• ஹாய் மக்களே! நம் Nectar Novels தளத்திற்கு நல்வரவு🙏😍😍 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள் nectarnovels.ss@gmail.com 🩷 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...👇 வேதா விஷால் & அனன்யா🙏💖

அத்தியாயம் -34

SudhaSri

Administrator
Staff member
Jun 16, 2024
508
32
43
india
பகலிரவு பல கனவு – அத்தியாயம் 34

கடையின் முன் வந்து புல்லட்டை நிறுத்திய பிரபாகரனின் கவனம், இயல்பாக அங்கே நின்றிருந்த காரின் மீது சென்றது. காலையில் வீட்டு வாசலில் பார்த்த அதே கார்.
கருப்பு நிறத்தில் பளபளத்த அந்த ஜாகுவாரின் விலை குறைந்தது ஒரு கோடி என்றார் கூகுள் ஆண்டவர். அதன் சொந்தக்காரன் நிச்சயமாக உள்ளூர்வாசி இல்லை என்றது அதன் பதிவு எண். பஸ் ஸ்டாண்டில் இருந்து உடன் வந்தான் என்று மலர் சொன்னது ஞாபகம் வந்தது. அதில் உண்மை என்பது ஒரு துளியும் இல்லை என்று மனம் உறுதியாகச் சொன்னது.
‘ஃப்ரண்டுன்னு மலர் சொன்னாளே? இத்தனை வசதியான ஃப்ரண்டு யாரா இருக்கும். எத்தனை வருஷ பழக்கம் இருந்தால் சென்னைல இருந்து இவ்வளவு தூரம் வருவான்? வந்தவன் ஏன் வீட்டுக்கள்ள வரல?’ என்ற கேள்விகளுடனே கடைக்குள் நுழைந்தான்.
‘லூசு பிரபா! அப்படி ஃப்ரண்டா மட்டும் இருந்தா உன் தங்கச்சி சொல்லாமல் கொள்ளாமல் ஊருக்கு வருவாளா? கூடவே உனக்கு அறிமுகப்படுத்தாம இருப்பாளா? இது நிச்சயம் ஃப்ரண்ட்ஷிப் இல்லை, அதையும் தாண்டின விஷயம்..’ அவனது மூளை மின்னல் வேகத்தில் தீவிரமாக ஆராய்ந்து சொன்ன பதிலில் அவன் கால்கள் தானாக நின்றுவிட்டன.
இருக்கும் இடத்தை மறந்து, "ஓ... மை காட்..." என்று அலறினான். கடையில் இருந்த மொத்த கூட்டமும் அவனைப் பார்த்தது.
“என்ன ஆச்சு தம்பி?” என்று மிக்சியில் இருந்த ஜூஸை மறந்து ஓடிவந்தார் முத்து. அவரது பதற்றத்தில் சுற்றுப்புறம் உணர்ந்து நிதானத்திற்கு வந்தான்.
“ஹான்.. ஒன்னும் இல்லண்ணே. ஏதோ யோசனைல இருந்துட்டேன். அதான்..” என்று சமாளித்து தனது அறைக்கு விரைந்து விட்டான்.
‘அட லூசு பிரபா! அந்தக் கார் ஓனர் யாருன்னு பார்க்கணும்னு நினைச்சியே, இப்படி சொதப்பிட்டு வந்திட்டியே’ என்று மூளை காரி துப்பியது.
“அதுக்கென்ன வழியா இல்லை, இப்போ கண்டு பிடிக்கிறேன் பார்.” சவாலோடு தனது கம்ப்யூட்டரை ஆன் செய்து சிசிடிவி பதிவுகளைப் பார்வையிட ஆரம்பித்தான். ஒரு ஓரத்தில் அமர்ந்து ஜுஸ் குடித்தபடி மொபைலில் பார்வையைப் பதித்திருந்தவன் கண்ணில் பட்டான். செல்வத்தில் புரள்பவன் என்று பார்த்தாலே தெரிந்தது. சற்று நேரம் அவனையே ஆராய்ச்சியாகப் பார்த்துக் கொண்டிருந்த போது அவனது மொபைல் அழைத்தது.
புன்னகையுடன் மொபைலைக் காதில் வைத்தவன் சற்று நேரத்தில் பதட்டத்துடன் எழுந்து நின்றான். “ஹேய் ஃப்ளவர்! கொஞ்சம் முன்னாடி தானே பேசினோம். அதுக்குள்ள திருப்பி கூப்பிட்டிருக்க? என்ன விஷயம்? ஏய்! என்னம்மா ஆச்சு? எதுக்கு அழற? எதுவா இருந்தாலும் நிதானமா பேசு. நான் அங்கே வரட்டுமா? ம்ச்.. சொன்னா கேளு.. முதல்ல அழுகையை நிப்பாட்டு!”
அவனது பேச்சில் கொஞ்சம் கொஞ்சமாக சுருதி ஏறிக்கொண்டே சென்றது. அவன் ஃப்ளவர் என்று ஆரம்பித்த போதே பிரபாகரனின் புலன்கள் கூர்மையாக அவனைக் கவனிக்கத் தொடங்கின. சில விஷயங்கள் அவனுக்குப் புரியத் தொடங்கின. அவன் சட்டையைப் பிடித்துக் கேள்வி கேட்டுவிடலாமா என்று யோசித்த போது சம்யுக்தா அழைத்தாள்.
“பிரபா! கொஞ்சம் வீட்டுக்கு வாங்க. மலர் அண்ணி இங்கே வந்திருக்காங்க. ஒரே அழுகை, ஏதேதோ சொல்றாங்க. எனக்கு என்ன செய்யறதுன்னே தெரியல. பயம்மா இருக்கு, சீக்கிரம் வாங்க.” படபடவெனப் பேசியவளுக்கு மூச்சு வாங்கியது.
“சம்யூ! நான் கிளம்பிட்டேன். நீ பதட்டப்படாமல் இரு. இந்த நேரத்தில நீ டென்ஷன் ஆறது நல்லதில்லை” என்று பேசியபடி புல்லட்டை நோக்கி ஓடினான். மலர்விழியின் திடீர் வருகையின் பின்னணி வீட்டில் ஒரு பிரளயத்தை உருவாக்கப்போகின்றது என்பதை அவனது உள்ளுணர்வு உணர்ந்து பதறியது.
‘எதுவா இருந்தாலும் மலரு தப்பிச்சிடுவா, மாட்டப் போறது நானும் சம்யூவும் தான். இந்த தடவை ஊரை விட்டே வெளியேற வேண்டியதாகிடுமோ? ஒரே ஒரு தடவை லவ் பண்ணி நான் படற பாடு இருக்கே! என்னமோ போடா பிரபாகரா!’ என்று நொந்து கொண்டு வண்டியை வீடு நோக்கி ஓட்டினான்.
தனது புல்லட்டைத் தொடர்ந்த அந்த ஜாகுவாரை அவன் கவனிக்கவில்லை.
*****
சத்தமாக மூடப்பட்ட கதவு மலர்விழியை அதிர வைத்தது. என்ன செய்வது என்று தெரியாமல் அசையாமல் நின்றாள்.
கையில் இருந்த ஃபைலை இன்னும் இறுக்கமாகப் பற்றிக் கொண்டாள். விரல்கள் நடுங்கின.
‘இப்படித்தான் நடக்கும்னு தெரியும் தானே. அப்புறம் என்ன?’ என்று மனசாட்சி கேள்வி கேட்டது.
இந்த நிமிடம் வரும் என்று அவளுக்குத் தெரியும். ஆனால், நிஜத்தில் அனுபவிக்கும் போது தானே வலி எத்தனை கடுமையானது என்று தெரிகிறது.
கதவைச் சாத்திவிட்டு சுவரில் சாய்ந்து நின்றிருந்தார் காமாட்சி. சற்று முன் பார்த்த திருமணச் சான்றிதழின் ஒவ்வொரு எழுத்தும் இன்னும் கண்முன்னே நின்றது.
"ஒரு மாசமா என்னை ஏமாத்திட்டு இருந்தாளா...?”
உதடுகள் தன்னிச்சையாக முணுமுணுத்தன.
அந்தக் கேள்வியில் கோபம் இல்லை. மகளின் மேல் வைத்திருந்த நம்பிக்கை பொய்த்துப் போனதால் ஏற்பட்ட வலி அதிகம். நெஞ்சம் பாரமானது. கண்களை மூடிக் கொண்டார்.
“அம்மா! ப்ளீஸ் மா! கதவைத் திறங்க. நான் செஞ்சது தப்பு தான். எனக்கு வேற வழி தெரியலை. ஏன் செஞ்சேன்னு கேளுங்களேன். என் செல்ல அம்மா,ப்ளீஸ்! நீங்க இப்போ கதவைத் திறக்கலேன்னா நான் போயிடுவேம்மா. திரும்பி வரவே மாட்டேன்.”
மலர்விழி கெஞ்சல், கொஞ்சல், மிரட்டல் என்று பல வழிகளில் முயன்றும் காமாட்சி கதவைத் திறக்கவே இல்லை. காலையில் பிரபாகரனிடம் பேச முயன்று தோற்றிருந்தாள். அப்பத்தா வீட்டில் இல்லை. அவரது தாய் வீட்டில் பூர்வீக சொத்து விஷயமாக ஒரு பஞ்சாயத்து. அது விஷயமாக மகனையும் அழைத்துக் கொண்டு குமுளி சென்றிருந்தார்.
மனம் உடைந்து போன மலர்விழி வேறு வழியின்றி சம்யுக்தாவைத் தேடிச் சென்றாள்.
தூக்கத்தின் நடுவே ஏதோ பலமான சத்தம் கேட்டு விழித்த சம்யுக்தா, பதட்டமாக எழுந்து அமர்ந்தாள். கீழே ஏதோ சரியில்லை. வேகமாக எழுந்ததில் தலை சுற்றியது. சற்று நேரம் அமைதியாக கண்களை மூடித்திறந்தாள்.
சோபாவின் ஓரத்தில் அமர்ந்திருந்த மலர்விழி, கண்ணீரை மறைக்க முயன்று கொண்டிருந்தாள். அவசரமாக சமையலறைக்குள் சென்று பிரபாகரனுக்கு ஃபோன் செய்து விட்டு மலர்விழியின் அருகில் சென்று அமர்ந்தாள்.
"அண்ணி..."
அழைத்தவுடன் மலர்விழி தலையை உயர்த்தினாள். அவளது சிவந்த கண்களைப் வீங்கிய கண்களைப் பார்த்த சம்யுக்தாவுக்கு ஒன்றும் புரியவில்லை..
"என்னாச்சு?"
பதில் இல்லை. மலர்விழியால் பேசவே முடியவில்லை. திடீரென்று சம்யுக்தாவின் தோளில் சாய்ந்தாள்.
அவ்வளவுதான். அவள் இதுவரை அடக்கி வைத்திருந்த கண்ணீர் வெள்ளமாக வெளிவந்தது.
"நான்..." குரல் உடைந்தது.
"நான் தப்பு பண்ணிட்டேன் அண்ணி, பெரிய தப்பு பண்ணிட்டேன்." கீறல் விழுந்த பழைய ரெக்கார்ட் போலச் சொல்லிக் கொண்டே இருந்தாள்.
சம்யுக்தா ஒரு வார்த்தையும் பேசவில்லை. உண்மையில் அவளுக்கு என்ன பேசுவது என்று தெரியவில்லை. மலர்விழியின் புலம்பலில் இருந்து எதையும் கண்டு பிடிக்க முடியவில்லை. நாத்தியின் முதுகை மெதுவாக வருடினாள்.
"முதல்ல என்ன நடந்துச்சுன்னு சொல்லுங்க. எவ்வளவு பெரிய தப்பா இருந்தாலும் சரி பண்ணிடலாம்."
சில நிமிட அமைதிக்குப் பிறகு ஆழ்ந்த மூச்செடுத்த மலர்விழி கையில் இருந்த ஃபைலை அவளிடம் நீட்டினாள்.
சம்யுக்தா அதை மெதுவாகத் திறந்தாள். முதல் வரியில் அவளது புருவம் சுருங்கியது. முழுவதும் படித்து முடித்த போது அவளது முகம் வெளிறிப் போனது. மெதுவாக நிமிர்ந்து மலர்விழியைப் பார்த்தாள்.
"அண்ணீ..." அந்த ஒற்றை வார்த்தையில் ஏகப்பட்ட அதிர்ச்சி.
மலர்விழி மெதுவாகத் தலையசைத்தாள்.
"ஆமாம்… நான் கல்யாணம் பண்ணிட்டேன்."
அந்த வார்த்தைகள் மிக அமைதியாக வெளியே வந்தாலும், அதன் பின்னால் ஒரு மாத காலமாக சுமந்து வந்த பயமும் சோர்வும் மறைந்திருந்தது.
சம்யுக்தா சில நொடிகள் எதுவும் பேசவில்லை. பிறகு மெதுவாகக் கேட்டாள்.
"யார் அவங்க?”
"அவர் பேர் கார்த்திக், ஐடி ஃபீல்டுல தான் இருக்காங்க. இன்டர்ன்ஷிப் போனபோது பழக்கம்.”
“ஓ..” ஒரு வருடம் கூட ஆகாத உறவில் திடீர் என்று திருமணம் செய்து கொள்ள முடிவு எடுக்க முடியுமா என்று சந்தேகம் வந்தது. சம்யுக்தாவுக்குத் தலை சுற்றியது.
“ஏன் இந்த திடீர் முடிவு? வீட்டில பேசி இருக்கலாமே! அட்லீஸ்ட் உங்க அண்ணன் கிட்ட சொல்லி இருக்கலாமே?”
"ஹும்..." "மலர்விழி பெருமூச்சு விட்டாள்.
"நம்ம வீட்டுல இதைச் சொல்ல தைரியம் இருந்திருந்தா… இந்த நிலைமையே வந்திருக்காது. எனக்கு அம்மாவைப் பத்தி நல்லாவே தெரியும். அண்ணா? அவரை நம்பலைன்னு இல்லை. ஆனா… ஏற்கனவே அம்மா அவர் மேல கோபமா இருக்காங்க. இதுல நான் சிபாரிசுக்கு வந்திருந்தா எங்க இரண்டு பேருக்கும் நடுவுல மாட்டிட்டு திணறிப் போயிருப்பார்."
சம்யுக்தாவின் கண்கள் மெதுவாக ஈரமானது. இத்தனை நாளாக மலர்விழி தனியாக இதையெல்லாம் சுமந்திருக்கிறாள் என்பது புரிந்தது.
"ஆனால் கல்யாணம் ஆகி ஒரு மாசம் வரைக்கும் சொல்லாமல்...?" சரியான வார்த்தைகள் தெரியாமல் கேள்வியைப் பாதியில் விழுங்கினாள் சம்யுக்தா.
மலர்விழி தலையைக் குனிந்து கொண்டாள்.
"ஒவ்வொரு நாளும் சொல்லணும்னு தான் நினைச்சேன். சொல்றதுக்கு பயமா இருந்துச்சு. இப்போ கூட சொல்லியிருக்க மாட்டேன். கார்த்திக் வீட்டில ரிசப்ஷனாவது வைக்கணும்னு சொல்றாங்க. நம்ம வீட்டு மனுஷங்க இல்லாமல் நல்லா இருக்காதுன்னு கார்த்திக் தான் கூப்பிட்டு வந்தாங்க. இப்போ அம்மாவுக்கு… ” பேசிக்கொண்டே சென்றவள் பலத்த கைதட்டல் சத்தம் கேட்டுத் திரும்பினாள்.
"சூப்பர்… ரொம்ப சூப்பர்..." பிரபாகரனின் கோபச் சிரிப்பில் சம்யுக்தா பதறி எழுந்தாள். பேச்சு சுவாரசியத்தில் புல்லட் சத்தம் கேட்கவே இல்லை.
"பிரபா..." என்று அருகில் வந்தவளை கையை உயர்த்தி நிறுத்தினான். திரும்பி மலர்விழியை முறைத்தான். அவள் தலையைத் தாழ்த்திக் கொண்டாள். சில நொடிகள் அங்கே யாரும் பேசவில்லை.
"அண்ணே..." தயங்கித் தயங்கி அழைத்தவளைக் கண்டுகொள்ளாமல் கண் மூடி அமர்ந்து கொண்டான். சற்று முன்னர் தன் காதில் விழுந்த செய்தியை ஜீரணிக்க முயன்றான். முகத்தை அழுத்தி துடைத்துக் கொண்டு நிமிர்ந்தான்.
"எந்த தைரியத்தில கல்யாணம் செஞ்சிட்டு வந்து நிக்கிறா? பெத்தவங்க முக்கியம்னு நடையா நடந்து சம்மதம் வாங்கி அவங்க முன்ன நின்னு செஞ்சு வச்ச கல்யாணத்துக்கே இங்கே மதிப்பில்ல. இதுல சொல்லாமல் கொள்ளாமல்.. ம்ச்.. அவன் குரல் நடுங்கியது.
"என்கிட்ட சொல்லணும்னு கூட இந்த மேடத்துக்கு தோணலை. இவ்வளவு பெரிய முடிவு எடுக்கத் தெரிஞ்சவங்களுக்கு அவங்க அம்மாவை சமாளிக்க முடியாதா?"
"அண்ணே! நான்..."
"பயமா இருந்ததுன்னு மட்டும் சொல்லிட வேண்டாம். நம்பறதுக்கு இங்கே யாரும் காதுல பூ வச்சுகிட்டு இல்லை.”
"அண்ணே! ப்ளீஸ்! என் கிட்ட நேரா பேசுண்ணே. இரண்டு அடி கூட அடிச்சுக்கோ. இப்படி யாரோ மாதிரி பேச வேண்டாம். ப்ளீஸ்!” கண்களில் நீருடன் கையெடுத்துக் கும்பிட்டவளைப் பார்த்தும் இரக்கம் இல்லாமல் நின்றான் பிரபாகரன். சம்யுக்தாவுக்கு இருவரையும் பார்க்கும் போது இப்படி ஒரு காட்சியை எங்கேயோ பார்த்த மாதிரி இருந்தது. யோசித்த போது தனது திருமண விஷயத்தில் அண்ணன் நடந்து கொண்ட விதம் ஞாபகம் வந்தது.
“இது யுனிவர்சல் அண்ணன் லாஜிக் போல. தங்கச்சி எல்லாம் முட்டாள்னே முடிவு செஞ்சு பேசுவாங்க. இவங்க அக்கறையைக் காட்டறாங்களாமாம்.” இருக்கும் இடத்தை மறந்து சத்தமாகவே முணுமுணுத்தபடி கழுத்தை நொடித்தாள்.
“ஏய்! அங்கே என்ன முணுமுணுப்பு?” பிரபாகரனின் கோபம் இப்போது இவள் மீது திரும்பியது.
“ஹான்! நத்திங். யூ கன்டிநியூ” என்றவள் அமைதியாக அமர்ந்து கொண்டாள். இத்தனை நேரமாக அண்ணனை சமாதானம் செய்ய முயன்ற மலர்விழிக்கு இப்போது தான் அவள் மாடியேறி வந்த காரணம் ஞாபகம் வந்தது. இங்கே வந்து ஒரு மணி நேரத்திற்கும் மேலாகிறது. ‘அம்மா என்ன செய்யறாங்க ஹோ?’ நினைத்த போதே சட்டென்று பதற்றம் தொற்றிக் கொண்டது. வேகமாக அண்ணனின் கையைப் பிடித்துக் கொண்டாள்.
“அண்ணே! உன் கோபத்தைக் கொஞ்ச நேரம் தள்ளி வை. இப்போ அம்மாவை வந்து பாரு.” அவனை இழுத்துச் செல்ல முயன்றவளிடம் இருந்து கையை உதறினான் பிரபாகரன்.
“இப்போ என்ன புதுசா கதை சொல்லப் போற? அம்மாவுக்கு என்ன?” நேரடியாக தங்கையிடம் கேள்வி கேட்க ஆரம்பித்தான்.
“அம்மாவுக்கு என் விஷயம் தெரிஞ்சு போச்சு. ரூமுக்குள்ள போய் கதவை சாத்திட்டாங்க. திறக்கவே மாட்டேங்கிறாங்க. நீ வந்து பாரு. நீ சொன்னா அம்மா கேட்பாங்க. ப்ளீஸ்!” இதைக் கேட்ட சம்யுக்தா பயந்து போனாள்.
"என்ன அண்ணி, இது எவ்வளவு சீரியஸான விஷயம்? இதை முதல்ல சொல்லாமல்.. ம்ச்.. இப்பவாச்சும் என்ன நடந்ததுன்னு சொல்லுங்க.”
தயங்கித் தயங்கி மலர்விழி நடந்த விஷயத்தைச் சொல்ல, பிரபாகரன் ஆணி அடித்தது போல நின்றான். சம்யுக்தா தான் பதறிப் போனாள்.
“பிரபா! நீங்க ஏன் இப்படி நிக்கறீங்க? ஏதாவது பேசுங்க. அத்தை கோபத்தில ஏதாவது தப்பா யோசிக்கப் போறாங்க. சீக்கிரம் போய் பாருங்க" என்று அவனை அவசரப் படுத்தினாள்.
"வாயை மூடு சம்யூ! உங்க அத்தைக்கு ஒன்னும் ஆகிடாது. இத்தனை நாளா நாமளும் இங்கேயே தான் இருக்கோம். ஒத்த வார்த்தை பேசறதில்ல. இன்னும் ஹைலைட்டா, நீ ப்ரெக்னன்ட்னு தெரிஞ்சதுக்கு அப்புறம் நம்ம கண்ணுலயே படாம ஒதுங்கி போறாங்க. இப்போ நான் போய் நின்னா வேற வினையே வேண்டாம். இவளுக்கு நான் தான் கல்யாணம் பண்ணி வச்சேன்னு சொன்னாலும் சொல்லுவாங்க. எனக்கே தலைக்கு மேலே போதும் போதும்ற அளவுக்கு பிரச்சினை கிடக்கு. மத்தவங்க பிரச்சினையைப் பத்திக் கவலைப்பட எனக்கு நேரமில்லை. அவங்களையே பாத்துக்கச் சொல்லு.”
தங்கை மேலிருந்த அக்கறையெல்லாம் காணாமல் போய் அந்த இடத்தைக் கோபம் ஆட்கொண்டது. “என்னவோ ஏதோன்னு பதறிப் போய் வந்தா மனுஷன வச்சு செய்யறாங்க” என்று தடதடவெனப் படிகளில் இறங்கியவன் பாதிப்படிகளில் நின்றுவிட்டான்.
இரண்டு மாதங்களுக்கு மேலாகியும் பிரபாகரனால் காமாட்சியின் இரட்டை மனப்பான்மையை ஜீரணிக்க முடியவே இல்லை. இன்றும் கண் முன்னே அன்றைய காட்சிகள் அடிக்கடி வந்து மனதை ரணமாக்கிக் கொண்டு தான் இருக்கிறது. சிரித்த முகத்துடன் மகளுக்கும் மருமகனுக்கும் ஆரத்தி எடுத்த காமாட்சியின் செய்கை அந்தக் குடும்பத்தில் இருந்து அவனை மொத்தமாகப் பிரித்துவிட்டது. இப்போது கூட பசுமை மாறாமல் அந்தக் காட்சி கண் முன்னே விரிந்தது.
மலர்விழியிடம் கோபத்துடன் பேசிவிட்டுக் கீழே இறங்கிய பிரபாகரன், காமாட்சி அந்தப் புதியவனுடன் பேசுவதைக் கண்டு சற்று நிதானித்தான். கவனித்துப் பார்த்த போது அவன் மலர்விழியின் கணவன் கார்த்திக் என்று தெரிந்தது. அவனை அந்த நேரத்தில் காமாட்சியுடன் கண்ட மலர்விழி பயந்து போய் சம்யுக்தா வின் கரங்களை இறுகப் பற்றிக் கொண்டாள். ஆனால், அந்த பயம் தேவையே இல்லை என்று சற்று நேரத்தில் புரிந்து போனது.
பேச்சின் ஆரம்பத்தில் கோபத்தைக் காட்டிய அவனது அன்னையின் முகம் கொஞ்சம் கொஞ்சமாக மாறி கடைசியில் சந்தோஷத்தைத் தத்தெடுத்துக் கொண்டது.
“நீங்க இங்கேயே நில்லுங்க தம்பி. இப்போ வந்துடறேன். இந்த மலரு எங்கே போனா?” கேட்டுக் கொண்டே திரும்பிய காமாட்சியின் கண்கள் மாடிப்படிகளில் நின்றிருந்த மூவரையும் பார்த்தது.
“ஏ மலரு! அங்கே எதுக்குப் போன? வா, விரசா வந்து மாப்பிள்ளை பக்கத்தில நில்லு.” காமாட்சியின் கட்டளைக் குரலில் அண்ணனை மறந்து வேகமாகக் கீழிறங்கினாள் மலர்விழி.
அடுத்த சில நிமிடங்களில் மகளையும் மருமகனையும் ஒன்றாக நிற்க வைத்து, ஆரத்தி எடுத்து, “இரண்டு பேரும் வலது காலை எடுத்து வச்சு உள்ளே வாங்க” என்று அழைத்துச் சென்றார்.
பிரபாகரனும் சம்யுக்தாவும் ஆணி அடித்தது போல நின்றார்கள். மனதில் பலமாக அடி வாங்கிய பிரபாகரன் அன்று மாலைக்குள் நகரின் மையப்பகுதியில் ஒரு
அப்பார்ட்மெண்ட் வளாகத்தில் வீடு பார்த்து மனைவியுடன் குடியேறிவிட்டான்.
 

Author: SudhaSri
Article Title: அத்தியாயம் -34
Source URL: Nectar Novels-https://nectarnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.