பஞ்சகல்யாணியா ! பிஞ்ச கல்யாணியா!
காலம் – பன்னிரெண்டாம் நூற்றாண்டு.
அடர்ந்த வனத்தில் இளம் ஜோடிகள் நின்று இருக்க, அவர்கள் அருகில் கருநிற புரவி ஒன்றும் நின்று இருந்தது. அந்த இளம் ஜோடிகள் ஏதோ பேசிக் கொண்டிருக்க, காலம் அவர்கள் அருகில் சென்று என்னப் பேசுகிறார்கள் என ஒட்டுக் கேட்டது.
“சம்யுக்தையே.. வா. இந்த புரவியில் ஏறிக் கொள். இந்த அடவி முழுதும் சுற்றி வரலாம்” என பிரித்விராஜன் அழைக்க, நாணத்துடன் தலை கவிழ்ந்தாள் சம்யுக்தா.
“நாதா.. நம் இரு மனங்கள் ஒன்றாக இணைந்தாலும், நம் பெற்றவர்கள் அனுமதிக்கும் வரை இது தவறில்லையா?”
“புரவியில் சுற்றி வரக் கூட எவரின் சம்மதமும் அவசியமா இளவரசி?” என யுவராஜன் கேட்க, “சரி நாதா. இதோ தங்களின் சித்தம்” என்று கூறினாள்.
பிரித்விராஜன் புரவியில் இருந்து இறங்கி, அதன் காதில் ஏதோ கூற, அது சம்யுக்தையின் அருகில் வந்து நின்றது. அந்தப் புரவியின் உடல் பருமன் கண்டு சம்யுக்தா பின்னால் சென்றாள்.
பிரித்விராஜன் கூறியது “கல்யாணி, சம்யுக்தா இப்போது உன் மீது அமர்ந்துக் கொள்வாள். நானும் அமர்ந்த பின் முதலில் மெதுவாகச் செல். நான் அழுத்தம் கொடுத்ததும், காற்றைக் கிழித்துக் கொண்டு வேகமாகச் செல்ல வேண்டும். சம்யுக்தையை நான் கடத்திக் கொண்டுப் போகப் போகிறேன்” என்றான்.
முதலில் சம்மதித்த கல்யாணி, ராணியின் அருகில் சென்று அவளைச் சுற்றி வந்து, இரண்டு அடி தள்ளிச் சென்று விட்டது.
பிரித்விராஜ் இளவரசியின் கைகளைப் பற்றி மெதுவாக புரவியின் மேல் ஏற்ற முயற்சி செய்ய, புரவியோ பின்னால் சென்றது. இளவரசன் அவளை அருகில் அழைத்து வர இன்னும் பின்னே சென்றது.
அப்போது தான் கல்யாணியின் எண்ணம் புரிந்தது இளவரசனுக்கு.
இளவரசன் மீண்டும் புரவியின் அருகில் சென்று ஏதோ கேட்க, அது முன்னங்கால்களைத் தூக்கி மாட்டேன் என்பது போல கதறியது.
நம் இளவரசி “நாதா, தங்கள் புரவி என்ன கூறுகிறது?” எனக் கேட்டாள்.
“தேவி, இன்றைக்கு நாள் நன்றாக இல்லையாம். ராணி முதல்முதலில் தன் மீது அமரும் போது எந்த ஆபத்தும் ஏற்படாமல் இருக்க வேண்டும். அதனால் இரண்டு நாட்கள் கழித்து நம் உலாவலை வைத்துக் கொள்ள முடியுமா எனக் கேட்கிறான் என் நண்பன்” எனக் கூறினான் இளவரசன்.
இளவரசி சிறு நகைப்புடன் “அடேயப்பா, பலே ஆள் தான் உங்கள் நண்பர். இத்தனை விவரங்கள் தெரிந்த புரவியை நான் தற்போது தான் பார்க்கிறேன். ஆனால் அதை நம்பத் தான் முடியவில்லை. தங்கள் நண்பர் பெயர் என்னவோ?” எனக் கூறினாள்.
“பஞ்ச கல்யாணி என்பது இவன் பெயர். நான் பிரியமுடன் அழைப்பது கல்யாணி” என்றான் இளவரசன்.
“ஹ. ஹ. பொருத்தமான பெயர் தான்” என இளவரசி உரக்கச் சிரித்தாள்.
அதைக் கேட்டு நம் கல்யாணி இன்னமும் வேகமாகக் கணைத்தான். புரவியின் கோபம் இளவரசனுக்குப் புரிய, மீண்டும் கெஞ்சுவது போல பேசினான் இளவரசன். புரவியோ மாட்டவே மாட்டேன் என்பது போலே நடந்துக் கொள்ள, இளவரசிக்கு லேசாகக் கோபம் வந்தது.
“இளவரசே, தங்கள் நண்பருக்கு என்னை ஏற்றிக் கொள்ளப் பிரியமில்லை போலிருக்கிறது. தங்களின் வீர பராக்கிரமங்கள் கேள்விப்பட்டு, நான் கூட இந்தப் புரவியை வெகுவாக ரசித்தேன். இப்போது இது கல்யாணி அதிலும் பஞ்சகல்யாணியே என நிரூபிக்கிறது. நான் வருகிறேன்” எனக் கூறி கோபமாகக் கிளம்பிவிட்டாள்.
இளவரசன் “கல்யாணி என்ன காரியம் செய்தாய்?” எனச் சினத்துடன் வினவினான்.
“இளவரசே என்னைக் கல்யாணி என அழைப்பதை முதலில் நிறுத்துங்கள். நான் ஒன்றும் பெண் புரவி அல்ல. கல்யாண் என்றாவது அழையுங்களேன். உங்களால் இளவரசி என்னை ஏளனம் செய்து விட்டுப் போகிறார்”
“இந்தப் பிரச்சினைக்கு இதுவா நேரம்? இளவரசி ஏளனம் செய்தது உன்னை அல்ல. என்னுடைய வீரம் எல்லாம் உன்னிடத்தில் செல்லுபடியாகவில்லை எனச் சுட்டிக் காண்பித்து விட்டுப் போகிறாள். இன்றைக்கு உனக்கு என்னதான் ஆயிற்று?” எனக் கேட்டான் இளவரசன்.
“இளவரசே சற்றுச் சிந்தியுங்கள். தாங்களே ஒரு நாளைக்கு இருமுறை மாமிசம் உண்டு வயிறு பெருத்து இருக்கிறீர்கள். போதாதற்கு பால், பழம், உலர் பருப்பு வகைகள் எனத் தங்கள் எலும்பினையும் பலப்படுத்தியுள்ளீர்கள். ஆறடி உயரத்தில் ஆஜானுபாகுவாக நிற்கிறீர்கள். இந்த ராணியோ உங்களுக்குப் கனப் பொருத்தமாக இருக்கிறார்கள். மேலும் தலையிலிருந்து கால் வரை ஆபரணங்கள் அணிந்து ஜொலிக்கிறார்கள். அவரின் ஆபரணங்களே என்னுடைய எடைக்குச் சமமாக இருக்கும் போலிருக்கிறது. இத்தனையும் சுமக்கச் சொன்னால் சாத்தியமா?”
“அட அறிவு கெட்ட கல்யாணி. உனக்கும் தான் ஒருவேளைக்கு மூன்று வேளையாக புல்லும், தண்ணீரும் காட்டுகிறேனே. அதை எல்லாம் சுவைத்து விட்டு, எங்கள் இருவரை சுமக்க முடியாது என்கிறாயே? நீ செய்வது சரியா?”
“அது தான் இளவரசே இன்னும் அதிக பயம். உங்களோடு சேர்ந்து நானும் வயிறு முட்ட உண்டுவிட்டு என் உடலை தூக்கி நடக்கவே நான் சிரமப்படுகிறேன். தங்களைச் சுமப்பதே பெரும் போராட்டமாக இருக்கிறது. அதில் இளவரசியும் சேர்த்து என்றால் தாங்களேப் புரிந்துக் கொள்ளுங்கள் இளவரசே. இந்தப் பஞ்ச கல்யாணி பிஞ்ச கல்யாணி ஆகி விடுவேன். பரவாயில்லையா?”
“அதற்காக இளவரசியின் முன் என் மானத்தை வாங்குவாயா? இப்போது நான் சம்யுக்தையைக் கடத்திக் கொண்டு வேறு போக வேண்டும். உன் போன்ற புரவி என்றால் தான் வேகமாகப் போக முடியும். நிஜக் கல்யாணியிலா நான் அழைத்துச் செல்ல முடியும்? அப்படிச் செய்தால் கால்வாசி தூரம் செல்வதற்குள் என் மாமனார் அவர் பெண்ணை இழுத்துச் சென்று அரண்மனைக் காவலில் வைத்து விடுவார்.”
“இல்லாவிட்டாலும் அதுதான் நடக்கும் இளவரசே. நான் இரண்டு அடி நடக்கும் முன், இளவரசியின் தந்தையார் வந்து அவரை இழுத்துச் சென்று விடுவார்”
“வேறு என்னதான் வழி கல்யாணி?”
‘ஆ. எதிர்காலத்தில் இரு சக்கரங்கள் கொண்ட வாகனம் ஒன்றைப் பயன்படுத்துவார்கள் போலிருக்கிறது. அந்தப் பொற்காலம் வரும்போது நாம் இளவரசியை அழைத்துச் செல்லலாம். இப்போது என்னை விட்டுவிடுங்கள்”
“அதுவரை என் மனம் கவர்ந்த ராணியை வேறு ஒருவனுக்கு விட்டுக் கொடுக்கச் சொல்கிறாயா?’
“அப்படி ஒன்று இருக்கிறதா? சரி உங்களுக்குள் தான் அநேக திறமைகள் ஒளிந்திருக்கின்றதே. அதை வைத்து எதிர்காலத்திலிருந்து அந்த வாகனத்தை இப்போது வரவழைக்க முடியுமா என முயற்சி செய்யுங்கள் இளவரசே”
“ஆலோசனை எல்லாம் பிரமாதமாக இருக்கிறது. வேலை செய்ய மட்டும் உடல் வளையாது அப்படித்தானே?”
“மன்னித்துக் கொள்ளுங்கள் இளவரசே. என் நிலையும் சற்றேச் சிந்தியுங்கள். என்னைப் பிஞ்ச கல்யாணியாக்குவதில் தான் தங்களின் எண்ணம் போலிருக்கிறது.” என்றது கல்யாணி.
“சரி. சரி. புலம்பாதே.” என்ற இளவரசன், கல்யாணி மீது அமர்ந்தபடி சற்று நேரம் கண்களை மூடி ஏதோ மந்திரங்கள் கூறினான். பிரித்விராஜ் கண் விழித்துப் பார்க்கும் போது அந்த அடர்ந்த வனம் மறைந்து விட்டது.
-------------------------------------------------------
காலம் – 2026
பிரித்விராஜ் கண்களைத் திறக்கும்போது கருப்பு நிற பிஎம்டபுள்யு பைக்கில் அமர்ந்திருந்தான். சுற்றிப் பார்த்தவனுக்குச் சற்று நேரம் ஒன்றும் புரியவில்லை.
“கல்யாணி எங்கே இருக்கிறாய்?”
“தற்போதும் என் மீது தான் அமர்ந்து இருக்கிறீர்கள் இளவரசே.”
“உன் மீதா? உன் பிடரி எங்கே? உனக்குக் கட்டிய சேனையும் காணவில்லை”
“இளவரசே, என் பிடரி இந்த வாகனத்தின் பின் பகுதி. சேனை முன்புறம் இருக்கிறது. எனது கடிவாளம் தற்போது தங்கள் காலின் கீழ் இருக்கிறது”
“இது என்ன விந்தையாக இருக்கிறது. அப்படி என்றால் உனக்கு புல்லும், நீரும் எப்படி கொடுப்பது?”
“இந்த வண்டியின் முன்புறம் டாங் என்று ஒன்று இருக்கிறது. அதில் தான் எனக்கு உணவான புல்லைத் திரவமாக ஊற்றப்படுகிறது. எனக்குத் தண்ணீர் ஆயில் என்ற வஸ்துவாக துளையில் கொட்டுகிறார்கள்.”
“தலை சுற்றுகிறது கல்யாணி. இதுதான் நீ சொன்ன இரு சக்கரங்கள் கொண்ட வாகனமா?”
“ஆம். அத்தோடு தங்களையும் சற்று உற்றுப் பாருங்கள்”
கல்யாணி கூறியதும் தன்னைக் குனிந்துப் பார்த்த பிரித்விராஜ் வியந்தான். அவனின் நீளத் தலைமுடி பாதியாகக் குறைந்து இருந்தது. அவனின் மேலங்கி போலோ டீஷர்ட்டாகவும், இடையங்கி ஜீன்ஸ் பான்ட்டாகவும், காலணிகள் நைக் ஷூவாகவும் மாறியிருந்தது.
“கல்யாணி, நாம் இப்போது எங்கே இருக்கிறோம்? அடர்ந்த வனத்தில் நின்று தானே பேசிக் கொண்டிருந்தோம்”
“அடர்ந்த வனம் எல்லாம் தற்போது அமசோன் காடுகளில் மட்டும் தான் காண முடியும். மற்ற இடங்களில் வனம் இல்லை. மரக் கூட்டம் மட்டுமே.”
“ஓ. இது என்ன இத்தனை உயரக் கட்டிடங்கள். நம் மாட மாளிகைகளும், மக்கள் வாழும் வீடுகளும் எங்கே?”
“அந்த மாட மாளிகைகள் எல்லாம் தற்போது ஷாப்பிங் மால்களாகவும், மல்டிப்ளெக்ஸ் தியேட்டராகவும் இருக்கிறது. மக்கள் எல்லாம் கேட்டட் கம்யூனிட்டி எனும் வடிவில் கூட்டமாக ஒரே தரையில் நூறு அடுக்கு மாடிகளில் வசிக்கிறார்கள்”
“ஒரே தரை .. நூறு மாடிகளா? என்றால் தரை யாருக்குச் சொந்தம்?
“அதைப்பற்றி நமக்கு என்ன கவலை இளவரசே?
“சரி. உனக்கு எப்படி இது எல்லாம் தெரிந்தது கல்யாணி?”
“தற்போது நான் கல்யாணி இல்லை இளவரசே. நீங்களும் பிரித்விராஜன் இல்லை. பிரின்ஸ் என மாற்றிவிட்டது காலம். காலத்திற்கு ஏற்ப மாறுங்கள்”
“ஓ. அப்படியென்றால் உன்னை இனி பின்ச் என்று அழைக்கிறேன்”
“அப்போது தான் வித்தியாசமாக குதிரைக்குப் பஞ்சகல்யாணி என்று வைத்தீர்கள் என்றால், இப்போது அதையே கொஞ்சம் மாற்றி பின்ச் எனக் கூறுகிறீர்கள். மற்ற இளைஞர்கள் எல்லாம் இந்த வாகனத்திற்கு பீஸ்ட், ட்ராகன் என்று எல்லாம் பெயர் வைத்து அதையும் நியான் ஸ்டிக்கர் கொண்டு அழகாக ஒட்டியிருக்கிறார்கள். எனக்கு மட்டும் அதே பின்ச். என்ன கொடுமை இது”
“அது இருக்கட்டும். இப்போதும் உன்னுடைய உடல் பருமனாகத் தானே இருக்கிறது. ஆனால் என்னைச் சுமக்கிறாய்?”
“இளவரசே, உங்கள் உடை மாறினாலும், பேச்சு வழக்கு மாறவில்லையே. உங்களோடு நானும் அப்படியே பேசுகிறேன். முதலில் அதை மாற்றுவோம். இனி நீங்கள் எனக்கு பாஸ்”
“ஓ. சரி சொல்லு. இப்போ கூட உன் பாடி வெயிட் ஜாஸ்திதான் இருக்கு. பட் நான் உட்கார்ந்தா ஈசியா மூவ் ஆகற?’
“ஆஹா. இப்போ தான் ஒரு யூத் பீல் வருது. பாஸ்” என்ற பின்ச், “பாஸ், இதில் வெயிட் அதிகம் தெரியாது. எனக்கு பெட்ரோல் போட்டு விடுவதால், தானே நகரும் படி டெக்னாலஜி கொடுத்துருக்காங்க.”
“இதை எல்லாம் எப்போது தெரிந்து கொண்டாய் பின்ச்.?
“நீங்க கண்ணை மூடித் திறக்கும்முன் முதலில் நான் இந்த காலத்திற்குள் வந்து விட்டேன். என்னுடைய கால்களின் வேகம் கொண்டு ஒரு சுற்று சுற்றியதில் இதை எல்லாம் தெரிந்துக் கொண்டேன்”
“வா, நாம் சம்யுக்தா எங்கே என்று தேடுவோம்?”
“உங்க சம்யுக்தா, காலேஜ் படித்துக் கொண்டிருக்கிறாள். இப்போது லஞ்ச் ஹவர். வெளியில் வர மாட்டாள். நான்கு மணிக்கு காலேஜ் முடியும் போது வந்து பிக்கப் பண்ணலாம்.”
“சரி, பக்கத்தில் ஏதோ மால் இருக்கிறது என்றாயே? உள்ளே சென்று வரலாம்”
“என்னைப் பார்க் செய்துவிட்டு உள்ளே செல்ல ஒரு மணி நேரத்திற்கு நூறு ரூபாய். பரவாயில்லையா?”
“பார்க்கிங் எனப் போட்டிருக்கும் இடத்தில் நிறுத்தி விட்டுப் போக எதுக்குடா நூறு ரூபாய்?”
“மால் ஃபுல்லா ஏசி போட்டு வச்சிருக்கான். இங்கே அடிக்கிற வெயிலுக்குச் சும்மா உள்ளே போனாலே வெளியே வரத் தோணாது. அவனவன் கேர்ள் ஃப்ரெண்ட் வேறே கூட்டிட்டு போனா எட்டு மணி நேரம் வெளியவே வர மாட்டான். நீங்க ரோட்லே எங்களை அம்போனு விட்டுட்டுப் போனா, குவார்ட்டருக்கு ஆசைப்பட்டு பெட்ரோல் திருடிட்டுப் போவான். அதோட வண்டி வெயில்லே நின்னா, டயர் பஞ்சர் ஆகும். அப்படி நடக்காம எங்களை சேஃப்பா பாதுகாக்கத் தான் இந்த பார்க்கிங் சார்ஜ்”
“நீ பஞ்ச கல்யாணியா இருந்தப்பவும் சரி. இப்போ பின்ச்சா மாறினப்போதும் சரி. உன் வாய் மட்டும் குறையவே இல்லை. உனக்குத் தீனி போடத் தான் காசிருக்கு. மேலே சிஷ்ருஷைப் பண்ண எல்லாம் முடியாது. இப்படியே ஒரு ரைட் மட்டும் போவோம்.”
பின்ச் “இவர் வெயிலே காயுறது போதாதுனு நானும் வேறே காயணுமாம்” என முணுமுணுத்தது.
“என்ன முணுமுனுப்பு?” எனப் பிரின்ஸ் கேட்டான்.
“ஒண்ணுமில்லை பாஸ். போலாமேனு தான் சொன்னேன்” என்ற பின்ச், ‘பெட்ரோல் விலை தெரியாம பாஸ் ரைட் போறாங்களாம். நமக்கு என்ன?’ எனத் தனக்குள் பேசிக்கொண்டது.
மதியம் ஒரு மணி வெயிலில் மரீனா பீச், வள்ளுவர் கோட்டம் என ஒரு லாங் டிரைவ் போய் விட்டு, சரியாக நான்கு மணிக்கு வைஷ்ணவா காலேஜ் வாசலில் நின்றான் பிரின்ஸ் எனும் பிரித்விராஜ்.
சம்யுக்தா வெளியே வரும்போது பிரின்ஸ் பிஎம்டபுள்யு பைக்கில் நிற்பதைப் பார்த்தாள்.
“ஹாய் பிரின்ஸ்” என அருகில் வந்தாள்.
“ஹாய் சாம்.”
“இது என்ன வண்டி புதுசா இருக்கு?”
“எஸ். எஸ் இன்னிக்குத் தான் எடுத்தேன்.” எனக் கூறவும், வண்டியை ஒரு சுற்று சுற்றி வந்தாள் சாம். வண்டியின் முகப்பில் பின்ச் என எழுதிருந்ததைக் கவனித்தாள்.
“அது என்ன பின்ச்?”
“பன்ச்னு தான் வைக்க நினைச்சேன். ஆனால் அந்த பெயரில் கார் இருக்கு. அதான் கொஞ்சம் வித்தியாசமா இருக்கட்டும்னு பின்ச்னு வைச்சேன். நல்லா இருக்கா?”
“நாட் பேட். சரி எங்கே இவ்ளோ தூரம்?’
“உன்னை பிக்கப் பண்ணத் தான் வந்தேன்.”
“ஓ. தாங்க்ஸ். இந்த டைம் மெட்ரோவில் செம ரஷ் இருக்கும். எப்படிடா போறதுனு நினைச்சேன். நல்லவேளை நீயே வந்திட்ட. லெட்’ஸ் கோ” என்றபடி பில்லியனில் அமர்ந்தாள்.
பிரின்ஸ் வண்டியை செல்ஃப் ஸ்டார்ட் பண்ண, ஹேக் ஹேக் என முனகி விட்டு வண்டி நின்று விட்டது.
லேசாக அசடு வழிந்தபடி “சாம், ஜஸ்ட் டூ மின்ட்ஸ் இறங்கிக்கோ. கிக் ஸ்டார்ட் பண்ணறேன்” என்றான் பிரின்ஸ்.
முறைத்தபடி சாம் இறங்க, பிரின்ஸ் வண்டியை உதைத்தான். பின்ச் நகர மாட்டேன்னு நிற்க, சாம் எரிச்சல் ஆனாள்.
பத்து நிமிடம் முயற்சி செய்தும் நகரவில்லை பிரின்ஸ்.
பின்ச்சிடம் “டேய், ஒழுங்கா ஸ்டார்ட் ஆகிடு” எனப் பிரின்ஸ் கூறினான்.
“அதற்கு வாய்ப்பில்லை பாஸ்.”
“ஏன்?”
“முதலில் எனக்கு பெட்ரோல் போடுங்க”
அப்போது தான் பெட்ரோல் இன்டிகேட்டர் பார்க்க, அது ஈ மோட்கும் கீழே இருந்தது.
“சாம், அது பெட்ரோல் இல்லை” எனத் தடுமாறி பிரின்ஸ் கூற, சாம் கையில் வேப்பிலை எடுக்காத குறை.
“சரியான வெத்துவேட்டு ரெண்டு பேரும். என் ஃபிரண்ட்ஸ் கூடப் போயிருந்தா பேசிட்டுப் போயிருப்பேன். இப்போ யாரும் இல்லாம மொட்டு மொட்டுனு தனியா போகணும். இனிமே என்னைப் பிக்கப் பண்ணறேன், நீயும் உன் பின்ச்சும் வந்தீங்க. கல்லால் அடிச்சு கண்ணாடியை உடைச்சிடுவேன். பேரைப் பாரு பின்ச்சாம். சரியான தத்தி வண்டி” என அவள் பங்குக்கு ஒரு உதை விட்டுவிட்டுக் கிளம்பினாள் சாம்.
சாம் கிளம்பவும், “டேய் பின்ச் மறுபடியும் மானத்தை வாங்கிட்டியே. நான் கண்மூடி மந்திரங்கள் சொல்லும் முன் தான் வயிறு நிறைய புல்லும், நீரும் சாப்பிட்டாயே? திறக்குமுன் அத்தனையும் செரித்து விட்டதா?”
“பாஸ், நீங்க அப்டேட்டா இல்லை. நீங்க வருவதற்கு முன்னாடி, ஒரு சுற்று சுற்றினேன். அதுக்கு அப்புறம் சர் லாங் டிரைவ் போறேன்னு நாலு மணி நேரம் சுத்தினா, மொத்தப் பெட்ரோலும் காலி”
“ஆகக் கூடி பஞ்ச கல்யாணியா இருந்தப்போவும் சரி, பின்ச்சா மாறின போதும் எனக்கு ஜோடி சேருவது உனக்குப் பிடிக்கலை. அதை டைரக்ட்டா சொல்லமா, இப்படி என் கேர்ள் ஃப்ரெண்ட் முன்னாடி மானத்தை வாங்கி அவளைத் துரத்தி விட்டுட்ட அப்படித்தானே.”
“பாஸ், சிங்கிள் தான் கெத்து” என பஞ்சகல்யாணி @ பின்ச் சிரித்தது.
“இதுக்கு நான் பிரித்விராஜனாவே இருக்கேன். நீ பஞ்சகல்யாணியாவே இரு” எனக் கூறிவிட்டு, கண்கள் மூடி மந்திரம் சொல்ல, மீண்டும் அந்த அடர்ந்த வனத்துக்குள் சென்று விட்டனர் இருவரும்.
----------------
Author: siteadmin
Article Title: 24. பஞ்சகல்யாணியா ! பிஞ்ச கல்யாணியா! - தேவி ஸ்ரீனிவாசன்
Source URL: Nectar Novels-https://nectarnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Article Title: 24. பஞ்சகல்யாணியா ! பிஞ்ச கல்யாணியா! - தேவி ஸ்ரீனிவாசன்
Source URL: Nectar Novels-https://nectarnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.