'பஞ்ச' பாண்டவர்கள்...
அந்த தனியார் வங்கி ஏசி உபயோகத்தில் சில்லென்று இருந்தது.
கூட்டம் அப்போது தான் கூடத் தொடங்கியிருந்தது.
அவனுக்கு வயது முப்பத்தைந்து இருக்கும்.கோலி குண்டு கண்கள்.உருட்டி உருட்டிப் பார்த்தவாறு செக்யூரிட்டியை கடந்து தள்ளு என்ற கண்ணாடி கதவை தள்ளிக் கொண்டு உள்ளே நுழைந்தான்.
அவனை செக்யூரிட்டி சந்தேகப் பார்வையுடன் பார்த்தான்.
உள்ளே சென்றவன் ஒரு வெயிட்டிங் சேரில் தொப்பென்று உடம்பை துருத்திக் கொண்டான்.
அவனது நடவடிக்கையை தொடர்ந்து பார்த்தவாறு செக்யூரிட்டி அமர்ந்து இருந்தான்.
ஏதாவது ஒரு சாவுகிராக்கி தினம் வந்து உயிர் எடுக்குது புலம்பியவாறு தன்னுடைய நாற்காலியில் சாய்ந்து உட்கார்ந்து கொண்டான்.
பார்த்தா பிச்சைக்காரன் போல இருக்கிறான்.. என்ன விஷயமா வந்திருப்பான்.. ஒரு வேளை ஏசி காத்து வாங்க வந்திருப்பானோ? தனக்கு தானே பேசிக் கொண்டான் செக்யூரிட்டி.
அவன் தன் தொப்பையை குலுக்கிக் கொண்டு பாக்கெட்டை தொட்டுப் பார்த்தான்.
பாக்கெட்டில் அந்த கைத்துப்பாக்கி அமைதியாக கிடந்தது.
எழுந்தவன் நகை அடகு என்ற கவுண்டர் நோக்கி நடந்தான்.
நகை அடகு கவுண்டரில் யாருமில்லை.காலியாக இருந்தது.
ஊரில் பொதுவாக எல்லோர் வீட்டு நகைகளும் சாதி பேதமில்லாமல் ஏழை பணக்காரன் என்ற ஏற்றத்தாழ்வு இல்லாத இரண்டாவது இடம் அடமான லாக்கர்.
முதலிடம் டாஸ்மாக்.சமத்துவ சமுதாயக்கூடம்.
அடமான கவுண்டரில் ஒரு சின்ன பையன் ஏதோ லெட்ஜரில் கிறுக்கிக் கொண்டு இருந்தான்.
அவனைப் பார்த்ததும் 'என்ன?' என்பதைப் போல் லெட்ஜரிலிருந்து கண்ணை விலக்கி கேட்டான்.
பதில் எதுவும் சொல்லாமல் கூர்ந்து பார்த்தான் அவன் தன் கோலிக் கண்களை உருட்டி.
"சார்.."நாக்கை கடித்துக் கொண்டார் நகை மதிப்பீட்டாளர்.
"பெரியவரே! என்ன வேண்டும்?நகை அடமானம் வைக்கணுமா?"
"இல்லை.ஏன் கூட்டமில்லை?"
திடுக்கிட்டு நகை மதிப்பீட்டாளர்
"எதுக்கு கேட்கறீங்க? நீங்க யாரு? உங்களுக்கு என்ன வேண்டும்?"
கேள்விகளை அடுக்கினான்.
அவன் மெளனமாக திரும்பி வந்து ஏற்கனவே அமர்ந்திருந்த சேரில் உட்கார்ந்து கொண்டான்.
செக்யூரிட்டி கதவைத் திறந்து கொண்டு உள்ளே வந்தான்.
"என்ன விஷயமா வந்திருக்கீங்க?பாஸ் புக் காட்டுங்க!"அதட்டலாக கேட்க அவனுக்கு சட்டென்று கோபம் வந்து விட்டது.
"யாருய்யா மேனேஜர்? ஒரு கஸ்டமரைப் பாத்து எவ்வளவு தைரியம் இருந்தா கேட்ப?"
செக்யூரிட்டி பயந்து விட்டான்.
"சாரி சார்..தப்பா எடுத்துக்காதீங்க…"
குழைந்தவாறு சொல்லி விட்டு யூடர்ன் அடித்து தன்னுடைய நாற்காலியில் வந்து அமர்ந்து கொண்டான்.
இவ்வளவையும் தன்னுடைய அறையிலிருந்து கவனித்த மேனேஜர் ஓடி வந்து விட்டார்.
"என்ன சார் பிராப்ளம்?"
அவன் தன் கையிலிருந்த பாஸ் புக்கை காட்டினான்.
"நான் இந்த பேங்க் கஸ்டமர்.
அதோ அந்த கவுண்டர்ல இருக்கிற சின்ன பையன் என்னை பெரியவரே ன்னு அழைக்கிறான் பொறுத்துக்கிட்டேன்.. செக்யூரிட்டி என்னடான்னா பாஸ் புக் வைச்சு இருக்கியான்னு கேட்கிறான்.."தாட்பூட் என குதித்தான் அவன்.
மனோபாலா போல் ஒல்லியாக உயரமாக இருந்த மேனேஜர் மார்புக்கு சற்று கீழே ஷர்டை இன் செய்து இருந்தார்.
"சாரி சார்... தெரியாமல் நடந்திடுச்சு.. நீங்க எதுக்கு வந்தீங்க?"மேனேஜர் கேட்க, அவன் மீண்டும் கோபமானான்.
"என்ன நினைச்சுட்டு இருக்கீங்க? ஆளாளுக்கு எதுக்கு வந்திருக்கேன்னு கேட்கறீங்க?நானே கூட்டம் வரலையேன்னு வருத்தத்தில இருக்கேன்.."
"சாரி சார்... கூட்டம் தான் இல்லையே,உங்க வேலையை முடிச்சிட்டு போக வேண்டியதுதானே?"
மேனேஜரை முறைத்தான் அவன்.
அங்கிருந்து நகர்ந்து மேனேஜர் 'சரியான லூசு' என்று திட்டிக் கொண்டே தன்னுடைய அறையில் நுழைத்துக் கொண்டார்.
அரைமணிநேரம் ஓடியிருந்தது.
ஒவ்வொரு கவுண்டரிலும் இருந்தவர்களிடம் ஏதாவது ஒன்று கேட்டு ,எரிச்சலை ஏற்படுத்தி அவர்கள் வேலைசெய்யவிடாமல் தொல்லை கொடுத்து கொண்டே இருந்தான்.
மணி பதினொன்று.
கூட்டம் சேர்ந்துவிட்டது.ஊழியர்கள் தங்கள் வேலையில் மூழ்கியிருந்தனர்.
அந்த நேரம் பார்த்து தன் பாக்கெட்டிலிருந்து முகமூடியை எடுத்து மாட்டிக் கொண்டான் அவன்.
அவன் முகமூடி அணிந்து மறுநிமிடம் திபு திபுவென நாலுபேர் உள்ளே நுழைந்தனர்.
செக்யூரிட்டியை தாண்டியவர்கள்
தங்களிடமிருந்த முகமூடியை எடுத்து மாட்டிக் கொண்டனர்.
அவர்கள் கையில் துப்பாக்கி இருந்தது.
"யாரும் சப்தம் போடதீங்க...போட்டீங்கன்னா சுட்டு தள்ளிடுவேன்.."ஒருவன் கத்த மற்றவர்கள் கிடுகிடுவென வங்கியை தங்கள் கட்டுப்பாட்டிற்கு கொண்டு வந்துவிட்டனர்.
அவனும் தன் பங்கிற்கு துப்பாக்கி எடுத்துக் கொண்டான்.
அவர்கள் நான்கு பேரும் அவன் அணிந்து இருந்த அதே மாதிரியான ஆரஞ்சு கலர் டீஷர்ட் அணிந்திருந்தனர்.
அவன் திகைத்தான்.ஆனால் தன்னுடைய கோலிக் கண்களால் ஆச்சரியமாகப் பார்த்தான்.
"டேய்! எந்த தைரியத்தில் சுட்டுடுவேன்னு மிரட்டின?" கிசுகிசுத்தான்.
"எல்லாம் பரோட்டா சப்பாத்தி சுடற தைரியத்தில தான்.."
"நாம் நாலு பேரு வந்தோம். இவன் யாருடா அஞ்சாவது ஆளு?"
"தெரியலையே! நாம்தான் அஞ்சாவது ஆள் தேர்ந்தெடுக்க இன்டர்வியூ பண்ணதில யாராவது வந்திருப்பானா?"
"ம்.. இருக்கலாம்..பாரேன் அவன் தொழில் பக்தியை நாம் போட்டிருக்கிற டீ ஷர்ட் அவனும் போட்டு இருக்கான்.."
அவர்களுக்குள்ளாக பேசிக் கொண்டார்கள்.
மேனேஜர் நடுங்கியவாறு எல்லா சாவியும் கொண்டு வந்து மேசையில் பரப்பினார்.
"பேங்க்ல எவ்வளவு கேஷ் இருக்கும்?"
"ஒரு ஒன்றரை தேறும்.."
"ஆயிரமா?"
ஒருவன் கேட்க மண்டையில் ஒரு கொட்டு குட்டினான்.
"ஆ..அடிக்காதே கோவாலு!"
ஒருவன் கோவாலு என்பதை மனதில் பதிய வைத்துக் கொண்டார் மேனேஜர்.
"எங்களுக்கு ஒன்றரை எல்லாம் தேவையில்லை.."
"ஒன்னு போதும்!"
"எதில் எடுத்திட்டு போவீங்க?"
கோவாலு பக்கத்தில் இருந்தவனை முறைத்தான்.
"பேக் எடுத்து வர மறந்திட்டேன் சேகரு.."அசடு வழிய சொன்னான்.
"சரி..அது ஒன்னும் பெரிய பிரச்சினை இல்லை..எல்லோரோட சாப்பாட்டு பையை வாங்கிக்கலாம்" என்றான் காலையிலிருந்து நோட்டமிட்டு முதல் ஆளாக வந்த அவன்.
"நல்ல ஐடியா பாஸ்.."கோவாலு அவன் பெயரு தெரியாததால் 'பாஸ்'என்று விளித்தான்.
பாஸ் என்று அழைத்ததும் உற்சாகமாகி சுறுசுறுப்பானான் அவன்.
தன்னுடைய பெயர் அவர்களுக்கு எப்படி தெரியும்?தன்னைத்தானே
கேட்டுக் கொண்டான் முதல் ஆளாக வந்த பாஸ் என்கிற பாஸ்கரன்.
"ஒருத்தர் போய் அவங்க சாப்பாடு பையை காலி பண்ணி கொண்டு வாங்க.."என்று பாஸ் சொல்வதை ஆமோதித்த அவன் பேங்கிங் உள்ளறைக்கு சென்றான் .
அங்கு ஒரு பெரிய சதுர டேபிளும் சுற்றி மர நாற்காலிகளும் இருந்தது.
ஐந்து நிமிடம் ஓடியது.
பாஸ் பொறுமை இழந்தவனாக
"போனவன் என்ன ஆனான்?"
"தெரியலை பாஸ்.நான் வேணும்ன்னா போய் பார்த்திட்டு வரட்டுமா?"
"ம்.. போய் பார்த்திட்டு வா.."அதட்டலாக சொன்னான் பாஸ் என்றழைக்கப்பட்ட பாஸ்கரன்.
கோவாலு வேகமாக அந்த டைனிங் ரூமில் நுழைந்தவன் அதிர்ந்தான்.
அங்கு சேகர் ஒரு மூன்று அடுக்கு கேரியரை மேசையில் பிரித்து வைத்து சாப்பிட்டுக் கொண்டு இருந்தான்.
அவன் கை முழுவதும் சாதம் அப்பிக் கொண்டிருந்தது.
"டேய்…!நாம் எதுக்கு வந்தோம்?நீ என்ன வேலை செய்துகிட்டு இருக்கிற?"
"பாஸ்தான் சாப்பாடு பையை காலி பண்ணிட்டு வா ன்னு சொன்னார்..பாஸ் பேச்சை கேட்கணுமா?வேணாமா?"
சேகர் பரிதாபமாகக் கேட்டான்.
"பணம் எடுத்திட்டு போக காலி பை தான் எடுத்து வர சொன்னாங்க.."என்று சொல்லி தலையில் அடித்துக் கொண்டான் கோவாலு.
"கோவாலு... இன்னும் ரெண்டு வாய்தான் இருக்கு.சாப்பிட்டுட்டு வரட்டுமா? நீயும் கொஞ்சம் சாப்பிடேன் ரொம்ப ரொம்ப டேஸ்ட்டா இருக்கு.."
அடிக்க கை ஓங்கினான் கோவாலு.
பயத்தில் கேரியரை அப்படியே போட்டு விட்டு கோவாலு பின் தொடர்ந்து வந்தான் சேகர்.
"மன்னிக்கணும் பாஸ்...சின்னதா தப்பு நடந்திடுச்சு!"என்று பாஸ் என்கிற பாஸ்கரன் காதில் கிசுகிசுத்தான்.
பாஸ் முறைத்தான்.சேகர் கையில் நான்கு பை எடுத்து வந்தான்.
"சரி.. சேகர் சாப்பிட்டுட்டான்..தெம்பாக இருப்பான் அதனால் அவனை செக்யூரிட்டி கிட்ட
அனுப்பிட்டு..அங்கிருக்கிறவனை வரச் சொல்.."
"டேய் சேகரு போய் பட்டாசு பாலுவ வரச் சொல்லு!"
மேனேஜர் ஒவ்வொரு பேராக நினைவில் நிறுத்த சொல்லி பார்த்தார்.
சேகர்,கோவாலு,பட்டாசு பாலு..பாஸ் என்கிற பாஸ்கரன்.. இன்னொருத்தன் பெயர் தெரியலையே என்று நினைத்த போது அதற்கும் விடை கிடைத்தது.
"டேய்... டேய்...அங்க என்னாடா பண்றே?"பாஸ் கேட்க,"பாஸ் இது என்னோடமுதல் ரஃப்ரி அதான் செல்ஃபி எடுத்துக்கறேன்.."அவன் சொன்னதும் பாஸ் கடுப்பாகிப் போனான்.
"என்னது... ரஃப்ரி?"
"ஆமாம்.பேங்க்ல கொள்ளை அடிக்கிறத்துக்கு ரஃப்ரி தானே சொல்லணும்?"
"டேய்! இவன் யாருடா?"கத்தினான் பாஸ்.
"பாஸ்..அவனும் நம்மாளு தான்…"
"டேய்! நான் பாக்கியராஜ் ரசிகன் தெரியுமா?இது நம்ம ஆளு தானே சொல்லணும்?"
"சாரி பாஸ்...இது நம்ம ஆளு தான்..பேரு போட்டி!"
"கோவாலு...நட்டி ஜட்டின்னு.."முணுமுணுத்தான் பாஸ் என்கிற பாஸ்கரன்.
"பாஸ் அவன் பேரு நடராஜன்.செல்லமா நட்டின்னு கூப்பிடுவோம்!"
"டேய் அது ரஃப்ரி இல்லை... ராபரி.."என்று சொல்லி தலையில் அடித்துக் கொண்டவன் அடுத்த கட்டமாக மேனேஜரிடம் நகர்ந்தான்.
கூட கொள்ளை அடிக்க வந்தவன் பேருக் கூட தெரியாம ஒரு கேங்க் லீடர் மேனேஜர் நெத்தியில் அடித்துக் கொண்டான்.
பட்டாசு பாலு துப்பாக்கி முனையில் மேனேஜரை நகர்த்தியவாறு கேஷ் லாக்கர் ரூமிற்கு தள்ளிப் போனான்.
லாக்கர் ரூமிற்கு சென்றவன் அலறினான்.
"இதுக்குதான் அப்பரன்டிஸ் எல்லாம் கூப்பிட்டு வர வேண்டாம்னு சொன்னேன்.என் பேச்சை எவன் மதிக்கிறான்.."புலம்பியவாறு கோவாலு லாக்கர் ரூமிற்குள் நுழைந்துவிட்டான்.
பட்டாசு பாலு நிறைய பணத்தை பார்த்ததும் அலறி மயங்கி சரிந்து கிடந்தான்.
,"எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும்.."என்று மேனேஜர் கேட்க,
"என்ன கேட்க போறீங்க?"கோவலு மறு கேள்வி கேட்டான்.
"கோவாலு…! இது மாதிரி ஏற்கனவே கொள்ளை அடிச்சு இருக்கீங்களா?"
"ம்... இதுதான் முதல் அட்டெம்ட்…"
"வாழ்த்துக்கள் கோவாலு! அப்புறம் ஒரு சின்ன டவுட்.."
"என்ன?"
"உங்க பாஸ் செம புத்திசாலியா இருக்கிறாரே!"
"இல்லாம பின்ன...எங்களுக்கே தெரியாம நாங்க அஞ்சு டீ ஷர்ட் வாங்கப் போனா.. நாலு தான் ஒரே மாதிரி கிடைச்சது.. அதுக்கு முன்னாலே ஒருத்தர் டீ ஷர்ட் வாங்கிட்டு போனாருன்னு கடைக்காரன் சொன்னான்.
இங்க வந்து பார்த்தா பாஸ் எங்களுக்கு முன்னாடி வந்து பேங்க ஒரு அலசு அலசிட்டாரே..
அதிலிருந்து தெரியலையா எங்க பாஸோட திறமையை.."
புகழ்ந்து தள்ளினான் கோவாலு.
திறந்த லாக்கரைப் பார்த்ததும் பணக்கட்டுகளிலிருந்து வந்த
வாசத்தை நுகர்ந்து மகிழ்ந்தான் கோவாலு.
"சாரே... எனக்கு மயக்கம் வர்ற மாதிரி இருக்கு... என்னோட பாஸை கொஞ்சம் வரச் சொல்லுங்க.."
"டேய்! ஏற்கனவே ஒருத்தன் மயங்கி வீழ்ந்துகிடக்கறான்"மேனேஜர்
இவன்க கொள்ளை அடிக்க வந்தவர்களா இல்லை வெள்ளை அடிக்க வந்தவர்களா? குழம்பினார்.
'சே! கோவாலு ,பட்டாசு பாலு ரெண்டு பேரையும் அனுப்பி வைச்சது தப்பா போச்சு..'மனதில்
நினைத்த நேரம் மேனேஜர் தலை தெறிக்க ஓடி வருவதைக் கண்டான் பாஸ்.
அதுக்குள்ள பணத்தை அள்ளிட்டு பின்னாடி வர்றான்களா? ஏன் இந்தாளு தலைத்தெறிக்க ஓடிவரான்?'தனக்குதானே கேட்டுக் கொண்டவாறு கோவாலுவைத் தேடினான் பாஸ்.
அந்த கும்பலில் கோவாலு ஒருத்தன் தான் விவரமான ஆளு என பாஸ் முடிவு செய்து இருந்தான்.
ஆனால் மேனேஜர் மட்டும் பேன்டை இழுத்து மார்பருகே உயர்த்திக் கொண்டே வந்து நின்றார்.
மூச்சிரைத்தது..
பொறுமையிழந்து பாஸ் மேனேஜரிடம் "கோவாலு ,பாலு என்னவானார்கள்?"என்று கேட்டான்.
"பணத்தைப் பார்த்ததும் மயங்கி விழுந்திட்டான்க.. "
"நீங்கதான் அடிச்சி தூக்கிட்டீங்களோன்னு நினைச்சேன்.."
"நீங்க வர்றீங்களா? இல்லை வேற யாராவது அனுப்பறீங்களா?"
பாஸ் யோசித்தான்.
அதே நேரம் திபுதிபுவென ஆயுதங்களுடன் போலீஸ் ரவுண்ட் அப் செய்துவிட வாயடைத்து நின்றான் பாஸ்.
பாலுவும் கோபாலும் மயங்கிய நேரத்தில் போலீஸிற்கு தகவல் பறந்து விட்டிருந்தது.
"யாரு இந்த கேங்க லீட் பண்றது?"பெரிய தொப்பையுடன் இருந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் கேட்க, மயங்கியவர்களைத் தவிர மீதியிருந்த இருவரும்
பாஸை கை நீட்டி காட்டினர்.
பாஸ் வியர்வையில் குளித்துப் போனான்.
லாக்கர் ரூமிலிருந்து மயக்கம் தெளிவித்து பாலுவையும் கோவாலுவையும் கைத்தாங்கலாக அழைத்து வந்தனர் இரு கான்ஸ்டபிள்கள்.
கஸ்டமர்களை வெளியே பாதுகாப்பாக அனுப்ப முயற்சிகள் மேற்கொண்டனர் மீதமிருந்த கான்ஸ்டபிள்கள்.
யாரும் போக மாட்டேன் என்று அடம் பிடித்தனர்.
"சார்... சார்...தமாஷா இருக்கு சார்.நாங்க கொஞ்ச நேரம் இருந்து பார்க்கிறோமே..!"
கெஞ்சினார்கள்.
"தயவு செய்து எங்களை வேலை செய்ய விடுங்க.."கஸ்டமரிடம்
கெஞ்சி அனைவரையும் வெளியேற்றி விட்டனர்.
கஸ்டமரை வெளியேற்றியதில் நிம்மதி பெருமூச்சு விட்டார் இன்ஸ்பெக்டர் வினோத்.
ஐவரின் கைகள் பின்னால் இழுத்து கட்டப்பட்டு முட்டி போட வைத்து இருந்தனர்.
இன்ஸ்பெக்டர்
பளார் என்று கோவாலுவின் கன்னத்தில் அறைந்தார்.
"அய்யய்யோ...சாமி விட்டுடுங்க.."கதறினான் கோவாலு.
"என்னாடா ஓ சாமி ஓ சாமின்னு அலர்ற!யாருடா உங்க பாஸ்?"
பாஸ்கரன் தொடை ஏதோ ஒரு நடனம் ஆடியது.
பாஸ்கரனை கை நீட்டினார்கள் நால்வரும்.
"டேய்...இங்க வாடா.."முறைத்தவாறு பக்கத்தில் இருந்த கான்ஸ்டபிள் நீட்டிய லத்தியை வாங்கினார்.
"சார்... .. சார்... நான் .. கொள்ளைக்காரன் இல்லை..கொள்கைக்காரன்…!"
"என்னடா உன் கொள்கை? பேங்க்ல கொள்ளை அடிக்கறத்தா?"
"சார்.. சார்...பார்க்கதான் நான் டெரர் மத்தபடி நான் கொள்ளைக்காரன் இல்லை.."
கோலி குண்டு கண்கள் கலங்க சொன்னான்.
"என்னவோ கொள்கைக்காரன்னு சொன்ன?"
"ஆமாம் சார்... எதையும் ஆராய்ந்து பார்த்து எழுதணும்னு நினைக்கிற எழுத்தாளர் சார் நான்.."
"ஓஹோ..நீர் பெரிய எழுத்தாளர்ன்னா...கொலை, கற்பழிப்பு எல்லாம் செய்து பார்த்திட்டு தான் எழுதுவியா?
துப்பாக்கி ஏது?"
"சாரி சார் இது தீபாவளி கேப் வெடிக்கிற துப்பாக்கி..சும்மா பையனுக்கு வாங்கினேன்.."
"இவன்க எல்லாம் யாரு?உன் கூட்டாளிகள் தானே?"
"சார்.. சத்தியமா இவங்கெல்லாம் யாருன்னு தெரியாது.."
"அப்புறம் எப்படி ஒரே மாதிரிகட்டம் போட்ட டீ ஷர்ட் போட்டு வந்தீங்க?"
"சார் அது தற்செயலா நடந்தது.."
"டேய்..இங்க வா..இவன பார்த்து இருக்கியா?"பட்டாசு பாலுவைப் பார்த்துக் கேட்டார் இன்ஸ்பெக்டர்.
"சார்..இந்த ஆளை இன்னிக்கு தான் பார்க்கிறேன்.."
அலறியவாறு சொன்னான்.
"உன் பேரு என்ன?"
"பட்டாசு பாலு சார்!"
"அது என்னடா பட்டாசு பாலு?"
"அதுவா சார்... சின்ன வயசில தீபாவளி முடிஞ்ச மறுநாள் முதல் தெரு தெருவா வெடிக்காத பட்டாசெல்லாம் பொறுக்குவான்
அதனால்தான் அவனுக்கு அந்த பெயர்.."குறுக்கிட்டு கோவாலு பெயர் காரணம் சொன்னான்.
"என்னடா வேலை பார்க்கிறீங்க?"
"சார் நான் ஓட்டல்ல பரோட்டா சுடறேன்.. அதனால்தான் சுடணும் என் கூட வர்றீயான்னு கேட்டான் கோவாலு அதான் வந்தேன்.."
"டேய்...நீ?"
"சார் என் பேரு நாய் சேகர்.."
"அவன் பெயர் காரணம் நான் சொல்றேன் சார். "பட்டாசு பாலு கை தூக்கினான்.
"ம்...சொல்லு!"இன்ஸ்பெக்டர் சொன்னார்.
"கார்பரேஷன்ல நாய் பிடிக்கிற வேலை செஞ்சிட்டு இருந்தான் சார்.. விலங்குகள் பாதுகாக்க ஹோலி கிராஸ் அமைப்பு தடை போட்டதால நாய் பிடிக்கிறதில்லை..நாய் புடிச்ச சேகரு..நாய் புடிச்ச சேகருன்னு சொல்லி இப்ப நாய் சேகர் ஆயிட்டான்.."
"டேய் அது ரெட் கிராஸ்...ஹோலி கிராஸ் ஸ்கூலுடா..!"கோவாலு சொன்னான்.
"நீங்க பண்ண வேலை என்னன்னு தெரியுமா?"
"ரெஃப்ரிதானே?"
"டேய் ராபெரி.. அதாவது கொள்ளை..தண்டனை என்னன்னு தெரியுமா?"
"சாமி..சாமி.. வெறும் ஒன்றரை ரூபாய்க்கு இந்த தண்டனையா கொடுப்பாங்க..?"
"ஒன்றரை ரூபாயா?"இன்ஸ்பெக்டர் குழப்பமாக கேட்க,"மேனேஜர் கிட்ட கேட்டதற்கு ஒன்றரை தான் இருக்குன்னு சொன்னாரு.."
இன்ஸ்பெக்டர் மேனேஜரை பார்க்க அவர்
"சார் ஒன்றரை கோடி இருக்குன்னு சொன்னேன்.இவங்க தப்பா புரிஞ்சுகிட்டாங்க.."
"சார் ஒரு ஐந்தாயிரம் ரூபாய் கொள்ளை அடிச்சு ஆளுக்கு ஆயிரம் எடுத்துக்கலாம் ன்னு முடிவு பண்ணோம்.."கோவாலு சொல்ல இன்ஸ்பெக்டர் உட்பட எல்லோரும் சிரித்து விட்டனர்.
நால்வரும் திருதிருவென முழிக்க
பாஸ்கரன் "எங்கள் மன்னிச்சு விட்டுடுங்க.."என்று கெஞ்ச,பேங்க் ஊழியர் ஒருத்தர் ஓடி வந்து ,"சார் எங்க சாப்பாடு எல்லாம் எடுத்து சாப்பிட்டுடாங்க.."
"டேய் நீதான் சாப்பிட்ட நீயே பதில் சொல்லு!"என்றான் பட்டாசு பாலு.
"சார்..பாஸ்தான் சாப்பாடு பையை காலி பண்ணுன்னு சொன்னாரு.."
"டேய்.. நான் சொன்ன காலி வேறடா!"என்று தலையில் அடித்துக் கொள்ள சிரித்து விட்டார் இன்ஸ்பெக்டர்.
மற்றவர்களும் சிரிக்க,வேலை பளூவில் இருந்த டென்ஷன்களை
கலைந்தனர் வங்கி ஊழியர்களும் காவல்துறை நண்பர்களும்.
Author: siteadmin
Article Title: 17. 'பஞ்ச' பாண்டவர்கள்...- ச.மணிவண்ணன்
Source URL: Nectar Novels-https://nectarnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Article Title: 17. 'பஞ்ச' பாண்டவர்கள்...- ச.மணிவண்ணன்
Source URL: Nectar Novels-https://nectarnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.