அத்தியாயம் –9
பிலிப் அவ்வப்போது போர் முனைக்குச் செல்வதும், அரண்மனை திரும்புவதுமாக இருந்தார். அவரைப் பொருத்த மட்டில் அண்டை நாடுகள் அனைத்தையும் முதலில் தனது ஆளுகைக்குள் கொண்டு வர வேண்டும். அப்புறம் படிப்படியாக உலக நாடுகள் அனைத்தும் கைப்பற்றப்பட வேண்டும்.
இதற்கான வழிமுறைகளையும் திட்டங்களையும் வகுத்துக் கொண்டே இருந்தார். தனது நம்பிக்கைக்குரிய தளபதி பார்மீனியாவுடன் அடிக்கடி நாடுகளின் வரைபடங்களை வைத்துக் கொண்டு விவாதிப்பார்.
வீரர்களை நன்றாக உற்சாகப்படுத்துவார். அவர்களிடையே நம்பிக்கை தரும் வகையிலான உரை நிகழ்த்தி உசுப்பேற்றுவார். வெற்றி ஒன்றையே தன் வாழ்நாளின் குறிக்கோளாக எண்ணிச் செயல்பட்டு வந்தார் பிலிப்.
இவ்வாறு நாடுகளை அடிமைப்படுத்துவதில் அதிக முனைப்பும் தீவிரமும் காட்டி வந்த போதிலும், தனது மகனைப் பற்றிய எண்ணமும் அவர் மனதிற்குள் வளர்ந்து கொண்டே இருந்தது.
போர் முடிந்து அரண்மனை திரும்பியதும் முதல் காரியமாகத் தனது மகனைக் காணச் செல்வார். அவனைப் பார்த்துக் கொஞ்சி சிறிது நேரம் விளையாடிய பிறகே தனது அடுத்த காரியத்தில் இறங்குவார்.
சில நாட்கள் ஒலிம்பியஸ் அலெக்சாண்டரைக் கொஞ்சிக் கொண்டிருப்பதை மறைந்திருந்தும் கவனித்துள்ளார். தனது மகனை அவளைப் போன்ற குணாதிசயத்துடன் வளர்த்து விடுவாளோ என்கிற சந்தேகம் அவருக்கு இருந்தது.
ஆனால் ஒலிம்பியஸோ, தனது மகனுக்கு கிரேக்க மன்னர்களின் வீரக்கதைகளைச் சொல்லிக் கொண்டிருப்பாள். அதனால் சமாதானம் அடைந்தார் பிலிப்.
எப்படியோ ஒருவகையில் தன் மகனையும் வீராதிவீரனாக அவள் வளர்த்துக் கொண்டிருப்பதாக நம்பினார்.
ஆனாலும் சில சமயங்களில் அவர் மனம் பதைபதைக்கும். ஏனென்றால் கட்டிலில் மகன் அலெக்சாண்டரை ஒருபுறம் படுக்க வைத்திருப்பாள். மற்றொரு புறமோ பேராபத்தை விளைவிக்கும் மலைப்பாம்பையும் படுக்க வைத்திருப்பாள். மகனைக் கொஞ்சுவதைப் போல அதனையும் அவள் கொஞ்சிக் கொண்டிருப்பாள்.
இந்தப் பாம்பால் தனது மகனுக்கு ஆபத்து விளைந்து விடுமோ என்ற அச்சம் பிலிப்பிடம் ஏற்பட்டது. எனவே தனது மனைவியைப் பலமுறை கண்டித்திருக்கிறார். ஆனால் அவளோ இந்தச் செயல்பாட்டில் இருந்து தன்னை மாற்றிக் கொள்ளவே இல்லை.
எனினும் மகனிடம் பாம்பைக் காட்டிலும் வீரக்கதைகளே அதிகளவில் பாதிப்பை ஏற்படுத்தி இருப்பதை அவர் புரிந்து கொண்டார்.
எப்படியென்றால் தந்தையைப் பார்க்கும் மகன், சிறிய கம்பைக் கையில் வைத்துக் கொண்டு சண்டை போடுவதைப் போல சுழற்றி சாகசம் செய்வான்.
இது பிலிப்பிற்கு நிறைவைத் தந்தது.
ஒருநாள் பூஜையை முடித்துக் கொண்டு அறையில் இருந்து வெளியே வந்தார் பிலிப். அப்போது அலெக்சாண்டர் தனது நண்பனோடு வாள் சண்டை செய்து கொண்டிருந்தான்.
சுவாரஸ்யமாகச் சென்று கொண்டிருந்த அந்த சண்டைக் காட்சியை மறைந்திருந்து ரசித்துப் பார்த்துக் கொண்டிருந்தார்.
சண்டையில் முதல் வெற்றி அலெக்சாண்டருக்கே.
சந்தோஷத்தில் குளித்தார் பிலிப்.
பின்னர் அடுத்த போட்டி தொடங்கியது. வேகமாகவும் புத்திசாலித்தனமாகவும் சுழற்றிச் சுழற்றி சண்டையிட்ட மகன், இம்முறையும் வெற்றியை ஈட்டினான்.
உற்சாகத்தின் எல்லைக்கே சென்றார் பிலிப்.
மகனின் வாள் சண்டை அவர் மனதில் ஆழமாகப் பதிந்து போயிருந்தது. தனது அமைச்சர்களிடமும், தளபதிகளிடமும் இதனைப் பற்றிப் பெரிதாக அங்கலாய்த்தார்.
“எனது மகன் அலெக்சாண்டருக்கு வீர விளையாட்டுகளில் ஆர்வம் வந்து விட்டது. எனவே அவனுக்கு முறையாக இதனைக் கற்பிக்க வேண்டிய காலக்கட்டம் இதுவே என்று நான் நம்புகிறேன். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?” என்று அவர்களிடம் யோசனை கேட்டார்.
எல்லோரும் அதனை ஆமோதிக்கவே, தனது மகனுக்கு சண்டைப் பயிற்சிகளும், அறிவு போதனைகளும் கற்றுக் கொடுக்க ஒரு சிறந்த ஞானியைத் தேர்வு செய்ய விரும்பினார். ஒவ்வொருவரும் ஒவ்வொரு பெயரைக் கூறினர். இதில் ‘லியோனிடஸ்’ என்பவரைத் தேர்வு செய்தார் மன்னர் பிலிப்.
மிகச் சிறந்த அறிவாளி. கல்வியாளர். அனைத்து வித்தைகளும் கற்றறிந்தவர். இதற்கெல்லாம் மேலாக ஒலிம்பியஸின் உறவினர்.
தனது மகனிடம் லியோனிடஸிடம் பாடம் கற்க வேண்டும் என்பதை அறிவித்தார். ஒலிம்பியஸும் இதனை ஏற்றுக் கொண்டாள்.
காரணம், அலெக்சாண்டர், எக்காரணம் கொண்டும் தந்தையின் பாசத்திற்கு ஆளாகி விடக் கூடாது என்றும், தன்னிடம் மட்டுமே அன்புள்ளவனாக இருக்க வேண்டும் என்பதிலும் அதிக அக்கறை காட்டி வந்தாள் ஒலிம்பியஸ்.
அன்று காலையில் லியோனிடஸ் பாடத்தைத் தொடங்கி விட்டார்.
காலையில் எழுந்த அலெக்சாண்டரை முதலில் காலைக் கடன்களை செலுத்தி வருமாறு கட்டளையிட்டார். அது அவருக்குப் புதிதாக இருந்தபடியால் ‘திருதிரு’வென விழித்தார். ஆனாலும் ஆசிரியருக்குக் கட்டுப்பட்டு நடக்க வேண்டும் என்று தந்தை ஆணையிட்டிருந்ததால், வேறு வழியின்றி ஆசிரியரின் கட்டளைக்கு இணங்கினார்.
அதன் பின்னர் உடற்பயிற்சி.
வியர்க்க விறுவிறுக்க பல்வேறு பயிற்சிகளைக் கற்றுக் கொடுத்தார். சிறுவனாக இருந்ததால் அலெக்சாண்டருக்கு இதில் உற்சாகம் வந்தது.
“உடல் திடமாக இருந்தால் மட்டுமே நல்ல சிந்தனைகள் உதயமாகும். வாழ்க்கையில் சுறுசுறுப்பு மிகுந்து காணப்படும். எதையும் புத்திசாலித்தனமாக அணுகும் சிந்தனை உருவாகும். தைரியம் அதிகரிக்கும். நினைத்த காரியத்தில் வெற்றி கைகூடும்” என்று அறிவுறுத்தினார் லியோனிடஸ்.
இளம் பிஞ்சு. தவறுகளும், பிழைகளும், குற்றங்களும் உள்ளே நுழைந்திராத மனம். எனவே ‘பசுமரத்தாணி போல’ அந்தச் சிறுவனின் உள்ளத்திற்குள் பதிந்தன இந்த அறிவுரைகள்.
அப்புறம் கொஞ்ச நேரம் கிரேக்க கடவுளர்களைப் பற்றிய போதனை. கடவுளைப் பூஜித்த பின்னரே உணவு. உண்ட பின்னர் சற்று நேரம் ஓய்வு. அப்போது சாதாரண முறையில் அலெக்சாண்டரோடு உரையாடினார். அதன் பின்னரே பாடங்கள் கற்றுத் தரப்பட்டன.
உடலின் அவயங்கள் பற்றியும் அதன் செயல்பாடுகள் பற்றியும் சொல்லித் தரப்பட்டது. இது உயிரியல் பாடம்.
அப்புறம் சரித்திரம்.
கிரேக்க மன்னர்களின் சரித்திரக் கதைகள் மட்டுமல்லாமல், பிற தேசத்து மன்னர்களின் சரித்திரங்களும் கற்றுத் தரப்பட்டன. அப்புறம் பூகோளம். வரைபடத்தை வைத்து கிரேக்கம் எங்கே இருக்கிறது, அதனருகே வேறு என்னென்ன நாடுகள் இருக்கின்றன, நதிகள் எங்கெங்கே இருக்கின்றன, மலைகள், சாலைகள் என்று அனைத்தையும் அச்சிறுவனுக்கு ஆழமாகச் சொல்லிக் கொடுத்தார் குரு.
வான சாஸ்திரம் பற்றியும் கற்றுக் கொடுத்தார். சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள், கோள்கள் பற்றியெல்லாம் கற்றுத் தரப் பட்டன.
முக்கியமாகக் கணிதம் சொல்லித் தரப்பட்டது. கூட்டல், கழித்தல் மட்டுமல்லாமல் வரவு செலவுக் கணக்குகள் பற்றியும், நிதி நிலைமை பற்றியும் கூட விரிவாக அக்குழந்தைக்குக் கற்றுக் கொடுக்கப்பட்டது.
ஒலிம்பியஸின் உறவினர் என்ற நினைப்பை எல்லாம் மூட்டைக் கட்டி விட்டு, ஒரு குரு என்கிற இடத்தில் இருந்தே அவர் கற்றுக் கொடுத்ததை அலெக்சாண்டரும் நன்றாகப் புரிந்து கொண்டார்.
மகன் மிகச் சிறப்பாகக் கற்று வருவதை அறிந்த பிலிப்பிற்கு மிகவும் சந்தோஷம்.
தனக்கு நல்ல வாரிசு கிடைத்து விட்டது என்ற நம்பிக்கையும் வளர்ந்தது.
இது போன்ற தருணத்தில் ஒருநாள் மாலை தோட்டத்தில் காற்று வாங்கிக் கொண்டிருந்த பிலிப், மகனை அங்கே அழைத்து வருமாறு உத்தரவிட்டார்.
தந்தையைச் சந்திப்பதற்காகத் துள்ளல் போட்டுக் கொண்டு வந்தான் அச்சிறுவன். மகனின் கரத்தைப் பற்றிக் கொண்ட தந்தை, மெல்ல தோட்டத்தில் அழகாக அமைக்கப்பட்டிருந்த வழித்தடத்தில் நடந்து கொண்டே பேசத் தொடங்கினார்.
“உனக்கு நல்ல பயிற்சிகள் தருவதாகவும், அதனை நீ முழுவதுமாகக் கற்றுத் திறமைசாலியாக மின்னுவதாகவும் உன் குரு தெரிவித்தார். சந்தோஷமாக இருக்கிறது...” என்றார்.
“நன்றி தந்தையே. தங்களைப் போலவே வீரம் நிறைந்தவனாக நிச்சயம் விளங்குவேன். உலக நாடுகள் அனைத்தையும் வென்றெடுப்பேன்” என்றான் சிறுவன்.
இதைக் கேட்டதும் பிலிப்பிற்கு மகிழ்ச்சி தாங்கவில்லை. மகனை அப்படியே தூக்கி எடுத்து உச்சி முகர்ந்தார்.
“மகனே, எனக்குப் பல குழந்தைகள் இருக்கின்றனர். உனக்கு மூத்த சகோதரர்களும் உண்டு. ஆனாலும் என்னைப் பொருத்த மட்டில் உன் தாய் நல்லவளா, கெட்டவளா என்பதை விடவும், என் பட்டத்து ராணி என்பதில் எனக்கு மாற்றுக் கருத்து கிடையாது. அவளது மகன் நீ. என்னுடைய பாசத்திற்குரிய மகனும்கூட. உனக்கு இவ்வாறு சிறந்த பயிற்சி அளிப்பதற்குக் காரணமே, எனக்குப் பின் இந்த நாட்டை நீதான் ஆள வேண்டும் என்பதற்காகத்தான். இன்னும் சிறப்பான பயிற்சிகளையும் உனக்கு அளித்து, உன்னை ஒரு சர்வ வல்லமை படைத்தவனாக மாற்றத் தீர்மானித்திருக்கிறேன். எனக்குப் பின்னர் இந்த அரியணையில் அமரப் போகிறவன் நீதான். நீ மட்டுமேதான்” என்றார் சற்று உணர்ச்சி வசப்பட்டவராக.
இதைக் கேட்டதும் சிலிர்த்துப் போனான் அலெக்சாண்டர்.
“மாசிடோனியாவிற்கு அருகாமையிலுள்ள பல நாடுகளை நான் வென்றெடுத்து விட்டேன். நமது நாட்டின் பரப்பளவைப் பெருகச் செய்து விட்டேன். இன்னும் பல நாடுகளை வெல்வதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறேன். இருந்தாலும் ஒரேயொரு நாட்டை வெல்கிறவரை நான் முழுமையான வெற்றியைப் பெற்று விட்டதாக மகிழ்ச்சி அடையப் போவதில்லை...” என்று சொல்லி நிறுத்தினார் பிலிப்.
“அது எந்த நாடு தந்தையே?” என்று ஆர்வத்துடன் கேட்டான் அலெக்சாண்டர்.
“அது கிழக்குக் கோடியில் இருக்கும் பாரத தேசம். அது ஒரு வளமான நாடு. நம் நாட்டின் வீர காவியங்களான ஒடிஸி, இலியட் போல அந்நாட்டில் இராமாயணம், மகாபாரதம் போன்ற காவியங்கள் உள்ளன. அவை உலகப் புகழ் பெற்றவை. வீரத்தை மட்டுமல்லாமல், போர்த் தந்திரம், ஒழுக்கம், பக்தி போன்ற பல்வேறு அம்சங்களையும் உணர்த்தும் அருமையான காவியங்கள் அவை. அது மட்டுமல்லாமல் உலகிலேயே வற்றாத ஜீவநதி என்று சொல்லப்படுகிற கங்கை, அங்குதான் பாய்ந்தோடிக் கொண்டிருக்கிறது. அது மட்டுமல்லாமல் வைரம், வைடூரியம், மாணிக்கம், முத்து, பவளம் போன்ற அனைத்தும் அங்குக் கொட்டிக் கிடக்கின்றன. இப்படிப்பட்ட ஒரு நாட்டை வெல்வதுதான் என் ஒரே கனவு. ஒருவேளை இந்தியாவை வெல்வதற்குள் நான் மரணமடைய நேரிட்டால், மகனே, நீதான் அதனை வென்றெடுத்து என் ஆசையை நிறைவேற்றி வைக்க வேண்டும்” என்று மகனின் இரண்டு கரங்களையும் தனது கைகளுக்குள் அள்ளி வைத்துக் கொண்டு லேசாகத் தளும்பினார் பிலிப்.
“ஆனால் அந்நாட்டு மன்னர்கள் வீரம் செறிந்தவர்கள் என்பதை மட்டும் எப்போதும் நினைவில் வைத்திருப்பது அவசியம்” என்று கூடவே எச்சரிக்கவும் செய்தார்.
தந்தை இவ்வாறு பேசி முடித்ததும் அலெக்சாண்டர் வாய் திறந்தான், “தந்தையே, ஒருக்கால் தங்களால் இந்தியாவை வெல்ல முடியாமல் போனால், அதனை உங்கள் மகனாகிய அலெக்சாண்டர் சாதிப்பான். இது உறுதி” என்றான். இதைக் கேட்ட பிலிப் மனம் குளிர்ந்து போனார்.
தந்தை இவ்வாறு மனம் விட்டுப் பேசியது சொல்ல முடியாத நிறைவை அளித்தது அலெக்சாண்டருக்கு. அதைவிட தந்தையையே கவர்ந்து விட்ட பாரத தேசம் எப்படி இருக்கும் என்ற ஆவலையும் அவன் உள்ளத்தில் தூண்டி விட்டது.
தனது குருவிடம் இந்தியாவைப் பற்றி விரிவாகக் கேட்கத் தொடங்கினான். மேலும் அந்த நாட்டைப் பற்றிய எண்ணங்களைத் தனது கற்பனைக் குதிரையைத் தட்டி விட்டு, ரசித்தான். இந்தியாவை வெல்ல வேண்டுமென்றால் அதற்கு முன்னர் எந்தெந்த நாடுகள் எல்லாம் இடையூறாக இருக்கின்றன என்பதைப் பற்றித் தெரிந்து கொள்ளத் தொடங்கினான். அந்த நாடுகளை வெல்வதற்கு படைபலம் எவ்வளவு தேவைப்படும் என்று அப்போதே யோசிக்கத் தொடங்கி விட்டான்.
மன்னர் இரண்டாம் பிலிப்பிற்கு குதிரை என்றால் கொள்ளைப் பிரியம். எவ்வளவு விலை என்றாலும் பரவாயில்லை அதனை வாங்கச் சொல்லி விடுவார்.
இப்படி குதிரைகளின் மீதான காதலால்தான் குதிரைப் படையையே அவர் உருவாக்கினார். அதனைப் பலமாகவும் மாற்றினார். பிலிப்பின் ஒவ்வொரு போரிலும் அவருக்கு வெற்றியைப் பெற்றுத் தந்தது இந்தக் குதிரைப்படைதான்.
இதனால் முரட்டுக் குதிரையை வைத்திருப்பவர்கள் அதனை பிலிப்பிடம் நல்ல விலைக்கு விற்று வந்தார்கள். அப்படித்தான் தெஸ்ஸாலி என்னும் நாட்டைச் சேர்ந்த ஒருவனும் தனது ‘பியூசெபாலஸ்’ என்னும் குதிரையை மன்னரிடம் விற்பதற்காகக் கொண்டு வந்திருந்தான்.
அரண்மனை வாயிற்காப்பாளனிடம் குதிரையை விற்பனை செய்ய வந்துள்ள சமாச்சாரத்தைத் தெரிவித்தான். அவனும் அதனை உள்ளே படைத்தளபதிகளிடம் தெரிவித்தான்.
மன்னரிடம் விற்க வந்துள்ள குதிரை என்பதால் அதனைப் பார்க்க விரும்பிய தளபதிகள் வெளியே வந்தனர். குதிரையைப் பார்வையிட்டனர். அப்புறம் விலையைக் கேட்டனர்.
அவன் சொன்ன விலையைக் கேட்டு அவர்கள் மயங்கி விழாத குறைதான்.
“ஒரு குதிரையின் விலையைக் கேட்டால் பத்து குதிரைகளின் விலையைக் கூறுகிறாயே!” என்றார் ஒரு தளபதி.
குதிரைக்காரனுக்குக் கோபம் வந்தது. “எனது குதிரையை அத்தனை மட்டமாக எடை போட்டு விடாதீர்கள். இது மிகவும் பலம் வாய்ந்தது” என்றான்.
“ஹ்ஹா... என்ன பெரிய பலம் வாய்ந்தது! இதுவும் மற்ற குதிரைகளைப் போல நான்கு கால்களும் ஒரு வாலும்தானே கொண்டிருக்கிறது...” என்றார் இன்னொரு தளபதி நக்கலாக.
குதிரையின் சொந்தக்காரனுக்கு இன்னும் கோபம் கொப்பளித்தது. “அப்படிச் சொல்வதானால் நான் உங்களுக்கு ஒரு சவால் விடுகிறேன். என் குதிரையை இந்த ஊரில் யாராவது அடக்கி விட்டால் அவர்களுக்கு இலவசமாகவே இதனைக் கொடுத்து விடுகிறேன்” என்றான் கண்களில் கோபம் கொப்பளிக்க.
குதிரைக்காரனின் சவாலைக் கேட்டதும் படைத்தளபதிகள் சற்று ஆடித்தான் போயினர். ஆனாலும், தங்களது இடத்தில் வந்து வேறொரு நாட்டைச் சேர்ந்தவன் இவ்வாறு முறுக்கிக் கொண்டு நிற்பதை அவர்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.
இதனிடையே ஓரிரு தளபதிகள் மட்டும் உள்ளே சென்று மன்னரிடம் குதிரையை விற்பனை செய்ய வந்திருக்கும் சேதியையும், குதிரைக்காரன் விடுத்த சவாலைப் பற்றியும் தங்களால் முடிந்தவரையில் கண், மூக்கு, காது எல்லாம் வைத்து ஓதி விட்டார்கள்.
மன்னருக்குக் கோபம் தலைக்கேறியது. “சவாலை ஏற்பதாக அறிவித்து விடுங்கள். நாளைக் காலை மைதானத்தில் அந்தக் குதிரையை நம்மவர்கள் அடக்கும் நிகழ்ச்சிக்கும் ஏற்பாடு செய்து விடுங்கள். நானும் அந்தப் பொன்னான காட்சியைக் காண்பதற்கு அங்கே வருவதாகவும் தெரிவித்து விடுங்கள்” என்று கூறினார்.
ஆக, நகரம் களைகட்டி விட்டது. போட்டியைக் காண மக்கள் கூட்டம் பெருக்கெடுத்து விட்டது. மைதானம் முழுவதும் நிரம்பி வழிந்தது. பத்துப் பதினைந்து பேர், குதிரையை அடக்கத் தயாராக இருப்பதாக போட்டி ஏற்பாட்டாளர்களிடம் முன்கூட்டியே தங்கள் பெயர்களைப் பதிவு செய்தும் விட்டனர்.
இங்கே அரண்மனையில், போட்டியைக் காண்பதற்காக மன்னர் பிலிப் தயாராகிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த அலெக்சாண்டர் தந்தையைப் பார்த்து, “நானும் தங்களுடன் வருகிறேன் தந்தையே” என்றான்.
இப்படி ஆர்வமாகக் கேட்ட மகனை சற்று நேரம் உற்றுப் பார்த்த பிலிப், “சரி வா!” என்று மகனையும் அழைத்துக் கொண்டு புறப்பட்டார் பிலிப்.
உடை அலங்காரம் செய்து விட்டு தந்தையுடன் மைதானத்திற்குப் புறப்பட்டான் அலெக்ஸாண்டர்.
மைதானமோ மக்கள் வெள்ளத்தில் அலையடித்து ஆர்ப்பரித்தவாறு இருந்தது. மேடையில் மன்னர் பிலிப். அருகே இளவரசர் அலெக்சாண்டர். பக்கத்தில் முக்கிய தளபதிகள்.
மைதானத்தில் நின்ற குதிரையை அடக்குவதற்காக முதலில் களமிறங்கிய வீரன் சற்று நேரத்தில் குதிரையின் ஆவேசத்தைக் கண்டு சற்றுப் பின்வாங்கினான். ஆனாலும் அதனைப் பொருட்படுத்தாத குதிரை முன்னங்கால்களால் பலமாகத் தாக்க முற்பட்டது. சற்று பின்வாங்கினால் பின்னங்கால்களால் பலமாக உதைத்துத் தள்ளியது.
முடியவில்லை. அதன் ஆவேசத்திற்கு ஈடு கொடுக்கவே முடியவில்லை.
அடுத்த வீரன்.
அதற்கப்புறம் இன்னொரு வீரன்.
இன்னொரு வீரன்...
இப்படி பெயரைப் பதிவு செய்திருந்த அத்தனை வீரர்களுமே களமிறங்கினார். ஆனால் குதிரையிடம் உதை மட்டுமே அவர்களால் வாங்க முடிந்தது. குதிரையை அடக்க முடியவில்லை.
பெல்லா நகருக்கே நேர்ந்த பெரும் தலைக்குனிவு.
குதிரைக்குச் சொந்தக்காரன் தனது மீசையை முறுக்கிக் கொண்டே, ‘இன்னும் யாராவது முயற்சி செய்ய இருக்கிறார்களா?’ என்கிற மாதிரி ரொம்ப அலட்சியமாகக் கூட்டத்தை நோக்கிப் பார்வையைச் செலுத்தினான்.
யாருமே இல்லை.
எல்லோரையும் அச்சம் பற்றிக் கொண்டது. அதைவிட தோல்வி பயம் ஆட்கொண்டது. நம்பிக்கை இழந்தவர்களாக அனைவருமே மிரட்சியோடு குதிரையைப் பார்த்தனர்.
இதனைப் பார்த்த அலெக்சாண்டருக்கு இரத்தம் கொதித்தது. சாதாரண குதிரையை அடக்க முடியவில்லை என்றால் அது மாசிடோனியர்களின் வீரத்திற்கே இழுக்கு.
தனது தந்தையின் காதருகே, “இந்தக் குதிரையை நான் அடக்கிக் காண்பிக்கட்டுமா?” என்று கிசுகிசுத்தான்.
சிறுபிள்ளை. பாவம். விளையாட்டுத்தனமாக இவ்வாறு கேட்கிறான் என்று நினைத்த பிலிப், மகனின் தலையைத் தடவிக் கொடுத்தாரே தவிர, பதில் சொல்லவில்லை. ஆனால் வேறு யாராவது துணிச்சலுடன் குதிரையை அடக்கத் தயாராக வருகின்றனரா என்று மட்டும் கூட்டத்தை ஊடுருவிப் பார்த்துக் கொண்டிருந்தார்.
அலெக்சாண்டரால் அமைதியாக இருக்க முடியவில்லை. மீண்டும் தந்தையிடம், “நான் போகட்டுமா தந்தையே?” என்று கேட்டான்.
இப்போது பிலிப் மகனைக் கொஞ்சம் அழுத்தமாகப் பார்த்தார். ‘உண்மையாகவே விளையாட்டுத்தனமாகத்தான் சொல்கிறானா? அல்லது உறுதியாகச் சொல்கிறானா?’
“பதில் சொல்லுங்கள் தந்தையே”
மகன் உண்மையாகவே ஆர்வத்துடன்தான் கேட்கிறான் என்பதை உணர்ந்து கொண்ட பிலிப், ‘ஆசையைக் கெடுக்க வேண்டாம்’ என்று நினைத்தார். “சரி, போய் குதிரையை அடக்கி வீரத்திருமகனாகத் திரும்பி வா” என்று வாழ்த்தி அனுப்பி வைத்தார்.
அப்படியே தனது தளபதிகளிடம், தன் மகனுக்கு ஆபத்து ஏதும் ஏற்பட்டு விடாதவாறு பாதுகாக்குமாறும் உத்தரவிட்டார்.
அலெக்சாண்டர் களத்தில் இறங்கப் போவதை அறிந்த கூட்டம் ஆரவாரம் செய்யத் தொடங்கியது. ஆனால் சிலரோ, ‘சிறுவனான இவனால் எப்படி குதிரையை அடக்க முடியும்?’ என்று சந்தேகமும் இளக்காரமுமாக நினைத்தனர். ஆனால் வெளியே சொல்லவில்லை. மன்னரின் மகன் ஆயிற்றே! யார் காதிலாவது விழுந்தால் பிரச்சினையாகி விடுமே என்று அஞ்சி அடக்கிக் கொண்டனர்.
மைதானத்திற்குள் இறங்கிய அலெக்சாண்டருக்கு வயது பதின்மூன்று.
நேராக குதிரையை நோக்கிச் சென்றான். அதனருகே சென்று மெல்ல அதனைச் சுற்றி வந்தான். மெல்ல அதன் முகத்தருகே தன் கைகளைக் கொண்டு போனான். வழக்கம் போலவே அது சீறியது.
சுதாரித்துக் கொண்டு அதன் கண்களைக் கூர்ந்து நோக்கினான்.
ஏதோ ஒரு விஷயம் அவனுக்குப் பிடிபட்டது போலிருந்தது.
இப்போது குதிரையின் பின்புறமாகச் சென்று அதன் முதுகைத் தட்டி தன் புறமாகத் திரும்புமாறு செய்தான். அப்படியே குதிரையும் அவரை நோக்கித் திரும்பியது.
மீண்டும் அதன் கண்களைக் கூர்ந்து பார்த்தான். அந்தக் கண்களில் இதுவரை இருந்த ஆவேசம் இப்போது இல்லை. சாந்தமாகத் தெரிந்தது.
அதன் தாடையை மெல்லத் தடவிக் கொடுத்தான். இப்போது அது சீறவில்லை. ஆவேசம் கொள்ளவில்லை. அமைதியாகவே இருந்தது. இதுதான் தக்க சமயம். சடாரென்று அதன் முதுகில் தாவி ஏறினான்.
குதிரை அடங்கியது. வென்று விட்டான் அலெக்சாண்டர். மொத்த கூட்டமும் கை தட்டி ஆரவாரம் செய்தது. இதனைப் பார்த்துக் கொண்டிருந்த பிலிப், பிரமித்துப் போயிருந்தார்.
‘எப்படி நிகழ்ந்தது இந்த அதிசயம்!’
ஓடிவந்து மகனை அணைத்து ஆரத் தழுவினார். கண்களில் வெற்றிப் பெருமிதம் மின்னியது.
பியூசெபாலஸ் என்னும் அந்தக் குதிரை அலெக்சாண்டருக்குச் சொந்தமாகியது. அவனது உயிர் நண்பனாகவும் மாறியது.
“எப்படி அந்தக் குதிரையை அடக்கினாய்?” என்று கேட்டார் பிலிப்.
“அந்தக் குதிரையின் கண்களை உற்றுப் பார்த்தேன். அதனுடைய பார்வை நீண்டு, மிகப் பெரிதாகக் கிடந்த அதன் நிழலில் பதிந்து கிடந்ததைப் பார்த்தேன். நான் அதனருகே சென்று அதன் முகத்தைத் தொட்டபோது எனது நிழலும் பயங்கரமாகத் தெரிந்தது. ஏதோ ஒரு பயங்கரம் அங்கே நடக்கப் போவதாக நினைத்து அது சீற்றம் கொண்டது. இதனைப் புரிந்து கொண்ட நான், அடுத்த நொடிப் பொழுது அதனை சூரியன் இருக்கும் திசையை நோக்கித் திரும்பச் செய்தேன். அப்போது அங்கு நிழல் இல்லை. எனவே அதன் கண்களில் பயமும் இல்லை. இதுதான் தக்க தருணம் என்று நினைத்து அதன் முதுகில் ஏறி அமர்ந்தேன்” என்று தந்தைக்கு விளக்கினான் மகன்.
அவன் வீரன் மட்டுமல்ல, புத்திசாலியும் கூட என்பதை மிகத் தெளிவாகப் புரிந்து கொண்டார் பிலிப். அலெக்சாண்டரின் வெற்றியை அந்த
நகரமே கொண்டாடி மகிழ்ந்தது. பலரும் அரண்மனைக்கு நேரில் வந்து வாழ்த்துகளைத் தெரிவித்த வண்ணம் இருந்தனர்.

Author: SudhaSri
Article Title: அத்தியாயம் -9
Source URL: Nectar Novels-https://nectarnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.