• ஹாய் மக்களே! நம் Nectar Novels தளத்திற்கு நல்வரவு🙏😍😍 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள் nectarnovels.ss@gmail.com 🩷 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...👇 வேதா விஷால் & அனன்யா🙏💖

லண்டன் போறான் என் பையன் - சுஶ்ரீ

siteadmin

Administrator
Staff member
Feb 3, 2026
45
4
8
chennai
லண்டன் போறான் என் பையன்
--சுஶ்ரீ


வருஷம் 2004, எங்க ஒரே பையன் ஹரீஷ்,கிண்டி இன்ஜினியரிங்
காலேஜ்ல கம்ப்யூட்டர் சயின்ஸ் கடேசி வருஷம் படிக்கறப்பவே
காம்பஸ் இன்டர்வ்யூல இவனை தேர்ந்தெடுத்து வேலைக்கு சேத்துண்டுட்டா.இப்ப டிகிரி முடிச்ச கையோட லண்டன் போறான்
15 நாள்ல, 6 மாசம் டிரெயினிங் அங்கே. டிரெயினிங் 6 மாசம்,
போறதுக்கே அவ்வளவு அமர்க்களம் , துபாய் வழியா லண்டன்
போற பிரிட்டிஷ் ஏர்வேஸ் ஃபிளைட்.

என் மனைவி உல்லன் வாங்கி ஸ்வெட்டர் போட ஆரம்பிச்சிட்டா,
ரொம்ப குளிருமாமே.நான் ஒண்ணும் சொல்லலை, ஊட்டி போறப்ப
என் மனைவி போட்டு கொடுத்த ஸ்வெட்டர் ஞாபகம் வந்தது
அதுக்குள்ளே நான் போகணும்னா தனியா போக முடியாது,
2 பேர் கூட இருந்தால்தான் நுழைய முடியும்,மேல் வயிறு
வரை ரவிக்கை மாதிரி இருக்கும் மெதுவா கையை தூக்கினா
தொப்புள் தெரியும்,கொஞ்சம் வேகமா கையை தூக்கினா
பட்டன்லாம் தெறிச்சுடும்னு பயம்.

கலரோ மிட்டாய் ஆரஞ்சு எங்கே இருந்துதான் கிடைச்சதோ.
ஆனா மனைவி ஆசையாக போட்டுக் கொடுத்ததாச்சே, போட்டோ
எடுத்து அனுப்பணுமே ஸ்வெட்டர் போட்டுண்டு( இல்லைனா என்
ஃபோட்டோ ஹால்ல தொங்குமோனு பயம்)

அந்த ஸ்வெட்டரை போட்டுண்டு ரோஸ் கார்டன் சுத்தி வந்தது
ஞாபகம் வந்தது. அங்கே யாரும் ரோஜா பாக்கலை ,என்னை
பாக்கறதும் முகத்தை திருப்பிண்டு சிரிக்கறதும் என் செலவுல
ஊட்டி நகர மக்கள் எல்லாரும் மகிழ்ச்சியா இருந்தாங்க .ஏதோ
நம்மாலான பொது நல சேவைனு நானும் கேணத்தனமா
சிரிச்சிண்டே சுத்தி வந்தேன்.

போட்டோகிராபர் ஒத்தன் என்னைச் சுத்தி சுத்தி வந்தான்,
சார் ஒரு ஃபோட்டோ ஒண்ணே ஒண்ணு போணி சார்னு.
சரி ஒழினு ஒரு ஃபோட்டோ எடுத்தேன்.லேக் பக்கம் சன் செட்
எடுக்கறேன்னு ரெண்டு கையையும் தூக்க வச்சு கைக்கு நடுவுல
சூரியனாம்.எங்களை சுத்தி ஒரே கூட்டம் சில்க் ஸ்மிதா
ஷூட்டிங்னு யாரோ கிளப்பி விட்டுட்டான்.கையை தூக்கிட்டு
நான் நிக்க,கைக்கு நடுவுல சூரியன் வரதுக்காக கேமராவும்
கையுமா அவன் நிக்க,தொந்தியும் தொப்புளும் காட்சி பொருளாக,
சுத்தி ஒரு கூட்டம்.

இதுல ஒத்தன் கைதட்டல் விசிலோட.., கமெண்ட்ஸ் வேறே,
”என்னடா சில்க் ஸ்மிதா கிராப் வச்சிருக்கா? ஆனாலும் ரொம்ப
செக்ஸ் பாம்தான். கூட போட்டோ எடுத்துக்க விடுவாளா?”
அவசரமா கைப்பைல இருந்த டவலை சுத்திண்டு ஆட்டோ
பிடிச்சு ஹோட்டலுக்கு ஓடினேன்.படு பாவிங்க ஆம்பளை
பொம்பளை வித்யாசம் கூடவா தெரியாது, கைல மாட்டியிருந்தா
என் கதி என்ன ஆயிருக்கும்.பாவம் நிஜ சில்க் ஸ்மிதா
இந்த ஃபேன்ஸ் கிட்ட மாட்டிண்டு தினம் தினம் என்ன
அவஸ்தை படறாங்களோ.

அந்த சன் செட் ஃபோட்டோ இன்னும் ஒரு பழைய டைரில
ஒளிச்சு வச்சிருக்கேன். யாருக்கும் தெரியாம எப்பவாவது
எடுத்துப் பாப்பேன்,அசப்புல பாத்தா சிலுக்கு மாதிரி இருக்கேனோ?
சரி இந்த ஊட்டி கதை மாதிரி எத்தனையோ இருக்கு, அதை
அப்பறம் பேசலாம், இப்ப பையனை லண்டனுக்கு அனுப்பணுமே
முதல்ல அந்த அமக்களத்தை பார்ப்போம்.

பையன் என்னை விட புத்திசாலி, அம்மா ஸ்வெட்டர் போட
ஆரம்பிச்ச உடனே ( பின்க் கலர் உல்லன்) “அங்கே ஸ்வட்டர்
போட முடியாதம்மா, பனியனுக்கு மேலே தெர்மல்ஸ், ஷர்ட்,
ஜாக்கெட் அவ்வளவுதான், சாரிம்மா இதை அப்பா சைசுக்கு போட்டுடும்மானு”என்னை மாட்டி விட்டுட்டான்.

என் மனைவியோ உடனே,”சரிதான் போடா உங்கப்பாவுக்கு
கொடுத்து வச்சிருக்கு,எங்களுக்கு லண்டன் வர கொடுப்பினை
இருந்தா அப்பா இதை போட்டுண்டு லண்டன் சுத்தட்டும்.”

ஐயோ ஊட்டில சிலுக்கு, லண்டன்ல ஜீனா லோலா பிரிகிடா
மாதிரி சுத்தணுமா இப்பவே குலை நடுங்குதே.
மெதுவா தெர்மல் இன்னர்ஸ், பார்மல் ஷர்ட்ஸ், பேன்ட், டை, ஷூஸ்,சாக்ஸ்,ஜாக்கெட்னு பர்சேஸ் முடிஞ்சது.

இப்ப அடுத்து சாப்பாடு விஷயம். “டே ஹரீஷ் ஹார்லிக்ஸ்
பாட்டில் நிறைய புளிக் காய்ச்சல் பண்ணி கொடுத்துடறேன்,
பருப்பு பொடி, ஆவக்கா ஊறுகாய், வடாம்.அங்கே அரிசி
கிடைக்குமோன்னோ, சின்ன குக்கர், இந்த வாணலி மட்டும்
வச்சிக்கோ”

“அம்மா இப்பவே பெரிய பெட்டி நிறைஞ்சாச்சும்மா, 20 கிலோ
தான் அனுமதிப்பா, நீ பாட்டுக்கு அடைக்காதே”.

“போடா உங்கப்பா பாத்துப்பார் அதை, ஏன்னா சீமாச்சுவோட
மச்சினர் பையன் ஏர்போர்ட்லதானே வேலை பாக்கறான்
நீங்க கூட போய் அனுப்பிடுங்கோ. நாம எத்தனை செஞ்சிருக்கோம்
அந்த சீமாச்சுவுக்கு.”

யோசிச்சு பார்த்தேன் நாம என்ன செஞ்சோம்னு, இந்த
28 வருஷத்தில 3 தடவை வந்திருப்பான் இப்ப முகம் கூட
ஞாபகம் இல்லை, மூணு தடவையும் கொள கொளனு
ஒரு சேமியா உப்புமாதான் பாவம் கஷ்டப்பட்டு முழுங்கிட்டு,
என் வொய்ப் ஸ்பெஷலா கொடுத்த டிகிரி காபியையும்
குடிச்சிட்டு கஷ்டப் பட்டு சிரிச்ச முகமா வச்சிப்பான்,பாக்க
பரிதாபமா இருக்கும்.

டிகிரி காபின்னா என்னவா? 7,8 டிகிரி சூட்ல ஒரு முழுங்குல குடிச்சிடலாம்,அதுதான், நீங்க பாட்டுக்கு கும்பகோணம்
டிகிரி காபினு நினைச்சு புறப்பட்டு வந்தா நான் பொறுப்பில்லை.

ஐய்யோ மெயின் சப்ஜெக்டை விட்டுட்டு எங்கேயோ
போயிட்டோமே. நாளைக்கு கார்த்தாலை சீக்கிரம் புறப்படணும்
ஏர்போர்ட்டுக்கு, அலாரம் காலம்பற 4 மணிக்கு வச்சிருங்கோனு
7 தடவை சொல்லிட்டா இது வரை என் பார்யாள்.
ஃபிளைட் டயம் ராத்திரி 11.50. எம கண்டம், ராகு காலம்
இது போக அக்கம் பக்கத்தார் எழுந்து கண்ணு போடறதுக்கு
முன்னால ஆத்தை விட்டு கிளம்பிடணும்ன்றதுதான்
அவளோட பெரிய பிளான்.

“டாக்சிக்கு சொல்லியாச்சா, அவன் பாட்டுக்கு மொட்டைத்
தலை டாக்சி கொண்டு வந்துடப்போறான். மேல கேரியர்
வேணும்னு சொன்னேளா? ரெண்டு பெரிய சூட்கேஸ்
வைக்கணும்.உங்க அக்காவுக்கு முதல்ல சொல்லி
இருப்பீங்களே, கொள்ளிக் கண்ணை வச்சிண்டு வந்து நின்னுடப்
போறது அது பாட்டுக்கு.”

அவ சொல்லி முடிக்கறதுக்குள்ளே காலிங் பெல் சத்தம்,
போய் கதவைத் திறந்தேன்,அக்காதான், வாக்கானு கூப்டேன்,

எனக்கு முன்னால ஓடி வந்த என் மனைவி “வாங்கோ
எங்கே மருமானுக்கு ஆசீர்வாதம் பண்ண வராம விட்டுறப்
போறா போன் போடுங்கோனு உங்க தம்பி கிட்ட இப்பதான்
சொல்லிண்டே இருந்தேன்.”

எனக்கு பேச வாய் வரலை.இந்த பெண்களே அதி புத்திசாலிகள்,
அவங்களுக்கு முன்னால நாம ஒண்ணும் இல்லை.

அக்கா விடுவாளா,” நீ கூப்பிடமா இருந்தா மட்டும்
விட்டுறுவேனா, நானா வர மாட்டேன்?சரி குழந்தை எங்கே ,
வந்து மூணு பேரும் கால்ல விழுந்து ஆசீர்வாதம்
வாங்கிக்கோங்கோ, நான் போகணும் சீக்கிரம் ஆத்துல போட்டது
போட்டபடி வந்துருக்கேன்”

மூணு பேரும் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கிண்டோம்.
“சமத்தா போயிட்டு வாடா குழந்தை, வரப்ப அங்கே பெல்ஜியம்
காபி நன்னா இருக்கும், 2 கிலோவா வாங்கிண்டுவா, சாக்லேட், பெர்ப்யூமெல்லாம் நான் சொல்லவே வேண்டாம், நீயே
அத்தைக்கு ஆசையா வாங்கிண்டு வருவே வரட்டுமா உங்க
அத்திம்பேர் வரப்ப நான் ஆத்துல இல்லைனா தாம் தூம்னு
குதிப்பார்.”சொல்லிண்டே அக்கா புறப்பட்டுட்டா.பாவம் என்
மேல அக்காவுக்கு ரொம்ப பிரியம்.

ராத்திரி யாரும் சரியா தூங்கவே இல்லை, ஒவ்வொருத்தருக்கும்
வேற, வேற டென்ஷன்.

என் மனைவிக்கு ஒரு பழக்கம் எப்பவும் உண்டு, 4 மணிக்கு
அலாரம் வச்சா 3 மணில இருந்து 10 நிமிஷத்துக்கு ஒரு
தடவை கடிகாரம் பாப்பா, பாவம் அந்த கடிகாரம் , ஒரு தடவை
கூட அலாரம் அடிக்க விட்டதில்லை, 3.55க்கு ஆஃப் பண்ணிடுவா.
இன்னிக்கும் அதே கதைதான்.

எழுந்து பல் தேச்சு குளிச்சு, இட்லி பாத்திரம் ஸ்டவ்ல ஏத்திட்டு,
டிகாஷனுக்கு பில்டர்ல ரெடி பண்ணிட்டு என்னை எழுப்பறா
“டாக்சி காரனுக்கு ஞாபகப் படுத்துங்கோ தூங்கிடப் போறான்.”

நான் ஃபோன் பண்ணி அவன் கிட்ட வாங்கி கட்டிண்டேன்.
”ஏன் சார் 6.30 மணி டாக்சிக்கு 4.30க்கே எழுப்பறே, ராத்திரி
பூரா என் பொண்டாட்டி நை நைனு பிடுங்கல் காலைல
நீ, வரேன் சார் வை போனை, தூங்க விடு மனுஷனை.”
பேசாம ஃபோனை வைத்தேன். இட்லி , நல்லெண்ணை
எள்ளு மிளகா பொடி தடவி தூக்கு பாத்திரத்தில புகுந்தது.
4 டம்ளர் காபி பிளாஸ்க்ல( ஏர் போர்ட்ல காபி 120 ரூபாயாம்,
இட்லி 70 ரூபாயாம்) ரொப்பியாச்சு.

6.30 மணி “இந்த லக்கேஜ்லாம் எடுத்துண்டு முத்ல்ல நீங்க
இறங்குங்கோ 3 பேரா போக வேண்டாம் எல்லாம் டாக்சில
ஏத்துங்கோ நானும் குழந்தையும் ஸ்வாமி நமஸ்காரம்
பண்ணிட்டு கீழே வரோம்”

எங்க ஃப்ளாட் 6வது மாடி.லிஃப்ட்ல எல்லா லக்கேஜையும்
திணிச்சு தனி ஒருவனா கீழே போனேன்.டாக்சிக்காரன் தயாரா நின்னிட்டிருந்தான் என்னையே விரோதமா பாத்த படி.ஒரு
வழியா எல்லாரும் ஏறினப்பறம் டாக்சி புறப்பட்டது இங்கே
இருந்து சத்ரபதி சிவாஜி ஏர் போர்ட் 45 கிலோ மீட்டர்
(நாங்க இருக்கறது கல்யாண்)1.30 மணி நேரம் ஆயிடும் போய்
சேர.15 நிமிஷம் கல்யாண் சிடி தாண்டி ஹைவே வந்தவுடனே
எப்பவும் போல மனைவிக்கு சந்தேகம் கதவை பூட்டினோமா,
எல்லா லக்கேஜும் டாக்சில ஏத்தினோமா, இன்னும்
“ஏண்டா குழந்தை பாஸ்போர்ட், பிளைட் டிக்கெட்
எடுத்துண்டயோ?”

“ஏம்மா இப்ப கேட்டு என்னம்மா பிரயோஜனம், பாதி தூரம்
வந்தவுடனே, ஆத்திலயே கேக்க வேண்டாமா இதை,
ஆனா பரவாயில்லை எல்லாம்எடுத்து வச்சாச்சு.”

மேற்கொண்டு மனைவி பேசல்லை ஏர்போர்ட் வரை, கண்ல
ஜலம், வாய்ல சகஸ்ரநாமம்.

டெர்மினல் 5 பிரிட்டிஷ் ஏர்வேஸ் கேட்.. இப்பதான்
ஏர்போர்ட்டுக்குள்ளே டிராவல் பண்றவாளை தவிர
யாரையும் விடறதில்லை.அந்த டைம்ல, 50 ரூபா
டிக்கெட் வாங்கினா உள்ளே போகலாம் ரயில்வே
ஸ்டேஷன் பிளாட்பாரம் டிக்கெட் மாதிரி.

பையனோட இன்னும் 2 பேர் அவன் கம்பெனில இருந்து கூட,
அதுல ஒரு பையன் ஏற்கனவே 2 தடவை போயிட்டு வந்நதால
எங்களுக்கு கொஞ்சம் டென்ஷன் கம்மி.ஆனா அந்த பசங்க
ரெண்டு பேரும் இன்னும் ஏர்போர்ட் வரலை. 12 மணி நேரம்
முன்னால போய் கின்னஸ் சாதனை பண்ணினது நாங்கதான்.

எப்படியோ விசிட்டர் காலரியில் உக்காந்து இட்லி எல்லாம்
காலி பண்ணினோம், காபி பிளாஸ்கும் காலி.உக்காந்தே
கொஞ்சம் கண் அசந்து, கனவுல தேம்ஸ் ரிவர்ல நீச்சல்
அடிச்சேன்,உலக புகழ் டவர் கிளாக்குக்கு மேலே ஏறி
சாவி கொடுத்தேன்,என் மனைவி அனேகமா துபாய்
டூடி ஃபிரீ ஷாப்ல ஒண்ணரை கிலோ தங்கம் வாங்கி
இருப்பா,தன் கனவுல.

சாயந்தரம் ஏழரை மணி வாக்குல கூட போற பசங்க வந்தவுடனே
பையனை அவங்க கிட்ட ஒப்படைச்சிட்டு, பிரியா விடை பெற்று
கண் கலங்க கல்யாண் திரும்ப டாக்சி பிடித்தோம். (இப்ப அந்த
ஆரஞ்சு ஸ்வெட்டர் என்னாச்சு அதுதானே எல்லாரோட
கவலையும்? அதை என் 10 வயசு பேத்தி போட்டுண்டு திரியறா,
அவளுக்கே டைட்டா இருக்காம்)
 

Author: siteadmin
Article Title: லண்டன் போறான் என் பையன் - சுஶ்ரீ
Source URL: Nectar Novels-https://nectarnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.