• ஹாய் மக்களே! நம் Nectar Novels தளத்திற்கு நல்வரவு🙏😍😍 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள் nectarnovels.ss@gmail.com 🩷 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...👇 வேதா விஷால் & அனன்யா🙏💖

மழைக்கு ஏங்கிய மாந்தளிரே -3

SudhaSri

Administrator
Staff member
Jun 16, 2024
513
28
43
india
மழைக்கு ஏங்கிய மாந்தளிரே -3


“கண்ணொடு கண்ணிணை நோக்கொக்கின் வாய்ச்சொற்கள்
என்ன பயனும் இல.”

இந்த முறை விக்ரமன் உடனே பதில் சொல்லவில்லை. மைக்கை வாங்கிக் கொண்டு ஒரு நொடி மௌனமாக நின்றவனின் முகத்தில் இருந்த விளையாட்டுத்தனம் மறைந்து, குரல் நிதானமாக வெளிப்பட்டது.
“சொல்லணும்னு தோணாம இல்லை மாதவா. ஆனா அப்போ என் கிட்ட சொல்றதுக்கு எதுவுமே இல்லை. நான் இன்னும் படிச்சிட்டு தான் இருந்தேன். ஹையர் ஸ்டடீஸுக்கு அப்ராட் போகணும்னு அப்பவே டிசைட் பண்ணியிருந்தேன். ஒரு பொண்ணு கிட்ட எனக்கு உன்னைப் பிடிச்சிருக்குன்னு சொல்லிட்டு, அவ படிப்புக்கு நடுவுல நான் பாட்டுக்கு ஃப்ளைட் ஏறிட்டா, அது அவளுக்கு நான் பண்ற அநியாயம்னு தோணுச்சு.”
மண்டபம் சற்றே அமைதியாக, நியதி அவனைத் திரும்பிப் பார்த்தாள்.

“அட்றா சக்க! சென்டிமென்ட் சீன்!” என்று குரலை உயர்த்தி அந்த அமைதியை உடைத்தான் மாதவன். “இதெல்லாம் இவன் இப்போ சொல்றான். ஸ்கூல் டேஸ்ல இருந்தே இவன் பொறுப்பு பொன்னுசாமி. எதுவானாலும் லிஸ்ட் போட்டு, பிளான் போட்டுத் தான் மூச்சே விடுவான். லவ் மட்டும் பிளான் போட்டா வராது டா!”

“நீங்க சொல்றது கரெக்ட் தான் மாது அண்ணா” என்று சிரித்தாள் நியதி. “நானும் அதே லெவல் தான். எனக்கும் ஒரு ரூல் இருந்துச்சு. படிப்பு முடியற வரைக்கும் இதுக்கெல்லாம் நோ என்ட்ரி. இரண்டு பொறுப்பு பொன்னுசாமிகள் ஒரே காலேஜ்ல இருந்தா என்ன ஆகும்னு அப்போ தான் புரிஞ்சது. வருஷக்கணக்குல வெறும் பார்வை மட்டும் தான்.”

“ஆனா பார்வையோட நின்னாரா இவரு?” என்று இடையே புகுந்தாள் வைஜயந்தி. “அண்ணி! அந்த ஸ்டிக்கி நோட் மேட்டரைச் சொல்லுங்க!”

“நோட்டா?” விக்ரமனின் முகம் மாறியது. “வேதாள்! உனக்கு அது எப்படித் தெரியும்?”

“அகிலா அக்கா சொன்னாங்களே!”
நியதி கண்களை மூடி ஒரு கணம் புன்னகைத்தாள். அந்தப் புன்னகையோடு காலம் மறுபடியும் பின்னோக்கிச் சுழன்றது.

★★★★★
அன்று அனாடமி பேராசிரியர் நல்ல மனநிலையில் இல்லை போலும். நியதி எழுந்து நிற்பதற்கு முன்பே அவரது புருவங்கள் சுருங்கின.

“அகெய்ன் நீயா? உனக்குக் கேள்வி கேட்க மட்டும் தான் தெரியுமா, படிக்கத் தெரியாதா? ஃபர்ஸ்ட் போர்ஷனைப் படிச்சிட்டு வா. அப்புறம் வாயைத் திற. சிட் டவுன்!”

வகுப்பறை நிசப்தமானது. பின் வரிசையில் யாரோ ‘உச்’ கொட்டினார்கள். எதுவும் பேசாமல் அமர்ந்த நியதி, அன்று முழுவதும் வாயைத் திறக்கவே இல்லை. அது தான் அகிலாவுக்குப் பெரும் பயத்தைக் கொடுத்தது. நியதி வாயை மூடிக் கொண்டு அமைதியாக இருப்பது, அகிலா இதுவரை பார்த்திராத காட்சி.
அன்று மாலை நூலகத்தில், அமைதி காக்கவும் என்ற போர்டுக்குக் கீழே அமர்ந்திருந்த தோழியின் காதில் அகிலா மெல்லக் கிசுகிசுத்தாள்.

“சார் சொன்னதை மனசுல வச்சுக்காத நிதி. அவர் எப்பவுமே அப்படித் தான்.”

“எனக்கு அவர் மேல கோபம் எல்லாம் இல்லை அகில்ஸ்.” நியதியின் குரலும் கிசுகிசுப்பாகவே வந்தது. “நிஜமாவே நான் ஓவரா கேள்வி கேட்கிறேனோன்னு தோணுது.”

அடுத்த வரிசைப் புத்தக அலமாரிக்குப் பின்னால் நின்றிருந்த ஒருவனின் காதுகளில் அந்த வார்த்தைகள் விழுந்ததை அவள் அறியவில்லை. அவனோ தன் பையிலிருந்த ஸ்டிக்கி நோட் கட்டிலிருந்து ஒன்றைப் பிய்த்தெடுத்து, பேனாவைத் திறந்தான்.
மறுநாள் நூலகத்தில், புத்தகம் ஒன்றைத் திருப்பிக் கொடுத்து விட்டு மேசைக்குத் திரும்பிய நியதி, தன் அனாடமி புத்தகத்தின் பக்கங்களுக்கு நடுவே ஒட்டியிருந்த ஒரு மஞ்சள் ஸ்டிக்கி நோட் எட்டிப் பார்ப்பதைக் கண்டாள்.

‘கேள்வி கேட்கிறவங்களால தான் மெடிசினே வளர்ந்தது. கேட்டுட்டே இரு.’
கீழே கையொப்பமோ பெயரோ இல்லை. ஆனால் எழுத்துகள் மட்டும் முத்து முத்தாக இருந்தன.

“ஏய்! யாரோ உனக்கு லவ் லெட்டர் கொடுத்திருக்காங்கடி!” என்று கிசுகிசுப்பிலேயே கூவினாள் அகிலா.

“இது லவ் லெட்டர் இல்லை அகில்ஸ். மோட்டிவேஷன் நோட்.”

“மோட்டிவேஷன்னா யார் வேணும்னாலும் எழுதலாமா?” என்றபடி அந்த எழுத்துகளைக் கூர்ந்து பார்த்தாள் அகிலா.

“லைப்ரரிக்கு ஆயிரம் பேர் வந்து போவாங்க. ஆனா அந்த ஆயிரம் பேர்ல நம்ம சஸ்பெக்ட் ஒரே ஒருத்தர் தான்.” என்ற அகிலா, தோழியை இழுத்துக் கொண்டு நேராக நோட்டீஸ் போர்டுக்குச் சென்றாள். அங்கே ஒட்டியிருந்த ராகிங் தடுப்பு அறிவிப்பின் கீழே ‘— விக்ரமன்’ என்று ஒரு கையொப்பம் இருந்தது. அதே நேர்த்தியான வளைவுகள். அதே முத்து முத்தான எழுத்து.

நியதி சில விநாடிகள் அந்தக் கையொப்பத்தையும் ஸ்டிக்கி நோட்டையும் மாறி மாறிப் பார்த்தாள்.
“இருக்கலாம். பட் இது ப்ரூஃப் இல்லை. இதே மாதிரி ஹேண்ட்ரைட்டிங் ஆயிரம் பேருக்கு இருக்கும்.”

“ஐயோ ராமா! உனக்கு எந்த வழியில நான் புதிய வைக்க?” என்று புலம்பிய தோழியைக் கண்டுகொள்ளாமல், அந்த ஸ்டிக்கி நோட்டை மெல்லப் பிரித்து, அனாடமி புத்தகத்தின் அட்டைக்கு உள்பக்கம் ஒட்டிப் பத்திரப்படுத்தினாள் நியதி. அதைப் பற்றி அவள் வேறு யாரிடமும் மூச்சு விடவில்லை.
அதன் பிறகு ஸ்டிக்கி நோட்ஸ் எதுவும் வரவில்லை. ஆனால் சின்னச் சின்ன அதிசயங்கள் நடக்கத் தொடங்கின.

எப்போதும் யாராவது எடுத்துப் போயிருக்கும் அனாடமியின் முக்கிய புத்தகம் ஒன்று அவள் கேட்ட போதெல்லாம் கிடைத்தது.

நூலகரிடம் கேட்டால், ‘யாரோ ஒரு சீனியர் சொல்லிட்டுப் போனாரு மா’ என்பதற்கு மேல் ஒரு வார்த்தையும் வாங்க முடியவில்லை.
ஒரு மாலை வானமே கிழிந்தது போலப் பெருமழை கொட்டியது. வாசுதேவனின் கார் டிராஃபிக்கில் சிக்கிக் கொண்டதால், நனைந்தே போய் விடலாம் என்ற முடிவுடன் நியதி வராந்தாவில் இருந்து இறங்கப் போன போது, அவள் நின்ற தூணின் அருகே ஒரு கருப்புக் குடை சாய்த்து வைக்கப்பட்டிருப்பதைக் கண்டாள். சுற்றிலும் யாருமே இல்லை. மறுநாள் அவள் அந்தக் குடையை அதே தூணின் அருகே கொண்டு வைத்தாள். சில நொடிகளில் அது மாயமாகி இருந்தது.
“கொடுத்தவரும் எடுத்தவரும் ஒரே ஆளாத் தான் இருக்கணும் டி” என்றாள் அகிலா.

அன்று அந்தப் பெருமழையில் தன்னை நனையாமல் காத்த குடையை நியதி ஒருபோதும் மறக்கவில்லை.
இருவருக்கும் நடுவே காலம் ஓடிக் கொண்டே இருந்தது. நியதி இரண்டாம் ஆண்டு, மூன்றாம் ஆண்டு என்று படிகளேறினாள். விக்ரமன் இளநிலைப் படிப்பை முடித்து முதுநிலையில் அடியெடுத்து வைத்தான். வராந்தாக்கள் மாறினவே தவிரப் பார்வைகள் மாறவில்லை. எதிரில் வந்தால் ஒரு தலையசைப்பு, ஒரு சிறு புன்னகை. அதைத் தாண்டி ஒரு வார்த்தை கூடப் பேசிக் கொள்ளாமலேயே வருடங்கள் கரைந்தன.
★★★★★
“ஒரு குடை, ஒரு புக், ஒரு நோட்! வருஷக்கணக்குல இது தான் உங்க லவ் ஹிஸ்டரியா?” என்று நெஞ்சில் கை வைத்து நாற்காலியில் சரிந்தான் மாதவன்.

“இதைக் கேட்டுட்டு உட்கார்ந்திருக்கிற என் பொறுமைக்கு யாராவது ஒரு அவார்ட் குடுங்கப்பா!”

“அவார்ட் உனக்கு இல்லை மேடி, எனக்குத் தான் முதல்ல கொடுக்கணும்” என்றபடி நண்பர்கள் வரிசையில் இருந்து எழுந்து நின்றான் அர்ஜுன்.

“அந்தக் கொட்டுற மழையில குடையைக் கொண்டு போய் அந்தத் தூண் கிட்ட வச்சது யாருன்னு நினைக்கிறீங்க? மறுநாள் சத்தமில்லாம அதைத் திருப்பி எடுத்துட்டு வந்தது யாரு? லைப்ரரியன் கிட்ட அந்த புக்கை ரிசர்வ் பண்ணி வைங்கன்னு சொன்ன அந்த யாரோ சீனியர் எல்லாம் இந்த அடியேன் தான். நம்ம ஹீரோ தூரத்துல நின்னு வேடிக்கை தான் பார்த்தாரு.”
மண்டபம் மீண்டும் அதிர்ந்தது.

“அப்போ அகிலா அன்னைக்கே கரெக்டா தான் சொல்லியிருக்கா!” என்று கண்களை விரித்தாள் நியதி.

“அடப்பாவி! அப்போ இந்த லவ் ஸ்டோரியோட போஸ்ட்மேன் நீ தானா?” என்று மாதவன் கேட்க, “போஸ்ட்மேன் இல்லை மேடி, ஃப்ரீ கூரியர் சர்வீஸ். இதுக்கு ஒரு காபி கூட இவன் வாங்கித் தரலை” என்று நண்பனை முறைத்தான் அர்ஜுன்.

சிரிப்பலை அடங்கியதும் நியதி விக்ரமனின் பக்கம் திரும்பினாள். “ஆனா அந்த ஸ்டிக்கி நோட் மட்டும் உங்களோடது தானே? அது இன்னும் என் கிட்ட தான் இருக்கு.”

விக்ரமனின் கண்கள் ஆச்சரியத்தில் விரிந்தன. “இன்னுமா?”
“என் ரூல் புக்ல இருக்கிற ஒரே எக்ஸெப்ஷன் அது தான்.”
அந்த ஒரு வரியில் மண்டபம் ஆரவாரிக்க, விக்ரமன் முதல் முறையாக வாயடைத்துப் போய் நின்றான்.

“சரி சரி!” என்று மைக்கைத் தட்டிய மாதவன், கண்ணீரைத் துடைப்பது போல நடித்தான். “அப்போ இந்த சைலன்ஸை பிரேக் பண்ணது யாரு? நாலாவது கேள்வி! இனிமே தான் கதையே சூடு பிடிக்கப் போகுது!”

“நானா? நான் வாயைத் திறக்கலை மாதவா.” விக்ரமன் மைக்கைப் பிடித்துக் கொண்டு குறும்புடன் இழுத்தான்.

“காதைத் திறந்தேன்.”

“காதையா? என்ன விக்கி சொல்ற?” மாதவன் புரியாமல் விழித்தான்.

“அன்னைக்கு கேன்டீன்ல ஒரு மூலையில உட்கார்ந்திருந்தேன்” என்றவன் நியதியின் பக்கம் திரும்பினான். “உன் வட்டமேசை மாநாடு நடந்துச்சே, அதே நாள்.”
நியதியின் முகத்தில் இருந்த சிரிப்பு சட்டென்று உறைந்தது.

“வட்டமேசை மாநாடா? அப்போ… அங்கே நீங்க…” அவளது வார்த்தைகள் தடுமாறின.

“சொல்லுங்க! சொல்லுங்க!” என்று மண்டபமே கோரஸ் பாட, முகத்தை இரண்டு கைகளாலும் மூடிக் கொண்டாள் நியதி. காலம் மறுபடியும் பின்னோக்கிச் சுழன்றது.

★★★★★
அன்று காலை புரொஃபசர் புருஷோத்தமனின் அறையில் விழுந்த திருமணப் பேச்சு விக்ரமனின் மனதைக் குழப்பி விட்டிருந்தது. எம்.எஸ். இறுதியாண்டு, வெளிநாட்டு மேற்படிப்பு என்று தெளிவான திட்டங்கள் வைத்திருந்தவன் தனிமையை நாடிக் கேன்டீனின் ஒரு மூலையில் போய் அமர்ந்தான்.

‘அவளைப் பிடிச்சிருக்கு தான். ஆனா இவள் தான் என் வாழ்க்கைன்னு முடிவு செய்ய அது மட்டுமே போதுமா?’ என்று அவன் அலசிக் கொண்டிருக்க, ‘வேறென்ன வேணும்? அவளுக்கும் உன்னைப் பிடிக்கிற மாதிரி தான் இருக்கு. நீ போய்ப் பேச வேண்டியது தானே! நீ முடிவெடுக்கிற வேகத்துக்கு உனக்கெல்லாம் டைரக்டா அறுபதாம் கல்யாணம் தான்’ என்று காரி துப்பியது மனசாட்சி. அந்தச் சுய அலசலை எதிர்ப்புறம் எழுந்த ஆரவாரம் கலைத்தது.

அந்தக் கும்பலின் நடுவே வந்தவளைக் கண்டதும் அவன் முகம் தானாகவே புன்னகை பூசிக் கொண்டது. அவர்கள் பார்வை படாத இடத்தில் அமர்ந்திருந்தது அவனுக்கு மிகவும் வசதியாகப் போனது.

“ஹேய் இங்கே உட்காருங்க டி. அந்த இரண்டு டேபிளையும் சேர்த்து போடுங்க. அப்படித்தான். இப்போ எல்லாருக்கும் சீட் ரெடி. யாருக்கு என்ன வேணும்னு ஆர்டர் பண்ணிட்டா, வட்டமேசை மாநாட்டை ஆரம்பிக்கலாம். ரெடி ஸ்டார்ட்!”

“என்ன டாபிக்னு சொல்லாமல் ரெடி மட்டும் சொன்னால் எப்படி டி?”

“ஓ மை கடவுளே! உன்னையெல்லாம் மேய்க்க வேண்டியது இருக்குன்னு நினைக்கும் போதே எனக்கு ரத்தக் கண்ணீர் வருது டி. நம்ம கூட நாலு வருஷமா இருந்தும் ஏன் டி இவ இப்படி தத்தியா இருக்கா?”

“ட்ரைனிங் பத்தல போல இருக்கு. பரவாயில்ல விடு. இவளை அப்புறம் கவனிக்கலாம். இப்போ மேட்டருக்கு வா.”

ஆளாளுக்கு வளவளத்துக் கொண்டிருக்க விக்ரமனுக்கு வேடிக்கையாக இருந்தது. பள்ளிக் காலம் தொட்டே பொறுப்பு பொன்னுசாமியாக இருந்தவன் அவன். இது போன்ற நிகழ்வுகள் எல்லாம் அவன் வாழ்க்கையில் நடந்ததே இல்லை. ‘இன்னும் கொஞ்ச நாள்ல டாக்டராகப் போறோம்னு இல்லாம எப்படி எல்லாம் ஜாலியா கலாய்க்கறாங்க! நாம தான் ரொம்ப ஓவர் படிப்ஸா இருந்துட்டோமோ?’ என்ன செய்ய, அவனுக்குக் காலம் கடந்த ஞானோதயம்.

“அப்பவும் இப்பவும் எப்பவும் காலேஜ்ல நமக்குப் பேசறதுக்கு ஒரே டாபிக் தான். அது ஒன் அண்ட் ஒன்லி விசுவாமித்திரன் தான்” என்று ஒருத்தி சொல்ல, “ஆமாம் ஆமாம்… எப்போதுமே ஹாட் டாபிக் நம்ம விசுவாமித்திரன் தான்” என்று வழிமொழிந்தாள் இன்னொருத்தி.

விக்ரமன் அதிர்ந்து போனான். இந்தக் கல்லூரியில் சேர்ந்த நாள் முதல் பெண்கள் மத்தியில் அவன் அந்தப் பெயரில் தான் அழைக்கப்படுகிறான் என்பது அவனுக்கு நன்றாகவே தெரியும். முன்பிருந்த விசுவாமித்திரனாக இருந்தால் நேராகப் போய்க் கோபப்பட்டுக் கத்தி இருப்பான். இப்போது இருப்பவன், தன் மனதில் ஏற்பட்ட சலனத்துக்கு எதிரொலி தேடிக் காத்திருப்பவன். அதனால் அவனது கவனம் முழுவதும் நியதியிடம் மட்டுமே இருந்தது.

“சரி சரி.. எல்லாரும் நல்லா கவனிங்க. ஏன்னா நான் சொல்லப் போறது ரொம்ப முக்கியமான விஷயம். முதல்ல, இத்தனை நாளும் நாம தூரத்தில இருந்து கஷ்டப்பட்டு செஞ்ச வேலையை, பக்கத்தில இருந்து ஈஸியா செய்ய சான்ஸ் கொடுத்த எல்லாருக்கும் ஒரு ஓ.. போடுங்க.”

“ஓ…”

“அப்படி என்ன வேலை ஈஸியாகிடுச்சு?”

“சரியான டவுட்டுக்குப் பிறந்தவ டி இவ. நம்ம காலேஜோட மோஸ்ட் ஹேண்ட்ஸம் ஹீரோவ பக்கத்தில இருந்து சைட் அடிக்க ஒரு அரிய வாய்ப்பு. இது போலக் கிடைக்கும்னு நாம கனவுலயாவது நினைச்சிருப்போமா?”
அந்த வருடம் தான் விக்ரமன் அவர்களுக்கு வகுப்புகள் எடுக்கத் தொடங்கியிருந்தான் என்பது அவனுக்கே நினைவுக்கு வந்தது.

“நெக்ஸ்ட், அவருக்குப் பெயர் மாத்த வேண்டிய அவசியம் வந்துடுச்சுன்னு நினைக்கிறேன். ஸோ… ஒரு நல்ல பேரை சூஸ் பண்ணுங்க. இன்னைக்கே நாள் நல்லா இருக்கு, பேர் வச்சிடுவோம்.”

“கரெக்டா சொன்ன டி. லேடீஸைப் பார்த்தாலே நெற்றிக் கண்ணைத் திறக்கிறவன்னு தான் நினைச்சிட்டு இருந்தோம். இன்னைக்கு இரண்டு மணி நேரத்தில லேடீஸைப் பத்தி அவனோட கண்ணோட்டம் என்னன்னு தெளிவா புரிய வச்சிட்டான். ஆவ்சம் மேன்!”

அவர்கள் பேசப் பேசத் தலையில் கை வைத்து அமர்ந்து விட்டான் விக்ரமன். ஆனாலும் அவன் காதுகள் நியதியின் வாய்மொழிக்காகவே காத்திருந்தன. அவளும் வாய் திறந்தாள்.

“ஏய்.. உங்களுக்கெல்லாம் வேற வேலை இல்லையா? கிளாஸ கவனிப்பீங்களா, கிளாஸ் எடுக்கிற ஸ்டாஃப சைட் அடிப்பீங்களா? அப்புறம் எப்படி சப்ஜெக்ட் மண்டைல ஏறும்?” நியதி படபடவென்று பொரிந்தாள்.

“இதப் பாருடா! பிள்ளைப் பூச்சி எல்லாம் சவுண்ட் விடுது.”

“என்ன இருந்தாலும் அவளோடது சின்சியர் சைட்டு பா. நம்மள மாதிரி டெம்பரரி கிடையாது.”

“அதுக்காக, எதுவும் டிக்ளேர் பண்ணாம ரைட்ஸ் கேட்கிறது எல்லாம் த்ரீ மச்.. இதெல்லாம் செல்லாது செல்லாது.”

“ம்ச்.. நான் என்ன சொன்னேன், நீங்க என்ன பேசறீங்க? நீங்களா எதையாவது இமேஜின் பண்ணிப் பேசாதீங்க.”

“ஹை.. ஹை.. இந்தக் கதையே வேணாம். எங்களுக்கு எல்லாம் சின்ன வயசுலயே காது குத்தியாச்சு. வேற வழியே இல்லை உனக்கு, நீ அவனைப் பார்க்கிறேன்னு ஒத்துக்க தான் வேணும்.”

சற்று நேரம் பலத்த அமைதி நிலவியது. நியதியின் வாயிலிருந்து வரும் வார்த்தைகளுக்காக அவளது தோழிகள் காத்திருக்க, விக்ரமனும் தன் காதுகளைத் தீட்டி வைத்துக் காத்திருந்தான்.

“நான் சொல்றதை எப்படி எடுத்துப்பீங்கன்னு தெரியாது. ஆனால், என் வரைக்கும் அது தான் நிஜம். யெஸ், நான் அவனைப் பார்க்கிறேன் தான்..”

“ஓஹோ….” என்று ஆர்ப்பரித்தது கூட்டம்.

‘யெஸ்!’ என்றது விக்ரமனின் இதயம். தான் தேடிய எதிரொலி கிடைத்து விட்ட சந்தோஷத்தைக் கண் மூடி அனுபவித்தான்.

“நான் இன்னும் முடிக்கலை. கண்டிப்பா படிப்பு முடியற வரைக்கும் நான் அவன் கிட்ட எதுவும் சொல்ல மாட்டேன்.”

“ஏய்.. என்னடி இப்படி சொல்ற?”

“இந்த வருஷம் முடிஞ்சா, அப்புறம் அவனைப் பார்க்கவே சான்ஸ் இருக்குமான்னு தெரியாது. அப்புறம் ஏன் டி…”

“இதான் ஜாடிக்கேத்த மூடின்னு சொல்வாங்களோ. அவனும் உன்னை மட்டும் தான் பார்க்கிறான்னு எங்களுக்கு நல்லாவே தெரியும். உனக்கும் பிடிச்சிருக்கு. ஆனால் இரண்டு பேரும் சொல்ல மாட்டீங்க. இதென்ன சொல்லாமலே காதலா… எந்த காலத்தில இருக்கீங்க டீ இரண்டு பேரும்… ஷப்பாஆஆ.. நல்ல வேளை டா சாமி, நமக்கு யாரும் சிக்கலை. நமக்கு இந்த மாதிரி தெய்வீகக் காதல் எல்லாம் செட் ஆகாது..”

தோழிகள் ஆளாளுக்குத் தங்கள் ஆதங்கத்தைக் கொட்ட, நியதி அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்தாள். விக்ரமனின் மனம் மீண்டும் குழம்பிப் போனது. ஆனால் அடுத்து அவள் பேசிய பேச்சு அவனைத் தெளிவாக முடிவெடுக்க வைத்தது.

“எந்த ஒரு முடிவையும் எடுக்கிறதுக்கு முன்னாடி அதோட பாஸிட்டிவ் நெகடிவ் எல்லாத்தையும் யோசிக்கணும். அஃப்கோர்ஸ் எனக்கு அவனைப் பார்க்கப் பிடிச்சிருக்கு, அவன் பார்வையும் அதைத் தான் சொல்லுது. கல்யாணத்துக்கு இது மட்டுமே போதுமான்னு எனக்குத் தெரியாது. ஏன்னா கல்யாணம்கிறது என்னைப் பொறுத்தவரை ரொம்ப சீரியஸ் விஷயம். லைஃப்ல ஒரு தடவை தான்னு தெளிவா இருக்கேன். நம்ம புரோஃபஷன்ல டூயட் பாடறதுக்கெல்லாம் டைம் கிடையாது. லெட் மீ வெயிட் ஃபார் சம் மோர் டைம். அவன் தான் வேணும்னு என் மனசு அடம் பிடிச்சா, அப்போ கல்யாணம் பண்றதைப் பத்தி யோசிக்கலாம். அது வரைக்கும் நான் இப்படித் தான் இருப்பேன். ஹோப் யூ ஆல் அன்டர்ஸ்டாண்ட்.”

பேசி முடித்தவள் தன் சாப்பாடு வந்திருக்க, அதில் கவனமானாள். தோழிகள் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு என்ன பேசுவது என்று தெரியாமல் விழிக்க, விக்ரமனுக்கோ மனதிலிருந்து ஏதோ பாரம் இறங்கியது போலிருந்தது. அவளது சிந்தனையும் தன்னை ஒட்டியே இருப்பதை எண்ணி மனம் துள்ளியது. ‘வாட் எ கோ இன்சிடன்ஸ்? ஷி இஸ் அமேசிங்!’ என்று சிலாகித்தவன், “தேங்க்ஸ் ஸோ மச் நிதி!” என்று முணுமுணுத்தான்.
அவனது டெலிபதி வேலை செய்ததோ என்னவோ, நியதி மீண்டும் வாய் திறந்தாள்.

“ஹேய் என்ன டி. எல்லாரும் இப்படி சோகமாகிட்டீங்க, சகிக்கலை. இப்போ என்ன ஆகிப் போச்சு. இன்னும் ஒரு வருஷத்துக்கு என் ஆளை எல்லாரும் தைரியமா சைட் அடிக்கலாம்னு பெர்மிஷன் கொடுத்திருக்கேன். அதுக்கே நீங்க எனக்கு ட்ரீட் தரணும். கமான் டெல் மீ… யாரோட ட்ரீட் முதல்ல? ஸ்டார் பக்ஸ் போகலாம்.”

‘அடிப் பாவி! இதுக்கு இவ வாயைத் திறக்காமலே இருந்திருக்கலாம்’ என்றது விக்ரமனின் மைன்ட் வாய்ஸ்.

“ஹேய்… அப்படி எல்லாம் ஈஸியா விட்டுட முடியாது. நீ என்ன பெர்மிஷன் கொடுக்கிறது? நீ தான் அவன் கிட்ட டிக்ளேர் பண்ணப் போறதிலையே, ஸோ இன்னும் அவன் பப்ளிக் ப்ராபர்ட்டி தான். எங்களுக்கும் ஈக்குவல் ரைட்ஸ் இருக்கு. நாங்களும் சைட் அடிப்போம்.”
அவர்களிடம் பழைய கலகலப்பு திரும்பி இருந்தது. பேசிக் கொண்டே அவர்கள் வெளியேற, புயலடித்து ஓய்ந்தது போலிருந்தது விக்ரமனுக்கு. அவன் மனதில் ஒரு இனம்புரியாத சந்தோஷம் பரவ, முகத்தில் புன்னகை மலர்ந்தது. பெற்றோரிடம் பேச வேண்டியதை மனதுக்குள் ஒத்திகை பார்த்தவன், அதற்கான சந்தர்ப்பத்தை எதிர்நோக்கிக் காத்திருந்தான்.

★★★★★

“அடப்பாவி! அன்னைக்கு ஒரு நாள் தான் நான் ஃப்ரெண்ட்ஸ் கிட்ட மனசைத் திறந்து பேசினேன். அதையும் ஒட்டுக் கேட்டுட்டு இத்தனை நாளா சைலன்டா இருந்தீங்களா?” நியதியின் கேள்விக்கு கூலாக பதில் சொன்னான் விக்ரமன்.

“நீ தானே படிப்பு முடியற வரைக்கும் சொல்ல மாட்டேன்னு சொன்ன? நான் உன் ரூலை மதிச்சேன்” என்று அப்பாவியாகக் கையை விரித்தான்.

“அடேய் விசுவாமித்திரா! காதைத் திறந்து வச்சு, வாயைப் பூட்டி வச்சு… என்ன தவம் டா இது!” என்று மாதவன் தலையில் கை வைத்தான்.

“ஓகே ஓகே! காது திறந்த கதை முடிஞ்சது. வாய் எப்போ திறந்தாருன்னு இப்போ பார்க்கலாம். அடுத்த கேள்வி பெத்தவங்களுக்கு!” என்று அவன் குரல் கொடுக்
க, முன் வரிசையில் அமர்ந்திருந்த வாசுதேவன் நெஞ்சைப் பிடித்துக் கொண்டார்.

“எனக்கு பிபி ஏறுது சுகா!”

“உட்காருங்க. இன்னும் கதையே ஆரம்பிக்கலை.” சுகந்தா அவர் கையை அழுத்திப் பிடித்தார்.
 

Author: SudhaSri
Article Title: மழைக்கு ஏங்கிய மாந்தளிரே -3
Source URL: Nectar Novels-https://nectarnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
  • Like
Reactions: Brindha Ganesh