• ஹாய் மக்களே! நம் Nectar Novels தளத்திற்கு நல்வரவு🙏😍😍 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள் nectarnovels.ss@gmail.com 🩷 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...👇 வேதா விஷால் & அனன்யா🙏💖

மழைக்கு ஏங்கிய மாந்தளிரே -7

SudhaSri

Administrator
Staff member
Jun 16, 2024
519
42
43
india

மழைக்கு ஏங்கிய மாந்தளிரே -7​

“மக்கள்மெய் தீண்டல் உடற்கின்பம் மற்றவர்
சொற்கேட்டல் இன்பம் செவிக்கு.”

மதுரை கலெக்டர் ஆபீஸ் வராந்தாவில் இருந்த மரப் பெஞ்சிலிருந்து நூறாவது முறையாக எழுந்தான் மாதவன்.

“உட்காருங்க மாது. கூப்பிடும் போது கூப்பிடுவாங்க” என்றாள் ஸ்வேதா. அவள் மடியில், தாயின் முந்தானையைப் பிஞ்சு விரல்களால் இறுகப் பிடித்தபடி உறங்கிக் கொண்டிருந்தாள் ஏழு மாதக் குழந்தை நிலா.

“எனக்கு ஒண்ணும் டென்ஷன் இல்லை.”

“அப்போ உன் கால் ஏன் அஞ்சு நிமிஷமா இந்த வராந்தாவை அளந்துட்டு இருக்கு?”

அருகில் தடிமனான கோப்புடன் அமர்ந்திருந்த மதுரை ஸ்பெஷலைஸ்ட் அடாப்ஷன் ஏஜென்சியின் சோஷியல் வொர்க்கர் அமுதா புன்னகைத்தார். “டோன்ட் வொர்ரி சார். இது லாஸ்ட் ஸ்டெப் தான். எல்லா டாக்குமென்ட்ஸும் சரியா இருக்கு.”

அந்தக் கடைசிப் படிக்கு வந்து சேர இரண்டரை வருடங்கள் ஆனதை நினைத்துப் பெருமூச்சு விட்டான் மாதவன்.

★★★★★

ஸ்வேதா தன் முதல் இழப்பை நினைத்துக் கலங்கிக் கொண்டிருந்த அந்த இரவுகளில் தான் மாதவன் அதைச் சொன்னான்.

“ஒரு குழந்தையை இழந்தவங்க நாம. வீடு இல்லாத ஒரு குழந்தைக்கு நாம வீடா இருக்கலாமே ஸ்வீட்டி.”

அது வெறும் ஆறுதல் வார்த்தை இல்லை. இழந்ததை ஈடுகட்டுவதற்காக இல்லாமல், வீடில்லாத ஒரு குழந்தைக்கு வீடாக இருப்பதற்காக இருவரும் சேர்ந்து எடுத்த முடிவு அது.

மாதவன் வாயைத் திறந்தாலே கலகலப்பு தான். ஆனால் இந்த விஷயத்தில் மட்டும் பரீட்சைக்குப் படிக்கும் மாணவனைப் போல உட்கார்ந்து படித்தான். சட்டம், விதிமுறைகள் என்று எல்லாவற்றையும் தேடித் தேடிப் படித்தவன், ஸ்வேதாவிடம் அதைச் சுருக்கமாகச் சொன்னான்.

“இது நினைச்ச உடனே கிடைக்கிற விஷயம் இல்லை ஸ்வீட்டி. நம்ம கன்ட்ரில அடாப்ஷன் ஃபுல்லா ஆன்லைன் க்யூ தான். லீகலா அடாப்ஷனுக்கு ஃப்ரீன்னு டிக்ளேர் பண்ணின எல்லாக் குழந்தைங்களும் அந்த லிஸ்ட்ல தான் இருப்பாங்க. நாம க்யூல நிக்கணும். அவ்வளவு தான்.”

முதலில் CARA-வின் CARINGS இணையதளத்தில் இருவரும் பதிவு செய்தார்கள். மேரேஜ் சர்டிஃபிகேட், இன்கம் ப்ரூஃப், மெடிக்கல் ஃபிட்னஸ் சர்டிஃபிகேட், ரெசிடென்ஸ் ப்ரூஃப், புகைப்படங்கள் என்று ஒவ்வொன்றாக அப்லோட் செய்தார்கள். தத்தெடுப்பவர்களின் வயதுக்கும் குழந்தையின் வயதுக்கும் கூட அங்கே ஒரு கணக்கு உண்டு. இரண்டு வயதுக்குள்ளான குழந்தை என்றால் கணவன் மனைவி இருவரின் மொத்த வயது எண்பத்தைந்துக்குள் இருக்க வேண்டும். மாதவனுக்கு முப்பத்திரண்டு, ஸ்வேதாவுக்கு இருபத்தொன்பது, மொத்தம் அறுபத்தொன்று. தகுதிக்குக் குறைவில்லை.

அடுத்து ஏஜென்சியின் சோஷியல் வொர்க்கர் வீட்டுக்கு வந்து, அவர்களின் லைஃப்ஸ்டைல், மனநிலை, உறவுகள், பொருளாதார நிலை என்று எல்லாவற்றையும் கேள்வி கேட்டுக் குறித்துக் கொண்டார். அந்த ‘ஹோம் ஸ்டடி’ ரிப்போர்ட் மூன்று வருடங்களுக்குச் செல்லுபடியாகும். மூன்று முறை வீட்டுக்கு வந்தவர், ஒரு முறை அக்ஷராவையும் தூக்கிக் கொஞ்சி விட்டுப் போனார்.

“எந்த வயசுக் குழந்தை? ஆணா, பெண்ணா?” என்று கேட்ட போது ஸ்வேதா தயங்காமல் சொன்னாள். “பெண். இரண்டு வயசுக்குள்ள.” தமிழ்நாடு, ஆந்திரா என்று இரண்டு மாநிலங்களைத் தங்கள் விருப்பமாகக் குறித்தார்கள்.

அதன் பிறகு வந்தது சீனியாரிட்டி நம்பர். அதைத் தினமும் செக் செய்வதை மட்டும் ஸ்வேதாவால் நிறுத்தவே முடியவில்லை. அவர்கள் குறித்த விருப்பத்துக்கும் சீனியாரிட்டிக்கும் ஏற்பவே குழந்தைகள் ரெஃபர் செய்யப்படுவார்கள் என்பதால் காத்திருப்பு நீண்டு கொண்டே போனது. சில சமயங்களில் அவளது நம்பிக்கையும் தளர்ந்தது.

“நாம எவ்வளவு நாள் காத்திருக்கணுமோ, அவ்வளவு நாள்” என்று மனைவியின் தோளில் கை வைத்தான் மாதவன். “நம்ம அக்ஷராவுக்குத் துணையா ஒரு நிலா வராமலா போயிடும்?”

★★★★★

ஒரு வியாழக்கிழமை காலை மாதவனின் மின்னஞ்சலுக்கு அந்தச் செய்தி வந்தது.

‘உங்களுக்கு ஒரு குழந்தை ரெஃபர் செய்யப்பட்டிருக்கிறது. 48 மணி நேரத்துக்குள் லாகின் செய்து ரிசர்வ் செய்யவும்.’

இருவரும் அவசரமாக லாகின் செய்தார்கள். திரையில் ஒரு குட்டிப் புகைப்படம். அதன் கீழே குழந்தையின் சோஷியல் ஸ்டடி ரிப்போர்ட்டும் மெடிக்கல் ரிப்போர்ட்டும் இருந்தன. நிலா என்ற பெயரில் ஒரு நான்கு மாதக் குழந்தை. பிறந்து பத்து நாட்களே ஆன நிலையில், ஒரு பௌர்ணமி இரவில் மதுரை SAA வாசலில் இருந்த தொட்டிலில் விடப்பட்டவள். போலீஸ் விசாரணை முடிந்து, சைல்ட் வெல்ஃபேர் கமிட்டி அவளை அடாப்ஷனுக்கு ‘லீகலி ஃப்ரீ’ என்று அறிவித்திருந்தது. எடை, உயரம், தடுப்பூசிகள் என்று மெடிக்கல் ரிப்போர்ட்டில் எல்லாமே சரியாக இருந்தன.

திரையையே பார்த்துக் கொண்டிருந்த ஸ்வேதாவின் கண்கள் நிறைந்தன.

அடுத்த நிமிடமே ‘ரிசர்வ்’ பட்டனை அழுத்தினார்கள். மூன்று ரெஃபரல்களிலும் ஒரு குழந்தையைக் கூட ரிசர்வ் செய்யாவிட்டால் ஒரு வருடத்துக்குத் தத்தெடுக்கவே தடை என்ற விதி மாதவனுக்குத் தெரியும். ஆனால் அவர்கள் அதைப் பற்றி யோசிக்கக் கூட இல்லை.

ரிசர்வ் செய்த முப்பது நாட்களுக்குள் குழந்தையை நேரில் பார்த்து தேவையான ஆய்வுகளைச் செய்து முடிவைச் சொல்ல வேண்டும் என்பது விதி என்பதால் அவர்கள் மூன்றாம் நாளே மதுரைக்குக் கிளம்பி விட்டார்கள்.

SAA-வின் ரிசப்ஷனில் ஒரு தொட்டில் இருந்தது. அதன் அருகில் அமர்ந்திருந்த நர்ஸ் குழந்தையைத் தூக்கி ஸ்வேதாவின் கையில் வைத்தார். நிலா தன் பிஞ்சுக் கையால் அவளது ஒரு விரலை இறுகப் பற்றிக் கொண்டாள். அந்த நொடியில் ஸ்வேதாவுக்குள் ஏதோ ஒன்று கரைந்து போனது. கண்கள் நீரைப் பொழியத் தயாராகி நின்றன.

“ஷ்ஷ். ஸ்வீட்டி! எமோஷன் ஆகாத” என்று அவளைத் தோளோடு அணைத்துக் கொண்டு முணுமுணுத்தான் மாதவன்.

அன்று சோஷியல் வொர்க்கர் அமுதா ஒரு மணி நேரம் அவர்களோடு அமர்ந்து, நிலாவின் சாப்பாட்டு நேரம், தூக்க நேரம், அடுத்த தடுப்பூசித் தேதி என்று ஒவ்வொன்றையும் சொல்லிக் கொடுத்தார். “குழந்தை வளர வளர, அவ தத்தெடுக்கப்பட்டவள்னு நீங்களே அவ கிட்ட சொல்லணும். வேற யாராவது சொல்றதுக்கு முன்னாடி” என்றவரின் வார்த்தைகளுக்கு ஸ்வேதா தலையசைத்தாள்.

அதன் பிறகு ‘ப்ரீ-அடாப்ஷன் ஃபாஸ்டர் கேர்’ ஒப்புதல் படிவத்தில் இருவரும் கையெழுத்திட்டார்கள். அடாப்ஷன் ஆர்டர் வரும் வரை குழந்தை சட்டப்படி அவர்களுடைய ஃபாஸ்டர் சைல்ட். பத்து நாட்களுக்குள் நிலாவைத் தங்கள் வீட்டுக்கு அழைத்து வந்தார்கள். அவர்கள் சார்பாக மாவட்ட ஆட்சியரிடம் அடாப்ஷன் ஆர்டருக்கு SAA விண்ணப்பித்தது.

விதிப்படி அந்த விண்ணப்பம் பத்து நாட்களுக்குள் கலெக்டர் ஆபீஸுக்குப் போக வேண்டும். ஆட்சியர் இரண்டு மாதங்களுக்குள் ஆர்டர் தர வேண்டும். அந்த இரண்டு மாதங்களும் காலண்டரில் ஒவ்வொரு நாளையும் அடித்துக் கொண்டே இருந்தான் மாதவன்.

அன்று முதல் நிலா அவர்கள் வீட்டில் வளர்ந்தாள். முதல் முறை அவளைப் பார்த்ததுமே ‘பாப்பா!’ என்று வீடே அதிரக் கத்தினாள் அக்ஷரா.

★★★★★

“திருமதி ஸ்வேதா, திரு மாதவன். உள்ளே வாங்க!”

அலுவலர் அழைத்ததும் இருவரும் எழுந்தார்கள். உள்ளே ஆட்சியர் ஃபைலைப் புரட்டிக் கொண்டிருந்தார். 2022 வரை நீதிமன்றத்தின் வேலையாக இருந்த இந்த அதிகாரம், இப்போது மாவட்ட ஆட்சியரின் கையில்.

“உங்களுக்கு ஏற்கனவே ஒரு குழந்தை இருக்கே… அப்படியிருக்க இன்னொரு குழந்தையை ஏன் தத்தெடுக்க நினைக்கிறீங்க?”

ஆட்சியரின் கேள்விக்கு மாதவன் உடனே பதில் சொல்லவில்லை. அவன் அருகில் இருந்த ஸ்வேதாவைப் பார்த்தான். அவளும் அவனைப் பார்த்தாள்.

“கல்யாணம் ஆகி கொஞ்ச நாளில் நான் ப்ரெக்னென்ட் ஆகிட்டேன். ஆறாவது மாசம்.. கொஞ்சம் ஃபேமிலி டென்ஷன்.. பிபி ஜாஸ்தியாகி டெர்மினேட் பண்ண வேண்டியதாகிடுச்சு. என்னை விட இவர் தான் குழந்தையை ஆர்வமா எதிர்பார்த்தார். எங்கெங்கேயோ தேடி என்னவெல்லாமோ வாங்கி வச்சிருந்தார். அந்த டெலிவரில நான் பட்ட கஷ்டமெல்லாம் பார்த்து, எனக்கு ஏதாவது ஆகிடுமோன்னு பயந்து போயிட்டார். உடனே முடிவெடுத்து இனிமேல் அடாப்ட்ஷன் தான், நோ சைல்ட் பர்த் ஆப்ஷன்னு வீட்டுல எல்லாரையும் ஒரு வழி பண்ணிட்டார். நான் டிஸ்சார்ஜ் ஆகி வரும் போது அடாப்ஷன் அப்ளிகேஷனோட ரெடியா இருந்தார்.”

அறைக்குள் சில நொடிகள் அமைதி நிலவியது.

“சுயநலமான காரணத்தால் தான் ஆரம்பிச்சது. அடாப்ஷன் பத்தி படிக்க ஆரம்பிச்ச போது தான் உலகம் புரிஞ்சது. ஒரு குழந்தையைப் பெற்றெடுக்கறது மட்டும் குடும்பம் உருவாகுற ஒரே வழி இல்லைன்னு நல்லா புரிஞ்சது.” இந்த முறை மாதவனின் பதில் தயக்கமில்லாமல் வந்தது.

ஆட்சியர் இருவரையும் அமைதியாகப் பார்த்தார்.

ஆட்சியர் கோப்பிலிருந்த சில ஆவணங்களைப் பார்த்தார்.

“உங்க மகளுக்கு இது புரியுமா? அவளுக்கு என்ன சொல்லியிருக்கீங்க?”

“அவளுக்கு எல்லாமே தெரியும் மேடம், தங்கச்சிக்காக எல்லாம் ரெடி பண்ணி வைக்கிறேன், நீங்க போய் கூட்டிட்டு வாங்கன்னு எங்களை அனுப்பி வச்சிருக்கா” இருவரும் கோரஸாக கூறினார்கள். அத்தனை பெருமிதம் அவர்கள் முகத்தில்.

“சரி. குடும்பத்துல மற்றவர்களுக்கு?”

“என் அம்மாவுக்கு மட்டும்… “ எப்படிச் சொல்வது என்று ஸ்வேதா சற்றுத் தயங்கினாள்.

“நிலாவைப் பார்த்திருக்காங்களா?”

“இல்லை.”

“ஏன்?”

“அவங்களுக்கு இந்த முடிவே இன்னும் சரியா தோணல. குழந்தையைப் பார்த்துட்டா மனசு மாறிடுவாங்கன்னும் நினைக்க முடியல, அவங்க சுபாவமே அப்படித்தான்.”

ஆட்சியர் புன்னகைத்தார். “சிலர் அப்படித்தான், உடனே மாறணும்னு கட்டாயமும் இல்லை.”

“ஆனா ஒரு விஷயம் மட்டும் முக்கியம். வீட்டிலுள்ள பெரியவர்கள் எல்லாரும் ஒரே கருத்தில் இருக்கணும்னு சட்டம் சொல்லாது. ஆனால் குழந்தை அந்த வீட்டுக்குள் வந்த பிறகு, அவளுக்கு பாதுகாப்பில்லாத சூழல் இருக்கக்கூடாது. அதைத்தான் நாங்க கவனிப்போம்.”

“புரியுது மேடம்,” என்றான் மாதவன்.

“நீங்க இந்த முடிவை அவசரத்துல எடுக்கலன்னு எனக்குப் புரியுது. இருந்தாலும், நிலா உங்க வாழ்க்கைக்குள் வந்த பிறகு, அவளைக் கடந்த காலத்தோட ஒப்பிடாம வளர்க்கணும். அவளுக்கு அவளுக்கென்று ஒரு இடம் இருக்கணும்.”

மாதவனும் ஸ்வேதாவும் அமைதியாகத் தலையசைத்தனர். தன் பேனாவை எடுத்த அவர், தேவையான இடங்களில் கையொப்பமிட்டார்.

“இன்னையிலிருந்து நிலா உங்களோட சொந்தக் குழந்தை. உங்க பேர்களோட அவளோட புது பர்த் சர்டிஃபிகேட் சீக்கிரமே வந்துடும். இன்னும் இரண்டு வருஷத்துக்கு, ஆறு மாசத்துக்கு ஒரு தடவை SAA-விலிருந்து உங்களை வந்து பார்ப்பாங்க. அது ப்ரொசீஜர்.”

மாதவன் ஏதோ சொல்ல வாயைத் திறந்தான். வார்த்தைகள் வரவில்லை. கண்களில் இருந்து வழிந்த கண்ணீரை மெல்லத் துடைத்தவன், மனைவியின் தோளில் தலை சாய்த்துக் கொண்டான். இருவரின் விசும்பல் சத்தத்தில் விழித்துக் கொண்ட நிலா பொக்கை வாயால் சிரித்தாள்.

★★★★★

புது பர்த் சர்டிஃபிகேட் மூன்றாவது நாளே வந்து சேர்ந்தது. தாய் ஸ்வேதா, தந்தை மாதவன். அந்த இரண்டு வரிகளையும் பார்த்துப் பார்த்துக் கண் கலங்கினாள் ஸ்வேதா.

“இது போதும் மாது. இதுக்கு மேல எனக்கு எதுவும் வேண்டாம்.”

“உங்க அம்மாவோட ஆசீர்வாதமும் வேணும். நாம போய் அவங்களைப் பார்த்துட்டு வருவோம்.”

ஞாயிற்றுக்கிழமை மதியம் ஒரு இனிப்புப் பெட்டியுடன் தமயந்தியின் வீட்டு வாசலில் வந்து நின்றது அந்தக் குடும்பம். மாதவனின் தோளில் அக்ஷரா. ஸ்வேதாவின் கையில், மஞ்சள் நிறப் பட்டுச் சட்டையில் ஒரு குட்டி பொம்மையைப் போலச் சிரித்துக் கொண்டிருந்தாள் ஏழு மாத நிலா.

கதவைத் திறந்த தமயந்தியின் பார்வை நேராகக் குழந்தையின் முகத்தில் விழுந்து, அடுத்த நொடியே ஸ்வேதாவின் முகத்துக்குத் தாவியது.

“இதோ பார் ஸ்வேதா. நான் இன்னும் எதுவும் முடிவு பண்ணலை.”

“அம்மா…”

“உள்ளே வாங்க” என்று பேச்சைத் திருப்பி விட்டு முன்னே நடந்தார் அவர்.

ஹாலில் சோஃபாவில் செய்தித்தாளுடன் அமர்ந்திருந்தார் தாமோதரன். தலையைத் தூக்கி மகளைப் பார்த்தவர், குழந்தையையும் பார்த்தார். பிறகு மீண்டும் செய்தித்தாளுக்குள் புதைந்து கொண்டார்.

“மாமா, இது நிலா” என்றான் மாதவன் உற்சாகமாக. “நம்ம வீட்டுக்கு வந்து இரண்டு மாசம் ஆச்சு. கலெக்டர் ஆர்டரும் வந்துடுச்சு. இப்போ சட்டப்படியும் நிலா எங்க பொண்ணு.”

“எனக்கு எல்லாம் தெரியும். என் கிட்ட ஒரு வார்த்தை கூடக் கேட்காம நீங்க இவ்வளவு தூரம் போயிட்டீங்க.”

“அம்மா, நான் உங்களுக்குப் பத்து தடவை சொல்லிட்டேன். நீங்க தான் போனை எடுக்கலை.”

“எடுக்கலைன்னா என்ன அர்த்தம்? எனக்கு இஷ்டம் இல்லைன்னு அர்த்தம்!”

அறை முழுவதும் அமைதி பரவியது. மாதவனின் கழுத்தைக் கட்டிக் கொண்டு பாட்டியையே பார்த்துக் கொண்டிருந்தாள் அக்ஷரா. நிலா மட்டும் பொக்கை வாயால் சிரித்துக் கொண்டிருந்தாள்.

“யாரு பெத்த குழந்தையோ? என்ன குலமோ? கோத்திரமோ? எந்த ரத்தமோ?” என்று புலம்பத் தொடங்கினார் தமயந்தி.

“நம்ம குடும்பத்துக்குன்னு ஒரு மரியாதை இருக்கு ஸ்வேதா. அரவிந்தனுக்குக் கல்யாணம் ஆகி இப்போ தான் அவன் வீட்டுல ஒரு குழந்தை பிறந்திருக்கு. அதுக்குள்ள நீ யாரோட பிள்ளையையோ நம்ம வீட்டுக்குள்ள கொண்டு வந்து உட்கார வைக்கப் போறியா?”

“அம்மா! அவ ஒரு குழந்தை.”

“அதுக்கு? சொந்தக்காரங்க கேட்டா நான் என்ன பதில் சொல்றது? இது யாரு பேத்தின்னு கேட்டா, தெருத் தொட்டில்ல கிடைச்சதுன்னு சொல்லவா?”

ஸ்வேதாவின் முகம் வெளிறிப் போனது. மாதவன் மெல்ல முன்னே வந்தான்.

“அத்தை, அவளை ஒரு தடவை கையில வாங்கிப் பாருங்களேன். இவ கண்ணு உங்க கண்ணு மாதிரியே இருக்கு பாருங்க.”

தமயந்தி மாப்பிள்ளை என்றும் பாராமல் முறைத்ததில் மாதவன் வாயை மூடிக் கொண்டான். இந்த இடத்தில் நகைச்சுவை ஒரு நாளும் வேலை செய்யாது என்பது அவனுக்குப் புரிந்தது.

மாடிப்படியில் மெல்லிய காலடிச் சத்தம் கேட்டது. தலையில் ஒரு காட்டன் ஸ்கார்ஃபைக் கட்டிக் கொண்டு இறங்கி வந்தாள் ஸ்ரேயா. கீமோ சிகிச்சைக்குப் பிறகு அவள் முகம் மெலிந்திருந்தது. ஹாலில் நடந்து கொண்டிருந்ததைப் பார்த்தும் அவள் எதுவும் பேசவில்லை. அவளைப் பார்த்ததும் நிலா கைகளை நீட்டிச் சிரித்தாள்.

ஒரு நொடி அந்தக் குழந்தையின் மீதே நிலைத்தன ஸ்ரேயாவின் கண்கள். அவள் முகத்தில் ஏதோ ஒரு நெகிழ்ச்சி தெரிந்தது. பிறகு சட்டென்று திரும்பி மாடிக்குச் சென்று விட்டாள். அவள் கண்கள் ஏன் கலங்கியிருந்தன என்பது ஸ்வேதாவுக்கு மட்டுமே புரிந்தது.

“அம்மா.” ஸ்வேதாவின் குரல் மெதுவாக வந்தாலும் அறையில் இருந்த அத்தனை பேருக்கும் தெளிவாகக் கேட்டது. “நான் உங்க கிட்ட பர்மிஷன் கேட்க வரலை. ஆசீர்வாதம் கேட்க வந்தேன். இந்தக் குழந்தை இனிமே என் மகள். சட்டப்படி மட்டும் இல்லை, என் மனசுக்குள்ளயும். நான் ஒரு குழந்தையை இழந்தவ. அந்த வலி என்னன்னு எனக்குத் தெரியும். அம்மாவே இல்லாத இவளோட வலியும் எனக்குப் புரியுது.”

“இதெல்லாம் பேசி என்னை இளக வைக்கப் பார்க்காதே!” என்று எழுந்து நின்றார் தமயந்தி. “நான் அந்தக் குழந்தையைத் தொட மாட்டேன். இந்த வீட்டுக்கு நீங்க வரலாம், போகலாம். ஆனா என் கிட்ட பாட்டின்னு எதையும் ஐஎதிர்பார்க்காதே.”

ஸ்வேதா ஒரு நொடி கண்களை மூடினாள். பிறகு குழந்தையை இறுக அணைத்துக் கொண்டு நிமிர்ந்தாள்.

“சரி அம்மா. இன்னைக்கு நாங்க அதை எதிர்பார்க்கலை. நிலாவுக்குப் பாட்டி எப்போ வேணும்னு அவளே முடிவு பண்ணுவா.”

கணவனைப் பார்த்து அவள் தலையசைக்க, இருவரும் புறப்பட்டார்கள்.

வாசலில் காரைத் திறக்கும் நேரத்தில் பின்னாலிருந்து காலடிச் சத்தம் கேட்டது. தாமோதரன் தான். அதுவரை ஒரு வார்த்தை கூடப் பேசாதவர், ஸ்வேதாவின் கையில் இருந்த குழந்தையின் நெற்றியில் தன் வலது கை விரல்களை மெல்ல வைத்தார்.

“நிலா… நல்லா இருக்கட்டும்.”

அவ்வளவு தான். அந்த மூன்று வார்த்தைகளோடு திரும்பி வீட்டுக்குள் நடந்து போனார் அவர். ஸ்வேதாவின் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தது.

“அப்பா கூட எனக்காக எதுவும் பேசலை மாது.”

“ம்ச் விடு பார்த்துக்கலாம். அவர் பேசினால் அடுத்து என்ன நடக்கும்னு உனக்கு தெரியும் தானே” என்று அவள் தோளைத் தட்டிக் கொடுத்தான் மாதவன்.

காரில் ஏறியதும் அம்மாவின் கையைப் பிடித்தாள் அக்ஷரா. “அம்மா, பாட்டி ஏன் கோபமா இருக்காங்க? நிலா அழவே இல்லையே.”

“பாட்டிக்குப் பயம் கண்ணா. பயம் வந்தா அது கோபமா வெளியே வரும்.”

“அந்தப் பயம் சீக்கிரம் போயிடும் ஸ்வீட்டி. இவ சிரிப்பைப் பார்த்துட்டு யாராலயும் ரொம்ப நாள் கோபமா இருக்க முடியாது”என்றான் மாதவன்.

★★★★★

அன்றிரவு சமையலறையில் தனியாகப் பால் காய்ச்சிக் கொண்டிருந்தார் தமயந்தி. பின்னால் வந்து நின்றார் தாமோதரன்.

“நீ அந்தக் குழந்தையை ஒரு தடவை கையில எடுத்துப் பார்த்திருக்கலாம் தமா.”

“எனக்குப் பயமா இருக்குங்க.” அவர் குரல் சட்டென்று உடைந்தது. ஹாலில் கத்திக் கொண்டிருந்த தமயந்தி இல்லை இவர். “ஸ்ரேயாவுக்கு உடம்பு முடியாம இருக்கிற இந்த நேரத்துல புதுசா ஒரு குழந்தையை வீட்டுக்குள்ள கொண்டு வந்தா, ஏதாவது அபசகுனம் ஆகிடுமோன்னு… என் பொண்ணை நான் இழந்துடுவேனோன்னு நினைக்கும் போதே என் கை கால் எல்லாம் நடுங்குது.”

“அது நோய் தமா. அந்தக் குழந்தைக்கும் அதுக்கும் சம்பந்தமே இல்லை. உன் பயத்தை ஒரு பச்சைக் குழந்தை மேல போட்டுடாதே.”

“எனக்குத் தெரியும். ஆனாலும் பயந்துட்டேன்.” கண்களைத் துடைத்துக் கொண்டார் தமயந்தி. “ஒரு வேளை நான் நினைக்கிறது சரியா இருந்தா? நான் தொட்டு, அதனால…”

தாமோதரன் எதுவும் சொல்லாமல் அவர் தோளில் கையை வைத்தார்.

பால் டம்ளருடன் அவர் மாடியேறிய போது ஸ்ரேயாவின் அறையில் இன்னும் விளக்கு எரிந்து கொண்டிருந்தது. தலையில் துணியுடன் கட்டிலில் உட்கார்ந்திருந்தாள் ஸ்ரேயா.

“அம்மா, ஒண்ணு சொல்லட்டுமா?”

“தூங்கலையா நீ?”

“அந்தக் குழந்தை என்னைப் பார்த்துச் சிரிச்சா மா. எனக்கு அம்மாவாகிற சான்ஸ் கிடைக்குமான்னே தெரியாத இந்த நேரத்துல அந்தச் சிரிப்பு ஏதோ ஒரு ஆறுதல் மாதிரி இருந்துச்சு” நிதானமாகச் சொன்னாள் ஸ்ரேயா. மகளின் தலைத் துணியை மெல்ல வருடினார் தமயந்தி. பதில் எதுவும் சொல்லவில்லை.

அன்றிரவு அவர் அறை ஜன்னலில் வந்து நின்ற முழு நிலவு, அவரிடம் ஏதோ கேட்பது போலிருந்தது. பதில் சொல்லத் தயாராக இல்லாத தமயந்தி ஜன்னலை மூடிக் கொண்டார்.
 

Author: SudhaSri
Article Title: மழைக்கு ஏங்கிய மாந்தளிரே -7
Source URL: Nectar Novels-https://nectarnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.

Goms

Member
Apr 28, 2025
94
12
18
Chennai
மாதவன் அம்மா அப்பா எங்கே?? அப்போ மாந்தளிர் நிலாவா??? 🤔
மணிரத்னம் படம் பார்க்கிற மாதிரி இருக்கு. அங்கங்கே காட்சிகள் 😂
 
  • Wow
Reactions: SudhaSri

SudhaSri

Administrator
Staff member
Jun 16, 2024
519
42
43
india
மாதவன் அம்மா அப்பா எங்கே?? அப்போ மாந்தளிர் நிலாவா??? 🤔
மணிரத்னம் படம் பார்க்கிற மாதிரி இருக்கு. அங்கங்கே காட்சிகள் 😂
இது நான் ஏற்கனவே எழுதிய ஆடுமடி தொட்டில் இனி கதையின் தொடர்ச்சி..