• ஹாய் மக்களே! நம் Nectar Novels தளத்திற்கு நல்வரவு🙏😍😍 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள் nectarnovels.ss@gmail.com 🩷 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...👇 வேதா விஷால் & அனன்யா🙏💖

மழைக்கு ஏங்கிய மாந்தளிரே -8

SudhaSri

Administrator
Staff member
Jun 16, 2024
537
45
43
india

மழைக்கு ஏங்கிய மாந்தளிரே -8​

“அஞ்சுவ தஞ்சாமை பேதைமை அஞ்சுவது
அஞ்சல் அறிவார் தொழில்.”

“ஹாஸ்பிடலா? சீ!”

ஒரு காலத்தில் ஸ்ரேயா அடிக்கடி சொல்லி வந்த வார்த்தை இது. இன்று அதே ஹாஸ்பிடலின் கீமோ டே கேர் யூனிட்டில், கையில் ஐவியுடன் ஒரு சாய்வு நாற்காலியில் சாய்ந்து அமர்ந்திருந்தாள் அவள்.

தலையில் அவள் கட்டியிருந்த சில்க் ஸ்கார்ஃப் அவளே டிசைன் செய்தது. அடர் நீலத்தில் தங்க நிற ஜரி. ஹாஸ்பிடலின் வெள்ளைச் சுவர்களுக்கு நடுவே அது ஒரு தனித் தீவைப் போல ஜொலித்தது. ‘ஒரு ஃபேஷன் டிசைனர் எந்த நிலையிலும் தன் ஸ்டைலை விட்டுக் கொடுக்க மாட்டாள்’ என்று தனக்குத் தானே சொல்லிக் கொண்டாலும், தன் கைகள் மெல்ல நடுங்கிக் கொண்டிருந்ததை அவள் அறியாமல் இல்லை.

“குட் மார்னிங் ஸ்ரேயா.”

கழுத்தில் ஸ்டெத்தை மாட்டிக் கொண்டு அவளது கோப்புடன் வந்து நின்றவன் விக்ரமன். ஒற்றைப் புருவத்தை உயர்த்தினாள் அவள்.

“இன்னைக்கு உங்களுக்கு நாலாவது சைக்கிள். எப்படி இருக்கீங்க?”

“எனக்கு ஒண்ணுமில்லை. பயமெல்லாம் இல்லை.”

“அப்படியா?” அவளது நடுங்கும் கைகளைப் பார்த்தாலும் அவன் அதைப் பற்றி எதுவும் பேசவில்லை.

சற்று நேரம் அவனையே பார்த்துக் கொண்டிருந்தவள், பிறகு குரலைத் தாழ்த்தினாள். அவளது கண்கள் ஒரு நொடி பளபளத்தன. முதல் முறையாக தப்பு செய்து விட்டேனோ என்று பயம் தோன்றியது.

“மயக்கம் வர மாதிரி இல்லை வேற ஏதாவது அன்ஈஸியா இருந்தா உடனே சொல்லுங்க.” நாசூக்காக அந்த இடத்தை விட்டு நகர்ந்து சென்றான் விக்ரமன். அவன் மீண்டும் வந்த போது அவள் அதே நிலையில் அமர்ந்திருந்தாள். மனதுக்குள் ஏதேதோ எண்ணங்கள்.

அமெரிக்காவில் ஒரு கோயிலில் ஆதித்யாவுடன் நடந்த ரகசியத் திருமணம், அதன் பிறகு இங்கே ஒரு நட்சத்திர ஹோட்டல் ரிசப்ஷன், பிறகு பறந்து போன வாழ்க்கை. ஃபேஷன் வீக்குகள், ஃபிளைட்டுகள், ஃபோட்டோஷூட்டுகள். குழந்தை வேண்டாம் என்ற அவளது தீர்மானம். வாழ்க்கையே இன்னும் ஆரம்பிக்கவில்லை, அதற்குள் தாய்மை எதற்கு? அதனால் இரண்டு வருடங்கள், டாக்டரிடம் ஒரு வார்த்தை கூடக் கேட்காமல், தனக்குத் தெரிந்த மாத்திரைகளைத் தொடர்ந்து விழுங்கிக் கொண்டிருந்தாள்.

ஒரு நாள் குளிக்கும் போது அவள் கையில் ஒரு சின்னக் கட்டி தட்டுப்பட்டது. வலி இல்லாததால் அதை அவள் பொருட்படுத்தவில்லை. ‘ஸ்ட்ரெஸ்’ என்று தனக்குத் தானே ஒரு பதிலையும் சொல்லிக் கொண்டாள். அடுத்த வாரம் நியூயார்க் ஃபேஷன் வீக், அதன் பிறகு மிலான், பாரிஸ். அந்த ஐந்து மாதங்களும் கட்டி வளர்ந்து கொண்டே இருந்தது.

ஒரு ஃபேஷன் ஷோவில் மயங்கி விழுந்த பிறகு தான் அவள் முதன் முதலாக டாக்டரிடம் போனாள். ஸ்கேன், பயாப்ஸி, எம்ஆர்ஐ. அதன் முடிவு ஒரே வாக்கியத்தில் வந்தது: இன்வேசிவ் டக்டல் கார்சினோமா, இரண்டாம் நிலை.

டாக்டரின் அறையில் அவள் கையைப் பிடித்துக் கொண்டு அமர்ந்திருந்தான் ஆதித்யா. ஆனால் அவன் கண்களில் எந்த உணர்ச்சியும் இல்லை. நீண்ட கால உறவு என்பதெல்லாம் அவனுடைய அகராதியில் இல்லாத சொற்கள் என்பதை அவள் உணர்ந்தாள்.

இந்தியா போவதாக அவள் சொன்ன போது ஆதித்யா தடுக்கவில்லை. ‘நாலு வாரத்துல நான் வந்துடுவேன்’ என்று அவள் கையில் ஒரு முத்தம் கொடுத்து விமான நிலையத்தில் வழியனுப்பி வைத்தான்.

“உங்க கூட யாரும் வரலையா ஸ்ரேயா?” விக்ரமனின் குரல் கேட்டு சட்டென்று விழித்தாள்.

“அம்மா வெளியே இருக்காங்க. ஆனால், என்ன விஷயம்னு என் கிட்டயே சொல்லலாம். மாத்திரையை மிட்டாய் மாதிரி முழுங்கி இருக்கேனே, ஏதாவது பெரிய பிரச்சனையா?”

ஒரு நாற்காலியை இழுத்துப் போட்டு அவள் அருகில் அமர்ந்தபடி நிதானமாகப் பேசினான் விக்ரமன்.

“மாத்திரைகள் மட்டுமே காரணம்னு சொல்ல முடியாது ஸ்ரேயா. ஹார்மோன் பில்ஸ் ஒரு சின்ன ரிஸ்க் ஃபேக்டர் தான். ஜெனிடிக்ஸ், ஏஜ், உடம்போட நிலைமை, லைஃப்ஸ்டைல் எல்லாம் சேர்ந்து தான் இந்த நோயை உருவாக்குது. இது உங்களுக்குக் கிடைச்ச தண்டனை இல்லை. இது ஒரு நோய். ஆனா கட்டியைக் கண்டுக்காம விட்டது தான் இவ்வளவு தாமதத்துக்குக் காரணம்.”

“என் தப்பு தானே?”

“தப்பு இல்லை. ஒரு பாடம். நிறைய பேருக்கு அதைக் கத்துக்கவே சான்ஸ் கிடைக்கிறதில்லை. உங்களுக்குக் கிடைச்சிருக்கு.”

ஸ்ரேயா சிரிக்க முயன்றாள். “இது பாடமா? ரொம்பக் காஸ்ட்லியான பாடம் டாக்டர்.”

“ஆனாலும் இதுல பாஸ் பண்றவங்க நிறைய பேர் இருக்காங்க ஸ்ரேயா. நீங்களும் பாஸ் பண்ணுவீங்க. டிஸ்சார்ஜ் பண்ணலாம்னு சொல்லத்தான் வந்தேன். டேக் கேர்.”

***

வெளியே காத்திருப்பு அறையில் கையில் ஜெபமாலையுடன் அமர்ந்திருந்தார் தமயந்தி. ஐந்து நிமிடத்துக்கு ஒரு முறை நர்ஸிங் ஸ்டேஷனுக்குப் போய், “என் பொண்ணுக்கு ஏன் இவ்வளவு நேரம்? வாந்தி வந்தா என்ன பண்றீங்க? அந்த ஊசியைச் சரியா போட்டிருக்காங்களா?” என்று கேள்வி மேல் கேள்வியாகத் தொடுத்துக் கொண்டிருந்தார்.

“மேடம், டாக்டர் உள்ளே தான் இருக்காங்க. எல்லாம் சரியா இருக்கு.”

“சரியா இருக்குன்னு நான் எப்படி நம்பறது?”

அந்த வழியே வந்த நியதியை அவர் கண்கள் பிடித்துக் கொண்டன. “நீ விக்ரமோட வைஃப் தானே? தம்பி என் பொண்ணை நல்லா பார்த்துப்பான் இல்லையா?”

“ஆன்ட்டி, ஸ்ரேயாவும் எங்க குடும்பம் தான். நாங்க எல்லாரும் இருக்கோம்.” அவர் கையைப் பிடித்து மெல்லத் தட்டிக் கொடுத்தாள் நியதி. தமயந்தி ஒரு நொடி அவளையே பார்த்தார். அவர் கண்களில் பதற்றம் இருந்தாலும், அந்தக் கையின் ஸ்பரிசத்தில் ஒரு சின்ன நிம்மதியும் தெரிந்தது.

கீமோ பிரிவுக்குள் நுழைந்த நியதியைப் பார்த்துச் சிரித்தாள் ஸ்ரேயா. “என் பழைய க்ரஷோட வைஃப் என்னைப் பார்க்க வந்திருக்காங்க.“ அதைக் கண்டு கொள்ளாமல் வேறு பேசினாள் நியதி.

“நீங்க கட்டியிருக்கிற இந்த ஸ்கார்ஃபை வாசல்ல இருந்தே பார்த்தேன். வித்தியாசமான டிசைனா இருக்கு. இந்த ஜரி வேலை உங்களோடது தானே?”

“ஆமா…” தயங்கியபடி தலையைத் தொட்டுக் கொண்டாள் அவள்.

“எனக்கும் ஒண்ணு டிசைன் பண்ணிக் கொடுங்களேன். இந்த மெட்டீரியல் கூட சூப்பரா இருக்கு.”

“உங்களுக்கா?” வியந்தாள் ஸ்ரேயா.

“எனக்கே தான். ஸ்ரேயா! நீங்க பெரிய ஃபேஷன் டிசைனர்னு எனக்குத் தெரியும். இப்போ தான் உங்க வொர்க் பார்க்கிறேன். சின்ன ஸ்கார்ஃப்ல நுணுக்கமா நிறைய வேலை செஞ்சிருக்கீங்க. க்ரேட்!”

ஸ்ரேயாவின் கண்கள் சட்டென்று நிறைந்தன. முகத்தைத் திருப்பிக் கொண்டாள் அவள். “இந்த ஆறு மாசத்துல யாருமே என்னை டிசைனரா பார்க்கலை. எல்லாரும் பாவம் அவன்னு தான்…”

நியதி அவளைப் பார்த்தபடியே மெதுவாகச் சிரித்தாள்.

“அவங்க உங்களை எப்படிப் பார்க்கிறாங்கன்னு உங்களுக்கு எதுக்கு? நீங்க உங்களை எப்படி பார்க்கிறீங்கன்னு தான் முக்கியம்.”

ஸ்ரேயா பதில் சொல்லவில்லை. அவளை நிமிர்ந்து பார்த்தாள். கண்களில் வழிந்த கண்ணீரைத் துடைக்காமல் இருந்தாள்.

“உங்களுக்கு ஞாபகம் இருந்தால் போதுமே.” அந்த வார்த்தைகளுக்குப் பிறகு சில நொடிகள் இருவரும் பேசவில்லை. ஆனால், ஆறு மாதங்களுக்குப் பிறகு முதல் முறையாக ஸ்ரேயாவுக்கு, தான் ஒரு ஃபேஷன் டிசைனர் என்ற உணர்வு மனதுக்குள் மெதுவாகத் திரும்பி வந்தது.

அன்றிரவு மாதக்கணக்காகத் திறக்கப்படாமல் கிடந்த தன் ஸ்கெட்ச் புத்தகத்தை எடுத்தாள் ஸ்ரேயா. கீமோ பிரிவில் அமர்ந்திருந்த போது பட்ட சிரமங்கள் அவள் நினைவுக்கு வந்தன. கையில் ஐவி ஊசி இருக்கும் போது சட்டையின் கை மடங்கவே இல்லை. குமட்டல் வரும் போது கழுத்தைச் சுற்றி இறுக்கிப் பிடிக்கும் ஆடைகள் தொந்தரவு செய்தன.

ஒரு வெள்ளைப் பக்கத்தை விரித்தவள், மென்மையான பருத்தித் துணியில் ஒரு உடையை வரைந்தாள். கையின் பக்கத்தில் ஒரு திறப்பு, இலகுவான கழுத்துப் பகுதி, உறுத்தாத மடிப்புகள். அது ஒரு பேஷண்ட்டுக்கான டிரெஸ் அல்ல; ஒரு பெண்ணுக்கான உடை.

வரைந்து முடித்ததும் பக்கத்தின் மேல் மூலையில் ஒரு பெயரை எழுதினாள்.

‘நியதிக்கு.’

அறையின் மூலையில் இருந்த பெரிய நிலைக்கண்ணாடி இன்னும் ஒரு துப்பட்டாவால் மூடியே கிடந்தது. முதல் கீமோவுக்குப் பிறகு சீப்பில் கொத்தாக முடி வந்த அன்று அவளே மூடியது அது. ஆனால் இன்று அதைப் பார்த்த போது அழுகை வரவில்லை.

அன்றிரவு, பல மாதங்களுக்குப் பிறகு நிம்மதியாகத் தூங்கினாள் ஸ்ரேயா.

★★★★★

ஆறு சைக்கிள் கீமோ முடிந்த பிறகு எடுத்த மேமோகிராம் மற்றும் எம்ஆர்ஐ ரிப்போர்ட் விக்ரமனின் மேசையில் இருந்தது. அதை இரண்டு முறை படித்தவன் பெருமூச்சு விட்டான்.

நான்கு சென்டிமீட்டராக இருந்த கட்டி ஒன்றரை சென்டிமீட்டராகச் சுருங்கியிருந்தது. நல்ல செய்தி தான். ஆனால் அதைச் சுற்றிலும் பரவலாகச் சின்னச் சின்ன கால்சியம் துகள்கள் தெரிந்தன. டாக்டர் ரமாவுக்கு இரண்டு முறை போன் செய்தான். ரேடியாலஜிஸ்ட்டிடமும் இன்னொரு முறை கேட்டுத் தெரிந்து கொண்டான். எத்தனை முறை பார்த்தாலும் அந்தப் படங்கள் ஒரே பதிலைத் தான் சொன்னன.

நள்ளிரவில் இரண்டு டம்ளர் கஷாயத்துடன் வந்து அவன் பக்கத்தில் அமர்ந்தாள் நியதி. தூங்காமல் இருப்பவர்களுக்குக் கஷாயம் என்பது தேவராஜனின் சட்டம். அவள் எதுவும் கேட்கவில்லை. அவனும் எதுவும் சொல்லவில்லை. அந்த இருட்டில் இருவரும் அமைதியாகக் கஷாயத்தைக் குடித்து முடித்தார்கள்.

மறுநாள் மதியம் ஸ்ரேயாவின் குடும்பம் மருத்துவமனைக்கு வந்து சேர்ந்தது.

“சொல்லுங்க டாக்டர்” என்றார் தமயந்தி. அருகில் தாமோதரன். எதிரில் ஸ்ரேயா. அவள் தலையில், மூன்றாவது முறையாகச் சரி செய்து கட்டிய ஒரு புது சில்க் ஸ்கார்ஃப்.

“கீமோ நல்லா வேலை செய்திருக்கு. கட்டி சுருங்கியிருக்கு. ஆனா அந்தக் கட்டியைச் சுத்தி மைக்ரோகால்சிஃபிகேஷன்ஸ் பரவலா இருக்கு. முழு ப்ரெஸ்ட்டையும் ரிமூவ் பண்றது தான் சேஃப். கூடவே அக்குள்ல இருக்கிற லிம்ஃப் நோட்ஸையும் டெஸ்ட் பண்ணணும். வேணும்னா அதே சர்ஜரில ப்ரெஸ்ட்டை ரீகன்ஸ்ட்ரக்ட் பண்ணவும் ஆப்ஷன் இருக்கு.”

அறையில் ஒரு நொடி மயான அமைதி. “ப்ரெஸ்ட்டை… ரிமூவ் பண்ணணுமா?” தமயந்தியின் கேள்வி நடுக்கத்துடன் வந்தது.

“ஆமா ஆன்ட்டி. இது உயிரைக் காப்பாத்த…”

“எங்க பொண்ணுக்கு இருபத்தெட்டு வயசு தான் டாக்டர்! கல்யாணம் ஆகி மூணு வருஷம் கூட ஆகலை. இனிமேல் தான் குழந்தை பிறக்கணும்.” ஒரு தாயாக அவரது ஆதங்கத்தை கொட்டினார்.

“தமா.” மனைவியின் கையைப் பிடித்தார் தாமோதரன்.

திடீரென்று சிரித்தாள் ஸ்ரேயா. அது ஒரு விசித்திரமான சிரிப்பு.

“வெரி ஃபன்னி. நான் ஒரு ஃபேஷன் டிசைனர் டாக்டர். என் பாடி தான் என் கேன்வாஸ். நான் டிசைன் பண்ற ஒவ்வொரு டிரெஸ்ஸும் முதல்ல என் மேல தான் பிறக்கும். இப்போ அந்தக் கேன்வாஸ்லயே ஒரு பகுதியை எடுக்கப் போறேன்னு சொல்றீங்க. அதுக்கு அப்புறம் நான் எதைப் போட்டு, எதைப் பார்ப்பேன்?”

“ஸ்ரேயா…”

“முடியாது.” எழுந்து நின்றாள் அவள். அவள் குரலில் இருந்த நடுக்கம் மறைந்து ஒரு பிடிவாதம் குடியேறியது. “நான் ஒத்துக்க மாட்டேன். நான் தான் முடிவு பண்ணுவேன். கட்டி சுருங்கியிருக்குன்னு நீங்களே சொன்னீங்களே. அப்போ கீமோவையே இன்னும் கொஞ்சம் கூட்டிக்கலாமே.”

“அது சரியான முடிவா இருக்காது ஸ்ரேயா. நோய் திரும்ப வர்ற சான்ஸ் அதிகமாகும்.”

“அது என் ரிஸ்க்.”

கதவைப் படாரென்று சாத்திக் கொண்டு வெளியேறினாள் அவள். ‘ஸ்ரேயா!’ என்றபடி பின்னால் ஓடினார் தமயந்தி. சட்டைப் பையிலிருந்து ஒரு கைக்குட்டையை எடுத்து நெற்றியைத் துடைத்தபடி எழுந்தார் தாமோதரன். அவர் கண்கள் விக்ரமனிடம் மன்னிப்புக் கேட்பது போலிருந்தன.

“பரவாயில்லை அங்கிள். இது சட்டுன்னு ஏத்துக்கக் கூடிய விஷயம் இல்லை. அவங்க யோசிக்க டைம் எடுத்துக்கட்டும். என்ன சந்தேகம் இருந்தாலும் எப்போ வேணும்னாலும் வந்து கேளுங்க” என்று அவரை வழியனுப்பி வைத்தான் விக்ரமன்.

அதன் பிறகு சில நொடிகள் அவன் அசையவே இல்லை. மருந்து எழுதுவது இந்த வேலையின் கடினமான பகுதி அல்ல. ஒருவருடைய உடலில் ஒரு பாகத்தையே எடுக்க வேண்டும் என்று சொல்ல வேண்டிய அந்த நிமிடம் தான் மிகக் கடினமானது. சொல்வதோடு ஒரு டாக்டரின் வேலை முடிந்து விடுகிறது. முடிவு அவளுடையது.

★★★★★

தந்தையின் ஃபோன் வந்ததும், குழந்தைகளை மாமியாரிடம் விட்டு விட்டுக் கிளம்பி வந்தாள் ஸ்வேதா. ஹாலில் தமயந்தியின் அழுகையும் தாமோதரனின் சமாதானமும் இன்னும் ஓயவில்லை. மதியம் வந்ததிலிருந்து ஸ்ரேயா தன் அறையை விட்டு வெளியே வரவில்லை என்றார்கள்.

இரண்டு டம்ளர் டீயுடன் மாடியேறிய ஸ்வேதா, கதவை மெல்லத் தட்டி விட்டு உள்ளே நுழைந்தாள். ஜன்னலோரம் அமர்ந்திருந்த ஸ்ரேயா திரும்பிக் கூடப் பார்க்கவில்லை.

“நீயும் அட்வைஸ் பண்ண வந்தியா?”

“இல்லை. டீ கொண்டு வந்தேன்.”

ஒரு டம்ளரை அவள் அருகில் வைத்து விட்டுக் கட்டிலின் ஓரத்தில் அமர்ந்தாள் ஸ்வேதா. சிறு வயதில் இருந்தே இந்த அறைக்குள் அவள் அதிகம் வந்ததில்லை. வந்தாலும் இப்படி உட்கார்ந்ததில்லை. சில நிமிடங்கள் இருவரும் எதுவும் பேசவில்லை.

மேசையில் திறந்து கிடந்த ஸ்கெட்ச் புத்தகத்தின் மீது ஸ்வேதாவின் பார்வை விழுந்தது. “இது நீ வரைஞ்சதா? கையில இந்தத் ஓபன் கட் எதுக்கு?”

“ஐவி போடும் போது ஸ்லீவை மடக்க முடியாது. அதுக்கு.”

“நான் ஹாஸ்பிடல்ல கிடந்தப்போ இப்படி ஒண்ணு இருந்திருந்தா எவ்வளவு நல்லா இருந்திருக்கும்!” என்று அந்தப் பக்கத்தைத் தடவிப் பார்த்தாள் ஸ்வேதா.

ஸ்ரேயா மெல்லத் திரும்பினாள். “அன்னைக்கு நான் உன்னைப் பார்க்கக் கூட வரலை ஸ்வேதா . இன்னொரு குழந்தை பிறக்காமலா போயிடும்னு வேற சொன்னேன்.”

“ஞாபகம் இருக்கு. அப்போ கோபம் வந்தது. இப்போ இல்லை” ஸ்வேதாவின் குரலில் குற்றச்சாட்டு இல்லை.

“எனக்கு இப்போ தான் புரியுது” என்ற ஸ்ரேயாவின் கைகள் டீ டம்ளரை இறுகப் பற்றின. “எனக்கு ப்ரெஸ்ட்டை எடுக்கிறதுல கூட அவ்வளவு பயம் இல்லை ஸ்வேதா . ஆதித்யாவை நினைச்சா தான் பயமா இருக்கு. எனக்கு இப்படின்னு சொன்னப்போ லெட்ஸ் நாட் மேக் இட் எ பிக் டீல்னு சொன்னவன் அவன். ஷோல நான் மயங்கி விழுந்த அன்னைக்குக் கூட, ஷோ முடிஞ்சு இரண்டு மணி நேரம் கழிச்சு தான் ஹாஸ்பிடலுக்கு வந்தான். இதுக்கு அப்புறம் அவன் என்னைத் திரும்பிப் பார்ப்பானான்னே தெரியலை. என்னால.. என்னால அவனை விட்டு இருக்க முடியாது.”

ஸ்வேதா உடனே பதில் சொல்லவில்லை. “அவரைப் பத்தி எனக்குத் தெரியாது ஸ்ரேயா. தெரியாததைப் பத்தி நான் என்ன சொல்ல? உன்னைப் பத்தி தான் நான் பேச முடியும். எனக்குத் தெரிஞ்ச என் தங்கை ஸ்ரேயா, தைரியமான பொண்ணு. ரிஸ்க் எடுக்கறதெல்லாம் அவளுக்கு ரஸ்க் சாப்பிடற மாதிரி.”

ஸ்ரேயாவின் முகத்தில் லேசான சிரிப்பு எட்டிப் பார்த்தது. இந்த முறை அவள் முகத்தைத் திருப்பிக் கொள்ளவில்லை. “ஆனால், இப்போ எனக்குப் பயமா இருக்கு ஸ்வேதா.”

“இன்னைக்கே எதுவும் முடிவு பண்ண வேண்டாம். நல்லா யோசி. டாக்டர் கிட்ட இன்னும் என்ன கேட்கணுமோ எழுதி வை, நானும் கூட வரேன்.” காலி டம்ளர்களை எடுத்துக் கொண்டு எழுந்தாள் ஸ்வேதா.

“இன்னைக்கு ராத்திரி நான் இங்கே தான் இருக்கேன். என் பழைய ரூம்ல. தூக்கம் வரலைன்னா கதவைத் தட்டு.”

“குழந்தைங்க?”

“மாதுவும் அத்தையும் பார்த்துப்பாங்க. ஒரு நாள் நான் இல்லாம அவங்களும் கொஞ்சம் கஷ்டப்படட்டும்.”

அழுகைக்கு நடுவே மெல்லச் சிரித்தாள் ஸ்ரேயா. ஒரே வீட்டில் பிறந்து வளர்ந்தும், இத்தனை வருடங்களில் ஸ்வேதாவும் தங்கையும் இப்படி அமர்ந்து பேசியது அதுவே முதல் முறை.

அன்றிரவு தமயந்தியின் வீட்டில் எல்லோரும் அவரவர் அறையில் அமைதியாக இருந்தார்கள்.

காலை 5.50.

கதவு மணி ஒலித்ததும் எரிச்சலுடன் எழுந்து வந்து கதவைத் திறந்தார் தமயந்தி. வாசலில் இரண்டு பெரிய பெட்டிகளுடன் நின்றிருந்தான் ஆதித்யா. ஜெட்லாகையும் மீறிய ஒரு தீவிரம் அவன் கண்களில் தெரிந்தது.

“ஆன்ட்டி… ஸாரி. ஸ்ரேயா எங்கே?”

“இப்போ தான் வழி தெரிஞ்சுதா?” தமயந்தியின் குரலில் கூர்மை இருந்தது.

“நீங்க கோபப்படறது சரி தான்.” தலையைக் குனிந்தான் அவன். அந்தப் பணிவை எதிர்பார்க்காத தமயந்தி ஒரு கணம் வாயடைத்துப் போனார். பின்னால் வந்த ஸ்வேதா, “மேல இருக்கா” என்று மாடியைக் கை காட்டி விட்டு, அம்மாவை உள்ளே அழைத்துப் போனாள்.

மாடியில் ஜன்னலோரம் நின்றிருந்த ஸ்ரேயாவின் காதில் காரின் சத்தம் விழுந்திருந்தது. அவன் வருவான் என்று நம்பாதது போலவே, வந்து விட்டதையும் நம்ப மறுத்தாள் அவள். அறைக்குள் வந்தவனை அவள் திரும்பிப் பார்க்கவில்லை. அருகில் வந்தவன், இரு கைகளாலும் அவள் முகத்தைத் தன் பக்கம் திருப்பினான்.

“நாலு வாரத்துல வரேன்னு சொல்லி உன்னை அனுப்பினேன். ஆறு மாசம் ஆகிடுச்சு” என்றான் அவன் தாழ்ந்த குரலில்.

“பரவாயில்லையே, கணக்கெல்லாம் வச்சிருக்க.”

அந்தக் குத்தலுக்கு அவன் பதில் சொல்லவில்லை. “ஸாரி. இந்தத் தடவை ஒன்வே டிக்கெட் தான். பாரிஸ் வேலையை பார்ட்னர் கிட்ட கொடுத்துட்டேன். அடுத்த ஆறு மாசம் நான் எங்கேயும் போறதா இல்லை.”

“அப்புறம்?”

“அப்புறம் என்னன்னு நீ தான் சொல்லணும்.”

அவள் எதுவும் பேசவில்லை. ஆனால் முதல் முறையாக அவன் கையைத் தட்டி விடவும் இல்லை.

அன்று மதியம் தானாகவே ஹாஸ்பிடலுக்கு வந்து விக்ரமனைச் சந்தித்தான் ஆதித்யா. நியூயார்க்கில் ஒரு ஆன்காலஜிஸ்ட்டிடம் செகண்ட் ஒபினியனும் வாங்கி வந்திருந்தான். அவரும் இதே சிகிச்சையைத் தான் சொல்லியிருந்தார். ரெக்கரன்ஸ் ரிஸ்க், ரீகன்ஸ்ட்ரக்ஷன், சர்ஜரிக்குப் பிறகு கவனிக்க வேண்டியவை என்று ஒவ்வொன்றாகக் கேட்டுத் தன் நோட்டில் குறித்துக் கொண்டான் அவன். ஸ்ரேயா சொன்ன கதையில் வந்த ஆளைப் போல அவன் தெரியவில்லை.

“இவ்வளவு நாள் நான் அவ பக்கத்துல இல்லை டாக்டர். இப்போ என்ன பண்ணணும்னு கூட எனக்குத் தெரியலை.”

“கூட இருங்க. அது போதும்” என்றான் விக்ரமன்.

மறுநாள் மாலை வெளியே போய் விட்டுத் திரும்பி வந்தவனைப் பார்த்து அந்த வீடே திகைத்து நின்றது. அவன் தலை மொட்டையடிக்கப்பட்டிருந்தது.

“இது என்ன கோலம்?” என்றாள் ஸ்ரேயா.

“சும்மா தான். உனக்கு மட்டும் தான் ஸ்கார்ஃப் கட்டத் தெரியுமா?” என்று தோளைக் குலுக்கினான் அவன்.

சிரிப்பை அடக்க முயன்று தோற்றுப் போனாள் ஸ்ரேயா. அன்றிரவு, சாப்பாட்டு மேசையில் எல்லோரும் இருக்கும் போது அவளே சொன்னாள். “சர்ஜரிக்கு ஒத்துக்கிறேன். ரீகன்ஸ்ட்ரக்ஷன் இப்போ வேண்டாம். அதை அப்புறம் யோசிக்கலாம்.”

★★★★★

சர்ஜரி நாள். ஸ்ட்ரெச்சரில் ஆபரேஷன் தியேட்டரை நோக்கி அழைத்துச் செல்லப்பட்ட ஸ்ரேயாவின் கையைப் பிடித்தபடி கூடவே நடந்தான் ஆதித்யா.

“இங்கேயே இரு” என்றாள் அவள் மெல்ல.

“இங்கே தான் இருப்பேன்.”

வெயிட்டிங் ஹாலில் ஜெபமாலையை உருட்டிக் கொண்டிருந்த தமயந்தி, சிறிது நேரம் கழித்து ஆதித்யாவின் அருகில் வந்து அமர்ந்தார்.

“திரும்ப ஓடிட மாட்டியே?”

“மாட்டேன் ஆன்ட்டி. ஓடினா நீங்க என்னை மன்னிக்கவே வேண்டாம்.”

“நான் இன்னும் உன்னை நம்பலை. ஆனா என் பொண்ணு நம்பறா. இப்போதைக்கு அது போதும்.”

நான்கு மணி நேரம் கழித்து, டாக்டர் ரமாவுடன் தியேட்டரை விட்டு வெளியே வந்தான் விக்ரமன். “சர்ஜரி நல்லபடியா முடிஞ்சது. கட்டியை முழுசா எடுத்தாச்சு. லிம்ஃப் நோட்ஸை லேபுக்கு அனுப்பியிருக்கோம். ரிப்போர்ட் வர நாலைஞ்சு நாள் ஆகும்.”

கண்களை மூடிக் கைகூப்பினார் தமயந்தி. ஆதித்யாவின் தோளில் கை வைத்தார் தாமோதரன். அவன் எதுவும் பேசவில்லை. கண்கள் மட்டும் கலங்கியிருந்தன.

திரும்பி நடக்கப் போன விக்ரமனைத் தயக்கத்துடன் நிறுத்தினார் தமயந்தி. “தம்பி, ஒண்ணு கேட்கணும்.” அவர் குரல் தாழ்ந்தது. “இனிமே அவளுக்குக் குழந்தை பிறக்குமா? பிறந்தா… பால் கொடுக்க முடியுமா?”

மகள் பிழைத்து விட்டாள் என்று தெரிந்த அடுத்த நிமிடமே அந்தத் தாயின் மனம் பேரக் குழந்தையைத் தேடிப் போயிருந்தது.

“நிச்சயமா வாய்ப்பு இருக்கு ஆன்ட்டி. அவ உடம்பு முழுசா தேறட்டும். அதுக்கு அப்புறம் கொஞ்ச நாள் பொறுமையா இருந்தா போதும். பால் கொடுக்கவும் முடியும். இன்னொரு பக்கம் இருக்கே, ஒரு குழந்தைக்கு அதுவே போதும்.”

“அது போதும் தம்பி. இதைத் தான் தெரிஞ்சுக்கணும்னு நினைச்சேன்.” முந்தானையால் கண்களைத் துடைத்துக் கொண்டார் தமயந்தி.

மாலையில் கண் விழித்த ஸ்ரேயா அறையைச் சுற்றிப் பார்த்தாள். நாற்காலியில், அவளது ஸ்கெட்ச் புத்தகத்தை மடியில் வைத்தபடி தூங்கிப் போயிருந்தான் ஆதித்யா. அவன் மொட்டைத் தலையில், கீமோவின் போது அவள் கட்டியிருந்த அதே அடர் நீல ஜரி ஸ்கார்ஃப் இருந்தது.

“இன்னும் இங்கே தான் இருக்கியா?” அவள் குரல் கரகரத்தது.

தூக்கம் கலைந்தவன் அவள் கையைப் பிடித்துக் கொண்டான். அவள் பார்வை அவன் தலையில் நிலைத்தது. “என் ஸ்கார்ஃப்…”

“உன் டிசைன். எனக்கும் செட் ஆகுது.”

சிரித்தாள் ஸ்ரேயா. சிரிக்கும் போதே கண்கள் நிறைந்தன.

“இன்னும் எவ்வளவு நாளைக்கு இப்படி இருப்ப?”

“நீ சொல்ற வரைக்கும்.” அவள் பதிலேதும் சொல்லவில்லை. அவள் கையில் முத்தமிட்டான் அவன்.

அன்றிரவு வீட்டுக்குத் திரும்பும் வழியில் அமைதியாக காரை ஓட்டிக் கொண்டிருந்தான் விக்ரமன். ஜன்னல் வழியே வெளியே பார்த்துக் கொண்டிருந்த நியதி, “ஸ்ரேயா எப்படி இருக்கா?” என்று கேட்டாள்.

“நல்லா இருக்கா. ஆதித்யா பக்கத்துலயே இருக்கான்.” சற்று நிறுத்தி விட்டுச் சொன்னான் அவன். “சிலருக்கு அவங்கவங்க மனசுல என்ன இருக்குன்னு லேட்டா தான் புரியும். ஆனா புரிஞ்சுட்டா போதும்.”

சிக்னலில் காரை நிறுத்தியவன் தொடர்ந்தான். “ஆன்ட்டி தியேட்டர் வாசல்ல என்னை நிறுத்தி ஒண்ணு கேட்டாங்க நிதி. அவளுக்குக் குழந்தை பிறக்குமா, பிறந்தா பால் கொடுக்க முடியுமான்னு.”

“சர்ஜரி முடிஞ்ச உடனேயேவா?”

“ம்ம். பொண்ணு பிழைச்சுட்டான்னு தெரிஞ்ச அடுத்த நிமிஷமே பேரக் குழந்தையைப் பத்தி யோசிக்கிறாங்க. அம்மாக்கள்னா அப்படித் தான் போல.”

நியதி எதுவும் சொல்லவில்லை. பக்கத்தில் வந்து நின்ற ஸ்கூட்டரின் பின் இருக்கையில் அமர்ந்திருந்த ஒரு பெண்ணின் தோளில் சாய்ந்து தூங்கிக் கொண்டிருந்தது ஒரு குழந்தை. தூக்கத்திலும் அதன் சின்னக் கை அம்மாவின் சேலைத் தலைப்பை இறுகப் பற்றியிருந்தது.

சிக்னல் பச்சையாக மாறி, கார் நகர்ந்த பிறகும் அவள் பார்வை அந்தச் சின்னக் கையை விட்டு விலகவில்லை. தினமும் எத்தனையோ குழந்தைகளை இந்த உலகுக்கு வரவேற்கும் அவள் கைகள், அன்று ஏனோ வெறுமையாகத் தோன்றின.

அதை அவள் விக்ரமனிடம் சொல்லவில்லை. ஆனால் அன்றிரவு அவள் மனதில் ஒரே ஒரு எண்ணம் தான் இருந்தது. தனக்கும் ஒரு குழந்தை வேண்டும்.
 

Author: SudhaSri
Article Title: மழைக்கு ஏங்கிய மாந்தளிரே -8
Source URL: Nectar Novels-https://nectarnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
  • Love
Reactions: Goms

Goms

Member
Apr 28, 2025
96
15
18
Chennai
Breast cancer patient கடந்துவர சூழ்நிலையை அழகா சொல்லி இருக்கீங்க.
புரிந்துகொள்வதற்கும், பாதுகாக்கவும், ஆறுதல் சொல்வதற்கும் ஆட்கள் இருந்தால் தன்னாலே மீண்டு வரலாம்.
 
  • Love
Reactions: SudhaSri