மழைக்கு ஏங்கிய மாந்தளிரே -6
“இனிய உளவாக இன்னாத கூறல்கனியிருப்பக் காய்கவர்ந் தற்று.”
கல்யாணம் முடிந்து நான்கு மாதங்கள் ஓடிவிட்டன.
அந்த நான்கு மாதங்களில் விக்ரமனும் நியதியும் ஒன்றாக அமர்ந்து சாப்பாடு சாப்பிட்டது மொத்தம் பதினேழு முறை. அதை எண்ணியவர் தேவராஜன். “டாக்டர் குடும்பத்துல இதுக்கு மேல எதிர்பார்க்கக் கூடாது” என்று அவரே தனக்குச் சமாதானம் சொல்லிக் கொள்வார்.
இருவரும் ஒன்றாகச் சாப்பிட்டு எழுந்த ஒவ்வொரு முறையும், காலண்டரில் அந்தத் தேதியைச் சுற்றி ஒரு சின்ன வட்டம் போடுவது அவர் வழக்கம். வட்டம் விழாத கட்டங்கள் தான் அதிகம்.
விக்ரமனின் நாள் காலை ஏழு மணிக்கு ஆன்காலஜி விங்கில் தொடங்கும். செவ்வாய்க்கிழமை காலைகளில் ட்யூமர் போர்டில் இருப்பான்- ட்யூமர் போர்டு (Tumor Board) என்பது புற்றுநோய் சிகிச்சையில் பல்துறை மருத்துவர்களின் ஒருங்கிணைந்த ஆலோசனைக் குழு.
புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ஒருவரின் மருத்துவ அறிக்கைகள், பயாப்ஸி முடிவுகள், ஸ்கேன் படங்கள், நோயின் தன்மை மற்றும் பாதிப்பு நிலை ஆகியவற்றை மருத்துவர்களின் குழு ஒன்றாக அமர்ந்து ஆராய்வதற்கே ட்யூமர் போர்டு என்று பெயர்.
இதில் மருத்துவப் புற்றுநோய் நிபுணர் (Medical Oncologist), அறுவைச் சிகிச்சை நிபுணர் (Surgical Oncologist), கதிர்வீச்சு சிகிச்சை நிபுணர் (Radiation Oncologist), கதிரியக்கப் பரிசோதனை நிபுணர் (Radiologist), நோயியல் நிபுணர் (Pathologist) உள்ளிட்ட மருத்துவர்கள் பங்கேற்பார்கள்.
ஒவ்வொருவரும் தங்களுடைய மருத்துவ அனுபவத்தின் அடிப்படையில் நோயாளியின் நிலையை ஆராய்ந்து, அவருக்கு அறுவைச் சிகிச்சை தேவையா, கீமோதெரபி தேவையா, கதிர்வீச்சு சிகிச்சை தேவையா அல்லது இவற்றில் ஒன்றுக்கு மேற்பட்ட சிகிச்சைகளை எந்த வரிசையில் அளிக்க வேண்டும் என்பதை விவாதித்து ஒருங்கிணைந்த சிகிச்சைத் திட்டத்தைப் பரிந்துரைப்பார்கள்.
இதன் முக்கிய நோக்கம்: ஒரு மருத்துவரின் தனிப்பட்ட முடிவை மட்டும் சார்ந்திருக்காமல், பல்வேறு துறை நிபுணர்களின் கருத்துகளையும் ஒருங்கிணைத்து, நோயாளிக்கு ஏற்ற சிறந்த சிகிச்சை முறையைத் தீர்மானிப்பதாகும்.
தற்போது இந்தியாவிலும், குறிப்பாகப் பெரிய புற்றுநோய் மருத்துவமனைகளிலும், இந்த முறை நடைமுறையில் உள்ளது.
இதை ஒரு வரியில் சொல்வதென்றால், பல மருத்துவர்கள் இணைந்து ஒரு நோயாளியின் புற்றுநோய்க்கான சிகிச்சையைத் திட்டமிடும் மருத்துவ ஆலோசனைக் குழுவே ட்யூமர் போர்டு.
அவனுக்கு ஒவ்வொரு நோயாளியின் பின்னாலும் ஒரு குடும்பம் இருக்கிறது என்பதும், அந்தக் குடும்பத்தின் நம்பிக்கைகள் அவனிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கின்றன என்பதும் நன்றாகவே தெரியும். அதனால் தான் மருத்துவ உலகம் அவனை ‘டாக்டர் விக்ரம்’ என்று அழைக்க, பேஷண்ட்ஸ் மட்டும் ‘நம்ம விக்ரம் தம்பி’ என்று உரிமையோடு அழைத்தார்கள்.
ஒரு நாள் ஓபியில் முப்பத்தெட்டு வயதுப் பெண் ஒருத்தி அவன் முன் அமர்ந்தாள். சிங்கிள் பேரன்ட். அவளது கவலைகள் எல்லாம் குழந்தைகளை யார் கவனிப்பார் என்றே இருந்தது.
“டாக்டர், என் பசங்க இரண்டு பேரும் ரொம்ப சின்னவங்க. என்னை நம்பித்தான் அவங்க இருக்காங்க. எனக்கு ஏதாவது ஆயிடுச்சுன்னா அந்தக் குழந்தைகளை யார் பார்த்துப்பாங்க டாக்டர்?”
அவன் உண்மையை மென்மையாகச் சொன்னான். என்ன சிகிச்சை, எவ்வளவு நம்பிக்கை, எது சாத்தியம் என்று பொறுமையாக விளக்கினான். அவள் நன்றி சொல்லி விட்டுப் போன பிறகு, ஒரு நிமிடம் அசையாமல் அமர்ந்திருந்தவன், கண்களைத் துடைத்துக் கொண்டு அடுத்த பேஷண்ட்டை அழைத்தான். ‘ஹி இஸ் ஸோ சென்ஸிடிவ்’ என்று அருந்ததி அடிக்கடி சொல்வது எவ்வளவு உண்மை என்பது அவனுக்கு மட்டுமே தெரியும்.
நியதியின் நாள் வேறு விதமான ஓட்டம். காலையில் ஓபி, மதியம் லேபர் வார்டு, இரவில் ஆன்-கால். ஒரே நாளில் ஐந்து குழந்தைகளின் முதல் அழுகையைக் கேட்பாள் அவள். ஒவ்வொரு முறையும் ஒரு குழந்தையைத் தாயின் நெஞ்சில் வைக்கும் போது, அவளது சொந்தக் கனவு ஒரு நொடி எட்டிப் பார்த்து விட்டுப் போகும். ஆனால் அடுத்த கேஸ் அவளை உடனே தரையிறக்கி விடும்.
ஒரு நாள் இரவு பத்து மணிக்கு, லேபர் வார்டு நர்ஸஸ் ஸ்டேஷனில் கேஸ் ஷீட் எழுதிக் கொண்டிருந்தவளின் கையிலிருந்து பேனாவை வாங்கினார் அருந்ததி. “டாக்டர் நியதி, இது மேடம் சொல்றது. வேலை பார்த்தது போதும் வீட்டுக்குக் கிளம்புங்க.”
ஒரு நொடி நிறுத்தியவர் குரலைத் தாழ்த்தினார். “இது அத்தை சொல்றது. போய் சாப்பிட்டுட்டுத் தூங்கு.” நியதி சிரித்துக் கொண்டே தலையாட்டினாள். ஆனாலும் அவள் வீட்டுக்குக் கிளம்பியது பதினொன்றரை மணிக்குத் தான்.
கல்யாணமான இரண்டாவது மாதத்தில், ஒரு ஞாயிறு காலை ஏழு மணிக்கு லொசேன் டிக்கெட்டுகளுக்காக லேப்டாப் திறந்து வைக்கப்பட்டிருந்தது. தான் ஆராய்ச்சி செய்த ஊரையும், தனியாக நடந்த ஏரிக்கரையையும் அவளுக்குக் காட்ட வேண்டும் என்பது விக்ரமனின் ஆசை. விமான நேரங்கள், ஏரிக்கரை ஹோட்டல்கள், பனி மூடிய ஆல்ப்ஸ் மலைப் படங்கள் என்று திரை நிறைந்திருந்தது.
ஏழு மணி ஐந்து நிமிடத்துக்கு நியதியின் அலைபேசி அலறியது. முப்பத்திரண்டு வாரத்தில் பனிக்குடம் உடைந்த ஒரு கர்ப்பிணி லேபர் வார்டுக்கு வந்திருந்தாள். ஏழு இருபதுக்கு விக்ரமனின் அலைபேசி ஒலித்தது. கீமோ முடிந்து வீட்டுக்குப் போன நோயாளி ஒருவர் மூச்சுத் திணறலோடு எமர்ஜென்சிக்கு வந்திருந்தார்.
“அடுத்த ஞாயிறு கண்டிப்பா புக் பண்ணிடலாம்” என்று கிளம்பும் அவசரத்தில் சொல்லிவிட்டு ஓடினாள் நியதி.
எட்டு மணிக்கு அந்த லேப்டாப்பின் திரை தானாகவே அணைந்து போனது. அன்று அந்த வீட்டில் தேவராஜனைத் தவிர நிம்மதியாகத் தூங்கியது அது ஒன்று தான்!
அன்று மதியம், NICU இன்குபேட்டரில் ஒரு சின்னஞ்சிறு உயிர் மூச்சு விட்டுக் கொண்டிருந்தது. கண்ணாடிக்கு இந்தப் பக்கம் நின்று அதைப் பார்த்துக் கொண்டிருந்த நியதிக்கு அன்றைய களைப்பெல்லாம் மறந்து போனது. அதே நேரம் இன்னொரு மாடியில், மூச்சுத் திணறலோடு வந்த நோயாளியின் ஆக்சிஜன் அளவு மெல்ல ஏறிக் கொண்டிருந்தது. விக்ரமன் அன்று மதிய உணவைச் சாப்பிட்டது மாலை ஐந்து மணிக்கு.
ஞாயிறுகள் வந்து போயின. லொசேன் டிக்கெட் மட்டும் புக் ஆகவே இல்லை.
எப்போதும் படிகளில் ஏறிப் பழகிய நியதி, இப்போதெல்லாம் லிஃப்ட்டுக்காகக் காத்திருந்தாள். அந்த நாட்களில் அவர்கள் அதிகம் பேசிக் கொண்டது லிஃப்ட்டில் தான். அவன் ஆன்காலஜி விங்குக்கும், அவள் லேபர் வார்டுக்கும் போகும் வழியில் கிடைக்கும் முப்பது விநாடிகளில் “சாப்பிட்டியா?”, “தூங்கினியா?” என்ற இரண்டு கேள்விகள். இரண்டுக்கும் பெரும்பாலும் ஒரே பதில் தான். “அப்புறம்.” ஒரு நாள் லிஃப்ட் கதவு மூடும் முன் அவள் கையில் ஒரு சாக்லேட்டைத் திணித்து விட்டுப் போனான் அவன். அன்று அவளது மதிய உணவு அது தான்.
அவள் உடம்பும் அவளுடைய ஷிஃப்ட்டுகளைப் போலவே ஒழுங்கை மறந்திருந்தது. ஒரு மாதம் முப்பத்தெட்டு நாள், அடுத்த மாதம் நாற்பத்தைந்து. ‘நைட் டியூட்டியும் ஸ்ட்ரெஸ்ஸும் தான்’ என்று ஒரு மகப்பேறு மருத்துவராகவே தனக்குத் தானே டயக்னாசிஸ் எழுதிக் கொண்டாள் நியதி. அதைச் சரிபார்க்க ஒரு ஸ்கேன் கூட அவள் செய்து கொள்ளவில்லை.
அந்த முப்பது விநாடிகள் கூடக் கிடைக்காத நாட்களில், ஃப்ரிட்ஜ் கதவு அவர்களின் தபால் நிலையம் ஆனது. அதில் கலர் கலரான ஸ்டிக்கி நோட்ஸ் நாளுக்கு நாள் பெருகிக் கொண்டே போயின.
‘இட்லி ஹாட்பேக்ல இருக்கு. சாப்பிடாம போகாதே.’
‘நேத்து ராத்திரி மூணு டெலிவரி. உன்னை எழுப்பலை.’
‘உன் ஸ்டெதஸ்கோப் என் கார்ல.’
‘இன்னைக்கு சினிமா கேன்சல். லேபர் வார்டுல மாட்டிக்கிட்டேன். ஸாரி விக்கி.’
ஒரு நாள் காலை அந்தக் கடிதக் கூட்டத்துக்கு நடுவில் புதிய கையெழுத்தில் ஒரு குறிப்பு முளைத்தது. ‘இந்த ஃப்ரிட்ஜ் தபால் நிலையம் இல்லை. — அப்பா.’ அதற்குக் கீழே இன்னொன்று. ‘நானும் உங்க அப்பாவும் முப்பது வருஷமா இப்படித் தான். போகப் போக பழகிடும். — அம்மா.’
★★★★★
கல்யாணமாகி மூன்று மாதங்கள் ஆகியிருந்த சமயம். அன்று ஓபியில் நியதியின் முன் அமர்ந்திருந்தாள் கலைச்செல்வி. இருபத்தொன்பது வயதான பள்ளி ஆசிரியை. மூன்று வருடக் காத்திருப்புக்குப் பிறகு வந்த முதல் கர்ப்பம், இருபத்திரண்டாவது வாரத்தில் இருந்தது.
வழக்கமான செக்கப் முடியும் நேரத்தில் தயங்கித் தயங்கிச் சொன்னாள் அவள். “டாக்டர், ஒரு மாசமா கழுத்துல இடது பக்கம் ஒரு கட்டி இருக்கு. வலிக்கலை. கர்ப்பத்துல தைராய்டு வீங்கும்னு எங்க வீட்டுல சொன்னாங்க. அதான் கண்டுக்கலை.”
நியதி அவளை எச்சில் விழுங்கச் சொன்னாள். தைராய்டு வீக்கம் என்றால் விழுங்கும் போது மேலே ஏறும். ஆனால் இந்தக் கட்டி அசையவில்லை. ரப்பரைப் போன்ற இறுக்கத்துடன் இருந்த அதன் பக்கத்தில் இன்னும் இரண்டு சின்னக் கட்டிகள் தட்டுப்பட்டன. அன்று மதியமே கலைச்செல்வியை ஆன்காலஜி விங்குக்கு அனுப்பி வைத்தாள் நியதி.
ஒரு வாரத்தில் வந்த பயாப்ஸி ரிசல்ட், ஹாட்ஜ்கின் லிம்போமா, இரண்டாம் நிலை என்றது.
அந்தச் செய்தியைக் கேட்ட போது கலைச்செல்வியும் அவள் கணவனும் ஒரே நேரத்தில் இரண்டு வெவ்வேறு கேள்விகளைக் கேட்டார்கள்.
“என் குழந்தைக்கு என்ன ஆகும்?”
“என் பொண்டாட்டிக்கு என்ன ஆகும்?”
அந்த வாரச் செவ்வாய்க்கிழமை ட்யூமர் போர்டில் கலைச்செல்வியின் ஸ்கேன்களைத் திரையில் போட்டான் விக்ரமன். தலைமை தாங்கியது அருந்ததி.
“இப்பவே கீமோ ஆரம்பிக்கணும். செகண்ட் ட்ரைமெஸ்டர்ல கொடுக்கிற கீமோவால குழந்தைக்குப் பெரிய ரிஸ்க் இல்லைன்னு தான் இதுவரைக்கும் வந்த ஸ்டடீஸ் எல்லாம் சொல்லுது. முப்பத்தேழு வாரத்துல டெலிவரி. கடைசி கீமோவுக்கும் டெலிவரிக்கும் நடுவுல குறைஞ்சது மூணு வாரம் கேப். மீதி சைக்கிள்ஸ் டெலிவரிக்கு அப்புறம்.”
நியதி கையை உயர்த்தினாள். “முப்பத்திரண்டு வாரத்துல குழந்தையை எடுத்துட்டு அப்புறம் கீமோ ஆரம்பிச்சா? இன்னும் பத்து வாரம் தானே. குழந்தை மேல கீமோ படவே வேண்டாமே.”
“இந்த டிசீஸுக்கு பத்து வாரம்ங்கிறது ரொம்ப லாங் டைம்” என்றான் விக்ரமன் நிதானமாக. “அதோட, கீமோவை விட ப்ரீமெச்சூரிட்டி தான் அந்தக் குழந்தைக்குப் பெரிய ரிஸ்க்னு ஸ்டடீஸ் சொல்லுது.”
“நீங்க இரண்டு பேரும் சொல்றதிலும் நியாயம் இருக்கு. இப்போதைக்கு மருத்துவ ரீதியா விக்ரம் சொல்றதுதான் சரியான முடிவா இருக்கு. அதன்படியே சிகிச்சையைத் தொடரலாம். அதே நேரத்தில் நியதி எழுப்புற கேள்விகளையும் நாம அலட்சியப்படுத்த முடியாது. குழந்தையோட வளர்ச்சியைத் தொடர்ந்து கண்காணிக்க வேண்டியது அவசியம். அதனால மூணு வாரங்களுக்கு ஒருமுறை க்ரோத் ஸ்கேன் எடுத்துப் பார்ப்போம். குழந்தையோட வளர்ச்சியில் ஏதாவது மாற்றம் தெரிஞ்சா, அதற்கேற்ப நம்ம சிகிச்சை முறையையும் மறுபரிசீலனை செய்வோம்.”
அன்றிரவு அந்த ஆய்வுகளை ஒவ்வொன்றாகப் படித்தாள் நியதி. அவன் சொன்னது சரி தான் என்பது அவளுக்கும் புரிந்தது. ஆனாலும் அத்தனை பேர் முன்னால் தன் யோசனை ஓரமாக வைக்கப்பட்டது, மனதின் ஒரு மூலையில் உறுத்திக் கொண்டே இருந்தது.
ஒரு வாரம் கழித்து கலைச்செல்வியின் முதல் கீமோ நாள். சொட்டுச் சொட்டாக இறங்கிக் கொண்டிருந்த மருந்தைப் பார்த்தபடி படுத்திருந்தவளின் கண்களில் பயம் நிறைந்திருந்தது.
“என் குழந்தைக்கு ஒண்ணும் ஆகாதுல்ல டாக்டர்?”
நியதி ஒரு சிறிய டாப்ளர் கருவியை அவள் வயிற்றின் மேல் வைத்தாள். ஒரு நொடி அமைதி. பிறகு அந்த அறை முழுவதும் வேகமான, உறுதியான ஒரு சின்ன இதயத்தின் துடிப்பு நிறைந்தது. கலைச்செல்வி அழுதாள். அவள் கணவன் அவள் கையைப் பிடித்துக் கொண்டு சுவரைப் பார்த்தான்.
கிளம்பும் போது, ஓபிக்கு வரும் ஒவ்வொரு கர்ப்பிணியிடமும் சொல்லும் அதே அறிவுரையை அவளிடமும் சொன்னாள் நியதி. “கர்ப்ப காலத்துல உடம்புல வர்ற எந்த மாற்றத்தையும் இது கர்ப்பத்துல சகஜம் தான்னு தள்ளிப் போடாதீங்க. கட்டியோ, ஸ்பாட்டிங்கோ, எதுவா இருந்தாலும் உடனே வந்து காட்டுங்க. உங்க குழந்தைக்கு நீங்க தான் முதல் டாக்டர்.”
வாசலில் நின்றிருந்த விக்ரமன் அவளைப் பார்த்துப் புன்னகைத்தான். ஒருவர் அம்மாவுக்காகவும் மற்றவர் குழந்தைக்காகவும் போராடினாலும், அன்று அந்த அறையில் இருவரும் ஒரே பக்கம் நின்றார்கள்.
★★★★★
சுகந்தா அழைத்த போதெல்லாம் அதே கதை தான். “இந்த மாசம் ஒரு நாள் கூட வீட்டுக்கு வரலையே நிதி.”
“அடுத்த வாரம் மா.” அந்த அடுத்த வாரம் வாசுதேவனின் பிறந்த நாள் வரை நீண்டது. அன்று இரவு கேக் வெட்டும் நேரத்தில் விக்ரமன் மட்டும் தனியாக மாமனார் வீட்டு வாசலில் வந்து நின்றான்.
“மாப்பிள்ளை வந்துட்டார். பொண்ணு லேபர் வார்டுல!” என்று வாசுதேவன் சிரித்தாலும், மெழுகுவர்த்தி அணையும் போது அவர் கண்கள் ஒரு முறை வாசலைப் பார்த்துத் திரும்பின.
மறுநாள் காலை, இரவு டியூட்டி முடிந்த கையோடு ஒரு சின்னக் கேக்குடன் அப்பா வீட்டுக்கு ஓடினாள் நியதி. “ஸாரி பா.” “அடுத்த வாரம்னு சொன்னவ மறுநாளே வந்துட்டாளே, அதுவே பெரிசு” என்று சமையலறையிலிருந்து குரல் கொடுத்தாள் சுகந்தா.
“நேத்து மாப்பிள்ளை வந்தாரே. நீயே வந்த மாதிரி தான்” என்றார் வாசுதேவன். ஆனாலும் அந்தச் சின்னக் கேக்கை அவர் மறுபடியும் வெட்டினார். இந்த முறை மகளுடன்.
நான்காம் மாத நிறைவு நாளை ஒட்டி ஒரு ரூஃப் டாப் ரெஸ்டாரன்ட்டில் மேசை புக் செய்திருந்தான் விக்ரமன். ஒரு ரோஜாக் கொத்தும் வாங்கி வைத்திருந்தான்.
“ஸாரி விக்கி. லேபர் வார்டுல ட்வின்ஸ். இன்னும் அரை மணி நேரம்.”
அந்த அரை மணி நேரம் ஒன்றரை மணி நேரமாக நீண்டது. மெழுகுவர்த்தி கரைந்து, ரோஜா தலை தொங்கிய நிலையில் வந்து சேர்ந்தவளைப் புன்னகையுடன் எதிர்கொண்டான் அவன்.
“நீ இரண்டு குழந்தைகளை இந்த உலகத்துக்குக் கூட்டிட்டு வந்திருக்க. நான் இந்த ரோஜாவுக்கு கம்பெனி கொடுத்துட்டு இருந்தேன்.”
அவள் சிரித்தாள். அன்று இரவு முழுவதும் அவன் காட்டிய பொறுமை அவளை நெகிழ வைத்தது.
அடுத்த வாரம் அதே காட்சி தலைகீழாக நடந்தது. இந்த முறை அவனுக்குப் பிடித்த பிரியாணியைச் செய்து வைத்துக் கொண்டு அவள் காத்திருந்தாள். அவன் வந்து சேர்ந்தது இரவு பதினொன்றரை மணிக்கு.
“ஸாரி நிதி. ஒரு ஸ்டேஜ் ஃபோர் பேஷண்ட் ஃபேமிலிக்கு விஷயத்தைச் சொல்ல வேண்டியதா போச்சு. சொல்லிட்டு அந்த இடத்துல இருந்து உடனே எழுந்து வர முடியலை.”
“பரவாயில்லை” என்றபடி, ஆறிப் போன பிரியாணியை அவன் தட்டில் வைத்தாள் அவள். இருவரும் அமைதியாகச் சாப்பிட்டார்கள். அவன் நிலைமை அவளுக்குப் புரிந்தது தான். ஆனால் தான் சொன்ன பரவாயில்லையை அவள் மனமே முழுமையாக ஏற்றுக் கொள்ளவில்லை.
மூன்றாவது முறை, ஒரு வெள்ளிக்கிழமை இரவு வந்தது.
★★★★★
அந்த வார இறுதிக்கு ஈசிஆர் ரிசார்ட் ஒன்றில் அறை புக் செய்து, இரண்டு நாட்கள் தனக்குக் காலியாக இருக்கும்படி மூன்று வாரங்களாக ஷிஃப்ட்டுகளை மாற்றி வைத்திருந்தாள் நியதி. பெட்டியில் துணிகளை அடுக்கிக் கொண்டிருந்தவளின் அருகே வந்து தயங்கி நின்றான் விக்ரமன்.
“நிதி… ஒரு விஷயம்.”
“வேண்டாம்” என்றாள் அவள் திரும்பாமலே. “உங்க முகத்துலேயே தெரியுது.”
“சனிக்கிழமை காலை ஒரு சர்ஜரி இருக்கு. இரண்டு வாரமா வெயிட் பண்ற பேஷண்ட். அவங்களுக்கு டேட் மாத்த முடியாது. அதோட கான்ஃபரன்ஸ் அப்ஸ்ட்ராக்ட்டும் முடிக்கணும்…”
“இது மூணாவது தடவை.”
“எனக்குத் தெரியும். ஆனா…”
“ஆனா என்ன? உங்க வேலை தான் முக்கியம். அதானே? நீங்க கேன்சர் டாக்டர், உயிரைக் காப்பாத்துறீங்க. நான் வெறும் டெலிவரி பார்க்கிறவ. என் கேஸ் எல்லாம் தானா நடந்துட்டுப் போகும்” அவள் குரல் உயர்ந்தது.
“நான் அப்படிச் சொல்லலை நிதி.”
“சொல்லாம சொல்றீங்க. என் ட்வின்ஸ் டெலிவரி உன் ஸ்டேஜ் ஃபோர் அளவுக்கு வெயிட் இல்லைன்னு.”
“நீயும் போன மாசம் இரண்டு தடவை கேன்சல் பண்ணின!” அவன் குரலும் ஒரு படி மேலே போனது. “நான் ஒரு வார்த்தை கூட சொல்லலை. நீ பண்றப்போ நியாயம், நான் பண்றப்போ அநியாயமா?”
அந்த வார்த்தைகள் அறை முழுவதும் எதிரொலித்தன. இருவரும் ஒருவரை ஒருவர் அதிர்ச்சியாகப் பார்த்தார்கள். காதலித்த நாட்களிலிருந்து இன்று வரை, ஒருவரிடம் ஒருவர் குரலை உயர்த்தியதே இல்லாதவர்கள் அவர்கள்.
பெட்டியை மூடி விட்டுச் சத்தமில்லாமல் மாடிக்குப் போனாள் நியதி. கட்டிலில் அமர்ந்து தலையைக் கைகளில் தாங்கிக் கொண்டான் விக்ரமன்.
வாசலில் நின்றிருந்த அருந்ததி கணவரைப் பார்த்தார். தேவராஜன் தலையை ஆட்டினார்.
“முதல் சண்டை இப்படித் தான் வரும். நாம தலையிட வேண்டாம். ஆனா தூங்கறதுக்கு முன்னாடி முடிச்சுக்கச் சொல்லணும். சண்டையோட தூங்கறது தூக்கத்துக்குக் கேடு.”
“தூக்கம் தவிர உங்களுக்கு வேற எதுவுமே தெரியாதா?” என்று முணுமுணுத்தாலும், அருந்ததியின் உதடுகள் புன்னகைத்தன.
அறைக்குள் தனியாக அமர்ந்திருந்த விக்ரமனுக்கு, சிறு வயது முதல் கேட்டு வளர்ந்த அப்பாவின் வார்த்தைகள் நினைவுக்கு வந்தன. ‘உங்கம்மா ஹாஸ்பிடல்ல ஒரு உயிரைக் காப்பாத்திட்டு வருவா. நான் வீட்டுல காத்திருப்பேன்.’ முப்பது வருஷமாக அப்பா அப்படித் தான் காத்திருந்தார். இந்த மூன்று வாரங்களாக நியதியும் அப்படித் தான் காத்திருந்தாள். ஷிஃப்ட்டை மாற்றித் தரச் சொல்லி ஒவ்வொருவரிடமும் அவள் போனில் கெஞ்சியதை அவன் கேட்டுக் கொண்டு தான் இருந்தான். ஆனால் அதன் பின்னால் இருந்த ஆசையை அவன் கவனிக்கத் தவறியிருந்தான்.
அவள் பேசிய வார்த்தைகள் கடுமையானவை தான். ஆனால் அந்தக் கடுமைக்குக் காரணம் அவன் தந்த ஏமாற்றம். நீண்ட நேரம் கழித்து எழுந்தவன் சமையலறைக்குப் போனான். அவளுக்குப் பிடித்த மாதிரி டிகாக்ஷனைக் கொஞ்சம் கூட்டிக் காபி கலந்தான். கோப்பையுடன் மாடிப்படியின் கீழே நின்று, எப்படிப் பேச்சைத் தொடங்குவது என்று யோசித்ததில் பத்து நிமிடங்கள் ஓடிப் போயின.
★★★★★
மொட்டை மாடி ஊஞ்சலில் அமர்ந்திருந்தவளின் அருகே ஒரு காபி கோப்பை வந்து நின்றது.
“இது ஏற்கனவே ஆறிப் போன காபி” என்றாள் அவள் முகத்தைத் திருப்பியபடி.
“நான் வேணும்னே ஆற விட்டுத் தான் கொண்டு வந்தேன். உன் கோபத்தோட டெம்பரேச்சருக்கு மேட்ச் ஆகணும்ல.”என்றான் விக்ரமன்.
சிரிக்காமல் இருக்க அவள் போராடிக் கொண்டிருக்க, அவன் அருகில் அமர்ந்தான்.
“நான் சொன்னது தப்பு நிதி. ஒரு சர்ஜரிக்காக உன் சந்தோஷத்தை இரண்டாம் இடத்துல வச்சேன். ஆனா அது உன் வேலையை நான் சின்னதா நினைக்கிறதால இல்லை. அன்னைக்கு ரேவதியோட யூட்ரஸைக் காப்பாத்தினியே, அந்த நிமிஷம் உன்னை நினைச்சு நான் எவ்வளவு பெருமைப்பட்டேன்னு உனக்குத் தெரியாது.”
“நானும் பேசினது தப்பு தான்” என்றாள் அவள். “நீங்க பேஷண்ட்டைப் பார்த்து அழற மனுஷன்னு எனக்குத் தெரியும். அதைப் புரிஞ்சுக்காம பேசிட்டேன்.”
“இரண்டு பொறுப்பு பொன்னுசாமிகள் ஒரே வீட்டுல இருந்தா இது தான் நடக்கும்” என்று அவன் சிரிக்க, அவளும் சேர்ந்து சிரித்தாள். அந்த நொடியில் மொட்டை மாடியில் வீசிய காற்றோடு எல்லாக் கோபமும் கரைந்து போனது.
“நமக்கு ஒரு ரூல் வேணும் விக்ரம். வேலை முக்கியம் தான். ஆனா ஒரு பிளானை கேன்சல் பண்ணா, அப்பவே அதுக்குப் பதிலா இன்னொரு டேட்டையும் ஃபிக்ஸ் பண்ணணும். வெறும் ஸாரி எல்லாம் போதாது” என்றாள் நியதி.
அவன் சட்டைப் பையிலிருந்து ஒரு பேனாவை எடுத்தான். அவள் ஹாஸ்பிடல் பையின் ஒரு மூலையிலிருந்து, நிறம் மங்கிப் போன ஒரு பழைய மஞ்சள் ஸ்டிக்கி நோட்டை எடுத்தாள். அதன் ஒரு பக்கத்தில் முத்து முத்தான எழுத்தில் வரிகள் இருந்தன. ‘கேள்வி கேட்கிறவங்களால தான் மெடிசினே வளர்ந்தது. கேட்டுட்டே இரு.’
விக்ரமனின் கண்கள் விரிந்தன. “ஹேய்! இதை இன்னும் கூடவே வச்சுக்கிட்டுத் திரியறியா?”
“என் ரூல் புக்ல இருக்கிற ஒரே எக்ஸெப்ஷன். புது ரூலை இதுல தான் எழுதணும்” என்றாள் அவள்.
அதைத் திருப்பியவன், பின்புறம் ஒரே ஒரு வரியை எழுதினான். ‘வேலைக்காக ஒரு நாளை இழந்தால், வாழ்க்கைக்காக இன்னொரு நாளைத் திருப்பிக் கொடுப்பேன்.’ அதன் கீழே தன் கையெழுத்தைப் போட்டாள் அவள்.
“ஞாயிற்றுக்கிழமை காலை பத்து மணி. அன்னைக்கு ஹாஸ்பிடல் ரவுண்ட்ஸ் கூட எடுக்க மாட்டேன்.”என்றான் அவன்.
“நானும் தான்.”
இருவரும் கை குலுக்கிக் கொண்டார்கள்.
காலை ஆறு மணிக்கு இரண்டு அலைபேசிகளும் ஒரே நேரத்தில் ஒலித்தன. அவனுக்கு வார்டிலிருந்தும், அவளுக்கு லேபர் வார்டிலிருந்தும் அழைப்பு. இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து வெடித்துச் சிரித்தார்கள்.
ஓடும் அவசரத்திலும் அந்த ஸ்டிக்கி நோட்டை மடித்துப் பைக்குள் பத்திரப்படுத்திக் கொண்டாள் நியதி. அவர்களது முதல் வாக்குறுதி அது. அதை எத்தனை முறை அவர்கள் காப்பாற்றப் போகிறார்கள், எத்தனை முறை மறக்கப் போகிறார்கள் என்பதை அப்போது யாரும் அறியவில்லை.
Author: SudhaSri
Article Title: மழைக்கு ஏங்கிய மாந்தளிரே -6
Source URL: Nectar Novels-https://nectarnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Article Title: மழைக்கு ஏங்கிய மாந்தளிரே -6
Source URL: Nectar Novels-https://nectarnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.