• ஹாய் மக்களே! நம் Nectar Novels தளத்திற்கு நல்வரவு🙏😍😍 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள் nectarnovels.ss@gmail.com 🩷 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...👇 வேதா விஷால் & அனன்யா🙏💖

41 - வெண் பொங்கல் நேரத்து மயக்கம் - ஷங்கர்

VedhaVishal

Administrator
Staff member
Jun 17, 2024
83
325
53
Chennai
வெண் பொங்கல் நேரத்து மயக்கம்

கார்த்திக் ஷுக்களைக்கூடக் கழற்றாமல் ஹால் சோபாவில் அமர்ந்தான். முகத்தில் சோகம். வழக்கமாய் ஆபிசிலிருந்து வந்ததும் லுங்கிக்கு மாறி, ஒரு சின்னக் குளியல் போட்டுவிட்டு ப்ரெஷ்ஷாக சாரதாவின் காப்பிக்கு காத்திருப்பான். இன்றைக்கு... எதுவும் செய்யாமல் ஜன்னலை வெறித்தபடி அமர்ந்திருந்தான்.

காபியை அவன் முன் கொண்டு வந்து சாரதா வைத்ததைக் கூடக் கவனிக்காமல் அமர்ந்திருந்தான். மெலிதாக தொண்டையைச் செருமினாள் சாரதா. உலுக்கப்பட்டவன் போல் திரும்பி, அவளை பார்த்து வெற்றாகப் புன்னகைத்தான்.

“என்னங்க.. என்னாச்சு.., உடம்பு முடியலையா..?” என்றபடி அவன் நெற்றியில் கை வைத்துப் பார்த்தாள்.

“அதெல்லாம் ஒண்ணுமில்ல சாரதா. இன்க்கு ஆபீஸ்ல..”

என்று ஆரம்பித்த சமயம் டிவியில் “ கணவனா கயவனா” என்ற சீரியல் ஓடிக் கொண்டிருந்தது. சாரதா ஒரு டிவி சீரியல் அடிக்ட். 24 மணி நேரமும் அவர்கள் வீட்டில் சீரியல் ஓடிக்கொண்டே இருக்கும். அவளுடன் சேர்ந்து பார்த்து பார்த்து கார்த்திக்கும் சீரியல் அடிக்ட் ஆகிவிட்டான்.

இப்போது அந்த சீரியலிலிருந்து ஷெனாய், வயலின் மற்றும் யாரோ “ ஆ.. ஆ…” என்ற சோக ராகம் பாடுவதைப் போல் பி ஜி எம் அலறியது. உடனே அதற்கேற்றார் போல் கார்த்திக் தன் முகத்தை 45 டிகிரி கோணத்தில் தூக்கி கண்களை வெறித்து பார்த்தபடி சில நொடிகள் சிலையாக நின்றான்.. B G M சட்டென்று நின்று

“ டேய் நீ நாசமா போயிடுவடா” என்ற பெண்குரல் கார்த்திக்கை திடுக்கிட வைத்து நிகழ் காலத்திற்கு மீட்டு வந்தது.

“ சாரி சாரதா B G M கேட்டதும் கொஞ்சம் உணர்ச்சி வசப்பட்டுட்டேன்.. இன்னிக்கு ஆபீஸ்ல ஒரு அசம்பாவிதம் நடந்து போச்சு. உனக்குத் தெரியுமே எங்க மேனேஜர் ஒரு ஞானப்பழம். அதனால வெறும் பழம் மட்டுந்தான் லஞ்சுக்கு சாப்பிடுவார். தீவிர சைவர். ”

“ சரி அதுக்கென்னாச்சு இப்ப? சீக்கிரம் விஷயத்தைக்கு வாங்க” என்று டிவியில் நாசமாப்போ ன்னு வசவு வாங்கினவன் நிசமாகவே நாசமாப் போயிட்டானா என்று பதட்டத்துடன் ஓரக்கண்ணால பார்த்தவாரே கேட்டாள்.

“ இன்னிக்கு என்னவோ ஒரு சேஞ்சுக்கு வேற சாப்பிடலாம்டு எங்கிட்ட வந்து
‘ கார்த்திக் நீ தினமும் கிக்கியோ குக்கியோ எதுக்கோ ஃபோன் பண்ணி லஞ்ச் ஆர்டர் பண்ணி கம கமன்னு வாசனையா சாப்பிடுவையே?’ என்று கேட்டதும் நான் ‘ அது ஸ்விகி சார்’ என்றேன்.

“ என்ன கண்றாவியோ இன்னிக்கு எனக்கும் ஏதாவது நல்லதா ப்யூர் வெஜிடேரியன் ஹோட்டல்லேந்து ஆர்டர் பண்ணேன். பழம் தின்னு தின்னு நாக்கே பழுத்துடுத்து.” என்றதும் என் மேல் 2 சொட்டு நீர் தெளித்தது. இதுக்கு போய் ஏன் அழறாருன்ட்டு நிமிந்து பாத்தேன். அது கண்லேந்து விழல அவர் நாக்குலேந்து விழுந்தது. நான் சந்தோஷமா சரின்டுட்டேன்.

இன்க்ரிமன்ட் டைம். மனுஷன வேலை செஞ்சு இம்ப்ரஸ் பண்ணமுடியல. நல்ல பிரியாணியா வாங்கி பிரியத்தை ஏற்படுத்திக்கலாம்னு முடிவு செஞ்சு சரவணா பவன்ல எனக்கும் அவருக்கும் 2 பிரியாணி ஆர்டர் பண்ணினேன்”.

“ அப்புறம் என்ன ப்ராப்ளம் பிரியாணி நல்லாயில்லயா?”

“ ப்ராப்ளம் பிரியாணில இல்ல சாரதா அது எங்கேந்து வந்ததுங்கறதுலதான்..” என்று சற்று தயங்கினான். டிவியில் ட்ரம் ஒலித்தது ..

“ எனக்கு சரவணபவன்லேந்து பிரியாணி வாங்கி கொடுத்த ஸ்விகி பையன்அவருக்கு…” என்று தொடர்ந்தவன் நிறுத்தி கை குட்டையால் முகத்தை மூடி கேவினான் . டிவியிலே பிஜிஎம் ‘ டடடாங் ட்டடாங்‘ ன்னு ஹை பிட்ச்ல அலறியது…

“ என்ன ஆச்சு சொல்லுங்க மாமா” என்று ஓரக்கண்ணால் டிவியை பார்த்தவாரே சாரதா கேட்டாள். ரொம்ப உணர்ச்சி வசப்பட்டால் சாரதா கார்த்திக்கை “ மாமா” என்று கூப்பிடுவாள். ஏனென்றால் சீரியலில் கணவனை அப்படித்தான் கூப்பிடுகிறாங்க.

“ அவருக்கு.. அவருக்கு.. தலப்பா கட்டு பிரியாணி வாங்கிக் கொடுத்துட்டாம்மா.. கொடுத்துட்டான். எனக்கு என்ன செய்யறதுன்னே புரியலை..”என்று வடிவேலு மாடுலேஷனில் கார்த்திக் குரல் தழுதழுக்க வெம்பினான். கார்த்திக் சொல்லிக் கொண்டிருந்தபோதே சாரதாவின் கண்களில் கண்ணீர்த் துளிகள் ‘விழட்டுமா’ என்றன.

“நீங்க அதுக்கு என்னதான் பண்ணிணீங்க?”

“என்ன பண்றதுன்னு தெரியல. அந்த அசம்பாவிதத்துக்கு நான் காரணமில்லைன்னு எனக்குத் தெரியும். ஆனா எப்டி நிரூபிப்பேன்?”

“என்கிட்ட இன்னிக்கு நடந்தை ஒண்ணு விடாம சொல்லுங்க. எங்க தப்பு நடந்திருக்கும்னு யோசிச்சு சொல்றேன்..”

“காலைல ஆபீஸ் போய் என் சீட்ல உக்காந்ததும் ஆபீஸ் பாய் மணி வழக்கமான டீய வெச்சுட்டு போனான். அப்புறம்.....

இன்னிக்கு ப்ரேக் ஃபாஸ்ட் பொங்கல் குடுத்திருந்தியா, அந்த வெண்பொங்கல் நேரத்து மயக்கத்திலிருந்தவன் சட்டுனு முழிச்சு அந்த மணியக் கூப்பிட்டு

‘எனக்கு டீ வேணாம் காபி கொடு’ன்னு கேட்டதுக்கு ‘ சூடா காஃபின்னு நெனச்சு குடி எல்லாம் மனசுதான் காரணம். மனோ ரஞ்சித பூ நாம நெனக்கற பூ வாசம் அடிக்கற மாதிரிதான் நம்ம கேண்டீன் டீ’ ன்னு திமிரா சொன்னான் நா உடனே
‘ ஏண்டா எங்கிட்டயே சீரியல் டைலாக் விடறயா? இது நேத்து வந்த ‘ வாசமற்ற நேசம்’ சீரியல் டைலாக். எடுத்துட்டு போடா இந்த டீய. எனக்கு இது கழனித் தண்ணி வாசம் அடிக்குது” ன்னு சொன்னதும் ஆஃபீசே ‘ கொல்’னு சிரிச்சதும் அவன் கோவமா என்ன முறச்சு பாத்துட்டுப் போய்ட்டான்”

“கார்த்திக் ப்ளீஸ் எனக்கு இவ்வளவு டீடெய்லாம் வேண்டாம். முக்கியமான விஷயம் மட்டும் சொல்லுங்க” என்று அவசரப் படுத்தினாள் சீரியலை மிஸ் பண்ணக் கூடாதே என்ற பதட்டத்தில்

“ அப்படியில்ல சாரதா ‘ சிறு துணுக்கும் துப்பு துலக்க உதவும்’ ங்கற சீரியல்ல சொன்ன மாதிரி..”

“ சரி சரி சீக்கிரம் முடிங்க.. ‘ துப்பறியும் பாம்பு’ சீரியல் ஆரம்பிக்கறதுக்கு முன்னாடி..”

“ ஹேய் சாரதா.. அந்த துப்பறியும் பாம்பை வச்சு என் கேச முடிக்கலாமா?”

“ சான்ஸே இல்ல.. அந்த பாம்பு அடுத்த ஒரு வருஷத்துக்கு புக்காயிடுச்சாம். நானே கண்டு பிடிக்கறேன் நீங்க விஷயத்த சொல்லுங்க”

“ ஒன்னும் பெரிசாயில்ல சாரதா. வழக்கம்போலத் தான். ஏதோ பேருக்கு வேலையப் பண்ணி மொபைல்ல ஃபேஸ்புக் ரீல்ஸ் எல்லாம் பாத்துட்டு கேன்டீனுக்கு போய் காபி சாப்டுட்டு ஆர்டர் பண்ணிண லஞ்ச்ச சாப்டுட்டு..”

“ வெய்ட் வெய்ட் உங்க லஞ்ச் ஆர்டர நீங்கதான் வாங்கினீங்களா? உங்க மேனேஜர் பார்சல யார் வாங்கினாங்க?”

“ நான் கேன்டீன்லேந்து திரும்பி வந்தப்போ என் டேபிள்ல இருந்தது. மேனேஜர் அதுக்குள்ள சாப்டு முடிச்சி ஏப்பம் விட்டுட்டு இருந்தாரு. அப்ப கூட ஒன்னும் சொல்லல. அப்புறம் ஆபீஸ்லருந்து கௌம்பற சமயம் மேனேஜர் கூப்ட்டு “நீ உறுப்புடுவியா ஆச்சா பூச்சான்னு கத்தினார். நா வேணும்னே அவருக்கு நான்வெஜ் வாங்கி கொடுத்துட்டேன்னு. நான் எவ்வளவோ சொல்லியும் மேனேஜர் கேக்கல. என்ன உடனே சீஃப் மேனேஜர்கிட்ட சொல்லி டிஸ்மிஸ் பண்ணிடுவேன்னு மிரட்டினார்”

“ ஏங்க தலப்பாகட்டு பிரியாணி வாங்கினதுக்கெல்லாம் டிஸ்மிஸ் பண்ணமுடியுமா?”

“ முடியும்.. ஏன்னா எங்க சீஃப் மேனேஜர்க்கு தலப்பா கட்டு பிரியாணின்னா கோவம் வரும்”

“ ஏன்”

“ ஏன்னா அவர் ஒரு சர்தார்ஜி. ஒரு தடவ எங்க பிராஞ்சுக்கு வந்த போது அவருக்கு தலப்பா கட்டு பிரியாணி ஆர்டர் பண்ணட்டுமான்னு நான் தலப்பா கட்டை சைகை காட்டி கேட்டத அவர் பாத்துட்டு தன்னை கேலி பண்றான்ட்டு கோவிச்சுட்டு போய்ட்டார். அதனால தலப்பாகட்டுன்னாலே படு கடுப்பாயிடுவார். என்னக் கண்டாலும் பிடிக்காது”

“ சரி.. நீங்க ஸ்விகி பில்ல காமிக்க வேண்டியதுதானே?”

“அது எங்கேயோ பறந்து போயிடுச்சு அதனால அவருக்கு நேரயே ஸ்விகிக்கு ஃபோன் பண்ணி கம்ப்ளெய்ன் பண்ணினேன். அவங்க விஜாரித்துதான் சொல்லனும்டாங்க. ஆகக்கூட கடைசில நான் குற்றவாளியாயிட்டேன்.” நடந்ததை ஒன்றுவிடாமல் ஒப்பித்து முடித்தான் கார்த்திக். சாரதா அவன் சொன்னவற்றை மூளையில் மறுமுறை ஓடவிட்டுத் தீவிரமாக யோசித்தாள்.

“ சரி அவருக்கு தலப்பா கட்டு பிரியாணின்னு ஏன் ரொம்ப லேட்டா சந்தேகம் வந்தது? அது நெஜமாவே தலப்பா கட்டு பிரியாணிதானா? எத வச்சுஅவ்வளவு உறுதியா சொல்றாரு? அப்படியே அவர் சொன்னாலும் அத நீங்க எப்படி ஒத்துக்கறீங்க? ”

“ அது வந்து.. அந்த கடைக் கவர் அவர் குப்பைக் கூடைல இருந்தது”

மறுமுறை யோசித்த சாரதாவின் முகம் பிரகாசமானது. “என்னங்க.. புரிஞ்சிடுச்சு.’‘ முகமெல்லாம் பிரகாசிக்க கையில் சொடக்குப் போட்டாள். “நீங்க ஒரு மணிக்குத்தானே காபி சாப்பிட கேண்டீன் போனீங்க?”

“ஆமாம் சாரதா.”

“அப்பத்தான் அந்த சம்பவம் நடந்திருக்கணும். ஏன்னா பார்சல் மாறிப்போயிருந்தா நீங்க கண்டுபிடிச்சிருப்பீங்களே. ( டொய்ங் BGM) அதுமட்டுமில்ல உங்க மேனேஜரும் நீங்க வரதுக்குள்ளே சாப்பிட்டுட்டாருன்னு சொல்றீங்களே? ( டொட்டய்ங் BGM) அப்ப ஒன்னும் சொல்லலைன்னும் சொல்றீங்களே? ( டொட்டொய்ங்..டொட்டய்ங் BGM ) அப்ப அவர் கவரை கவனிக்கலையா இல்ல அதுல உள்ள சிக்கன் மட்டன் பீசஸை கவனிச்சிருக்கமாட்டாரா? ( ஆ..ஆ ராகம் BGM) “

இப்பொழுது கார்த்திக் 60 டிகிரி தலையை உயர்த்தி கைகளிரண்டையும் தலையில் வைத்து ஆழமாக யோசித்தான். ஃப்ளூட், சித்தார், ட்ரம்ஸ் என்று பலவிதமான ம்யூசிக் டிவியில் ஒலித்தது.

“ கரெக்ட் சாரதா.. இப்பதான் தோணுது. அவர் கத்தும்போது ‘ இந்த மணிதான் ‘சார் உங்க கூடைல தலப்பா கட்டு பிரியாணி கவர் கிடக்கு. நீங்க சாப்ட்டது சிக்கன் பிரியாணி’ன்னு சொல்லலேன்னா எனக்கு தெரிஞ்சே இருக்காது. அந்த கடன்காரன் சாப்டறதுக்கு முன்னால சொல்லாம சாப்டப்புறமா சொல்றான் மூதேவி’ என்று சொன்னார்”

“ எஸ்.. ஆக்சுவலி அவர் உங்களமாதிரி சரவண பவன் பிரியாணிதான் சாப்பிட்டுருக்காரு. மணிதான் அவர்கிட்ட வேணும்னுட்டு தப்பா சொல்லி பயமுறுத்திருக்கான்.. காலைல நீங்க அவன கத்தினதுக்கு பழிவாங்கறதுக்கு... நீங்க மொதல்ல அந்த ஸ்விகி பையன ஆஃபீசுக்கு வரவழைச்சு மேனேஜர்கிட்ட அவன் என்ன கொண்டு வந்தான்ட்டு சொல்ல சொல்லுங்க. அதே சமயம் அந்த மணிய கூப்பிட்டு மிரட்டுங்க. உண்மைய கக்கிடுவான். இப்ப புரிஞ்சுதா..?”

இப்போது பி ஜி எம்மில் பல சித்தார்கள் கல கலவென ஒலித்தன.

மறுநாள். உற்சாகப் புயலாக வீட்டினுள் வந்தான் கார்த்திக். “சபாஷ் சாரதா. நீ சொன்னபடியே அந்த ஸ்விக்கி பையன கூப்பிட்டு மானேஜர்ட்ட உண்மைய சொல்லச் சொன்னேன் அப்பறம் அந்த மணிப்பயல மிரட்டி மானேஜர்ட்ட மன்னிப்பு கேக்க வச்சேன். சோ.. எல்லா பிராப்ளமும் சால்வ்டு. உன் மூளைக்கு நீ டிடெக்டிவ் ஏஜன்சியே நடத்தலாம். கண்ணை மூடிக்கோ. உனக்கொரு கிஃப்ட் கொண்டாந்திருக்கேன்..” என்றான்.

கண்ணை மூடியவளின் கன்னத்தில் சட்டென்று முத்தமிட, “ச்சீ.. இதுவா கிஃப்ட்..?” என்று அவன் நெஞ்சில் குத்திச் சிரித்தாள் சாரதா

“ அப்படித்தான் “புத்திசாலி புவனா”ல அவ புருஷன் பண்ணுவான். எனிவே இந்தா இன்னொரு கிஃப்ட்” என்றவாரு ஒரு பையை நீட்டினான். அது தலைப்பா கட்டு பிரியாணி பாக்கட்!

B G Mல் ஹா ஹா என்று ஆண்கள் பெண்கள் பலர் சிரிக்கும் சப்தம் கேட்டது!
 

Author: VedhaVishal
Article Title: 41 - வெண் பொங்கல் நேரத்து மயக்கம் - ஷங்கர்
Source URL: Nectar Novels-https://nectarnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.