• ஹாய் மக்களே! நம் Nectar Novels தளத்திற்கு நல்வரவு🙏😍😍 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள் nectarnovels.ss@gmail.com 🩷 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...👇 வேதா விஷால் & அனன்யா🙏💖

39 - அறுந்த வால்களின் அட்டகாசங்கள் - விஜி சம்பத்

VedhaVishal

Administrator
Staff member
Jun 17, 2024
89
390
53
Chennai
அறுந்த வால்களின் அட்டகாசங்கள்

“என்னங்க.. என்னங்க”
அசந்து தூங்கிக் கொணடிருந்த சேதுவை அவர் மனைவி பவானி அசைத்து எழுப்ப,

“சொல்லும்மா.. எதுக்கு இப்படி தூங்கறவனைத் தொல்லை பண்றே..?”

நவராத்திரி வரப் போகுதே.. பரண் மேல இருக்கற பொம்மைப் பெடடியை இறக்கி வச்சிட்டு நீங்க குளிக்கப் போங்க.”

“என்னது.. அதுக்குள்ளயா நவராத்திரி வந்துடுச்சு?’

ஆமாங்க.. நாம கொலு வைக்க ஆரம்பிச்சு அஞ்சாவது வருஷம். நாம மொத மொதலா கொலு வெச்ச அந்த வருஷம்.. அடடா.. நம்ம வீடே எப்படி சொந்தக்காரங்களால நிறைஞ்சு கோலாகலமா இருந்துது. இப்போ நெனச்சாலும் மனசுல சந்தோஷம் ரொம்பி வழியுதுங்க”

பவானி சொல்லச் சொல்ல சிவராமனுக்குள்ளும் அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததேன்னு நினைவுகள் ரீவைண்ட் ஆகத் தொடங்கியது.
கொரோனா கொஞ்சம் கொஞ்சமாக மக்களை விட்டு விடைபெற்ற நேரம்..!
காலை ஆறுமணிக்கு பால் பாக்கெட்டை எடுக்க வீட்டுக் கதவைத் திறந்த சேதுராமனுக்கு அடிச்சது பாருங்க ஷாக்கான ஷாக்..! கதவுக்கு அந்தப்புறம் காண்டாமணி சாரி சாந்தாமணியும் அவளோட கணவர்,குழந்தை,குட்டிகள்னு ஒரு பட்டாளமே நின்னு கிட்டிருந்ததுதான் ஷாக்குக்கு காரணம். வந்தவங்களை வாங்கன்னு கூடக் கூப்பிடத் தோணாமே

“பவானீ…இப்பவே இங்க வா நீ..நீ…நீ”னு அலறினார்.
அவர் கூப்பிட்டு அஞ்சு நிமிஷம் கழிச்சு அவரோட மனைவி பவானி ஆடி, அசைஞ்சு வந்தவ

“என்னங்க இது? .ஊரிலிருந்து வந்தவங்கள வெளிலயே நிக்க வெச்சு பேசிகிட்டிருக்கீங்க? வாங்க..வாங்க எல்லோரும் சௌக்கியம்தானே..பிரயாணம் எல்லாம் சௌகர்யமாயிருந்ததா”..னு வரவேற்க..கடுப்பாகிப் போனார் சேதுராமன்…

“பவாiனி இவங்கள யாரு” னு ஆரம்பிக்கும் போதே “என்னங்க..மறந்துட்டீங்களாஎல்லோருக்கும் கைக்கு சானிடைஸர் குடுங்க…!

டேய் பசங்களா..எல்லோரும் செருப்பைத் தோட்டத்துப் பக்கம் விட்டுட்டு நேர பாத்ரூம் போய்ப் பல்லத் தேச்சு ஒரு குளியலைப் போட்டுட்டுதான் உள்ளாற வரணும். சாந்தா நீயும் அவரும் குளிச்சிட்டு வந்து காபியக் குடிங்க..! நான் போய் டிஃபனுக்கு ஏற்பாடு பண்றேன்” னுட்டு..
சேதுராமன் பக்கம் திரும்பக் கூட இல்லை. ஓடியே போயிட்டா கிச்சனுக்கு.! விடுவாரா சேது?
விடு,விடுனு…பின்னாடியே ஓடினார். ஏய்…என்னடி இது..? சாந்தா எதுக்கு இப்ப வந்திருக்கா..? அவளோட பட்டாளத்தைப் பாத்ததுமே எனக்கு வயிறெல்லாம் கலக்குது. .

என்னங்க அவ யாரு..? உங்களுக்கு சித்தி பொண்ணு..தங்கை முறை. எதுக்கு இப்பிடி படபடன்னு பொரியறீங்க..?

“ஒறவு மொறை எல்லாம் இருக்கட்டும். அவள வரச் சொல்லி இருக்கேன்”னு நீ சொல்லவே இல்லையே..! சொல்லி இருந்தா வேணாம்னு சொல்லி இருப்பேனே.”

சொல்லிட்டிருக்கும் போதே குளிச்சிட்டு வந்த சாந்தா..

”என்னண்ணா ..நீ இன்னமும் அப்படியேதான் அசமஞ்சமாவே இருக்கே. வீட்டுக்கு வந்தவங்கள வான்னு கூப்பிடக்கூட இன்னும் தெரியல! என்னவோ போ..! நீயும் எப்பிடித்தான் கவருமென்ட் ஆஃபீசரா குப்பை கொட்றியோ?”

அவளுக்கு சுடச்சுட பதில் குடுக்க சேது வாயைத் திறக்க, வாசல் பக்கமிருந்து ஒரே கூச்சல்.

வேற ஒண்ணுமில்லை. சென்னைல இருந்து பவானியோட. தம்பியும்,, தங்கையும் தங்களோட பரிவாரங்களோட வந்து இறங்க, சாந்தாவின் வாரிசுகளோடு ..சேதுவின் புத்திர சிகாமணிகளும் சேர, அத்தனாம் பெரிய ஹால் பெட்டிகளும், குட்டிகளுமாக ரொம்பி வழிந்தது. ரொம்ப நாளைக்கப்புறம் பார்த்துக் கொண்டதில் குழந்தைகளின் உற்சாகம் எல்லை மீறி குறும்புத்தனம் தலைக்கேறியது. நிஜம்மாவே பவானியின் தங்கை மகன் வருண் சாந்தாவின் மகன் தலை மீது ஏறி ஒற்றைக்காலில் நின்று கொண்டு நடனமாட..மற்ற வாண்டுகள் ஒருவரை ஒருவர் கட்டிப் பிடித்துப் புரண்டு..எட்டி உதைத்து,, அவர்களுடைய சந்தோஷத்தை வெளிப் படுத்திக் கொண்டிருக்க, பெரியவர்கள் அனைவரும் ஒருவரை ஒருவர் நலம் விசாரித்துக் கொண்டிருந்தனர்.
போர்க்களமாகக் காட்சியளித்த வீட்டில் சேது மட்டும் குழம்பிப் போயிருந்தார். அவரைச் சுத்தி என்ன நடக்குதுன்னே அவருக்குப் புரியல. இப்போ எதுக்கு இத்தனை பேரும் ஒரேயடியா இங்க வந்திருக்காங்க…? நம்ம வீடே இப்போ ஒரு மர்மதேசம் போலக் காட்சியளிக்குதே…! இதெல்லாம் இந்த பவானியோட வேலையாத்தான் இருக்கும்.

வந்த விருந்தினர் களெல்லாம் கூடிக் கூடி கும்மாளமடித்துக் கொண்டிருக்க…நைஸாக பவானியை இழுத்துக் கொண்டு ஸ்டோர் ரூமுக்குப் போனார் சேது.

ஏய் பவானி..! இப்போ எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும். என்ன நடக்குது இங்கே…? எதுக்கு இவங்க எல்லாம் இப்போ ஒண்ணு சேந்து வந்திருக்காங்க..னு உறுமினார்.

“என்னங்க இது…! நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம் பட விஜய் சேதுபதி மாதிரி நடந்தத எல்லாம் மறந்துட்டு முதல் மரியாதை வசனம் பேசிகிட்டிருக்கீங்க?

என்னது…? நடந்தத நான் மறந்தேனா…என்ன நடந்தது? எப்பொ நடந்தது? ன்னு கேள்விக் கணைகளால் தன்னுடைய மூளையை கசக்கிப் பிழிஞ்சு யோசிச்சும் கூட அவருக்கு எதுவுமே நினைவுக்கு வரலை.! தனக்குத்தான் ஏதோ மறதி நோய் வந்துருச்சோ? அம்னீஷியா..இல்லை ,அல்ஸைமர்..இப்படி ஏதாவது வந்திருக்குமோ அப்படியும் இல்லையே..! நேத்து சாயங்காலம் வரை ஞாபகசக்திக்குப் பேர் போனவர்னு ஆஃபீஸ்ல பேர் வாங்கினவனாச்சே…! நமக்கு எப்படி மறந்து போகும்..னு குழம்பிப் போனவர்…

“ மெய்யாலுமே எனக்கு ஞாபகம் வரல பவானி…நீதான் சொல்லேன்..னு பரிதாபமாக் கேட்டார்.

“ஹுக்கூம்” ..மோவாயத் தோள் பட்டைல கொண்டு போய் இடிச்சுகிட்டே

“இதான்..உங்ககிட்ட…! முக்கியமானத எல்லாம் மறந்துருவீங்க. இதுல ஞாபகசக்தில புலின்னு வேற பெருமை உங்களுக்கு! நம்ம வீடு கிரஹ ப்ரவேசத்தப்ப நாம பேசிகிட்டதெல்லாம் உங்களுக்கு மறந்து போச்சா..?”

“ஏய்…வீடு கிரஹப்ரவேசத்தப்ப நாம என்னென்னமோ பேசினோம்..இப்ப அதெல்லாம் எதுக்கு? விஷயத்துக்கு வா.”.

“நம்ம வீடு கன்ஸ்ட்ரக்ஷன் முடிஞ்சி மார்ச் மாசம் முப்பதாம்தேதி கிரஹப் ப்ரவேசம்னு முடிவு பண்ணினோமா…!

னோம்! ஆனா அது நடந்து ஆறு மாசமாச்சே!

“பொறுமை…பொறுமை…யார்..யாரை எல்லாம் கூப்பிடறதுன்னு லிஸ்ட் போட்டோமா..?”

“டோம்! ஆனா அதுதான் யாரும் வரமுடியாத படிக்கு கவர்ன்மெண்ட்ல ஊரடங்கு அறிவிச்சுட்டாங்களே!”

“அதான்…அதேதான்…!.அப்போ நாம என்ன பேசிகிட்டோம்?”

“என்ன பேசிகிட்டோம்…?”

“ஆங்..! முக்கியமான இடத்துக்கு வந்ததும் மறந்த மாதிரி நடிக்கிறீங்களே.”.

“நடிக்கிறேனா.?.நானா? .ஏய்..சீக்கிரம் சொல்லித் தொலைடி..அந்த வாலறுந்த பட்டாளங்க வீட்டை நாஸ்தி பண்றதுக்குள்ள ஏதாவது செஞ்சாகணும்!

“ டீ போட்டுப் பேசினீங்கன்னா நான் ஒண்ணும் சொல்ல மாட்டேன்..

நீங்களாச்சு..வந்திருக்கிற விருந்தாளிங்களாச்சு..
என்னவோ பண்ணிக்குங்க”

“என்னது..என்னவோ நாந்தான் அவங்கள ஃபோனைப் போட்டு வரவழைச்சேன்னு சொல்லுவ போலிருக்கே..? என் ராசாத்தி..சீக்கிரம் சொல்லும்மா”

“ம்..ம்..அப்பிடி வாங்க வழிக்கு!. ஊரடங்கால நம்ம சொந்தங்களைக் கூப்பிட்டு
விமரிசையா கிரஹ ப்ரவேசம் செய்ய முடியல…அடுத்து வர்ற ஒரு நல்ல நாள் கெழமைல அவங்களக் கூப்பிட்டு விருந்து குடுக்கலாம்னு பேசினோமா இல்லையா?”

சத்தியமாக சேதுவுக்கு அப்படிப் பேசினதாக நினைவே இல்லை. எப்பவும் பவானிதான் பேசுவாள். தலையாட்டுவது மட்டுமே நம்முடைய வேலை ஒரு வேளை…பல்லாண்டுகளாத் தான் ஆசைப் பட்ட தன் கனவு வீட்டைக் கட்டி முடித்து விட்ட பெருமிதத்தில் தலை,கால் புரியாத சந்தோஷத்தில் தலையாட்டி இருப்போமா?

“சரி இப்ப என்ன நாள்,கிழமைன்னு இவங்கள வரச் சொல்லி இருக்க…? அப்படியே அவங்கள வர சொல்றதுன்னாலும் எங்கிட்ட ஒரு வார்த்தையாவது கேக்க…”

“என்னது…?”

“ம்ம்..சொல்லியாவது இருக்கணுமில்ல?”

நமக்குக் கல்யாணமாகி பதினைஞ்சு வருஷத்துல நான் உங்க கிட்ட ஏதாவது ஆசைப்பட்டுக் கேட்டிருக்கேனா..?

கேக்காமயே எல்லாம் வாங்கிக்கிக்கறதுதான் உன்னுடைய ஸ்பெஷாலிடியே (சேது மைண்ட் வாய்ஸ்)

கல்யாணமான புதுசுல நவராத்திரிக்கு எல்லோர் வீட்டுலயும் கொலு வைக்கிறாங்கன்னு நான் கேட்டதுக்கு நீங்க என்ன சொன்னீங்க?

என்ன சொன்னேன்?

தலையைச் சொறிந்தார்.. மோவாயைச் சொறிந்தார். சீலிங்கைப் பார்ததார். ஃப்ளோரிங்கைப் பார்த்தார். ம்ஹும். எதுவும் நினைவுக்கு வந்தபாடில்லை. கல்யாணமான புதுசுல புதுப் பெண்டாட்டி மனசு கோணக்கூடாதுன்னு எதையாவது சொல்லித் தொலைத்திருப்போமா? இந்த மாதிரி இன்னும் எத்தனையெத்தனை இருக்கோ தெரியலையே”


“வாடகை வீட்ல கொலு வைக்கிறதெல்லாம் சரிப்படாது. சொந்த வீடு கட்டினதும் கொலு வைக்கலாம்னு நீங்க அப்ப சொல்லலை?”

“செரி..சொல்லி இருப்பேனோ என்னவோ!”

“ஹ்ம்…சொன்னீங்க அதான் இந்த வருஷம் கொலு வைக்கலாம்னு முடிவு பண்ணேன்..! .கிரஹப் ப்ரவேசத்துக்கு கூப்பிட முடியல..கொலுவுக்காவது வாங்கனு என் கூடப் பொறந்தவங்களையும்..
உங்க தங்கச்சியையும் வரச் சொன்னேன்! இது தப்பா?’

உன் கூடப் பொறந்தவங்களக் கூப்ட்டே! அதுவும் நவராத்திரிக்கு இன்னும் பத்து நாள் இருக்கே..! செரி..எதுக்கு இந்த சாந்தாவைக் கூப்ட்டுத் தொலைச்சே? உனக்குத்தான் அவளைக் கண்டாவே ஆகாதே.! சாந்தாமணின்னு பேர் வெச்சதுக்கு கண்டாமணின்னு பேர் வெச்சிருக்கலாம்..அப்பிடி ஒரு வாய்ஸ்னு திட்டுவே? வந்தும் வாரததுமா என்னையே எப்படி கிண்டல் பண்றா பாத்தே இல்ல? அவ புருஷன் வேற வெத்தலையைக் குதப்பிக் கண்ட எடத்துல துப்புவானே..! என்னோட இத்தனை வருஷ உழைப்புல கட்டின என் கனவு மாளிகை என்னவாகப் போகுதோ?”

பொலம்பாதீங்க..எல்லாம் நான் பாத்துக்கறேன் எந்தம்பி பொண்டாட்டியும் சரி..என் தங்கச்சியும் செரி…சரியான சோம்பேறிங்க..ஒரு வேலைக்கு லாயக்கில்ல. ஆனா உங்க தங்கச்சி வாயும்,வாய்ஸும் கொஞ்சம் ஜாஸ்தின்னாலும் வேலை செய்யறதுக்கு அவள விட்டா வேற யாரிருக்கா?

கொலு வைக்கிறதுன்னா சும்மாவா? எத்தனை வேலை இருக்கு? ஒத்தாசைக்கு இருக்கட்டும்னுதான் குடும்பத்தோட வரச் சொன்னேன்?

“ஓஹ்…ஹோ…! அறுந்த வால்களின் அட்டகாசங்கள் ங்கற தீம் ரெடி பண்ணி பொம்மைக்குப் பதிலா இந்த வால் பசங்களுக்கே வானர வேஷம் போட்டு ஒக்கார வெச்சுரலாமா?”

சேது வயித்தெரிச்சலோடக் கேட்க…

“இதான்.. இதான்..உங்க கிட்ட எனக்குப் பிடிச்சதே .இந்த சென்ஸ் ஆஃப் ஹுயூமர்(!)தான்…னு பவானி செல்லம் கொஞ்ச…

“இதோ.! .மாமாவும்,மாமியும் இங்கதான் ஸ்டோர் ரூம்ல ஒளிஞ்சுகிட்டிருக்காங்க”ன்னு ஒரு வாண்டு கூக்குரலிட…

“அண்ணி முந்தானையப் பிடிச்சிகிட்டு அவ பின்னால சுத்தறத நீ இன்னும் விடவே இல்லையாண்ணா?”

என்ற சாந்தாமணியின் வெண்கலக் குரளைக் கேட்டு வந்த விருந்தினர்களின் நையாண்டிச் சிரிப்பு சேதுவின் கனவு மாளிகை முழுதும் எதிரொலித்தது!

பழைய நினைவுகளில் இருந்து அவரை மீட்டது வாசலில் ஒலித்த காலிங் பெல் குருவி. போய்க் கதவைத் திறந்து பார்த்த விழிகள் பார்த்தபடி இருக்க,

‘ஐயோ நிரும்பவும் மொதல்ல இருந்தா?”

அதிர்ச்சியில் சேது மயக்கமாக.. அவரைத் தாண்டிக் கொண்டு வீட்டுக்குள் ஓடினர் சாந்தாமணியின் புத்திர சிகாமணிகள்.

“அண்ணி.. அண்ணனுக்கு என்னாச்சு.. ஏன் இப்படி மயங்கிக் கிடக்குறாரு”
சாந்தாமணியின் வெண்கலக்குரல் அந்த மயக்க நிலையிலும் சேதுவின் மண்டைக்குள் ஓங்கியடித்தது.
 

Author: VedhaVishal
Article Title: 39 - அறுந்த வால்களின் அட்டகாசங்கள் - விஜி சம்பத்
Source URL: Nectar Novels-https://nectarnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.

Mrs Beenaloganathan

Active member
Mar 21, 2025
284
22
43
46
Bangalore
சொந்தங்களும்
சின்ன பிள்ளைகளும்
சில நேரங்களில் சங்கடமாய் இருந்தாலும்
சந்தோஷத்திற்கு பஞ்சமில்லை....