• ஹாய் மக்களே! நம் Nectar Novels தளத்திற்கு நல்வரவு🙏😍😍 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள் nectarnovels.ss@gmail.com 🩷 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...👇 வேதா விஷால் & அனன்யா🙏💖

37 - காதல் தூதன் கரப்பான் வாழ்க! - ஆதித்யா

VedhaVishal

Administrator
Staff member
Jun 17, 2024
83
325
53
Chennai
காதல் தூதன் கரப்பான் வாழ்க!

"ஏன்டா இப்படி அமைதியாவே இருந்தா என்ன செய்ய?? சட்டு புட்டுன்னு ஒரு முடிவுக்கு வாங்கலே. வனத்துறை அதிகாரிகளுக்கு சொல்லியாச்சு. ஆனா அவுக வர ரெண்டு நாளாவது ஆகும். மழ பேஞ்சு நம்ம ஊருக்கு வர்ற பாத அடைச்சு கெடக்கு. ரெண்டு நாளைக்கு நாமதே நம்மள காப்பாத்திக்கனும். என்ன நாஞ்சொல்றது?"

அது அரசமலை ஊரின் பஞ்சாயத்து. 1987,மழைக்காலம்.

பேசியது நம்ம ஊர் பஞ்சாயத்து தலக்கட்டு பெரியவர் அருணாசலம்.

"ஏன்யா புலி என்ன ஸ்ரீதேவியா ஆசப்பட்டு போய் பாக்க? அடிச்சு கிடிச்சு போட்ருச்சுனா என்ன ஆகுறது? கொஞ்சம் யோசிக்கனூங்கயா."

"ஏன்டா இளவட்டங்க நீங்களே இப்டி ஜகா வாங்குனா பொட்ட புள்ளைங்கள காவலுக்கு போட்றுவோமா? ....நா வரேன்னு சொல்றேன் அப்பமும் யாரும் கூட வரலனா எதுக்குலே ஒங்களுக்குலா மீச. மழிச்சு போட்டுறுங்கலே!?!?" நக்கலாக பேசி தன் மீசையை நீவி விட்டுக்கொண்ட பஞ்சாயத்து தலைவரை கண்ணன் முறைத்தான்.

கண்ணன் அரசமலை மணியக்காரரின் மகன். அந்த ஊரில் அனைவரும் ஜொள்ளும் இளைஞன்‌. அருணாசலத்துக்கும் அவனுக்கும் ஏழாம் பொருத்தம் தான் எப்போதும். பஞ்சாயத்து தல என்னும் பேரில் பலவித ஊழல்களை செய்து வருபவரை கணக்கு வாத்தி கண்ணனுக்கு பிடித்திருந்தால் தான் அதிசயம். தன் ஊழல்களை கண்ணன் சுட்டிக்காட்டுவதால் நம்ம தல க்கு கடுப்பு.

ஆனா கணக்கு வாத்தியை அருணாசலத்தின் மகளான மோகனாவுக்கு ரொம்ப பிடிக்கும். கண்ணனுக்கும் இது தெரியாமல் இல்லை. பட் வாட் டு டூ? அது நடக்காது னு தெரியும்.

மேட்டர் இதுதான். மலை கிராமம் என்பதால் அடிக்கடி வனவிலங்குகள் தரிசனம் தரும். வனத்துறை அதிகாரிகள் எப்போதும் வந்து விலங்குகளை பிடித்து விடுவார்கள். இம்முறை மழையால் ஊருக்கு வரும் ஒற்றை பாதையும் நிலச்சரிவால் மூடிவிட்டது.இப்போது முரட்டு புலி ஒன்று ஊருக்குள் வந்ததால் ரோந்துக்கு இரவில் யார் செல்வது என்பதை முடிவு செய்ய இந்த கூட்டம்.

நாங்க வரோம் என்று கண்ணன் தலைமையில் ஒரு இளைஞர் பட்டாளம் வந்தது. சரி என்று தலக்கட்டு பெரியவர்கள் அனைவரும் முடிவு செய்து கலைந்தனர் .

இரவானதும் இளைஞர்கள் அனைவரும் ரோந்து பணியை தலைவர் வீட்டில் வந்து தேவையான தளவாடங்களை பெற்றுக்கொண்டு தொடங்கினர்.

வீட்டிற்கு வந்த கண்ணனை "தில்லானா மோகனாம்பாள்* ஸ்டைலில் நம்ம மோகனா தனியாக பேச அழைத்தாள். கிணற்றடியில் நின்ற கண்ணனை நோக்கி

"ஏன் இப்படி செஞ்சீங்க? புலி வந்துட்டா என்ன பண்றது?

"பிடிச்சுட்டு வாரேன் "புலி"சோறு செஞ்சி போடு".

இந்த மொண்ண காமெடி பண்றவன போய் லவ் பண்ணி தொலச்சுட்டமே. அடியே புலி ஆத்தா இவன ஒரு அப்பு அப்பிடு ன்று தன்னையே நொந்து கொண்டு அவனுக்கு ஆயிரம் பத்திரம் சொல்லி விடைகொடுத்தாள்.

ஒரு வாரம் சென்றது.

ரோந்தின் முதல் பாதி நேரம் முடிந்த பிறகு வயதின் காரணமாக அருணாசலம் தன் வீட்டு வாசலில் ஒரு கட்டில் போட்டு படுத்திருந்தார்.

மணி இரண்டரை இருக்கும். கண்ணன் அப்போது தான் தலைவர் வீட்டு திண்ணையில் அமர்ந்து கொண்டு வீதியில் நோட்டம் விட்டுக்கொண்டிருந்தான்.திடீரென அருணாசலத்தின் காலில் நம நம என்றிருந்தது. காலை உதறிவிட்டு திரும்பி படுத்தார். படுத்தவர் சிறிது நேரத்தில்.....

"புலி...புலி... அய்யோ கடிக்கிது.... அய்யோ புலி புலி... புடி.. புடி..." என்று அருணாசலம் தூக்கத்தில் அலறினார்.

அரைத்தூக்கத்தில் இருந்த கண்ணனும் "ச்ச்சூசூ.... ச்சூசூ..." என்று கத்தி புலியை விரட்டினான். விளக்கை போட்டு பார்த்தால் பெரிய கரப்பான் ஒன்று ஓடிக்கொண்டிருந்தது அவரது கால்களுக்கு அடியில்.

அதற்குள் காவலுக்கு சுற்றிக்கொண்டிருந்தவர்களும், வீட்டில் இருந்தவர்களும் வாசலுக்கு வந்துவிட்டார்கள்.

இளைஞர்களுள் ஒருவன் " டேய் கண்ணா என்னடா ? எங்க புலி ??? ஐயா எந்த பக்கம் போச்சு புலி உங்கள கடிச்சிருச்சுங்களா ? " என்று இருவரையும் கேட்டான்.

அசடு வழிய ஒருவரை ஒருவர் பார்த்தனர் அருணாசலமும், கண்ணனும்.

" இந்தா மேற்கால பக்கம் தான்லே போச்சு நம்ம வாத்தியார் விரட்டி அடிச்சுட்டாரு" என்று கூறிய அருணாசலம், கண்ணனை பார்த்தார். கண்ணனும் அதிர்ச்சியுடன் ஆம் என்பது போல் தலையை ஆட்ட அனைவரும் மறுபடியும் ஒரு முறை ஊரை சுற்றி வந்து புலியை தேடினார்கள். புலி எங்கேயும் தென்படவில்லை.

விடிந்ததும் வனத்துறை அதிகாரிகள் வந்து ஊர் முழுவதும் சோதனை செய்து விட்டு புலி ஒருவேளை காட்டிற்கு திரும்பி சென்றிருக்கலாம் என்று கூறி சென்றனர்.

மறுபடியும் ஊர் பஞ்சாயத்து.

புலியை விரட்ட உதவிய அனைவருக்கும் நன்றி நவிலல் நடந்தது தலைவர் தலைமையில்.

ஊர் பெரியவர் ஒருவர் "யோவ் தலைவரே புலி கிட்ட இருந்து ஒங்க உசுர காப்பாத்துன கண்ணனுக்கு எப்படிய்ய நன்றி சொல்லப்போறீரு???"

"கட்"....

"வாராயோ தோழி வாராயோ......" என்று குழாய் கட்டி தன் மகளின் கல்யாணத்தை அமர்க்களப்படுத்திக் கொண்டிருந்தார் நம்ம பஞ்சாயத்து தல அருணாசலம்.

மேடையில் வெட்கப்பூவாய் மோகனா. பக்கத்தில்.....

வேற யாரு நம்ம கணக்கு வாத்தி கண்ணன் தான்.

கண்ணனை மருமகனாக்கியதில் பல விதங்களில் அருணாசலத்திற்கு வசதி. முக்கியமாக வீர தீர சூரனான தான் கரப்பானனைக் கண்டு புலி என்று பயந்து கத்தியதை சமாதான உடன்படிக்கை மூலம் அமுக்கி விட்டார்.

கண்ணனின் மனதிற்குள்.." கரப்பான் வாழ்க!"
 

Author: VedhaVishal
Article Title: 37 - காதல் தூதன் கரப்பான் வாழ்க! - ஆதித்யா
Source URL: Nectar Novels-https://nectarnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.