• ஹாய் மக்களே! நம் Nectar Novels தளத்திற்கு நல்வரவு🙏😍😍 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள் nectarnovels.ss@gmail.com 🩷 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...👇 வேதா விஷால் & அனன்யா🙏💖

அத்தியாயம் -14

SudhaSri

Administrator
Staff member
Jun 16, 2024
488
40
43
india
அத்தியாயம்- 14
புருஷோத்தமனையும் விஜயனையும் தேடிக் காட்டிற்குள் அனுப்பப்பட்ட படைகள் சில மாதங்கள் கழித்தும் எதையும் கண்டு பிடிக்க முடியாமல் திரும்பின. அவர்கள் எங்குச் சென்றனர் என்ற தடயமே கிடைக்கவில்லை. இவ்வகை நிகழ்வுகளை நீண்ட காலம் மறைத்து வைக்க இயலாது. அதனால், அவந்தியின் மகாசாமந்தன் பாண்டுகாவும் சேனாதிபதி சிசுபாலனும் மகத அரசவைக்கு அழைக்கப்பட்டனர். இருவருமே நந்தனின் சகோதரர்கள்.
விவாதம் நடந்த இடம் நந்தனின் தனியறை. அரசனின் சுவைக்கேற்பச் செம்மையாக அலங்கரிக்கப்பட்டிருந்தது. நிர்வாகம் தொடர்பான விவகாரங்களைப் பற்றி ஆலோசிக்க அமைச்சர்களுக்கென அமைக்கப்பட்ட அறை அது. அந்தச் சந்திப்பின் முக்கியத்துவத்தைப் பிரதிபலிப்பது போல் அங்கிருந்த அனைவரின் மனநிலையும் கடுமையாக இருந்தது.
“அவந்தி ஜனபதத்தில் உங்கள் ஆட்சி தொடர்ந்து தோல்வியடைந்து வருவது பற்றி உங்கள் கருத்து என்ன?” என்று நந்தன் பாண்டுகாவைப் பார்த்துக் கேட்டான்.
“எங்கள் பேரரசின் எல்லைகளை விரிவுபடுத்துவதற்காக முடிந்தவரை முயற்சித்து வருகிறோம், அரசே” என்று பாண்டுகா தன்னைப் பாதுகாத்துக் கொள்ள முயன்றான்.
“நீங்கள் எதைச் சாதிக்க முயல்கிறீர்கள் என்பது எனக்குத் தெளிவாகப் புரிகிறது. ஆனால் மாகாண வருவாயில் எந்த உயர்வும் இல்லை. உங்கள் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் நிலப்பகுதிகளில் கிளர்ச்சிகளையும் அடக்க முடியவில்லை” என்று பூதபாலன் கடுமையாகச் சொன்னான்.
“அது எதிர்பாராத நிகழ்வு” என்று பாண்டுகா வலியுறுத்தினான்.
“எதிர்பாராத நிகழ்வு தவிர்க்க முடியாததல்ல. உங்கள் அகந்தையும் முடிவெடுக்கத் தயங்கும் நிலையும், உங்கள் முட்டாள்தனமான சேனாதிபதியின் ஆணவமும் காரணமாகவே அது நிகழ்ந்தது” என்று பூதபாலன் மேலும் கடுமையாகக் கூறினான்.
“அந்தப் பணியை நிறைவேற்றச் சொன்னபோது, அந்தக் குடும்பத்தின் அனைத்து உறுப்பினர்களும் அங்குள்ளார்களா என ஏன் உறுதி செய்யவில்லை?” என்று நந்தன் கூர்மையாகக் கேட்டான்.
தன் மாகாண விவரங்கள் இவ்வளவு தெளிவாக அரசவைக்கு எட்டியிருப்பது பாண்டுகாவை அதிர்ச்சியடையச் செய்தது. குற்றம் தன்னிடமே இருப்பதால், அமைதியாக இருந்து கேள்விகளுக்குப் பதிலளிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
“உங்கள் குறுகிய பார்வையால் அந்தப் பகுதிகளில் எழுந்த கலகங்களை அடக்க ஒரு வாய்ப்பை இழந்தோம். அடிப்படை நிர்வாக அறிவே இல்லாமல் நீங்கள் எப்படி ஒரு மாகாணத்தை ஆளப் போகிறீர்கள்?” என்று பூதபாலன் கடுமையாகக் கேட்டான்.
“நிர்வாகமும் போரும் பற்றி உங்களுக்கு என்ன தெரியும்? நீங்கள் எல்லாம் அறிந்தவரென்றால், ஏன் எல்லைப் பகுதிகளை நீங்கள் நேரில் சென்று கையாளவில்லை? தூரத்தில் இருந்து அறிவுரை கூறுவது எளிது. செயல்படுவது கடினம். அரசரின் ஆணைப்படி, அந்தத் துரோகியை கொன்ற அதே நாளில் அவன் குடும்பத்தையும் நாம் தாக்கினோம். அவர்கள் அனைவரும் வீட்டில் இருப்பார்கள் என்ற தகவல் எங்களுக்குக் கிடைத்திருந்தது. ஆனால் அந்த இருவர் வேட்டைக்குச் சென்று விட்டனர். நான் அதை எப்படிக் கணித்திருக்க முடியும்?” என்று பாண்டுகா சீறினான்.
நந்தன் அவர்களுக்குள் உருவாகும் பிளவை உணர்ந்தான். இது நீடித்தால் மோசமான விளைவுகள் ஏற்படலாம் என்பதைப் புரிந்து கொண்டான். பின்னர், “அந்தத் தப்பியோடிகள் மீண்டும் உங்கள் நிலப்பகுதிக்குள் நுழைய முயன்றால், அவர்களின் முடிவு என்னவென்று அவர்களுக்கு விளங்கட்டும்” என்றான்.
பாண்டுகா தலை ஆட்டினான். “அவந்தியின் மகாசாமந்தராக இருப்பது எளிதான பொறுப்பு அல்ல அரசே. உங்களது அருளால், சிசுபாலனும் நானும் பல கிளர்ச்சிகளை அடக்கி வருவாயையும் வசூலையும் மேம்படுத்தியுள்ளோம். இப்போது அந்தக் கலவரப் பகுதிகளைக் கவனிக்க ஆற்றல் மிக்க ஒருவரை அனுப்பலாம்” என்றான்.
நந்தன் பாண்டுகாவை நோக்கி, “உனக்கு இரண்டு ஆண்டுகள் தான் அவந்தியின் மகாசாமந்தராக முடிந்திருக்கிறது. அந்தப் பதவியை உறுதிப்படுத்த இன்னும் நீ தலைநகரில் அதிக நேரம் செலவிட வேண்டும்” என்றான்.
“அரசே, தென்மேற்கு எல்லைப் பகுதிகளில் இரண்டு ஆண்டுகள் பணிபுரிவது, வேறு எந்த மகாஜனபதத்திலும் இருபது ஆண்டுகள் பணிபுரிந்ததற்குச் சமம். இந்தக் காலத்தில் இருபதுக்கும் மேற்பட்ட போர்களில் ஈடுபட்டோம். பலவற்றில் வென்றோம். பல வீரர்களையும் இழந்தோம். இப்போது நான் சோர்ந்து விட்டேன்; ஓய்வு வேண்டும்” என்று பாண்டுகா தன் சகோதரனும் அரசனுமாகிய நந்தனை வேண்டிக் கேட்டான்.
அவன் தொடர விரும்பவில்லை என்பதை உணர்ந்த நந்தன், அந்தப் பொறுப்பை இனி அவன் மீது திணிப்பதில் பயன் இல்லை என்று உணர்ந்தான்.
“நீ சொல்வது சரி. நீ பாடலிபுத்திரத்துக்குத் திரும்பி தினசரி நிர்வாகத்தில் எனக்கு உதவு,” என்று அவனிடம் கூறினான்.
----------------------------------
காலம் செல்லச் செல்ல, புருஷோத்தமனும் விஜயனும் காட்டில் உயிர் பிழைப்பதையே தங்கள் முதன்மை நோக்கமாகக் கொண்டனர். அந்தச் சூழலில் சத்யஜித்தும் அவர்களுக்குப் பெரும் துணையாக இருந்தான். அவன் அறியாமலேயே அவர்களை எதிர்காலம் பற்றிய சிந்தனையிலிருந்து விலக்கி, உடனிருந்த அபாயங்களை எதிர்கொள்வதில் கவனம் செலுத்தச் செய்தான்.
காட்டின் மறுபுறம் கொள்ளையர்களோடு நீண்ட நாட்கள் பயணித்திருந்தவன் அவன். அவர்களோடு வாழ்ந்து, காட்டில் உயிர் பிழைக்கும் முறைகளைக் கற்றுக் கொண்டிருந்தான்.
சிறிது காலத்திலேயே, அடியாளாக இருந்த சத்யஜித் ஒரு உடன்பிறப்பு போன்ற இடத்தை அடைந்தான். உண்ணக் கூடிய காய்கறிகள், பழங்கள் எவை, தண்ணீர் கிடைக்கக் கூடிய மரங்கள் எவை என்பதை அடையாளம் காணும் திறன் அவனுக்குக் கூடியது. ஆனால் அவர்களை அனைவரையும் ஒன்றாகக் கட்டிப் பிடித்திருந்த மிகப் பெரும் கேள்வி, எதிர்காலம்.
யாரும் தங்கள் வாழ்நாளின் மீதியைக் காட்டில் கழிப்போம் என்று எண்ணியிருந்தவர்கள் அல்ல. ஆனால் மகதத்திற்குத் திரும்புவதும் ஆபத்து. நந்தனின் படைகளும் அவன் சகோதரனும் அவர்களைத் தேடி அலைந்தனர். மறுபுறம், சத்யஜித் பிரம்மமுகத்திற்குத் திரும்பத் தயங்கினான். உடனடி கைது உறுதி என அவன் நம்பினான்.
விஜயன் தனது அம்புகளைக் கூராக்கிக் கொண்டிருந்தான். முகத்தில் கடுப்புத் தெரிந்தது.
அவன் உடல் மொழியைப் புரிந்து கொண்ட புருஷோத்தமன்,
“என்ன காரணம்?” என்று கேட்டான்.
“எனது வில்லையும் அம்பையும் முயல்களையும் மான்களையும் வேட்டையாடப் பயன்படுத்த வேண்டி வரும் என்று ஒருபோதும் நினைக்கவில்லை” என்று தனது அம்புகளைச் சுட்டிக் காட்டினான்.
“மகத வீரர்களின் இரத்தத்தைச் சுவைக்கத்தான் அவை ஆசைப்படுகின்றன. நீ சொன்னாய்; நாம் ஒளிந்தோம். உன் கட்டளையைப் பின்பற்றினேன். இப்போது நாம் யார்? வீரர்களல்ல. வேட்டைக்காரர்கள், நாடோடிகள். ஒவ்வொரு இடமாகச் சென்று, ஒருவரை ஒருவர் பாதுகாத்து, தினமும் உயிரோடு எழுவது மட்டுமே நோக்கமாக வாழ்கிறோம். இவ்வளவு மாதங்களில் நாம் அடைந்தது என்ன? எனக்குத் தெரியவில்லை.” விஜயனின் குரலில் மிகுந்த வருத்தம்.
இந்தக் கேள்வி உடனடியாகத் தீர வேண்டிய ஒன்றென்று புருஷோத்தமன் உணர்ந்தான், தன் சகோதரன் மகனின் மன உறுதியைக் காக்க.
“நான் உன் பேச்சுடன் ஒத்துக் கொள்கிறேன் மகனே. ஆனால் நாம் எதையும் பெறவில்லை என்று சொல்லாதே. மிக முக்கியமான சாதனை, நாம் இன்னும் உயிருடன் இருக்கிறோம். ஒருபுறம் அடர்ந்த காடு, மறுபுறம் எண்ணற்ற படைகள். இரண்டையும் தவிர்த்து நம்மைக் காத்துக் கொண்டோம். சோதனைகள் கடினமாக இருந்தன. சில மாதங்களுக்கு முன்பிருந்ததை விட இப்போது நாம் பலமடங்கு வலுவானவர்கள். அன்று மகத வீரர்களில் நாலு பேரைக் கொல்ல முடிந்திருந்தால், இன்று நாற்பதைக் கொல்லும் திறன் நமக்கு உண்டு. மகதம் இனி நம்மைப் பின்தொடரவில்லை. இப்போது பிடிபடும் அச்சமின்றி எதிர்காலத்தைத் திட்டமிட முடிகிறது.”
“ஆனால் நம்முடைய நோக்கத்தை நிறைவேற்றாமல் காட்டில் ஒளிந்திருக்கிறோம்” என்று விஜயன் கோபத்துடன் சொன்னான்.
“ஆம். ஆனால் ஏன் என்று புரிந்து கொள்ள வேண்டும்,” என்றான் புருஷோத்தமன்.
“நாம் ஆடுகளல்ல, புலிகள். புலி பயந்து புதருக்குள் ஒளியாது, அது தாக்குவதற்குத் தயாராகும் நிலை. இரையை நோக்கித் தாவும் தருணம் வரைக்கும் தாழ்ந்து காத்திருக்கும். நாமும் வேட்டையாடுகிறோம். விரைவில் நம் நோக்கத்தை அடைவோம்.”
அந்த உரையாடல் சத்யஜித்தை ஆழமாகத் தொட்டது. புருஷோத்தமனை ஒரு தலைவனாக அவன் மதிக்கத் தொடங்கினான். கடந்த மாதங்களில், தீர்மானமான தருணங்களில் எப்படி அவன் செயல்பட்டான், எவ்வாறு அனைவரையும் உயிருடன் காப்பாற்றினான் என்பதை அவன் நேரில் பார்த்திருந்தான்.
ஆனால் அந்தப் பேச்சை அவன் இடையில் நிறுத்த வேண்டியதாகி விட்டது.
மூவரும் திடீரென ஒரு பழங்குடி மக்களின் மத்தியில் சிக்கிக் கொண்டனர். நூற்றுக்கணக்கான பழங்குடியினர், ஈட்டிகள், அம்புகள், கோடரிகளுடன். மரங்களின் மேல், தரையில், எல்லாப் பக்கமும் சூழ்ந்தனர். விஜயனும் புருஷோத்தமனும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.
எதிர்ப்பது பயனற்றது. எண்ணிக்கையில் அவர்கள் முழுமையாகக் குறைவானவர்கள். மரங்களிலுமே மனிதர்கள் இருந்தனர். யாரும் கவனிக்காமல் இவ்வளவு பெரிய கூட்டம் தங்களைப் பின்தொடர்ந்தது பயமுறுத்தியது.
உயிர் பிழைக்க ஒரே வழி இருப்பதை புருஷோத்தமன் உணர்ந்தான். உடனே ஆயுதங்களைத் தரையில் போட்டு, முழங்காலில் அமரச் சொன்னான். அப்படியே செய்தாலும், சிறிதும் இரக்கம் காட்டப்படவில்லை. சரணடைந்த பிறகும் அவர்கள் கை கட்டப்பட்டு கைதிகளாக இழுத்துச் செல்லப்பட்டனர்.
புருஷோத்தமனது மனம் தப்பிக்கும் வழிகளைத் தேடியது.
அவர்களை அடர்ந்த காட்டிற்குள் இழுத்துச் சென்றனர். அங்கே, மழையிலிருந்தும் வெயிலிலிருந்தும் பாதுகாப்பதற்கான தற்காலிக குடிசைகள் நிறைந்திருந்தன.
“நம்மை இங்கே ஏன் கொண்டு வந்தார்கள்?” என்று சத்யஜித் கேட்டான். பயத்தில் மூழ்கி, வார்த்தைகள் தடுமாறின.
“கொல்லப் போகிறார்கள் என்றால், அப்போதே கொன்றிருப்பார்கள். இந்த நீண்ட நடை ஏன்?”
“அப்படிச் செய்தால், நமது உடல்களைச் சுமந்து செல்ல வேண்டி வரும்,” என்று புருஷோத்தமன் அமைதியாகச் சொன்னான்.
“அதைவிட நம்மையே நடக்க வைப்பது எளிது.”
“ஆனால் இறந்த உடல்களை எதற்குச் சுமக்க வேண்டும்? அவர்கள்தான் நம்மிடம் இருந்து எல்லாவற்றையும் எடுத்துக் கொண்டாயிற்றே” என்று சத்யஜித் பதட்டத்துடன் கேட்டான்.
“உனக்கு இப்போது கூடப் புரியவில்லையா?” என்று விஜயன் அதிர்ச்சியுடன் கேட்டான்.
“காட்டில் மனிதர்களை உண்ணும் பழங்குடிகள் பற்றிய கதைகள் கேள்விப்பட்டதில்லையா?”
“அப்படியென்றால்… நம்மை இங்கே கொண்டு வந்தது கொன்று உண்ணவா?” என்று சத்யஜித் பயத்தில் கத்தினான்.
“அவர்கள் குடும்பத்தினருக்கான விருந்தாகவும் இருக்கலாம்” என்று விஜயன் பெண்களையும் குழந்தைகளையும் சுட்டிக் காட்டினான். தூரத்தில் இருந்து அமைதியாகக் கவனித்துக் கொண்டிருந்தார்கள்.
அந்த நிமிடத்தில் சத்யஜித்தின் மனம் சிதறிப் போனது. அவன் அப்படி ஒரு கதையைக் கேட்டிருந்தாலும், அது கண்முன் நடந்தேறும் என்று நினைத்ததே இல்லை. மனிதர்களால் மனிதர்கள் உண்ணப்படுவது. அந்த எண்ணமே அவனை லேசான பரபரப்பிலிருந்து முழுமையான பீதி நிலைக்குத் தள்ளியது. தினமும் காட்டில் மரணம் சாத்தியம் என்று நினைத்தவன். ஆனால் மனிதர்களிடமிருந்து வருவது, அது வேறொரு பயம்.
அவன் கத்தினான். அழுதான். யாரும் கவனிக்கவில்லை. புருஷோத்தமன் தப்பிக்கும் வழிகளைத் தேடினான்.
ஒரு கட்டத்தில் சோர்ந்து போன சத்யஜித், “நீ இவ்வளவு அமைதியாக இருப்பதற்குக் காரணம் என்ன?” என்று கேட்டான்.
“ஏனெனில் எனக்கு வாழ்க்கை பிடிக்கும்,” என்ற புருஷோத்தமன் மேலும் சொன்னான்.
“அவர்களாக நான் இருந்தால், சத்தமாகக் கத்தி எரிச்சலூட்டுகிறாய் என்பதற்காகவே உன்னை முதலில் கொன்றிருப்பேன்.”
அந்த வார்த்தைகள் உண்மை என்பதை சத்யஜித் உணர்ந்த உடனே மௌனமானான். மனதில் தெரிந்த எல்லா மந்திரங்களையும் உச்சரித்து, கடவுளிடம் தன்னை ஒப்படைத்தான்.
புருஷோத்தமன் தன் சகோதரன் மகனை நினைத்து மனம் வருந்தினான். இன்னும் இளம் வயது, வாழ்க்கையில் எதையும் பெறாதவன். பதினெட்டு வயதிலேயே பெற்றோர்களை இழந்து, இப்போது எந்தச் சாதனையும் இன்றி, பெயர் எஞ்சியதாகக் கூட இல்லாமல் மரணிக்கப் போகிறான் என்ற எண்ணம் அவனைப் பதற வைத்தது.
மாலை நேரத்தில், ஒரு கட்டடத்தின் முன் அவர்கள் கட்டப்பட்டனர். உடனே சுற்றிலும் தீப்பந்தங்கள் ஏற்றப்பட்டன. அவர்களுக்கு எதிரே தீ மூட்டப்பட்டது. நடனமும் இசையும் தொடங்கின. அந்த ஒலிகள் மூவருக்கும் மரண அறிவிப்பைப் போலவே கேட்டன. இனி எதுவும் செய்ய முடியாத நிலை. அவர்கள் தங்கள் முடிவை ஏற்றுக் கொண்டனர். காப்பாற்ற வருவதற்கு எவரும் இல்லை.
இது கனவு அல்ல. இப்படித்தான் மரணம் வர வேண்டும் என்ற விதி.
புருஷோத்தமன் ஏன் இப்படிப் போக வேண்டும் எனச் சிந்தித்தான். இனி விரைவில் கடவுளைச் சந்திப்பான். அந்தக் கேள்வியை அங்குக் கேட்க முடிவு செய்தான். குடும்பத்துடன் இறந்திருக்க வேண்டும் என்பதே அவனுக்குச் சிறந்த முடிவாகத் தோன்றியது. சிசுபாலன் தன் மனைவி, மகனுடன் தன்னையும் கொன்றிருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று அவன் எண்ணினான்.
ஊர்மிளாவை நினைத்தான். ஒன்றாகக் கழித்த நாட்கள் மனதில் ஓடின. அனைத்தையும் நினைத்து மனம் சுழன்றபோது, அவனுக்கு அருகில் நடப்பது கவனத்திற்கு வந்தது.
அங்கே ஒரு துறவி வந்தார்.
அந்தத் துறவி மனித பலிச் சடங்கில் பங்கேற்பது அசாத்தியம். அவருக்கும் பழங்குடியினருக்கும் இடையே உரையாடல் தீவிரமாக நடந்து கொண்டிருந்தது.
என்ன நடக்கிறது என்பது தெளிவாகவில்லை. ஆனால் தெரிந்த ஒன்று, அந்தத் துறவி மரியாதையுடன் வரவேற்கப்பட்டார். அவருக்கு அமர்ந்திருக்க இடம் வழங்கப்பட்டது. சில முக்கிய பழங்குடியினர் அவரைச் சூழ்ந்து நின்றனர். துறவிக்கு மூன்று சீடர்கள் இருந்தனர்; அவர்கள் பின்னால் நின்று, குருவின் உத்தரவுக்காகக் காத்திருந்தனர்.
புருஷோத்தமன் நம்பிக்கையோடு அவர்களை நோக்கினான்.
சிறிது நேரத்தில், அந்தத் துறவி ஒரு சீடனை முன் அனுப்பினார். அந்தச் சீடன் தங்களை நோக்கி வருவதைப் பார்த்ததும், புருஷோத்தமனுக்கும் விஜயனுக்கும் உயிர் பிழைக்கும் என்ற நம்பிக்கை பெருகியது.
சில பழங்குடியினர் வந்து, அவர்களை மரத்திலிருந்து அவிழ்த்தனர். அனைவரும் அந்த மர்மத் துறவியின் முன் கொண்டு செல்லப்பட்டனர். அவர் சீடர்களில் ஒருவரிடம் கை கட்டுகளை நீக்கச் சொன்னார். துறவிக்கும் பழங்குடித் தலைவருக்கும் இடையில் வாழ்த்துகள் பரிமாறப்பட்டன. பின்னர் அவர்கள் அங்கிருந்து நகர்ந்தனர்.
“இப்போது ஓடலாமே?” என்று விஜயனை நோக்கிப் புருஷோத்தமன் சொன்னான்.
“ஓட நினைக்காதீர்கள்,” துறவி இடைமறித்தார்.
“அது உங்களுக்குத்தான் தீங்கு. நாம் உங்கள் மனதை வாசிக்கிறோம்.”
“இப்போது நாங்கள் உங்கள் கைதியா?” புருஷோத்தமன் கேட்டான்.
துறவி சிரித்தார். “சிறைவாசமா? நான் விடுதலைக்கான வழியைக் காட்டுகிறேன். கைதிகள் எனக்கு தேவையில்லை. இந்த வனத்தில் இருந்து நீங்க விரும்பினால் எங்கும் செல்லலாம். பிறகு நீங்கள் இவர்களாலோ அல்லது மற்றவர்களாலோ பிடிக்கப்படலாம். ஆனால் இப்போது, நீங்கள் பாதுகாப்பில் இருக்கிறீர்கள்.”
அந்தத் துறவியின் பெயர் கௌதமன். பழங்குடியினர் அவர்களைப் பிடித்ததாக அறிந்ததும், தானாகவே அவர்களை மீட்க வந்திருந்தார்.
“இந்தக் காடு மகதப் பேரரசின் எல்லைக்குள்தானே வருகிறது?” என்று கேட்டான் விஜயன்.
“ஆமாம்,” துறவி சொன்னார். கூடவே, அவனது கேள்விக்கான காரணத்தை அறிந்து “ஆனால் நான் மகதத்திற்காக வேலை செய்வதில்லை. நான் கடவுளுக்காக மட்டுமே செய்கிறேன்” என்றார்.
“அப்படியானால் நாம் எங்கே போகிறோம்?” புருஷோத்தமன் ஆர்வத்துடன் கேட்டான்.
“அருகில் இருக்கும் ஒரு ஆசிரமத்திற்குச் செல்வோம். நீங்கள் அனைவரும் சோர்ந்திருக்கிறீர்கள். ஓய்வு தேவை. பசியாகவும் இருக்கலாம். அந்த ஆசிரமத்திலேயே தங்கி, மீதமுள்ளவற்றைக் காலை விரிவாகப் பேசலாம்.”
“என்ன அபூர்வமான விதி! சற்றுமுன் பட்டினிப் பழங்குடிகளுக்கான உணவாக மாறப் போனோம். இப்போது எங்கள் பசியைத் தீர்க்க உணவு அளிக்கப் படுகிறது.”
துறவி உரக்கச் சிரித்தார். “மனிதர்களை உண்ணும் எந்தக் மனிதரையும் நான் பார்த்ததில்லை. இப்படிப்பட்ட ஆதாரமற்ற கதைகளின் மூலமே என்ன? காடுகளிலிருந்து குழந்தைகளைப் பயமுறுத்த விரும்பும் தாய்மார்களா? அல்லது பயணிகள் உண்மையை மிகைப்படுத்தி சொல்வதா?”
விஜயனுக்கு கோபம் வந்தது. துறவி அவர்களைப் பரிகாசம் செய்வதாக அவனுக்குத் தோன்றியது. “நாங்கள் இன்னும் தாய்மார்களின் மடியில் இருக்கும் பிள்ளைகளா? கதைகளை உண்மை என நம்புவதற்கு? எங்கள் கிராமத்திற்கருகே உள்ள இடங்களிலிருந்தே, காடுகளை ஊடறுத்துச் சென்றவர்கள் இப்படிப் பல கதைகளைச் சொல்கிறார்கள். அவர்கள் எல்லோரும் தவறா?”
“கோபத்தால் அல்ல; அறிவால்தான் அறியாமை நீங்கும்” என்று துறவி அமைதியாகச் சொன்னார்.
புருஷோத்தமன் இதைக் கேட்டு துறவி சொல்வது சரிதான் என்ற எண்ணத்திற்கு வந்தான்.
சில அடிகள் முன்னேறிய பிறகு, “ஒரு விலங்கு தன் இனத்தையே உண்ணும் கதையைக் கேட்டிருக்கிறாயா? சிங்கம் சிங்கத்தை உண்ணுமா? புலி புலியை உண்ணுமா? எவ்வளவு பசியிருந்தாலும் இல்லை. அவ்வாறிருக்க, மனிதன் விலங்குகளைத் தாண்டிய நாகரிகப் படியில் நிற்பவன். தன் இனத்தையே உண்ணுவானா?” என்றார் துறவி.
மூவருக்கும் பதில் இல்லை. அவர்கள் பழங்குடிகளிடம் சந்தித்த அனுபவம் மனதை விட்டுச் செல்லவில்லை.
“கதைகள் மனித மனத்தை எளிதில் வழி நடத்தும்” என்று துறவி தொடர்ந்தான். “விளக்க முடியாத விஷயங்களை கதைகளால் எளிதில் பதிய முடியும். எத்தனை பேர் பேயைக் கண்ணால் பார்த்திருக்கிறீர்கள்?”
மூவரும் கைகளை உயர்த்தினார்கள். துறவி தலை அசைத்து, “நான் தவறான கேள்வி கேட்டிருப்பேன். பேய்கள் பற்றிய கதைகளை எத்தனை பேர் கேட்டிருக்கிறீர்கள்?” என்று கேட்டார். அனைவரும் ஒப்புதல் காட்டினர்.
“இப்போது சொல்லுங்கள். அந்தக் கதைகள் இல்லாமல், நீங்கள் பேயைக் கண்டிருப்பீர்களா?”
அவரே தொடர்ந்தார். “பேயைக் காண்பது பெரும்பாலும் கதைகளால் உண்டாகும் இடங்களில்தான். சுடுகாடு, கைவிடப்பட்ட வீடு, இரவு நேரத்தில் காடு. மனதில் உருவான சூழல், உண்மையைச் சந்திக்கும் போது, பேய் தெரிகிறது. கதை அந்த வீட்டில் பேய் உண்டு என்றால், இரவில் அதைப் பார்க்கும் வாய்ப்பு அதிகம். மனிதர்களைப் பற்றிய கதைகளும் இதுபோல்தான்.”
“அப்படி என்றால், அவர்கள் எங்களை இப்படிச் சித்திரவதை செய்தது ஏன்?” என்று புருஷோத்தமன் கேட்டான்.
“முதலில் அவர்களது நிலையைப் புரிந்து கொள்ள வேண்டும். அவர்கள் இந்தக் காட்டிலேயே பிறந்து வளர்ந்தவர்கள். வெளி உலகுடன் எந்தத் தொடர்பும் இல்லை. அவர்கள் மற்றவர்களின் வாழ்வில் தலையிடவில்லை. ஆனால் நாகரிகம் என்ற பெயரில் வரும் மக்கள், அவர்களின் எல்லையை இடையறாது தாண்டுகிறார்கள். நோய்கள், கிருமிகள், அறியாத நோய்த்தாக்கங்கள் அவர்களுடன் வருகின்றன. இதனால் பல பழங்குடிகள் முற்றாக அழிந்துள்ளன.”
“அதனால்தான், அவர்கள் தங்கள் இருப்பைப் பாதுகாக்க, தங்கள் எல்லையை மீறுவோரைக் கொல்வதை வழியாக்கிக் கொண்டனர்.”
“நான் உங்களைப் பற்றித் தகவல் கூறி, கண்டுபிடிக்கச் சொல்லியிருந்தேன். அதனால்தான் உங்களை அவர்கள் கொல்லவில்லை. உங்கள் ஆயுதங்களும் என் சீடர்களிடம் ஒப்படைக்கப்பட்டன.”
“இப்போது எல்லாம் பொருந்துகிறது” என்று புருஷோத்தமன் சொன்னான்.
அந்த ஆசிரமம் பெரிதாக இல்லை; ஆயினும் கௌதமனின் கீழ் கல்வி கற்றுக் கொண்டிருந்த பன்னிரண்டு சீடர்களையும், அவர்களின் தினசரி பணிகளையும் ஏற்றுக் கொள்ளத் தக்கதாயிருந்தது எளிய வாழ்க்கை முறை. தனது வாழ்நாளையே இறைவன் சேவைக்கும் மனித நலத்திற்கும் அர்ப்பணித்திருந்த தன்மை. தியானம் செய்வதும், அருகிலுள்ள கிராம நகரங்களுக்குச் சென்று பிச்சை ஏற்பதும், மக்கள் வேண்டிக் கொண்டால் சடங்குகள் நடத்தித் தருவதுமே என்று இதுதான் கௌதமனின் வாழ்க்கை.
அரச குடும்பங்களிடையே நன்கு அறியப்பட்டவர். காட்டுப் பகுதிகளைச் சுற்றியுள்ள பல அரசர்களும் அவனிடம் மரியாதையுடன் பழகினர். காடுகளெங்கும் அவரைப் போன்ற பல துறவற இல்லங்கள் இருந்தா
லும், அவரது ஆசிரமம் பனாஸ் நதிக்கரையில் அமைந்திருந்தது. அது சம்பல் நதியின் ஒரு துணைநதி.
 

Author: SudhaSri
Article Title: அத்தியாயம் -14
Source URL: Nectar Novels-https://nectarnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.