• ஹாய் மக்களே! நம் Nectar Novels தளத்திற்கு நல்வரவு🙏😍😍 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள் nectarnovels.ss@gmail.com 🩷 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...👇 வேதா விஷால் & அனன்யா🙏💖

மழைக்கு ஏங்கிய மாந்தளிரே -4

SudhaSri

Administrator
Staff member
Jun 16, 2024
515
29
43
india

மழைக்கு ஏங்கிய மாந்தளிரே -4​

“யாயும் ஞாயும் யாரா கியரோ
எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்
யானும் நீயும் எவ்வழி அறிதும்
செம்புலப் பெயல்நீர் போல
அன்புடை நெஞ்சம் தாம்கலந் தனவே.”

“இது என் ஏரியா!” என்று மைக்கைப் பறித்துக் கொண்டாள் வைஜயந்தி. “அன்னைக்கு அந்த அணுகுண்டை வீசினது நான் தான்!”

“அணுகுண்டா?” முன் வரிசையில் அமர்ந்திருந்த அருந்ததி புருவம் உயர்த்த, தேவராஜன் வழக்கம் போல தன் புன்னகையைக் கண்ணாடிக்குப் பின்னால் மறைத்துக் கொண்டார்.

“மாது அண்ணா, அஸ் யூஷுவல் நீ ஆரம்பிச்சு வை” என்ற வைஜயந்தியின் கட்டளைக்கு மாதவன் பணிந்து, “ஸ்டார்ட் மியூசிக்!” என்றான். காலம் மீண்டும் பின்னோக்கிச் சுழன்றது.

★★★★★

அன்று இரவு விக்ரமனின் வீட்டு உணவு மேசையில் ஏதோ அவசர ஆலோசனைக் கூட்டத்துக்கான அமைதி நிலவியது. தேவராஜன் தயாரித்த சத்தான இரவு உணவும், அவரவருக்குப் பிடித்த பானங்களும் தயாராக இருந்தன. சாப்பிடும் போது பேசக் கூடாது என்ற வீட்டு விதிப்படி தட்டுகளின் சத்தம் மட்டுமே கேட்டுக் கொண்டிருந்தது.

“என்ன டா இது! ஒரே அமைதிப் பூங்காவா இருக்கு. விக்கிரமாதித்த மஹாராஜா கிட்ட கேட்கிறதுக்குக் கேள்விகள் நிறைய இருக்குன்னு நினைச்சேனே. அப்படி இல்லையா? அப்புறம் எதுக்கு இந்த அவசர ஆலோசனைக் கூட்டம்?” பொறுக்க முடியாமல் வெடித்தாள் வைஜயந்தி.

“வைஜூ…”

“சரி சரி, சாப்பிடும் போது பேசக் கூடாது. அதானே. ஒரு நாளைக்கு எத்தனை தடவை தான் சொல்லுவீங்க? நான் சாப்பிட்டு முடிச்சாச்சு.” என்றவள் ஜூஸ் டம்ளரைக் கையில் எடுத்தாள். “ஆனாலும் இவன் கல்யாணத்துக்கு முன்னாடியே ஸ்விட்சர்லாந்து போகணும்னு சொல்றது கொஞ்சம் யோசிக்க வேண்டிய விஷயமா தான் இருக்கு. எதுக்கும் நல்லா விசாரிச்சு முடிவு பண்ணுங்க.”

ஒரு அணுகுண்டை வீசி விட்ட திருப்தியுடன், அண்ணனின் கைக்கு எட்டாத தூரத்துக்கு நாற்காலியை நகர்த்திக் கொண்டாள் அவள்.

ஸ்விட்சர்லாந்தின் லொசேன் பல்கலைக்கழகம், புற்றுநோய்க்கும் நோய் எதிர்ப்புச் சக்திக்கும் இடையேயான தொடர்பு பற்றிய ஆராய்ச்சியில் முன்னோடியாக விளங்கியதால், விக்ரமன் தன் மேற்படிப்பை அங்கே தொடர விரும்பினான். நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரித்து விட்டால் பெண்களைத் தாக்கும் புற்றுநோய்களை வரும் முன்னே தடுத்து விடலாமே என்பது அவனது எண்ணம்.

அண்ணனின் கண்கள் தங்கையைச் சுட்டெரிக்க, சற்று நேர அமைதிக்குப் பிறகு விக்ரமனே பேச்சை ஆரம்பித்தான்.

“மாம்! டாட்! நான்.. சில ஃப்யூச்சர் ஐடியாஸ் வச்சிருக்கேன். அஃப்கோர்ஸ் நம்ம ஊரு வழக்கப்படி எனக்குக் கல்யாணம் பண்ற வயசாகிடுச்சு. ஆனா இன்னும் ஒரு நாலே நாலு வருஷம் எனக்கே எனக்குன்னு வேணும். நிறைய மைன்யூட் அண்ட் சென்சிடிவ் விஷயம் ஹேண்டில் பண்ணும் போது வேற எந்த டிஸ்ட்ராக்ஷனும் இருந்தால் கஷ்டம். அதே மாதிரித்தான் பெர்சனல் லைஃப்லயும் கம்ப்ளீட் அட்டென்ஷன் வேணும்னு நினைக்கிறேன். ஸோ…”

அடுத்து என்ன பேசுவது என்று தெரியாமல் நிறுத்தியவனைப் பெற்றோர் இருவரும் அமைதியாகப் பார்த்தார்கள். அவனே தொடர்ந்தான்.

“எல்லா விஷயத்தையும் யோசிச்சு தான் பா பேசறேன். நான் கண்டிப்பா கல்யாணம் பண்ணிக்கத் தான் போறேன். பொண்ணு கூட…”

“ஹேய்… ஸ்டாப்… ஸ்டாப்… ஸ்டாப்… இப்போ சொல்லு. பொண்ணு கூடப் பார்த்துட்டேன்னு தானே சொல்ல வந்த. யாரு அந்த மேனகை, இந்த விசுவாமித்திரனை மயக்கிய மங்கை?” உற்சாகத்துடன் இடையிட்டாள் வைஜயந்தி.

“ம்ச். வைஜூ! சீரியஸா பேசிட்டு இருக்கோம். இதென்ன சின்னக் குழந்தை மாதிரி பிஹேவியர்?” என்று மகளைக் கண்டித்தார் தேவராஜன்.

“ஸாரி டாடி. யூ கன்டினியூ.” முகம் சுருங்கி அமர்ந்த தங்கையைக் கண்டு விக்ரமன் உள்ளுக்குள் சிரித்துக் கொண்டான்.

“விக்ரம்! நீ சொல்றது எல்லாம் சரி தான்.” தேவராஜன் மகனின் பக்கம் திரும்பினார். “உன் கல்யாண விஷயத்தை விடு, அது நடக்கும் போது தானா நடக்கும். ஆனா உன் படிப்பு… எம்பிபிஎஸ் முடிக்கிறதுக்குள்ள ஆர்த்தோ, கார்டியாக், கைனீக்னு உன் சாய்ஸ் நிறைய மாறிடுச்சு. நம்ம ஃபீல்டுல அது சரி கிடையாது. ஒன்னைச் சூஸ் பண்ணினா அதுலயே நிக்கணும். அப்போ தான் டாக்டருக்கும் நல்லது, பேஷண்ட்டுக்கும் நல்லது.”

“டாட்! அப்போ எனக்கு எல்லாமே நல்லா தெரிஞ்சது. அதனால வந்த கன்ஃபியூஷன் அது. இப்போ அப்படி இல்லை. நான் தெளிவா இருக்கேன். கைனகாலஜிக் ஆன்காலஜி தான் பண்ணப் போறேன்.”

“அப்போ ஆல் தி பெஸ்ட். ஐ வில் ஹெல்ப் யூ வித் வாட்டெவர் ஐ கேன்” என்ற தேவராஜன் மனைவியைப் பார்த்தார்.

“மாம்! நீங்க எதுவுமே சொல்லலை.”

அருந்ததி புன்னகையுடன் மகனைப் பார்த்தார். “நீ உன் ஆராய்ச்சியை முடிச்சிட்டு வா. நான் உன் மேனகை யாருன்னு ஆராய்ச்சி பண்ணி கண்டுபிடிச்சு வைக்கிறேன்.”

“ஹா.. ஹா.. ஹா.. சபாஷ் அருந்ததி! சரியான போட்டி!” என்று கணவர் உற்சாகப்படுத்த, மகளோ பயமுறுத்தினாள்.

“மாம்! தேவை இல்லாத வேலை இது. நோஸ் கட் வாங்கப் போறீங்க. ஃப்ரீ அட்வைஸ் கேட்டா கேளுங்க, இல்லேன்னா பல்பு வாங்க ரெடியா இருங்க.”

“அதெல்லாம் இல்லை. நான் ஒரு தடவை சொன்னா நூறு தடவை சொன்ன மாதிரி. பார்க்கலாம் யார் ஜெயிக்கிறாங்கன்னு.”

“மா! உங்களுக்கு ஒரு விஷயம் புரியவே இல்லை. இவன் பார்க்கிற… இல்லை இல்லை.. இவனைப் பார்க்கிற பொண்ணு கண்டிப்பா இவனை மாதிரியே கல்லுளி மங்கியா தான் இருப்பா. உங்க சேலஞ்சை வாபஸ் வாங்கிட்டா உங்களுக்கு நல்லது.”

தாயும் தங்கையும் மாறி மாறிப் பேசிக் கொண்டிருக்க, விக்ரமன் ஒரு மந்தகாசப் புன்னகையுடன் அமைதியாக வேடிக்கை பார்த்தான். அவன் நினைவுகள் வைஜயந்தி சொன்ன கல்லுளி மங்கியிடம் சென்றன. அதே நேரம் இதே போன்ற ஒரு காட்சி இன்னொரு வீட்டிலும் அரங்கேறிக் கொண்டிருந்தது.

★★★★★

வெகு நாட்கள் கழித்து வீட்டுக்கு வந்திருந்த வாசுதேவன் இந்த முறை எத்தனை நாட்கள் ஒரே ஊரில் இருப்பார் என்பது யாருக்கும் தெரியாது. அதையே காரணமாகக் கொண்டு மகளின் எதிர்காலப் பேச்சை ஆரம்பித்து வைத்தார் சுகந்தா.

“ஏங்க, குட்டிமாக்கு இந்த வருஷம் இருபத்திரண்டு முடிஞ்சிடும். அடுத்த வருஷம் இன்டர்ன்ஷிப் தான். அவ ஜாதகத்தை எடுக்கலாமா? இப்போ பார்க்க ஆரம்பிச்சா தானே சரியா இருக்கும்.”

“நீ அப்படியா சொல்ற? ஆனா அவ இன்டர்ன்ஷிப்பும் முடியட்டுமே. முழுசா டாக்டர் ஆகட்டும், அப்புறம் மாப்பிள்ளை தேடலாம்.”

“இல்லங்க, அவளுக்கு குரு பலன் வந்திடுச்சுன்னு அத்தை சொன்னாங்களே. இந்த வருஷம் விட்டா, இன்னும் நாலஞ்சு வருஷம் கழிச்சு தான் கல்யாணம் பண்ண முடியும்னு சொன்னாங்க.”

“ரொம்ப நல்லது. அவ பிஜி முடிச்சிட்டு ஒரு ஸ்பெஷலிஸ்ட் ஆகி இருப்பா.”

“என்னங்க இப்படி சொல்றீங்க?”

“வேற எப்படி சொல்லணும்? இந்தக் காலத்தில வெறும் எம்பிபிஎஸ் வச்சு ஒன்னும் பண்ண முடியாது. மேல ஏதாவது படிக்கணும். டாக்டர்னா சும்மா இல்லை. இன்னும் ஜாதகம் ஜோசியம்னு பார்த்துட்டு… அவ கிட்ட முதல்ல பேசலாம்.”

“இதுக்கு என்ன அர்த்தம்?”

“அவளுக்கு யாரையாவது பிடிச்சிருக்கான்னு முதல்ல கேட்கணும். அதுக்கு அப்புறம் தான் நீ மாப்பிள்ளை தேடணுமா வேண்டாமான்னு தெரியும்.”

“நீங்க சொல்றது சரிதான். அப்படி இருந்தால் எனக்கு வேலை மிச்சம். ஆனால் இங்கே தான் அப்படி எல்லாம் ஒன்னு இருக்கிற மாதிரி தெரியலையே.”

“ஏன் இப்படி ஒரு முடிவுக்கு வந்த?”

“இல்ல… லவ் பண்ணினா ஏதேதோ சிம்ப்டம்ஸ் இருக்கும்னு சொல்றாங்களே. தானா யோசிப்பாங்க, தானே சிரிப்பாங்க, இந்த மாதிரி… அப்படி ஒன்னையும் இவ கிட்ட காணோமே!”

“சுகாஆஆ! நீயா பேசியது!” என்று பாட்டுப் பாடாத குறையாக மனைவியைப் பார்த்தார் வாசுதேவன்.

“அய்யே… என்ன இது. நிதி வர நேரம் ஆச்சு. கொஞ்சம் தள்ளியே உட்காருங்க.”

“அது சரி.. அதோ குட்டிமா வந்துட்டா.”

இவர்கள் இருவரும் அவளைப் பற்றி வாதாடிக் கொண்டிருக்க, அவளோ சுகந்தா சொன்ன அதே அறிகுறிகளோடு, எதையோ யோசித்துத் தானாகச் சிரித்தபடி, பெற்றோரைக் கவனிக்காமலே தன் அறைக்குள் சென்றாள். சுகந்தா வாயைப் பிளந்தபடி பார்க்க, வாசுதேவன் மனைவியைப் பார்த்துச் சத்தமில்லாமல் சிரித்தார்.

வெகு நேரம் ஆகியும் மகள் வெளியே வராததால் அவளுக்கான டீயுடன் மாடியேறினாள் சுகந்தா. உடையைக் கூட மாற்றாமல் படுக்கையில் படுத்திருந்தாள் நியதி. கல்லூரியிலிருந்து கொண்டு வந்த பை தரையில் கிடந்தது. விழித்தே இருந்தாலும் அவள் கண்களில் ஏதோ கனவு மிதந்தது. டீயை மேசை மீது வைத்து, பையை அதற்குரிய இடத்தில் வைத்து விட்டு மகளருகே அமர்ந்தாள் சுகந்தா. அப்போதும் அந்தக் கனவு கலையவில்லை. மகளின் இந்தத் தோற்றம் அவளுக்குப் புதியது.

“நிதி மா! எழுந்துரு. டீ கொண்டு வந்திருக்கேன் பாரு. குடிச்சிட்டு கீழே வா. அப்பா உனக்காக வெயிட்டிங். உனக்குப் பிடிச்ச ஸ்நாக்ஸும் வெயிட்டிங்.”

வேறெதுவும் கேட்டுத் தொந்தரவு செய்யாமல் எழுந்து சென்றார் சுகந்தா. இந்த விஷயத்தைக் கணவரிடம் பகிர்ந்து கொள்ள அவள் மனம் துடித்தது. அவளாகவே பேசும் வரைக்கும் கல்யாணப் பேச்சை எடுக்க வேண்டாம் என்று அன்றே முடிவு செய்தார்கள் அந்தப் பெற்றோர்.

★★★★★

“அம்மா! அன்னைக்கு நான் கனவு கண்டதெல்லாம் உங்களுக்குத் தெரிஞ்சிருக்கு, ஆனா என் கிட்ட எதுவும் கேட்கலையே!” என்று நியதி முணுமுணுத்தது அங்கிருந்த அனைவருக்கும் தெளிவாகவே கேட்டது.

“மைல்ட் சிம்ப்டம்ஸ் தான் தெரிஞ்சுது. அது சிவியராகட்டும்னு அன்னைக்கே முடிவு பண்ணிட்டோம்” என்று சுகந்தா மெல்லிய குரலில் பதில் சொல்ல, மண்டபம் சிரிப்பில் குலுங்கியது.

“என் ஆராய்ச்சியும் அன்னைக்குத் தான் ஆரம்பிச்சது!” என்று எழுந்தார் அருந்ததி. “பார்த்தீங்களா, இரண்டு அம்மாக்களுக்கும் அன்னைக்கே பொறி தட்டிடுச்சு. பசங்க தான் வாயைத் திறக்கலை.”

“ஆனா ஆன்ட்டி!” மாதவன் குறுக்கிட்டான். “நீங்க ஆராய்ச்சி பண்ணி கண்டுபிடிக்கறேன்னு சொன்ன மேனகை உங்க கண்ணுக்கு முன்னாடியே இருந்திருக்கா!”

“அதான் பிரச்சினையே.” அருந்ததி தோளைக் குலுக்கினார். “கண்ணுக்கு முன்னாடி இருந்தா எப்படிக் கண்டுபிடிக்கிறது?”

“அடுத்த கேள்வி!” என்று மைக்கை உயர்த்திய மாதவன் குரலைக் கனைத்தான். “நம்ம விசுவாமித்திரன் ஸ்விட்சர்லாந்து பறந்தாச்சு. பொண்ணு எம்.எஸ். கோல்ட் மெடலோட வெளியே வந்தாச்சு. ஆறாவது கேள்வி! யாரும் கான்டாக்ட்ல இல்லாத இந்த இரண்டு பேரும் மறுபடியும் எப்படிச் சந்திச்சாங்க?”

“லிஃப்ட்!” என்று ஒரே நேரத்தில் இருவரும் சொல்ல, மண்டபம் ‘ஓ’வென்று இழுத்தது.

“லிஃப்ட்டா?” மாதவன் புருவம் உயர்த்தினான். “இரண்டு பேரும் கோரஸ்ல சொல்றீங்கன்னா, ஏதோ மேட்டர் இருக்கு. ஆரம்பிங்க!” காலம் மீண்டும் பின்னோக்கிச் சுழன்றது.

★★★★★

எம்.எஸ். படிப்பைத் தங்கப் பதக்கத்துடன் முடித்த நியதி, தான் ஆசைப்பட்ட படியே டாக்டர் அருந்ததியின் மருத்துவமனையிலேயே பணியில் சேர்ந்திருந்தாள். அந்த மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையின் தலைமை மருத்துவரான அருந்ததி, நியதியின் கல்லூரியில் பணியாற்றி ஓய்வு பெற்றவர் என்பதால் கல்லூரி நாட்களிலிருந்தே அவளுக்கு நல்ல பரிச்சயம். அவளைப் பார்க்கும் போதெல்லாம், “உன்னை எங்க வீட்டுக்குக் கடத்திட்டுப் போயிடணும்னு பார்க்கிறேன். ஹூம். எனக்கு அதுக்குக் கொடுத்து வச்சிருக்கணுமே. எங்க வீட்டு விசுவாமித்திரன் என்ன நினைச்சிட்டு இருக்கானோ தெரியலையே?” என்று பெருமூச்சு விடுவார் அருந்ததி.

விசுவாமித்திரன் என்ற சொல் நியதிக்கு ஒரே ஒரு முகத்தைத் தான் ஞாபகப்படுத்தும். அந்த முகம் எங்கே இருக்கிறது என்று தெரியாமல் ஆண்டுகளாகத் தேடிக் கொண்டிருந்தவள், அன்று காலை அவசரமாக ஓடி வந்தாள்.

“எக்ஸ்யூஸ் மீ. ப்ளீஸ் ஹோல்ட் இட் ஃபார் எ மொமன்ட்!”

கழுத்தில் ஸ்டெத்துடன் லிஃப்ட்டை நோக்கி ஓடி வந்தவளின் கோரிக்கை ஏற்கப்பட்டது போல, பாதி மூடியிருந்த கதவுகள் நன்றாகத் திறந்தன. வழக்கமாக நான்கு மாடிகளையும் அனாயாசமாகப் படிகளில் கடந்து விடுபவள், இன்று முதல் முறையாக லிஃப்ட்டின் உதவியை நாடியிருந்தாள். உள்ளே வந்து முகம் பாராமல் “தாங்க் யூ சோ மச்” என்றவள், ‘0’ பட்டனைத் தட்டி விட்டு நின்றாள். மனம் முழுவதும் கலவையான உணர்வுகளில் மிதந்ததால், லிஃப்ட்டில் எத்தனை பேர் இருக்கிறார்கள் என்பதைக் கூட அவள் கவனிக்கவில்லை.

ஆனால் இருவர் மட்டுமே இருந்த அந்த லிஃப்ட்டில், அந்த மற்றவரின் கண்கள் இவளை வெகு சுவாரசியமாகவே பார்த்ததையும், இவள் முகத்தில் வந்து போன உணர்வுகளைக் கண்டு தனக்குள் சிரித்துக் கொண்டதையும் அவள் அறியவே இல்லை.

இரண்டாவது மாடியில் லிஃப்ட் நிற்கவும் அவசரமாக இறங்கப் போனவளைப் பிடித்து நிறுத்தியது ஒரு குரல்.

“மூஞ்சிலயே நான் குழப்பமா இருக்கேன்னு எழுதி ஒட்டி இருக்காளேன்னு நினைச்சேன். சரிதான். இது செகண்ட் ஃப்ளோர். கிரவுண்ட் ஃப்ளோர் இல்லை.”

சொல்லி விட்டு இறங்கிப் போன அந்தக் குரலில் ஸ்தம்பித்து நின்றாள் நியதி. மந்திரித்து விட்டது போலச் சில நொடிகள் நின்றவள், அவன் தானா என்று எட்டிப் பார்ப்பதற்குள் கதவுகள் மூடிக் கொண்டன.

இன்று அவனை விடுவதில்லை என்ற முடிவுடன், கிரவுண்ட் ஃப்ளோர் ரிசப்ஷனில் லிஃப்ட்டையே பார்த்தபடி அரை மணி நேரத்துக்கு மேல் காத்திருந்தாள் அவள். ‘லிஃப்ட்ல இருந்தது அவன் தானா? இதே ஹாஸ்பிடல்ல தான் இருக்கானா? இத்தனை நாள் தேடினப்போ சிக்காதவன் இப்போ எப்படி வந்தான்?’

தாயின் அறையில் இருந்த சிசிடிவி திரையில் அவளது முகத்தில் வந்து போன பாவனைகளைப் பார்த்துக் கொண்டிருந்தவன், “போட்டு வைத்த காதல் திட்டம் ஓகே கண்மணி” என்று பாடியபடி விசிலடித்தான்.

“நல்ல திட்டம் தான் போட்டிருக்கப்பா” என்றார் அருகிலிருந்த அவனது தாய். “விஷயம் தெரியும் போது அவ வேற மாதிரி பாடிடப் போறா. ஆனா உன்னைப் போய் விசுவாமித்திரன்னு அவ கிட்ட சொல்லி வச்சிருக்கேனே, அவ தான் உன்னோட மேனகைன்னு தெரியாம! ஆண்டவா, அவ கேள்வியின் நாயகியாச்சே! எதுக்கும் நான் வாய்க்கு ஜிப்பு ஒண்ணு பெரிசா போட்டு ஜாக்கிரதையா இருந்துக்கிறேன். உன் வேலை ஆச்சில்ல, நீ கிளம்பு.”

“மாம்! உங்களுக்கு அவளைப் பிடிச்சிருக்கா இல்லையா?”

“ரொம்பப் பிடிச்சிருக்கு பா. ஆனா உங்க பஞ்சாயத்துக்கு என்னைக் கூப்பிடாதே. ஆளை விடு.”

அந்த நொடியில் தான் அருந்ததிக்குத் தன் ஆராய்ச்சியின் முடிவு கிடைத்தது. சவால் விட்ட மகனிடமே அவர் தோற்றுப் போயிருந்தார்.

நியதியை நேருக்கு நேர் சந்தித்து விடுவது என்ற முடிவுடன் விக்ரமன் மறுபடியும் லிஃப்ட்டை நோக்கிச் சென்றான். அவனை ஏமாற்றாமல் காத்திருந்த நியதி விழி விரித்துப் பார்த்தாள்.

“ஹாய்! கொஞ்சமா கண்ணை விரி. வெளியே வந்து விழுந்திடும் போல இருக்கே!”

அவன் கேலியில் இறங்க, அவள் முகம் திருப்பி நடந்தாள்.

“ஹேய் நிதி! வெயிட் வெயிட். உன் கிட்ட பேசணும்னு வந்திருக்கேன். நீ கோவிச்சிட்டுப் போனா என்ன அர்த்தம்?”

“ம்ம். என்ன பேசணும்? இங்கேயே சொல்லுங்க.”

ஹாஸ்பிடல் லாபியைச் சுற்றிப் பார்த்தவன், “இங்கேயா? ஏன் மா? ஏற்கனவே நான் ரொம்ப லேட். இதுல நீ வேற படுத்தாத” என்றான். முதல் முதல்ல லவ்வர் கிட்ட பேசும் போது இப்படியாடா பேசுவ என்றது அவன் மனசாட்சி.

“சரி வாங்க. எங்க போகலாம்? நான் மேடம் கிட்ட பெர்மிஷன் வாங்கிட்டு வரேன். வெயிட் பண்ணுங்க.”

“அம்மா கிட்ட நான் சொல்லிட்டேன். நீ வா. பக்கத்துல எங்கயாவது போய் பேசலாம்” என்று அவள் கையைப் பிடித்து அழைத்துச் சென்றான்.

“அம்மாவா? அருந்ததி மேடமா? அவங்களுக்கு நம்ம விஷயம் தெரியுமா?” என்று கேள்விகளை அடுக்கிக் கொண்டே வந்தாள் அவள்.

“ஹா ஹா! அம்மா உனக்கு கரெக்டா தான் பேர் வச்சிருக்காங்க, கேள்வியின் நாயகின்னு. கொஞ்சம் கேப் விடு மா. நானும் யோசிக்கணும்ல.”

வாயை மூடிக் கொண்டு அவனுடன் அருகில் இருந்த ரெஸ்டாரன்ட்டுக்குப் போனாள் நியதி.

“ஃபர்ஸ்ட் ஆஃப் ஆல் ஸாரி நிதி. உன்னை ரொம்ப வெயிட் பண்ண வச்சிட்டேன். அர்ஜுன் உன் நம்பர் கொடுத்ததும் நிறைய தடவை பேசலாம்னு நினைச்சேன். பட் நேர்ல வந்து தான் பேசணும்னு விட்டுட்டேன். படிப்பு முடியற வரைக்கும் எந்த டீவியேஷனும் வேண்டாம்னு நீ தானே அன்னைக்கு சொன்ன. அதை நானும் ஃபாலோ பண்ணேன். உனக்குக் கோபம் இருக்கலாம். பட் எனக்கு வேற வழி தெரியலை.”

அவள் எதுவும் பேசவில்லை.

“என்ன நிதி, எதுவும் பேசாம இருக்க. பிடிக்கலையா?”

“ஷ்ஷ். கொஞ்ச நேரம் என்னை ஃபீல் பண்ண விடுங்க. அட் லாஸ்ட் நான் உங்க பக்கத்தில இருக்கேன்னு எனக்கு நானே சொல்லிக்கிறேன்.”

உணர்வுகளை வார்த்தைகளில் வடித்தவளைத் தோளோடு அணைத்து, அவள் நெற்றியில் முத்தம் ஒன்றை வைத்தான்.

“இது உங்களுக்கே கொஞ்சம் ஓவரா இல்ல? வருஷக்கணக்குல பார்க்காம பேசாம இருப்பாராம். பார்த்த உடனே ஸ்ட்ரைட்டா கிஸ் தானா?”

“நானே லேட் பிக்அப்னு ஒத்துக்கறேனே. இன்னும் லேட் பண்ண வேண்டாமே!”

“அது சரி. இப்பயாச்சும் உங்க நம்பர் தருவீங்களா?”

“இதோ!” என்று அவளுக்கு ஒரு மிஸ்டு கால் கொடுத்தான். ‘நிதி மை லவ்’ என்று தன் நம்பரை அவன் சேவ் செய்து வைத்திருந்ததைப் பார்த்தவள் கழுத்தை நொடித்தாள். “இதுல ஒன்னும் குறைச்சல் இல்ல.”

“நீங்க தான் அர்ஜுன் அண்ணாவை அப்பப்போ என் கிட்ட பேச வச்சிருக்கீங்க, கரெக்டா?”

“யெஸ் பேபி. யூ ஆர் ஆல்வேஸ் பிரில்லியன்ட்.”

“என் நம்பர் வாங்கினது, மேடம் கிட்ட பேசச் சொன்னது எல்லாமே உங்க ப்ளான் தான்.”

“ஆமா டா செல்லம். இன்னும் என்ன மேடம்? அத்தைன்னு சொல்லு.”

“அப்போ என் பங்குக்கு நானும் விளையாடறேன். நீங்க இன்னும் கொஞ்சம் வெயிட் பண்ணுங்க.”

“வித் ப்ளஷர். நாம லவ் லைஃப் என்ஜாய் பண்ணவே இல்லையே. கொஞ்ச நாள் லவ் பண்ணுவோம், அப்புறம் கல்யாணம் பண்ணிக்கலாம்.”

“ஆசை தோசை.”

“ஆசை தான்.”

வருடக்கணக்கில் பேசாமல் விட்ட கதைகளையெல்லாம் பேசி, கேட்க நினைத்த கேள்விகளையெல்லாம் கேட்டு, இரு வீட்டுப் பெற்றோரையும் எப்படிச் சந்திக்க வைப்பது என்று பெரிய திட்டங்கள் போட்டார்கள் இருவரும். அந்தத் திட்டங்களை எல்லாம் புஸ்வாணம் ஆக்கி, இரு தந்தையரும் தம் மக்களுக்கு அதிரடி அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தார்கள்.

அந்த வார ஞாயிற்றுக்கிழமை காலை. பூஜையை முடித்த தேவராஜன் மிகவும் பரபரப்பாக இருந்தார். மனைவியிடம் விஷயத்தைச் சொல்லி விட்டார் போலும், அருந்ததியும் அதே அளவு பரபரப்புடன் இருந்தார். சில பல பிக் ஷாப்பர் பைகள் அவர்களது இன்னோவாவில் ஏற்றப்பட்டன.

“உங்க ஃப்ரண்ட் வீட்டுக்குப் போறதுக்கு எதுக்கு பா எனக்கு ஃபார்மல் ட்ரெஸ்? அதுவும் ட்ரடிஷனலா. நாம என்ன பொண்ணு பார்க்கப் போறோமா இல்லை நிச்சயம் பண்ணப் போறோமா? ஏன் மா இப்படி இரண்டு பேரும் சேர்ந்து படுத்தறீங்க? நீங்க வேற கிராண்டா பட்டுப் புடவை கட்டி, இந்த டாட் எங்க இருந்து இந்த வேஷ்டி குர்த்தாவைப் பிடிச்சார்? ஏதோ கச்சேரிக்குப் போறது மாதிரி இருக்கு.” விக்ரமன் முகம் சுளித்தான்.

“அவங்க வீட்டுல ஏதோ பூஜைக்கு ஏற்பாடு பண்ணியிருக்காங்க. ஜீன்ஸ்ல வந்தா நல்லா இருக்காது. டக்குன்னு மாத்திட்டு வா. நல்ல நேரத்துல கிளம்பணும்.” என்ற அருந்ததி, பிடித்தம் இல்லாமல் நின்ற மகனுக்குப் போகிற போக்கில் ஒரு க்ளூவும் கொடுத்து விட்டுப் போனார். “இப்போ கேட்காமல் விட்டு அங்கே வந்து ஃபீல் பண்ணக் கூடாது, சொல்லிட்டேன்.”

“என்னமோ சொல்றீங்க. கேட்கலேன்னா விடவா போறீங்க? மாத்திட்டு வரேன்” என்று போனவன், பீஜ் நிறக் குர்த்தாவும் சல்வாரும் அணிந்து மாப்பிள்ளை போல வந்து நின்றான். “இப்போ தான் மாப்பிள்ளை மாதிரி இருக்கு” என்று அருந்ததி முணுமுணுத்தது அவன் காதுகளில் விழவில்லை.

வாசுதேவனின் வீட்டு வாசலில் இறங்கிய போது அங்கே இருந்த சூழ்நிலையைப் பார்த்து மயக்கம் போட்டு விழாமல் இருக்கக் கார்க் கதவை இறுகப் பிடித்துக் கொண்டான் விக்ரமன். இவர்களுக்குப் பின்னால் வந்த கார்களில் அர்ஜுன் உட்பட அவனுக்கு நெருக்கமான பலரும் வந்து இறங்கினார்கள். ‘என்ன டா இது? அப்படி என்ன தான் நடக்கப் போகுது?’ என்று யோசித்துக் கொண்டே உள்ளே வந்தவனை நியதியின் கான்வகேஷன் புகைப்படம் வரவேற்றது. அங்கே ஒரு விழாவுக்கான ஏற்பாடுகள் நடந்திருந்தன. சட்டென்று சுறுசுறுப்பான அவன் மூளை அர்ஜுனைத் தேடிக் கண்டுபிடித்தது.

நண்பன் கேட்கப் போகும் கேள்விகளுக்குப் பதில் தயாரித்துக் கொண்டிருந்த அர்ஜுனை வேகமாக வந்து கட்டிக் கொண்டான் விக்ரமன். “ரொம்ப தாங்க்ஸ் டா மச்சான். நிறைய வேலை பார்த்திருக்க போல இருக்கு.”

அதை எதிர்பார்க்காத அர்ஜுன் ஆச்சரியமாக அவனைப் பார்த்தான். “உனக்கு.. கோபம் வரலையா டா விக்கி?”

“நிச்சயமா நிறைய இருக்கு. அதெல்லாம் அப்புறம் பேசிக்கிறேன். இன்னைக்கு இந்த மொமன்ட்டை என்ஜாய் பண்றதுன்னு முடிவு பண்ணிட்டேன்.”

“ஹலோ ராஜா! வா வா. அருந்ததி வாம்மா! எல்லாரும் வாங்க! விக்ரம்! வாங்க வாங்க!” என்று வாசலுக்கே வந்து வரவேற்றார் வாசுதேவன்.

“சார்.. நீங்க..?”

“சார் இல்லை, மாமா! நியதியை நீங்க தான் சமாதானப்படுத்தணும். ரொம்பக் கோபமா இருக்கா.”

“இதோ வந்துட்டேன் மாமா!” என்று ஓடியவனைப் பார்த்து அனைவரும் சிரித்தனர். “இதப் பாருடா, இவன் விசுவாமித்திரனாம்! யாரு இவனுக்கு இந்தப் பேரை வச்சது? பேரை இப்பவே மாத்துங்க டா!” என்று சத்தமாகப் புலம்பிய மாதவனை அவன் திரும்பிப் பார்க்கவே இல்லை.

வேகமாக உள்ளே வந்தவன், வழியில் சுகந்தாவைக் கண்டு தயங்கி நின்றான்.

“வாங்க விக்ரம். நான் நியதியோட அம்மா. அவளுக்கு அரைகுறையா விஷயம் தெரிஞ்சு போச்சு. அதான் கிளம்ப மாட்டேன்னு அடம் பிடிக்கிறா. அவரும் உங்க பேரைச் சொல்லியிருக்கலாம். அழுதழுது அவ முகமே நல்லா இல்லை. நீங்க போய் சமாதானப்படுத்துங்க.”

அவளிடம் நியதியின் அறையைக் கேட்டறிந்தவன் வாசலில் நின்று கதவைத் தட்டினான். உள்ளே புயல் வீசிக் கொண்டிருந்தது.

“மாம்! ப்ளீஸ் என்னை ஃப்ரீயா விடுங்க. என் கிட்ட எல்லாத்துக்கும் சரின்னு சொல்லிட்டு, இப்போ யாரையோ கூட்டிட்டு வந்தால் நான் அலங்காரம் பண்ணிட்டு வரணுமா? நெவர்! நியதியை அவ்வளவு ஈஸியா நினைச்சுட்டீங்களா?” என்று சத்தமாகப் பேசியவள், அலைபேசியில் வந்த அழைப்பை ஏற்காமல் அதைத் தூக்கி எறிந்தாள். அது விடாமல் அழைக்க, வேறு வழியின்றி எடுத்தாள்.

“ஹாய் ஸ்வீட் ஹார்ட். குட் மார்னிங் ஆச்சா? ஏன் ஃபோனை அட்டன்ட் பண்ண இவ்வளவு நேரம்?”

“எனக்கு இன்னைக்கு பேட் மார்னிங் போங்க. எல்லாம் உங்களால தான்.”

“என்னாலயா? நான் என்ன பண்ணேன்? மீ பாவம் மா.”

“ம்ச்.. எனக்குப் பேசற மூடே இல்லை. ஃபோனை வைங்க.”

“அப்படியா..”

“அப்படித்தான்.. நான் ரொம்ப சோகமா இருக்கேன். இன்னைக்கு நாளே சரியில்லை.”

“நோ நோ. அப்படி எல்லாம் சொல்லிடக் கூடாது. நீ கதவைத் திறந்து வெளியே வந்து பார்த்தால் தானே நல்ல நாளா இல்லையான்னு தெரியும். ப்ளீஸ்டா எனக்காக வெளியே வா.”

“என்ன பேசறீங்கன்னே புரியலை. ரூமை விட்டு வெளியே வரணும். அவ்வளவு தானே? இதோ வரேன்.”

கதவைத் திறந்து வெளியே வந்தவள், தான் கண்ட காட்சி நிஜம் தானா என்று கண்ணைக் கசக்கிப் பார்த்தாள். மாப்பிள்ளைக் கோலத்தில் அவளையே பார்த்து நின்றவனின் அருகில் வந்து, நறுக்கென்று கிள்ளி வைத்தாள். டவுட்டு க்ளியர் பண்ண வேண்டாமா? அதுக்குத் தான்..

“ஸ்ஸ்ஆஆஆ! அடிப்பாவி! உன்னைத் தானே கிள்ளிப் பார்க்கணும்?”

“ரிசல்ட் சரியா வரணும்ல. என்னைக் கிள்ளினா வலிக்காத மாதிரி தான் கிள்ளி இருப்பேன். இப்போ பக்காவா க்ளியர் ஆகிடுச்சு. ஒரு ஃபைவ் மினிட்ஸ், இதோ வரேன்.” என்று கதவை ஓங்கிச் சாத்தினாள்.

கதவில் முட்டிக் கொண்டு நின்றவன் எவ்வளவு நேரம் நின்றானோ தெரியவில்லை. கதவு பட்டென்று திறந்ததில் தடுமாறி விழப்போனவன், நியதியைப் பிடித்துக் கொண்டு நின்றான். வலது கையை அவள் புறம் நீட்டி, “ஷால் வீ?” என்றான். நீட்டிய கையைப் பிடித்தபடி அவனுடன் ஹாலுக்கு வந்தவளை, மாதவன் தலைமையில் ஒரு கோரஸ் ‘மணமகளே, மருமகளே’ என்று வரவேற்றது.

★★★★★

“எனக்கு ஒரு விஷயம் இன்னும் புரியலை.” நியதி கணவனைக் குறுகுறுவெனப் பார்த்தாள். “நான் தான் தோழிகள் கிட்ட மனசைக் கொட்டிட்டேன். நீங்க மட்டும் காதுல கேட்டு, கண்ணுல பார்த்து, உள்ளுக்குள்ளேயே ஒளிச்சு வச்சிட்டீங்களே!” பதிலேதும் சொல்லாமல் புன்னகைத்தான் விக்ரமன்.

“டேய் விக்கி! நினைச்சத சாதிச்சிட்டோம்னு சிரிக்கிறியா? இனிமேல் தான் ஆப்பு இருக்கு உனக்கு.” மாதவன் நம்பியார் போலக் கைகளைப் பிசைந்து நக்கலாகச் சிரித்தான்.

“எனிவே, வெல்கம் டு தி யெஸ் பாஸ் கிளப் மச்சான்” என்று அணைத்த மாதவனைப் புரியாமல் பார்த்தான் விக்ரமன். “யெஸ் பாஸ் கிளப்பா? என்னது அது?”

“மேடி! விசுவாமித்திரனுக்குப் புரியற பாஷைல சொல்லணும். நான் விம் போட்டு விளக்கறேன் பாரு” என்று அர்ஜுன் முன்னால் வந்தான். “அதாவது விக்கி, உனக்கே உனக்குன்னு ஒரு பாஸ் வந்தாச்சு. இனிமேல் உன் டிக்ஷனரில மூணே மூணு வார்த்தை தான். யெஸ் பாஸ், ஓகே பாஸ், ஸாரி பாஸ்! எங்க கிளப்புக்கு இரண்டே இரண்டு ரூல்ஸ் தான். ரூல் நம்பர் ஒன், பாஸ் சொல்றது எப்பவுமே கரெக்ட். ரூல் நம்பர் டூ, பாஸ் சொல்றது தப்புன்னு எப்பவாவது தோணுச்சுன்னா, திரும்பவும் ரூல் நம்பர் ஒன்னைப் படிச்சுக்கோ.”

மண்டபம் சிரிப்பில் அதிர, அர்ஜுன் தொடர்ந்தான். “என்னைப் பாரு. தினமும் ஓடில எத்தனை பேருக்கு அனஸ்தீசியா கொடுக்கறேன்! ஆனா வீட்டுல என் பாஸ் ஒரு லுக் விட்டா போதும், எனக்கு ஜெனரல் அனஸ்தீசியா கொடுத்த மாதிரி!” என்றவனின் பார்வை மனைவியின் பக்கம் போக, அவள் முறைத்ததும் சட்டென்று வாயை மூடிக் கொண்டான்.

“இதுக்கு அப்ளிகேஷன், ஃபீஸ் எதுவும் கிடையாது. தாலி கட்டின அடுத்த நிமிஷமே ஆட்டோமேட்டிக்கா மெம்பர் ஆகிடுவ” என்று இடையில் புகுந்தான் மாதவன். “நான் பிரசிடென்ட். அர்ஜுன் செக்ரட்டரி. அரவிந்தன் மச்சான் ட்ரெஷரர். அப்புறம்…” என்று இழுத்தவன் முன் வரிசையைக் கை காட்டினான். “நம்ம கிளப்போட ஃபவுண்டர் மெம்பர்ஸ் அதோ அங்கே உட்கார்ந்திருக்காங்க! எங்க அப்பா, என் மாமனார், அப்புறம் நம்ம தேவா ஸ்கொயர்!”

அடுத்த நொடி, தேவராஜனும் வாசுதேவனும் தங்கள் மனைவியரின் பக்கம் திரும்பி “யெஸ் பாஸ்!” என்று ஒரே குரலில் சொல்ல, மண்டபமே குலுங்கியது. அருந்ததியும் சுகந்தாவும் சிரிப்பை அடக்க முடியாமல் முகத்தைத் திருப்பிக் கொண்டார்கள்.

“இந்தக் கிளப்ல நான் தான் சீனியர் மோஸ்ட் புரொஃபசர்!” என்று காலரைத் தூக்கி விட்டபடி எழுந்தார் புருஷோத்தமன்.

“அப்பா! காலேஜ்ல நீங்க புரொஃபசரா இருந்திருக்கலாம். நம்ம வீட்டுல அம்மா தான் பிரின்சிபல்!” என்று மாதவன் சொன்னதும், சத்தமில்லாமல் மீண்டும் அமர்ந்து கொண்டார் அவர்.

“மாமா, நீங்க மட்டும் ஏன் சைலன்டா இருக்கீங்க?” என்று மாதவன் கேட்க, புன்னகையுடன் மனைவியின் பக்கம் திரும்பினார் தாமோதரன். “யெஸ் பாஸ்!”

“ஹுக்கும்!” என்று தோளில் இடித்துக் கொண்டார் தமயந்தி. “முப்பது வருஷத்துக்கு மேல ஆச்சு. இவர் வாயில இருந்து ஒரு யெஸ் வந்ததா எனக்கு ஞாபகமே இல்லை. எப்போ பார்த்தாலும் ‘தமா, அடக்கி வாசி!’ தான்.”

“வாயால சொன்னது அது தான் தமா. ஆனா இத்தனை வருஷமா செஞ்சதெல்லாம் நீ சொன்னதைத் தானே?” என்று தாமோதரன் அமைதியாகக் கேட்க, மண்டபம் மீண்டும் அதிர்ந்தது. சிரிப்பை அடக்க முடியாமல் சேலைத் தலைப்பால் வாயை மூடிக் கொண்டார் தமயந்தி.

“விக்ரம், ஊடலில் தோற்றவர் வென்றார்னு வள்ளுவரே சொல்லியிருக்கார். மனைவிகிட்ட தோக்கறவன் தான் உண்மையில ஜெயிக்கிறான்” என்ற தேவராஜன், வழக்கம் போலத் தன் புன்னகையைக் கண்ணாடிக்குப் பின்னால் மறைத்துக் கொண்டார்.

நியதி கணவனின் பக்கம் திரும்பினாள். “ஓகே. அப்போ பாஸோட ஃபர்ஸ்ட் ஆர்டர். சிரிச்சு மழுப்பாம என் கேள்விக்குப் பதில் சொல்லுங்க.”

“யெஸ் பாஸ்!” என்று நெற்றியில் கை வைத்துச் சல்யூட் அடித்தான் விக்ரமன்.

“பார்த்தியா மேடி! ட்ரைனிங்கே தேவைப்படலை. பிறவி மெம்பர்!” என்று அர்ஜுன் கை தட்ட, சிரிப்பலை அடங்கும் வரை காத்திருந்த விக்ரமன், நியதியின் கண்களைப் பார்த்து மெல்லச் சொன்னான்.

“ஒளிச்சு வைக்கலை நிதி. பத்திரமா வச்சிருந்தேன். நீ என் ஸ்டிக்கி நோட்டை இத்தனை வருஷமா பத்திரமா வச்சிருந்த மாதிரி.”

ஒரு நொடி மண்டபமே அமைதியானது. நியதியின் கண்கள் கலங்க, அதை மறைக்கத் தலையைக் குனிந்து கொண்டாள் அவள்.

“ஓகே ஓகே! ஓவர் சென்டிமென்ட் உடம்புக்கு ஆகாது. கேள்வி பதில் செஷன் முடிஞ்சது. இனிமேல் ஃபோட்டோ செஷன். எல்லாரும் மேடைக்கு வாங்க” என்று மைக்கைத் தட்டிய மாதவன், நண்பனின் தோளில் கை போட்டான். “சிரி மச்சான், நல்லா சிரிச்சுக்கோ. கல்யாணத்தோட கதை முடிஞ்சதுன்னு நினைக்காதே. உங்க இரண்டு பேருக்கும் உண்மையான டெஸ்ட் இனிமே தான் இருக்கு!”

மேடையில் விளக்குகள் மினுங்க, கை கோர்த்து நின்ற விக்ரமனையும் நியதியையும் “நன்மக்களைப் பெற்று நூறாண்டு வாழ்க!” என்று பெரியவர்கள் மனதார வாழ்த்தினார்கள்.
 

Author: SudhaSri
Article Title: மழைக்கு ஏங்கிய மாந்தளிரே -4
Source URL: Nectar Novels-https://nectarnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.