• ஹாய் மக்களே! நம் Nectar Novels தளத்திற்கு நல்வரவு🙏😍😍 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள் nectarnovels.ss@gmail.com 🩷 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...👇 வேதா விஷால் & அனன்யா🙏💖

அத்தியாயம் -1

SudhaSri

Administrator
Staff member
Jun 16, 2024
452
16
43
india
அத்தியாயம் -1

கி.மு.326.. ஜீலம் நதிக்கரையில் ஒரு நாள்…

பௌரவ தேசத்தின் தலைநகரம். கடுமையான பாதுகாப்புடன் கூடிய கோட்டைக்குள் பாதுகாப்பாக அமைக்கப்பட்டிருந்தது.

அதிகாலைப் பனி நகரத்தை உறைநிலையில் வைத்திருந்தது. பசுமையான வயல்வெளிகளும் மரங்களும் பனியில் குளித்து வெள்ளை வெளேரென்று காட்சி அளித்தன. வழக்கமாக மூன்றாவது சாமத்தில் விழித்துக் கொள்ளும் நகரம் இன்னும் ஆழ்ந்த நித்திரையில் இருந்தது. இன்னும் சில தினங்களில் கோடைக்காலம் தொடங்கி விடும். அதன் பிறகு எல்லாமே தலைகீழாகி விடும்.

பொழுது புலரும் நேரம் வந்து விட்டது. கதிரவனின் கிரணங்கள் மெல்ல மெல்ல பூமியைச் சூடாக்க ஆரம்பித்தன. நகரம் விழித்துக் கொள்ள ஆரம்பித்தது.

கோட்டை வாயிலில் போக்குவரத்து கொஞ்சம் கொஞ்சமாக அதிகரிக்க ஆரம்பித்தது. இமயமலையில் இருந்து எடுக்கப்பட்ட உப்பு, பொன், செம்பு மற்றும் இரும்பிலான பொருட்கள், மாணிக்கம் போன்ற விலையுயர்ந்த கற்கள், நெல், கரும்பு போன்ற விவசாய பொருட்கள், பாரம்பரிய சிகிச்சைகளுக்கான பொருட்கள் ஆகியவை உள்நாட்டுத் தேவையைப் பூர்த்தி செய்த பிறகு வெளிநாடுகளுக்கு விற்பனை செய்ய அனுமதிக்கும் வகையில் விதிமுறைகள் அங்கே நடைமுறையில் இருந்தது.

பாரசீகம், கிரேக்கம் போன்ற மேலை நாடுகளுடனும் சீனம் போன்ற கீழை நாடுகளுடனும் வர்த்தகத் தொடர்பு இருந்தது. அதே போல அந்த நாடுகளில் இருந்து வரும் கம்பளம் போன்ற பொருட்களுக்கு இங்கே வரவேற்பு கிடைத்தது. விடியலின் முதல் படியாக வணிகம் மும்முரமாக நடைபெற ஆரம்பித்தது.

நகரத்தின் நடுவே அமைந்திருந்த அரண்மனை வாசலில் இருவர் நின்றிருந்தனர். ஒருவனுக்கு நாற்பது வயதிருக்கலாம். மற்றவன் இப்போதுதான் பதினெட்டு வயதைத் தொட்டிருந்தான். அவர்கள் அருகில் இரண்டு பெரியதும் ஒன்று சற்றே உயரம் சிறியதுமாக மூன்று குதிரைகள் நின்றிருந்தன.

சிறிய குதிரையின் கடிவாளத்தைப் பிடித்திருந்த இளைஞன் சற்றே பதட்டத்துடன் காணப்பட்டான். தனது நீண்ட நாள் ஆசையை எப்படியாவது இன்று நிறைவேற்றிக் கொள்ள வேண்டும் என்ற ஆவல் அவனிடம். அரண்மனைக்குள் நோக்குவதும் பின் சோர்ந்து போவதுமாக இருந்தான். அவனது செயல்கள் அருகில் நின்றவனைச் சிரிக்க வைத்தது.

“என்ன சகாதேவா? ஏனிந்தப் பதட்டம்? நீதான் பெரிய வீரன் ஆயிற்றே! சகாதேவன் என்ற பெயருக்கு ஏற்றாற் போல புத்திசாலி வேறு. ஒரு காரியத்தை நிறைவேற்றிக் கொள்ள என்ன செய்ய வேண்டும் என்று நான் சொல்லித் தர வேண்டுமா என்ன?”

“அண்ணா! தாங்கள் வேறு எனது பதட்டத்தில் மேலும் நெய்யூற்ற வேண்டாம். இன்று அரசரிடம் எப்படியேனும் அனுமதி பெற்று விட வேண்டும் என்று இருக்கிறேன். நீங்கள் அதற்கு ஒத்துழைப்பு கொடுக்காவிட்டாலும் பரவாயில்லை. இடையில் புகுந்து காரியத்தைக் கெடுத்து விடாதீர்கள். உங்களை மன்றாடிக் கேட்டுக் கொள்கிறேன்” என்று கையெடுத்துக் கும்பிட்டான் சகாதேவன்.

“ஓ.. அப்படி என்றால் உனக்கு என் சிபாரிசு தேவையில்லை என்கிறாய். பேச்சு மாற மாட்டாயே? உன் குதிரையைப் பார், இப்போதே கட்டுப்பாடு இல்லாமல் அலைபாய்கிறது. இதைப் பார்த்த பிறகும் என் சிபாரிசு இல்லாமல் அரசரிடம் அனுமதி பெற்று விடலாம் என்று நினைக்கிறாயா?”

விஜயன் குறும்புடன் வினவ, மற்றவன் பதில் சொல்லும் முன்பே, “என்ன சிபாரிசு? எதற்காக அனுமதி?” என்ற கம்பீரமான குரல் ஒலித்தது. அதைக் கேட்டதும் இருவரும் தங்கள் பேச்சை விடுத்து நேராக நின்றார்கள்.

அங்கே வந்தவன் பௌரவ தேசத்தின் மன்னன் புருஷோத்தமன். நெருக்கமானவர்களால் புரு என்று சுருக்கமாகவும் மேற்கத்தியரால் போரஸ் என்றும் அழைக்கப்படுபவன். நாற்பதுகளின் முடிவில் இருந்தான். ஏழு அடியைத் தொட்டு விடும் உயரத்தில் பெரும்பாலான ஆண்களை விட உயரமாக நின்றான். கனமான மேகங்களின் நிறம் கொண்ட தோல், தடித்த கருநிற முடி தோள்களைத் தாண்டி நீண்டிருந்தது. எப்போதும் கூரிய பார்வையைத் தவறவிடாத ஆழ்ந்த பழுப்பு நிறக் கண்கள். பல்வேறு போர்களைக் கண்டு விழுப்புண்கள் பலவும் பெற்று உரமேறிய உடல்.

மொத்தத்தில் ஆஜானுபாகுவான தோற்றம், பார்ப்பவருக்குப் பயமும் மரியாதையும் சேர்ந்து வரும். அரசருக்கே உரிய வகையில் உடை அணிந்திருந்தான். இடையில் நீண்ட வாள், அவன் விழித்திருக்கும் நேரம் எல்லாம் அவனுடன் இருக்கும். இடது மணிக்கட்டில், கர்ஜிக்கும் சிங்கம் பொரித்த ஒரு தங்க வளையம் அணிந்திருந்தான், அது அவனது வம்சத்தின் அடையாளம்.

ஜீலம் மற்றும் செனாப் நதிகளுக்கு இடையே அவனது தேசம் பரந்து விரிந்திருந்தது. சுமார் முன்னூறுக்கும் மேற்பட்ட நகரங்களைக் கொண்டு விளங்கிய அந்த தேசத்தைத் தனது வலிமை மற்றும் உபாயங்களால் செதுக்கிய சிற்பி அவன். ஆதலால் அந்த தேசத்தின் ஒவ்வொரு குடிமகனுக்கும் கடவுளைப் போன்றவன். மக்கள் அவனது ஒவ்வொரு செயலையும் அனைவரும் ஓர் அதிசயமாகத்தான் பார்த்தனர்.

இப்போது கூட விஜயனும் சகாதேவனும் அப்படித்தான் நின்றிருந்தார்கள்.

“என்ன இருவருக்கும் பதில் மறந்து விட்டதா?” புருஷோத்தமன் மறுபடியும் கேட்டான். சகாதேவன் அரசனைக் கண்டவுடன் பேச்சு மறந்து விட்டது போல நின்றிருந்தான். விஜயன்தான் சட்டென்று விழித்துக் கொண்டு, “காலை வணக்கம் சிற்றப்பா!” என்றான்.

“ம்..” என்ற அரசனின் பார்வை சகாதேவனிடம் இருந்தது.

விஜயன் அவசரமாக உடன் நின்ற தம்பியின் தோளில் தட்ட மூத்தவனைப் போல சட்டென்று நிகழ்வுக்கு வரமுடியாமல் நின்றிருந்தவன், “காலை வணக்கம் தந்தையே!” என்றான். அவன் சொன்ன வணக்கம் அவனுக்கே கேட்காத போது அருகில் நின்றவருக்கு எப்படிக் கேட்கும்?

புருஷோத்தமன் அவனது வணக்கத்தை ஏற்கும் விதமாக தலையைக் கூட அசைக்கவில்லை. முகத்தில் கண்டிப்புடன் மகனைப் பார்த்தான். ஏற்கெனவே பதட்டத்தில் இருந்த இளையவனுக்கோ அந்தப் பார்வையில் தேகம் நடுங்க ஆரம்பித்தது.

இளையவனின் பதட்டத்தில் விஜயன் குதூகலம் அடைந்தான். இது போன்ற நிகழ்வுகள் அவனது வாழ்க்கையிலும் நடந்திருக்கிறதே. அதை நினைவு கூர்ந்தவன் இப்போது தனக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தது என்று உற்சாகமானான்.

“மன்னித்துக் கொள்ளுங்கள் அரசே! என் தம்பிக்கு இன்னும் அனுபவம் இல்லை. தங்கள் பார்வைக்குப் பதில் சொல்லும் அளவிற்குத் திறனும் இல்லை. சகாதேவன் என்று பெயர் வைத்தவர் எல்லாம் புத்திசாலி ஆகிவிட முடியாது என்று தங்களுக்குத் தெரியும் அல்லவா?”

அதைக் கேட்ட மாத்திரத்தில் புருஷோத்தமனின் முகத்தில் ஒரு இளநகை வந்து தங்கியது. புருஷோத்தமனுக்கு, தான் இப்போது ஒரு ராஜ்ஜியத்தின் மரியாதைக்குரிய அரசன் என்பது மறந்து போனது. அண்ணன் மைந்தனுடன் தனது சிறு வயதுக்கே சென்று விட்டதில் அவனது இயல்பான குறும்பு தலைதூக்கியது

“அப்படி என்றால் சகாதேவன் என்ற பெயரை மாற்றி விடலாமா? இவனுக்குப் பொருத்தமாக வேறு என்ன பெயரைத் தேர்வு செய்வது? அதையும் நீயே சொல்லி விடேன். உனக்குத்தான் இது விஷயத்தில் முன் அனுபவம் இருக்கிறதே!”

“மாற்றிப் பேசுகிறீர்கள் அரசே! இது போன்ற விஷயங்களில் நீங்கள்தான் எனக்கு முன்னோடி. உங்களுக்காக ஒரு நல்ல பெயரை நானே தேர்வு செய்கிறேன். சரிதானே சகாதேவா! இல்லை.. இல்லை.. உனது பெயர் அதுவல்லவே!” விஜயனுக்கும் பழைய நினைவுகளில் உற்சாகம் பொங்க ஆரம்பித்தது.

சகாதேவன், அவர்கள் கடந்து வந்த பாதையை அறிந்திருக்கவில்லை. இருவரும் தங்கள் கடந்த காலத்தில் இருக்க, அவர்களின் பேச்சைக் கேட்ட சகாதேவன் இருவரையும் ஏதோ வேற்றுக் கிரகவாசிகள் போன்று பார்த்தான். அவனும்தான் என்ன செய்வான்? அவனறிந்த தந்தை கண்டிப்புக்குப் பெயர் போனவன், மூத்த சதோதரனோ சிரிப்பு என்று ஒன்று இருப்பதையே அறியாதவன். எப்போதும் நாடு, நாட்டின் வளம், நாட்டின் பாதுகாப்பு என்று நாட்டைப் பற்றியே சிந்திப்பதுதான் அவர்களின் வாடிக்கை.

அப்படிப்பட்டவர்களின் வேடிக்கைப் பேச்சு அவனுக்குப் புதிதாக இருந்ததில் வியப்பென்ன? சற்று நேரம் தங்கள் கடந்த காலத்திற்குள் சென்று விட்ட மூத்தவர் இருவரும் சகாதேவனது வியந்த பார்வை கண்டனர். ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டு வாய்விட்டு நகைத்தனர்.

“போதும் சிற்றப்பா! எனது தம்பி ஏதும் அறியாதவன். ஒரு சிறு பிள்ளையை இப்படிப் பரிகாசம் செய்வது மன்னனுக்கு அழகல்ல” என்று சிரித்துக் கொண்டே சொன்னான் விஜயன்.

“நீ சொல்வதும் சரிதான். சிறு பிள்ளை போல் தாயின் பின்னே ஒளிந்து கொண்டிருந்தவனுக்கு நமது விஷயம் தெரிய வாய்ப்பில்லைதான். அதனால் இத்துடன் நிறுத்திக் கொள்வோம்” என்ற புருஷோத்தமனும் சிரித்தான்.

“நான் ஒன்றும் சிறு பாலகன் அல்ல. நான் பௌரவ தேசத்தின் புருஷோத்தமனின் புதல்வன். பன்னிரண்டு வருடங்கள் எனது குருகுலக் கல்வியை சிறப்பாக முடித்து வந்திருக்கிறேன். எனது வீரத்தையும் திறமையையும் குறைத்து மதிப்பிட வேண்டாம்.” எதிரில் நிற்பவன் அந்தப் புருஷோத்தமன்தான் என்பதையே மறந்தவனாகப் பொங்கி எழுந்தான் சகாதேவன். அவனது உடம்பில் ஓடிய வீர ரத்தம் பரிகாசப் பேச்சைக் கேட்டுக் கொதித்தது.

மகனது பேச்சைக் கேட்டு புருஷோத்தமன் ஒரு தந்தையாக மெய் சிலிர்த்தான். தனது குறும்பை விடுத்தான். மகனது தோளில் கைவைத்து அவனை அணைத்துக் கொண்டான். இப்போது சகாதேவனுக்கு வியப்பு இன்னும் அதிகமாயிற்று.

“போதும் தந்தையே! ஒரே நாளில் பல்வேறு அதிர்ச்சிகளை என்னால் தாங்க இயலாது” என்றான் இலகுவாக.

“என் இளைய மைந்தன் ஒரே நாளில் முதிர்ந்து விட்டான் என்பது எத்தனை பெரிய விஷயம் தெரியுமா? அதை விட ஒரு அதிர்ச்சி உண்டா?” என்றான் தந்தையும் இலகுவாக.

“நீங்கள் இருவரும் உங்கள் கடந்த காலத்திற்குள் வெகுதூரம் சென்று விடாதீர்கள். விரைவில் இன்றைய நாளைக்குத் திரும்பி வந்து விடுங்கள். நான் ஒரு கோரிக்கையுடன் வந்திருக்கிறேன். தாங்கள் அதை இன்றே ஏற்கத்தான் வேண்டும்.” சகாதேவன் மற்ற இருவரையும் நிகழ்காலத்திற்குக் கொண்டு வர முயற்சி செய்து அதில் வெற்றியும் பெற்றான்.

“வந்து விடத்தான் வேண்டும்” என்ற விஜயன், “மன்னா! நமது இளையவன்தான் ஒரு பௌரவ தேசத்தின் வீரன் என்று நிரூபிக்க ஒரு வாய்ப்பு கோருகிறான். எமக்கு அந்தக் கோரிக்கையில் உடன்பாடு இல்லை என்றாலும் சோதித்துப் பார்க்கலாம் என்றே தோன்றுகிறது” என்றான்.

இத்தனை வருடங்களாக புருஷோத்தமனின் நிழலாகத் தொடரும் விஜயன் அவனைப் பார்த்து நிறைய விஷயங்கள் கற்றுக் கொண்டிருந்தான். அவற்றில் ஒன்று, சீக்கிரம் விஷயத்தைக் கிரகித்து சட்டென்று முடிவெடுப்பது. அவனே உடன்பாடு இல்லை என்று சொல்லும் போது மாற்று யோசனைக்கு வழியே இல்லையே.

“பௌரவ தேசத்தின் தலைமைத் தளபதிக்கு உடன்பாடு இல்லாத விஷயத்தை எதற்காக சோதித்துப் பார்ப்பது? கோரிக்கை வைப்பவன் இளவரசன் என்பதாலா? இந்த நாட்டில் அரசன் முதல் ஆண்டி வரை விதிமுறைகள் அனைவருக்கும் ஒன்றுதான் என்று தளபதிக்கு நினைவூட்ட வேண்டுமா?” புருஷோத்தமனின் குரல் கடுமையாக ஒலித்தது. அவன் கூறியது உண்மை என்பதால் விஜயனின் தலை தானாகக் குனிந்தது.

ஆனால் சகாதேவன் தலை நிமிர்ந்து நின்றான். “தளபதியாரின் மேல் தவறில்லை அரசே. எனது கோரிக்கையைத் தங்களது கவனத்திற்குக் கொண்டு செல்ல வேண்டும் என்று நான்தான் வலியுறுத்தினேன். நாட்டின் வளர்ச்சிக்காக, பல்வேறு எதிரிகளையும் சமாளிப்பதற்காக நடைமுறையில் உள்ள விதிமுறைகளில் சில மாற்றம் தேவை என்றால் அதை மதிப்பாய்வு செய்துதானே முடிவெடுக்க வேண்டும். அப்படி அல்லாமல் இதுதான் விதி இப்படித் தான் நடக்க வேண்டும் என்று சொல்வது சரியல்லவே!” என்று வாதிட்டான்.

புருஷோத்தமன் வியந்து நின்றான். விஜயனும் சகாதேவனின் இந்த வார்த்தைகளை எதிர்பார்க்கவில்லை என்பதை அவனது முகபாவம் உணர்த்தியது.

“இளரத்தம் அல்லவா! புதுமை செய்யலாம் என்று யோசிக்கிறாய். உனது கோரிக்கைதான் என்ன? புதிய விஷயங்கள் பேசுவதால் பழையதை மறந்து விடலாம் என்று அர்த்தம் இல்லை அல்லவா! எமது வழக்கமான வேலைகள் காத்திருக்கின்றன. நீயும் என்னுடன் வரலாம். அங்கே வந்து உன்னுடைய கோரிக்கையை விரிவாகக் கேட்கிறேன்” என்று தனது குதிரை மேல் ஏறிக் கொண்டான் அரசன். மற்ற இருவரும் அவனைப் பின்தொடர்ந்தனர்.

புருஷோத்தமன் முதலில் சென்றது அவனது யானைப் படை இருக்கும் இடத்திற்கு. பரந்து விரிந்த இடத்தில் சுமார் இருநூறுக்கும் மேற்பட்ட யானைகள் நின்றிருந்தன. இதுவரையில் இத்தனை யானைகளை ஒரே இடத்தில் பார்த்திராத சகாதேவன் பிரமித்தான். ஒவ்வொரு யானையும் பிரம்மாண்டமான தோற்றத்துடன் அதே நேரத்தில் கம்பீரமாகக் காட்சி அளித்தது.

இவர்கள் அருகே சென்ற போது அனைத்து யானைகளும் அரசனை வரவேற்கும் விதமாக தங்கள் துதிக்கையைத் தூக்கி ஆரவாரம் செய்ய, அதில் ஒரு யானை மட்டும் வேகமாக அரசனை நோக்கி வந்தது. அதைக் கண்டதும் சகாதேவன் பதறி விலக, புருஷோத்தமனோ விரிந்த புன்னகையுடன் தனது கைகளை விரித்தான். அதைக் கண்ட அந்த ராட்சத உருவம் இன்னும் வேகத்துடன் வந்து அவனைத் தூக்கித் தன் மேல் வைத்துக் கொண்டது.

பவன், அந்த யானையின் பெயர். காற்றை விட வேகமாகச் செயல்படுபவன். பல யுத்தங்களில் புருஷோத்தமனுக்கு உறுதுணையாக இருந்தவன். அவனது உற்ற தோழனைப் போன்றவன். பௌரவ தேசத்தின் யானைப் படையின் தலைவன்.

தினசரி ஒரு முறையாவது தன் தோழனைப் பார்க்காவிட்டால் பவன் செய்யும் அட்டகாசம் சொல்லில் அடங்காது. பட்டினி கிடந்து காரியத்தை சாதித்துக் கொள்வான். அதனாலேயே புருவும் எதை மறந்தாலும் பவனுக்கு மறக்காமல் காட்சி தந்து விடுவான். நண்பர்கள் போல இருவரும் அந்தப் பெரிய மைதானத்தைச் சுற்றி வருவார்கள். இன்றும் அப்படியே. புருஷோத்தமன், பவனின் காதில் ஏதோ சொல்ல அது சகாதேவனை நோக்கி வந்தது. அதைக் கண்ட இளையவன் கண்ணில் பயத்துடன் பின்னால் சென்றான்.

ஆனால் இறுதியில் ஜெயித்தது என்னவோ பவனும் அவன் தோழனும்தான். அத்தனை உயரமான யானையின் மேல் அமர்ந்து சுற்றிலும் பார்வையைச் செலுத்திய சகாதேவன் தனது தேசத்தை வேறு ஒரு கோணத்தில் பார்த்துப் பிரமித்தான்.

இருவரையும் சுமந்து கொண்டு பவன் அந்த மைதானத்தில் நடக்கத் தொடங்கினான்.

“இப்போது சொல் சகாதேவா. விதிமுறைகளில் மாற்றங்கள் வேண்டும் என்று கோரிக்கை வைத்தாயே. அதைக் கொஞ்சம் விளக்கு!”

“தந்தையே! என்னைத் தவறாக நினைக்க வேண்டாம். நமது தேசத்தின் பாதுகாப்பு மற்றும் போர் முறைமைகள் பற்றிய ஐயங்கள் என் மனதில். நம்மைப் பொறுத்தவரை நமது தேசத்திற்கு அச்சுறுத்தல்கள் என்று எதுவும் வராத போது யாரையும் எதிரியாகப் பாவிப்பதில்லை. நமது எல்லைக்குள் நாம் திருப்தியடைந்து இருக்கிறோம்.” புருஷோத்தமனின் பார்வை மகனை ஊடுருவியது. ஆனால் எதுவும் பேசவில்லை. மேலே சொல் என்று சைகை செய்தான்.

“அதில் தவறேதும் இல்லை. ஆனால் அனைவரும் அப்படி இருப்பதில்லை. நம்மைச் சுற்றி உள்ள பலரும் தங்கள் தேசத்தை விரிவுபடுத்த முயல்கிறார்கள். அன்னியரோடு கைகோர்த்து திடீரென்று படையெடுக்கிறார்கள். அவர்கள் ஜீலம் மற்றும் செனாப் நதிகளைத் தாண்டி வந்த பிறகே நமது தாக்குதல் தொடங்குகிறோம். அப்படி அல்லாமல் நதிகளுக்கு இக்கரையில் முன்னேற்பாடாக சில பாதுகாப்பு முறைமைகளை மேற்கொண்டோம் என்றால் துரிதமாக வெற்றி பெறலாம்.”

“மேலே சொல்.”

“நதிகளின் பிரவாகம் குறைந்திருக்கும் இடங்களில் தீவிர கவனம் தேவை. பகைவருக்கு மாற்று வழி இல்லாமல் செய்து விடலாம்” என்று தனது நீண்ட உரையாடலை நிறுத்திக் கொண்டு தந்தையின் பதிலுக்குக் காத்திருந்தான் சகாதேவன். அவனது தந்தையோ உடனடியாக எந்தப் பதிலும் தரவில்லை.

மாறாக யானையின் காதில் ஏதோ சொல்ல அது பழைய இடத்திற்கு வந்து இருவரையும் இறக்கி விட்டது. அங்கிருந்து அவர்கள் கிளம்பும் சமயம் பவனது கரிய முகத்தில் இருந்த பாவனைகள் சகாதேவனை வியப்புக்கு உள்ளாக்கியது.

இவர்களுக்காகக் காத்திருந்த விஜயனும் இணைந்து கொள்ள மூவரும் தங்கள் குதிரைகளில் ஜீலம் நதியோரம் பயணம் செய்தார்கள். நதியின் நீர் கரை புரண்டு ஓடியது. எப்போதும் வற்றாத நதி என்பதால் வெள்ளத்திற்குப் பஞ்சமில்லை. பல இடங்களில் ஓடங்களில் செல்வது என்றாலும் அக்கரை சேர்வது என்பது நிச்சயம் இல்லை. இந்த நதியினைத் தாண்டித்தான் வெளிநாட்டு வாணிகம் நடைபெறுகிறது.

புருஷோத்தமன் நதிக்கரையில் ஒரு இடம் வந்ததும் குதிரையை நிறுத்தி இறங்கினான். சகாதேவன் கூறியது போன்ற ஒரு இடம், ஆற்றின் அகலமும் தீவிரமும் வெகுவாகக் குறைந்திருந்தது. ஆழமும் குறைவே என்று பார்க்கும் போதே தெரிந்தது. சற்று நேரம் அங்கே பார்த்தவாறு நின்ற புருஷோத்தமன் தனது மைந்தனிடம் திரும்பினான்.

“உனது கோரிக்கை விரைவில் நிறைவேற்றப்படும்” என்றான்.
 

Author: SudhaSri
Article Title: அத்தியாயம் -1
Source URL: Nectar Novels-https://nectarnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.