• ஹாய் மக்களே! நம் Nectar Novels தளத்திற்கு நல்வரவு🙏😍😍 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள் nectarnovels.ss@gmail.com 🩷 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...👇 வேதா விஷால் & அனன்யா🙏💖

20. விபரீத போஸ்டர் செய்த மாயம் - புவனா சந்திரசேகரன்

siteadmin

Administrator
Staff member
Feb 3, 2026
75
33
18
chennai
விபரீத போஸ்டர் செய்த மாயம்


“ ஹலோ, ஹலோ, அப்படியா? ”

“ ஆமாங்க, நெஜமாவா சொல்றீங்க? “

“ என்னோட படம்தான் அது. புதுப் படம். நல்ல திறமையுள்ள பசங்க”

“ ஆமாங்க, என்னைப் பத்தி நானே ஒசத்தியாப் பேசிக்க முடியுமா? நீங்க சொன்னாச் சரியாகத்தான் இருக்கும்”

“ தேங்க்ஸுங்க. நீங்களே சொல்லிட்டீங்க. ரொம்ப சந்தோஷமாத்தான் இருக்கு”

“ என்ன ஆயிரம் கோடி பிஸினஸா? அப்படில்லாம் பேராசை கெடையாதுங்க. ஏதோ போட்ட முதல் திரும்பக் கெடைச்சாப் போதும். உண்மையாத்தான் சொல்றேன். அடுத்த படம் எடுக்க அப்பத்தானே மனசு வரும்? ”

தொடர்ந்து மொபைல் அடித்துக் கொண்டே இருக்க, மாற்றி மாற்றிப் பேசிக்கொண்டிருந்த
ஜகத்ரட்சகன் ஒரு கட்டத்தில் ஓய்ந்து போய், எல்லா மொபைல் ஃபோன்களையும் ஏரோபிளேன் மோடில் போட்டார். லேண்ட் லைன் ஃபோனுடைய ரிசீவரை எடுத்து மேசையில் கவிழ்த்து வைத்தார்.

“ என்னடா பசங்களா செஞ்சு வச்சிருக்கீங்க? அழைப்புக்கு மேல அழைப்பு. பேசிப் பேசி வாயே வலிக்குது” என்று எதிரேயிருந்த இளைஞர்களைப் பார்த்து உற்சாகத்துடன் பேசினார்.

திடீர்த் தயாரிப்பாளராகக் களத்தில் குதித்து ஓவர் நைட் ஓபராயாகப் புகழேணியில் கிடுகிடுவென ஏறிக் கொண்டிருக்கும் ஜகத்ரட்சகனின் அலுவலக அறை அது.

அவரெதிரில் பரிசோதனை எலிகளாக உட்கார்ந்திருந்த இரண்டு பாவப்பட்ட ஜென்மங்களில் ஒருத்தன் யோகேஷ் புஷ்பராஜ், டைரக்டர் கம் கதாசிரியர் என்று தன்னை அழைத்துக் கொண்டு சினிமா என்னும் மாயக்குளத்தில் குதித்திருக்கிறான். அடுத்தவன் மியூஸிக் டைரக்டராக முயற்சி செய்து கொண்டிருக்கும் ஆனந்தன் ஆளவந்தான்.

குறைந்த பட்ஜெட்டில் புதிய படமொன்றின் கதையைச் சொல்லி, ஜகத்ரட்சகனிடம் அட்வான்ஸ் வாங்கியிருந்தார்கள். முழுக்க முழுக்கப் புதுமுகங்களாகப் போட்டு, முதுமலை காட்டுப்பகுதியில் படப்பிடிப்பையும் ஆரம்பித்துவிட்டார்கள்.

நேற்று படத்திற்கான புதிய போஸ்டர் வெளியிடப்பட்டது. இரவோடு இரவாக மெட்ரோ ஸிட்டிகளின் சுவர்களை அலங்கரித்தது புதிய படத்திற்கான போஸ்டர்.

“ எடுத்த எடுப்பிலேயே போஸ்டர் எதுக்கு? சாதாரணமா இசை வெளியீட்டு விழா தானே நடக்கும்? ” என்று முரண்டு பிடித்துப் பார்த்தார் தயாரிப்பாளர்.

“ இல்லை சார், இங்க தான் நாம புதுமையா யோசிக்கறோம். எதையாவது கெக்கர பிக்கரன்னு செஞ்சா, பப்ளிக் மனசுல நிக்கும்” என்றான் புரடக்ஷன் கம் மார்க்கெட்டிங் மேனேஜர் கம் துணை நடிகர் ஏஜன்ட் கம் அஸிஸ்டன்ட் டைரக்டரான கொக்கரக்கோ குமார். அதாவது கோ. குமார் என்கிற பெயர், கொஞ்சம் கொஞ்சமாக, கோழி குமாராக மாறி இப்போது கொக்கரக்கோ குமாராக வந்து நிற்கிறது. சோஷியல் மீடியாவில் தகவல் பரப்பாளராக, விளம்பரப் பிரிவின் தலைமைப் பொறுப்பிலும் இருப்பதால் இந்தப் பெயரை மகிழ்ச்சியுடன் ஏற்றான் குமார்.

“ முட்டை கலக்கின்னா என்ன அர்த்தம் தெரியுமா? ”

“ ஏதோ சாப்பாடு ஐட்டம்னு நினைக்கறேன். ஆம்லெட்டுக்குத் தங்கச்சியோ ? ”

“ இருக்கலாம். எனக்குத் தெரியாது. ஏன்னா நான் சைவம். ஆனா அழகான பொண்ணுக்கும் அதுக்கும் என்ன சம்பந்தம்னு சத்தியமாத் தெரியாது. அந்தப் பாட்டு இப்போ டிரெண்டிங்காப் போகுதுல்ல. அது மாதிரியே தான் இதுவும். என்னன்னு சரியாப் புரியலைன்னா ஒவ்வொருத்தரையும் திங்க் பண்ணச் சொல்லி நாம கம்பெல் பண்ணறோம். அதையே நினைச்சு, அதையே பேசினா, நிச்சயமா வைரலாகுமா ஆகாதா? “

“ ஆகும், ஆகும், அப்படின்னா நாமும், ‘அடடா, என் சொட்டைத் தலையா’ ன்னு பாட்டு ரெடி பண்ணிரலாமா ? ”

“ சேச்சே, அப்படில்லாம் காப்பி பேஸ்ட் பண்ணவே கூடாது. வித்தியாசமா யோசிக்கறோம். வின் பண்ணறோம்” என்று அந்த குமார் சிரிக்க, அவனுடைய சட்டையில் இருந்த பெரிய பெரிய பூக்களும் சேர்ந்து குலுங்கிக் குலுங்கிச் சிரித்தன.

ஒருவழியாக நேற்று இரவு சென்னை, மதுரை, கோவை, திருச்சி போன்ற பெரிய பெரிய ஊர்களில் போஸ்டர்கள் பெருமளவில் ஒட்டப்பட்டன. அதற்கான எதிர்வினை இன்று கிடைக்கத் தொடங்கிவிட்டது. அதற்கு அடுத்த நாள் காலையில் தான் அதாவது இன்று புஷ்பராஜ் மற்றும் ஆனந்தனிடம் பேசிக் கொண்டிருந்தார் ஜகத்ரட்சகன் .

“ நம்ம ஐடியா வொர்க் அவுட் ஆயிடுச்சு. ஊரு பூரா நம்ம போஸ்டர் பத்திப் பேசறாங்களாம். இதுக்கெல்லாம் யாரு காரணம் தெரியுமா? “

“ தெரியாது ஸார். நீங்களே சொல்லிடுங்க”

“ அதுதான் நம்ம பச்சைச் சட்டை பாமரன்”

“ பச்சைச் சட்டையா? அவரு நக்கீரர் பரம்பரை ஆச்சே? எல்லாப் படத்திலயும் குத்தம் கண்டுபிடிச்சுக் கிழி கிழின்னு கிழிப்பாரே? ”

“ அதுதான் எல்லாருக்கும் ஆச்சர்யம். சாதாரணமாப் படம் வந்தப்புறம் தானே விமர்சனம் செய்வாரு? ”

“ ஆமாம் ஸார். நாம இப்பத்தான் படத்தை ஷுட் பண்ணிட்டிருக்கோம்”

“ பாரு, அதிலயும் நம்ம படத்துக்காகவே ஒரு புதுமையான விஷயத்தைச் செஞ்சுப்புட்டாரு இந்த மனுஷன்”

“ அப்படி என்ன புதுமை? புரியலையே! நீங்களே விளக்கமாச் சொல்லிப் போடுங்க? ” சரண்டர் ஆன இளைஞர்களை ரட்சிக்க எண்ணிய ஜகத்ரட்சகன் விளக்க ஆரம்பித்தார்.

“ நம்ம போஸ்டர்ல என்ன இருந்துச்சு? ”

“ காட்டுக்குள்ள ஒரு புலி. அதுக்குப் பக்கத்துல அழகான பொண்ணு கிராமிய உடையில். அந்தப் பொண்ணோட கை, புலி வாய்க்குள்ள. பின்னால கொஞ்ச தூரத்தில் கையில துப்பாக்கியோட ஒருத்தன் நிக்கறான். அந்தப் பொண்ணு, புலியோட கழுத்துல கத்தியால் தாக்க முயற்சி செய்யறா”

“ அதெல்லாம் சரி. நீ எதுக்காக இந்த ஸீனை போஸ்டரா வைக்க நெனைச்சே?”

“ அது கதையில வர சீன் ஸார்”

“ அதையும் தான் புரிய மாதிரிச் சொல்லேம்பா”

“ அது வந்து, அந்தப் பொண்ணு பணக்கார ஜமீன்தார் வீட்டுப் பொண்ணு. சரியான சாப்பாட்டு சீதை! ஏற்கனவே கொழுகொழுன்னு இருப்பா. வீட்டில் அவளோட கல்யாணத்துக்குப் பாத்துட்டிருக்கறதுனால ஸ்வீட் சாப்பிட விடமாட்டாங்க. இவ யாருக்கும் தெரியாமல் அல்வாவைக் கொண்டு வந்து சாப்பிட எடுக்கும்போது, அவளோட கையைப் புலி கவ்விடுது. அல்வா, புலி வாயில் ஜம்முன்னு ஃபெவிகால் மாதிரி ஒட்டிக்கிட்டதால, புலியால திறந்த வாயை மூட முடியலை. அவளோ, தன்னோட கையில இருந்த கத்தியை வச்சுப் புலியைத் தாக்க முயற்சி செய்யறா. பின்னால வர ஹீரோ அவளைக் காப்பாத்தப் பாக்கறான். இது ஒரு காமெடியான ஸீன். முதல் முறையா ஹீரோ, ஹீரோயின் சந்திக்கற காட்சி”

“ இந்தக் கதையை யாருக்கும் சொல்லலை தானே? இந்த போஸ்டரை வச்சு நம்ம பாமரன் ஸார் ஒரு பயங்கரமான விளக்கம் தந்துட்டாரு. அதைக் கேட்டு எல்லாரும் நம்ம புத்திசாலித்தனத்தையும், கிரியேட்டிவ் திங்கிங்க் பத்தியும் எவ்வளவு புகழறாங்க தெரியுமா? ”

“ அப்படி என்ன விளக்கம் தந்தார் பாமரன்? ”

“ இந்தப் படம் அரசியல் நையாண்டிப் படம்னு அடிச்சுச் சொல்றாரு. இந்தக் காட்சியில் பயன்படுத்தப் பட்டிருக்கற பொருட்கள் எல்லாமே இன்னைக்கு ஒண்ணை ஒண்ணு விழுங்கத் துடிக்கற அரசியல் கட்சிகள்னு அடிச்சுச் சொல்லறாரு”

“ அது எப்படி? ”

“ அடடா, நல்லா யோசிச்சுப் பாருங்க டைரக்டர் ஸார். புலி, புலியோட நிறம், அந்தக் காட்டுப் பகுதியில் புலியைச் சுத்தியிருக்கற மரங்களின் இலைகள், அந்தப் பொண்ணோட கை, காட்டுக்குள்ள பரவியிருக்கற சூரிய வெளிச்சம். புலியும், பொண்ணும் ஒண்ணை ஒண்ணு வீழ்த்தப் பாக்கறாங்க இல்லையா? அடுத்ததாகத் தள்ளி நிக்கற மனுஷனோட கையில துப்பாக்கி இருந்தாலும் சுடலாமா, வேண்டாமான்னு குழப்பத்திலேயே இருக்கான். அதாவது கூட்டணி யாரோட வைக்கிறது, யாரை எதுக்கறதுன்னு தயக்கம்”

“ அந்த மனுஷன் யாரு? “

“ துப்பாக்கியை வச்சு அதையும் பூடகமாகக் காட்டறதா பாமரன் சொல்லிட்டாரே? இன்னுமா புரியலை? ”

“ ஓ, அப்படி வராரா? புதுசா ஆரம்பிக்கப்பட்ட கட்சி, அதோட வெற்றி. புரியுது ஸார், நல்லாப் புரியுது”

“ நாம அதாவது இந்தப் படத்தோட டீம், ரொம்ப புத்திசாலித்தனமா வேலை செய்யறோம்னும், . இதுவரை யாருமே பண்ணத் துணியாத அரசியல் நையாண்டிப் படம் எடுத்து அசத்தப் போறாங்கன்னும் சொல்லிருக்காரு. அதாவது இந்த யெஸ் மினிஸ்டர், யெஸ் பிரைம் மினிஸ்டர் இந்த மாதிரியெல்லாம் ஸீரியல் வந்துருக்காமே, அது மாதிரி போல்டான கான்செப்ட் வச்சு எடுக்கறாங்கன்னு புகழோ, புகழ்னு புகழ் பாடறாரு. எப்பப் படம் வரும்னு காத்துட்டிருக்கேன்னு வழக்கத்துக்கு மாறாப் பாராட்டிப் பேசிருக்காராம். அவரோட வீடியோவைப் பாத்துட்டுத்தான் இவ்வளவு பேர் எனக்கு ஃபோன் செஞ்சாங்க.”

“ தம்பி, நீங்க என்ன செய்யறீங்கன்னா.. “ என்று ஆரம்பித்தபோது குரலில் அதிக மரியாதை குடியேறியிருந்தது.

“ சொல்லுங்க ஸார் ”

“ நீங்க ஏதோ காமெடி ஸீன் அப்படின்னு எனக்கு அல்வாவை வச்சுச் சொன்னீங்க இல்லையா? அதைத் தயவு செஞ்சு வேறு யாரு கிட்டயும் சொல்லவேணாம். நாம என்ன செய்யறோம்னா, இந்த போஸ்டர் விளம்பரத்தை வச்சு எல்லாருக்கும் அல்வா கொடுத்துரலாம்”

“ அப்படின்னா? ”

“ என்னப்பா இப்படிப் பச்சப் புள்ளையா இருக்கீங்களே? வாழ்க்கைல ஜெயிச்சு முன்னேற வேணாமா? கதையை மாத்துங்கங்கறேன். அவரு சொன்ன மாதிரி அரசியல் கட்சிகளை வச்சு நையாண்டி செஞ்சு படத்தை எடுத்துரலாம்”

“ அந்தக் கதை என்னோட கொழந்தை மாதிரி ஸார். அதை மாத்த மாட்டேன். என் குழந்தையை நானே கழுத்தை நெரிக்கற மாதிரி ஆயிடும்”

“ இதோ பாருங்க தம்பி. இந்த ஸெண்டிமெண்ட்லாம் கதையில எங்கேயாவது ஒரு டயலாக்குல தூக்கிப் போடுங்க. இப்ப உங்களால கதையை மாத்த முடியலைன்னா, அதுதான் அ, ஆ, இ ஈ, ஐன்னு ஏதோ சொல்லறாங்களே? அதை யூஸ் பண்ணிக்கலாம். அதுதான் கதை, பாட்டு, படம் எல்லாமே தந்துருமாமே? ”

“ ஓ, நீங்க ஏஐ பத்திச் சொல்லறீங்களா? ஆர்ட்டிஃபிஷியல் இண்டலிஜன்ஸ் ஸார் அது. ஏஐ தர கதையில் நிறைய லாஜிக் ஓட்டைகள் இருக்குமே? ”

“ ஏன் மனுஷங்க எழுதற கதையில லாஜிக் இடிக்கவே இடிக்காதோ? எத்தனையோ ஸுபர் ஹிட் படத்துல எத்தனையோ லாஜிக் ஓட்டைகள் இருந்துருக்குன்னு தெரியாதா உங்களுக்கு. சுத்தி நின்னு சுடற எல்லோராட துப்பாக்கிக் குண்டும் ஹீரோ மேல படாது. ஆனா அவன் சுடற ஒவ்வொரு குண்டும் குறி தவறாமத் தாக்கும். அப்புறம் எதிரிகள் எல்லோரும் க்யூவில நின்னு ஒவ்வொருத்தரா வந்து ஹீரோட்ட அடி வாங்கற ஸீன். அப்புறம் ஹீரோ, ஹீரோயின் போடற மாறுவேஷம் எதிரிங்களால கண்டுபிடிக்கவே முடியாதாம். நமக்கெல்லாம் தெரிஞ்சுருமாம். இது மாதிரி ஆயிரம் ஓட்டை என்னால சொல்ல முடியும். இதிலெல்லாம் என்ன லாஜிக் இருக்கு? சொல்லுங்க பாக்கலாம்.”

“ ஸார், கடைசியா ஒரு சந்தேகம். இப்போ கதையில தோக்கறதாக் காமிக்கற கட்சி, அதுதான் நீங்க சொல்லற மாதிரியே பூடகமா நாம சொல்லற கட்சி, ஒருவேளை ஜெயிச்சு ஆட்சிக்கு வந்தா நம்மைச் சும்மா விடுவாங்களா?”

“ வெயிட் பண்ணுவோம். எலேக்ஷன் ரிசல்ட் வர சமயத்தில் அதுக்கேத்த மாதிரியே படத்தோட முடிவை வச்சு ரிலீஸ் பண்ணிடுவோம். ஆளும் கட்சியோட அபிமானத்தைச் சம்பாதிச்சா விருதெல்லாம் அள்ளிடலாமே? ”

“ யோசிச்சுச் சொல்லறேன் ஸார்”

“ என்னைக்கு யோசிச்சு என்னைக்கு முடிவைச் சொல்லுவீங்க? அட, போங்க தம்பி. இப்பவே சரின்னு சொல்லுங்க. அடுத்தடுத்து நாலு படம் என்னோடயே பண்ணுங்க. இப்பவே அக்ரிமென்ட் போட்டுரலாம். பச்சைச் சட்டை பாமரனே பாராட்டின டைரக்டரை அவ்வளவு ஈஸியா விட்டுருவேனா? ”

இந்த சமயத்தில் படாரென்று கதவு திறந்தது. உள்ளே ஓடிவந்தான் கொக்கரக்கோ குமார்.

“ ஸார், எலெக்ஷனுக்குத் தேதி அறிவிச்சுட்டாங்க ஸார். நம்ம படத்தை முடிச்சு ரிலீஸ் பண்ண சரியான டயம் ஸார் “ என்று படபடவென்று பொரிந்து தள்ளினான்.

புஷ்பராஜும், ஆளவந்தானும் ஞேயென்று விழித்து, ங போல் வளைந்து டேபிளில் சாய்ந்து, “ழ ள ல ங ஞ ம ண”என்று ஏதேதோ உளறியபடி மயங்கிச் சரிந்தார்கள்.


புவனா சந்திரசேகரன்.
 

Author: siteadmin
Article Title: 20. விபரீத போஸ்டர் செய்த மாயம் - புவனா சந்திரசேகரன்
Source URL: Nectar Novels-https://nectarnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
  • Haha
Reactions: Mrs Beenaloganathan

Mrs Beenaloganathan

Active member
Mar 21, 2025
265
18
43
46
Bangalore
அரசியல் நையாண்டி
அக்குவேரா ஆணிவேரா
அலசி ஆராய்ந்து
அதகளப் படுத்தி விட்டீர்கள்
அருமை👏🏻👏🏻👏🏻👏🏻
அற்புதம்👍🏻👍🏻👍🏻
படம் ஒரு கோணம் என்றால்
பார்க்கும் பார்வை ஒரு கோணம்...
பார்வைகள் பலவிதம்
பிரமாதம்....