அர்னால்டும் அஷ்டமத்து சனியும்:
"யோவ் அர்னால்டு அழகு கருப்பசாமி... எங்கய்யா போய் தொலைஞ்ச... எல்லாரும் திருநள்ளாத்துக்கு வந்து தன்ன பிடிச்ச பீடைய தான் தொலைச்சுட்டு போவாங்க... நீ இப்படி மொத்த குடும்பத்தையும் தொலைச்சுட்டு, நீயும் எங்கையோ போய் தொலைஞ்சுட்டீயேய்யா... நீ மட்டும்..." என ஆக்ரோஷமும், ஆங்காரமும், இமையோரங்களில் முட்டிக் கொண்டிருந்த கண்ணீருமாய் ஒலிவாங்கியில் மணிமேகலை கடுகடுத்துக் கொண்டிருக்க, அவள் கையிலிருந்த ஒலிவாங்கியை வெடுக்கென பிடுங்கினாள் சீருடை அணிந்த பெண் காவலர் ஒருத்தி.
"இந்தாம்மா... அதான் ஒன்னுக்கு பத்து தடவையா மைக்ல அனோன்ஸ் பண்ணி இருக்கோம்ல... வருவாரு... அனத்தாம அப்படி ஓரமா போய் உக்காரு... போ..." என்று அதட்டலாய் சொல்லிவிட்டு,
"அந்த ஆளு தொலைஞ்செல்லாம் போயிருக்க மாட்டாரு... இந்தம்மா பேசற பேச்சுக்கு... விட்டது சனியனு இந்நேரம் காசிக்கு பஸ்ஸ புடிச்சுட்டாரோ என்னமோ... நீ வேணா பாரேன்... அப்படிதான் இருக்கும்..." என்றாள் அருகில் நின்றிருந்த இன்னொரு பெண் காவலரிடம். அது மேகலையின் காதுகளிலும் விழத்தான் செய்தது.
'இது மட்டும் என் ஊரா இருக்கணும்... அப்ப தெரியும் இந்த மணிமேகல யாருனு... ஊரு பேரு தெரியாத இடத்துல இப்படி வந்து நிக்க வச்சுட்டீயேய்யா...' என கறுவிக் கொண்டவளுக்கு மொத்த கோபமும் கணவனின் மீது தான் திரும்பியது.
"இந்தாம்மா ஆரெஞ்சு சுடிதாரு... முதல புள்ளைய ஒழுங்கா புடி... தடுப்ப தாண்டிட்டு வெளிய வரான் பாரு..." என்று ஒலிவாங்கியில் அதட்டலாய் சத்தமிட்ட அந்த பெண் காவலர், அதை அணைத்துவிட்டு, "எங்கையாவது பராக்கு பாத்துட்டு புள்ளைய தொலைச்சுட வேண்டியது... அப்பறம் புள்ளைய காணும் புருஷன காணும்னு நம்ம உயிர வாங்க வேண்டியது..." என்றாள் எரிச்சலாய் பக்கத்தில் நின்றிருந்தவளிடம். இதுவும் மணிமேகலையின் காதுகளில் துல்லியமாய் விழத்தான் செய்தது. விழ வேண்டும் என்று தானே சொல்வதும்.
ஐந்து நிமிடம் பல்லைக் கடித்துக் கொண்டு அமர்ந்திருந்த மேகலை, "ஏன் மேடம்... இன்னும் வரக் காணுமே... காதுல விழுந்துச்சோ என்னவோ..? எதுக்கும் இன்னொரு தடவ அனோன்ஸ் பண்ணுங்களேன்..." என்றார் தழைந்த குரலில் பவ்வியமாய்.
அவளை வேண்டாவெறுப்பாய் பார்த்தவர், "எத்தன தடவம்மா அனோன்ஸ் பண்ணறது... இந்த ஒரு மணி நேரத்துல ஒன் புருசன் பேர நூறு தடவைக்கும் மேல ஏலம் விட்டாச்சு... அவரே வருவாரு... கொஞ்ச நேரம் அமைதியா அப்படி ஓரமா போய் நில்லும்மா..." என்றவளுக்கும் அவளைப் பார்க்க பாவமாய் இருத்திருக்க வேண்டும். மேகலையை சுற்றி மொத்த குடும்பமும் நின்று கொண்டு ஏதோ சமாதானம் சொல்லிக் கொண்டிருந்தது.
அடுத்த இரண்டே நிமிடத்தில், மேகலை மீண்டும், "மேடம்..." என ஆரம்பிக்க, அவளை முறைத்தபடியே, "மிஸ்டர். அர்னால்ட் அழகு கருப்பசாமி... உங்கள் குடும்பம் எங்களிடம் பாதுகாப்பாக இருக்கிறது... கடந்த ஒரு மணி நேரத்திற்கும் மேலாக உங்களைக் காணாததில் உங்கள் குடும்பத்தினர் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி பெரும் வேதனையில் இருக்கின்றனர் என்பதை மிகுந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்... எனவே விரைந்து வந்து உங்கள் குடும்பத்தை மீட்டு செல்லும்படி பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறோம்... இப்படிக்கு என்றும் உங்கள் சேவையில் மனம் மகிழும் காவல்துறை நண்பர்கள்..." தேன்மதுர குரலில் நளினமாய் சொல்லி முடித்து விட்டு, சலிப்பாய் மேகலையைப் பார்த்தாள், 'இப்போது திருப்தியா..?' என்பதைப் போல.
இன்னொரு பக்கமோ, "என்னைய்யா எங்கூர்ல கிலோவே பத்து ரூபாய்க்கு தரான்... நீ என்னென்னா பீஸ் இருபது ரூபானு என்கிட்டவே அளந்து விடற..? பாத்துப் போட்டு குடு... அதான் பத்து பீஸ் வாங்கறேன் இல்ல..." என்று கறாராய் பேரம் பேசிக் கொண்டிருந்தார் அர்னால்ட்.
"அப்படினா நீங்க உங்க ஊர்லையே போய் சாப்பிடுங்க சார்..." என்று அத்தனை பவ்வியமாக சொன்னவன் முகத்தில் எள்ளும் கொள்ளும் ஒன்றாய் வெடித்தது.
அவன் பத்து துண்டுகள் இருநூறு என்க, வம்படியாய் அதை ஐம்பது ரூபாய்க்கு கேட்டுக் கொண்டிருந்தார் அர்னால்ட். பேரம் படியாமல், நேரம் தான் நீண்டு கொண்டிருந்தது.
"என்னப்பா ரொம்ப தான் வீஞ்சுக்கறீயே... அதெல்லாம் குடுக்கலாம் குடு..." என்று ஒரு தர்பூசணித் துண்டில் கை வைக்கப் போனார் அர்னால்ட்.
"இந்த சாரே... இருநூறு ரூபா காச வச்சுட்டு பழத்துல கைய வை... இல்லைனா திரும்பிப் பார்க்காம நடையக் கட்டு... என் யாபாரத்த கெடுக்காத சொல்லிட்டேன்..." கையிலிருந்த கத்தியால், லாவகமாய் ஒரு தர்பூசணியைத் துண்டு போட்டபடியே முறைத்துக் கொண்டு சொன்னான் அவன்.
அந்த கத்தியின் கூர்மையைப் பார்த்தவர், ஒரு நொடி எச்சிலைக் கூட்டி விழுங்கிவிட்டு, "சரிப்பா... சரிப்பா... உனக்கும் வேண்டாம்... எனக்கும் வேண்டாம்... பத்துப் பீஸ் நூறு ரூபானு குடு... இப்ப உனக்கு சந்தோஷம் தானே..." என அதிரடியாய் விலையை ஏற்றிக் கேட்டுக் கொண்டிருக்கும் போதே,
"யோவ் அர்னால்டு... இங்க என்னைய்யா பண்ணற..? உன்ன காணும்னு அங்க ஆளு மாத்தி ஆளு மைக்குல மணிக் கணக்கா கூவினு இருக்கானுங்க... நீயென்னனா இங்க அல்ப தனமா பத்து ரூவாய்க்கு பேரம் பேசிட்டு நிக்கற..." என்று முதுகில் பட்டென்று ஒன்று வைத்தார் பரந்தாமன். அர்னால்டின் சகலைப்பாடி.
அதில் தடுமாறி, தர்பூசணியை வெட்டிக் கொண்டிருந்த கத்தி மீதே விழப் போனவரை பரந்தாமன் தான் இழுத்துப் பிடித்து காப்பாற்றும்படி ஆனது. ஒரு நொடி மரணம் அவரின் கண்முன் வந்துவிட்டு சென்றிருந்தது.
"யோவ் சகல... எதா இருந்தாலும் குணமா வாயில சொல்லி பழகுய்யா... ஒரு நிமிஷத்துல அந்த எமனோட வாகனமே வானலோகத்துல இருந்து டைரக்டா என் முதுகுல லேன்ட் ஆன மாதிரி ஆகிடுச்சு..." என்றார் வலித்த இடத்தை தேய்க்க முயன்றபடி. அடி சுள்ளென்று நடு முதுகில் விழுந்திருக்க, அது எட்டியும் தொலையவில்லை.
"உனக்கு பேரு வச்சான் பாரு எங்க சித்தப்பன் அவன சொல்லணும்ய்யா... பலமா ஒரு காத்தடிச்சா தாங்க மாட்ட போல..." என்றார் நக்கலாய் பரந்தாமன்.
நம் அர்னால்டின் தந்தை, நடிகர் அர்னால்டின் பரம பக்தர். அதனோடு போனால் போகிறது என்று குலதொய்வத்தின் பெயரையும் இணைத்து மகனுக்கு சூட்டி விட்டார்.
"எங்கூர்ல இதத்தான், யானை இளைச்சா சித்தெறும்பு கூட ஏறி மிதிச்சுட்டு போகும்னு சொல்லுவாங்க..."
"எங்கூர்லையும் அதான் சொல்லுவாங்க... அத வச்சு நீ இப்ப என்ன சொல்ல வர..." என்றார் கடுப்பாய் பரந்தாமன்.
"ஒரு ஹெவி வெய்ட் சாம்பியனோட பையன பாத்து என்னைய்யா பேச்சு பேசற... நானென்னலாம் அந்த காலத்துல..." என சொல்லிக் கொண்டே போக, பரந்தாமனின் முறைப்பில் பசை போட்டது போல் வாய் மூடிக் கொண்டது. அந்த பெயரின் அளவிற்கு இல்லையென்றாலும் ஓரளவிற்கு திடகாத்திரமாய் இருந்த மனிதன் தான். புகைப்பழக்கம், காசநோயையும் கொடுத்து உடலையும் உருக்கி விட்டது. அர்னால்டால் இத்தனைக்குப் பிறகும் அந்த பழக்கத்தை தான் விட்டொழிக்க முடியவில்லை.
'நம் நாட்டிற்கு என்னதான் ஆயிற்று... குப்பை மேடுகளும்... சூழும் புகை மண்டலமும்...' என்னும் சொற்தொடரின் வாழும் சாட்சியாய் நின்று கொண்டிருந்தார் அர்னால்டு.
தர்பூசணியின் தோலும் மற்ற குப்பைகளும் ஒரு பக்கம் குப்பைத் தொட்டியையும் தாண்டி மலைபோல் குவிந்திருக்க, கையில் இன்னுமே புகைந்து கொண்டிருந்த சிகரெட்டுடன் புகை மண்டலத்திற்கு நடுவில் தான் நின்று கொண்டிருந்தார் அர்னால்டு.
அதற்குள், "சார்... உங்களுக்கு தெரிஞ்சவரா சார்... முதல அந்த ஆள கூட்டிட்டு கிளம்புங்க சார்... உங்களுக்கு புண்ணியமா போகும்... முக்கா மணி நேரமா பத்து ரூபாய்க்கு பேரம் பேசி என் கழுத்தறுக்கறாரு மனுஷன்..." என்றான் அழாத குறையாக, தர்பூசணிக் கடைக்காரன்.
"போறேன்ய்யா... ரொம்பத் தான்..." என கடைக்காரனிடம் அர்னால்டு சிலுப்பிக் கொள்ள, பரந்தாமனோ கீழ் கண்களால் முகத்தை சுளித்தபடி அர்னால்டையும் அவரை சுற்றிக் கிடந்த சிகரெட் துண்டுகளையும் கேவலமாய்ப் பார்த்துக் கொண்டிருந்தார்.
சகலையின் பார்வையில் அசடு வழிந்தபடியே, "இல்ல... அது வந்து... ரொம்ப வெயிலா இருக்கே... நாமளும் சாப்பிட்டு மத்தவங்களுக்கும் அப்படியே வாங்கிட்டு போவோமேனு..." என்று தலையை சொறிந்தார் அர்னால்டு.
"பாத்தாலே தெரியுது... இதுக்கு தான் மொத்த குடும்பத்தையும் கழட்டி விட்டுட்டு ஒத்தையில வந்தீராக்கும்... அப்படி எத்தன சிகரெட் தான்ய்யா புடிச்சு தொலைச்ச... உன்ன சுத்தி மினி பரங்கி மலை சைஸ்ல சிகரெட் துண்டா குவிஞ்சு கிடக்கு..." என்றார் கடுப்பாய் பரந்தாமன்.
"ரொம்ப பண்ணாதய்யா... என்னமோ சிகரெட்டையே கண்ணால பாக்காத மாதிரி... இரண்டே ரெண்டு தான் நான் புடிச்சேன்... ஒரு டீக்கடையினு இருந்தா நாலு பேரு வரத்தான் செய்வான்... சிகரெட்ட புடிக்க தான் செய்வான்... என்னமோ நானே எல்லாத்தையும் ஊதித் தள்ளன மாதிரி பேசற..." என்றார் நொடிப்பாய் அர்னால்ட்.
அவரை சுற்றி கிடந்த சிகரெட் துண்டுகள் வேறு எண்ணிக்கையை சொன்னது. அவரை முறைத்தபடியே, "ஒரு சிகரெட்டோட வெல என்ன..?" என்றார் கடுப்பாய் பரந்தாமன்.
"அத ஏன் சகல கேக்கற... பாவி பயலுவ கொள்ளை வெலைய இல்ல ஏத்தி வச்சுருக்கானுவ... இப்படி அத்தியாவசிய பொருளோட விலையெல்லாம் ஏத்திட்டே போனா சாமானிய மக்கள் எப்படி இந்த நாட்டுல வாழறது சொல்லு..." என்றார் அங்கலாய்ப்பாய் அர்னால்ட்.
"யோவ்... வாய மூடிட்டு பேசாம வந்துடு சொல்லிட்டேன்... ஒத்த சிகரெட்ட புடிக்க மொத்த குடும்பத்தையும் கழட்டி விட்டுட்டு வந்திருக்க நீயி... இரண்டு மணி நேரமா உன்ன காணும்னு அங்க உன் பொண்டாட்டி ஜிங்கு ஜிங்குனு ஆடிட்டு இருக்கு... வீட்டு ஆம்பளைங்க எல்லாம் ஆளுக்கு ஒரு பக்கத்துக்கு உன்ன தேடி அலைஞ்சுட்டு இருக்காய்ங்க... நீ என்னென்னா இங்க நின்னு சிகரெட்ட ஊதி தள்ளிட்டு தர்பூசணிக்கு பேரம் பேசிட்டு இருக்க... விளங்குமாய்யா... ஏற்கனவே அங்க கூட்டம் நெட்டி தள்ளுது... இந்நேரம் சாமி தரிசனமே பாத்துட்டு வெளிய வந்திருக்கலாம்... ஆளையும் மண்டையையும் பாரு..." என்றபடியே அவரைத் தரதரவென இழுத்துக் கொண்டு நடந்தார் பரந்தாமன்.
"வானா வர மாட்டேனா... அதுக்கு ஏன்ய்யா இந்த இழு இழுக்கற... கையே தனியா கழண்டு வந்திடும் போல..." என்றபடியே அவரின் இழுப்புக்குப் பின்னால் ஓடினார் அர்னால்ட்.
அர்னால்டின் ராசிப்படி, இந்த வருட சனிப்பெயர்ச்சியில் இருந்து அவரின் ராசிக்கு, அஷ்டமத்து சனி ஆரம்பிக்கிறது. போதாக்குறைக்கு ஒரு மாதத்திற்கு முன்பு தான் அவருக்கு நுரையீரலில் காசநோய் இருப்பதும் உறுதி செய்யப்பட்டிருக்க, திருநள்ளாறு வந்தே தீருவது என தீர்மானம் செய்துவிட்டார் மணிமேகலை. அப்படித்தான் மொத்தம் இருபத்தி இரண்டு பேரை திரட்டிக் கொண்டு குடும்பமாய் வந்திருந்தனர் அவர்கள்.
அர்த்தராத்திரி இரண்டரை மணிக்கே அவரை எழுப்பி அழைத்து வந்து, தலையில் எண்ணெய் வைத்து நளன் குளத்தில் முக்கி எடுத்திருந்தார் அர்னால்டின் சகதர்மினி. அதைக்கூட அர்னால்டு பொறுத்துக் கொள்வார். ஆனால், அவர் வெளியூருக்கு என்று பார்த்துப் பார்த்து வாங்கி ஆசையாய் அணிந்து வந்திருந்த கிளிப்பச்சை வண்ண ஜாக்கி ஜட்டியை அந்த குளத்திலேயே விட்டுவிட்டு வந்த அவலத்தை தான் அவரால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை.
நான்கு மணிக்கே ஒரு தேநீரை அருந்திவிட்டு சாமியை தரிசித்து விடலாம் என்று போனால், அனுமாரின் வால் போல் கோவிலில் இருந்து வளைந்து நெளிந்து இரண்டு கிலோமீட்டருக்கு நீண்டிருந்தது வரிசை.
வழக்கமாய் வெளியூர் மக்களின் கூட்டம் தான் முண்டி அடிக்கும். ஆனால், இன்று சனிப்பெயர்ச்சியாய் இருக்க உள்ளூர் மக்களின் கூட்டமும் அலை மோதியது.
"இன்னைக்கே பாத்தா தான் ஆச்சா... நாளைக்கு நாளை மறுநாள்னு வந்தா உன் சாமி முகத்த திருப்பிப்பாரா..?" என அர்னால்டு தெரியாத்தனமாய் வாயைவிட்டுவிட, காதில் இரத்தம் வருமளவிற்கு காய்ச்சி எடுத்துவிட்டார் மணிமேகலை.
வரிசை வேறு நத்தையைப் போல் ஊர்ந்து கொண்டிருக்க, புகைத்தே ஆக வேண்டும் என்ற கட்டாயத்திற்கு தள்ளப்பட்டிருந்தார் அர்னால்டு. சொந்தங்களின் கண்ணில் மண்ணைத் தூவிவிட்டு, சற்றே தொலைவில் இருந்த பெட்டிக் கடைக்கும் வந்துவிட்டார். வந்த பிறகு ஒன்றோடு நிறுத்த மனமில்லை. உண்மையில் தர்பூசணி வாங்குவதெல்லாம் அவரின் எண்ணத்தின் மூலையில் கூட இல்லை. அங்கே நிற்க, அவரின் மனதிற்கு அவரே சொல்லிக் கொண்ட சாக்கு அது.
திரும்பிச் செல்லும் வழியில் சூரிய ஒளி பட்டு தகதகத்துக் கொண்டிருந்தது அது..! அத்தனை துணிகளுக்கு மத்தியிலும் தனி மெருகோடு தெரிந்தது அர்னால்டுவின் ஜாக்கி ஜட்டி.
"யோவ் சகல... அந்த ஜட்டிய பாத்தா என் ஜட்டி மாதிரி தெரியல..."
"ஊரு உலகத்துல நீ ஒருத்தன் மட்டும் தான் ஜட்டி போடறீயா... பேசாம வாய்யா யோவ்..."
"என் ஜட்டிய எனக்கு தெரியாதா..? தொலைஞ்சுட கூடாதேனு தேடி பொறுக்கி கிளிப்பச்ச கலர்ல எடுத்ததுய்யா..." என்றார் ஆற்றாமையுடன் அர்னால்ட்.
"சரி அதுக்கென்ன பண்ணலாம் இப்ப..." என்றார் பரந்தாமன்.
"அதான் சுத்தி யாரும் இல்லையே..? போய் எடுத்துட்டு வந்திடலாமா..?" என்றார் அர்னால்ட்.
'அட அல்பமே...' என்பதைப் போல பார்த்தார் பரந்தாமன்.
"தொள்ளாயிரத்து தொண்ணூத்து ஒம்பது ரூபாய்யா... ஸ்டிக்கர கூட இன்னும் பிரிக்கல... மனசே ஆற மாட்டேங்குது எனக்கு... எப்படியும் வேஸ்டா தானே போகும்..."
"அதெல்லாம் ஒன்னும் வேஸ்டா போகாது... எவனாவது ஆடி மேளா... தீபாவளி தள்ளுபடினு மூணு ஜட்டி, ஐநூறு ரூபாய்க்கு வாங்கிட்டு போய்டுவானுங்க... உன்ன மாதிரியே..." என்றார் பரந்தாமன்.
முகத்தைத் தொங்கப் போட்டபடி ஒரு நொடி பிரிந்து சென்ற காதலியைப் பார்ப்பது போல் அந்த ஜட்டியைப் பார்த்தவர், பரந்தாமனின் கையை உதறிவிட்டு வேகமாய் சென்று அதை எடுத்து பேண்ட் பாக்கெட்டில் திணித்துக் கொண்டு, சுற்றும் முற்றும் யாரும் பார்க்கவில்லை என்பதை உறுதிப்படுத்திக் கொண்டு மீண்டும் ஓடி வந்தார். அதைக் கண்டு பரந்தாமன் தலையிலேயே அடித்துக் கொள்ள, தனது பற்கள் மொத்ததையும் காட்டியபடி அசடு வழிய சிரித்து வைத்தார் அர்னால்ட்.
ஒரு வழியாக கூட்டத்திற்குள் நுழைந்து பெண்களை விட்டுவந்த இடத்திற்கு வந்து சேர்ந்தனர் இருவரும். மற்றவர்களுக்கு எல்லாம் அர்னால்டு கண்டு பிடிக்கப்பட்ட செய்தி அலைப்பேசியில் தகவலாய் பறக்க, அவர்களும் திரும்பி வந்து கொண்டிருந்தனர்.
அதுவரை இமையோரம் லேசாய் தழும்பி நின்ற கண்ணீர் கணவரைக் கண்ட மாத்திரம் தழும்பி பொங்கிவிட்டது. அதைவிடவும் அதிகமாய் ஆத்திரமும் கோபமும் பொங்கியது.
"எங்கய்யா போன..." என்றார் அதட்டலாய் மணிமேகலை.
"அது வந்தும்மா... இங்க... பக்கத்துல..." என்று திணறலாய் பார்த்தார் அர்னால்டு.
"முன்ன பின்ன தெரியாத ஊர்ல பொண்டாட்டி புள்ளைய இப்படி தனியா விட்டுட்டு போகலாமாங்கற கூறு வேணாம்... எல்லாம் இந்த சிகரெட் படுத்தற பாடு... அந்த கருமத்த புடிக்க தானே போன... இத்தன பட்டும் திருந்தலையே நீ..." என்றாள் மேகலை முட்டி நின்ற கண்ணீருடன் ஆத்திரமாய்.
"அதான் மாமா வந்துட்டாருல்ல... விடு மேகல... பொது இடத்துல எதுக்கு கண்ண கசக்கிட்டு நிக்கற..." என்றாள் மேகலையின் தங்கை.
"நீ ஏன்டியம்மா பேச மாட்ட... அனுபவிக்கறவ நான் தானே... என் அண்ணன் புள்ள சொக்க தங்கம்னு என் மண்டைய கழுவி கட்டி வச்சுச்சு இல்ல அந்த தாய்க்கிழவி... அத சொல்லணும்... அது மட்டும் இப்ப உசுரோட இருந்துருக்கணும்... சோத்துல விஷம் வச்சுருப்பேன்... இங்க பாதிப் பொண்ணுங்க வாழ்க்க இந்த குடிக்கும் சிகரெட்டுக்கும் அடிமையான ஆம்பளைங்கள கட்டிட்டு தான் பாழாப் போகுது... எல்லாம் என் தலையெழுத்து..." என பொரிந்து தள்ளியவள் கணவனின் முகத்தைக் கூட பார்க்காமல், பிள்ளைகள் இரண்டையும் கையில் பிடித்தபடி விறுவிறுவென நடக்கத் தொடங்கிவிட்டாள்.
"மேகல... மணிமேகல... நில்லும்மா... ஏதோ தெரியாம பண்ணிட்டேன்டி... நானும் நிறுத்தணும்னு தான் பாக்கறேன்... எங்க முடியுது..." என கெஞ்சியபடியே மனைவியின் பின்னால் ஓடினார் அர்னால்ட். அர்னால்டின் வாழ்க்கையிலும் தனது ஆட்டத்தை ஆரம்பித்துவிட்ட பரம திருப்தியுடன் பக்தர்களுக்கு பக்கவாட்டில் அருள் பாலித்துக் கொண்டிருந்தார் சனிபகவான்.

Author: siteadmin
Article Title: 22. அர்னால்டும் அஷ்டமத்து சனியும் - தமிழ் வெண்பா
Source URL: Nectar Novels-https://nectarnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.