதானே கொடுத்தார். ஸ்கூலுக்கு கொஞ்ச
தூரம் அந்த அந்த சிக்னல் தாண்டி ஒரு பிள்ளையார் கோவில் இருக்கே அதுக்கு அந்த வயசுலயே வெள்ளிக் கிழமை தோறும் போவேன். பிள்ளையாருக்கும் வெள்ளிக்கிழமைக்கும் என்ன தொடர்புன்றீங்களா? தோண்டித் துருவி எல்லாத்தையும் கேக்கப் படாது.அப்பறம் நான் ஏதாவது சொல்ல, பொய் சொல்றேன்கறது , எனக்கு பொய் பிடிக்காது.

இந்த சந்திரா தியேட்டர்ல வெள்ளிக்கிழமை தோறும் ஒரு படம் மாத்துவான் .தியேட்டர் வாசல்ல பெரிய போஸ்டர் வைப்பாங்க.ஹீரோயின் படம் போஸ்டர்ல பாக்கவே கூட்டம் கூடும்.நான் சின்னப் பையன் 8வது படிக்கறேன் எனக்கு அதுல
எல்லாம் இண்டரஸ்ட் இல்லை. தியேட்டர் பக்கத்துலதான் நான் சொன்ன பிள்ளையார் கோவில். அச்சோ உடனே முடிச்சுப் போட்டுடாதீங்க அந்த போஸ்டர் பாக்கதான் வெள்ளிக்கிழமை
கோவில் போறேன்னு. அது ஒரு கொயின்சிடன்ஸ்
அவ்வளவுதான்.சீ இந்த வாரம் போஸ்டர் படு மோசம், ஒரு
கவர்ச்சி நடிகை ரெண்டு கையை கீழே ஊனிண்டு தலையை
உயர்த்தி சிரிக்கற மாதிரி நான் முகத்தை பாக்கவே இல்லை,
அச்சோ i mean அந்த போஸ்டர் நடிகையை பாக்கவே இல்லை.
அட எங்க ஹிந்தி சாரும் அங்கே சைக்கிளை சாச்சு
நின்னுண்டு உத்து உத்து பாக்கறதைப் பாரு வெக்கமில்லாம.

அய்யோ திரும்பறப்ப என்னை பாத்துட்டார் நான் சட்னு திரும்பி பிள்ளையாருக்கு தோப்புக் கரணம் போட்டேன். பூசாரி காட்டின
கற்பூரத் தட்டுல இருந்து வீபூதி வச்சிண்டு அரச மரம் சுற்றி
வந்தேன். கொஞ்சம் தள்ளிப் போயி என் ஒரு டைம்டேபிள்
எழுதின நோட் புக்கை எடுத்து ஹிந்தி கிளாஸ் இருக்கானு
செக் பண்ணி பாத்தேன். லன்ச்சுக்கு முன்னால இந்த ஹிந்தி பீரியட்தான்.எதாவது கேட்டா எப்படி சமாளிக்கறது எனக்கோ
பொய் சொல்லத் தெரியாது.

சரியா அன்னிக்கு ஹிந்தி பீரியட் முடிஞ்சவுடனே என்னை
கூப்பிட்டார். “ ஏண்டா பிரபா,அந்த போஸ்டர் பாத்தயா அது மலையாளப் படமா, தெலுங்குப் படமா அந்த கண்றாவி
போஸ்ல நடிகையைப் பாத்தேன் படம் பேரு பாக்கலை.”

“எது சார், கோவில் வாசல்ல வச்சிருந்தாளே, சதுர்த்தி உற்சவ
விசேஷம் யாரோ கணபாடிகள் கதா காலட்சேபம்னுனா
போட்டிருந்தா கொட்டை எழுத்துல, அந்த கணபாடிகளோட
படம் பெரிசா இருந்தது மார்ல எல்லாம் வெள்ளை முடியோட விபூதியெல்லாம் தொப்பைல பூசிண்டு அதுவா”

“ போடா மண்டு,பொய் சொல்லாம சொல்லு வெள்ளை
முடியோடயா பாத்தே”

“ஆமாம் சார் ரொம்ப வயசானவர் போல இருக்கு”

“படவா சண்டே உங்க வீட்டுப் பக்கம் வருவேன் உங்கப்பன்
கிட்ட போட்டுக் கொடுக்கறேன் நரைச்ச முடியா பாத்தே”

“சார் ஏதோ தப்பா புரிஞ்சிண்டிருக்கீங்க நான் ஏன் பொய்
சொல்லணும்.”

கிளாஸ்மேட் மகேந்திரன் செவ்வாக்கிழமை ஸ்கூல் கட்
அடிச்சு சந்திரா டாக்கீஸ் படம் பாக்க போனானா பால்கனி
டிக்கட் வரிசைல ஹிந்தி வாத்யாரை பாத்தானாம்.பாருங்களேன்
காலம் கெட்டுப் போச்சு பசங்கதான் ஸ்கூல் கட் அடிச்சு படம்
பாக்க போறாங்கன்னா வாத்யாருமா, சிவ,சிவா.

இதெல்லாம் போகட்டும் சார் அறியாத வயசு எனக்கே தெரியாம எதாவது தப்பா இருக்கலாம்.ஆனா இதனாலதான் என் படிப்பு
கெட்டுப் போச்சுனு சொன்னா நான் ஒத்துக்க மாட்டேன்.10வது
முழுப் பரிட்சைல எனக்கு வீக்னு எல்லாரும் சொல்ற கணக்குப் பரிட்சை சூப்பரா எழுதினேன்.வீட்ல,ஃபிரண்ட்ஸ் கிட்ட எல்லாம்,
”சே ஏழு மார்க் மிஸ் ஆயிடுச்சு,தெரியாதுனு இல்லை 2 நிமிஷம் இருந்தா முடிச்சிருப்பேன் குருசாமி வாத்யாருக்கும் நமக்கும்
கொஞ்சம் டக்கரா,அவர் டயமாச்சு பேப்பரைக் கொடுடானு முத
ஆளா என் பேப்பரை பிடுங்கிட்டார்.”

பசங்கல்லாம் சந்தேகப் படறானுங்க,எப்பவும் 30க்கு மேல
ஏறாதே எப்பிடிடா பிரபா,பிட் அடிச்சயான்றானுங்க,பொறாமை
சார் எல்லாப் பசங்களுக்கும்.ரிசல்ட் வரட்டும் எல்லாப்
பசங்களும் மூக்கு மேல விரலை வைக்கப்போறாங்க.அனேகமா
இந்த வருஷ ஸ்கூல் டாப்பரா வரலாம்.

குருசாமி சாரோட என்ன டக்கர்ன்றீங்களா அது ஒரு தனிக்கதை.முன்னாலயே சொன்னேன்தானே எங்க ஹிந்தி
வாத்யார் பத்தி.
அவரும் குருசாமி வாத்யாரும் ஒரே தெருவுல,அதான்
கமலத்தோப்புத் தெருவுல பக்கம் பக்கம் வீடு. சில சமயம்
சேந்து வருவாங்க ஸ்கூலுக்கு.
ஆனாலும் எனக்கு மட்டும் ஒரு ரகசியம் தெரியும்.எனக்கு
வயசுக்கு மீறின புத்தினு அம்மா சொல்லுவா இங்கே அது
சரியா இருக்கோ தெரியலை.

அந்த ரகசியமா , சொல்றேன் ,( இது என் கற்பனையா,வக்கிர
புத்தியா கூட இருக்கலாம்)குருசாமி வாத்யார் வீட்ல அவர்
மனைவி, அவங்க தங்கை, வாத்யாரோட அம்மா நாலு பேர்தான்.
ஹிந்தி வாத்யார் தனி ஆளு.

குருசாமி வாத்யார் மச்சினியை ஹிந்தி வாத்தியார்
நைச்சியம் பண்றார்ன்றது என் சந்தேகம்.அதே தெருவுல
இருக்கற ரகு கூட சொல்றான், குருசாமி சார் வெளில போறதை
மாடில இருந்து பாத்துட்டே இருந்துட்டு,அவர் போனவுடனே
அவர் வீட்டுக்குப் போய், குருசாமி சார் இல்லையானு
நிக்கறாராம். அந்த வத்சலா அக்காவும் சிரிச்சிட்டே வந்து
திண்ணைல இருக்கற மரக் கம்பத்தை கட்டிப் பிடிச்சிட்டு
இவர் கிட்ட பேசுதாம்.

அது பெரியவங்க விஷயம் நமக்கென்ன போச்சு,கிளாஸ்ல
ஒரு தடவை ஏதோ கம்பராமாயணம் பாடம் நடத்திண்டிருக்கறப்ப,சீதாபிராட்டி சுயம்வரம் பத்தி குருசாமி
சார் ஸ்வாரஸ்யமா விளக்கம் சொல்லிட்டிருந்தார்.
தேவையில்லாத இடத்தில் நம்ம வாய்க் கொழுப்பு
பொங்கிட்டு வெளி வருமே,”சார் ஹிந்தி வாத்தியார்
வேண்டாம் சார், வத்சலா அக்காக்கு சுயம்வரம் வச்சிடுங்க,
சிவகங்கை ராஜா கூட வரலாம்னு” என் மேதாவித் தனத்தை
வெளிப் படுத்தினேன்.

குருசாமி வாத்யாருக்கு மேலே பேச்சு வரலை,டக்னு பாடத்தை
நிறுத்தி புஸ்தகத்தை மூடினார்.”டேய் நீ மட்டும் டீச்சர்ஸ்
ரூமுக்கு வா”னு போயிட்டார்.

நான் என்ன தப்பாப் பேசினேன்னு எனக்குப் புரியலை.வத்சலா
அக்கா நல்ல அழகா இருப்பாங்க.சுயம்வரம் வச்சா நல்ல நல்ல இளவரசர்கள் வந்தா இந்த ஹிந்தி வாத்யாரை விட நல்ல
ஆளை கல்யாணம் பண்ணலாம்தானே.

இதையேதான் டீச்சர்ஸ் ரூம்ல குருசாமி சார் கிட்டயும்
சொன்னேன்.

“இந்த ஹிந்தி வாத்யார் பய வத்சலாவை பாத்து பழகறானா,
உனக்கு எப்படித் தெரியும், வேற யார் கிட்ட எல்லாம்
இதைச் சொன்னேனு”குடைஞ்சு எடுத்துட்டார்.ரகுதான்
எனக்கு காட்டினான்னு அவன் பெயரையும் இழுத்து
விட்டேன்.

அவ்வளவுதான் சார் நடந்தது,அதுக்கப்பறம் வத்சலா
அக்காவை எங்கேயோ அனுப்பிட்டாங்க,ஹிந்தி சாரும்,குருசாமி
சாரும் இப்ப பேசிக்கறதில்லை.அவங்க பேசாட்டா போகட்டும்
என் மேல ஏன் ரெண்டு பேருக்கும் வன்மம்கறதுதான் புரிலை.

அந்த வருஷ ரிசல்ட் என்னாச்சு, ஸ்கூல் ஃபர்ஸ்ட் வந்தேனானு
உங்க ஆர்வம் புரியறது.என்னாச்சுன்னா இந்த கடுப்பு பிடிச்ச வாத்யார்கள் எல்லாம் சதி பண்ணி என்னை பெயிலாக்கிட்டாங்க.
93 மார்க் வர வேண்டிய கணக்கு பாடத்துல 32 மார்க் போட்டிருக்காங்க,ஒரு மனசாட்சி வேண்டாம்?ஒரு மூணு
மார்க் கூட போட்டா குறைஞ்சா போயிடும்?
பாசாயிருப்பேனில்ல. மத்த பேப்பர்ல எல்லாம் 36,37னு
ஒரு பேப்பர்ல கூட 40 வரலை. இப்ப சொல்லுங்க இது சதிவேலைதானே!

எப்படியோ அடுத்த 3 வருஷத்துல இந்த சதி வேலைகளை
மீறி ஸ்கூல் ஃபைனல் முடிச்சாச்சு.

உங்களுக்கு காலேஜ் லைப் பத்தியெல்லாம சொல்லக் கூடாது,
அப்பறம் நான் சகோதர பாசத்தோட பழகின பெண்கள்
பேரையெல்லாம் சந்தி சிரிக்க வச்சிடுவீங்க. நளினியை
பாசமலர் படம்னு நினைச்சுதான் ஷில்பா தியேட்டருக்கு
மாட்டினி ஷோ கூட்டிண்டு போனேன்.

கடங்காரப் பசங்க ஸ்பெஷல் ஷோனு சொல்லி அந்த இங்லீஷ்
படம் போட்டுட்டான். அதுல அந்த ஹீரோவும், ஹீரோயினும்
படு மோசம்.பப்ளிக்காவே எல்லாம் பண்றா.நளினி என்னடா
இவ்வளவு இருக்கா லவ் பணறதுன்னானு கேட்டா.
என்னத்தை சொல்றது காலம் கெட்டுப் போச்சு இதைப்
பாக்க வெக்கமில்லாம இத்தனை கூட்டம் ஜோடி
போட்டுண்டு.

இதுல என்ன பிராப்ளம் ஆச்சுன்னா படம் முடிஞ்சு வரப்ப
சுரேஷ் பாத்துட்டான். “ டே என்னடா ரெண்டாவது வாட்டியா?
மூணு நாள் முன்னாடிதானே பாத்தே ரமாவோட”

அசால்டா கேட்டுட்டு நடந்து போயிட்டே இருக்கான், நளினி
ஒரு முறை முறைச்சிட்டு ஒரு ரிக்‌ஷா பிடிச்சு ஏறிப் போயிட்டா.
என் கிட்ட கேட்டிருந்தா உண்மையை சொல்ல மாட்டேனா.
உண்மைல என்ன ஆச்சுன்னா ரமா அவதான் எங்க வீட்டு எதிர்
வீட்டுப் பொண்ணு, சிவாவோட தங்கைங்க.

அவ ரொம்ப நாளா புதுசா கட்டி இருக்கற ஷில்பா ஏ.சி.
தியேட்டர்ல படம் பாக்கணும்னு சொல்லிண்டிருந்தா. சரி
‘மணாளனே மங்கையின் பாக்யம்’ ஸ்பெஷல் மாடினி
ஷோனு எங்கேயோ தப்பா படிச்சிட்டு கூட்டிண்டு போனா
இதே கண்ராவி படம். முழு படத்தையும் வாயைப்
பொளந்துண்டு பாத்துட்டு இந்த ரமா என்ன சொன்னா தெரியமா,”எங்கம்மா சொல்லுவா நீ சுத்த ரவுடினு,இப்பதான்
தெரியறது நீ எவ்வளவு மோசம்னு. இந்த மாதிரி படத்தையெல்லாம் என்னைப் போல ஒரு நல்ல பொண்ணுக்கு காட்டி கெடுக்கப் பாக்கறயே,நல்ல வேளை அந்த சீன்ல எல்லாம் நான் கண்ணை மூடிண்டுட்டேன்பா”இவ எப்ப கண்ணை மூடினா,முளிச்சு முளிச்சு பாத்துண்டுதானே இருந்தா.

ஒரு வழியா மெஜுரா காலேஜ்ல அஞ்சே வருஷத்துல
பி.ஏ.,படிச்சு முடிச்சேன்.என் அப்பாவோட அம்மா ஜானகிப் பாட்டி,”பேரனுக்கு ஒரு கல்யாணம் பண்ணிப் பாத்துட்டா
நிம்மதியா கண்ணை மூடுவேன்னு”

அப்பாவுக்கு அவரோட அம்மாவோட நிம்மதிதான் முக்கியம்,
உடனே எனக்கு பொண்ணு பாக்க ஆரம்பிச்சிட்டார்.

என்ன நான் வேலை ஒண்ணும் பாக்கலையேனு ,என்
வருங்கால மனைவிக்காக நீங்க கவலைப் படறீங்களா?
எனக்கு மட்டும் அந்தக் கவலை இருக்காதா. எலக்ட்ரிசிடி
போர்ட் வச்ச பரிட்சை எழுதியிருக்கேன்.ரொம்ப சுலபமான
கேள்விகள் இதுல யாராவது பெயிலாக முடியுமா என்ன.
தமிழ்நாட்லயே டாப்பா வந்துடுவேன்னு நம்பிக்கை இருக்கு.
(யோவ் அந்த பத்தாவது பரிட்சையப்ப நடந்ததை ஞாபகம்
வச்சு இப்ப கேக்கறீங்களே.இப்ப நான் மெச்சூர்ட் பெர்சனாக்கும்.) அதுவும் இல்லாம என் சித்தப்பாதான் டிவிஷனல் இன்ஜினியர்
இ.பி. ல.

அம்மா சொல்லுவா உன் சித்தப்பனுக்கு எவ்வளவு
செஞ்சிருப்போம் நாம இந்த சின்ன கிளார்க் வேலைக்கு
சேத்துக்க மாட்டானா என்ன.

சித்தப்பாவுக்கு என்ன செஞ்சோம்னு யோசிச்சுப் பாத்தேன்
எப்பவாவது அதுவும் எங்க தாத்தா திவசத்தப்பதான் வருவார்.
பரம்பரை சொத்து விஷயமா பேச்சு வார்த்தை சண்டைல
முடியும் சாப்பிடாமக் கூட போவார்.அவர் கிட்ட போய்
வேலைக்கு சிபாரிசுக்கு தொங்கணுமா, ஆனாலும் போய்ப்
பாத்தேன். என் மேல அவருக்கு பாசம்தான் பரிட்சை எழுது பாத்துக்கலாம்னார். நான்தான் பரிட்சை சூப்பரா எழுதிட்டேனே.

பரிட்சை ரிசல்ட்ல என் பேர் இல்ல. அம்மா அப்பாவைப்
பாத்து கத்தினா,”எனக்கு முன்னாலயே தெரியும் உங்க தம்பி வேணும்னே இவன் பேப்பரை எடுத்து சுழிச்சிருப்பான்னு”
வாசல்ல யாரோ வர சத்தம், சித்தப்பாதான் காரை நிப்பாட்டிட்டு
உள்ளே வந்தார்.என்னைப் பாத்து உன் ஹால்டிக்கெட் நம்பர்
கொடுனு வாங்கி யாருக்கோ போன் பண்ணினார்,”நாளைக்கு
காத்தால 10 மணி என் ஆபிசுக்கு வா” அண்ணா, மன்னி,
வரேன் னு கிளம்பி போயிட்டார். ஏப்ரல் மாசத்துல இருந்து
இ.பி.ல ஜூனியர் கிளார்க் நானு. கவர்மென்ட் சர்வீஸ் சார்.
இப்ப பெண்கள் ஜாதகம் அஞ்சாறு வந்தாச்சு.

என் பையன் இ.பி. ல பெரிய ஆஃபீசர்னு அம்மா நோட்டீஸ்
அடிக்காத குறையா செய்தி பரப்பறா.

வந்த ஜாதகங்கள்ல அந்த ரமாப் பொண்ணு ஞாபகம் இருக்கா,சிவாவோட தங்கைங்க பழைய வீட்டுக்கு எதுர்
வீட்ல இருந்தாளே, அவளோடதும் ஒண்ணு.
தரகர்தான் கொண்டு வந்து ஃபோட்டோ ஜாதகம்லாம் காட்டினார். பளிச்னு சிரிக்கறாப்பல இருந்த ரமாவோட ஃபோட்டோ பாத்தவுடனேயே அடையாளம் தெரிஞ்சது.முதல்ல இந்த
பொண்ணு உள்ளூர் இவளைப் பாப்போம்னு சொன்னேன்.
அப்பாவுக்கும் அதுதான் சரினு பட்டது.

ஞாயித்துக் கிழமை பொண்ணு பாத்து வெள்ளிக்கிழமை
ஃபார்மலா நிச்சயம் பண்ணி அடுத்த ஒரே மாசத்துல
கல்யாணம்னு பேசி முடிச்சாச்சு. ரமாவுக்கும் என்னைப்
பாத்தவுடனே அடையாளம் தெரிஞ்சிருக்கும்னு நினைக்கறேன்.
மறக்கக் கூடிய முகமா இது,பளபளனு எம்ஜியார் மாதிரி
இருப்பேனே.(சரி எம்.ஜி.ஆர் இல்லைன்னா எதோ ஒரு ஆர் விடுவீங்களா இதைப் போய் சீரியசா எடுத்துக்கிட்டு)

முதலிரவு,பால் சொம்பைக் கைல கொடுத்துட்டு, கால்ல
விழுந்து நமஸ்காரம் பண்ணிட்டு வெட்கத்தோட
கட்டில்ல உக்கார வேண்டியதுதானே! அதை விட்டுட்டு
என்னைப் பாத்து கேக்கறா,”ஏய் பொய் சொல்லி ஷில்பா
ஏ.சி. தியேட்டர்ல என்ன படம்”னு அதுக்கப்பறம் நான்
அவளை பேச விடலை.

என்ன பண்றது யாரு உண்மை சொன்னா நம்பறா உலகத்துல,
பொய் சொல்லினு பேர் வேற வாங்கியாச்சு புதுப் பொண்டாட்டி
கிட்ட பொய் சொல்றவங்களுக்குதான் காலம், கடவுள்தான்
என்னை பொய்யே சொல்லத் தெரியாதவனா படைச்சிட்டானே.



சுஶ்ரீ


 
Last edited by a moderator:

Author: siteadmin
Article Title: பொய் சொல்லி பிரபாகரன் - சுஶ்ரீ
Source URL: Nectar Novels-https://nectarnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.