• ஹாய் மக்களே! நம் Nectar Novels தளத்திற்கு நல்வரவு🙏😍😍 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள் nectarnovels.ss@gmail.com 🩷 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...👇 வேதா விஷால் & அனன்யா🙏💖

அத்தியாயம் -35

SudhaSri

Administrator
Staff member
Jun 16, 2024
508
32
43
india
அத்தியாயம் 35


புது மாப்பிள்ளைக்கு நடந்த தடபுடலான உபசரிப்பில் பிரபாகரன் வெளியேறிய விஷயம் காமாட்சிக்கோ மலர்விழிக்கோ தெரியாமலே போனது. இத்தனைக்கும் பெரிய ட்ரக்கை வரவழைத்து கண்ணுக்குத் தெரிந்த அத்தனையையும் வழித்து எடுத்துச் சென்று விட்டான், அதில் வீட்டில் நின்ற இரண்டு கார்களும் அடக்கம்.

‘நான் வேண்டாம், என் பணம் மட்டும் வேணுமா?’ அத்தனை கோபம் அவனுக்கு. அவனது முகத்தைப் பார்க்கவே சம்யுக்தாவுக்கு பயமாக இருந்தது. அவனது செய்கைகளை அமைதியாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தவளுக்கு கார் விஷயத்தில் அப்படி இருக்க முடியவில்லை.

“அழகா! அந்தப் பெரிய காரை நீ எடுத்துட்டு வா! செந்தில் நீ என் புல்லட்ட எடுத்துட்டுப் போ, காலைல கடைல விட்டுடு. நான் சின்னக் கார்ல சம்யூவ கூப்பிட்டு வந்துக்கறேன்.” கடையில் வேலை செய்யும் இளைஞர்களுக்கு உத்தரவிட்டவனை சம்யுக்தா ஆச்சரியமாகப் பார்த்தாள்.

“அவங்களுக்கு இந்தக் காரெல்லாம் இனி தேவைப் படாது. ஃபாரின் கார்ல மட்டும் தான் போவாங்க.” பிரபாகரனின் முணுமுணுப்பை அவள் கவனிக்கவில்லை.

“பிரபா! எதுக்கு இப்படி மொத்தமா க்ளியர் பண்றீங்க? இங்கே ஏதாவது எமர்ஜென்ஸின்னா கார் வேண்டாமா?” என்று தயங்கித் தயங்கிக் கேட்டாள்.

“ஏய்! என்ன தெரியும் உனக்கு?” கையை ஓங்கிய பிரபாகரன் மனைவியின் மருண்ட விழிகளைக் கண்டு ஓங்கிய கையை அதே வேகத்தில் சுவரில் குத்தினான்.
அவளைத் தெரிந்த இத்தனை வருடங்களில் கோபப்பட்டதே இல்லை என்று சொல்லிவிட முடியாது. அவையெல்லாம் காதலருக்கிடையே வரும் செல்லச் சண்டைகள். ஆனால், முதல் முறையாக அவளிடம் வேறு விதமான கோபத்தைக் காட்டியிருக்கிறான்.

என்ன செய்து மனைவியை சமாதானம் செய்வது என்று அவன் யோசித்த வேளையில், அவள் ஃப்ரிட்ஜில் இருந்து காலி செய்த ஐஸ் கட்டிகளை எடுத்து வந்து அவன் கையில் வைத்தாள்.

“சம்யூ! நான்… “

“இட்ஸ் ஓகே பிரபா! கூல்! கையை அசைக்காதீங்க. இல்லேன்னா ரொம்ப வீங்கிடும்.” அப்போதைய கோபத்தைப் பெரிதாக்கவில்லை என்றாலும் இருவரது மனதிலும் அது காயத்தை ஏற்படுத்தியது. அடுத்து வந்த நாட்களில் மறைத்து வைத்த கோபம் அவ்வப்போது வெளிப்பட்டது.

முழுமையாக இரண்டு நாட்கள் கழித்து விடிகாலையில் மகனுடன் வீட்டுக்கு வந்த அப்பத்தா, ஏதோ பெரிய வித்தியாசத்தை உணர்ந்தார்.

“இங்க பாருங்கம்மா, உங்க அருமைப் பேரன் செஞ்சு வச்சிருக்க வேலையை
ப் பாருங்க. நாலு காசு பார்த்ததும் காச வாரி இறைக்க ஆரம்பிச்சாச்சு. இந்தக் காரோட விலை ஒரு கோடிக்கும் மேல இருக்கும். எல்லாம் சேர்த்துக்கிட்ட மகராசியோட … ” வாசலில் நின்றிருந்த ஜாகுவார் காரைப் பார்த்த சோமசுந்தரம் வழக்கம் போல மகனை வாழ்த்த ஆரம்பித்தார்.

“சும்மா வாய் புளிச்சதோ மாங்காய் புளிச்சதோன்னு பேசாத தம்பி. எம் பேரன் அப்படி பொறுப்பில்லாதவன் கிடையாது. என்ன தான் பேசவே இல்லேன்னாலும் இவ்வளவு பெரிய விஷயத்தில் எல்லாம் யோசிச்சு தான் முடிவெடுப்பான்.”

“என்னத்த யோசிச்சானோ? இங்கே நின்ன பழைய கார் இரண்டையும் காணோம், புதுசா ஒன்னு நிக்குது. இதுக்கு மேல என்னத்தக் கேக்குறது? நான் இப்பவே அவனைக் கூப்பிட்டு நாலு கேள்வி கேட்கத் தான் போறேன்.”

இவர்கள் இருவரும் வாசலில் நின்று வாதிட யதேச்சையாக அங்கே வந்த கார்த்திக் இருவரையும் பார்த்து விட்டு, “ஹேய் ஃப்ளவர்! ஃப்ளவர்! யாரோ வந்திருக்காங்க பாரு” என்று மனைவியை அழைத்தான்.

வாசலில் நின்ற தாயும் மகனும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டே உள்ளே விரைந்தனர்.

அவனைக் கண்டு கொள்ளாமல் சென்றவர்களை முந்திக்கொண்டு உள்ளே சென்றான்.

“அதுக்குள்ள எழுந்திருச்சிட்டீங்களா மாப்பிள்ளை? இதோ காப்பி எடுத்துட்டு வரேன்.” உற்சாகமான குரலில் சொல்லிவிட்டுத் திரும்பிய காமாட்சி உள்ளே நுழைந்த இருவரையும் பார்த்து வார்த்தை மறந்து போய் நின்றார்.

“இவங்க யாரு அத்தை? ரிலேடிவா?”

“அத்தையா? நீங்க யாரு தம்பி? எம் பொண்டாட்டி எப்படி உங்களுக்கு அத்தையானா?” மனைவியை முறைத்தபடி கேள்வி கேட்டார் சோமசுந்தரம்.

“கார்த்திக்! எதுக்கு என்னை ஏலம் போட்டீங்க?” என்றபடி வந்த மலர்விழி அன்னையைப் பின்பற்றி சிலையாக நின்றாள். அடுத்த சில நிமிடங்களில் அந்த இடம் பூகம்பம் வந்து ஓய்ந்தது போலானது.

“யாரோ எக்கேடும் கெட்டுப் போங்க” என்று சோமசுந்தரம் தனது நண்பர்களைத் தேடிப் போய்விட்டார்.

அப்பத்தா யாருடனும் பேசவே இல்லை. காமாட்சியை நினைத்தால் அவருக்கு எரிச்சலாக இருந்தது. பேரனைப் பற்றி நினைத்துக் கொண்டார். அவன் மனம் என்ன பாடுபட்டிருக்கும் என்று நினைக்கும் போதே உள்ளம் தடுமாறியது. வயதான காலத்தில் மாடியேற இயலாமல் உடனே அவனுக்கு அழைப்பு விடுத்தார்.

“எலேய்! பேராண்டி! விடிஞ்சதுக்கு அப்புறமும் தூக்கம் கேக்குதா உனக்கு? இங்கே என்னென்னவோ நடந்திருக்கு. விரசா கீழே இறங்கி வா.”

மறுமுனையில் பதிலே இல்லை. மூட்டு வலியைப் பொருட்படுத்தாது மூச்சு வாங்க மாடியேறினார். அங்கே காலியான வீடு அவரை வரவேற்றது. நெஞ்சில் கைவைத்து கீழே உட்கார்ந்து விட்டார்.

“மொத்தமா காலி செஞ்சிட்டு போயிட்டாங்களா? இங்கேயே தானே இருக்கோம், ஒரு வார்த்தை கூட சொல்லலையே?” என்ற மலர்விழியைக் கேள்வி கேட்டு ஒரு வழி செய்துவிட்டார்.

“வாடியம்மா மகராசி! இங்கேயே தான் இருக்கீங்களா? இங்கே இருந்த சாமானெல்லாம் சத்தமில்லாம பறந்து போயிருக்குமோ? அதனால தான் உங்களுக்குக் கேட்கல போல. அவன் புல்லட் கூட சத்தம் போடாமல் போயிருக்கு பாரேன்.”

“அப்படி இல்லை அப்பத்தா! நாங்க உள்ளேயே இருந்திட்டோம்.. அதான்.. சத்தம் கேட்கவே இல்லை.”

“நாள் கணக்கா வீட்டு வாசலுக்குக் கூட வரமுடியாத அளவுக்கு என்ன வேலை?” என்றவர் அடுத்து சென்சார் இல்லாமல் கேள்வி கேட்க கார்த்திக் அவளது உதவிக்கு வந்தான்.

“என்ன பாட்டி, இப்படி எல்லாம் பேசறீங்க? யாரோ சொல்லாமல் கொள்ளாமல் வீட்டைக் காலி பண்ணிட்டுப் போனதுக்காக உங்க சொந்த பேத்தியை இப்படித்தான் கேள்வி கேட்டு டார்ச்சர் பண்ணுவீங்களா? அவங்க இல்லேன்னா வாடகைக்கு ஆளே கிடைக்க மாட்டாங்களா? ஃப்ளவரோட அம்மாவுக்குக் கூட அவங்களைப் பிடிக்கலை, அவங்க சொல்லாமல் போனதே நல்லது.” எல்லாம் தெரிந்தவன் போலத் தீர்ப்பு வழங்கிவிட்டவனைப் பார்க்க மறுத்த அப்பத்தா, பேத்தியை முடிந்தவரை முறைத்தார்.

“யாரோவா? விவரம் தெரிஞ்ச நாளா நாயா, பேயா குடும்பத்துக்காக உழைச்சு ஓடா தேய்ஞ்சு போனவனுக்கு நல்ல பேரு வாங்கிக் கொடுத்திட்ட ஆத்தா. ஒரு நிலைக்கு வார வரைக்கும் அண்ணன் தயவு தேவைப்பட்டுச்சு. இப்போ ரெக்கை முளைச்சாச்சில்ல, இப்படித்தான் இருக்கும். காலங்காலமா எல்லா இடத்திலயும் நடக்கிறது தான், என் வீட்டில அப்படி நடக்காதுன்னு நினைச்சது என் தப்பு. எல்லாம் சுயநலம் பிடிச்சவங்க. நன்றி கெட்ட மனுஷங்ளோட இருக்கிறத விட அவன் எங்கேயோ போய் பொண்டாட்டி புள்ளையோட சந்தோஷமா இருக்கட்டும்.”

எத்தனை பேசினாலும் தனது ஆதங்கம் அடங்காது என்று புரிந்தவர் மௌனமாகி விட்டார். பேரனின் இருப்பிடம் பற்றி யாரிடம் கேட்பது என்று யோசிக்கும் போது கடையில் வேலை செய்யும் சிலரின் முகங்கள் அவரது சிந்தையில் வந்து போனது. நேரடியாக கடைக்கே சென்று விடலாம் என்று முடிவு செய்து அங்கிருந்து கிளம்பினார்.

“பொண்ணைக் கல்யாணம் செஞ்சே ஒரு மாசம் ஆயாச்சு. அதுக்கு முன்னாடி எத்தனை நாள் பழக்கமோ? ஒரு நாள் ஒரு போது கூட அவ குடும்பத்தைப் பத்தி தெரிஞ்சுக்கணும்னு தோணவே இல்லை போல!” என்று போகிற போக்கில் சத்தமாகச் சொல்லிவிட்டே கீழே இறங்கினார்.

கார்த்திக், மலர்விழியைக் கேள்வியாகப் பார்க்க அவள் பேச்சற்று தலைகுனிந்து நின்றாள்.

“இப்படி நின்னா என்ன அர்த்தம் ஃப்ளவர், என்ன நடக்குது உங்க வீட்டுல? உன் ஃபேமிலி பத்தி நீ எதையும் சொன்னதில்லை. நானும், உனக்கு சொல்றதுக்கு கஷ்டமாக இருக்குன்னு நினைச்சு அதைப் பத்தி கேட்டதே இல்லை. உன் பேக் ரவுண்ட் எதுவா இருந்தாலும் எனக்கு நீ தான் வேணும்னு நினைச்சேன். அது தப்புன்னு இந்த நிமிஷம் தோணுது. இப்போவாவது சொல்லு. இங்கே இருந்தது யார்? உனக்கு அவங்க என்ன ரிலேஷன்?”

“அது .. எங்க அண்ணனும் அண்ணியும்.. அவங்களும் லவ் மேரேஜ் தான். ஆனால்..” அவள் பேசப் பேச கார்த்திக் வாயடைத்து நின்றான்.

“சரி, கிளம்பு போகலாம்.”

“எங்க?”

“உங்க அண்ணன் வீட்டுக்கு?”

மேலே வராமல் கீழேயே நின்ற காமாட்சி சற்று நேரத்தில் மாமியார் கோபத்துடன் வெளியே செல்வதைக் கண்டார். அடுத்து, மலர்விழியும் கார்த்திக்கும் கூட வெளியே செல்ல ஆயத்தமாவதை அறிந்து குழப்பம் அடைந்தார். ஒரு வேளை கர்ப்பமான சம்யுக்தாவிற்கு ஏதேனும் பிரச்சினையோ என்று பதறினார். தானாடாவிட்டாலும் சதை ஆடும் என்பது இது தானோ??

“மலரு! என்ன ஆச்சு? மாடி வீட்டுல எதுவும் பிரச்சினை இல்லேல்ல?” மலர் பதில் சொல்ல முடியாமல் நிற்க, கார்த்திக் பேசினான்.

“உங்க பையனும் மருமகளும் வீட்டைக் காலி பண்ணிட்டுப் போயிட்டாங்க. வேற எந்தப் பிரச்சினையும் இல்லை.”

காமாட்சி அந்த இடத்திலேயே பரிதாபமாக நிற்க, மற்ற இருவரும் காரில் பறந்தனர். காமாட்சி, வெகு நாட்களுக்குப் பிறகு மகனுக்காக ஏங்கினார். அவன் கண்ணெதிரே இருந்த வரை தனது பிடிவாதத்தை விடாமல் இருந்தவருக்கு இப்போது கொஞ்சம் பயம் வந்தது. அவனாகவே திரும்பி வரவேண்டும் என்று தான் இப்போதும் நினைத்தார். அதற்கு சாத்தியமே இல்லை என்று அவருக்குத் தெரியாமல் போனது.
********

சனிக்கிழமை காலை எட்டு மணிக்கு மேலாகியும் சம்யுக்தா ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தாள். இரண்டு நாட்களாக தூக்கமில்லாமல் ஓயாமல் புலம்பிக் கொண்டிருந்தவளைச் சமாளிக்க மிகவும் சிரமப்பட்டிருந்தான் பிரபாகரன்.

“பிரபா! எனக்கு ரொம்ப பயமா இருக்கு. எங்க அப்பா அம்மா தான் நாம வேணாம்னு கண் காணாமல் போயிட்டாங்க. உங்க வீட்டுலயாவது சேர்ந்து இருப்போம்னு நினைச்சேன். இப்படி ஆகிடுச்சே.”

“எப்படி ஆகிடுச்சு? எல்லாம் நல்லாத்தான் இருக்கு. நீ அமைதியா தூங்கு. மணி இரண்டாகப் போகுது.”

“தூக்கமே வரலயே. நாம இரண்டு பேர் மட்டும் எங்கேயோ தனியா இருக்கிற மாதிரி ஒரு ஃபீல் வருதே. அங்கேன்னா அத்தை, ஆச்சி எல்லாம் இருந்தாங்க.”

“ஆமா.. இவங்க அத்தையும் ஆச்சியும் தான் இவங்க கூடவே இருந்தாங்க. ஏதாவது சொல்லிடப் போறேன், கம்முனு தூங்குடி.”

“ஹுக்கும். தூக்கம் வந்தா தூங்க மாட்டாங்களா? அது தான் வரவே மாட்டேங்குதே!”

“ஏய் பொண்டாட்டி! நான் வேணும்னா ஹெல்ப் பண்ணவா?” அவனது குரல் முற்றிலும் மாறியது.

“ஹெல்ப்பா? எதுக்கு?”

“தூக்கம் வரலேன்னு சொன்னியே.. அதுக்குத் தான்!” கண்களில் மையலோடு நெருங்கியவனைத் தள்ளி விட்டாள் அவள்.

“ம்ச்.. விளையாடாதீங்க பிரபா!”

“ஏய்! என்னைப் பார்த்தா விளையாடற மாதிரி தெரியுதா உனக்கு? கல்யாணம் ஆகி ஆறேழு மாசமாச்சு. யாருக்குமே அமையாத அமோகமான முதல் ராத்திரி. அதுக்கப்புறம் இரண்டு பேரும் சேர்ந்து இருந்தாலே புலம்பறதுக்குத்தான் நேரம் சரியா போகுது. ஒரு நாளாவது சந்தோஷமா இருந்ததா எனக்கு ஞாபகமே இல்லை. இப்படித் தான் நம்ம வாழ்க்கை போயிட்டிருக்கு! இந்த லட்சணத்தில எப்படி பேபி வந்ததுன்னே எனக்குத் தெரியல. ஒரு வேளை இந்தப் புராணத்தில எல்லாம் வர்ற மாதிரி ஏதாவது நடந்திருக்குமோ?”

“அடப்பாவி! என்ன பேசறேன்னு உனக்கே புரியுதா?”

“எனக்குப் புரியலன்னா பரவாயில்லை. நீங்களே யோசிச்சு பாருங்க டாக்டர் மேடம். நம்ம ரெண்டு பேரோட கல்யாண வரலாற்றைத் திரும்பிப் பார்த்தா, இந்தக் குழந்தை வந்தது நிச்சயம் ஒரு அதிசயம்தான்! இல்லேன்னா இந்த சினிமால காட்டுவாங்களே வில்லன் ரேப் பண்ணதும் ஹீரோயினுக்கு குழந்தை பிறக்கற மாதிரி… நம்ம விஷயத்துலயும் அந்த மாதிரி ஒரே அட்டெம்ப்ல ஏதாவது அதிசயம் நடந்திருக்கணும்!”

“அச்சோ பிரபா! உங்களுக்கு இன்னைக்கு என்ன ஆச்சு? எதுக்கு இப்படி எல்லாம் பேசறீங்க? இங்கே வந்ததுல இருந்து நீங்க சரியே இல்லை.”

“ஹேய்! இப்போ தான் நான் சரியா இருக்கேன். புதுசா கல்யாணம் ஆனவன் இப்படிப் பேசாமல் வேற எப்படிப் பேசுவான்.. ம்.. நீ தான் மனுஷனோட ஃபீலிங்ஸ புரியாத மாதிரி இருக்க.”

“ஃபர்ஸ்ட் ட்ரைமெஸ்டர்ல கேர்ஃபுல்லா இருக்கணும்னு சொன்னாங்க, ஞாபகம் இருக்கா?”

“இல்லேன்னா மட்டும்.. “ என்று நொடித்துக் கொண்டவன் அவளுக்கு முதுகு காட்டி படுத்துக் கொண்டான். சம்யுக்தா அவனுக்குக் கோபமோ என்று பயந்து போனாள்.

“பிரபா! என்ன ஆச்சு? நான் எதுவும் தப்பா சொல்லலை.” அவள் குரலில் தெரிந்த பதட்டத்தில் பிரபாகரன் எழுந்து அமர்ந்தான். அவளை சமாதானம் செய்து தூங்க வைப்பது எப்படி என்று யோசித்துப் பேச ஆரம்பித்தான். அதற்குப் பலன் இருந்தது.

“ஓ மை டியர் சம்யூ!! நீ எதுக்கும் டென்ஷன் ஆகாமல் இரு. அது தான் இப்போ முக்கியம். இந்த கம்யூனிட்டில பெரிய பார்க் இருக்கு. எத்தனை வாண்டு எப்படி எல்லாம் விளையாடுதுன்னு போய் பாரு. அந்த வீட்டில நாலு சுவத்துக்குள்ள உட்கார்ந்து அவங்க எப்போ பேசுவாங்கன்னு ஃபீல் பண்ணிட்டே எத்தனை நாள் தான் இருக்கிறது? கொஞ்ச நாள் எல்லாவற்றையும் மறந்து நம்ம இரண்டு பேரையும் வயித்துல இருக்கிற குட்டியையும் மட்டுமே நினை.”

“டோன்ட் வொர்ரி! நீ ஹேப்பின்னு சொல்றீங்க. கரெக்ட்??”

“அதே! அதே!” என்றவன் தொடர்ந்து பேசியே தூங்க வைத்த போது மணி அதிகாலை நான்கை நெருங்கி இருந்தது.

அதற்கு மேல் தூக்கம் வராமல் எழுந்த பிரபாகரன் புது வீட்டின் பால்கனியில் தோட்டத்தை அமைக்கும் முயற்சியில் இறங்கினான். வெகு நேரம் தனது செடிகளுடன் ஒன்றி இருந்தவனை விடாது ஒலித்த அழைப்பு மணி வாசலுக்கு விரைய வைத்தது.

அந்த நேரத்தில் யார் என்று யோசித்தபடி கதவைத்
திறந்தவன் நிச்சயமாக அந்த நேரத்தில் அவர்களை எதிர்பார்க்கவில்லை. கதவைப் படாரென்று மூடிவிடலாமா என்று யோசித்தபடி நின்றான்.




 

Author: SudhaSri
Article Title: அத்தியாயம் -35
Source URL: Nectar Novels-https://nectarnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.