• ஹாய் மக்களே! நம் Nectar Novels தளத்திற்கு நல்வரவு🙏😍😍 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள் nectarnovels.ss@gmail.com 🩷 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...👇 வேதா விஷால் & அனன்யா🙏💖

அத்தியாயம் – 3

SudhaSri

Administrator
Staff member
Jun 16, 2024
459
26
43
india
அத்தியாயம் - 3

கடும் கோடைக்காலம் தொடங்கி விட்டது. ஒரு நாள், அந்தி சாயும் நேரம். மேற்கில் மறையத் தயாராகிக் கொண்டிருந்த கதிரவன் தனது செங்கிரணங்களால் பூமியைப் பிரகாசிக்கச் செய்து கொண்டிருந்தான். கிழக்கில் பூரணசந்திரன் தனது தண்ணொளியை வீசி பூமியைக் குளிர்விக்கத் தயாராகிக் கொண்டிருந்தான்.

தீவிர வெப்பம் காரணமாக ஜீலம் நதியின் நீர் வரத்து குறைந்திருந்த போதிலும் தண்ணீர் இரு கரையையும் தொட்டே ஓடியது. சூரியன் மறையும் போதே கூட்டுக்குள் அடைந்து விடும் பறவைகள் கூட வழக்கத்திற்கு மாறாக சந்திரன் வரும் நேரத்தில் வெளியே வந்து இரை தேடிக் கொண்டிருந்தன.

கோட்டைக் கதவுகளை மூடும் நேரம் ஆதலால் கோட்டை வாசலில் போக்குவரத்து அதிகம் காணப்பட்டது. பல்வேறு காரணங்களுக்காக வெளியே சென்ற பலரும் பலத்த சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்ட பின்னரே ஊருக்குள் அனுமதிக்கப்பட்டனர்.

காலை முதல் மதில் மேல் இருந்த காவலர்கள் தங்கள் பணி முடிந்து திரும்பிய அதே வேளையில் இரவுக் காவலர்கள் தங்கள் பணிக்கு ஆயத்தமாக இருந்தார்கள். மதிலைச் சுற்றிலும் போதுமான இடைவெளியில் நாலாபுறமும் பார்வையிடும் வகையில் கண்காணிப்பு கோபுரங்கள் நிறுவப்பட்டிருந்தன. இரவு நெருங்கிய வேளையில் ஆங்காங்கே தீப்பந்தங்கள் ஒளிரத் தொடங்கின.

எந்த நேரத்திலும் போருக்குத் தயாராக போர்ப்பயிற்சியில் ஈடுபட்டிருந்த வீரர்கள் அவரவர் இல்லம் திரும்பிக் கொண்டிருந்தனர். மதிலைச் சுற்றி பயிற்சி மேற்கொண்டிருந்த குதிரைப் படையினர் தத்தமது குதிரைகளைக் கொட்டிலில் கொண்டு போய் சேர்க்கத் தொடங்கினார்கள். வறண்டிருந்த பூமியில் வேகமாக ஓடிய குதிரைகளால் ஏற்பட்ட புழுதி, மேகம் போலக் காட்சி அளித்தது.

அந்தக் குதிரைகளின் குளம்பொலியும் அவற்றின் கனைப்பும் ஒருவிதத் தாளத்துடன் ஒலித்தது. கூடவே ஒலித்த யானைகளின் பிளிறல் அந்தத் தாளத்தில் லயம் சேர்த்தது.

தனது அரண்மனையின் உப்பரிகையில் நின்று இந்தக் காட்சிகளைப் பார்வையிட்டுக் கொண்டிருந்தான் புருஷோத்தமன். அவனது கண்கள் ஜீலம் நதியின் அக்கரையில் நிலை கொண்டிருந்தது. அங்கே ஏதோ மாற்றம் ஏற்பட்டிருப்பதை உணர்ந்து கொண்டான். தனது பார்வையை மேலும் கூர்மையாக்கிப் பார்த்த காட்சி அவனைத் திடுக்கிட வைத்தது.

“கடவுளே!” என்று தனக்குள் சொல்லிக் கொண்டான் புருஷோத்தமன்.

அதே நேரத்தில் கருப்பு நிறக் குதிரை ஒன்று கோட்டை வாசலில் இருந்து பாய்ந்து வந்தது. சூரிய ஒளி பட்டு அதன் தோல் கருப்பு வைரமாக ஜொலித்தது. காற்றைக் கிழித்துக் கொண்டு வந்த அந்தக் குதிரை அரண்மனைக்கு அருகில் வந்ததும் தனது வேகத்தைக் குறைத்து அரண்மனை வாசலில் வந்து அமைதியாக நின்றது. அதிலிருந்து இறங்கியவன் புருஷோத்தமனின் இளம்வயது பிரதியாக இருந்தான். குதிரையைத் தடவிக் கொடுத்தவன், உடன் வந்த வீரனிடம் குதிரையை ஒப்படைத்து விட்டு அரண்மனைக்குள் வேகநடை போட்டு வந்தான்.

எதிர்ப்பட்ட அனைவரும் மரியாதையுடன் வணக்கம் சொல்லி ஒதுங்கி நிற்க அவன் நேராகச் சென்று புருஷோத்தமனின் அறை வாசலில் நின்றான். தான் வந்திருக்கும் செய்தியைக் காவலாளியிடம் சொல்லி விட்டுக் காத்திருந்தான். அனுமதி கிடைத்தவுடன் உள்ளே சென்று வணங்கி நின்றான்.

“வணக்கம் தந்தையே!” அவன் மலையகேது, புருஷோத்தமனின் மகன். அந்த நாட்டின் பட்டத்து இளவரசன். வீரத்திலும் விவேகத்திலும் தந்தையின் வாரிசு என்று நிரூபித்துக் கொண்டிருப்பவன். பின் இருபதுகளில் இருந்தான்.

புருஷோத்தமனின் கவனம் ஜீலம் நதியின் அக்கரையில் இருந்தாலும் மகனது வணக்கத்தைத் தலையசைத்து ஏற்றுக் கொண்டான். தந்தையின் சுருங்கிய நெற்றியில் புலப்பட்ட குழப்பம் கண்டு மலையகேது திகைத்தான். ஆனாலும் தந்தையிடம் கேள்வி கேட்டுப் பழக்கம் இல்லையாதலால் அமைதியாக நின்றான். தந்தையின் உத்தரவு கிடைத்தவுடன் பேசலாம் என்று காத்திருந்தான். அவனை வெகுநேரம் காக்க வைக்காமல் தனது கவனத்தை தனயனிடம் திருப்பினான் புருஷோத்தமன்.

“சொல் மலையகேது! என்ன செய்தியுடன் வந்திருக்கிறாய்?” என்று வினவினான். தனது கணிப்பு சரிதானா என்று அறிந்து கொள்ளும் ஆர்வம் அந்தக் கேள்வியில் இருந்தது.

“மிகவும் முக்கியமான செய்தி அரசே. பல்வேறு இடங்களிலும் இருந்து நமது ஒற்றர்கள் செய்தி அனுப்பிய இருக்கிறார்கள்” என்று ஆரம்பித்து அவன் சொன்ன செய்திகள் மன்னருக்கு உவப்பானதாக இல்லை.

“மாசிடோனியாவின் அலெக்சாண்டர் பாரசீகத்தை வென்ற பிறகு பாரதத்தின் மீது தனது கவனத்தைத் திருப்பி இருப்பதாகத் தெரிகிறது. அவரது படை இந்துகுஷ் மலைகளைத் தாண்டி காந்தாரத்தின் எல்லையை நெருங்கி வருவதாக நம்பகமான தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும்…” பரபரப்பாகப் பேசத் தொடங்கிய மலையகேது மேலே பேசத் தயங்கினான்.

“ம்.. மேலே சொல்” என்ற மன்னனின் குரல் கட்டளையாக ஒலித்தது.

“மகாராஜா அம்பி அலெக்சாண்டருடனான போரைத் தவிர்ப்பது நல்லது என நினைக்கிறார் என்றும் அச்செய்தி அறிவிக்கிறது” என்று தயங்கியபடி சொன்ன மலையகேதுவின் வார்த்தைகள் மன்னருக்குள் பல சந்தேகங்களை விதைத்தன.

“போரைத் தவிர்ப்பதா? இதற்கு ஒரே அர்த்தம்தானே இருக்க முடியும். பகைவரிடம் பணியத் துணிந்து விட்டாரா? இந்த தேசத்துக்கு இப்படி ஒரு அவமானமா?”

“அவர் எப்போதுமே நமக்கு எதிராகத்தானே இருந்திருக்கிறார். மக்களின் நலன் என்றெல்லாம் அவர் எதையும் சிந்தித்ததே இல்லையே! இது விஷயத்தில் எனக்கு ஆச்சரியம் எதுவும் இல்லை தந்தையே. நமது வீழ்ச்சிக்காகக் காத்திருப்பவர். அதற்கான வாய்ப்பு தானாகத் தேடி வரும் போது பகைவரிடம் பணிவதற்கும் தயங்க மாட்டார்.” மலையகேதுவின் இளம் ரத்தம் கொதித்தது.

“அப்படி அல்ல மகனே! நம்மை விட அவர் உயர்ந்த பாரம்பரியத்தில் வந்தவர் என்று காண்பிக்க வேண்டிய அவசியம் அவருக்கு. மற்றபடி அவரது வீரத்தை நாம் சாதாரணமாக நினைத்ததே இல்லை. பழமையும் பெருமையும் வாய்ந்த சாம்ராஜ்ஜியத்தை பகைவரிடம் அடமானம் வைக்க மாட்டார் என்றே நான் கருதுகிறேன்” என்ற புருஷோத்தமன் தொடர்ந்து பேசினான்.

“ஆனாலும், நீ சொல்வதைப் போல் மகாராஜா அம்பி எப்போதும் நமக்கு எதிராகவே செயல்படுபவர். இப்போது என்ன முடிவெடுப்பார் என்பதை நம்மால் ஊகிக்கவே இயலாது” என்ற மன்னனின் குரலில் ஆதங்கமே வெளிப்பட்டது.

“இப்போது நாம் என்ன செய்வது என்று உத்தரவு இடுங்கள் தந்தையே. நமது படைகளை ஆயத்தம் செய்யலாம் அல்லவா?” மலையகேதுவின் வார்த்தைகள் ஆர்வமாக வெளிவந்தன.

“ஆம்! ஒற்றரிடம் இருந்து அடுத்த செய்தி வரும்வரை காத்திருக்க இயலாது. வந்திருக்கும் பகை அசாதாரணமானது. எந்த நேரத்திலும் நாட்டைப் போர் மேகங்கள் சூழலாம். கண்காணிப்பு கோபுரங்களில் இருப்பவர்களுக்கு அதிக பயிற்சி அளிக்க வேண்டும். நம் படைகளைத் தயார் நிலையில் வைக்க வேண்டும். போருக்கான வியூகங்கள் வகுக்கப்பட வேண்டும். அனைத்தையும் சில நொடிகளில் தீர்மானிக்க முடியாது. நாளை அரசவையைக் கூட்டி அனைவரது ஆலோசனைகளையும் கேட்ட பின்பு அடுத்த நடவடிக்கை பற்றிய முடிவெடுப்போம்” என்று சொன்னவன் காவலாளியை அழைத்தான்.

“நீ மந்திரி பிரதாபனிடம் சென்று நாளைக் காலையில் அரசவையைக் கூட்ட வேண்டும் என்ற செய்தியைத் தெரிவித்து விடு” என்று அவனுக்கு உத்தரவு பிறப்பித்து விட்டு மகனுடன் தனது சம்பாஷணையைத் தொடர்ந்தான். கண்கள் மீண்டும் ஜீலம் நதியின் அக்கரையை உற்று நோக்கின.

“என்ன ஆயிற்று தந்தையே? நான் வந்த போதும் தங்கள் பார்வை அக்கரையில்தான் நிலைத்திருந்தது. இப்போதும் அதே பார்வைதான். கண்ணுக்கெட்டிய தூரம் வரை பரந்து விரிந்த தரிசல் நிலத்தைத் தவிர எனது புறக்கண்களுக்கு வேறொன்றும் புலப்படவில்லையே!” எனச் சொல்லும் போதே தான் எதையோ கவனிக்கத் தவறி விட்டோமோ என்று தோன்றியது அவனுக்கு. அன்று காலை முதலே ஆற்றின் இக்கரையில் தனது சகாக்களுடன் வாராந்திர ரோந்துப் பணியை மேற்கொண்டிருந்தவன் அவன்.

எப்போதும் கண்காணிப்பைக் கறாராக வைத்திருப்பவன்தான். இன்று ஒற்றன் வந்து காத்திருக்கிறான் என்ற செய்தி கேட்டதும் மற்றவை மறந்து போக கவனம் ஒற்றன் சொல்லப் போகும் செய்தியில் சென்று விட்டது. ஆகவே ரோந்துப் பணியை பாதியில் விட்டு ஒற்றனைச் சந்திக்கக் கிளம்பி விட்டான். அவன் சொன்ன செய்தியைக் கேட்ட பின்போ அதை மன்னனின் செவிகளை எட்டச் செய்வதே தலையாய கடமை என்று அரண்மனைக்கு வந்து விட்டான். அவனது சகாக்கள் இன்றைய பணியில் ஏதேனும் வித்தியாசமாக உணர்ந்தார்களா என்பதை இன்னும் அவன் அறிந்து கொள்ளவும் இல்லை.

தந்தையின் முன் தலைகுனிந்து நின்றான் மலையகேது. புருஷோத்தமனோ மகனைக் கடிந்து கொள்ளவும் இல்லை. அதே நேரத்தில் சமாதானம் செய்யவும் இல்லை. மாறாக வேறு பேச ஆரம்பித்தான்.

“நமது ஒற்றரது செய்தி பழைய செய்தியாகிப் பல நாட்கள் ஆகியிருக்கும். அவர் நதியைக் கடந்து இங்கே வந்து சேருவதற்குள் தட்சசீலத்தில் பல நிகழ்வுகள் நடந்தேறி இருக்கலாம். அக்கரையில் வழக்கத்திற்கு மாறாக ஆள் நடமாட்டம் அதிகம் காணப்படுகிறது. எனது உள்ளுணர்வு சரியாக இருக்குமானால் பகைவர் நம்மை நெருங்கிக் கொண்டிருக்கிறார்கள். நாளை சூர்யோதயத்திற்கு முன்பே நாம் அங்கே சென்று பார்வையிட வேண்டும். அதிக ஆர்ப்பாட்டம் இல்லாமல் சாதாரண குடிகள் போல் செல்வது நன்மை பயக்கும். தயாராக இரு” என்று உத்தரவு பிறப்பித்தான் புருஷோத்தமன்.

“அப்படியே ஆகட்டும் அரசே!” என்று தலைசாய்த்து அந்த உத்தரவை ஏற்றுக் கொண்டான் தனயன்.

“நாம் நதியைக் கடப்பது என்பது தேவையில்லாதது. அதே சமயம் பகைவர் நதியைக் கடக்காமல் நம்மை நெருங்க முடியாது. அத்தனை பெரும் படை ஆற்றைக் கடப்பது என்பது அத்துணை எளிதான காரியமல்ல. அதற்கான ஏற்பாடுகளைச் செய்ய அவர்களுக்குக் கூடுதல் அவகாசம் தேவை. பகைவரை மழைக் காலம் வரையில் காத்திருக்க வைத்தால் வெற்றி நமதே. எல்லாம் வல்ல அந்த இறைவன் நமது தேசத்தைக் காக்க அருள் புரிய வேண்டும்” என்ற புருஷோத்தமன் கண்களை மூடி நின்றான்.

“தாங்கள் சொல்வது முற்றிலும் உண்மை அரசே. கடும் கோடையிலும் ஜீலம் நதி ஆர்ப்பரித்து ஓடுகிறது. மழைக்காலம் வந்து விட்டதென்றால் வெள்ளத்தைக் கணிக்கவே இயலாது. ஆற்றின் ஆழம் அதிகம் என்பதால் குதிரைகள் மூலம் ஆற்றைக் கடப்பது என்பது அரிதாகி விடும். அத்தனை பெரும் படைக்கான படகுகளைக் கட்டுவதற்கு நிச்சயமாக கால அவகாசம் தேவை. ஒரு வேளை மன்னர் அம்பியும் அதைத்தான் செய்கிறாரோ” என்று உற்சாகமாகச் சொன்ன மலையகேது, “அரசே! எனக்கு ஒரு சந்தேகம்.. தவறாக எண்ண வேண்டாம். தாங்கள் அனுமதி கொடுத்தால் நான் ஒரு விஷயத்தை தெளிவுபடுத்திக் கொள்ள விரும்புகிறேன்” என்று தயங்கியபடி கூறினான்.



மன்னன் கேள் என்பது போல சைகை செய்ய மலையகேது மெல்லிய குரலில் பேசினான். “காந்தார நாட்டின் பாரம்பரியம் மன்னர் அம்பி அறியாததல்ல. அவர் தனது முதிய பருவத்தில் இருக்கிறார். அவருக்கு நேரடி வாரிசுகள் என்று யாரும் இல்லாத நிலையில் இன்னும் அவருக்குப் பின் பட்டத்துக்கு உரியவர் யார் என்பது குறித்து ஒரு முடிவு எட்டப்படவில்லை. இது குறித்து ஏற்பட்ட கடும் போட்டியால் நாட்டின் முக்கியஸ்தர்கள் பிளவுபட்டு நிற்பதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. அங்கே பயங்கர குழப்பம் நிலவும் இவ்வேளையில் அலெக்சாண்டர் போன்ற வெற்றியாளரிடம் போரிட்டுத் தோற்பதை விட தந்திரத்தால் வெல்வது மேல் என்று அவர் நினைத்திருக்கலாம் அல்லவா? ஆற்றின் அக்கரையில் இருப்பவர்கள் கூட மன்னர் அம்பியிடம் இருந்து நமக்குச் செய்தி அனுப்பக் காத்திருப்பவர்களாக இருக்கலாமே!” என்று தனது பரந்து விரிந்த எண்ணத்தைப் பேசிக் கொண்டே சென்ற மலையகேது தந்தை வாய்விட்டுச் சிரிப்பது கண்டு பேச்சை நிறுத்தினான்.



“ஹா.. ஹா..ஹா.. மகனே! மலையகேது! உனது கற்பனா சக்தியை யாம் மெச்சினோம். ஆனால் அது நிஜமாவதற்கு துளியும் வாய்ப்பில்லை என்பதை நீ அறிந்து கொள்ள வேண்டும்” என்று சிரிப்பின் ஊடே மகனது தோள் தட்டிச் சொன்னான் புருஷோத்தமன்.

கேள்வியாகப் பார்த்த மகனுக்கு இன்னும் அரசியல் விளங்கவில்லையோ என்று கவலை வந்து விட்டது மன்னனுக்கு.

“மஹாபாரதத்தில் ஒரு நிகழ்வு பற்றி நீ அறிந்திருப்பாய். தர்மன் மற்றும் துரியோதனனைப் பற்றியது அது” என்று தந்தை ஆரம்பித்து வைக்க, “ஆம் தந்தையே! அந்த நிகழ்வை யாம் நன்றாகவே அறிவோம்” என்று பெருமை கொண்டான் தனயன்.

“நல்லது.. அப்படியானால் எமக்கு அதன் விளக்கத்தைச் சொல். உன் வாய்மொழியாக அதைக் கேட்க விரும்புகிறேன்.” மலையகேது அந்த நிகழ்வைச் சொல்ல ஆரம்பித்தான்.

துரியோதனனுக்கு தனது பங்காளிகளான பாண்டவரிடம் பகை உணர்வே மேலோங்கி இருந்தது. பல்வேறு காரணிகள் இந்தப் பகையை வளர்க்கக் காரணமாக இருந்தன. குறிப்பாக, நாட்டை ஆளும் மன்னனின் தலைமகன் அவன். ஆனால் வயதில் சற்று மூத்தவன், மறைந்த மன்னன் பாண்டுவின் மகன் என்ற காரணத்தால் தர்மனுக்கு இளவரசுப் பட்டம் சூட்டப்பட்டது. தர்மனுக்கு மக்களின் செல்வாக்கும் இருந்தது.

அதுவும் தாத்தா பீஷ்மர் இது விஷயத்தில் ஒரு தலைப் பட்சமாக நடந்து கொள்கிறார் என்று கருதியவன் ஒரு நாள் அவரிடமே சென்று முறையிட்டான். அவரால்தான் மக்களும் தன்னை மதிப்பதில்லை என்றும் குற்றம் சாட்டினான். பீஷ்மர் சிரித்துக் கொண்டார். இதைக் கையாள ஒரேயொருவன்தான் சரியான தேர்வு என்று கிருஷ்ணனை மத்தியஸ்தம் செய்ய வேண்டினார்.

ஒரு புன்னகையுடன் சரியென்று ஏற்றுக் கொண்ட கிருஷ்ணன் தர்மனை அங்கே வரவழைத்தான்.

"உங்கள் இருவருக்கும் ஒரு வேலை தரப் போகிறேன்! அதை நிறைவேற்றித் தர வேண்டும்" என்றான்.

என்னவென்று வினவியபோது.. "தருமா, நீ இன்று மாலைக்குள் உன்னை விட ஒரு கெட்ட மனிதனை என்னிடம் அழைத்து வா" என்றான்.

பிறகு துரியோதனனைப் பார்த்து "துரியோதனா, நீ இன்று மாலைக்குள் உன்னை விட நல்ல மனிதனை என் முன்னே கொண்டு வந்து நிறுத்து" என்றான்.

இருவரும் புறப்பட்டார்கள். மாலையும் ஆனது. இருவருமே யாரையும் அழைக்காமல் வெறுங்கையோடு வந்து கண்ணன் முன்னால் நின்றார்கள்.

"என்ன ஆயிற்று? ஏன் யாரையும் அழைத்து வரவில்லை?" என்று கேட்டான் கண்ணன்.

"கண்ணா! உலகம் மிகவும் மோசமாகி விட்டது. ஒருவர் கூட என்னை விட நல்லவராக இல்லை. நானும் நாள் முழுவதும் தேடிப் பார்த்து விட்டேன்" என்றான் துரியோதனன்.

“என்ன நிச்சயமாகத்தான் சொல்கிறாயா? உன்னைவிட நல்ல குணங்கள் உடையவர் என்று எவருமே இல்லையா?” என்று ஆச்சரியமாக வினவினான் கண்ணன்.

“சிலர் இருக்கிறார்கள்தான். ஆனால் யாருமே குறையில்லாதவர்களாக இல்லை. அவர்களின் குறைகளைப் பார்க்கும் போது அவர்களின் நல்ல குணங்கள் ஒரு பொருட்டாகவே தெரியவில்லை” என்று அறுதியிட்டுக் கூறினான் துரியோதனன்.

"நீ சொல் தருமா" என்று கேட்டான் கிருஷ்ணன்.

"கண்ணா.. உலகம் எவ்வளவு அழகானது! நான் கண்ட மனிதர்கள் எல்லாம் அத்தனை நல்லவர்களாக இருக்கிறார்கள். ஒவ்வொருவரிடமும் ஏதேனுமொரு நல்ல குணம் இருக்கிறது. கெட்டவர்கள் என யாருமே இல்லை" என்றான் தருமன்.

“உறுதியாகச் சொல்கிறாயா? உன்னை ஒப்பு நோக்கும் போது சிறு குறைகளும் உள்ளவர் யாருமே இல்லையா?

“கண்ணா! சிறு குறைகளுடன் சிலர் இருந்தார்கள். ஆனால் அவர்களின் நிறைகளை ஒப்பு நோக்கும் போது அவர்களின் குறைகள் பொருட்படுத்த முடியாத வண்ணம் இருக்கிறது” என்று முடித்தான் தருமன்.

“தருமா! அப்படியென்றால் உன்னை விடக் கீழானவர் ஒருவர் கூட இல்லை என்கிறாயா?”

“நிச்சயமாக இல்லை கண்ணா!”

கண்ணன் சிரித்தபடி சொன்னான்... "தருமா, துரியோதனா.. உங்கள் கண்கள் வழியே இந்த உலகைப் பார்க்கும்போது உங்கள் மன எண்ணங்கள்தான் அனைத்தையும் தீர்மானிக்கிறது. துரியோதனன் மனதில் கெட்ட எண்ணங்கள் நிறைந்துள்ளதால் பார்க்கும் மனிதர்கள் எல்லாம் கெட்டவர்களாகவே தெரிந்தார்கள். அதனால் அவனால் ஒரு நல்லவனைக் கூட கூட்டி வர முடியவில்லை!

ஆனால் தருமனோ, தனது மனம் முழுக்க நல்ல எண்ணங்களை கொண்டவனாதலால், பார்க்கும் மனிதர்கள் அத்தனை பேரும் நல்லவர்களாகத் தெரிந்தார்கள். அதனால்தான் ஒரு கெட்டவன் கூட அவன் கண்ணில் படவில்லை! எனவே, இவ்வுலகை நாம் பார்க்கும் பார்வைகள் அனைத்துமே நம் குணத்தைப் பொறுத்ததுதான்!" என்றான்.

“தருமன் நல்லவனாக இருக்கலாம். ஆனால், ஒரு அரசன் நல்லது, கெட்து இரண்டையும் ஆய்ந்து பார்க்கத் தெரிந்தவனாக இருக்க வேண்டும்.”

சொல்லி முடிக்கும் போதே தந்தை இந்த நிகழ்வு பற்றி ஏன் கூறினார் என்பதைப் புரிந்து கொண்ட மலையகேது தந்தையை எதிர்கொள்ள முடியாமல் தலைகுனிந்து நின்றான்.

“இப்படி நல்லதையே ஊட்டி வளர்த்த உன் அன்னைக்குப் பாராட்டு விழா எடுக்கலாம் என்றால் தலைகுனிந்து நிற்கிறாயே” என்ற மன்னனின் குரலில் என்ன இருந்தது என்பதை மகனால் அறிந்து கொள்ள இயலவில்லை.

“நான் காண்பது கனவா? நாம் இருப்பது பூலோகம்தானா? என் செவிகள் சரியாகத்தான் வேலை செய்கின்றனவா? மகாராஜா புருஷோத்தமர் எமக்குப் பாராட்டு விழா எடுக்க இருக்கிறாரா? தன்யளானேன்.. சுவாமி.. தன்யளானேன். வசிஷ்டர் வாயால் ப்ரம்மரிஷி பட்டம் பெற்ற கௌசிகரைப் போல எம்மை உணர்கிறேன்” என்று ஆச்சரியத்துடன் சொல்லிக் கொண்டே அங்கே வந்தாள் அம்பிகா.

புருஷோத்தமனின் பட்டத்து ராணி, மலையகேது, துருவசேனன் என்னும் இளவரசர்களின் தாய். வீரம் செறிந்த க்ஷத்திரிய வம்சத்தில் பிறந்தவள். தசரதனுக்கு ஒரு கைகேயி போல கிருஷ்ணனுக்கு ஒரு சத்யபாமா போல புருஷோத்தமனுக்கு அமைந்தவள் இந்த அம்பிகா. பல போர்களில் கணவனுக்குக் கை கொடுத்து வெற்றிப் பாதையில் பயணிக்கச் செய்தவள். சுருங்கச் சொன்னால் பௌரவ தேசத்தின் அச்சாணி போன்றவள். மன்னவன் புருஷோத்தமனுக்குத் தனது உயிரிலும் மேலானவள்.

தாயைக் கண்டதும் சிரம் தாழ்த்தி வணங்கினான் மலையகேது. “நீண்ட ஆயுளுடன் இருப்பாயாக!” என்று வாழ்த்தினாள் அன்னை.

“அன்னை என்று வந்து விட்டால் வீரத்தில் சிறந்த மகாராணியும் மற்ற பெண்களும் ஒன்றுதான் போலும்” என்றான் மன்னன்.

“இப்போது எனது தாய்மையில் என்ன குறை கண்டீர்? வழக்கமாய் கூறும் வாழ்த்துதானே?” மகாராணிக்கு எதுவும் புரியவில்லை.

“எல்லா நேரங்களிலும் சாதாரண அன்னையரைப் போல் வாழ்த்துவது மகாராணிக்கு அழகல்ல என்பது எனது தாழ்மையான கருத்து. அதை நீங்களும் ஒப்புக் கொள்வீர்கள் என நம்புகிறேன்.” மகாராஜா பேச்சை வளர்த்தாரே தவிர நேரடியாக பதிலுரைக்கவில்லை.

“மகாராஜா! தாங்கள் சூசகமாகப் பேசுவதில் வல்லவர் என்பதை இத்தனை காலமாக நான் அறிந்து கொள்ளாமல் போனேனே!” என்று வியந்த மகாராணி, “எல்லா நேரங்களிலும் என்றால்.. நீங்கள் சொல்ல வரும் விஷயம் என்ன? மறந்தே போனேன் பாருங்கள்.. நானும் கோவிலில் தெரிந்து கொண்ட ஒரு செய்தியை உங்களிடம் பகிர்ந்து கொள்ளத்தான் இங்கு வந்தேன். இப்போது என்ன சொல்லி ஆசி வழங்க வேண்டும் என்று புரிந்து விட்டது. வெற்றித் திருமகளின் ஆசி உனக்கு எப்போதும் இருக்கட்டும் மகனே!” மகனுக்கு ஆசி வழங்கிய மகாராணி, “சுவாமி இப்போது நான் சொன்னது சரிதானே?” என்று வினவினாள்.

“மனைவி ஒரு மதியூகி என்று பெரியோர்கள் அர்த்தமற்றுச் சொல்லவில்லையே. நானும் அதை ஒப்புக் கொண்டு தான் ஆகவேண்டும்” என்று சிரித்த புருஷோத்தமன், “நீ, யாரிடமிருந்து என்ன விஷயம் தெரிந்து கொண்டாய்?” என்று விசாரித்தார்.

“தட்சசீலம் பாடசாலையில் இருந்து வந்திருக்கும் இருவரை கோவிலில் சந்தித்தேன். அங்கே பயிலும் பலரும் தத்தமது நாடு திரும்பி விட வேண்டும் என்று முனைப்பாக இருக்கிறார்களாம். காந்தார தேசத்தில் நிகழ்பவை பாரத பூமிக்கே களங்கம் ஏற்படுத்தும் என்று கூறுகிறார்கள்” என்று தான் அறிந்து கொண்டவற்றைத் தெரிவித்திருந்தாள் மகாராணி.

“உண்மைதான். நாம் துரிதமாகச் செயல்பட்டு நமது பாரம்பரியத்தை நாட்டின் இறையாண்மையைப் பாதுகாக்க வேண்டும். நாளை அவை கூடும் போது இது பற்றிக் கலந்தாலோசிக்க வேண்டும். மலையகேது என்னுடன் வா. மகாராணி! தாங்கள் ஓய்வெடுக்கச் செல்லுங்கள். யாம் வருகிறோம்” என்று மன்னன் கிளம்பிவிட இளவரசனும் தாய்க்கு வணக்கம் சொல்லி தந்தையைப் பின்தொடர்ந்தான்.

அந்த உப்பரிகையில் தனித்து நின்ற மகாராணி அம்பிகாவின் நினைவலைகள் கடந்த காலத்தில் பயணிக்க ஆரம்பித்தது. இந்தப் பௌரவ தேசத்தின் வரலாறு எத்தனை மகத்தான வீரர்களால் உருவாக்கப் பட்டது என்று எண்ணியபோது அவளது உள்ளம் பெருமிதம் அடைந்தது.

தனது அலுவல் அறையில் அமர்ந்திருந்த புருஷோத்தமன் தான் கடந்து வந்த பாதையை நினைத்துக் கொண்டிருந்தான். அவன் பிறந்த பௌரவ வம்சத்தின் பழமை, இடையே தள்ளாடிய அதன் பெருமை, இழந்தவற்றை மீட்க நடந்தேறிய போராட்டம் போன்றவை அவன் மனதை விட்டு ஒரு நொடியேனும் அகலாத விஷயங்கள். அவைதான் புருஷோத்தமனை தினந்தோறும் செலுத்திக் கொண்டிருந்தன. அவனது இளமைக் காலம் மிகவும் கடுமையானது.

மகாராணி அம்பிகா, “ஏன் அரசே, இது போன்ற சந்தர்ப்பங்களில் கூட மகாராஜா நந்தன் நம்மிடம் பகை பாராட்டுவாரா?” என்று சற்று முன்னர் வினவி இருந்தாள்.

புருஷோத்தமன், புன்னகைத்தானே தவிர மனைவிக்குப் பதிலேதும் கூறவில்லை. தனநந்தன் என்ற அரசனைப் பற்றி அவனை விட நன்றாக அறிந்தவர் யார்? நந்தனைப் பற்றி நினைக்கையில் அவனது நினைவுகள் அவனை பின்னோக்கி இழுத்துச் செல்ல முயன்றன. தலையை உலுக்கி அந்த நினைவுகளை ஒருபுறம் தள்ளியவன் மறுநாள் அரசவை கூடும் போது என்னென்ன விஷயங்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்று யோசித்தபடியே உறக்கத்தில் ஆழ்ந்தான்.
 

Author: SudhaSri
Article Title: அத்தியாயம் – 3
Source URL: Nectar Novels-https://nectarnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.