• ஹாய் மக்களே! நம் Nectar Novels தளத்திற்கு நல்வரவு🙏😍😍 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள் nectarnovels.ss@gmail.com 🩷 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...👇 வேதா விஷால் & அனன்யா🙏💖

42 - கிச்சானந்தாவும் இருசீடர்களும்! - ச.மணிவண்ணன்

VedhaVishal

Administrator
Staff member
Jun 17, 2024
83
325
53
Chennai
கிச்சானந்தாவும் இருசீடர்களும்!

கிச்சா பக்கத்து போர்ஷனில் குடியிருந்த நண்பன் சங்கர் வீட்டுக்காலிங் பெல்லை அழுத்தும்போது மணி காலை 6.30.

சங்கர் காலிங்பெல் சத்தம் கேட்டு கதவைத் திறந்தான்.

" படுபாவி. ஓசி காபிக்கு நாக்க தொங்கபோட்டுக்கிட்டு காலையிலேயே வந்திட்டான்" முணகியவாறு கிச்சாவை முறைத்துப் பார்த்தான.

"சரி! முறைச்சது போதும் போய் காபி போடற வேலையை பாரு!"
ரிமோட் எடுத்து டி.வியை ஆன் செய்து ஒவ்வொரு சேனலாக மாற்றிகொண்டு வந்தவன் ஒரு சேனலில் மையம் கொண்டான்.

சேனல் சாமியார்களின் லீலைகள் என்ற தலைப்பில் பிரபலமான சாமியார்களைப் பற்றி புகைப்படம் மற்றும் வீடியோக்களுடன் பெண்குரலில் தொகுத்து நிகழ்ச்சி ஒளிப்பரப்பாகிக் கொண்டிருந்தது.

அதில் எல்லா சாமியார்களும் பெண்கள் புடைசூழ இருப்பதை ஜொல்லுடன் ரசித்துப் பார்த்து கொண்டிருக்கும்போது காபி கோப்பையுடன் சங்கர் வந்து பக்கத்தில் அமர்ந்தான்.

"காலையில பார்க்கற நிகழ்ச்சியா இது? வேற நியூஸ் சேனல் வை!" அதட்டினான் சங்கர்.

கிச்சா நியூஸ் சேனல் வைத்துவிட்டு,"நாம சாமியார் ஆனா என்ன?" என தனக்கு தானே கேட்டுக்கொண்டான்.

கிச்சா மனதில் சாமியார் எண்ணம் தலைவிரித்து ஆடத்தொடங்கியது.
உடன் செயலில் இறங்கினான்.

சங்கர் கிச்சாவை கிளப்புவதற்கு பல முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும் .இங்கிதம் தெரியாதவன். இன்று துரத்துவதற்கு முன்பாகவே அவனே கிளம்பி போனதை நினைத்து பெருமூச்சு விட்டான் ,

கிச்சா மாலை ஆபிஸ் முடிந்ததும் நகரின் ஒதுக்குபுறம் ஆசிரமம் அமைக்க ஏற்கனவே தான் வாங்கிய மனையை நேரில் சென்று பார்வையிட்டான்.

ஆசிரமம் அமைக்க தோதான இடமாகப்பட்டது.பக்கத்தில் அம்மன் ஆலயம் இருந்தது.எல்லா நாட்களும் பெண்கள் கூட்டம் அலைமோதும்.இடம் பிடித்து போனது. திருப்தியாக கிளம்பினான் கிச்சா.

மறுநாள்.

அதிரடியாக களத்தில் இறங்கினான்.
காலிமனையில் குடில்கள் அமைக்கவும் வேலி போடவும் அட்வான்ஸ் கொடுத்து காண்ரெட்டாக விட்டான். இரு தினங்களில் வேலை முழுவீச்சில் நடைபெற, மாலை ஆபிஸ் விட்டதும் ஆசிரம வேலைகளைப் பார்வையிடுவதை வேடிக்கையாகவும், வாடிக்கையாகவும் வைத்துக் கொண்டான்.

ஒரு மாதத்தில் ஆசிரம் தயார்!
பிரபல சாமியாருக்கு உதவியாளர்கள் இருவர் தேவை! என செய்தித்தாளில் விளம்பரம் கொடுத்தான்.

ஆபிஸிற்கு இரண்டு மாதவிடுமுறை கேட்டு விண்ணப்பித்தான். மறுப்பு ஏதும் கூறாமல் மேலதிகாரி அனுமதித்தார்.அவன் ஆபிஸ் வருவதை யாரும் விரும்புவதில்லை.

இன்டர்வியூ மூலம் இரு சீடர்களை தேர்ந்தெடுத்தான்.

தனக்கு பெயர் சூட்டிக்கொள்ள ஒரு பெயரை யோசித்ததும் டக்கென பெயர் உதித்தது.
கிச்சானந்தா!
மகிழ்ந்தான். சீடர்கள் முறையே முதலாமவனுக்கு பாறைமேச்சான், இரண்டாமவ னுக்கு மலைவிழுங்கி மகாதேவன் என நாமகரம் சூட்டினான்.

ஒருவன் சோம்பேறி!. பாறையை மேய்ப்பது எளிது. ஓடாது! ஒளியாது!. அதனால் அவனுக்கு அத்திருநாமம். மற்றவன் கள்ளுள்ளிமங்கன்.அனாவசியமாக வாயை திறக்க மாட்டான். மலையை விழுங்கியவன் பேச திணறுவதுபோல.

வாசலில் விளம்பர பலகை வைக்க இரும்பு கழிகள் நடப்பட்டது.

பலகையும் பொருத்தப்பட்டது.

கிச்சாவும் சீடர்களும் வாசித்து பார்த்தனர்.

மூன்று மொழிகளில் இருந்தது. மும்மொழி கொள்கையை ஆதரிப்பது போன்று இருந்தது.

தமிழ் பலகையை மீண்டும் மீண்டும் வாசித்து பார்த்தான்.
அல்ட்ரா மாடர்ன் சாமியார் கிச்சானந்தா ஆசிரமம்!
உங்களின் பலவிதமான பிரச்சனைகளும் நவீன முறையில் தீர்த்து வைக்கப்படும்.

கண்டிப்பாக பெண்களுக்கு அனுமதி இல்லை!

ஆண்களுக்கு மட்டுமானது!
பார்வை நேரம்: 24x7

முகவரி:
சாமியார் கிச்சானந்தா,
சொர்க்கபுரி,
அனுபவி நகர்,
சென்னை 600017.

"சரியாக உள்ளதா?" என சீடர்களைப் பார்த்துக் கேட்டான் கிச்ச.

மலைவிழுங்கி வாய்திறக்கவில்லை.
பாறைமேச்சான் வாய்திறந்து," சரியாக உள்ளது அய்யனே!" என்றான்.

"அய்யனே என அழைக்காதே! குருஜி என அழை!" உத்திரவிட்டான் கிச்சா.

ஆசிரம குடிலுக்கு முன்புறம் செடி, கொடிகளை நட்டு, ஒரு தபோவனம் அமைக்கும் பணி தவிர மற்றவை தயார்நிலையில் இருந்தது.

ஒரு வாரம் ஓடிப்போனது. ஒரு ஈ, காகா கூட எட்டிப்பார்க்கவில்லை.

மூன்று வேளையும் சாப்பிடுவது, உறங்குவது, வெட்டிப் பேச்சு பேசி பொழுதை ஓட்டினர் மூவரும்.

இரண்டாவது வாரத்தில் ஒருநாள்
ஆசிரமம் முன் ஒரு கார் வந்து நின்றது.

"குருவே சரணம்! நம் ஆசிரமவாசலில் ஓர் கார் வந்து நிற்கிறது"

"சரி. மலை விழுங்கியிடம் சொல். ஆங்காங்கே வைக்கப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்களை கவனிக்கச் சொல். ஆங்காங்கே ஒட்டுகேட்க பொருத்தப்பட்டுள்ள மைக்ரோ மைக்குகளின் உரையாடல்களை நான் உள்ளே சென்று கேட்கிறேன். வருபவர்களை அமரச்செய்! புரிந்ததா?"

கிச்சானந்தாவின் உத்தரவை துரிதமாக செல்படுத்தினான் பாறை மேச்சான்.

வந்தவர்கள் ஐவர். நால்வர் ஒரு ஐம்பது வயது நபரை தூக்கிக்கொண்டுவந்தனர்.

அவர்கள் தங்களுக்குள் பேசிக்கொண்டதை கிச்சா கேட்டுக்கொண்டிருந்தான்.

"டேய்! நம்ம அண்ணனை எந்த பெரிய ஆஸ்பத்திரியாலயும் காப்பாத்த முடியல. இந்த சாமியார் குணப்படுத்தறாரான்னு பார்ப்போம். இல்லன்னா இங்கேயே அண்ணனை போட்டுட்டு கிளம்பிடுவோம்.
இன்னொரு விஷயம் நான் மட்டும்தான் பேசுவேன். மத்தவங்க யாரும் பேசக்கூடாது. புரிந்ததா?" உருண்டையாக இருந்தவன் சொன்னான்.

மற்றவர்கள் அவனுக்கு கட்டுபட்டவாறு தலையாட்டினார்கள்.

அறைக்குள் நுழைந்து ஐம்பது வயது நபரை தரையில் கிடத்தினர்.

"சாமி இல்லையா?"

"ம்... ஒட்டுகேட்கறnரு."

"ஒட்டு கேட்கறாரா?"

"இல்லை... இல்லை... ஓட்டுகேட்கறாங்க.."

"யாரு?"

"பீகார்ல இருந்து..எப்படி எலெக்ஷன்ல ஜெயிக்கறத்துன்னு ஆலோசனை கேட்கறாங்க."

வந்தவர்கள் வாய்பிளந்தனர்.

"சாமிகிட்ட சொல்றேன்" எனச் சொன்னான் பாறை.

உள்ளறையைப் பார்த்தான்.

"குருஜி |"குரல் கொடுத்தான்.
உள்ளிருந்து வந்த கிச்சாவைப் பார்த்து , "இவரா?" கோரஸாக சொன்னார்கள்.

பாறையும் கூட ஒரு மாதிரியாக கிச்சாவைப் பார்த்தான்.

கிச்சா ஒரு முக்கால் பேன்ட்டும், டீஷர்டுடன் வந்து வாடகைக்கு வாங்கிவந்த மணமக்கள் அமரும் அலங்காரசேரில் அமர்ந்தான்.

"நீங்கள் உங்கள் அண்ணனை குணப்படுத்த முயற்சித்து, முடியாததால் இங்கு அழைத்து வந்துள்ளீர்கள். உண்மைதானே?"

நால்வரும் வாயை பிளந்தனர்.

"நீங்கள் உங்கள் காரை எடுத்துக்கொண்டுபோய்...டீ சாப்பிட்டு வாருங்கள்.நான் குணப்படுத்திவைக்கிறேன்."
ஆசுவாசமாக கூறினான்.

விட்டால் போதும் என அவர்கள் ஓடினர்.

"எப்படி குணபடுத்துவாங்க?" என்றான் அவர்களில் ஒருவன்.

"தெரியலை.நம்ம பத்தி புட்டு புட்டு வைக்கறத்த பார்த்தா…எப்படியும் குணப்படுத்திடுவாருன்னு நான் நினைக்கிறேன்."- மற்றொருவன்.

குடில் உள்,"எப்படி குணப்படுத்த போறீங்க குருஜி ?" ஆவலாக கேட்டான் மலைவிழுங்கி.

"எனக்கும் தெரியலை!"மோவாயை தடவியவாறு யோசித்தவன்,"நாம இந்தாள குணப்படுத்த முயற்சிப்போம். இல்லைன்னா அவன்க நம்ம குடில்லயே இந்த ஆள விட்டுட்டு போற முடிவுல இருக்காங்க. முயற்சி செய்வோம்…!"
எனச் சொல்லி தரையில் கிடத்தப்பட்டவனை சுற்றி வந்தான் கிச்சா.

யோசித்தவாறே. எட்டு சுற்று சுற்றி, ஒன்பதாவது சுற்றில் கவனிக்காமல் அந்த ஆளின் கட்டைவிரலை மிதித்து, தடுமாறி,வாய்க்குள் சாரி சொல்லிய மறு வினாடி தரையில் படுத்திருந்தவன் எழுந்து உட்கார்ந்துக்கொண்டான்.

"நான் எங்க இருக்கேன்?" விழித்தான்.

"உங்களை குருஜிகுணப்படுத்திட்டாரு. இது அல்ட்ரா மாடர்ன் சாமியார் கிச்சானந்தா ஆசிரமம்…"

"வாழ்க !கிச்சானந்தா! "கோஷம் விண்ணை பிளந்தது.

டீ சாப்பிட்டு வந்த அந்த நால்வரின் குரல்தான்.

"அண்ணே!எவ்வளவு பெரிய டாக்டராலேயும் முடியாததை சாமி ஈஸியா குணப்படுத்திட்டாரு…"
தம்பிகள் சொல்ல,"உங்களுக்கு எவ்வளவு பீஸ் தரணும்?" குணமடைந்த சொக்குகேட்டான்.

"பீஸா …"இழுத்தான் பாறை.

"குருஜி! உங்க டீரிட்மென்ட் பீஸ் பில்."நீட்டினான் மலைவிழுங்கி.

அவன் நீட்டிய பேப்பரைப் பார்த்தான் கிச்சா.

ஒரு இலட்சம|

கிச்சா அதிர்ந்தான்.

ஐநூறு கேட்டு வாங்கலாம் என மனதில் கணக்கு போட்டிருந்தான் கிச்சா.

சீடனின் பில் தலைசுற்றியது.
கிச்சாவின் கையிலிருந்து பில்லை பிடுங்காத குறையாக வாங்கினான் சொக்கு.

தன் தம்பிகளில் ஒருவனை அழைத்து காதில் கிசுகிசுத்தான்.

அவன் வெளியே விரைந்து, பணம் எடுத்துவரச் சென்றான்.

"குருஜி! தம்பி பணம் எடுத்துவர போயிருக்கான்.அதுவரை நாம பேசிக்கிட்டு இருப்போம்!"

"ம்…" எனத் தலையாட்டினான்.

"உங்கள் உரையை கேட்க ஆர்வமாக உள்ளேன் குருஜி!" பணிவுடன் கேட்டான் சொக்கு.

"ஆன்மா என்று ஒன்று இல்லை. அவர் அவர் அம்மாதான் ஆன்மா!
ஞானம் என்று ஒன்று இல்லை. அப்பாதான் ஞானம்! புரிந்ததா?"

"எப்படி குருஜி ?"

சொக்கு ஆர்வமாக உரையாடல்களை கவனமாக கேட்டுக்கொண்டிருந்தான்.

"எப்படி என்றால்...அம்மாவிடமிருந்து
தான் நாம் எல்லா அன்பையும் பெறுகிறோம். அவர்கள் குணம்தான் பிள்ளைகளுக்கு வரும். அதுதான் ஆன்மா.அப்பாவிடமிருந்து எல்லா அறிவையும் பெறுகிறோம். அதைத்தான் ஞானம் என்கிறோம்."ஏதோ சொல்லி ஒப்பேத்தினான் கிச்சா.

அவன் மனதில் பீஸ் மட்டுமே வந்து போனது. தருவார்களா? ஏமாற்றிவிடுவார்களோ? கொஞ்சமாக கேட்டிருக்கலாம். பாவி அநியாயமாக பெரிய தொகை கேட்டுவிட்டானே! என மலைவிழுங்கியை மனதிற்குள் சபித்தான்.

கார் வாசலில் வந்து நின்றது. சூட்கேஸ் உடன் வந்து நின்றவனிடம் சூட்கேஸை வாங்கி கிச்சாவிடம் நீட்டினான் சொக்கு.

"இதில் ஐந்து லட்சம் இருக்கு. நீங்க என்ன பீஸ் சொல்றீங்களோ, அதோட ஐந்து மடங்கு தர்றத்தா முடிவு செய்தேன்!"

கிச்சாவும் இருசீடர்களும் அதிர்ந்தனர்.

மலைவிழுங்கி இன்னும் அதிக பீஸ் போட்டிருக்ககூடாதா? என நினைக்கத் தோன்றியது கிச்சாவிற்கு.

"குருஜி! உங்களுக்கு நான் வேற ஏதாவது செய்யணுமா?"_கேட்டார் சொக்கு.

யோசித்தான் கிச்சா.

அதற்குள் பாறை பேசினான்.

"குருஜியோட சேவை மக்களுக்கு சென்றடையணும்."

"அதற்கு நான் என்ன பண்ணணும்?"

"சென்னை முழுக்க குருஜி புகழ் பரவ போஸ்டர் அடிச்சு ஒட்டணும்."

"அவ்வளவுதானே! செஞ்சிடறேன். டேய்! சீடர் எழுதி தரத்தை வாங்கிக்கோ. ஐயாயிரம் போஸ்டர் அடிங்க. ஒரு ஏரியாவும் மிஸ் ஆகக்கூடாது!" கட்டளையிட்டு நன்றி கூறி புறப்பட்டார் சொக்கு.

இரு தினங்களில் சென்னை முழுவதும் கிச்சானந்தா புகழ் பரவியது.

கூட்டம் வர ஆரம்பித்தது.

பல பிரச்சனைகளுக்கு கிறுக்குதனமாக பதில் சொன்னான் கிச்சா.

அவன் நேரம் நன்றாக இருந்ததில் கிச்சானந்தா என்ற பெயரில் புகழின் உச்சம் தொட்டான்..

சீடர்கள் எண்ணிக்கை கூடியது.

பக்கத்து இடங்கள் வாங்கி, ஆசிரமம் பிரமாண்டமானது.

பணம் கொட்டோ கொட்டு எனக் கொட்டியது.

"குருஜி ! தங்களை பேட்டி எடுக்க பன்டிவி சேனல்ல இருந்து வந்திருக்காங்க."

"வரச்சொல்!" எல்லா பற்களும் தெரிய சிறித்தவாறு.
ஆண் பேட்டியாளர் , கேமிராமேன், இரண்டு உதவியாளர்கள் பேட்டி எடுக்கத் தயாரானர்கள்.

"குருஜி! வணக்கம். பன் டிவியிலிருந்து வருகிறோம்!பேட்டி தொடங்கலாமா?"

"ம்…"

"குருஜி ! உங்கள் பக்தர்களுக்கு என்ன அறிவுரை வழங்கி நிகழ்ச்சியை தொடங்கி வைக்கப் போகிறீர்கள்?"

"ஆசைபட்டதை அடை!
ருசிக்க தோன்றியதை ருசி!
கலக்கத் தோன்றியதை கலக்கு!
குடிக்கத் தோன்றியதை குடி!
ஆசையே இன்பம் தரும்!
மீசை இடைஞ்சல் தரும்!"

"அடுத்த கேள்வி ஆசிரமத்தில் பெண்களுக்கு அனுமதி மறுப்பது ஏன்?"

"எனக்கு சின்ன வயசில் பக்கத்துவீட்டுப் பெண் பிஸ்கேட் தராமல் ஏமாற்றிவிட்டாள்.
அன்றிலிருந்து பெண்களை வெறுக்கத் தொடங்கினேன்."

"உங்களுக்கு யாரைப் பிடிக்காது?"

"நைட்டி போடற பெண்ணையும்
நைன்டி போடற ஆணையும்"

"உங்கள் பெயரில் கிச்சானந்தா என்பதன் பொருள்?"

"கிச்சா எனது பெயர் மக்களை எப்பொழுதும் ஆனந்தமாக வைத்திருக்கவேண்டும் என எண்ணியதால் …ஆனந்தாவை சேர்த்துக்கொண்டேன்"

"பாலியல் புகாரில் சிக்க முடியாத சாமியார் உலகில் நீங்கள் மட்டும்தான். உண்மை என்ன?"

"இயல்பாகவே சர்ச்சையில் சிக்கிய பிரேமானந்தா முதல் நித்தியானந்தா வரை பார்த்தவன் நான். எனவேதான்…பெண் வாசமில்லாமல் ஆசிரமம் ரன் செய்து வருகிறேன்"

"வருகின்ற 10 ஆம் தேதி பெண்கள் அமைப்புகள் உங்கள் ஆசிரமம் முன் போராட்டம் செய்யப்போகிறார்களாம்! அதைப்பற்றி?"

"பெண்கள் அமைப்பு ...நான் பெண்களை சமமாக நடத்தவில்லை என நினைக்கின்றன. அவ்வளவே…"

"போராட்டம் வலுவடைந்தால்…"

"கண்டிப்பாக பெண்களுக்கு அனுமதி கிடையாது!"
உறுதிபடச் சொன்னான்.
பேட்டி முடிநது. டி.வியில் ஒளிபரப்ப விவாத பொருளானது கிச்சாவின் பேட்டி.

"எப்படி பெண்களை அவமதிக்கலாம்?"

போராட்டம் வலுப்பெற்றது.
பல அமைப்புகள் குருஜியிடம் வேண்டுகோள் விடுக்க வேறு வழியில்லாமல் பணிந்தான் கிச்சா.

பெண்கள் அனுமதிக்கப்படுவர் என அறிவிப்பை அறிவித்த கிச்சானந்தாவும் சீடர்களும் உள்ளுற மகிழ்ச்சியில் மிதந்தனர்.

தனது நோக்கம் பெண்கள் சூழ இருக்க வேண்டும் என்பது நிறைவேறியதில் திக்கு முக்காடிப்போனான் கிச்சா.
 

Author: VedhaVishal
Article Title: 42 - கிச்சானந்தாவும் இருசீடர்களும்! - ச.மணிவண்ணன்
Source URL: Nectar Novels-https://nectarnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.