• ஹாய் மக்களே! நம் Nectar Novels தளத்திற்கு நல்வரவு🙏😍😍 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள் nectarnovels.ss@gmail.com 🩷 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...👇 வேதா விஷால் & அனன்யா🙏💖

15. ஆட்டமா ?நடுக்கமா? -ச.மணிவண்ணன்

siteadmin

Administrator
Staff member
Feb 3, 2026
52
6
8
chennai
ஆட்டமா ?நடுக்கமா?



"வாடா ! இப்பதான் வர்ற நேரமா?"
பாட்டி முகத்தில் இடிக்காத குறையாக பாபுவைக் கேட்டாள்.

"சாரி பாட்டி!ஆபிஸ்ல திடீர்னு அவுட் ஸ்டேஷன் போக வேண்டிய தாகி விட்டது.."

"டிரெயின் கரெக்டான டைம்க்கு வந்திடுச்சா?"பொக்கைவாய் தெரியக் கேட்டாள்.

"அய்யோ.. பாட்டி!இது ரயில்வே ஸ்டேஷன் இல்லை.. அவுட் ஸ்டேஷன்.அதாவது வெளியூர் போகறது.."

"முண்டம்! நானும் அதைத்தானே சொன்னேன்…வெளியூருக்கு டிரெயின்ல போனியான்னு…"

"அய்யோ பாட்டி ஆள விடு!"
புகுந்து அடித்து ஓடினான்.

"அவங்க பாட்டன மிஞ்சிடுவான்"பாட்டி சொல்லிக்கொண்டு பாக்கு இடித்து வெற்றிலையை சுண்ணாம்பு தடவி ,மடித்து வாயில் போட்டுக்கொண்டது.


பாபு தாத்தா, பாட்டி சதாபிஷேகம்
விழாவிற்கு ஓடோடி வந்திருந்தான்.

பாபுவின் குடும்ப உறுப்பினர்கள் ஏற்கனவே வந்துவிட்டிருந்தனர்.

வீடு களைக்கட்டி இருந்தது.

பழைய நினைவுகளை அசைப் போட்டுக் கொண்டு இருந்தனர்.


அந்த இடமே கூச்சலால் பஸ் ஸ்டாண்ட் , ரயில்வே ஸ்டேஷன் சத்தம் போல் பலவிதமான ஏற்ற இறக்கத்துடன் பேசிக் கொண்டு இருந்தார்கள்.

நாளைய பொழுது முழுவதும் உறவினர்களால் வீடே அல்லோகலப்படப் போகிறது என பாபு மனதில் சொல்லிக் கொண்டு ஆர்ப்பாட்டத்தில் கலந்துக் கொண்டான்.

தன்னுடைய டிராவல் பேகை விளையாடிக் கொண்டு இருந்த மகளிடம் கொடுத்து, உள்ளறைக்கு சென்று வைத்துவிட்டு வரச் சொன்னான்.

அம்மா அங்கு வந்தாள்.

"எல்லா சொந்த பந்தமும் வந்துட்டாங்க! பதினோரு பேரப்பிள்ளைகள் நீங்கதான் இந்த விழாவை எடுத்து கட்டி செய்யணும்! இதுதான் உங்க தாத்தாவோட ஆசை!"

"சரிம்மா.."என்றான் பாபு.

"நாளைய பங்ஷன்ல என்னென்ன செய்யணும்னு ஒரு டிஸ்கஷன் அந்த ரூம்ல ஓடுது‌.. சீக்கிரம் போய் நீயும் கலந்துகோ.."அம்மா சொல்லி விட்டு சமையல்கட்டு பக்கம் நகர்ந்தாள்.


அம்மா கைநீட்டி அறையை நோக்கி வேகமாக நடந்தான் பாபு.

கூச்சலும் சிரிப்புமாக அந்த அறை நிரம்பி வழிந்தது பேரன்கள்,பேத்திகளால்.

இடையில் உள்ளே நுழைந்ததால்
ஒன்றும் புரியாமல் கூட்டத்தில் ஒரு ஓரம் அமர்ந்தான்.

"தாத்தா, பாட்டி ரெண்டு பேருக்கும் நாம பல சர்ப்ரைஸ் கொடுக்கணும்.."

"வேணாம் வேணாம் தாத்தாவுக்கு சுகர் இருக்கு.."

"சர்ப்ரைஸுக்கும் சுகருக்கும் என்னடா சம்பந்தம்?

"சர்ப்ரைஸில் 'ரைஸ் 'இருக்கே!" சொல்லிவிட்டு சிரித்தான் மாது.

"சரியான மொக்க ஜோக்குடா!"சொல்லிவிட்டு சிரித்தாள் கிரிஜா.

"நாம ஒரு பக்கா ஆட்டம் போடறோம்…"விஜி சொல்ல, எல்லோரும் ஆமோதித்தனர்.

ஒத்திகை தொடங்கியது.

முதல்ல ஒரு பரதநாட்டியம்…சலங்கை ஒலி படத்திலிருந்து..யார் ஆடறது?"வைஜூ கேட்டாள்.

யாரும் ஒப்புக் கொள்ள மாட்டார்கள். எல்லோரும் குண்டு பீப்பா கணக்காக உடம்பை தூக்கி நடக்க முடியாதவர்கள்.கூடவே மூட்டு வலிக்கு தினம் ஒரு வாட்ஸ் அப் செய்தி பார்த்து வைத்தியம்
பார்த்து கொள்பவர்கள்.
அந்த தைரியத்தில் தான் வைஜூ கேட்டாள். அவள் மட்டும் தான் எழுபது கிலோவில் இருந்தாள்.

"சலங்கை ஒலில என்ன பாட்டு?"என்றான் பாபு.

"பாவ விமோசனமோ..பாவ வினோதமோ.. எனக்கு சரியா ஞாபகமில்லை.."என்றாள் சங்கீதா.

"வைஜு ஆடப்போறத்தை பார்க்க பாவ விமோசனம் தான் நமக்கு.."நட்டி சொன்னான்.

"பாவமோ…நாதமோ இல்லை.
நாத விநோதங்கள் நடன சந்தோஷங்கள் பரம சுகங்கள் தருமே…"சரியான பாடல் வரிகளை கூகுளில் தேடி சொன்னான் பாபு.


வைஜூ எழுந்து குரு வணக்கம் சொல்லி, நடனம் ஆடத் தொடங்கினாள்.

சின்ன வயதில் ஆறுமாதம் பரதநாட்டிய கிளாஸ் போன அனுபவம் அவளுக்கு உதவியாக இருந்தது.

பாடல் ஒலிக்க,
வீடு அதிர, அபிநயம் பிடித்து ஆடத் தொடங்கினாள் வைஜூ.


தாத்தா கைதடி ஊன்றியபடி ரிகர்சல் அறைக்கு வந்துவிட்டார்.

"தாத்தா உங்களுக்கு சர்ப்ரைஸ் கொடுக்கதான் சில நிகழ்ச்சிகள்
ஒத்திகை பார்த்திட்டு இருக்கோம்.. நீங்க இங்க வரக் கூடாது.. "

தடுத்த நட்டியை தள்ளிவிட்டு உள்ளே நுழைந்து விட்டார் தாத்தா.

"என்ன சத்தம்? என்ன சத்தம்?"
தாத்தா கேட்க,
"ராக்கம்மா கைய தட்டு பாட்டு பாடாதீங்க தாத்தா..வைஜூ பரத நாட்டியம் ஆடறா!" சொன்னாள்
சங்கீதா.

"ஏன்மா வைஜு! நீ பெரிய பரதநாட்டிய ஆட்டக்காரிய வருவன்னுதான் வைஜெயந்தி மாலான்னு பெயர் வைத்தேன்.."

"ஏன் தாத்தா பொய் சொல்றீங்க?
அவ பேருக்கு பின்னாடி ஒரு கதை இருக்குன்னு பாட்டி சொல்லியிருக்காங்களே!"பீடிகையுடன் சொன்னாள் சங்கீதா.

"அப்படி என்ன கதை ? எல்லோருக்கும் சொல்லேன்!"
பாபு கேட்டான்.

"அதை ஏன் கேட்கற பாபு.அது ஒண்ணும் பெரிய கதை இல்லை."

"அப்ப சொல்லு!"

"அதுவா வண்டலூர் ஜூவில நிறைமாத கர்ப்பிணியா அத்தை அடம் பிடிச்சு மாமாவை கூப்பிட்டு கிட்டு போக வற்புறுத்த போன் இடத்தில ஜூவிலேயே பிறந்திட்டா…மாமாதான் கொஞ்சம் பொறு ஆஸ்பிடல் போயிடலாம்ன்னு சொல்லியும் அத்தை ஜூவிலேயே பிள்ளை பிறந்ததில் கடுப்பாகிப் போன மாமா பேரை வை ஜூ ன்னு சொல்லி இருக்காரு.. அதுதான் மருவி இன்னைவரை வைஜூன்னு கூப்பிடறோம்…"
கதையை சொல்லி முடித்தாள் சங்கீதா.

"என் பேரு பரவாயில்ல. அவனுக்கு கூட கபாஸ்கர்னு பேரு வெச்சிறுக்காங்க.." வைஜூ தையதக்க என்று கைகால் ஆட்டி, சொன்னாள்.

"என் பேரு கபாஸ்கர் இல்லை.. கவாஸ்கர்.."கவாஸ்கர் தன்னிலை விளக்கம் கொடுத்தான்.

"கிரிக்கெட்ன்னா கோல் போடணுமான்னு கேட்பான்…"சொல்லி விட்டு பாபு சிரித்தான்.

"உனக்கு கூட டெல்லி பாபுன்னு பேரு வைத்தேன்…டெல்லி எருமை மாதிரி உடம்பை வளர்த்து இருக்கேயே ஒழிய டெல்லி பக்கம் போக வழியில்லாமல் தடுமாறுற.."
தாத்தா வையாபுரி ஜொல்லு தெறிக்க சிரித்தவாறு சொன்னார்.

"தாத்தா உங்களுக்கு யார் பேரு வைச்சாங்க..?"

"என்னோட தாத்தா தான் பேரு வெச்சாரு.."

"ஏன் மாடர்னா வைத்து இருக்கலாமே?"

"இந்த பேருக்கு என்ன குறை?"

"ம்.. யாரும் குறுக்கிடாதீங்க! தாத்தா சொல்றத்தை அமைதியா
கேளுங்க.."பாபு இடைமறித்து சொன்னான்..

"என்னோட பாட்டி என்னோட தாத்தாவிற்கு பூரி சுட்டு போட்டுட்டு இருந்தாங்க..அந்த நேரம் நிறைமாத கர்ப்பிணியான
என் அம்மாவுக்கு பிரசவ வலி வந்திடுச்சு..என்னோட தாத்தா விற்கு பூரியில் இருந்து கை எடுக்க முடியலை.. பாட்டி ஒரு தட்டில் பூரி எடுத்து வர..வை பூரி
வை பூரி ன்னு தாத்தா சொல்லியும் பாட்டியோட கவனம் முழுவதும் பிரசவ வலியில துடிக்கும் மருமகளை பார்த்து தூக்க அந்த நேரத்திலும் வை பூரி
வை பூரி ன்னு கத்தியிருக்காரு..

அப்புறம்?

"அப்புறம் என்ன? நான் பிறந்திட்டேன்.."

"வை பூரி..வை பூரி ன்னு புலம்பிகிட்டு இருந்த தாத்தா பட்டுன்னு வையாபூரி ன்னு பாட்டியை கோபிச்சுக்கிட்டாரு…
பாட்டியும் வையாபுரி ன்னு கூப்பிட தொடங்க அதே என் பெயரா போயிடுது.."

தன்னுடைய பெயர் காரணத்தை கதையாக சொல்லி முடித்தார் வையாபுரி.

அடுத்த அரை மணிநேரம் கடுமையான பயிற்சி செய்து சலங்கை ஒலி கமல்ஹாசனுக்கு இணையாக பயிற்சியை முடித்தாள் வைஜூ.

உடம்பின் எல்லா பாகங்களிலிருந்தும் வியர்வை வழிந்து அந்த ரூமையே குளமாக்கி இருந்தது.

"வைஜூ! நாளைக்கு பங்ஷன்ல கலக்கப் போற! ஆல் தி பெஸ்ட்!"அனைவரும் கோரஸாக
சொன்னதும் சபை கலைந்து அனைவரும் கலைத்தனர்.

"ம்…பாட்டி கொடுத்த பலகாரம் சாப்பிட்டு எனக்கு இப்பவே கலக்குது…!"என்று சொல்லி டாய்லெட் நோக்கி ஓடினான் சவுக்கு சுந்தர்.

காலை.

விழா நாயகன்,நாயகி முகூர்த்த பந்தலில் அமர்ந்திருக்க அய்யர் மந்திரம் ஓதி மஞ்சள் தாலி கயிற்றை நீட்ட, படக்கென்று பிடுங்கிய வையாபுரி மனைவி கழுத்தில் மூனு முடிச்சு யார் உதவியுமில்லாமல் போட்டார்.

பெரிய அலங்கார நாற்காலியில்
தாத்தா, பாட்டியை உட்கார வைத்தனர்.

பிள்ளைகள் வரிசையாக அன்பளிப்பு பெட்டிகளை வழங்கினர்.

அதன் பின் பேரப் பிள்ளைகள் வழங்கினர்.

பொக்கை வாய் சிரிப்புடன் அன்பளிப்பு பொருட்களை வாங்கி மகிழ்ந்தார் வையாபுரி.

பேத்தி வைஜூவின் ஆட்டத்தை ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்தார்.

அருகில் நின்றிருந்த பேரன் சவுக்கு சுந்தரை கைக்காட்டி
அழைத்தார்.

"என்ன தாத்தா?"

"டேய்!வைஜூ எங்க?"

"அவளா ?"என்று கேள்வி எழுப்பியவன் மலங்கமலங்க விழித்தான்.

"என்னடா முழிக்கிற?"வையாபுரி அதட்டினார்.

"அதுவா தாத்தா…காலையிலிருந்தே அவளை நான் பார்க்கவேயில்ல.. கொஞ்சம் பொறு தாத்தா...இதோ வந்திடறேன் "என்று சொல்லி அங்கிருந்து நகர்ந்தான்.

ஒவ்வொரு அறையாக தேடினான்.

எங்கேயும் காணவில்லை.
குழப்பமாக வாசல் வந்தான்.

ஒரு கார் வந்து நின்றது.

காரிலிருந்து வைஜூவின் கணவர் இறங்கினார்.

"மாமா!எங்க போயிட்டு வர்றீங்க.ஓட்டலுக்கு தானே?"நக்கலாக கேட்டான்.

"அதை ஏன்டா கேட்கற?"

"நீங்க சாப்பிட்டதை நான் ஏன் கேட்கப் போறேன்!"

மாமா முறைத்தார்.

"நானே என் வைஜூக்கு இடுப்பு பிடிச்சுகிச்சேன்னு …"

"கவலையாயிட்டீங்களா மாமா?"

"இல்லைடா…சந்தோஷத்தை அனுபவிக்கணும் அதுக்கு ஒரு பார்டி ஏற்பாடு பண்ணு…அவளோட நொய்நொய்
இல்லாம இருக்கலாம்.டாக்டர் ரெண்டு நாளைக்கு படுக்கையை விட்டு எழ வேண்டாம்னு சொல்லிட்டாரு…"மகிழ்ச்சியை வெளிக்காட்டாமல் காரின் பின் சீட்டிலிருந்து மூட்டை ஒன்றை இழுப்பது போல இழுத்தார்.

"கொஞ்சம் உதவிக்கு வரக்கூடாதா?"சவுக்கு சுந்தரைப் பார்த்து கெஞ்சினார்.

வைஜூ இறங்க உதவினான் சவுக்கு சுந்தர்.

"என்னக்கா இப்படி பண்ணிட்ட? தாத்தா வேற உன் நாட்டியத்தை சபையில பார்க்க ஆவலா இருக்கிறார்!"

"நான் என்னடா வேணும்னு
உடம்பை கெடுத்துக் கிட்டேன்..
ஒரு கஷ்டமான ஸ்டெப் ரூமில வந்து ஆடிப் பார்த்தேன்.அப்படியே இடுப்பு பிடிச்சுகிச்சு.."ஆ..ஊ..என்ற ஓசையுடன் கைத்தாங்கலாக அறைக்கு வந்து படுத்தாள் வைஜூ.

இனி அவளால் ஆட முடியாது என்பதை உறுதி படுத்திக் கொண்டு ஹாலுக்கு வந்தான்.

மேடையில் தவிப்புடன் சவுக்கு சுந்தரை எதிர்பார்த்துக் கொண்டிருந்த வையாபுரி சவுக்கு சுந்தர் அரக்க பறக்க வருவதைப் பார்த்து ஜொல் ஒழுக பிரகாசமானார்.

"என்னடா!தனியா வர்றே?"

"தாத்தா! வைஜூ புரோகிராம் கேன்சல்!"

"என்னடா இப்படி குண்ட தூக்கிப் போடற!" வையாபுரி முகம் கவலை தோய்ந்து போனது.

பக்கத்தில் இருந்த பாட்டி "இந்த கிழவனுக்கு இந்த வயசில ஆட்டம் கேட்குதா?"கோபமாக முறைத்தாள்.

வையாபுரிக்கு திடீரென ஒரு யோசனை உதித்தது.

சவுக்கு காதில் ஏதோ ஓதினார்
வையாபுரி.

ஐந்து நிமிடத்தில் எல்லோரையும்
அமைதி காக்க சொன்னான் சவுக்கு சுந்தர்.

எல்லோரும் மேடையை பார்க்க,அந்த பாடல் பலத்த சத்தத்துடன் ஒலிக்கத் தொடங்கியது.

ஊ..சொல்றியா மாமா..ஊகும் சொல்றீயா மாமா..

வையாபுரி எழுந்து பாடலுக்கு தத்தக்காபித்தகான்னு ஆடத் தொடங்கினார்.

பாட்டி கையை பிடித்து இழுத்து உடன் ஆட வற்புறுத்த புதுப் பெண் போல கூச்சப்பட்டாள் பாட்டி.

நடுங்கர வயசில் இந்த ஆட்டம் தேவையா என எல்லோரும் நினைக்க அவரின் உற்சாக ஆட்டம் அனைவரையும் பொறாமைப்படச் செய்தது.
 

Author: siteadmin
Article Title: 15. ஆட்டமா ?நடுக்கமா? -ச.மணிவண்ணன்
Source URL: Nectar Novels-https://nectarnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.