• ஹாய் மக்களே! நம் Nectar Novels தளத்திற்கு நல்வரவு🙏😍😍 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள் nectarnovels.ss@gmail.com 🩷 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...👇 வேதா விஷால் & அனன்யா🙏💖

மழைக்கு ஏங்கிய மாந்தளிரே -11

SudhaSri

Administrator
Staff member
Jun 16, 2024
557
56
43
india

மழைக்கு ஏங்கிய மாந்தளிரே -11​

“அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது.”

ஞாயிற்றுக்கிழமை காலை ஐந்து மணிக்கே விழித்துக் கொண்டாள் நியதி. அருகில் விக்ரமன் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தான். அவன் முகத்தைப் பார்த்தபடியே அவள் நீண்ட நேரம் படுத்திருந்தாள். எங்கிருந்து ஆரம்பிப்பது என்று இன்னும் அவளுக்குத் தெரியவில்லை. மெல்ல அவன் முகத்தை வருடினாள்.

“எழுந்துட்டியா?” கண் திறக்காமலேயே கேட்டான் அவன்.

“ம்.”

“இன்னைக்கு சன்டே. பத்து மணி வரை நோ அலாரம். இன்னும் கொஞ்ச நேரம் தூங்கலாம்.”

“இன்னைக்கு நாம ஈசிஆர் போகலாம்.”

அவன் ஒரு கண்ணைத் திறந்தான். “ஈசிஆரா? அந்த ரிசார்ட் ட்ரிப் கேன்சல் ஆகி எவ்வளவு நாள் ஆச்சு?”

“ஒரு நாள் ட்ரிப் தான். இன்னைக்கு டாக்டர் பிரகாஷ் உனக்குக் கவர் பண்றார். அர்ஜுன் அண்ணா மூலமா நேத்தே பேசி செட் பண்ணிட்டேன்.”

எழுந்து உட்கார்ந்து அவளையே பார்த்தான் விக்ரமன். “அர்ஜுனுமா உன் கூட்டணியில? அப்போ நீ முழுசா ப்ளான் பண்ணியிருக்கே.”

“ஆமா. இன்னைக்கு நமக்கான நாள்” என்று புன்னகைத்தாள் அவள். அந்தப் புன்னகையில் இருந்த குறும்பை அவன் கவனிக்கத் தவறவில்லை.

“ஸ்டிக்கி நோட்ல நான் தானே ஒரு நாளைத் திருப்பிக் கொடுக்கணும்? நீ ஏன் ப்ளான் பண்ணினே?” என்றான் சோம்பல் முறித்தபடி.

“நீ திருப்பிக் கொடுக்கிற வரைக்கும் காத்திருந்தா நமக்கு அறுபதாம் கல்யாணமே வந்துடும்” என்று அவன் மேலிருந்த போர்வையை இழுத்தாள் அவள். “எல்லாரும் மீ டைம்னு சொல்லுவாங்க இல்லையா? இன்னைக்கு நமக்கு வீ டைம். ஹாஸ்பிடல் பேச்சு கிடையாது. கேஸ் ஷீட் கிடையாது. மொபைலும் கிடையாது. வேற எந்த யோசனையும் கிடையாது.”

“வீ டைம்.” அந்தச் சொல்லை ஒரு முறை சொல்லிப் பார்த்தான் அவன். “நல்லா இருக்கே. டீல்.”

ஒன்பது மணிக்கு இருவரும் வீட்டை விட்டுக் கிளம்பினார்கள். இப்படி ஒரு முழு நாள் தங்களுக்கென்று கிடைத்து எத்தனை மாதங்கள் ஆகியிருந்தன என்று இருவருக்குமே நினைவில்லை. கிடைக்கவில்லை என்பதை விட, அவர்களே அதை எடுத்துக் கொள்ளவில்லை என்பது தான் உண்மை. அன்று அந்த ஒரு நாளைத் தவிர வேறெதையும் அவர்கள் மனதுக்குள் அனுமதிக்கவில்லை.

கார் ஈசிஆர் சாலையில் ஓடிக் கொண்டிருந்தது. இடது பக்கம் அவ்வப்போது கடல் எட்டிப் பார்க்க, வலது பக்கம் சவுக்குத் தோப்புகள் பின்னோக்கி ஓடிக் கொண்டிருந்தன. எஃப்எம்மில் ஒரு பழைய இளையராஜா பாடல் ஒலிக்க, கூடவே பாடினாள் நியதி. ஸ்டியரிங்கில் தாளம் போட்டான் விக்ரமன். அவள் சுருதிக்கும் அவன் தாளத்துக்கும் கொஞ்சம் கூடச் சம்பந்தம் இல்லை என்பதே இருவருக்கும் சிரிப்பை வரவழைத்தது.

முட்டுக்காட்டை நெருங்கிய போது சாலையோரம் ஒரு பெயர்ப் பலகை கண்ணில் பட்டது. ‘தக்ஷின் சித்ரா’.

“விக்ரம், நிறுத்துங்க நிறுத்துங்க!”

பதறிப் போய் பிரேக்கை அழுத்தினான் அவன். “என்ன ஆச்சு?”

“தக்ஷின் சித்ரா! எத்தனை தடவை இந்த ரோட்டுல போயிருக்கேன். ஒரு தடவை கூட உள்ளே போனதில்லை.”

“மகாபலிபுரம்னு தானே சொன்னே?”

“மகாபலிபுரம் எங்கேயும் ஓடிப் போயிடாது. ஆயிரத்து முந்நூறு வருஷமா அங்கேயே தான் நிக்குது.”

சிரித்தபடி காரைத் திருப்பினான் அவன்.

உள்ளே நுழைந்ததும் வேறொரு காலத்துக்குள் நுழைந்தது போல இருந்தது. செட்டிநாட்டு வணிகர் வீட்டின் நீண்ட மரத் தூண்கள், நடுவே வானம் பார்க்கும் முற்றம், கேரளத்து வீடுகளின் சரிந்த ஓட்டுக் கூரைகள், நெசவாளர் வீட்டுக்குள் தறியின் தாளம். ஒவ்வொரு வீட்டு வாசலிலும் நின்று, ஒவ்வொரு மரக் கதவையும் தொட்டுப் பார்த்தாள் நியதி.

செட்டிநாட்டு வீட்டுத் திண்ணையில் அமர்ந்ததும் கால்களை நீட்டிக் கொண்டான் விக்ரமன். “இந்தத் திண்ணையில ஒரு மதியத் தூக்கம் போட்டா போதும். அப்பாவோட ஸ்லீப் சார்ட்டே தேவையில்லை.”

“அதை மட்டும் அப்பா கிட்ட சொல்லிடாதே. நாளைக்கே நம்ம வீட்டு வாசல்ல ஒரு திண்ணை கட்ட ஆரம்பிச்சிடுவார்.”

குயவர் வீட்டு வாசலில் ஒரு பெரியவர் சக்கரத்தைச் சுழல விட்டு, ஈர மண்ணிலிருந்து ஒரு பானையை மெல்ல எழுப்பிக் கொண்டிருந்தார். நியதி அருகில் போய் நின்றதும், “நீங்களும் ட்ரை பண்ணுங்கம்மா” என்று இடம் கொடுத்தார். அவள் கை பட்டதும் மண் ஒரு பக்கமாகச் சரிந்தது. இரண்டாவது முறையும் அதே கதை தான்.

“மண்ணை அழுத்தக் கூடாதும்மா. அது போற போக்குல கையைக் கொடுக்கணும்.” பெரியவர் அவள் கைகளின் மேல் தன் கைகளை வைத்தார். மூன்றாவது முறை ஒரு சின்னக் கிண்ணம் உருவானது. கொஞ்சம் கோணல் தான். ஆனால் அது அவள் கையால் உருவானது.

“லேபர் வார்டுல நானும் இதைத் தான் சொல்லுவேன்” என்று விக்ரமனிடம் கிசுகிசுத்தாள் அவள்.

“ஹாஸ்பிடல் பேச்சு கிடையாதுன்னு காலையில ரூல் போட்டது யாரு?”

“ஸாரி. ஃபைன் கட்டிடறேன்.”

“ஃபைன் கவுண்டர் அந்தப் பக்கம்” என்று கிராஃப்ட்ஸ் பஜாரைக் காட்டினான் அவன். அந்த வார்த்தையை அவன் சொன்ன நேரம் தவறு என்பது அடுத்த ஒரு மணி நேரத்தில் அவனுக்குப் புரிந்தது.

டெரகோட்டா ஜிமிக்கிகள், மரத்தில் கடைந்த காதணிகள், மண் மணிகளைக் கோர்த்த கழுத்தணி, கலம்காரித் துப்பட்டா, பனையோலைப் பெட்டிகள், அக்ஷராவுக்கும் நிலாவுக்கும் குஷிக்கும் மரப் பொம்மைகள். நியதி கையில் எடுத்த எதையும் கீழே வைக்கவில்லை. விக்ரமனின் கைகளில் பைகள் கூடிக் கொண்டே போயின.

“பொண்ணுங்க பொதுவா தங்கம், வைரம்னு தான் வாங்க ஆசைப்படுவாங்கன்னு கேள்விப்பட்டிருக்கேன். இப்படி மரத்தையும் மண்ணையும் காதுல கழுத்துல மாட்டிக்கிறதை இப்போ தான் பார்க்கிறேன்”என்றான் அவன்.

“தங்கமும் வைரமும் லாக்கர்ல தூங்கும்” என்றபடி ஒரு ஜோடி ஜிமிக்கியைக் காதருகே வைத்துக் கண்ணாடியில் பார்த்தாள் அவள். “இது என் கூடவே ஊர் சுத்தும்.”

“சரி, இந்த ஜிமிக்கியும் நெக்லஸும் எவ்வளவு?” என்று ஸ்டாலில் அமர்ந்து ஜிமிக்கிகளுக்கு வர்ணம் தீட்டிக் கொண்டிருந்த பெண்ணிடம் கேட்டான் விக்ரமன்.

அவர் சொன்ன தொகையைக் கேட்டதும் நெஞ்சைப் பிடித்துக் கொண்டு பக்கத்திலிருந்த ஸ்டூலில் சரிந்தான் அவன். “நிதி… லெஃப்ட் ஆர்ம்ல வலி. உடனே ஒரு ஈசிஜி.”

அவன் மணிக்கட்டைப் பிடித்துப் பார்த்தாள் நியதி. “பல்ஸ் நார்மல். கலரும் நார்மல். நடிப்பு மட்டும் தான் ஃபெயிலியர்.”

அந்தப் பெண் சிரித்தார். “கைவேலைக்குத் தான் சார் இந்த விலை. ஒரு ஜோடி ஜிமிக்கிக்கு மூணு நாள் ஆகும். மண்ணைப் பிசைஞ்சு, உருட்டி, காய வச்சு, சூளையில சுட்டு, வர்ணம் போட்டு…”

“டாக்டர் சார், உங்க கன்சல்டேஷன் ஃபீஸ் எவ்வளவுன்னு இவங்க கேட்டா என்ன சொல்லுவீங்க?” என்றாள் நியதி.

“டாக்டரா சார்?” அந்தப் பெண்ணின் முகம் மலர்ந்தது. “அப்போ உங்களுக்குத் தான் நல்லாத் தெரியுமே. கைக்குத் தான் விலைன்னு.”

இரண்டு கைகளையும் உயர்த்தினான் விக்ரமன். “சரண்டர்.” பர்ஸிலிருந்து கார்டை எடுத்து நீட்டினான்.

வெளியே வந்ததும் அந்த ஜிமிக்கியைக் காதில் மாட்டிக் கொண்டாள் நியதி. தலையசைக்கும் போதெல்லாம் மண் மணிகள் ஆடின. “எப்படி இருக்கு?”

அவன் பதில் சொல்லவில்லை. ஒரு போட்டோ எடுக்க அவன் கை தானாகவே பாக்கெட்டுக்குப் போனது.

“இன்னைக்கு கண்ணால மட்டும் தான் போட்டோ” என்று சிரித்தாள் அவள்.

“ரூல்ஸ் ஆர் டு ப்ரேக் நிதி. ஸோ, ப்ரேக் தி மொபைல் ரூல்!”

“விசுவாமித்திரரா இப்படிப் பேசறது?” என்று கண்களை விரித்தாள் அவள்.

“அப்பாவோட ரூல் ஹாஸ்பிடல் கால்களுக்குத் தான். சந்தோஷத்துக்கு இல்லை” என்று தனது மொபைலை எடுத்தான்.

கேமரா மட்டும் ஓய்வில்லாமல் வேலை பார்த்தது. மண் ஜிமிக்கி ஆடக் கண்களைச் சுருக்கிச் சிரிக்கும் நியதி. இரண்டு கைகளிலும் பைகளோடு கூலியாள் போல நிற்கும் விக்ரமன். கடைசியாக இருவரும் சேர்ந்து ஒரு செல்ஃபி. இதற்கு முன்னர் பார்த்த வீடுகளையும் புகைப்படம் எடுக்க வேண்டும் என்று மீண்டும் ஒரு முறை அனைத்தையும் வலம் வந்தனர்.

அந்தப் படங்களை மாதவனுக்கும் வைஜயந்திக்கும் அனுப்பினாள் நியதி. அந்த செல்ஃபியை அப்பாவுக்கு அனுப்பினான் விக்ரமன். அடுத்த நிமிடமே பதில்கள் வந்து குவிந்தன. மாதவனிடமிருந்து: ‘யாருப்பா இது? நம்ம விசுவாமித்திரன் செல்ஃபி எடுக்கிறானா? இன்னைக்கு சென்னையில மழை நிச்சயம்!’ வைஜயந்தியிடமிருந்து: ‘அண்ணி, அந்த ஜிமிக்கி எனக்கும் ஒண்ணு வேணும்! குஷிக்கு என்ன வாங்கினீங்க?’ தேவராஜனிடமிருந்து ஒரே ஒரு ஸ்மைலி மட்டுமே பதிலாக வந்தது.

கோவளத்தில் ஒரு சின்னக் கடையில் மதிய உணவை முடித்துக் கொண்டு அவர்கள் மகாபலிபுரம் போய்ச் சேர்ந்த போது வெயில் சற்று இறங்கியிருந்தது. வானத்தில் ஆங்காங்கே மேகங்கள் தோன்றியிருந்தன.

கடற்கரைக் கோவிலின் முன் நின்றதும் பேச்சிழந்து போனாள் நியதி. ஆயிரம் வருடங்களுக்கு மேலாக அலைகளைப் பார்த்தபடி நிற்கும் கற்கோவில் அது. உப்புக் காற்றில் தேய்ந்து போயிருந்தாலும் ஒவ்வொரு சிற்பத்திலும் இன்னும் உயிர் இருந்தது.

“இங்கே தான் சிவகாமி ஆடியிருப்பா” என்றாள் அவள், கனவில் பேசுவதைப் போல. “கடல் காத்து, சலங்கைச் சத்தம்…”

“ஒரு சின்ன கரெக்ஷன்” என்று ஒரு விரலை உயர்த்தினான் விக்ரமன். “இந்தக் கோவிலைக் கட்டினது ராஜசிம்மன். மாமல்லருக்கு அப்புறம் ரெண்டு மூணு தலைமுறை கழிச்சு. சிவகாமி இதைப் பார்த்திருக்கவே முடியாது.”

“கற்பனைக்குக் கூட ரூல் புக்கா?”

“ரூல் புக் இல்லை. ஹிஸ்டரி” என்று சிரித்தான் அவன். “சிவகாமியைப் பார்க்கணும்னா அர்ஜுனன் தபசுக்குப் போகணும். அது தான் மாமல்லர் காலம்.”

அந்தக் கோவிலின் முன் அவளை ஒரு படம் எடுத்தான் அவன். ‘ராஜசிம்மன் காலத்துச் சிவகாமி’ என்ற கேப்ஷனோடு அது மாதவனுக்குப் பறந்தது.

அர்ஜுனன் தபசுக்கு முன் நின்ற போது நியதியால் கண்களை எடுக்கவே முடியவில்லை. இரண்டு பெரும் பாறைகள் முழுக்கச் சிற்பங்கள். தேவர்கள், முனிவர்கள், வேடர்கள், பறக்கும் கந்தர்வர்கள். நடுவே இருந்த பிளவின் வழியே கங்கை இறங்கி வருவது போல நாகங்கள். கீழே உயிருள்ளவை போலவே தோன்றிய யானைக் கூட்டம். பெரிய யானைகளின் கால்களுக்கு நடுவே குட்டி யானைகள்.

“இதெல்லாம் வெறும் உளியால…” என்றாள் அவள் மெல்ல.

“ஒரு அடி தப்பா விழுந்தா மொத்தப் பாறையும் வீண்” என்றவன், ஒரு மூலையைக் காட்டினான். “அந்தப் பூனையைப் பாரு.”

ஒற்றைக் காலில் நின்று தவம் செய்வது போல ஒரு பூனை. அதைச் சுற்றிக் கும்பிட்டபடி எலிகள்.

“தவம் பண்ற மாதிரி நடிக்குது. எலிங்க நம்பிடுச்சு.”

“உன்னை மாதிரியே. ஸ்டால்ல ஒரு ஹார்ட் அட்டாக் நடிச்சியே.”

“சில பேர் இந்தச் சிற்பமே மாமல்லர் புலிகேசியை ஜெயிச்சதோட நினைவுன்னு சொல்றாங்க” என்றான் அவன் பேச்சை மாற்றியபடி.

“அப்போ சிவகாமியோட சபதம் நிறைவேறின கதையும் இந்தப் பாறைக்குள்ள தான் இருக்கு” என்றாள் அவள், கண்கள் மின்ன.

“நீ சிவகாமியின் சபதம் படிச்சிருக்கியா?”

“ம். ப்ளஸ் டூ லீவுல, கஷ்டப்பட்டு தமிழ் வாசிக்க ஆரம்பிச்சேன். கதை அப்படியே உள்ளே இழுத்துடுச்சு. எனக்கு சிவகாமியை ரொம்ப பிடிக்கும்” என்று பாறையைப் பார்த்தபடி சொன்னாள் அவள்.

மேலும் தொடர்ந்து, “புலிகேசி அவளை வாதாபிக்குத் தூக்கிட்டுப் போயிடுவான். பிடிபட்ட பல்லவ மக்களை அடிச்சுத் துன்புறுத்தி, அவளை ஆட வைப்பான். அன்னைக்குத் தான் அவ சபதம் எடுப்பா. மாமல்லர் படையோட வந்து வாதாபியை எரிச்சு, தன்னைக் கூட்டிட்டுப் போகிற வரைக்கும் அந்த ஊரை விட்டு வர மாட்டேன்னு.” என்றாள்

“மாமல்லர் மாறுவேஷத்துல வந்து கூப்பிட்டப்போ கூட வர மாட்டேன்னுட்டா. ப்ராக்டிகலா பார்த்தா அது பிடிவாதம்” என்று தலையசைத்தான் விக்ரமன்.

“இல்லை. அது சுயமரியாதை” என்று உடனே சொன்னாள் அவள். “அதுக்காக எத்தனை வருஷம் காத்திருந்தா தெரியுமா?”

பாறைக்கு முன்னிருந்த வெளியைப் பார்த்தாள் அவள். “இங்கே தான் அவ நின்னிருப்பா. ஆயனர் சாரத்து மேல ஏறி உளி அடிச்சிட்டு இருந்திருப்பார். அவ கீழே நின்னு அப்பாவையே பார்த்துட்டு இருந்திருப்பா.”

“மாமல்லர் குதிரையில அந்தப் பக்கமா வந்திருப்பார்” என்று அவனும் சேர்ந்து கொண்டான். “அவளைப் பார்க்கத் தான் வந்தேன்னு சொல்லாம, சிற்ப வேலையைப் பார்க்க வந்தேன்னு சொல்லிட்டு.”

“வருஷக் கணக்கா ஒரு வார்த்தை பேசாம, ஒரு குடையும் ஒரு புக்கும் மட்டும் அனுப்பின ஒருத்தர் மாதிரி.”

சிரிப்பை அடக்க முயன்று தோற்றுப் போனான் அவன்.

அவர்கள் பேசிக் கொண்டிருந்த போதே அந்த வெளி நிறைந்து கொண்டிருந்தது. அப்பாவின் தோளில் ஒரு சிறுவன், அம்மாவின் கையைப் பிடித்தபடி ஏழெட்டு வயதுச் சிறுமி, இன்னொரு குடும்பத்தோடு வந்த இரண்டு சுட்டிப் பையன்கள். யானைகளைக் காட்டிக் காட்டி அவர்கள் போட்ட சத்தத்தில் அந்தப் பாறைக்கே உயிர் வந்தது போல இருந்தது. இருவரும் பேச்சை நிறுத்தி அந்தக் குடும்பங்களை வேடிக்கை பார்த்தார்கள்.

அந்தச் சிறுமி மெல்ல நியதியின் அருகே வந்து நின்றாள். அவர்கள் பேசியதை அவள் கேட்டுக் கொண்டிருந்திருக்க வேண்டும். “ஆன்ட்டி, சிவகாமி யாரு?”

அவள் உயரத்துக்குக் குனிந்தாள் நியதி. “ரொம்ப ரொம்ப வருஷத்துக்கு முன்னாடி இங்கே ஒரு பெரிய சிற்பி இருந்தார். அவரோட பொண்ணு தான் சிவகாமி. அவ ரொம்ப அழகா டான்ஸ் ஆடுவா.”

அதற்குள் அந்த இரண்டு பையன்களும் வந்து சேர்ந்தார்கள். அப்பாவின் தோளில் இருந்த சிறுவனும் இறங்கி ஓடி வந்தான். நியதி அங்கேயே ஒரு ஓரமாக அமர்ந்தாள். ஒரு கெட்ட ராஜா சிவகாமியைத் தூக்கிக் கொண்டு போனது, அவள் ‘நான் வர மாட்டேன்’ என்று சொன்னது, இளவரசன் பெரிய படையோடு போனது என்று அவள் சொல்லச் சொல்ல, நான்கு ஜோடிக் கண்கள் விரிந்து கொண்டே போயின.

“இளவரசன் ஜெயிச்சாரா?” என்று ஒரு பையன் கேட்டான்.

“ஜெயிச்சார்” என்றான் எப்போதோ அவர்கள் பக்கத்தில் வந்து அமர்ந்திருந்த விக்ரமன்.

“தாரா! வாங்க, ஐஸ்கிரீம்!” என்று தூரத்திலிருந்து அவள் அம்மா கூப்பிட, குழந்தைகள் பறந்தோடினார்கள். பாதி வழியில் சிறுமி மட்டும் திரும்பி, “தேங்க்யூ ஆன்ட்டி!” என்று கையசைத்தாள். நியதியும் கையசைத்தாள். அவர்கள் கூட்டத்துக்குள் மறைந்த பிறகும் அவள் கை கொஞ்ச நேரம் அப்படியே உயர்ந்திருந்தது.

விக்ரமன் எதுவும் பேசவில்லை. தூரத்தில், தன் மகனைத் தோளில் தூக்கி வைத்து யானைச் சிற்பத்தைக் காட்டிக் கொண்டிருந்த ஒரு அப்பாவின் மேல் நின்றது அவன் பார்வை. அந்தச் சிறுவனின் சிரிப்பு இங்கே வரை கேட்டது.

காலையிலிருந்து கூடவே வந்த சிரிப்பு எப்போது விடைபெற்றது என்று இருவருக்குமே தெரியவில்லை. மொபைல் விதியை அவர்கள் விரும்பியே உடைத்தார்கள். ஆனால் ‘வேற எந்த யோசனையும் கிடையாது’ என்ற விதி, அந்தக் குழந்தைகளின் சத்தத்துக்கு முன்னால் அவர்கள் அனுமதி இல்லாமலே உடைந்து போயிருந்தது. கடலை நோக்கித் திரும்பி நடந்த போது அவர்கள் கைகள் பிணைந்திருந்தன. வார்த்தைகள் தான் இல்லை. ஒன்றரை வருஷமாக இருவரும் மனதுக்குள் புதைத்து வைத்திருந்த பேச்சுக்கு, அந்தக் குழந்தைகள் ஒரு தொடக்கத்தைக் கொடுத்து விட்டுப் போயிருந்தார்கள்.

கடற்கரையை ஒட்டிய ஒரு சின்ன கஃபேயில் வெளியே அமைக்கப்பட்டிருந்த ஒரு மேசையைத் தேர்ந்தெடுத்தார்கள். அலைகள் சத்தமிட்டபடி வந்து திரும்பிக் கொண்டிருந்தன. காபி வந்ததும் தன் கப்பை இரு கைகளாலும் பிடித்துக் கொண்டாள் நியதி.

“விக்ரம், நான் உன் கிட்ட ஒண்ணு சொல்லணும்.”

“சொல்லு.”

“நீ நமக்கும் ஒரு நேரம் வரும்னு சொல்லும் போதெல்லாம் நான் ஆமான்னு சிரிப்பேன். அது பொய். ஒன்றரை வருஷமா இது என் உள்ளே ஓடிட்டே இருக்கு. இப்போதெல்லாம் டெலிவரி ரூம்ல ஒவ்வொரு பேபியை கையில் எடுக்கும் போதும் நமக்கு இல்லையேன்னு தோணுது. நம்ம கையில எதுவும் இல்லை, தானே வரும்னு நினைச்சு சமாதானம் செஞ்சுக்கறேன். ஆனாலும்…” மெல்ல உடைந்தது அவள் குரல்.

விக்ரமன் அவளைக் குறுக்கிடவில்லை. அவள் பேசி முடிக்கும் வரை அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்.

“ஐ ஆம் ஸாரி நிதி” என்றான் கடைசியில். அவன் குரல் கீழிறங்கியிருந்தது. “தினமும் உன் பக்கத்துலயே இருக்கேன். ஆனா நீ இவ்வளவு வலியை உள்ளேயே வச்சுட்டு இருக்கிறதை நான் கவனிக்கவே இல்லை. ஒருவேளை என்னால தான் இது நடக்குதோன்னு நானும் பயந்தேன். அந்த நினைப்பு வந்தா ராத்திரி எல்லாம் தூக்கமே வரலை. நான் ஏதாவது சொல்லப் போய் உன்னை இன்னும் ஹர்ட் பண்ணிடுவேனோன்னு பயந்து எதுவும் பேசலை. நமக்கும் ஒரு நேரம் வரும்னு சொன்னது உன் வலிக்கு மருந்து இல்லை நிதி. அது என் பயத்துக்கு நான் போட்டுக்கிட்ட மருந்து.”

“ஒவ்வொரு மாசமும் மனசுக்குள்ள ஒரு நம்பிக்கை வரும். ஒரு வாரம் தள்ளிப் போனா போதும், பேர் கூட யோசிக்க ஆரம்பிச்சுடுவேன். அப்புறம் அந்த நம்பிக்கை உடையும் போது பாத்ரூம்ல போய் அழுதுட்டு, முகத்தைக் கழுவிட்டு, ஒண்ணுமே நடக்காத மாதிரி வந்து சிரிப்பேன். எங்கே நம்ம கிட்ட ஏதாவது குறை இருக்குன்னு தெரிஞ்சுடுமோன்னு பயந்து, யார் கிட்டயும் போய்க் காட்டிக்கக் கூட இல்லை.”

கண்களைத் துடைத்துக் கொண்டாள் அவள். “நாம இரண்டு பேரும் இந்த ஒரே பாரத்தை இரண்டு தீவுகள்ல தூக்கிட்டு இருந்திருக்கோம்.”

“இரண்டு பொறுப்பு பொன்னுசாமிகள்” என்றான் அவன். இந்த முறை இருவர் சிரிப்பிலும் கண்ணீர் கலந்திருந்தது. வானத்தில் மேகங்கள் கூடிக் கொண்டிருந்தன. மேசையின் மேல் இருந்த அவள் கையை இறுகப் பற்றிக் கொண்டான் அவன்.

“இனிமே இதைப் பத்தி நாம தனித்தனியா யோசிக்க வேண்டாம் நிதி. நமக்கு ஒரு குழந்தை வேணும். அதுக்கு என்ன பண்ணணுமோ, இரண்டு பேரும் சேர்ந்து பண்ணுவோம். அடுத்த வாரமே ஷீலா மேடம் கிட்ட போவோம். ரொம்ப அனுபவசாலி.”

“அகிலாவும் அதைத் தான் சொன்னா. அவ கிட்ட தான் முதல்ல எல்லாத்தையும் கொட்டினேன். முதல்ல விக்ரம் கிட்ட சொல்லு. இல்லேன்னா ஆபரேஷன் விசுவாமித்திரன் நோட்டுப் புத்தகத்தோட உங்க வீட்டுக்கு வருவேன்னு மிரட்டி அனுப்பினா”என்றாள் நியதி.

“அந்த நோட்டுப் புத்தகம் இன்னும் அவ கிட்ட இருக்கா!” என்று சிரித்தான் விக்ரமன். பிறகு மெல்லச் சொன்னான். “நம்ம பேரன்ட்ஸ் கிட்ட கூட இப்போதைக்கு எதுவும் சொல்ல வேண்டாம். நமக்கே விஷயம் என்னென்னு ஒரு கிளாரிட்டி கிடைச்சதுக்கு அப்புறம் சொல்லிக்கலாம்.”

நியதி தலையசைத்த போது முதல் மழைத்துளி அவர்களின் மேல் விழுந்தது. ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்ட இருவரும், சாலையில் ஓடிப் போய் மழையில் நனைந்தார்கள். ஒன்றரை வருடமாக மழை பெய்யாத ஒரு நிலத்தின் மேல் முதல் துளி விழுந்தது போல இருந்தது அந்த நொடி.
 

Author: SudhaSri
Article Title: மழைக்கு ஏங்கிய மாந்தளிரே -11
Source URL: Nectar Novels-https://nectarnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
  • Like
Reactions: Brindha Ganesh