அத்தியாயம் - 13
தன் அலுவலகத்தில் வேலையாக இருந்த சம்யுக்தாவின் அலுவலக எண்ணுக்கு அழைப்பு வர அதை எடுத்து, “எஸ். சதா பேசறேன்” என்றாள்.“வந்து. நான் வெண்மதி” என மறுமுனையிலிருந்த குரல் பிசிறடித்தது. யார் என்று சம்யுக்தா யோசிக்கும் பொழுதே, “நீங்க எழுதின ரெஸ்டாரன்ட் ‘மூன்லைட்’ என்னோடது தான்” என்றாள்.
“ஓஹ். சொல்லுங்க.. எப்படி இருக்கீங்க?” என்ற சம்யுக்தாவின் கேள்விக்கு பதிலளிக்காமல் தான் அழைத்த காரணத்தைச் சொன்னாள்.
“சாரி. என்னால தான் அண்ணன் உங்கமேலே கோபப்பட்டார். நீங்கச் சொன்ன மாதிரி இந்தச் சின்ன விஷயத்துக்கு அண்ணன்கிட்டே போயிருக்கக் கூடாது. இன்னைக்குச் சாயந்திரம் ரெஸ்டாரன்ட் வர்றீங்களா?” என்றாள்.
பரவாயில்லையே தான் சொன்னவுடன் அந்தப் படபடப் பட்டாசு தன் தங்கையிடம் பேசியிருக்கிறான் என சம்யுக்தா நினைக்க, “அன்னைக்கு அண்ணன் ஃபோனைக் கட் பண்ணலை. ஸ்பீக்கரை மட்டும் ஆப் பண்ணிட்டாங்க போல. நீங்க பேசினது எல்லாம் கேட்டது” என்றாள் வெண்மதி.
‘அதானே பார்த்தேன்.. அவனாவது புஸ்வாணமாகிறதாவது..’ என எண்ணிய சம்யுக்தா, “சாரி. உங்களை ஹர்ட் பண்ணனும் என்ற நோக்கத்தில் அப்படிச் சொல்லலை.. இது தான் எதார்த்தம் எனப் புரிய வைக்க நினைச்சேன்” எனச் சம்யுக்தா மன்னிப்பை வேண்டினாள்.
“புரியுது. என்னவோ தெரியலை, உங்க குரலைக் கேட்டா என் மனசுக்கு இதமா இருந்தது. உங்களை நேர்ல பார்க்கணும் போலிருக்கு.. ‘ப்ளீஸ்’ இன்னைக்குச் ரெஸ்டாரன்ட் வாங்க?” என்றாள் வெண்மதி.
தெரிந்தவர்கள் அனைவரும், ‘உன் குரலில் ஏதோ ஒரு மாயம் இருக்கிறது’ எனச் சம்யுக்தாவிடம் சொல்வது தான். ஆனாலும் முன்பின் தெரியாதவள், அதுவும் ஓர் பெண் இப்படிச் சொல்லவும், அந்தப் பெண்ணைப் பார்க்கும் ஆவல் சம்யுக்தாவினுள்ளும் தலைத்தூக்கியது.
சற்றுநேரம் அவளிடம் பேசிவிட்டு, “கண்டிப்பா வர்றேன்” என நேரத்தைக் குறித்துக் கொண்டு அழைப்பை வைத்தாள் சம்யுக்தா.
பேசி முடித்த சம்யுக்தா, சித்தார்த்திடம் விஷயத்தைச் சொல்லி, “சித்து, தனியாப் போக எப்படியோ இருக்கு. நீயும் வர்றியா?” எனத் தோழி கேட்டதும், உடனே சரியென்றான்.
“சித்து, அந்தப் பெண் வெண்மதி நல்ல பொண்ணாத் தான் தெரியறாங்க. கதிர் மாதிரியே. என்ன அண்ணன் மட்டும் தான் ‘தைய தக்க’ என்று குதிக்கிறாங்க” என்றாள்.
“டோன்ட் வொர்ரி. அந்த அண்ணனுக்கு இரண்டு சலங்கை வாங்கிக் கொடுத்துட்டு நம்ம ஓரமா உட்கார்ந்து அதை என்ஜாய் செய்யலாம்” என்ற சித்தார்த்தின் கேலியில் சிரித்தாள் சம்யுக்தா.
அவள் பெங்களூரு சென்றுவிட்டு வந்ததுமே கதிரைப் பற்றி சித்தார்த்திடம் சொல்லியிருந்தாள். அதனால் அவனுக்குக் கதிரைப் பற்றி நன்றாகத் தெரியும். அத்தோடு அவன் செய்த நிகழ்ச்சிப் பற்றியும் சொல்லியிருந்தாள்.
வெண்மதியைப் பற்றி எழுதிய அதே இதழில் நான்காம் பக்கத்தில் கதிரின் நிகழ்ச்சியைக் குறித்தும் ஓர் செய்தி எழுதிருந்தாள் சம்யுக்தா. அதைப் பார்த்துத் தான் அன்று கதிர், சக்தியை அழைத்து, ‘இன்றைக்குப் பேப்பர் பார்த்தீங்களா?’ எனக் கேட்டான்.
ஆனால் நம் காரச் சட்னி தான் இரண்டாம் பக்கத்தைக் கூடத் தாண்டவில்லையே. பின்னர் எப்படி அந்தச் செய்தியை வாசித்திருப்பான்?
‘வெண்மதியின் அண்ணன் எனச் சொன்னானே கதிர். ஆனால் சக்தி தம்பிப் பெயரைக் கேட்டாலே அப்பளமா குதிக்கிறார். இதைப் பற்றி வெண்மதியிடம் கேட்க வேண்டும்.’ என மனதுக்குள் நினைத்துக் கொண்டாள் சம்யுக்தா.
யோசனையில் இருந்த சம்யுக்தாவைப் பார்த்த சித்தார்த், “என்ன சம்யு அமைதியாயிட்ட?” எனக் கேட்க, “காய்கறிகள் அழுகாம இருக்கணும்னா என்ன செய்யணும்?” என சம்யுக்தா கேட்க,
“ம்ம்ம். பிரிட்ஜ்ல வைக்கணும்” என்றான்.
“அந்தக் காலத்துல எல்லாம் எங்கேடா பிரிட்ஜ்? நல்லா நாலு ஜோக் சொல்லி, சிரிக்க வைச்சா அது அழாது” என்றாள்.
“ஐயோ தாங்கலை. ஆளை விடு” எனப் பெரிய கும்பிடு போட்ட சித்தார்த், ‘இனிமேல் அவ கிட்டே வாயைக் கொடுப்பே.’ என அவன் சுட்டுவிரலைத் தன்னை நோக்கிச் சுட்டிக்காட்டிக் கேட்டுக் கொண்டான். இருவரும் சிரித்துக் கொண்டே வேலையில் ஆழ்ந்தனர்.
சொன்னதைப் போலவே சித்தார்த்தும், சம்யுக்தாவும் அன்று மாலை ‘மூன்லைட்’ உணவகம் சென்றடைய, ஓர் இளம் பெண் வரவேற்பிலேயே காத்திருந்தாள்.
அவளைப் பார்த்த சித்தார்த்தோ, “ஹே, அவ மதி தானே?” எனக் காணாததைக் கண்டுவிட்டதைப் போல் மகிழ்ச்சியில் துள்ளினான்.
“மதியைப் பார்க்கத் தானேடா வந்தோம். பின்னே மதியில்லாமல் சதியா? ஒழுங்கா மரியாதைக் கொடுத்துப் பேசுடா” எனச் சன்னக்குரலில் அவனை சம்யுக்தா பரிகாசம் செய்தாள்.
“ஷ்” என சம்யுக்தாவை அடக்கிய சித்தார்த், “மதி, எப்படி இருக்க?” என்றான். வெண்மதியும், “சித்து?” என அவனை விழியகல அதிசயமாகப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
வெண்மதி சித்தார்த்துக்குத் தெரிந்தவள் போலிருக்கிறது. அவர்கள் பேசட்டும் என அமைதியாக வெண்மதியை எடை போட்டுக் கொண்டிருந்தாள் சம்யுக்தா.
சுரிதார் அணிந்து மிகவுமே சின்னப் பெண்ணாக காட்சியளித்த வெண்மதியின் முகம், முழுமதியைப் போலவே இருந்தது. ஆனால் அந்த நிலவில் உள்ள களங்கம் போலவே கண்கள் காட்சியளித்தன.
கண்களில் கலக்கம் குடிகொண்டிருக்கிறது.. அதையும் மீறி சித்தார்த்தைப் பார்த்துச் சிரிக்கிறாள் எனப் புரிந்தது சம்யுக்தாவுக்கு.
சித்தார்த் முதுகலைப் பட்டப் படிப்புப் படித்த அதே கல்லூரியில் தான் வெண்மதியும் இளங்கலை படித்தாள். வெண்மதிக்கும் நாட்டியமாடுவதில் அலாதிப் பிரியம் உண்டென்பதால் முறையாக நடனம் கற்றிருந்தாள். கல்லூரி விழாக்களில் வெண்மதியின் நடனம் இல்லாமல் இருக்காது.
அதனால் கல்லூரியில் பெரும்பாலோனோருக்கு அவளைத் தெரியும். சித்தார்த் அந்தச் சமயத்தில் முதுகலை மாணவர்களின் தலைவனாக இருந்ததால் வெண்மதிக்கும் அவனை நன்கு பரிச்சயம்.
வெண்மதியைப் பார்த்த உற்சாகத்தில், சித்தார்த் கல்லூரிக் கதைகளைப் பேசிக் கொண்டிருக்க வெண்மதியும் அவனுடன் அதையெல்லாம் அசைப்போட்டுக் கொண்டிருந்தாள்.
‘இனிமையாப் பேசற உங்க குரலைக் கேட்டுட்டே இருக்கலாம் போல இருக்கு.. உங்களைப் பார்க்கணும்’ என்று சம்யுக்தாவிடம் சொன்னதையெல்லாம் விழாக்காலத் தள்ளுபடியாக மறந்தே போயிருந்தாள் வெண்மதி.
“சித்து, ஏண்டா, எனக்கு வர்ற மாலையை நீ இடையில் வந்து வாங்கிக்கிற. சீஃப் கெஸ்ட்டா இருக்க வேண்டியவளை சீப் கெஸ்டா மாத்திட்ட” என சம்யுக்தா சொல்லவும், வெண்மதியின் பற்கள் பளபளத்தன. அவள் சிரிக்க, இன்னுமே அழகாகத் தோன்றினாள்.
உணவகத்தில் வேலை செய்தவர்கள் கூட, ‘முதலாளியம்மா சிரிக்குதே.’ என அதிசயமாக அவளைப் பார்த்தனர்.
“சாரி. அப்படியில்லை. இவரைப் பார்த்து ரொம்ப நாளாச்சு. அதான். வாங்க உட்கார்ந்துட்டுப் பேசலாம்.” என வெண்மதி முன்னே நடக்க, இவர்கள் பின் தொடர்ந்தனர். நடக்கும் பொழுது தான் வெண்மதியை கவனித்தாள் சம்யுக்தா. இடது காலைச் சற்று சாய்த்து, சாய்த்து கஷ்டப்பட்டு நடந்து கொண்டிருந்தாள்.
அந்த விஷயம் அப்பொழுது தான் இருவரின் கருத்தில் பதிந்தது. அன்று சக்தியும், ‘ஒரு கால் ஊனமான பெண்ணை நோகடிச்சுட்டீங்க இல்ல.’ என்று சொன்னானே. சித்தார்த் கலக்கத்துடன், ‘இவளால் இனி நடனமாட முடியாதா?’ எனச் சம்யுக்தாவைப் பார்க்க, அவள் நினைத்ததையே சித்தார்த்தும் யோசிக்கிறான் எனப் புரிந்தது.
“இவங்களை எப்படித் தெரியும்?” என இயல்பாக சம்யுக்தா, சித்தார்த்தின் காதைக் கடிக்க, அவனும் தன் கொசுவர்த்திச் சுருளை ஏற்றிவைத்தான்.
ஓர் மேஜையருகே, ‘முன் பதிவு செய்யப்பட்டது’ என ஆங்கிலத்தில் எழுதியிருக்க, அதன் அருகில் நின்ற வெண்மதி, “தப்பா நினைச்சுக்காதீங்க. உங்களை நின்னு உபசரிக்கத் தான் ஆசை. ஆனால் ரொம்ப நேரம் நிற்கமுடியாது” என வெண்மதி அமர நினைக்க,
சம்யுக்தா பதில் சொல்லும் முன்னால், “என்ன மதி இப்படிச் சொல்லற? நீ தான் இன்னைக்கு என் கெஸ்ட்” என அவளுக்கு நாற்காலியை இழுத்துப் போட்டான் சித்தார்த்.
‘ஒருநாளாவது எனக்கு நீ இப்படிச் சேரை இழுத்துப் போட்டிருப்ப?’ என சம்யுக்தா சித்தார்த்தை முறைக்க, ‘கண்டுக்காத.’ என அவனும் கண்களாலேயே பதிலளித்தான்.
சித்தார்த்தும், சம்யுக்தாவும் நெருங்கிப் பழகுவதைப் பார்த்த வெண்மதி, “இவர் உங்களுக்குச் சொந்தமா?” எனக் கேட்க, “ம்ம்ம்ம். உடன் பிறக்காத அண்ணன்” எனப் பதிலளித்தது சம்யுக்தாவை முந்திக் கொண்ட சித்தார்த்.
சம்யுக்தா இப்போது சுவாரசியத்துடன் நண்பனைப் பார்க்க, அவனோ இவளைக் கண்டு கொண்டதாகவே தெரியவில்லை.
“சாரி. அண்ணன் கொஞ்சம் முன்கோபக்காரர். மத்தபடி ரொம்பவும் நல்லவர்” என வெண்மதி சக்தியைப் பற்றிய பேச்செடுக்க, “ச்சே.. ச்சே. நான் தப்பா எடுத்துக்கவேயில்லை” என மீண்டும் சித்தார்த்தே பதிலளித்தான்.
‘அடப்பாவி. இவளோட அண்ணன் வந்து திட்டினது என்னை. சண்டைப் போட்டது என்கிட்டே. வெண்மதி மன்னிப்புக் கேட்டது என்கிட்டே. இவன் தப்பா எடுத்துக்கலையா?’ என சம்யுக்தா நண்பனை மனதில் திட்டிக் கொண்டிருந்தாள்.
“சம்யு எப்பவும் அப்படித் தான். எல்லாத்துலேயும் பெர்பெக்ட்டா இருக்கணும் என நினைப்பா. கொஞ்சம் அப்படி, இப்படி இருந்தா அட்ஜஸ்ட் பண்ணிக்கமாட்டா. பாவம் அவளைக் கட்டிக்கிறவர். நான் கூட உங்க ‘ஃபூட் டேஸ்ட்’ நல்லா இருக்குதுன்னு சொன்னேன்.
ஆனா இவ கேட்கலையே. சம்யு எழுதினதையெல்லாம் மனசுல வச்சுக்காதீங்க.” என அப்படியே தட்டைத் திருப்பிப் போட்டான் சித்தார்த்.
‘அடப்பாவி. அன்று அவன் பேசியது என்ன? இன்று இப்படி பல்டி அடித்துவிட்டானே.’ எனச் சித்தார்த்தைப் பார்த்து முறைப்பை பார்சல் செய்ய, அவன் பார்த்தால் அல்லவா, பெறுநர் முகவரிக்கு அது முறையாகச் சென்றடைய?
சித்தார்த்தின் பார்வை தான் விடுமுறையில் வெண்மதியுடன் விண்வெளிக்குச் சென்றுவிட்டதே..
‘ஏண்டா, என்னைத் தானே மதி வரச் சொன்னாங்க. நடுவுல வந்து மதிக்கு ராக்கெட் விட்டுட்டு இருக்கிற. தனியா சிக்காமப் போயிடுவியா?’ என நினைத்துக் கொண்டே உணவருந்தினாள் சம்யுக்தா.
இன்று உணவில் கூடுதல் சுவை இருப்பதாகவே பட்டது சம்யுக்தாவுக்கு. அன்று சம்யுக்தாவைப் பார்க்கவேண்டும் எனச் சொல்லியிருந்தாலும் பெரும்பாலும் பேச்சை வெண்மதியும், சித்தார்த்தும் பேசிக் கொண்டிருந்தனர்.
சித்தார்த், அவன் சுயசரிதையைச் சொல்லிக் கொண்டிருந்தான். இடையில் வெண்மதி சம்யுக்தாவிடம் பேச நினைத்தாலும் சித்தார்த் விட்டால் அல்லவா? எல்லாவற்றிலும் இடையில் குதித்து, பதிலளித்து சம்யுக்தாவைப் பேசவே விடவில்லை.
‘உனக்கு என்ன நடந்தது?’ என சித்தார்த் தன்னிடம் கேட்காதது வெண்மதிக்கு மிகவும் ஆறுதலாக இருந்தது. இந்தக் கேள்வியைத் தவிர்க்க எண்ணியே அனைவரிடம் இருந்தும் தன்னை மறைத்துக் கொண்டாள்.
நன்றாகக் குதித்து ஆடிக் கொண்டிருந்த தனக்கு இப்படி ஓர் நிலை ஏற்பட்டுவிட்டதே என்ற சுய பச்சாதாபத்தில் ஆரம்பத்தில் நடமாடிக் கொண்டிருந்தாள். பொழுது போக வேண்டும் என்று அவள் அண்ணன் சக்தியின் நிழலில் தான் ஏதோ இந்த உணவகத்தை ஆரம்பித்தாள். அதிலும் அவளுக்குப் பெரிதாக எந்த வேலையும் இல்லை.
வெறும் மேற்பார்வை மட்டுமே. ஆனால் இத்தனை நாட்களாக அல்லாமல் இன்று வெண்மதியின் உள்ளம் பூரிப்படைந்திருந்தது. அது சித்தார்த்துடன் கடந்த காலத்தைப் பற்றி அலசியதால் என்று அவளுக்குப் புரிந்தது.
அதனால் இன்முகத்துடன், “அடிக்கடி நீங்க வரணும்” என வெண்மதி சொல்லவும், “பின்னே நாங்க வராமலா?” என விடை பெற்றான் சித்தார்த்.
அவனுமே அன்று உற்சாமாக இருந்ததைப் போல் பட்டது சம்யுக்தாவுக்கு. உணவகத்தை விட்டு வெளியேறியதும், “ஏண்டா, நான் எப்போ உனக்கு தங்கச்சி ஆனேன்?” என சம்யுக்தா கேட்க,
“லைப்ல இதெல்லாம் சகஜம்டா தங்கச்சி. ரொம்பவும் பீல் பண்ணக்கூடாது” என்றான் சித்தார்த்.
அவளுக்குச் சித்தார்த்தின் மனநிலை புரிய, “அவனவன், பிகரைப் பார்த்து பிரெண்டை கழட்டிவிடுவாங்க. உன்னோட இன்ஸ்டண்ட் லவ்வுக்காக இன்ஸ்டண்டா ஒரு தங்கச்சியைத் தத்து எடுத்து, அவளைக் கழட்டிவிடற. ” என்றாள்.
“அண்ணியா வரப்போறவங்களை பிகர்ன்னு எல்லாம் தப்பாப் பேசாத” என்றான் சித்தார்த்.
“அண்ணியா?” என சம்யுக்தா வாயைப் பிளக்க, “உன்னை விட சின்னப்பொண்ணு தான். ஆனா என்னப் பண்ணறது? உனக்கு அண்ணியாயிட்டாளே” என்றான் சித்தார்த்.
“ஏண்டா ஒரு ரெண்டு மாசம் எனக்கு முன்னாடி பிறந்திருப்பியா? சரி. வெண்மதி எனக்கு அண்ணி ஆகறது இருக்கட்டும். அந்த துர்வாச முனிவர் உனக்கு மச்சானா வருவானே.. அதைப் பத்தி யோசிச்சியா?” என்றாள் சம்யுக்தா.
பட்டென்று சம்யுக்தாவின் கையைப் பற்றிய சித்தார்த், “தங்கச்சி, அதுக்கு நீ தான் ஹெல்ப் பண்ணனும்” என்றான்.
“என்னடா? அந்த துர்வாச முனிவரை நான் கல்யாணம் பண்ணிக்கணுமா? அதுக்கு நீ வேற ஆளைப் பாரு” என்றாள் சம்யுக்தா.
“என்ன சம்யு இப்படிச் சொல்லற? நான் வேற ஆளைப் பார்க்கிறது எல்லாம் முடியாது. துர்வாச முனிவரை மயக்கிக் கைக்குள்ள போட்டுக்கணும். பிளான் பண்ணலாம்” எனச் சித்தார்த் பாவமாகச் சொல்லவும், சம்யுக்தாவுக்குச் சிரிப்பு வந்துவிட்டது.
உடனே, “உனக்கும் அவருக்கும் தானே பிரச்சனை? அதில் தலையிட நான் யாரு. நீயே உன் விஷயத்தைப் பார்த்துக்கோ” எனத் திடீரென்று சித்தார்த் பல்டியடிக்க, “அடப்பாவி. உன்னையெல்லாம் நம்பினா அவ்வளவுதான்” என அவன் முதுகில் இரண்டு அடி வைத்து சம்யுக்தாவும் சிரித்தாள்.
“எனக்கு மதியை காலேஜ் படிக்கறப்பவே பிடிக்கும். ஆனா அப்போ அதைப் பற்றி யோசிக்கிற வயசில்லை. ஆனால் இப்போ அவளை இப்படிப் பார்த்ததுக்கு அப்புறம் இனி அவளைத் தவிர வேற நினைப்பில்லை” என்றான் சித்தார்த் ஆத்மார்த்தமாக.
“நல்லாப் பேசறதுக்குக் கத்து வச்சிருக்கிற” எனச் சொன்ன சம்யுக்தா, சித்தார்த்தின் இந்தத் திடீர் பல்டியால் கதிரைப் பற்றிக் கேட்க வேண்டும் என நினைத்ததை மறந்தே போனாள்.
Author: SudhaSri
Article Title: அத்தியாயம் - 13
Source URL: Nectar Novels-https://nectarnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Article Title: அத்தியாயம் - 13
Source URL: Nectar Novels-https://nectarnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.