அத்தியாயம் – 11
கட்டிடப் பணியிடத்தில் வேலையாயிருந்த சக்தியின் கைப்பேசிக்கு அன்னை, சிவகாமியிடமிருந்து அழைப்பு வர, “சொல்லுங்கம்மா, ஏதாவது பிரச்சனையா? ” என்றான் சக்தி.அவசரம் என்றால் ஒழிய அன்னை அழைக்கமாட்டார் என்று அவனுக்குத் தெரியும். அதனால் தான் அப்படிக் கேட்டான்.
“மதி, இன்னைக்கு ரெஸ்டாரன்ட் போகாமல் ரூம்ல உட்கார்ந்து அழுதுட்டு இருக்கா? என்னன்னு கேட்டா சொல்லவும் மாட்டேங்கிறா. எனக்குப் பயமா இருக்கு சக்தி” என்றார் சிவகாமி.
சக்தி என்று அன்னை பெயர் சொல்லி அழைத்தாலே அவனுக்கு உள்ளூரக் கலக்கம் தான். சாதாரண சமயங்களில் எல்லாம் அவனை, ‘அப்பா’, இல்லை, ‘கண்ணா’ போட்டுத் தான் அழைப்பார்.
அன்னையின் பதட்டம் சக்திக்கு இடம்பெயர, செய்து கொண்டிருந்த வேலையைப் பிரித்துக் கொடுத்துவிட்டு உடனே வீட்டுக்குக் கிளம்பினான்.
அன்று கட்டட வேலையிருக்கு என அதிகாலையிலேயே கிளம்பியிருந்தான் சக்தி. இல்லையென்றால் அவன் தான் வெண்மதியை வேலையிடத்தில் விட்டுவிட்டுச் செல்வான்.
வெண்மதிக்கென அன்று கார் ஓட்டுனர் ஒருவரை ஏற்பாடு செய்துவிட்டு தான் வேலைக்குக் கிளம்பினான் சக்தி.
ஆனால் அவளுக்கு என்ன ஆகிவிட்டது எனத் தவித்துக் கொண்டே வீடு சென்ற சக்தி, ‘மதி எங்கே?’ என அன்னையிடம் கண்களாலேயே வினவ, அவளறையில் இருக்கிறாள் என சிவகாமியும் சமிக்ஞை செய்தார்.
கதவைத் தட்டிவிட்டு பதிலுக்குக் காத்திராமல் உள்ளே சென்றான் சக்தி. அண்ணனைப் பார்த்ததும், தங்கையின் அழுகை அதிகரித்தது. யாராவது தன் தங்கையின் நிலைக்குறித்து மனம் வருந்துமாறு பேசிவிட்டார்களோ எனப் பதறியவன்,
“என்னடா ஆச்சு. சொல்லு” என அவள் தலையை ஆதுரத்துடன் தடவ, “இன்னைக்குக் காலையில் வந்த பேப்பர் பார்த்தீங்களா?” எனக் கேட்டாள்.
அவனுக்கு எங்கே அதற்கெல்லாம் நேரம்? அவன் இல்லையென்று சொன்னதும், “இதைப் பாருங்க. நம் ரெஸ்டாரன்ட் பத்தி எழுதியிருக்காங்க அண்ணா.” என்றாள்.
“நீ அழாதடா.. நான் படிக்கிறேன்” என்றவன், நின்றவாறே வாசித்தான்.
‘மூன்லைட்’ ‘மெக்சிக்கன் கிட்சன்’ பாரட்டத்தக்க , வித்தியாசமான முயற்சி. அமைதியான, ரம்மியமான சூழ்நிலை கண்ணுக்கும், மனதுக்கும் குளிர்ச்சி. பல உணவுகள் சுவைமிக்கதாக இருந்தாலும் சில உணவுகளின் நாக்கைத் தீண்டிய சுவையில் ஏதோ ஒன்று குறைந்ததாகப் பட்டது.
வாடிக்கையாளர்கள் முழுமையாகத் திருப்திக் கொள்ள வேண்டுமென்றால் இன்னும் கொஞ்சம் சிரத்தை கொள்ள வேண்டும். அப்படிச் செய்தால் பௌர்ணமியாய் மிளிரும். இப்போது மூன்லைட்டை ஏதோ ஒரு மேகம் மறைத்துக்கொண்டிருக்கிறது’ – சதா
பத்திரிக்கையில் இரண்டாம் பக்கத்தில் மூன்லைட் உணவகத்தின் பதார்த்தத்தின் புகைப்படமும், துணுக்குச் செய்தியும் வந்திருந்தது. அந்தச் செய்தியைப் படித்த சக்திக்கு ஆத்திரம் மூண்டது. சும்மா பேனா இருக்கிறது என்று எழுதித் தள்ளிவிடுகிறார்கள்.
‘தங்கையே இப்போது தான் தன் இழப்பிலிருந்து மீண்டு கொண்டிருக்கிறாள். அப்படி இருக்கிறவளுக்கு உதவவில்லை என்றாலும் பரவாயில்லை, குத்திக் குதறாமலாவது இருக்கலாமே?’ என எரிச்சல் கொண்டான் சக்தி.
“கவலைப்படாதடா. நான் போய் நாக்கைப் பிடுங்கிக் கொள்வதைப் போல் நன்றாகக் கேட்கிறேன். நீ கிளம்பு அப்படியே உன்னை ரெஸ்டாரன்ட்ல இறக்கிவிடறேன்” எனத் தங்கைக்குச் சமாதானம் சொன்னவன்,
தாயிடம் சென்று, “பெருசா ஒண்ணும் பிரச்சனையில்லைம்மா. கவலைப்படாதீங்க” என்றான்.
தாயிடம் சக்தி ஆரம்பத்திலிருந்தே பெரிதாக எதையும் பகிர்ந்து கொண்டதில்லை. தந்தையின் மறைவுக்குப் பின்னர் அவரைத் துன்பப்படுத்த வேண்டாம் எனக் கவலைத் தரும் விஷயம் எதையும் சொல்லுவதுமில்லை.
தங்கை கிளம்புவதற்குக் காத்துக்கொண்டிருந்த சக்தியின் அலைப்பேசிக்கு அழைப்பு வர, முகம் சுழித்தவன், ‘இந்த நேரத்தில் இவன் அழைக்கவில்லை என்றால் ஆகலையா?’ என அழைப்பை எடுத்தான்.
“என்னங்க சக்தி? எப்படியிருக்கீங்க?” என மறுமுனையில் கதிர் கேட்க, “இதுவரைக்கும் நல்லாத் தான் இருந்தேன். இப்போ நீ கூப்பிட்டுட்டயில்லை.. இனி எப்படி நல்லா இருக்க முடியும்?” என்றான் சக்தி எரிச்சலுடன்.
“காலையிலேயே காரச் சட்டினி சாப்பிடாதீங்கன்னு சொன்னாக் கேட்கறீங்களா? செமக் காரமாப் பேசறீங்க” எனக் கிண்டலடித்தான்.
சக்திக்குக் காரச் சட்னி என்றால் கொள்ளைப் பிரியம். அத்தோடு காலையில் நேரத்தில் சென்றதால் சாப்பிடாமல் சென்றிருந்தான். அதனால் அவனுக்குப் பசி வேறு வயிற்றைக் கிள்ள, ‘இவன் வேறு நேரங்காலம் தெரியாமல் சட்னியைப் பற்றிப் பேசுகிறான்’ என எரிச்சல் வந்தது.
“எப்பவுமே கஞ்சி குடிச்ச மாதிரி விறைப்பா பேசிட்டு இருக்கீங்களே. இதுக்குத் தான் காரச் சட்னி சாப்பிடாதீங்கன்னு சொல்லறது. ஐஸ்கிரீம் சாப்பிட்ட மாதிரி அப்பப்போ குழைவா இருங்க. உடம்புக்கும், மனதுக்கும் ரொம்ப நல்லது. சரி, இன்னைக்குப் பேப்பர் பார்த்தீங்களா?” எனப் பத்திரிக்கையின் பெயரைக் குறிப்பிட்டு, கதிர் குதூகலமாக வினவ,
பசியெல்லாம் பின்னுக்குத் தள்ளப்பட, ‘என் தங்கையின் அழுகை இவனுக்குச் சிரிப்பாக இருக்கிறதா?’ என எரிச்சல் கொண்டான் சக்தி.
“உருப்படியா ஏதாவது பேசறதுன்னா பேசு. இல்லைனா ஃபோனை வைடா” எனச் சக்தி எரிந்து விழுந்தான்.
“பாராட்டுவீங்கன்னு நினைச்சேன். பொறாமை? இட்ஸ் ஓ.கே.மா. சீக்கிரம் பாராட்டுவீங்க. ” எனக் கதிர் அழைப்பை வைப்பதற்கும், வெண்மதி வருவதற்கும் சரியாக இருந்தது.
வெண்மதி இவ்வாறு முகம் சுணங்கிக் கொள்வதும், அண்ணன் வந்து சமாதானம் செய்வதும் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக அவ்வப்பொழுது நடப்பதே. அதனால் மகள் கிளம்பி, வெளியில் வந்தவுடன், என்ன ஏது என்று துருவாமல் அனுப்பிவைத்தார் சிவகாமி.
தங்கையை உணவகத்தில் இறக்கிவிட்ட சக்தி, “நான் பார்த்துக்கறேன்டா குட்டி. அந்தச் சதாவை சாதா ஆக்காமல் வரமாட்டேன். நீ போய் தைரியமா உன் வேலையைப் பாரு” என்றான் சக்தி. (உன் தங்கை உணவகம் வச்சிருக்கிறான்னு நிரூபிக்கிற பார்த்தியா ராசா? அங்க நிக்கிற.)
தங்கை தலையாட்டிவிட்டு உள்ளே சென்றதும், நண்பன் நந்தகுமாரை அழைத்து, “பேப்பர்ல அவதூறா எழுதி உன் பெயருக்குக் களங்கம் செய்தா அவங்க மேலே கேஸ் போடலாமா?” எனக் கேட்டான் சக்தி.
“இப்போ என்ன ஆச்சு?” என நந்தகுமார் கேட்க, நடந்ததைச் சொன்னான்.
வடமாநிலத்தில், காவல்துறையில் குடிமைப் பணியில் தேர்வு பெற்று உயர் அதிகாரியாக இருக்கும் நந்தகுமாருக்குச் சுவற்றில் முட்டிக் கொள்ளலாம் போலிருந்தது. பின்னே நாட்டில் எத்தனையோ பிரச்சனைகள் இருக்க, இந்தச் சின்ன விஷயத்துக்கு எல்லாம் கேஸ் போடுவார்களா?
“ஏண்டா என்னைப் பார்த்தா சிரிப்புப் போலீஸ் மாதிரி இருக்கா உனக்கு? நல்லதா நாலு வார்த்தை சொல்லி, அதில் ஒரே ஒரு குறையைச் சொன்னா அதை ஏன் தப்பா எடுத்துக்கற? நமக்கு விளம்பரமும் ஆச்சு. நம்ம வளர்ச்சிக்கும் நல்லது என நினைடா” என்றான் நந்தகுமார்.
“உனக்குத் தெரியாது நந்தா. மதி இன்னைக்கு எப்படி அழுதாத் தெரியுமா? எனக்கு மட்டும் ஏண்டா இப்படித் தொடர்ந்து நடக்கிறது” எனச் சக்தி என்னவோ ஊரிலிருக்கும் கவலைகளை எல்லாம் இமயமலை போல் கட்டி, ‘பாக்’ செய்து அவன் வாழ்க்கையில் உருட்டிவிட்டதைப் போல் பேசிக் கொண்டிருந்தான்.
“டேய், சக்தி, தங்கச்சியை ஃப்ரீயா விடுடா. எல்லாத்துலேயும் மூக்கை நுழைச்சுட்டு இருக்காத. அவ வளரட்டும்” என நந்தகுமார் சொல்ல,
“உனக்கு என் கவலையைப் பார்த்தா அவ்வளவு ஈசியா இருக்கா? எல்லாம் அவங்கவங்களுக்கு வந்தாத் தான் தெரியும். எல்லாருக்கும் இளிச்சவாய் என் தங்கச்சி தான் கிடைச்சாளா? நேர்ல போய் பேசிட்டு வந்து அப்புறம் உன்னை வச்சுக்கறேன்” என அழைப்பை வைத்துவிட்டு உடனே சம்மந்தப்பட்ட பத்திரிக்கை அலுவலகம் நோக்கிப் பறந்தான் சக்தி.
நந்தகுமாருக்குச் சக்தியை நினைத்து சிரிப்பதா, அழுவதா என்று தெரியவில்லை. முதலில் எல்லாம் இதே சக்தி, தங்கை வெண்மதியை அதட்டி, உருட்டி, திட்டிக் கொண்டிருப்பான்.
இப்போது என்னவென்றால் அதற்கு நேர்மாறாக, அவளை ஒரு சொல் கடிந்து சொல்லாமல் பொத்தி, பொத்திப் பார்த்துக் கொள்கிறான். ‘இவனால் நடுநிலையில் இருந்து செயல்படமுடியாதா?’ என முணங்கிக் கொண்டே வேலையில் ஆழ்ந்தான்.
****
அலுவலக அறைக்குள்ளே, “டேய் சித்து, இன்னைக்கு ‘ஆர்டிகள்’ பார்த்தியா? நீ சொன்ன மாதிரி இருந்ததா?” எனத் தன் நண்பன் சித்தார்த்திடம் கேட்டுக் கொண்டிருந்தாள் சம்யுக்தா.
அன்று ‘மூன்லைட்’ உணவகத்துக்குச் சென்று வந்த பின்னர், சம்யுக்தா என்னவோ அங்கு உணவு நன்றாக இருக்கிறது என்று தான் சொன்னாள். ஆனால் சித்தார்த் தான், ‘ஏதோ குறையுது சம்யு. நெற்றிக் கண் திறப்பினும் குற்றம் குற்றமே.’ என நக்கீரன் தோற்றுப் போகும் அளவுக்கு அவளிடம் வாதாடினான்.
மதிப்பீடு என்பது ஒருவரின் தனிப்பட்ட கருத்தல்லவே. அதனால் சித்தார்த் சொன்னதைக் கருத்தில் கொண்டு தான் அந்தச் செய்தியை அப்படி எழுதினாள் சம்யுக்தா.
சம்யுக்தாவின் கேள்விக்கு, “பி.. பின்னிட்ட” எனச் சித்தார்த் சொல்ல, “எனக்கு என்னவோ அங்கே உணவு நல்லா தான் இருந்தது” என மீண்டும் வலியுறுத்திவிட்டு வேலையைத் தொடர்ந்தாள்.
அப்போது தான் தன்னைக் காண யாரோ வந்திருக்கிறார்கள் எனச் சம்யுக்தாவுக்குத் தகவல் சொன்னார்கள்.
“இதோ வர்றேன்” என்ற குரலில் சக்தியின் மனம் விழித்துக் கொண்டு, இந்தக் குரலை எங்கோ கேட்டது போலிருக்கே என நினைத்தான்.
உள்ளே எரிமலையாகக் கோபம் வெடித்துக் கொண்டிருந்தாலும் சம்மந்தப்பட்ட பத்திரிக்கை அலுவகத்தின் வரவேற்பறையில், சதாவைச் சந்திக்க வேண்டும் என்று நல்லவிதமாகச் சொல்லிவிட்டு அமைதியே உருவாக காத்திருந்தான் சக்தி.
வந்தவரைச் சந்திப்பதற்கு முன்னால் சித்தார்த்திடம் இதைச் சொல்லிவிட வேண்டும் என நினைத்து, “சித்து, ஆமைக்கும், முயலுக்கும் நடந்த போட்டி தெரியுமா?” எனக் கேட்டாள் சம்யுக்தா.
“ரே.ரேஸ் போய் மு..முயல் தூ.தூங்கின கதை தானே?” எனச் சித்தார்த் கேட்க, “ம்ஹூம். யாரு முதல்ல வீட்டுக்குப் போறாங்கன்னு பந்தயம் வச்ச கதை. யாரு ஜெயிச்சிருப்பாங்க?” என்றாள் சம்யுக்தா.
‘என்ன ஒரு பொறுப்பற்றத்தனம்? வந்தவரைக் காத்திருக்கச் செய்துவிட்டு, வெட்டிக்கதைப் பேசிக் கொண்டிருக்கிறார்கள்’ என்று அங்கு வேலைச் செய்பவர்களைப் பிடிக்காமல் போனது சக்திக்கு.
பத்திரிக்கை அலுவகத்தில் இது போன்று பலதையும் அலசத் தான் செய்வார்கள் என்று அவன் புத்திக்கு எட்டவேயில்லை. தன் பிரச்சனை தான் உலகத்திலேயே முக்கியம் வாய்ந்தது என்ற எண்ணத்தில் இருந்தவனுக்குத் தன்னை அப்படிக் காத்திருக்க வைத்ததில் உடன்பாடில்லை.
‘சும்மா வெட்டிக் கதைப் பேசிக் கொண்டிருக்கிறார்கள்’ எனப் பொருமிக் கொண்டான். அவன் அலுவலகத்திற்கு அவனைப் பார்க்க வருகிறவர்களை அப்படித் தான் காத்திருக்கச் செய்வான் என்று வசதியாக அவனுக்கு மறந்துவிட்டிருந்தது.
“உ.உசாரான மு..முயல் தான் ஜெ..ஜெயிச்சிருக்கும்” என்ற சித்தார்த், பதில் சொல்லிவிட்ட பள்ளி மாணவனாய் தோழியைப் பார்க்க,
“ம்ம்ம்ஹூம்.. ஆமை தன் தலையை உள்ளே இழுத்துக்கிட்டா அது உடனே வீட்டுக்குப் போயிடுமே.. அப்போ முயல் தான் திரும்பவும் தோத்துப் போச்சு” எனச் சிரித்தாள் சம்யுக்தா.
அவள் சொல்வதை அதுவரையில் கேட்டுக் கொண்டிருந்த சக்திக்கு, ‘இதுக்கு பேர் ஜோக்கு. அதைக் சொல்லிச் சிரிக்குது ஒரு பேக்கு.’ என்று நினைத்தான்.
ஆனாலும் அந்தப் பெண்ணைப் பார்க்க வேண்டும், என்ற ஆர்வம் அவனுள் தலைத்தூக்கியது. சில விநாடிகள் அவன் வந்த காரணத்தையே மறந்துவிட, அவன் மனநிலை சற்று மாறுபட்டிருந்தது. எல்லாம் அவன் சம்யுக்தாவை அவள் அறையில் போய்ப் பார்க்கும் வரையில் தான்.
உள்ளே செல்வதற்கு அனுமதி கிடைத்ததும், சக்தி உள்ளே சென்றான். அன்று தங்கையின் உணவகத்தில் சதாவுடன் பார்த்தவனும் அங்கே இருக்க அவனுக்குப் பொறாமையில் மனம் வெடித்தது.
‘ஒரே இடத்தில் வேலை செய்கிறார்களா? ஒண்ணும் சொல்லிக்கிற மாதிரி இல்லை.’ என நினைத்தவனுக்கு, ‘இவளா சதா?’ என்ற எண்ணம் வர, சம்யுக்தாவைப் பார்த்து முறைத்தான்.
முறைப்புடன் நின்ற சக்தியைப் பார்த்த சம்யுக்தா, “ஹே மிளகாய் பஜ்ஜி?” என விழி விரிக்க, “என்னது மிளகாய் பஜ்ஜியா? என்னைப் பார்த்தா மிளகாய் பஜ்ஜி மாதிரியா இருக்கு?” என மிளகாய் பஜ்ஜியை விடவும் காரமாகப் பார்த்தான் சக்தி.
“இல்ல. மிளகா பஜ்ஜி” என சம்யுக்தா ஏதோ சொல்ல வாயைத் திறக்க, “ஜூஸை என்மேலே கொட்டினதும் இல்லாமல், செஞ்ச தப்பை மறைக்கறதுக்கு ஊமைன்னு நாடகம் வேற. பிரமாதம்” என முகத்தில் அடிப்பதைப் போல் பேசினான்.
‘யார்றா இவன்? சும்மா லூசை லூசில் விட்டுவிட்டார்கள் போல.’ என சம்யுக்தா கற்பனையில் நினைத்து, அதற்குச் சிரிப்பையும் உதிர்த்தவள், “சாரி. அன்னைக்குத் தெரியாமல் உங்க மேலே மோதி ஜூஸ் சிந்திடுச்சு. என்ன நடந்துச்சுன்னா” என ஆரம்பிக்க,
“மன்னிப்பையெல்லாம் தேடி வந்து சொல்லணும். தேடி வர்றவங்ககிட்டே கேட்கக் கூடாது” என அவளை மண்டையில் வார்த்தைகளால் ஓங்கிக் கொட்ட, ‘என்னடா இது வம்பா போச்சு? இவன் என்ன பெரிய பிஸ்தாவா உடனே இவனைக் கண்டுப்பிக்க.’ என நினைத்தாள் சம்யுக்தா.
அன்று அவனிடம் மன்னிப்புக் கேட்பதற்காகச் சற்று நேரம் காத்திருந்தாள். ஆனால் அவள் பத்திரிக்கையின் ஆண்டுவிழாவில் அவள் தான் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்க வேண்டியிருந்தது. அதனால் அவள் உடனே செல்ல வேண்டியும் இருந்தது.
விழா முடிந்ததும் வந்து பார்த்தாள். ஆனால் சக்தி இருந்ததின் அடையாளமே இல்லை. அதனால் அப்படியே விட்டுவிட்டாள். இத்தனை நாட்கள் கழிந்தும் அதையே மனதில் வைத்துக் கொண்டு இப்படி வந்து தாக்குவான் என்று அவள் எதிர்பார்க்கவில்லை.
சம்யுக்தாவுக்கு உணவில் காரம் அதிகம் இருந்தால் உட்கொள்ளவே முடியாது. ‘சும்மா பீலா விடுகிறாள். அது எப்படி சிறிது காரம் இருந்தால் அவளால் அதைத் தாங்கிக் கொள்ள முடியாது. அதையும் பார்த்துவிடலாம்’ என அன்று நினைத்த சித்தார்த் வேண்டுமென்றே மிளகாய் பஜ்ஜியை, வாழைக்காய் பஜ்ஜி என அவளிடம் எடுத்துச் சென்றான்.
அவள் சாப்பிட்டு முடிந்ததும் உண்மையைச் சொல்லிவிடலாம் எனப் பிரமாதமாகத் திட்டமிட்டு, “சம்யு. இது செம டேஸ்ட். ப்ரோக்ராம் ஆரம்பிக்கறது முன்னாடி கொஞ்சம் சாப்பிட்டிடு. இல்லைனா உனக்குப் பசிக்கும். பசித் தாங்கமாட்ட” எனப் பாசமான நண்பனாக அவளுக்குத் தந்தான்.
சம்யுக்தாவும் அந்தப் பாசத்தில் வழுக்கி விழுந்துவிட்டாள். ஆம். வழுக்கித் தான் விழுந்துவிட்டாள்!
கையில் இருந்த நிகழ்ச்சி நிரலில் பார்வையை வைத்துக் கொண்டே, அவசர, அவசரமாக பஜ்ஜியைக் கரகரவென்று கடித்துச் சாப்பிட்டாள். சற்று நேரத்தில் அவள் நாக்கில் காரத்தின் சுவை படிந்து காந்தச் செய்ய, “உஸ். உஸ்” என ஜொள்ளு விட ஆரம்பித்துவிட்டாள்.
காரம் உச்சி மண்டைக்கு ஏற அவளால் தாங்க முடியவில்லை. காரத்தைக் குறைக்கவென என்னென்னவோ செய்து பார்த்தவள், அனைவரின் முன்னால் காட்சிப் பொருளாக விரும்பாமல் வாயைக் கழுவ ரெஸ்ட்ரூமை நோக்கி ஓடினாள். அப்போது தான் சித்தார்த்துக்குத் தன் தவறு புரிந்தது.
அப்படிச் சம்யுக்தா வெளியில் ஓடிய பொழுது தான் அவள் சக்தயின் மேல் மோதியது. மிளகாயின் காரம் அவள் வாயைக் காந்தச் செய்ய, நாக்கு மரத்துப் போனதைப் போல் ஆகிவிட்டது.. அவளால் ஒரு வார்த்தைக் கூட பேச முடியவில்லை. அதைத் தான் சக்தி தவறாக எண்ணிக் கொண்டு, ‘அவனை ஏய்த்துவிட்டாள்’ எனக் குதித்துக் கொண்டு இருந்தான்.
“அன்னைக்கு நடந்ததுக்குத் தேடி வந்து திட்டறதுக்காவே என்னைப் பார்க்க வந்தீங்களா?” என சம்யுக்தா கேட்க,
“நான் அப்படி ஒண்ணும் அல்பமில்லை. நீ தான் சதாவா? என்ன ரொம்ப நல்லா எழுதறதா நினைப்பா?” என அவள் உணவகத்தைப் பற்றி எழுதியதை அவள் முன்னால் போட்டான்.
‘ஓஹ். லூசில் வந்த லூஸ் இல்லையா? சண்டை போட வந்த கேஸா? இது மட்டும் இவனுக்கு அல்பமாகத் தெரியவில்லையா?’ என நினைத்த சம்யுக்தா, “வாங்க உட்காருங்க. உங்க ரெஷ்டாரன்ட்டா.? உண்மையைத் தான் எழுதியிருக்கேன்” என்றாள் சம்யுக்தா.
“எது உண்மை? ஓசிச் சாப்பாட்டை சாப்பிட்டுட்டு நீ பேசாத.” என்றான் சக்தி.
“என்னது ஓசிச் சாப்பாடா?” என புருவம் உயர்த்தியவள், அருகில் அமர்ந்திருந்த சித்தார்த்திடம், “சித்து, மூன்லைட்ல சாப்பிட்டதற்கு நீ ‘பில்’ கொடுத்த தானே?” என சம்யுக்தா கேட்டாள்.
சித்தார்த்தும் அவர்கள் பேசுவதைக் கேட்டுக் கொண்டு தான் இருந்தான். “அதைத் தான் சொல்லறேன். நீயா பணம் கட்டின? யாரோ கட்டினது தானே? ஓசிச் சாப்பாடு திங்கற உனக்கே இப்படி இருந்தா. உழைச்சுச் சம்பாதிக்கிற எங்களுக்கு எப்படி இருக்கும்?” என்றான்.
“இ.. இப்போ உ.. உங்களுக்கு என்னப் பி. பிரச்னை?” எனச் சித்தார்த் எழுந்து அவர்கள் அருகில் வர, அது சக்தியிடமிருந்து சம்யுக்தாவைக் காப்பதைப் போல் பட்டது சக்திக்கு.
சித்தார்த்தின் செய்கை அவனுக்கு அறவே பிடிக்கவில்லை. ‘நான் என்ன சிங்கமா? அப்படியே இவளைப் பிடித்துத் திங்க?’ என முறைத்தவன், “என்னைப் பார்த்தா கிண்டலா இருக்கா? அன்னைக்கு ஊமைன்னு நாடகம்.. இன்னைக்குத் திக்கு வாயா?” எனச் சித்தார்த்தைப் பார்த்து கேட்டான்.
அப்படிக் கேட்டு அவன் மனக்குமுறலை ஆற்றிக் கொள்கிறானாம்.
“ச.. சார்.. இ. இல்ல.’ எனச் சித்தார்த் ஏதோ சொல்ல முயற்சிக்க, “உங்ககிட்டே நிறைய பணம் இருக்குமே. திக்கு வாயாயிருந்தாலும் பரவாயில்லைன்னு அதான் அட்டையா உங்ககிட்டே வந்து ஒட்டிக்கிட்டாளா?” என அவனை இடைவெட்டினான்.
சக்தி அப்படிக் கேட்டதும் சம்யுக்தாவுக்கு எரிச்சல் எட்டிப் பார்த்தது. பின்னே, வேலையிடத்தில் வந்து அமர்ந்துகொண்டு, சம்மந்தம் சம்மந்தமில்லாமல் உளறிக் கொண்டிருக்கிறானே? ஏதோ தெரியாமல் அன்று அப்படி நடந்துவிட்டது. அதற்காக இவன் வாய்க்கு வந்ததைப் பேசலாமா?
“சித்து, நீ போய் வேலையைப் பாரு.” என நண்பனை சம்யுக்தா உள்ளே அனுப்பி வைக்க முயல,
“இல்ல.. நான் இ. இருக்கேன்” என்றான் நண்பனாக. அவன் தானே அந்த உணவகத்தைப் பற்றி அப்படி எழுதச் சொன்னதும்.
“சித்து நான் பார்த்துக்கறேன். நீ போய் உன் மாத்திரையைப் போடு” என அவனை அனுப்பி வைக்க முயன்றாள். ஆனால் சித்தார்த் பிடிவாதமாக அங்கேயே நின்று கொண்டிருந்தான்.
அவன் நகரமாட்டான் எனச் சம்யுக்தாவுக்குப் புரிய, சித்தார்த்தின் இடத்துக்குச் சென்று மாத்திரையை எடுத்து வர நகர்ந்தாள்.
“நான் பேசிட்டே இருக்கேன். நீ பாட்டுக்கு எங்கே கிளம்பற?” என சம்யுக்தாவின் வழி மறிப்பதைப் போல் சக்தி நிற்க,
“பா. பார்க்க டீசன்ட்டா இருந்துட்டு. எ. எதுக்கு வந்ததில் இருந்து த. தைய தக்கான்னு கு.குதிச்சுட்டு இருக்கீங்க? மு. முதல்ல யார் சார் நீ. நீங்க? பி. பிரச்சனைப் பண்ணாமல் கி.கிளம்புங்க. இல்லை, போ.போலீஸைக் கூப்பிடவேண்டி வரும்” எனச் சித்தார்த்துக்கும் இப்போது கோபம் வந்தது.
ஏதோ அன்று தெரியாமல் மோதி அவள் தப்பு செய்துவிட்டாள் என்பதற்காக அமைதியாக இருந்தால் எல்லைக் கோட்டைத் தாண்டுகிறானே.
அதற்குள் சக்தியைச் சுற்றிக் கொண்டு சம்யுக்தா அங்கிருந்து நக்ர்ந்திருந்தாள். “கூப்பிடுங்க. நானும் பேசறேன். இதில் எழுதியிருக்கீங்களே மூன்லைட்டை மேகம் மறைச்சிடுச்சுன்னு.. அது என் தங்கை, வெண்மதியோடது. உங்க மேலே மானநஷ்ட வழக்குப் போடறேன்” என்றான் சக்தி.
சுறுசுறுவென்று வந்த சித்தார்த்தின் கோபம் பனியாகக் கரைந்திருக்க, ஏதும் பேசாமல் அமைதி காத்தான்.
சக்தி சொன்னதைக் கேட்ட சம்யுக்தாவோ, ‘குணத்தில் இவனுக்கும் கதிருக்கும் ஏணி வைத்தாலும் எட்டாது போலவே. பார்த்த பத்து நிமிடங்களில் அனைவரையும் சிரிக்க வைத்த கதிர் எங்கே? வந்ததிலிருந்து அப்பளமாய் குதித்துக் கொண்டிருக்கும் இவன் எங்கே?
அன்றும் அப்படித் தானே குதித்தான். தான் போய் அவன் மேல் மோதியதும் தன்னைப் பிடித்துக் கீழே தள்ளிவிட்டானே’ என சக்தியைப் பற்றிய ஆராய்ச்சியில் இறங்கியவள்,
‘ஆனாலும் தனக்கு வாய் பேச வராது எனத் தவறாக ஊகம் கொண்டு உடனே மனம் இளகினானே’ எனச் சம்யுக்தாவின் முகத்தில் இப்போது புன்னகைக் குடியேறியிருந்தது.
அதனால், “ஓ கதிர் சொன்ன அண்ணன், நீங்க தானா?” எனக் கேட்டவாறே எடுத்து வந்த மாத்திரையை சித்தார்த்திடம் கொடுத்தாள்.
இது போதாதா, புகைந்து கொண்டிருந்த எரிமலையின் கதவைத் தட்டி வெடிக்க வைப்பதற்கு? இப்போது சக்திக்கு அனைத்தும் புரிந்து போனது. ‘அதனால் தான் காலையில் தன்னை அழைத்து பேப்பரைப் பார்த்தாயா என்று எகத்தாளமாகக் கேட்டானா கதிர்?’ என மிக அழகாக, கெட்டியாக ஓர் முடிச்சைப் போட்டான் சக்தி.
“அதானே பார்த்தேன்.. கதிர் அனுபிச்ச ஆளா நீ? அவன் எவ்வளவு பணம் கொடுத்து இப்படி எழுதச் சொன்னான்?” என்ற சக்தியின் கை உடனே தன் தங்கை வெண்மதிக்கு அழைத்தது.
“மதிக் குட்டி, கதிர் உன் மேலே பாசம் காட்டறது எல்லாம் வேஷம் எனச் சொன்னப்போ நீ நம்பலையில்லை? ஆனால் அவன் தான் ஆளை அனுப்பி உன் ரெஸ்டாரன்ட்டைப் பத்தி இப்படி எழுதச் சொல்லியிருக்கான்” எனச் சக்தி சொன்னதும், மறுமுனையில் இருந்த வெண்மதி விசும்ப ஆரம்பித்தாள்.
அதை ‘ஸ்பீக்கரில்’ போட்டுக் காட்டியவன், “சரிடா விடு.. அவனைப் பத்தி தான் உனக்குத் தெரியுமே. எப்பவும் விளையாட்டுப் புத்தி. உனக்குக் கால் போனதைப் பத்திக் கூட கவலையில்லாமல் இருக்கிறான் பாரு” எனக் கைப்பேசியை வைத்தான் சக்தி.
“இப்போ திருப்தியா? ஒரு கால் ஊனமான என் தங்கச்சியை அழ வச்சுட்டயில்லை. உன்னை சும்மா விடமாட்டேன். இப்போ தான் எழுந்து தைரியமா நடமாட ஆரம்பிச்சிருக்கா. அதுக்குள்ளே அவளை இந்தப் பாடு படுத்தியிருக்க” எனச் சம்யுக்தாவிடம் பொரிந்தான் சக்தி.
சக்தி சொன்னதைக் கேட்ட சித்தார்த், “சார்கிட்டே நான் பேசிக் கொள்கிறேன். ” எனச் சொல்ல, “நீ போய் உன் வேலையைப் பாரு. சாரை நானே வழியனுப்பி வச்சுட்டு வரேன்” என அவனிடம் சொன்ன சம்யுக்தா, “கதிர் சொன்ன மாதிரி நீங்க முசுடாத் தான் இருக்கீங்க” என்றாள்.
“என்ன?” எனச் சக்தி திகைத்து விழிக்க, அந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி மனதில் உள்ளதைக் கொட்டிவிட்டாள்.
“உங்க தங்கையைப் படுத்தறது நானா, நீங்களா? உங்க தங்கைக்கு கால் ஊனம் என இதுவரைக்கும் எனக்குத் தெரியாது. முதல்ல அந்த உணவகத்துக்கு ஓனர் ஓர் பெண் எனத் தெரியாது.
நீங்களே உங்க தங்கைக்குக் கால் ஊனம் என மூணாம் மனுசியான என்கிட்டேயே தண்டோரா போடாத குறையாச் சொல்லிட்டுத் திரியறீங்க. அப்படின்னா இன்னும் எத்தனைப் பேரிடம் இப்படிச் சொல்லியிருக்கீங்களோ? இது ஒரு அண்ணனுக்கு அழகா?
நீங்க ஒவ்வொரு முறையும் உங்க தங்கையைக் கால் ஊனம், ஊனம் என சொல்லறதைக் கேட்டு மனசு சங்கடப்படாதவங்க, நான் எழுதியதை நினைச்சு சங்கடப்படப் போறாங்களா? நான் எழுந்தினதைப் படிச்சா இன்னைக்கு மனசுக்குக் கஷ்டமா இருக்கும். ஆனால் சீக்கரமே நல்லாச் செய்யணும் என்கிற உத்வேகம் வரும்.
எதையும் சாதிக்கணும் அப்படிங்கற எண்ணம் மட்டும் இருந்தாப் பத்தாது.. எதையும் எதிர்கொள்ளணும் என்கிற தைரியமும் வேணும். அதை ஒரு அண்ணனா நீங்க தான் அவங்களுக்குச் சொல்லிக் கொடுக்கணும். அதை விட்டுட்டு முள் குத்திடுச்சுன்னு முள்ளை வெட்ட வர்றீங்க” என்றாள் சம்யுக்தா.
அவள் சொல்லிய வார்த்தைகள் வீரியமிக்கதாக இருந்தாலும், முகத்தில் எவ்விதக் கோபத்தையோ எரிச்சலையோ சம்யுக்தா காட்டவில்லை. அன்று சித்தார்த்திடம் அவனைப் புரிய வைக்கப் பேசிய பொழுது காட்டிய அதே இனிமையும், பரிவுமே இருந்தது.
அவளது நிதானமான, தெளிவான பேச்சில், சக்தி என்ன சொல்வது எனத் திருதிருவென்று முழிக்க,
“அதைப் போய் முதல்ல உங்க தங்கைக்குக் கத்துக் கொடுங்க. தங்கை அழுதான்னு கிளம்பிவந்துட்டார். இன்னைக்கு நான்.. நாளைக்கு வேற யாரோ” என்றாள் சம்யுக்தா.
அவள் சொன்ன விஷயம் ஆணி அடித்தாற் போல் மனதில் பதிந்தாலும் அதை ஒத்துக் கொள்ள சக்திக்குச் சற்றும் மனமில்லை.
‘தன் நண்பன் நந்தகுமார் சொல்லியே கேட்கவில்லை. நீயெல்லாம் எம்மாத்திரம்?’ என நினைத்த சக்தி, “அந்தக் கதிர்கிட்டே காசு வாங்கிட்டு இதுவும் பேசுவ.. இன்னமும் பேசுவ” என விடாமல் சண்டை இழுத்தான்.
“கதிரைப் பத்தி பேச உங்களுக்கு எந்த உரிமையும் இல்ல. அவர் தங்கையோட உணவகத்துக்குப் போகச் சொன்னார். ஆனால் அதைப் பத்தி எழுதினது என் சொந்த யோசனை. அப்படி ரோசம் இருக்கறவங்களா இருந்தா அதைச் சுவையில் காட்டுங்க. ” என்றாள் சம்யுக்தா.
சற்றுநேரம் அவளையே உறுத்து விழித்தவன், “இதுக்கெல்லாம் நல்லா அனுபவிப்படி” எனச் சொல்லிவிட்டுக் கிளம்பினான்.
“இவரு பெரிய துர்வாச முனிவர்.. சாபம் விட்ட உடனே பலிச்சிடும்” என சம்யுக்தா சித்தார்த்திடம் சொல்லிச் சிரித்தாள்.
இது தான் சம்யுக்தா. எப்பொழுதுமே ஜாலியாகப் பேசிக்கொண்டும் செயல்பட்டுக் கொண்டும் இருப்பாள். அதே போல் தன் மனதில் உள்ளதைப் பட்டென்று உடைத்துப் பேசிவிட்டு, பின்னர் வேலையைக் கவனிக்கச் சென்றுவிடுவாள்.
அதையே தொங்கிக் கொண்டு, அலசி ஆராய்ந்து, மேலும், மேலும் நேரத்தை விரயம் செய்யவும் மாட்டாள். தன் மனநிலையைக் கெடுத்துக் கொள்ளவும் மாட்டாள்.
“ச. சம்யு, அந்தப் பெ.பெண்ணை நினைச்சா பா.. பாவமா இல்லையா உனக்கு?” எனச் சித்தார்த் வருத்தப்பட,
“வருத்தம் நிறைய இருக்கு தான். ஆனால் சின்ன விஷயத்துக்கு அந்தப் பொண்ணு அழுததுன்னு, தைரியம் சொல்லாமல் நம்ம கிட்டே வந்து சண்டைப் போட்டா அப்புறம் அந்தப் பொண்ணு பெரிய சிக்கலை எப்படி எதிர்கொள்ளும்? யோசிக்க வேண்டாம்?” என்றாள் சம்யுக்தா.
தோழி சொன்னதில் உள்ள அர்த்தம் புரிய, “சாரி சம்யு.. நா..நான் தானே உன்னை அப்படி எ..எழுதச் சொன்னேன். க்.கோபம் வராத உனக்கே க்.கோபத்தை வரவச்சுட்டான்” என மன்னிப்பை வேண்டினான் சித்தார்த்.
“நீ எழுதச் சொன்னாலும், நானும் உடன்பட்டுத் தானே எழுதினேன். யாரும் அப்படி வந்து என் மூடை ஸ்பாயில் பண்ணமுடியாது. என் மூடை நான் மட்டுமே ஸ்பாயில் பண்ண முடியும்” என்றவள், “இப்போ உனக்குத் தலைவலி எப்படி இருக்கு?” என்றாள் அக்கறையுடன்.
“பரவாயில்லை. ரொம்ப வெளிச்சமா இருக்கு. ஸ்க்ரீனை இழுத்துவிட்டுட்டு வேலை செய்யறேன்” எனச் சித்தார்த் சொல்ல, சம்யுக்தா தன் வேலையில் கவனம் செலுத்தினாள்.
சித்தார்த்துக்கு எப்பொழுதாவது மைக்ரைன் என்னும் ஒற்றைத் தலைவலி வரும். அப்படி வரும்பொழுது, வேலையில் கவனம் செலுத்த முடியாமல் திணறுவான். அப்பொழுது பேசும் பொழுது டென்ஷன் ஏறி அவன் வார்த்தைகளும் திக்கி வெளிவரும்.
அப்படி அவன் லேசாகத் தலை வலிக்கிறது என சம்யுக்தாவிடம் சொல்லவும் தான் நகைச்சுவையாகப் பேசி, அவனைத் திசைத் திருப்பிக் கொண்டிருந்தாள். ஆனால் அதே சமயத்தில் சக்தி வரவும், சத்தம் போட்டதும் சித்தார்த்தின் தலைவலி தீவிரம் அடைய, பேச்சும் திக்க ஆரம்பித்தது.
ஆனால் அனைத்தையும் இப்போது ஒதுக்கிவிட்டு இருவரும் வேலையில் ஆழ்ந்தனர்.
Author: SudhaSri
Article Title: அத்தியாயம் -11
Source URL: Nectar Novels-https://nectarnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Article Title: அத்தியாயம் -11
Source URL: Nectar Novels-https://nectarnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.