மழைக்கு ஏங்கிய மாந்தளிரே -2
“யானோக்குங் காலை நிலனோக்கும் நோக்காக்கால்
தானோக்கி மெல்ல நகும்.”
மைக்கைக் கையில் பிடித்தபடி கனைத்துக் கொண்டான் மாதவன்.
“ஓகே! ஓகே! முதல் கேள்வி. ரொம்ப ஈஸியான கேள்வி தான். முதன் முதலா நியதியைப் பார்த்தப்ப விக்கி மனசுல என்ன தோணுச்சு? உண்மையை மட்டும் தான் சொல்லணும். அம்மன் மேல ஆணை, அம்மா சமைக்கிற சாம்பார் மேல ஆணை!”
“டேய்! நான் இன்னும் பட்டு வேட்டியே மாத்தலை. கொஞ்சமாவது கருணை காட்டுடா.” விக்ரமன் கெஞ்சியதைக் கேட்க அங்கே யாரும் தயாராக இல்லை.
“சொல்லு! சொல்லு! சொல்லு!” என்று வைஜயந்தி தலைமையில் இளைஞர் பட்டாளம் கோரஸ் பாடியது. தப்பிக்க வேறு வழியின்றி விக்ரமன் நிதானமாக ஆரம்பித்தான்.
“ஒரு ஜூனியர் பொண்ணு நாலு சீனியர்ஸை நிற்க வச்சுக் கேள்வி கேட்கிறாளேன்னு ஆச்சரியமா இருந்துச்சு. அவ்வளவு தான்.”
“அவ்வளவு தானா?” மாதவன் புருவத்தை உயர்த்தினான். “இதை நம்பறதுக்கு நான் என்ன ஏமாளின்னு நினைச்சியா?”
அருகில் அமர்ந்திருந்த நியதி உதட்டுக்குள் சிரிப்பை அடக்கிக் கொண்டிருந்தாள்.
“இவர் சொல்லாததை நான் சொல்றேன். ஒரிஜினல் வெர்ஷன் என்கிட்ட தான் இருக்கு” என்றவளின் குரலில் மண்டபமே அமைதியாகிச் செவிகளைத் தீட்டிக் கொண்டது. விக்ரமனோ ‘அடிப்பாவி! கவிழ்த்துட்டாளே’ என்பது போலப் பார்த்தான். பார்வைகள் மீண்டும் சந்தித்த நொடியில் மண்டபத்தின் இரைச்சல் மெல்ல மங்கிப் போக, காலம் பின்னோக்கிச் சுழன்றது.
★★★★★
நாலு சீனியர்களும் ‘பாட்டுப் பாடு’, ‘டான்ஸ் ஆடு’ என்று ஆரம்பிப்பதற்குள்ளேயே நியதி தன் கேள்விப் பட்டியலைத் தொடங்கி இருந்தாள். “உங்க ப்ளட் குரூப் என்ன சீனியர்? அவசரத்துக்கு ரத்தம் தேவைப்பட்டா கூப்பிடணுமே! ஹாஸ்டல் மெஸ்ல ஊறுகாய் போடுவாங்களா? ராகிங் தடைன்னு போர்டு வச்சிருக்காங்களே, அதைப் பத்தி உங்க அபிப்ராயம் என்ன?” அகிலாவும் விடவில்லை. “சீனியர், இது ராகிங்கா இல்லை இன்டர்வியூவா? இன்டர்வியூன்னா நாங்க ரெஸ்யூமே கொண்டு வந்திருப்போமே!” என்று அந்த நால்வரையும் குழப்பிக் கொண்டிருந்த நேரத்தில் தான் விக்ரமன் உள்ளே நுழைந்தான்.
“தேங்க்ஸ் சீனியர்.”
கலைந்து சென்ற மாணவர்களின் முதுகை வெறித்தபடி நின்றிருந்த விக்ரமன் அந்தக் குரலில் திரும்பினான். ஊதா நிற உடையில் நின்றவளின் கண்களில் நன்றி இருந்ததா, குறும்பு இருந்ததா என்று அவனால் தீர்மானிக்க முடியவில்லை.
“ஆனா நீங்க கொஞ்சம் லேட்டா வந்துட்டீங்க சீனியர்.”
“லேட்டா?”
“ஆமா. இன்னும் பத்து நிமிஷம் இருந்திருந்தா, அவங்க நாலு பேரும் கேன்டீன்ல டீ வாங்கிக் கொடுத்துக் கை கூப்பி ஸாரி கேட்டிருப்பாங்க.”
“கை கூப்பறதெல்லாம் இல்லை நியதி. கதறிட்டு ஓடியிருப்பாங்க.” அகிலாவும் கூட்டணி சேர்ந்து கொண்டாள். “நாங்க ஒண்ணுமே பண்ணலை சீனியர். சும்மா கொஞ்சம் கேள்வி கேட்டோம். அவ்வளவு தான்.”
“அந்தக் கொஞ்சம் தான் எனக்குப் பயமா இருந்துச்சு.” விக்ரமன் முகத்தை இறுக்கமாக வைத்துக் கொண்டான். “சீனியர்ஸ் மேல கம்ப்ளைன்ட் வந்தா மேனேஜ்மென்ட் பார்த்துக்கும். ஆனா ஜூனியர்ஸ் நாலு சீனியர்ஸை அழ வச்சாங்கன்னு செய்தி பரவினா, இந்தக் காலேஜ் மானம் என்ன ஆகுறது?”
நியதி அவனைக் குறும்பாகப் பார்த்த பார்வையில் அவனது அதட்டல் தானாகத் தளர்ந்தது. இதழோரத்தில் எட்டிப் பார்த்த புன்னகையை உள்ளே தள்ளப் பெரும்பாடு பட வேண்டியிருந்தது அவனுக்கு.
“உங்க பேரு என்ன சீனியர்? அவங்க ஏதோ விசுவாமித்திரன்னு சொன்னாங்களே?”
“விக்ரமன். மத்தது எல்லாம் அவங்களா வச்ச பேரு.”
“ஏன் அந்தப் பேரு?”
“கோபம் வந்தா சாபம் கொடுப்பேன்னு அர்த்தம்.” குரலைக் கனமாக்கிக் கொண்டு அவன் சொல்ல, நியதி பயந்தவளைப் போல நடிக்க, அகிலா அவள் காதருகில் கிசுகிசுத்தாள்.
“இவரோட தவத்தைக் கலைக்க ஒரு மேனகை வந்தா தான்டி சரிப்படும். அது நீயாகவும் இருக்கலாம்.”
“வாயை மூடு அகில்ஸ்.” இடுப்பில் கிள்ளினாள் நியதி.
“என்ன?” விக்ரமன் புருவம் சுருக்கினான்.
“ஒண்ணுமில்ல சீனியர். உங்க தவம் நல்லபடியா தொடரட்டும்னு வாழ்த்தினோம்.”
அவன் ஒரு கணம் அவளையே பார்த்தான். “யாராவது தொந்தரவு பண்ணா என் பேரைச் சொல்லுங்க. ஆனா நீங்களா யாரையும் தொந்தரவு பண்ணாதீங்க. அப்புறம் அவங்களைக் காப்பாத்த நான் மறுபடியும் வர வேண்டியிருக்கும்.” என்றபடி திரும்பி நடந்தான்.
நான்கடி வைத்ததும் எதற்காகவோ திரும்பிப் பார்த்தான். ஊதா நிற உடையின் கண்கள் அவனையே பார்த்துக் கொண்டிருக்க, சட்டென்று பார்வையை விலக்கிக் கொண்டு நடையை எட்டிப் போட்டான்.
“பாருடி! திரும்பிப் பார்த்துட்டுப் போறாரு. உன் மூஞ்சில லைட் எரியுது.”
“லைட் எரிஞ்சது அவர் கண்ணுலடி. சிவப்பா எரிக்கிற மாதிரி பார்த்தாரு.” என்று நியதி சொன்னாலும், வகுப்பறை வந்து சேரும் வரை அவள் எதுவும் பேசவில்லை. அது அவளது வழக்கத்துக்கு மாறானது என்பது அகிலாவுக்கு நன்றாகவே தெரிந்தது.
★★★★★
மாலையில் வீடு திரும்பிய நியதியை வாசலிலேயே வழிமறித்தாள் சுகந்தா.
“வா நிதி! முதல் நாள் எப்படி இருந்துச்சு? யாராவது ராகிங் பண்ணாங்களா? நீ ஏதாவது…”
“அம்மா! ஆடி வெள்ளி பூஜை எல்லாம் நல்லபடியா முடிஞ்சுதா? பிரசாதம் இருக்கா? பசிக்குது.” என்று பேச்சை மாற்ற முயன்றவளின் கையைப் பிடித்து நிறுத்தினாள் சுகந்தா.
“பிரசாதம் இருக்கு. நீ விஷயத்துக்கு வா.”
“ராகிங் பண்ணாங்கம்மா. நாலு பேர் வந்தாங்க.”
“ஐயோ! என்ன சொன்னாங்க? நீ என்ன சொன்ன? நீயும் அகிலாவும் சேர்ந்து அவங்களை…”
“அவங்களைப் பத்தி தான் சொல்றேன் மா. கடைசியில அந்த நாலு பேரையும் எங்ககிட்ட இருந்து ஒரு சீனியர் வந்து காப்பாத்திட்டாரு.”
சுகந்தாவின் முகம் வெளிறிப் போக, சோபாவில் அமர்ந்திருந்த வாசுதேவன் பெருமை பொங்கச் சிரித்தார்.
“ஹேய்! இதானே என் பொண்ணு! ஃபர்ஸ்ட் டே ஃபர்ஸ்ட் ஷோவே ஹவுஸ்ஃபுல்!”
“இதுல பெருமைப்பட என்ன இருக்கு?” என்ற சுகந்தாவின் ஒரே பார்வையில், வாயில் ஜிப் போட்டுக்கொண்டு செய்தித்தாளுக்குள் புகுந்து கொண்டார் அவர்.
சுகந்தா சமையலறைக்குச் சென்றதும் வாசுதேவன் மகளின் பக்கம் சரிந்து குரலைத் தாழ்த்தினார்.
“நிதிமா! டாடி கிட்ட மட்டும் சொல்லு. அந்த நாலு பேர் கிட்ட என்ன கேட்ட?”
“இது ராகிங்கா இல்லை இண்டர்வியூவான்னு கேட்டேன் டாடி. ரெஸ்யூமே கொண்டு வந்திருப்போமேன்னு அகில்ஸ் சொன்னா.”
“ஹா..ஹா..ஹா!” வாசுதேவனின் சிரிப்பொலி வீட்டையே அதிரச் செய்தது.
“என்ன சத்தம் அங்கே?” சமையலறையிலிருந்து வந்த அதட்டலில் அவர் இரு கைகளாலும் வாயைப் பொத்திக் கொண்டார். “ஒண்ணுமில்ல சுகா, நிதி ஜோக் சொன்னா.”
அன்றிரவு படுக்கையில் புரண்டு கொண்டிருந்த நியதிக்கு, ‘விக்ரமன்’ என்ற பெயரும், திரும்பிப் பார்த்த அந்தப் பார்வையும் அடிக்கடி வந்து போயின. “சே! விசுவாமித்திரனாம் விசுவாமித்திரன்!” என்று தனக்குத் தானே முணுமுணுத்தவள், தலையணையால் முகத்தை மூடிக் கொண்டாள். உதட்டில் மட்டும் சிரிப்பு ஒட்டிக் கொண்டிருந்தது.
அதே இரவு, வேறொரு வீட்டின் உணவு மேசையில்… அருந்ததிக்கு அன்றும் இரவு டியூட்டி என்பதால் அவரது இடம் காலியாக இருந்தது.
விக்ரமன் ரசம் சாதத்தில் தயிரை ஊற்றிக் கலக்கிக் கொண்டிருந்தான்.
“பிக் ப்ரதர்! தட் இஸ் ரசம்! ரசம்! அதுல யாராவது தயிர் ஊத்துவாங்களா?” என்று அவனது தங்கை வைஜயந்தி வாயைப் பிளக்க, அவன் நிமிர்ந்து பார்த்தான்.
“ஓ! ஸாரி! கவனிக்கலை.”
“என்னாச்சு விக்ரமா? காலேஜ்ல ஏதாவது பிரச்சினையா?” என்று கேட்டார் தேவராஜன். தூக்கத்துக்கு வைத்தியம் பார்ப்பவருக்கு மகனின் தயிர் ரசமும் ஒரு அறிகுறியாகவே தெரிந்தது.
“பிரச்சினை எல்லாம் இல்லப்பா. இன்னைக்கு ராகிங் விஷயமா ஒரு ஜூனியர்…”
“ஜூனியர்?” தங்கையின் கண்கள் மின்னின.
“ராகிங் விஷயமா சில ஜூனியர்ஸைக் கூப்பிட்டுப் பேசினேன்னு சொல்ல வந்தேன்.”
“ஓஹோ! ராகிங் விஷயமா பேசினா ரசத்துல தயிர் ஊத்தி சாப்பிடுவாங்களா? இது புது ட்ரீட்மென்டா இருக்கே, ஃபியூச்சர் டாக்டர் சார்.”
“வேதாள்! சாப்பிடும் போது பேசாம சாப்பிடு.” அதட்டினாலும் அவனது காது மடல் சிவந்து போனதைத் தந்தை கவனிக்கத் தவறவில்லை. கண்ணாடிக்குப் பின்னால் அவரது கண்கள் மெலிதாகச் சிரித்தன.
★★★★★
நினைவுகளிலிருந்து மீண்ட விக்ரமனின் காது மடல், அன்றைக்குப் போலவே இன்றும் சிவந்து போயிருந்தது.
“டேய் விக்கி! உன் காது ஏன்டா சிவக்குது?” என்று மைக்கில் கத்தினான் மாதவன். “அப்போ இவன் அன்னைக்கே விழுந்துட்டான்! நம்மகிட்ட மட்டும், ராகிங்கைத் தடுக்கிறது என் கடமை, வேற எதுவும் இல்லைன்னு கதை அளந்தான்.”
“நான் எதுவும் அளக்கலை” என்ற விக்ரமனின் குரலில் தெம்பே இல்லை.
“இதுக்கே இப்படின்னா, தயிர் ரசம் மேட்டரைச் சொன்னா என்ன செய்வீங்க அண்ணா?” என்று மைக்கைப் பறித்தாள் வைஜயந்தி. “ஆடி வெள்ளிக்கிழமை ராத்திரி, ரசம் சாதத்துல தயிர் ஊத்தி…”
“வேதாள்! மைக்கைக் கொடு!” என்று விக்ரமன் பாய, மண்டபமே சிரிப்பில் குலுங்கியது.
“சரி, சரி! முதல் ரவுண்டு முடிஞ்சது.” மைக்கை உயர்த்தினான் மாதவன். “இரண்டாவது கேள்வி! அன்னைக்கு அப்புறம் நம்ம விசுவாமித்திரன், தன் தவத்தைக் கலைக்க வந்த மேனகையை எப்படி எல்லாம் கண்காணிச்சார்? தெளிவா, வரிசையா, ஒளிக்காம…”
“சக்கர வியூகத்துக்குள்ள அடுத்த வளையம்” என்று விக்ரமன் நியதியின் காதில் முணுமுணுக்க, அவளோ சிரிப்புடன் தலை குனிந்து கொண்டாள்.
“கண்காணிப்பா? நானா?” விக்ரமன் இரு கைகளையும் விரித்தான். “இது அபாண்டம் மாதவா! நான் பாட்டுக்கு ராகிங் ரவுண்ட்ஸ் போயிட்டு இருந்தேன். அவ்வளவு தான்.”
“ரவுண்ட்ஸா?” நியதி உதட்டை வளைத்தாள். “அந்த ரவுண்ட்ஸ் மட்டும் ஏன் என் கிளாஸ் வாசல் வழியாவே போச்சு? ஒரு வருஷம் முழுக்க என்னோட டைம் டேபிள் எனக்கே சரியா தெரியாது. ஆனா இவருக்குத் தெரியும்.”
“ஓஓஓஓ!” என்று மண்டபம் அதிர்ந்தது. வைஜயந்தி நாற்காலியில் ஏறி விசிலடிக்க, ஸ்வேதா சிரித்துச் சிரித்துக் கண்ணீரைத் துடைத்தாள். நீதிபதியைப் போல நாற்காலியில் சாய்ந்து அமர்ந்த மாதவன், “ப்ராசிக்யூஷன் தரப்பு வாதத்தைக் கேட்போம். மை லேடி, கண்டினியூ!” என்றான்.
மெல்லிய புன்னகையுடன் ஆரம்பித்தாள் நியதி. காலம் மறுபடியும் பின்னோக்கிச் சுழன்றது.
★★★★★
மெடிக்கல் காலேஜோட ஃபர்ஸ்ட் இயர் நியதிக்குக் கேள்விகளின் சந்தையா இருந்தது.
அனாடமி வகுப்பில் பேராசிரியர் “இன்னைக்கு எலும்புகள்” என்று வாய் திறப்பதற்குள்ளேயே, “சார்! இந்த எலும்புக்கு ஏன் இந்தப் பெயர்?” என்று எழுந்து நிற்பாள். அவர் பதில் சொல்லி முடிக்கும் முன்பே, “அது ஏன் அந்த இடத்துலேயே இருக்கு சார், வேற இடத்துல இருந்தா என்ன ஆகும்?” என்று அடுத்த கேள்வி பறக்கும். பின் வரிசையில் அமர்ந்திருக்கும் அகிலா தலையில் அடித்துக் கொள்வாள்.
“ஏன்டி என்னை மாட்டி விடுற? பக்கத்துல உட்கார்ந்தவளையும் சேர்த்து எல்லாரும் ‘இவளும் அவ கூடத் தான்’னு பார்க்கிறாங்க.”
“சந்தேகம் கேட்கிறது தப்பா அகில்ஸ்?”
“சந்தேகம்னா ஒண்ணு, ரெண்டு தான்டி. நீ கேட்கறது சந்தேகக் கடை.”
கல்லூரியின் இன்னொரு முனையில் அதே நேரம் ஒரு பெரிய அதிசயம் அரங்கேறிக் கொண்டிருந்தது.
விக்ரமனின் ராகிங் ரவுண்ட்ஸ் பாதை மாறியிருந்தது. முன்பெல்லாம் ஹாஸ்டல், கேன்டீன் என்று முடிந்து போகும் அந்த ரவுண்ட்ஸ் இப்போது முதலாம் ஆண்டு வகுப்பறை வராந்தா வரை நீண்டது. அங்கே நோட்டீஸ் போர்டை முதல் தடவை பார்ப்பவன் போலப் படிப்பான். செடிக்குத் தண்ணீர் ஊற்றும் தோட்டக்காரரிடம் ஏதோ விசாரிப்பான். கையில் இல்லாத நோட்டைத் தேடுவான். ஏழெட்டு நிமிடங்கள் அங்கேயே சுற்றி விட்டுத் திரும்பும் போது, அவன் கண்கள் மட்டும் ஒரே ஜன்னலை மேய்ந்து விட்டுத் தான் வரும்.
அகிலா தான் முதலில் கண்டுபிடித்தாள்.
“நிதி! அங்கே பாரேன். மறுபடியும் நம்ம வராந்தாவில் விசுவாமித்திரன்! இந்த வாரத்துல இது ஆறாவது தடவை.”
“ராகிங் ரவுண்ட்ஸ் டி. அவர் டியூட்டி.”
“டியூட்டி ஹாஸ்டல்ல இருந்தா, நம்ம ப்ளாக்ல ஏன் நிக்கறாரு? எனக்கு டவுட்டா இருக்கு. ஐ வில் இன்வெஸ்டிகேட்.”
அன்று மாலையே அகிலா ஒரு நோட்டுப் புத்தகத்தின் கடைசிப் பக்கத்தில் பெரிய எழுத்தில் தலைப்பிட்டாள். ‘ஆபரேஷன் விசுவாமித்திரன்’. நாள், நேரம், இடம், கையில் இருந்த பொருள் என்று நான்கு கட்டங்கள் வரைந்தாள். இரண்டே வாரத்தில் அந்தப் பக்கம் நிறைந்து விட்டது.
“திங்கள், பத்து இருபது, வராந்தா, கையில் நோட்டு.”
“புதன், பதினொன்று, வராந்தா, கையில் ஸ்டெதஸ்கோப். ஆனா அவருக்கு இங்கே வகுப்பே இல்ல.”
“வெள்ளி, பன்னிரண்டு நாற்பது, கேன்டீன். நமக்கு மூணு டேபிள் தள்ளி.”
“இதை எதுக்கு எழுதி வைக்கிற?” நியதி புருவம் சுருக்க, “ஆதாரம் டி! ஒரு நாள் உன் கிட்ட வந்து நிற்கப் போறார்ல. அப்போ ஆதாரம் வேணாமா?” என்றாள் அகிலா.
“அவர் ஏன் என் கிட்ட வந்து நிற்கணும்?”
“தெரியலையே. ஆனா கேள்வி கேட்கிறதுக்கே பிறந்தவ நீ தானே. நீ தான் கண்டுபிடிக்கணும்.”
★★★★★
அதற்குள் கல்லூரி முழுவதும் ஒரு செய்தி காட்டுத் தீயாகப் பரவிக் கொண்டிருந்தது.
“தெரியுமா? விசுவாமித்திரன் இப்போல்லாம் முதல் வருஷ வராந்தாவுல சிரிச்சிட்டு நிக்கறாராம்!”
“ஐயோ! என்னடி சொல்ற? அந்த நெற்றிக்கண் மனுஷனா?”
“நானே பார்த்தேன். கண்ணெல்லாம் சுருங்கற அளவுக்குச் சிரிப்பு!”
பெண்களைப் பார்த்தாலே நெற்றிக் கண்ணைத் திறப்பவர் என்று பெயர் வாங்கிய மனிதர் புன்னகைத்தது அன்றைய தலைப்புச் செய்தி ஆனது. ஆளாளுக்கு ‘யார் அந்த ஜூனியர்?’ என்று தேடிக் கொண்டிருக்க, அந்த ஜூனியர் நோட்டீஸ் போர்டுக்கு முன்னால் நின்று விதிகளை மனப்பாடம் செய்து கொண்டிருந்தாள்.
நியதிக்கு ஒரு பழக்கம், எந்த காரணம் கொண்டும் ரூல்ஸ் மீற மாட்டாள். அப்படி மீறுவது யாரானாலும் விட மாட்டாள். இந்தப் பழக்கம் ஒரு நாள் ஒரு விசுவாமித்திரனுக்கே ஆபத்தாக முடியப் போகிறது என்பது அப்போது அவளுக்குத் தெரியாது. அந்த நாளும் வந்தது. இடம், நூலகம்.
“நூலகத்தில் அமைதி காக்கவும்” என்று சிவப்பு எழுத்துகளில் எழுதிய அட்டை சுவரில் தொங்கியது. நியதி தினமும் அதைப் படித்து மனதுக்குள் வழிமொழிவாள். அன்று ஹிஸ்டாலஜி நோட்ஸில் மூழ்கியிருந்தவள், பின்னால் இரண்டு மேசைகள் தள்ளி எழுந்த கிசுகிசுப்பில் திரும்பினாள்.
விக்ரமன். அருகில் அமர்ந்திருந்த நண்பன் ஏதோ சொல்லிவிட, இவன் வாயைப் பொத்திக் கொண்டு குலுங்கிக் குலுங்கிச் சிரித்துக் கொண்டிருந்தான்.
நியதி நாற்காலியை விட்டு எழுந்தாள். “ஐயோ வேண்டாம்டி!” என்று பாவமாகக் கையைப் பிடித்த அகிலாவை உதறிவிட்டு, நேராக அவர்கள் மேசைக்கு நடந்தாள்.
“எக்ஸ்கியூஸ் மீ சீனியர்.”
சிரிப்பு அவன் முகத்தில் அப்படியே உறைந்தது.
“அந்தச் சுவர்ல ஒரு போர்டு இருக்கு. படிச்சிருக்கீங்களா?” நியதி அமைதியாகக் கேட்டாள்.
விக்ரமன் அவள் கை காட்டிய திசையில் திரும்பிப் பார்த்தான். ‘அமைதி காக்கவும்’.
“ஸா… ஸாரி.” என்றான் கிசுகிசுப்பாக.
“ஸாரி சொல்றதும் சத்தம் தான் சீனியர். இனிமே கவனமா இருங்க.”
நூலகர் முதல் அங்கிருந்த அத்தனை பேரின் தலைகளும் ஒரே நேரத்தில் திரும்பின. ராகிங் செய்யும் சீனியர்களையே நடுங்க வைத்த விசுவாமித்திரன், ஒரு முதலாம் ஆண்டுப் பெண்ணின் முன்னால் பள்ளிச் சிறுவனைப் போலத் தலையாட்டிக் கொண்டிருந்தான். அவனது நண்பன் மேசைக்குக் கீழே குனிந்து தன் சிரிப்பை அடக்கப் போராடினான்.
விக்ரமன் எதுவும் பேசாமல் புத்தகங்களை அடுக்கிக் கொண்டு வெளியேறினான். அவனது காது மடல் சிவந்திருந்தது. அவன் பின்னால் நூலகத்தின் கதவு கூடச் சத்தமில்லாமல் மூடிக் கொண்டது.
“நீ விசுவாமித்திரனையே ஒரு வழி பண்ணிட்ட !” அகிலா மூச்சு வாங்கினாள். “இனிமே நம்ம ஏரியா பக்கமே வர மாட்டாரு.”
“ரூல் ரூல் தான் அகில்ஸ். யாரா இருந்தாலும்.” என்று தோளைக் குலுக்கி அமர்ந்தாள் நியதி. ஆனால் சிரிப்பு உறைந்த அவன் முகம் மட்டும் மனதை விட்டு நகர மறுத்தது.
மறுநாள் மதியம், சரியாக அதே மேசையில் அமைதியின் உருவமாக அமர்ந்திருந்தான் விக்ரமன். கையில் ஒரு புத்தகம். தலைகீழாக.
அகிலா தன் பேனாவை எடுத்தாள். “வியாழன், நூலகம், புத்தகம் தலைகீழ்.”
நோட்ஸுக்குள் முகத்தைப் புதைத்துக் கொண்ட நியதியின் தோள்கள் குலுங்கின. சிரிக்கக் கூடாது என்ற விதியை அன்று அவளே மீறினாள்.
★★★★★
“ஆபரேஷன் விசுவாமித்திரன் நோட்டுப் புத்தகம் இன்னும் அகிலா கிட்ட பத்திரமா இருக்கு தெரியுமா?” என்று நியதி முடிக்க, மண்டபம் ஆரவாரித்தது.
“தலைகீழ் புத்தகமா? விக்கி! நீ படிக்கிறதுக்கு இல்லை, பார்க்கிறதுக்குத் தான் லைப்ரரிக்கு வந்திருக்க!” என்று மாதவன் மைக்கில் கத்தினான். அனைவரும் சிரித்தனர்
“இப்போ மூணாவது கேள்வி!” என்று மைக்கை உயர்த்தினான் மாதவன். “இவ்வளவு கண்காணிச்ச மனுஷன், ஏன் கடைசி வரைக்கும் வாயைத் திறக்கலை
? தெளிவா சொல்லுங்க சார்!”
விக்ரமன் பெருமூச்சு விட, நியதி அவன் காதருகே குனிந்தாள். “அதுக்கான பதில் எனக்கும் தெரியணும்.”
Author: SudhaSri
Article Title: மழைக்கு ஏங்கிய மாந்தளிரே -2
Source URL: Nectar Novels-https://nectarnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Article Title: மழைக்கு ஏங்கிய மாந்தளிரே -2
Source URL: Nectar Novels-https://nectarnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.