• ஹாய் மக்களே! நம் Nectar Novels தளத்திற்கு நல்வரவு🙏😍😍 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள் nectarnovels.ss@gmail.com 🩷 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...👇 வேதா விஷால் & அனன்யா🙏💖

13. பிராயச்சித்தமா பரிகாரமா! - வாணிப்ரியா

siteadmin

Administrator
Staff member
Feb 3, 2026
52
6
8
chennai


பிராயச்சித்தமா பரிகாரமா! - வாணிப்ரியா



"மேலும் மேலும் சோதனைகளும் தடங்கல்களும் உங்களை சோர்வடைய வைக்கிறதா? தோஷங்களோ குறைகளோ இருக்குமோ என்ற கவலையா? கவலையை இன்றே தீர்த்துக்கொள்ளுங்கள்.... ஜோசியர் நாராயணனிடம் இன்றே வாருங்கள்! தோஷத்திற்கான பிராயச்சித்தமோ குறைகளுக்கான பரிகாரமோ கேட்டறிந்து உங்கள் வாழ்க்கையை மகிழ்ச்சி பொங்க செய்யுங்கள்!"



மேற்படி விளம்பரத்தை நம் அத்யந்த தோழி அம்புஜவல்லி அவருடைய லேப்டாப்பில் பார்த்து புளகாங்கிதம் அடைந்து ஆஜர் ஆவதற்குள் கையடக்க கைப்பேசியில் பார்த்து தாக்குதலுக்கு தயாராகிவிட்டார் அம்புஜவல்லியின் அகத்துக்காரர், அனந்தநாராயணன்.



அலட்டல் அம்புஜவல்லி அவங்க அட்டாக்கை ஆரம்பிப்பதற்குள் அனந்தநாராயணன் பிட்டு போடத்தொடங்கிவிட்டார். "ஏண்டி, அம்பு! இப்படி மழை, இடி, மின்னல்ன்னு பிச்சு உதறறதே, பஜ்ஜி பக்கோடா அப்படின்னு போடப்படாதோ?", என்று கேட்டார்.



அனந்த நாராயணனையும் அவரது மூடு, சாப்பாட்டு விருப்பம் எல்லாவற்றையும் உள்ளங்கையில் வைத்திருப்பவராயிற்றே அம்புஜவல்லி. அசந்துவிடுவாரா?



"தெரியும் கேப்பேள்ன்னு. அடுப்புல எண்ணெயை ஏத்திட்டேன். பஜ்ஜிக்கு காய்கறியும் நறுக்கி வெச்சாச்சு. பஜ்ஜிக்கு அப்புறம் ஒட்டுக்கா காஃபி போடறேன்னு சொல்லவந்தேன்", என்று முடித்தார்.



"..............", இப்போ ஒரு காஃபி கொடுத்துவிட்டு பஜ்ஜிக்கு பிறகு இன்னொரு காஃபி குடிக்கலாமே என்று கேட்க வந்தவர், அகமுடையாளை அனுசரித்துப்போக முடிவு செய்து அமைதி காத்தார்.



சற்று நேரத்தில் சூடான பஜ்ஜிகளை வகைக்கு நான்காக அதற்கான சட்னி வியஞ்சனத்தை வகைக்கு இரண்டாக சௌக்கியமாக அனுபவித்தவர், பஜ்ஜியைத் தொடர்ந்து ஆவி பறக்க வந்த காஃபியையும் திருப்தியாக உள்ளே இறக்குமதி செய்தார்.



அவர் சாப்பிட்டு முடிக்கும்வரை அவருக்கு சிசுருஷை செய்துவிட்டு, அவரது திருப்தியான ஏப்பத்தை கேட்டபடி அருகில் வந்து அமர்ந்த அம்புஜவல்லியை ரொமான்டிக் பார்வையால் குளிர்வித்து, "என்ன இருந்தாலும் உன் கைப்பக்குவமே அலாதி தானடி", என்று சிலாகிக்கவும் செய்தார்.



அம்புஜவல்லி பெருமையாக ஆரஞ்சு பழ சைசில் இருந்த அவரது கோடாலி முடிச்சிட்டிருந்த கொண்டையை ஸ்டைலாக தடவிக் கொடுத்தபடி, "தாங்க்யூ", என்றார்.



மனுஷர் அத்தோடு ஓய்ந்திருந்தால், இந்நேரம் ஏதாவது ஒரு நாட்டின் வெளியுறவுத்துறையின் டிப்ளோமாட்டிக் டீமில் பெருந்தர அதிகாரியாய் இருந்திருப்பார். மேலும் தொடர்ந்து, "கை பேசறது உனக்கு. மணக்க மணக்க சமைக்கிற பக்குவம், பிரமாதம் போ! என்கிட்டே மட்டும் ஒரு அஞ்சோ பத்தோ கைமாத்தா இருந்தா பஜ்ஜி போட்ட கைக்கு வைர பிரேஸ்லெட் பண்ணி போட்ருப்பேன்", என்று மவுண்ட் எவரெஸ்ட்டை நம் அத்யந்த சினேகிதியின் கோடாலிமுடிச்சு கொண்டை மேல் வைக்கப்பார்த்தார்.

“அஞ்சோ பத்தோ ஆயிரமா? லட்சமா?”, நக்கலாக கேட்டார் அம்புஜவல்லி.



“அஞ்சாயிரம் பத்தாயிரம் வெச்சு வைர பிரேஸ்லெட் வாங்கமுடியுமா? உலகம் அறியாம இருக்கியேடி. லட்சத்தை தான் சொன்னேன்”



“எது, அஞ்சு லட்சம், பத்து லட்சம் உங்ககிட்ட கைமாத்தா சில்லறையா புழங்கறதா? நீங்க என்ன பெரிய அம்பானி வம்சாவளின்னு நினைப்போ?”



“ஹீ ஹீ அதெல்லாம் ஒரு புலோவுல சொல்லறதுடி செல்லம். ரொமான்டிக்கா பீல் பண்ணி பேசும்போது இப்படில்லாம் ஆராயப்படாது”, விட்டால் மன்மத லீலையை வென்றார் உண்டோன்னு ஒரு ஆர் டி பி (ராகம், தாளம், பல்லவி) பண்ணியிருப்பார்.



சைடில் ஒடித்து லாவகமாக உஷாராகி, "அதெல்லாம் இருக்கட்டும், அந்த ஜோசியர் நாராயணனுக்கு ஒரு போன் போடுங்க. கொஞ்சம் சமாச்சாரம் கேட்கணும்!",



"ஏம்மா, இப்போ எதுக்கு அவரை ஞாபகப்படுத்தறே?”

"அடடா, போன்'ல தானே பேசப்போகறோம்! அதுல என்ன பிரச்சினை?",



"அவர் போன் நம்பர் என்கிட்டே இல்லையேம்மா",



"எதையும் முழுக்க படிக்கறதில்லையா? அந்த விளம்பரத்துக்கு கீழேயே, மேற்கொண்டு விவரங்களுக்கு அவரது வெப்பேஜை பார்க்கவும் என்று போட்டிருந்ததே. நான் வெப்பேஜில் போய் பார்த்தேன். அதுல போன் நம்பர், ஈமெயில் அட்ரெஸ் எல்லாமே இருக்கு"



அப்புறம், என்னை எதுக்கு போன் பண்ண சொல்லி கேட்கணும்? நான் என்ன உனக்கு அஸிஸ்டண்ட்டா? என்று தொண்டை வரை வந்த கேள்வியை உள்ளேயே விழுங்கிவிட்டு, மனைவி சொற்படி ஜோதிட சிகாமணியின் விளம்பரத்தைத் திறந்து, அதில் போட்டிருந்த போன் நம்பரை எடுத்து தட்டினார்.



******************************



"ஹல்லோ, நாராயணன் மாமாவா! நான் தான் அம்புஜம் பேசறேன்! உங்களுக்கு ஞாபகம் இருக்கோ! நானும் என்னுடைய தம்பி பெண்டாட்டி கோமளமும் உங்களைப் பார்க்க வந்திருந்தோம். கோமளத்துடைய பெண் கல்யாண விஷயமா"



"ஹல்லோ ஹல்லோ சொல்லுங்க, நல்லாவே ஞாபகம் இருக்கு. கல்யாணத்துக்கு வரன் பார்க்கவந்ததும் ஞாபகம் இருக்கும், உங்க தம்பி மகள் உங்களுக்கெல்லாம் டிமிக்கி கொடுத்திட்டுஅவளுடைய அத்தை பையனையே அதாவது உங்க மகனையே கல்யாணம் பண்ணிக்கொண்டதும் ஞாபகம் இருக்கு", என்று தடாலடியாக அம்புஜவல்லிக்கு கவுண்ட்டர் கொடுத்தார் ஜோதிட பூஷணம்.



பல்லைக்கடித்து கவுண்டருக்கு இன்னொரு கவுண்ட்டர் கொடுக்க ஆசைப்பட்ட அம்புஜவல்லி, "அதெல்லாம் இருக்கட்டும், பரிகாரம் பிராயச்சித்தம் அப்படின்னெல்லாம் விளம்பரம் போட்ருக்கேளே, நித்தியம் ஒரே ரகளையா இருக்கே. லோகக்ஷேமத்துக்கு ஏதாவது பூஜையோ ஹோமமோ செய்யமாட்டேளோ? அடுத்து எந்த நாடு எந்த நாட்டுக்கு மேல குண்டு போடுமோ… ஏற்கனவே பெட்ரோல், டீசல் எல்லாம் தட்டுப்பாடா இருக்கு. இன்னும் சரமாரியான குண்டு போட்டவண்ணமாகவே இருந்தா இன்னும் எந்த பிரளயம் எங்கே வெடிக்குமோன்னு பகீர்னு இருக்கு. இதுக்கெல்லாம் ஏதாவது தீர்வு சொல்லுங்கோளேன்"", என்று நீட்டி முழக்கினாள்.



அதெல்லாம் என்னைக்கேட்டா நான் என்னத்தை சொல்லறது, படைச்ச கடவுளுக்கே வெளிச்சம் என்று மனதினுள் நினைத்த நாராயணன், தூண்டிலை வேறு விதமாக போட்டார். "இதைக் கேட்கவா போன் பண்ணினேள்? உங்களுக்கு என்ன வேணும்ன்னு கேளுங்க. உங்களுக்கு காலிங் சார்ஜ் ஏகத்துக்கு ஏறறது",



"என்னவோ போங்க, ஜனங்க அல்லாடறதை பார்க்க ரொம்பவே கவலையா இருக்கு"



".................", ஜோசியர் பல்லைக்கடித்தபடி மெளனமாக இருந்தார். லேப்டாப்பில் மெசஞ்சரில் ஒரு குறுந்தகவல் பளிச்சிடுவதைப் பார்த்தவர், அதை திறந்து விஷயத்தைப் படித்தார். ஒரு அவசரச் செய்தி. அதிலும் மிக்க கவலையோடு.



"சரி சரி, நான் கேட்க வந்த விஷயத்தை கேட்கறேன். அதுல பாருங்க…."



ட்ரிங் ட்ரிங் ட்ரிட்ரிங் என்று ராகம் போட்டு அழைத்ததைக் கேட்டு கவனம் சிதறிய ஜோசியர், "சித்தே இருங்கோ, லேப்டாப்பில் டீம்ஸ் கால் வர்றது....", என்று சொல்லிவிட்டு அம்புஜவல்லியுடன் பேசிக்கொண்டிருந்த மொபைல் போனை கீழே வைத்துவிட்டு, (ஹோல்ட்-இல் போடவில்லை.... போட்டால், இவர் அலப்பறை அம்புஜத்தம்மாளுக்கு தெரியாமல் போய்விடுமே)



"சொல்லும்மா மாட்டுப்பொண்ணே! எப்படி இருக்கே?" என்று அன்பொழுக விசாரிக்க, அடுத்த முனையில் ஒரு இளம் பெண்ணின் குரல் கவலையோ கவலையாக ஒலித்தது.



"அதெல்லாம் ஒண்ணும் கவலைப்படாதே! "ஒரு பக்ஷம் இன்டர்மிட்டண்ட் பாஸ்டிங் பண்ணு, அப்படியே வசதி இல்லாதவாளுக்கு கஷ்டப்படறவாளுக்கு செவ்வாய்க்கிழமைகளில் ஏதாவது தானம் பண்ணு. அதான் வார்டரோப் நிறைய பிராண்டட் டிரஸ், ஷூ, செருப்பு, வாட்ச் எல்லாம் வெச்சிருப்பியே. அதுல ஒரு நாலு ட்ரெஸ்ஸை தானம் பண்ணு. எல்லாம் சரியாப்போயிடும். சீக்கிரமே சௌபாக்கியப் ப்ராப்திரஸ்து”

"..................."

"அடாடா, உன்னோட லக்னத்துல எட்டாம் வீட்டுல இருக்கிற சுக்கிரனை அஞ்சாம் வீட்டுல இருந்து புதன் பார்க்கிறார். அதை மூன்றாம் வீட்டுல இருந்து கேதுவும் ரெண்டாம் வீட்டுல அங்காரகனும் வக்கிரத்துல வரும்போது பார்த்துட்டாங்க...", நீளமாக அடுக்கிக்கொண்டே போனவரை மொபைல் போனை கையில் வைத்த படி காத்திருந்த அம்புஜவல்லி, "முதல்ல நீர் என்னைப்பாரும். என் போன் காலை முடித்து விட்டு அதுக்கப்பறம் அவளைப்பாரும்", என்று எதுகை மோனையில் நறநறத்தார்.



இதை டெலிபதி இல்லாமலே திவ்வியமாக படித்த ஜோதிட பூஷணர், "நீ எதுக்கும் ஒரு அர்ஜன்ட் கன்சல்டேஷனுக்கு புக் பண்ணிக்கோம்மா. நான் நிதானமா உன் ஜாதகத்தையும் உன் அகமுடையான் ஜாதகத்தையும் அலசி ஆராய்ஞ்சு அமோகமா ஆருடம் சொல்லறேன்",



ஹ்ம்ம்... மனசுக்குள்ள பெரிய டி ஆர்ன்னு நினைப்பு, அ ஆ அ ஆ ன்னு அறுக்கறார்", தோள்பட்டையை தாடையில் இடித்துக்கொண்டார் அம்புஜவல்லி.



"அர்ஜன்ட் கன்சல்டேஷனுக்கு ஐயாயிரத்து ஒண்ணு பீஸ். ஜி-பே பண்ணிடு. நாளைக்கு முதல் அப்பாயிண்ட்மெண்ட் உனக்குத் தான். காலங்கார்த்தால எட்டு மணிக்கெல்லாம் இங்க வந்துடு",



அங்கே டீம்ஸ் காலை முடித்தவர், அம்புஜத்திடம் போன் காலுக்கு வந்து, "அதுல பாருங்கோ இப்போ போன் பண்ணினது மிஸர்ஸ் டிரம்ப். அதாவது மெலனியா டிரம்ப். அவ ஆத்துக்காரர், ப்ரெசிடெண்ட் டிரம்ப்புக்கு எப்போ புத்தி வரும்னு கேட்டு அழமாட்டாக்குறையா புலம்பறா. எப்போ அவரும் அவளோட மத்த பிரெண்ட்ஸோட ஹஸ்பண்டு மாதிரி சமத்தா சொன்ன பேச்சை கேட்டுண்டு வாசத்திண்ணையோட அக்கடான்னு இருப்பார்னு ஏக்கப்படறா. எல்லாத்துக்கும் ஒரு கொடுப்பினை வேணுமோன்னோ. நாளைக்கு வரச்சொல்லி இருக்கேன். ஏதாவது பிராயச்சித்தம், பரிகாரம் பண்ண...",



இன்னும் என்ன சொல்லி இருப்பாரோ! அங்கே அம்புஜவல்லி அரை மயக்கமாகி சரிந்திருக்க, அவர் கையில் இருந்த மொபைல் போனை வாங்கி அனந்த நாராயணன், "ரொம்ப தேங்க்ஸ் ஜோசியரே! சமயத்துல காப்பாத்தினீர். போன தடவை யாருக்கோ போன் பண்ணி வாஸ்து பார்க்கபோறேன்னு என் ரெக்கரிங் டெப்பாசிட்டுக்கு வேட்டு வெச்சாள். அதுக்கும் முந்தின தடவை பெங்ஷுய். இப்படியே போனா என் பேங்க் பாலன்ஸ் காலாவதி ஆகிடும்னு பயந்து தான் உங்ககிட்ட ஹெல்ப் கேட்டேன். ஐயாயிரத்தை இப்போவே ஜி-பே பண்ணிடறேன்"



"அதுக்கென்ன ஒய், ஆத்துக்காரிய சமாளிக்கறதுன்னா சும்மாவா. நமக்குள்ள என்ன தேங்க்ஸ் எல்லாம். சரி சரி, அடுத்த போன் கால் வர்றது. சங்கீதாவா சமந்தாவான்னு பார்க்கணும். வைக்கட்டுமா! அப்பறமா பேசலாம்", ஆதூரமாக சமாதானத்தில் தொடங்கி ஆர்பாட்டமான அலப்பறையில் முடித்து விட்டு அடுத்த போன் காலை அட்டென்ட் பண்ணினார் ஜோதிட பூஷணம் நாராயணன்.




 

Author: siteadmin
Article Title: 13. பிராயச்சித்தமா பரிகாரமா! - வாணிப்ரியா
Source URL: Nectar Novels-https://nectarnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.