• ஹாய் மக்களே! நம் Nectar Novels தளத்திற்கு நல்வரவு🙏😍😍 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள் nectarnovels.ss@gmail.com 🩷 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...👇 வேதா விஷால் & அனன்யா🙏💖

35. ஆஹா கல்யாணம் - கார்த்தி சொக்கலிங்கம்

VedhaVishal

Administrator
Staff member
Jun 17, 2024
83
325
53
Chennai
ஆஹா கல்யாணம்

கோவில் மணியின் ஓங்கி அடிக்கும் ஓசை கேட்டு, ஆங்காங்கு கோவில் கோபுரத்தில் பதுங்கி இருந்த பறவைகள் சிறகடித்து பறந்து சென்று கொண்டிருந்தன.

சூரியன் அஸ்தமனம் ஆகி வெகு நேரம் ஆகி விட்டது.

வருவதாய் சொல்லி இருந்த சித்தப்பனை இன்னும் காணவில்லை என்ற கடுப்பில் கோவில் குளத்தில் கல்லை ஒவ்வொன்றாக எரிந்து கொண்டிருந்தான் விஷ்ணு.

அவனுக்கு அருகில் இருந்த அவனது நண்பனோ, "டேய்.. உன் சித்தப்பா வருவாரா வரமாட்டாறாடா. நேரம் வேற ஆகிட்டே இருக்கு.." என்று கடுப்புடன் சொல்ல,

"நானும் உன்கூட தானடா இருக்கேன். எனக்கு மட்டும் என்ன தெரியும். அந்த ஆளுக்கு போனை போட்டா போன் வேற போகல. தேவர்மகன் கமல் மாதிரி இல்லாத மீசையை முறுக்கிக்கிட்டு "நான் இருக்கேன் மகனே.. நீ கவலைப் படாதான்னு சொன்னாரு. இப்போ இவ்ளோ நேரம் ஆச்சு.." என்று உட்காந்து இருந்தவன் எழுந்து அங்கும் இங்கும் நடந்து கொண்டிருந்தான்.

ஏதோ பாட்டு சத்தம் தூரத்தில் கேட்டது.

"எங்க சித்தப்பு தான் வர்ராரு.." என்றான் விஷ்ணு.

"எப்படிடா சொல்ற??" என்றான் அவனது நண்பன்.

"பாட்டு சத்தம் கேக்குதா உனக்கு??" என்று விஷ்ணு நண்பனிடம் கேட்டிட,

"ஆமா.. " என்றான்.

"ஆனை வரும் பின்னே.. மணியோசை வரும் முன்னே.. பழமொழி கேள்வி பட்டு இருக்கியா??" என்றிட,

"ஆமா.."

"அது மாதிரி இந்த ஆளு வராருனா, அதுக்கு முன்னாடியே பாட்டு சத்தம் கேக்கும்.." என்றான் விஷ்ணு.

"ஓஹோ.." என்று கூறியவன் பாட்டை நன்றாக கவனித்தான்.

🎵
🎵
எடுத்த சபதம் முடிப்பேன் கலங்காதே...
உனக்கும் வாழ்வு கொடுப்பேன் வருந்தாதே...
இந்த நியாயம் அநியாயம் ஒரு நாள் ஜெயிப்பேனே..
🎵
🎵


"பார்ரா.. சுச்சுவேசன் சாங் மாதிரி இருக்கு.. பெரிய ஆளாத் தான் இருப்பாரு போலயே.." என்று விஷ்ணுவின் சித்தப்பாவை கற்பனையில் எண்ணி சிலாகித்துக் கூறினான்.

பாட்டுச் சத்தம் அருகில் நெருங்க நெருங்க, ஏதோ ஒரு வண்டி வருவது போல் இருந்தது.

இல்லை இல்லை உருட்டிக் கொண்டு வருவது போல தெரிந்தது.

அருகில் வந்ததும், சித்தப்பனை பார்த்து விட்டு, விஷ்ணுவின் நண்பன், "அடேச்சை.. இதுக்குத் தான இவ்ளோ பில்டப். நம்ம கூட பெரிய பிஸ்தா பருப்பா இருப்பாருனு நெனச்சா, துவரம்பருப்புக்கு கூட தேற மாட்டார் போல.." என்று மனதிற்குள் நினைத்து விட்டு விஷ்ணுவைப் பார்த்தான்.

விஷ்ணுவோ, "இந்த வெட்டி பந்தாக்கு ஒன்னும் குறைச்சல் இருக்காது.." என்று முணுமுணுத்தது விஷ்ணுவின் நண்பனின் காதிற்கும் கேட்டது.

பின்னே, வின்னர் படத்தில் வருத்தப்படாத வாலிபர் சங்கத்தின் தலைவர் கைப்புள்ள வடிவேலு ரேஞ்சக்கு அல்லவா அதே போல வண்டியை வைத்துக்கொண்டு வந்து இறங்கினால் அப்படித்தானே தோன்றும்.

பச்சைக் கலர் சட்டை, வெள்ளை வேஷ்டி அதில் பச்சை நிறக் கலர் கோடு, கண்ணில் கடைத்தெருவில் வாங்கிய நூறு ரூபாய் கருப்புக் கண்ணாடி, கண்மை பென்சில் கொண்டு நன்றாக அடர்த்தியாக வரையப்பட்ட மீசை, என வடிவேலுக்கு தம்பி போல கெத்தாக நடந்து வந்தார் விஷ்ணுவின் மாமன் வடிவேல் பாண்டி.

"யோவ்.. சித்தப்பு .. எப்போ வரேன்னு சொல்லிட்டு எப்போ வர.. முதல்ல அந்த கண்ணாடியை கழட்டுயா.. ராத்திரி நேரத்தில போட்டுக்கிட்டு இருக்குறது கண்ணு தெரியாத கபோதி மாதிரி இருக்குது.." என்று அவன் இவ்வளவு நேரம் வர தாமதப் படுத்தியதால் உண்டான கோபத்தை முழுதாக களம் இறக்கினான்.

வடிவேல் அதற்கு எல்லாம் அசரும் ஆளா என்ன. ரோஷம் மானம் சூடு சுரணை என எல்லாவற்றையும் மூட்டைக் கட்டி பரண் மேல் தூக்கி எரிந்து விட்டுத் தானே அவர்கள் வீட்டில் காலத்தை ஓட்டிக் கொண்டு இருக்கின்றார்.

"டேய்.. மகனே.. ஆளு செட் பண்ண லேட் ஆகிருச்சு. எல்லாத்தையும் ஏற்பாடு பண்ணிட்டு வரத் தான் இம்புட்டு நேரம்.." என்றார் வடிவேல்.

"எங்க ஆளுங்க??" என்று விஷ்ணுவின் நண்பன் கேட்க,

"இது யாரு??" வடிவேல் கேட்க,

"என் ஃப்ரண்ட்.." என்றான் விஷ்ணு.

"தம்பிக்கு எந்த ஊரு??" வடிவேல் கேட்டிட,

"அது தலைவர் நடிச்ச படம் ஆச்சே??" என்று யோசனையுடன் அவன் கேட்டிட,

"கொய்யாலே.. உன் சொந்த ஊரு என்னனு கேக்குறாங்கடா??" என்று நொந்து போய் கூறினான் விஷ்ணு.

"ஓ.. அதுவா.. ஊரு திருவண்ணாமலை.." என்று அதே தலைவர் ஸ்டைலில் அவன் கூறிட, "அப்போ பேரு என்ன?? திருப்பரங்குன்றமா??" என்று நக்கல் அடித்தபடி கேட்டார் வடிவேல்.

"இல்ல. திருப்பதி.." என்றான் அவன்.

"அடேய்.. கொஞ்சம் நிப்பாட்டுங்கடா ரெண்டு பேரும். " என்று சலிப்புடன் கூறியவன், சித்தப்பன் பக்கம் திரும்பி, "யோவ் சித்தப்பு.. எங்கய்யா நீ ரெடி பண்ண ஆளுங்க??" என்று கடுப்பை மறைத்துக் கொண்டு கேட்டான்.

"டேய்.. வாங்கடா.." என்று சத்தம் போட, வடிவேல் வந்த வண்டியின் அருகில் நின்று இருந்த மூன்று பேரும் ஓடி வந்தனர்.

"என்னது இவங்களா??" என்று அதிர்ச்சியில் மயங்கியே விட்டான் திருப்பதி.

"இவங்க தான் நீ செட் பண்ண ஆளுங்களா.. இவங்கள வச்சி எப்படியா நீ என் ஆளை தூக்கப் போற?? எனக்கு நம்பிக்கையேப் போச்சு.." என்று நொந்து போய் மீண்டு குளக்கரையில் அமர்ந்து கொண்டான்.

"ஏய்.. மகனே இவங்கள பத்தி என்ன நெனச்ச.. ஒவ்வொரு ஆளா சொல்றேன் பாரு.." என்றவர்,

முதலில் ஒருவரை அழைத்தார். 45 வயது மதிக்கத் தக்க நபர். வத்தலும் தொத்தலுமாக வந்து நின்றார்.
"இவன் பேரு சிரஞ்சீவி.. சூப்பரா சமைப்பாப்ல.. அங்க சமையல் ஆளுங்க கூட கோர்த்து விட்டுரலாம்.." என்றார்.

இரண்டாவது நபரை அழைத்து, "இவன் பேரு சமிதா பட்சன். இவன் கொஞ்சம் பாக்க வடக்க ஆளுங்க மாதிரி இருப்பான். அங்க எல்லாருக்கும் பீடா கொடுக்கிரத்துக்கு இவனை நிப்பாட்டிருவேன். " என்றிட,

மூன்றாவது நபரை பார்த்து விட்டு இவர்கள் இருவரும் பரவாயில்லை என்ற அளவிற்கு நினைத்து விட்டான் விஷ்ணு.

"இவங்க பரவாயில்லை. இந்த பாட்டி என்ன பண்ணப் போறாங்க.." என்று விரக்தியின் எல்லைக்கே சென்றது போல கேட்டான் அவன்.

"இவங்க பேரைக் கேட்டா ஆடிப் போய்டுவ.. விஜயசாந்தி. இலை எடுக்க, பாத்திரம் கழுவ அங்க கோர்த்து விட்டுருவேன்.." என்றார்.

மயக்கம் தெளிந்து எழுந்த திருப்பதி, "டேய்.. உன் சித்தப்பாவை பொண்ணை கடத்தச் சொன்னா, சமையலுக்கு ஆள ரெடி பண்ணி கூட்டிட்டு வந்துருக்காருடா.." என்று அடக்க மாட்டாமல் விழுந்து விழுந்து சிரித்தான்.

விஷ்ணுவும், வடிவேலுவும் அவனை முறைத்துப் பார்த்தனர்.

வடிவேலுவின் அருகில் இருந்த சமிதா பச்சன், "பாஸ்... ம்ம்னு சொல்லுங்க அவனை போட்டுருலாம்.." என்று சீறி எழுந்து கொண்டு வந்தான்.

"பொறுமை.. பொறுமை.. நம்ம வேலையை எல்லாம் கல்யாண மண்டபத்துல காட்டுவோம்.." என்று வேங்கையின் வேகத்தை கட்டுப் படுத்தி வைத்தார் வடிவேல்.

"நீ மட்டும் ஒழுங்கா காரியத்தை முடிக்காம இரு. அப்புறம் இருக்கு உனக்கு.." என்று விஷ்ணு கூறி விட்டு நகர்ந்து விட, திருப்பதியும் இவர்களை ஒரு மார்க்கமாக பார்த்து விட்டு சென்று விட்டான்.

"டேய்.. வாங்கடா கிளம்புவோம். நம்ம யாருனு காட்டுவோம்.." என்று வடிவேல் வண்டியில் ஏறி அமர, சிரஞ்சீவி வண்டியை ஓட்டினான்.

கூடவே,
🎵
🎵
சிங்கம் ஒன்று புறப்பட்டதே..

அதுக்கு நல்ல காலம் பிறந்துருச்சு.. நேரம் நெருங்கிருச்சு..
🎵
🎵


சமிதா பச்சன், வண்டிக்கு பின்னால் ஓடி வர, விஜயசாந்தி வடிவேலுவின் அருகில் அமர்ந்து கொண்டார்.

*****************************

வாழைமரம், தோரணங்கள் எல்லாம் கட்டி இருக்க, சீரியல் பல்பு வெளிச்சத்தில் ஜெக ஜோதியாக ஜொலித்துக் கொண்டிருந்தது அந்த மண்டபம்.

வடிவேல் அண்ட் கோ அங்கே சென்று வெளியில் இருந்து நோட்டம் இட்டனர்.

"இந்த மண்டபம் தானே??" வடிவேல் கேட்க,

"ஆமா பாஸ்.." என்றான் சிரஞ்சீவி.

"ம்ம்ம்ம் " என்றவர், "சிரஞ்சீவி..அந்த சமையல் கரண்டி எல்லாம் எடுத்துட்டு உள்ள போ..

சமிதா.. நீ உன் பீடா பையை எடுத்துக்கோ..

சாந்தி.. நீ இலை எடுக்க கூடையை எடுத்துக்கோ.." என்று தாங்கள் கொண்டு வந்து இருந்த பொருட்களை எல்லாம் எடுக்கச் சொன்னவர், அவர்களை மண்டபத்தின் உள்ளே சந்தேகம் வராதவாறு அனுப்பி வைத்தார்.

இதில் ஆளுக்கொரு ப்ளூடூத் வேறு.

உள்ளே சென்றவர்கள், அனைவரும் ஒரே அழைப்பில் ஒன்று சேர, "ஓவர் ஓவர்.. சிரஞ்சீவி மிஷன் ஸ்டார்ட் பண்ணியாச்சு.."

அடுத்து, "சமிதா அல்மோஸ்ட் மிஷன்குள்ள என்டர் ஆகியாச்சு.."

மிச்சம் இருக்கும் விஜயசாந்தி, "ஓவர் ஓவர்.. என்கிட்ட இருந்து கூடையை பறிச்சுகிட்டு போய்ட்டாங்க. இப்போ நான் என்ன பண்றது??" என்று கேட்க,

"ஓவர் ஓவர்.. நீ பின்னாடியே போக வேண்டியது தானே. இதை சொல்லனுமா என்கிட்ட??" என்று வடிவேல் கடுப்புடன் கூறி விட்டு, மற்ற இருவரிடமும் தொடர்பிலேயே இருந்தார்.

"சிரஞ்சீவி.. உங்கிட்ட நான் கொடுத்த பவுடர் இருக்குல்ல??" என்று வடிவேல் கேட்க,

"எஸ். பாஸ்.." என்றான்.

"நீ உன்னோட பிளான் ஸ்டார்ட் பண்ணு.." என்றார்.

"டேய் பீடா.. இருக்கியாடா??"

"இருக்கேன் பாஸ். சொல்லுங்க." என்றான் சமிதா.

"நீ ஆரம்பி உன்னோட வேலையை.." என்றிட அவனும் உடனே ஒரு அறைக்குள் சென்றவன் அவன் கொண்டு வந்த பையில் இருந்து உடனடியாக ஆரம்பித்தான்.

வெளியில் வந்த சமிதா, அவ்வை சண்முகி கமல் போல வந்தான்.

எதிரில் ஒருவன் அவனையே யோசனையாக பார்த்துக்கொண்டே வர, "ஹே.. என்ன லுக்கு.. பொம்பளையை இப்படி பார்த்துட்டு போற.. " என்று பெண் குரலில் அவனிடம் பேசி விட்டு சென்றான் சமிதா.

"பாஸ்.. கெட் அப் சேன்ஜ்.." என்றான்.

"ம்ம். நீ போய் சிரஞ்சீவி கொடுக்கிற கூல் ட்ரிங்க்ஸ் வாங்கிட்டு பொண்ணு ரூமுக்கு போ.." வெளியில் இருந்து ஒவ்வொன்றாக தன் ஆட்களுக்கு சொல்லிக் கொண்டிருந்தார்.

"ஓகே பாஸ்" என்ற சமிதா, சிரஞ்சீவி கலந்து வைத்த கூல் ட்ரிங்க்ஸை வாங்கிக் கொண்டு மணப்பெண்ணின் அறைக்குச் சென்றான்.

மணப் பெண்ணின் அறையில், பெண்ணிற்கு அலங்காரம் செய்து கொண்டிருந்தனர்.

"ஏய்.. என்னங்கடி.. இதை தெம்பா குடிச்சிட்டு அலங்காரம் பண்ணுங்கடி.." என்ற சமிதா குளிர் பானத்தை கொடுக்க,

பெண்கள் அனைவரும் எடுத்துக் குடித்தனர்.

"இந்தாப் பொண்ணு.. உனக்கு ஸ்பெஷல் ஜூஸ் வருது. கொஞ்சம் நேரம் இரு.." என்று அலங்காரம் செய்து கொண்டிருந்த பெண்ணிடம் கூற, அவரும் சரி என்று கூறி விட்டார்.

விஜயசாந்தி அந்த குடித்து முடித்த கிளாஸ் எல்லாம் எடுத்துக் கொண்டு செல்ல அங்கே வர, அந்த குளிர்பானம் குடித்த பெண்கள் மயக்கம் போட்டு விழுந்தனர்.

சமிதா, விஜயசாந்தியைப் பார்த்து, கண் அடிக்க, அவரும் மயக்க மருந்து பூசிய கைக்குட்டையை எடுத்து அந்த பெண்ணின் மூக்கில் வைத்தனர்.

அவரும் மயங்கி விழ, சமிதா உடனே சேலைக்குள் மறைத்து வைத்து இருந்த முஸ்லீம் பெண்கள் அணியும் பர்தாவை எடுத்து, கழுத்து வழியாக அணிவித்து வெளியில் அழைத்து வந்தார்.

எதிரில் வந்த ஒருவர், "என்னமா என்ன ஆச்சு இவங்களுக்கு??" என்று கேட்க, "கல்யாணத்துக்கு வந்தவங்க, திடீர்னு நெஞ்சு வழி வந்துருச்சு. அதான் ஹாஸ்பிடல் கூட்டிட்டு போறோம்.." என்று கூறி விட்டு ஒரு வழியாக அழைத்து வந்து விட்டனர்.

கூடவே, சிரஞ்சீவிக்கும் விஷயத்தை சொல்ல, அவனும் வந்து சேர்ந்து விட்டான்.

வெளியில் ஒரு ஆட்டோ ஏற்பாடு செய்து வைத்து இருந்தார் வடிவேல்.

அந்த ஆட்டோவில் உடனடியாக ஏற்றிக் கொண்டு, தன் மகனிடம் "சக்ஸஸ்.. சக்ஸஸ்.. பொண்ணை தூக்கிட்டோம்டா. வந்துட்டே இருக்கோம். நீ அம்மன் கோவில்ல இரு. வந்ததும் உனக்கு கல்யாணம்.." என்று கூற, விஷ்ணு தாலி மாலையுடன் உற்சாகத்துடன் கிளம்பினான்.

அம்மன் கோவிலில் விஷ்ணு மற்றும் அவனது நண்பன் திருப்பதி உடன் காத்து இருந்தான்.

வடிவேல் குழு, அம்மன் கோவிலுக்கு புறப்பட்டுச் சென்றது.

🎵
🎵
🎵
சிங்க நடை போட்டு சிகரத்தில் ஏறு...

சிகரத்தை அடைந்தால் வானத்தில் ஏறு..
🎵
🎵
🎵

என்ற பாட்டை போட்டுக் கொண்டு போக, "என் பேரு வடிவேலு.. எனக்குள்ள சக்திவேலு...." பாட்டோடு சேர்ந்து படிக்கக் கொண்டே செல்ல, அம்மன் கோவிலும் வந்து சேர்ந்தது.

"டேய்.. உன் சித்தப்பு கில்லாடி தான்டா. சொன்னபடி தூக்கிட்டு வந்துட்டாரு பொண்ணை.." திருப்பதி வடிவேலுவை நினைத்து பெருமையாக கூறிக்கொண்டு இருக்க, இங்கே வடிவேல் அண்ட் கோ, பெண்ணை தூக்கிக் கொண்டு அருகில் இருந்த தூணில் சாய்ந்து அமர வைத்தனர்.

விஷ்ணு எதிர்பார்ப்புடன், முகத்தை மூடி இருந்த துணியை விலக்கிப் பார்க்க, "அம்மே..." என்று சத்தம் போட்டு அதிர்ச்சி அடைந்து விட்டான்.

"டேய்.. டேய்.. மகனே.. பார்த்துடா. பொண்ணு பயந்துர போகுது.." என்று வடிவேல் கூற,

"பொண்ணா... என் ஆளை தூக்கிட்டு வர சொன்னா, நீ உனக்கு ஆளை செட் பண்ணிட்டு வந்து இருக்கியா??" கோபத்துடன் பல்லைக் கடித்துக் கொண்டு கேட்க,

"அப்போ.. இது உன் ஆளு இல்லையா???" என்று வடிவேலு தொணியில் இழுத்துக் கொண்டு கேட்க,

"போயா.. எதுவும் சொல்லிரப் போறேன். பெரிய வீராப்பா பேசிட்டு போன. இதுக்கு தானா.. ஐயோ இப்போ என் ஆளு வேற எனக்காக காத்துகிட்டு இருப்பாளே.." என்று புலம்பிக் கொண்டிருக்க, அவனது அலைபேசி ஒலிக்கும் சத்தம் கேட்டு எடுத்துப் பார்த்தான்.

அவனது காதலி ஜனனி தான் அழைத்து இருந்தாள்.

"ஹலோ.. ஜனனி.." என்று அவன் கேட்கும் முன்னரே,

"விஷ்ணு.. நான் மண்டபத்துல இருந்து தப்பிச்சி வந்துட்டேன். எங்க இருக்க??" ஜனனி கேட்க,

"நான் அம்மன் கோவில்ல இருக்கேன்.." என்று கூறியதும் சிறிது நேரத்தில் காதலி வந்து சேர்ந்தாள்.

வந்தவள், மயக்கமுடன் இருந்த அவளது அத்தையைத் தான் பார்த்தாள்.

"உன்ன தூக்குறதுக்கு பதில் உன் அத்தையை தூக்கிட்டாங்க.." என்றான் சங்கடத்துடன்.

"அவங்களை காணோம்னு தேடப் போய் தான் நான் அங்க இருந்து எஸ்கேப் ஆக முடிஞ்சது." என்றாள்.

"இது நமக்காக ஏற்பாடு பண்ணது. நல்லவேளை நீயே வந்துட்ட.." என்று இருவரும் மாலை மாற்றிக் கொண்டு அம்மன் சன்னதியில் திருமணம் செய்து கொண்டனர்.

ஜனனி மற்றும் அவளது அத்தையை தேடி வந்த கும்பலை கண்டதும், அனைவரும் மெல்ல மெல்ல அங்கிருந்து நகர ஆரம்பிக்க, வடிவேல் மட்டும் மாட்டிக் கொண்டார்.

ஜனனியின் அப்பா, "ஏன்டா, என் தங்கச்சிக்கு கல்யாணம் ஆகலனு அவளை தூக்கிட்டு வந்து இருக்கியா??" என்று அவனை அடிக்கப் போக, அப்பொழுது பார்த்து, மயக்கமுடன் இருந்த அவரது தங்கை புஷ்பவதி "அண்ணா.. அவரை ஒன்னும் பண்ண வேணாம். விடுங்க.. இத்தனை நாள் நான் எதிர்பார்த்த மன்மதன் இவரு தான். இவரையே கல்யாணம் பண்ணிக்கிறேன்.." என்று நாணத்துடன் கூற,

அதுவரை பம்மிக் கொண்டிருந்த வடிவேல், சட்டைக் காலரை கெத்தாக எடுத்து விட்டு ஸ்டைலாக நின்றார்.

"அப்புறம் என்னப்பா.. உன் தங்கச்சிக்கு அவனைப் பிடிச்சி இருக்கு. இத்தனை நாள் கல்யாணம் வேண்டாம்னு சொன்னவ, இன்னைக்கு ஒதுக்கிட்டா. அப்படியே இங்க கோவில்ல வச்சி கல்யாணம் முடிச்சி வச்சிருங்க.." என்று கூறிட,

வடிவேலுவிடன், "அடேய்.. இனிமேலாவது வெட்டியா ஊரை சுத்தாம ஒழுங்கா அந்தப் பிள்ளையை வச்சி குடும்பம் நடத்தப்பாரு.." என்று ஊர்ப் பெரியவர்கள் கூறினர்.

"அது எல்லாம் எங்களுக்குத் தெரியும்.." என்றார் வடிவேல்.

அங்கேயே இன்னொரு ஜோடிக்கும் திருமணம் நடந்தது.

இவர்கள் ஆசிர்வாதம் வாங்கும் போது, விஷ்ணுவும் ஜனனியும் வந்து காலில் விழுந்தனர்.

அனைவரும் அதிர்ச்சியுடன் பார்க்க,
"ஒரு பெரிய குழப்பம் நடந்துப்போச்சு. அந்தப் பொண்ணை தூக்குறதுக்கு பதில் தான் உங்க தங்கச்சியை தூக்க வேண்டியதா போச்சு. அதுனால தான் இவ்ளோ குழப்பமும்." என்று வடிவேல் கூற,

புஸ்பவதி, "அண்ணா.. இப்போ இவன் எனக்கு மகன் முறை. என் மகனுக்கு தானே உங்க பொண்ணை கொடுத்து இருக்கீங்க. ஏத்துக்கோங்க அவங்கள.." என்றிட,

ஒரு வழியாக இருவரது திருமணம் பெரியோர்களால் ஏற்றுக்கொள்ளப் பட்டு, அங்கே நிம்மதி அலை பரவியது.
 

Author: VedhaVishal
Article Title: 35. ஆஹா கல்யாணம் - கார்த்தி சொக்கலிங்கம்
Source URL: Nectar Novels-https://nectarnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.