• ஹாய் மக்களே! நம் Nectar Novels தளத்திற்கு நல்வரவு🙏😍😍 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள் nectarnovels.ss@gmail.com 🩷 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...👇 வேதா விஷால் & அனன்யா🙏💖

ஆடுமடி தொட்டில் இனி - 4

SudhaSri

Administrator
Staff member
Jun 16, 2024
536
44
43
india
ஆடுமடி தொட்டில் இனி - 4





"என்றென்றும் புன்னகை

முடிவில்லா புன்னகை

இன்று நான் மீண்டும் மீண்டும் பிறந்தேன்

ஒரு துளி பார்வையிலே"



எங்கோ எஃப்எம்மில் இசைத்த பாடலை ரசித்துக் கொண்டே பைக்கை ஓட்டிக் கொண்டிருந்தான் விக்ரமன். மனமெங்கும் உற்சாகம் ஊற்றெடுத்துப் பொங்கி வழிந்ததில், புன்னகை மன்னனாகக் காட்சி அளித்தான். நல்ல வேளையாக அவன் மாட்டியிருந்த ஹெல்மெட் முகத்தை மொத்தமாக மறைத்தது. இல்லை என்றால் கல்லூரி வளாகத்தில் அவனைத் தெரிந்த அனைவருக்கும் அதிர்ச்சியில் ஹார்ட் அட்டாக்கே வந்திருக்கும்.



மெதுவாகக் கல்லூரி வாசலுக்கு வந்தவனை மொபைல் ஃபோனில் வந்த அழைப்பு நிறுத்தியது. யார் அது இந்த நேரத்தில் அழைப்பது என்று பார்த்தவன் "அச்சச்சோ மம்மி" என்று அலறி யூ டர்ன் நடித்து உள்ளே விரைந்தான். நேராகச் சென்று மருத்துவமனை வாசலில் பைக்கை நிறுத்தியவன், வாசலிலேயே நின்ற அருந்ததியைக் கண்டு ஒரேயொரு நொடி திகைத்து நின்றான். அவரோ அவனது கண்களில் தெரிந்த உணர்வுகளைப் படித்துக் கொண்டிருந்தார்.



"வொர்க் முடிஞ்சதா மா? எனக்கும் இன்னைக்கு வேற அசைன்மன்ட் இல்லை, கிளம்பலாம். நேரா வீட்டுக்குத் தானே?"



"நல்லாவே சமாளிக்கிற டா மகனே! என் ஞாபகமே இல்லாமல் கிளம்பிட்டு இப்போ… ம்ம்…"



"அது எப்படி உங்களுக்குத் தெரியும்?" முன்னே பின்னே இதுபோன்ற சமாளிப்புகளைச் சந்தித்திருக்காதவன் தானே வாயை கொடுத்து மாட்டிக் கொண்டான்.



"ஓ!.. இதோ இப்போ நீ தான் சொன்னியே. அப்போ நீ நிஜமாவே கிளம்பி இருக்க? அப்படி என்ன ஞாபகத்தில கிளம்பின?"



"ஆஹா… இதுக்கு பேரு தான் போட்டு வாங்கறதா?.. மம்மி யூ ஆர் கிரேட். மீ, யுவர் சன் ஒரு அப்பாவி. ப்ளீஸ்.. ப்ளீஸ்… போதும்.. கிளம்புங்க" என்று கையெடுத்துக் கும்பிட்டான்.



அருந்ததியும் பிழைத்துப் போ என்று கிளம்பி விட்டார். கல்லூரியில் வகுப்புகள் முடிந்திருக்க மாணவர்கள் வெளியேறிக் கொண்டு இருந்தார்கள். கல்லூரியை விட்டு வெளியே வரும் வரை மகனது கண்கள் அலைபாய்ந்ததை ரியர் வியூ மிர்ரர் அவருக்குக் காட்டிக் கொடுத்தது. சாலையில் போக்குவரத்துடன் கலந்த உடன் விக்ரமன் கவனத்தை வண்டியில் மட்டுமே வைத்தான்.



"என்ன சார், காலைல கச்சேரி எல்லாம் அமர்க்களப் பட்டது. இப்போ மௌன விரதம் மாதிரி இருக்கு"



போக்குவரத்து நெரிசலில் அவரது குரல் மகனைச் சென்றடையவில்லை. இரு சக்கர வாகனம் ஓட்டும் போது அவனது கவனத்தை சிதறடிக்க வேண்டாம் என்று அருந்ததியும் அமைதியாகி விட்டார்.



அவர்கள் வீடு வந்து சேர்ந்த போது தேவராஜனின் கார் போர்டிகோவில் இருந்தது. 'இன்னைக்கு ஒரு முடிவோட தான் இருக்காங்க போல இருக்கு' என்று மனதுக்குள் நொந்து கொண்டு வீட்டுக்குள் நுழைந்தான் விக்ரமன். "நோ… நோ… நோ… எப்போதும் நான் தான் ஃபர்ஸ்ட் வீட்டுக்கு வருவேன். வழி விடு.. வழி விடு" அவனைப் பக்க வாட்டில் தள்ளி விட்டு உள்ளே நுழைந்தாள் வைஜயந்தி.



"இவளை…. " பல்லைக் கடித்துக் கொண்டு உள்ளே நுழைந்தவனை சமையல் அறையில் இருந்து வந்த மசாலா வாசனைகள் இழுத்தது.



"வாவ்! டாடின்னா டாடி தான். வாட் எ நைஸ் ஸ்மெல். ரொம்ப பசிக்கிற மாதிரியே இருக்கே. டாடீஈஈஈ…." சமையலறை நோக்கி நகர்ந்தவளை அண்ணனின் குரல் தடுத்து நிறுத்தியது.

"வைஜூ! இப்படித்தான் வெளியே இருந்து வந்து ஸ்ட்ரைட்டா கிச்சனுக்கு போவியா? இதைத் தான் படிக்கிறியா? போ! போய் ரெஃபிரஷ் பண்ணிட்டு வா!" மறுத்துப் பேச முடியாத குரல் அது.



"ம்ச். போ ண்ணா நீயும் உன் ரூல்ஸூம். வாசனை எப்படி இழுக்குது பாரு. நான் என்ன சாப்பிடவா போறேன். என்ன செய்றாங்கன்னு பார்க்கக் கூட விட மாட்டேங்குற."



"எதைச் செஞ்சா உனக்கு என்ன? வாசனை எதுவா இருந்தா என்ன?நீயோ இலை தழையாத் தான் மேயப் போற, அதெல்லாம் எங்கேயும் ஓடிப் போகாது. பிடிக்கிற வாசனையை ரெஃபிரஷ் பண்ணிட்டு வந்து பிடி!"



அண்ணனை முறைத்துக்கொண்டே தொப் தொப்பென்று சத்தம் எழுப்பியபடி படியேறினாள் வைஜெயந்தி. அவளது அறைக்குள் நுழையும் முன் திரும்பி அண்ணனைப் பார்த்து முகம் சுழித்துப் போனாள்.



"ஹேய்.. போடி.." என்றவன் இரண்டிரண்டு படிகளாகத் தாவி அவனது அறையில் நுழைந்தான்.



அண்ணனும் தங்கையும் ரெஃபிரஷ் செய்து கொண்டு வந்த போது தேவராஜனும் அருந்ததியும் கீழே இல்லை. "தம்பி! உங்க இரண்டு பேரையும் அய்யா மாடில இருக்கிற தோட்டத்துக்கு வரச் சொன்னாங்க. அம்மாவும் அய்யாவும் அங்கே தான் இருக்காங்க."



கையில் ஹாட் பேக்குகளுடன் நின்ற வேலையாள் வேகமாக மாடியேறிச் சென்று விட வைஜயந்தி யோசிக்க ஆரம்பித்தாள். அவர்களின் வீட்டில் சமீப காலமாக முக்கிய முடிவுகள் எல்லாம் மொட்டை மாடியில் தான் எடுக்கப்படுகின்றன.



இன்று என்ன விஷயமாக இருக்கும் என்று கேள்வியுடன் அண்ணனைப் பார்த்தாள். அவனது முகத்தில் இருந்து எதையும் கண்டு கொள்ள முடியவில்லை என்றாலும் இவளிடம் இருந்த கேள்வி அவனிடம் இல்லை என்பது நன்றாகவே புரிந்தது, எதையோ தீவிரமாக யோசித்துக் கொண்டு இருந்தான்.



'அட சார் விஷயமா தான் ‌டிஸ்கஷன் போல இருக்கே! நல்ல என்டர்டெயின்மென்ட் வெயிட்டிங்!'



"ஒரு சிறப்பான சம்பவம் காத்திருக்கு போலத் தெரியுதே? உனக்கு என்ன தோணுதுண்ணா?" என்று கேட்டு விட்டு அவனது பதிலை எதிர்பார்க்காமல் படிகளில் அவசரமாக ஏறினாள். என்ன மாதிரியான கேள்விகள் வரும், எப்படி பதில் சொல்லுவது என்று மனதுக்குள் ஒத்திகை பார்த்துக் கொண்டு விக்ரமன் நிதானமாக மாடி ஏறினான்.



தேவராஜனின் இல்லம் கிட்டத்தட்ட மூவாயிரம் சதுர அடியில் அமைந்திருந்தது. அவரது தந்தையின் காலத்தில் வாங்கிய மூன்று மனையளவு நிலத்தில் பாதியை வீடு ஆக்கிரமித்துக் கொண்டது. மீதமுள்ள இடத்தில் கார்களுக்கான இடம் போக மீதமுள்ள இடத்தை மரங்கள் நிறைத்தது. மா, தென்னை, வேம்பு என்று நட்டு வைத்த செடிகள் நாற்பது ஆண்டுகளில் பெரிய மரங்களாகி நின்றன.



தேவராஜனின் பெற்றோர், அவரது இரண்டு தங்கைகள் என குடும்பம் சிறியதாக இருந்த போது தரைத் தளம் மட்டுமே இருந்தது. அடுத்த தலைமுறைக்குத் திருமணம் முடிந்து மருமகன், மருமகள், பேரன் பேத்திகள் என குடும்ப உறுப்பினர் எண்ணிக்கை அதிகமாகவே இடத் தேவையும் அதிகரித்தது. அதன் விளைவாக முளைத்தது தான் முதல் மாடி.



ஐந்தாறு ஆண்டுகளுக்கு முன்பு வரையில் இரண்டாவது மாடிப் பக்கம் தேவையில்லாமல் அவர்கள் வந்ததே கிடையாது. பெரிய மைதானம் போல காணப்பட்ட இடத்தில் அவர்கள் அத்தைகளின் பிள்ளைகளுடன் கிரிக்கெட் விளையாடி இருக்கிறார்கள்.



ஆனால் இப்போது அந்த மைதானம் பெரிய தோட்டமாக மாறி இருந்தது. அத்தனையும் வைஜயந்தியின் கைவண்ணம். அவள் ப்ளஸ் ஒன்னில் பயாலஜி படிக்க ஆரம்பித்ததும் மரம் செடி கொடிகளிடம் தீராக் காதல் ஏற்பட்டது. வீட்டில் எல்லோரையும் போல டாக்டராகணும் என்று இருந்தவளது லட்சியங்களில் பெரும் மாற்றம் ஏற்பட்டு விட்டது.



அதன் விளைவு, அந்த மொட்டை சோலையாக மாற ஆரம்பித்தது. முதல் இரண்டு வருடங்கள் பூச்செடிகள் மட்டுமே இருந்த இடம். வைஜயந்தி ப்ளஸ் டூ முடித்து



Bachelor of Naturopathy and Yogic Sciences [BNYS] படிக்க ஆரம்பித்ததும், பலவித மூலிகைகள், காய்கறிகள் என்று தோட்டம் பரந்து விரிந்தது. அதற்காக அவள் பெரிய உண்ணாவிரதம் இருந்து, சத்தியாகிரகம் செய்து என்று எந்த விதமான பிரயத்தனமும் செய்யவில்லை. எதையும் இஷ்டப்பட்டு செய்யவேண்டும் என்று அவள் விருப்பத்திற்கே விட்டு விட்டார்கள்.



நாளடைவில் அந்த மொட்டை மாடி, ஒரு அல்ட்ரா மாடர்ன் ரூஃப் கார்டனாக மாறி இருந்தது. அவ்வப்போது "ஃபேமிலி டைம்" என்று சொல்லிக் கொண்டு தேவராஜன் குடும்பம் ஒன்றாக அமர்ந்து மாலைச் சிற்றுண்டியோ இரவு உணவோ உட்கொள்வது வழக்கமாயிற்று. அந்த நேரங்களில் சிலபல முக்கிய முடிவுகள் எல்லாம் எடுக்கப்படும்.



இன்றும் அது போன்ற ஒரு நிகழ்வை எதிர்பார்த்து வைஜயந்தி காத்திருந்தாள்.



அண்ணனுக்கு முன்பே மாடிக்கு வந்தவள், நேராக அங்கே இருந்த டேபிளில் வைக்கப் பட்டிருந்த பாத்திரங்களிடம் சென்றாள். குழிப் பணியாரம், தேங்காய் சட்னி மற்றும் வேகவைத்த வேர்க்கடலை - பொடிப்பொடியாக நறுக்கிய வெங்காயம், தக்காளி, இஞ்சி, பச்சைமிளகாய் ஆகியவை சேர்த்து கருவேப்பிலை மற்றும் மல்லித்தழையால் அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. கொத்துமல்லியின் வாசனையே நான் வீட்டில் விளைந்தவள் என்றது.



அருகில் அவரவருக்குப் பிடித்தமான பானங்கள், தேவராஜனுக்கு ப்ளாக் காபி, அருந்ததிக்குப் பால் கலந்த காபி, விக்ரமனுக்கு மசாலா டீ மற்றும் வைஜயந்திக்கு ஏபிசி (ஆப்பிள், பீட்ரூட், கேரட்) ஜூஸ்.



தேவராஜன் எப்போதுமே இப்படித்தான், மனைவிக்கு எல்லா வகையிலும் கை கொடுப்பது அவரது வழக்கம். இன்றும் அதே போலத்தான் சீக்கிரமே வந்தவர் வீட்டில் இருந்த பண்டங்களை வைத்துச் சத்தான சிற்றுண்டியைத் தயார் செய்து விட்டார்.



இருவருமே டாக்டர்கள் தான் என்றாலும் தேவராஜன் தனது வேலை நேரத்தைத் தனக்கேற்ப மாற்றிக் கொள்ள முடியும். அருந்ததியின் பணி அவ்வாறு கிடையாது என்பதால், வீட்டில் தேவராஜனின் உதவி மனைவிக்கும் பிள்ளைகளுக்கும் தேவையான நேரத்தில் கட்டாயம் கிடைக்கும். பிள்ளைகளின் உடல் நிலை சரியில்லாமல் போகும் போதும் சரி, அவர்கள் தேர்வுக்குப் படிக்கிற காலங்களிலும் சரி அருந்ததியை விட தேவராஜனின் பங்களிப்பு அதிகம்.



"வாவ்! கலக்கறீங்க டாடி. யூ ஆர் தி பெஸ்ட்! ஐ லவ் யூ டாடி!" என்று தந்தையைக் கட்டிப் பிடித்து முத்தம் வைத்தவள், தனது



செடி கொடிகளிடம் பேச்சு வார்த்தை நடத்தப் போனாள்.



விக்ரமன் மாடிக்கு வந்த போது, "அச்சோ! நீங்க ஏன் இப்படி டல்லா இருக்கீங்க? சாப்பாடு பத்தலையோ? ஒரு வேளை விட்டமின்ஸ் டோஸேஜ் ஜாஸ்தி பண்ணனுமோ? ஒரேயொரு நாள் வெயிட் பண்ணுங்க. சரி பண்ணிடலாம். நாளைக்கு பாருங்க பழையபடி ப்ரைட் ஆகிடுவீங்க. டோன்ட் வொர்ரி, பீ ஹேப்பி!" என்று ஒரு ஆரஞ்சு வண்ண ரோஜாச் செடியுடன் பேசிக் கொண்டு இருந்தாள்.



"ஏய் வாலு! வா சாப்பிடலாம். அப்புறம் உங்க பேச்சு வார்த்தையை கன்டிநியூ பண்ணு." அவளைக் கையோடு இழுத்துக் கொண்டு வந்தவன் பெற்றோரின் எதிரே அமர்ந்தான்.



"ஹாய் டாட்! இன்னைக்கு என்ன ஸ்பெஷல்?" என்றவாறு தட்டை எடுத்தவன் அவனது வயிற்றைக் கவனிக்க ஆரம்பித்தான்.



வேறு வழியின்றி மற்றவரும் சாப்பிட ஆரம்பிக்க, வைஜயந்தியால் அமைதியாக இருக்க முடியவில்லை.



"என்ன டா இது! ஒரே அமைதிப் பூங்காவா இருக்கு. விக்கிரமாதித்த மஹாராஜா கிட்ட கேட்கிறதுக்குக் கேள்விகள் நிறைய இருக்குன்னு நினைச்சேனே. அப்படி இல்லையா? அப்புறம் எதுக்கு இந்த அவசர ஆலோசனைக் கூட்டம்?"



"வைஜூ..."



"சரி... சரி... சாப்பிடும் போது பேசக் கூடாது. அதானே.. ஒரு நாளைக்கு எத்தனை தடவை தான் சொல்லுவீங்க? நான் சாப்பிட்டு முடிச்சாச்சு. என் ஜூஸை எடுங்க. "



ஜூஸைக் கையில் எடுத்தவள், "ஆனாலும் இவன் கல்யாணத்துக்கு முன்னாடியே ஸ்விட்சர்லாந்து போகணும்னு சொல்றது கொஞ்சம் யோசிக்க வேண்டிய விஷயமா தான் இருக்கு. எதுக்கும் நல்லா விசாரிச்சு முடிவு பண்ணுங்க" என்று ஒரு அணுகுண்டை வீசிவிட்டு அண்ணனின் கைகளில் சிக்காமல் ஓடிவிட்டாள்.



ஸ்விட்சர்லாந்தில் இருந்த University of Lausanne ஆன்காலஜி பற்றிய ஆராய்ச்சிக்குத் தலை சிறந்து விளங்குகிறது. புற்றுநோய்க்கும், நோய் எதிர்ப்புச் சக்திக்கும் இடையேயான தொடர்பு பற்றிய ஆராய்ச்சியில் Lausanne பல்கலைக்கழகம் முன் மாதிரியாக விளங்குகிறது என்பதால் விக்ரமன் தனது மேற்படிப்பை அங்கே தொடர வேண்டும் என்று விரும்பினான்.



Immunology என்பது தொற்று நோய்களினின்று தற்காப்புத் தன்மை உண்டாக்குவது பற்றிய ஆய்வு. பொதுவாகவே பெண்களுக்கு நோய் எதிர்ப்புச் சக்தி என்பது வயதாக ஆகக் குறையத் தொடங்கும். அந்த நிலையில் வரும் புற்றுநோய்கள் நோய்களின் தாக்கம் அதிகமாகவே இருக்கும். நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரித்து விட்டால் நோயை வரும் முன்னே தடுத்து விடலாமே என்பது அவனது எண்ணம்.



சற்று நேரம் அமைதியாக கழிய விக்ரமனே பேச்சை ஆரம்பித்து வைத்தான்.



"மாம்! டாட்! நான்.. சில ஃப்யூச்சர் ஐடியாஸ் வச்சிருக்கேன். எப்போ வேணும்னாலும் படிக்கலாம், கொஞ்சம் எக்ஸ்பீரியன்ஸ் கெயின் பண்ணிட்டா இன்னும் நல்லா இருக்கும் இதெல்லாம் எனக்கும் தெரியும். ஆனால் நான் பெர்சனல் அண்ட் புரோஃபஷனல் லைஃப் இரண்டையும் தனித்தனியா பார்க்கிறேன். அஃப்கோர்ஸ் நம்ம ஊரு வழங்கப் படி எனக்கு கல்யாணம் பண்ற வயசாகிடுச்சு.



ஆனால், இன்னும் ஒரு நாலே நாலு வருஷம் எனக்கே எனக்குன்னு வேணும், நிறைய மைன்யூட் அண்ட் சென்சிடிவ் விஷயம் ஹேண்டில் பண்ணும் போது வேற எந்த டிஸ்ட்ராக்ஷனும் இருந்தால் கஷ்டம். அதே மாதிரித்தான் பெர்சனல் லைஃப்லயும் கம்ப்ளீட் அட்டென்ஷன் வேணும்னு நினைக்கிறேன். ஸோ... "



அடுத்து என்ன பேசுவது என்று தெரியாமல் முடித்தான். பெற்றவர்களுக்கு அவன் சொல்வது சரிதான் என்று தோன்றினாலும் எந்த பதிலையும் சொல்லவில்லை. ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டு அவர்கள் அமைதி காக்க, அவனே தொடர்ந்தான்



"எல்லா விஷயத்தையும் யோசிச்சு தான் பா பேசறேன். நான் கண்டிப்பா கல்யாணம் பண்ணிக்கத் தான் போறேன். பொண்ணு கூட..."



"ஹேய்... ஸ்டாப்.. ஸ்டாப்.. ஸ்டாப்.. இப்ப சொல்லு. பொண்ணு கூட பார்த்துட்டேன்னு தானே சொல்ல வந்த. யாருடா அந்த மேனகை, இந்த விசுவாமித்திரனை மயக்கிய மங்கை?" உற்சாகத்துடன் இடையிட்டாள் வைஜயந்தி.



"ம்ச். வைஜூ! சீரியஸா பேசிட்டு இருக்கோம். இதென்ன சின்னக் குழந்தை மாதிரி பிஹேவியர்?" மகளைக் கண்டித்தார் தேவராஜன்.



"ஸாரி டாடி. யூ கன்டிநியூ" என்று முகம் சுருங்கி எழுந்தாள்.



"இப்போ தான் சொன்னேன். கிட்டிஷா பிஹேவ் பண்ணாதேன்னு. அமைதியா உட்கார்." மகளை அதட்டியவர் மகனிடம் திரும்பினார்.



"விக்ரம்! நீ சொல்றது எல்லாம் சரி தான். உன் கல்யாண விஷயத்தை விடு, அது நடக்கும் போது தானாக நடக்கும். ஆனால் உன் படிப்பு, நீ கைனகாலஜி படிக்கிறேன்னு சொன்ன போது நிச்சயம் எனக்கு சந்தோஷமா இருந்தது, பெண்களை மதிக்கத் தெரிஞ்சவன் என் பையன்னு. ஆனாலும் ரொம்பவே யோசிச்சு தான் சரி சொன்னேன். ஏன்னா, நீ எம்பிபிஎஸ் படிக்கிறதுக்குள்ள ஆர்த்தோ, கார்டியாக், கைனீக்னு உன் சாய்ஸ் நிறைய மாறிடுச்சு.



இப்போ அதையும் விட்டு வேற சொல்ற, நம்ம ஃபீல்டுல இது சரி கிடையாது. ஒன்னச் சூஸ் பண்ணினா அதுலயே நிக்கணும். அப்போ தான் டாக்டருக்கும் நல்லது பேஷண்டுக்கும் நல்லது. அதை நல்லா யோசிச்சு முடிவு பண்ணு. நான் சந்தோஷமா ஆல் தி பெஸ்ட் சொல்றேன்."



"டாட்! அப்போ எனக்கு எல்லாமே நல்லா தெரிஞ்சது. அதனால வந்த கன்ஃபூயூஷன். இப்போ அப்படி கிடையாது பா. நான் தெளிவா இருக்கேன். gynecologic oncology தான் பண்ணப் போறேன்."



தந்தை சொன்னதை வாழ்க்கைப் பாடமாக எடுத்துக் கொண்டு பதில் சொன்னான்.



"அண்ட் ஒன் மோர் திங். நீ எங்கே படிக்கணும்னு ஒரேயொரு சாய்ஸ் வச்சுக்காதே. இன்னும் இரண்டு மூணு ஆப்ஷன்ஸ் பாரு. எது கிடைத்தாலும் ஓகேன்னு ப்ரோசீட் பண்ணு. ஐ வில் ஹெல்ப் யூ வாட் எவர் ஐ கேன்" என்று ‌மனைவியைப் பார்த்தார். அவரோ, மகன் சொன்ன வார்த்தைகள் அவனது தீவிரத்தை உணர்த்த அமைதி காத்தார்.



"மாம்! நீங்க எதுவும் சொல்லவே இல்லை."



"நீ உன் ஆராய்ச்சியை முடிச்சிட்டு வா. நான் உன் மேனகை யாருன்னு ஆராய்ச்சி பண்ணி கண்டு பிடிச்சு வைக்கிறேன்."



"ஹா.. ஹா.. ஹா.. சபாஷ் அருந்ததி! சரியான போட்டி!" கணவர் உற்சாகப் படுத்த, மகளோ பயமுறுத்தினாள்.



"மாம்! தேவை இல்லாத வேலை இது. நோஸ் கட் வாங்கப் போறீங்க. ஃப்ரீ அட்வைஸ் கேட்டா கேளுங்க, இல்லேன்னா பல்பு வாங்க ரெடியா இருங்க."



"அதெல்லாம் இல்லை.. நான் ஒரு தடவை சொன்னா நூறு தடவை சொன்ன மாதிரி. பார்க்கலாம் யார் ஜெயிக்கிறாங்கன்னு."



"மா! உங்களுக்கு ஒரு விஷயம் புரியவே இல்லை. இவன் பார்க்கிற ... இல்லை இல்லை.. இவனைப் பார்க்கிற பொண்ணு கண்டிப்பா இவனை மாதிரியே கல்லுளி மங்கியா தான் இருப்பா. உங்க சேலஞ்ச வாபஸ் வாங்கிட்டா உங்களுக்கு நல்லது."



தாயும் தங்கையும் மாறி மாறிப் பேசிக் கொண்டு இருக்க, விக்ரமன் ஒரு மந்தகாசப் புன்னகையுடன் அமைதியாக வேடிக்கை பார்த்தான். நினைவுகள் வைஜயந்தி சொன்ன கல்லுளி மங்கியிடம் சென்றது.



இதே போன்ற ஒரு காட்சி அங்கேயும் அரங்கேறிக் கொண்டு இருந்தது. வெகு நாட்கள் கழித்து வீட்டுக்கு வந்திருந்த வாசுதேவன் எத்தனை நாட்கள் ஒரே ஊரில் இருப்பார் என்பது யாருக்கும் தெரியாது. அதையே காரணமாகக் கொண்டு சுகந்தா மகளின் எதிர்காலத்தைப் பற்றிய பேச்சை ஆரம்பித்து வைத்தார்.



"ஏங்க, குட்டிமாக்கு இந்த வருஷம் இருபத்திரண்டு முடிஞ்சிடும். அடுத்த வருஷம் இன்டர்ன்ஷிப் தான். அவ ஜாதகத்தை எடுக்கலாமா? இப்போ பார்க்க ஆரம்பிச்சா தானே சரியா இருக்கும்."



"நீ அப்படியா சொல்ற? ஆனால் அவ இன்டர்ன்ஷிப்பும் முடியட்டுமே. முழுசா டாக்டர் ஆகட்டும், அப்புறம் மாப்பிள்ளை தேடலாம்."



"இல்லங்க, அவளுக்கு குரு பலன் வந்திடுச்சுன்னு அத்தை சொன்னாங்களே. இந்த வருஷம் விட்டா, இன்னும் நாலஞ்சு வருஷம் கழிச்சு தான் கல்யாணம் பண்ண முடியும்னு சொன்னாங்க."



"ரொம்ப நல்லது, அவ பிஜி முடிச்சிட்டு ஒரு ஸ்பெஷலிஸ்ட் ஆகி இருப்பா."



"என்னங்க இப்படி சொல்றீங்க?"



"வேற எப்படி சொல்லணும்? இந்த காலத்தில வெறும் எம்பிபிஎஸ் வச்சு ஒன்னும் பண்ண முடியாது. மேல ஏதாவது படிக்கணும். டாக்டர்னா சும்மா இல்லை. இன்னும் ஜாதகம் ஜோசியம்னு பார்த்துட்டு... அவ கிட்ட முதல்ல பேசலாம்."



"இதுக்கு என்ன அர்த்தம்?"



"அவளுக்கு யாரையாவது பிடிச்சிருக்கான்னு முதல்ல கேட்கணும். அதுக்கு அப்புறம் தான் நீ மாப்பிள்ளை தேடணுமா வேண்டாமான்னு தெரியும்."



"நீங்க சொல்றது சரிதான். அப்படி இருந்தால் நல்லது தான். எனக்கு வேலை மிச்சம். ஆனால் இங்கே தான் அப்படி எல்லாம் ஒன்னு இருக்கிற மாதிரி தெரியலையே."



"ஏன் இப்படி ஒரு முடிவுக்கு வந்த?"



"இல்ல... லவ் பண்ணினா ஏதேதோ சிம்ப்டம்ஸ் இருக்கும்னு சொல்றாங்களே. தானா யோசிப்பாங்க, தானே சிரிப்பாங்க இந்த மாதிரி... அப்படி ஒன்னையும் இவ கிட்ட காணோமே!"



"சுகாஆஆஆ! நீயா பேசியது... என் அன்பே நீயா பேசியது..."



"அய்யே... என்ன இது.. நிதி வர நேரம் ஆச்சு. கொஞ்சம் தள்ளியே உட்காருங்க."



"அது சரி.. அதோ குட்டிமா வந்துட்டா."



இவர்கள் இருவரும் அவளைப் பற்றி வாதாடிக் கொண்டு இருக்க, அவளோ சுகந்தா சொன்னது போல் எதையோ யோசித்துச் சிரித்த படி பெற்றோரைக் கவனிக்காமலே அவளது அறைக்குச் சென்றாள்.



சுகந்தா வாயைப் பிளந்தபடி பார்க்க, வாசுதேவன் மனைவியைப் பார்த்துச் சத்தமில்லாமல் சிரித்தார். வெகு நேரம் ஆகியும் மகள் வெளியே வராததால் அவளுக்கான டீயுடன் மாடியேறினார் சுகந்தா.



உடையைக் கூட மாற்றாமல் படுக்கையில் படுத்திருந்தாள் நியதி. கல்லூரியில் இருந்து கொண்டு வந்த பை தரையில் கிடந்தது. விழித்தே இருந்தாலும் கண்களில் ஏதோ கனவு மிதந்தது. சுகந்தா உள்ளே நுழைந்து டீயை மேசை மீது வைத்து, அவளது பையை அதற்குரிய இடத்தில் வைத்து விட்டு மகளருகே அமர்ந்தார். அப்போதும் அவளது கனவு கலையவில்லை. மகளது இந்தத் தோற்றம் அவருக்குப் புதியது.



"நிதி மா! எழுந்துரு.. டீ கொண்டு வந்திருக்கேன் பாரு.. குடிச்சிட்டு கீழே வா. அப்பா உனக்காக வெயிட்டிங். உனக்குப் பிடிச்ச‌ ஸ்நாக்ஸும் வெயிட்டிங்.."



வேறெதுவும் கேட்டு அவளைத் தொந்தரவு செய்யாமல் எழுந்து சென்று விட்டார். இந்த விஷயத்தைக் கணவனிடம் பகிர்ந்து கொள்ள மனம் துடித்தது. அவளாகவே பேசும் வரைக்கும் கல்யாணப் பேச்சை எடுக்க வேண்டாம் என்று பெற்றோர் முடிவு செய்து விட்டனர்.



******



ஏர்போர்ட்டில் இருந்து அதிகாலை ஐந்தரை மணியளவில் வீடு வந்து சேர்ந்த அரவிந்தனுக்கு அழைப்பு மணியை அழுத்தத் தயக்கமாக இருந்தது. யாரையும் மொபைலில் அழைக்கவும் மனமில்லை. அவன் வருவான் என்று தெரியும் தான், ஆனால் இந்நேரம் கண்டிப்பாக யாரும் விழித்திருக்க வாய்ப்பு இல்லை என்று நினைத்தவனுக்கு வாசலில் இருந்த கோலம் கண்ணில் பட்டது.



'அட! ஸ்வேதாவோட ரங்கோலி. முழிச்சிருப்பாளோ? இருக்காது, இப்போ எல்லாம் ராத்திரியே கோலம் போடறது தான் ட்ரெண்ட். ஆனாலும் ஸ்வேதாவோட கைவண்ணமே தனி தான்."



தங்கையை மெச்சிக் கொண்டவன், கொண்டு வந்த பெட்டிகளை எல்லாம் கதவருகே வைத்தான். அங்கேயே அமர்ந்து விடலாமா என்று இங்க்கி பிங்க்கி போட்டுக் கொண்டிருந்தவன் திடீரெனப் பரவிய சாம்பிராணி வாசனையில் அரண்டு போய் நிமிர்ந்து பார்த்தான். பச்சை நிறத்தில் சில்க் காட்டன் புடவை உடுத்தி.. இரண்டு புறமும் தோளில் வழியும் படி தலை நிறைய மல்லிகை சூடி.. சுற்றிலும் புகை மூட்டத்துடன்... அவனைப் பார்த்து சிரித்தது அந்த உருவம்.



"ஹய்யோ! மோகினிப் பிசாசு! என்னை ஒன்னும் பண்ணிடாத" என்று அலறியவனிடம்,



"அண்ணா!" என்று சிணுங்கினாள் ஸ்வேதா.



"ஹா.. ஹா.. எப்படி நம்ம பெர்ஃபாமன்ஸ்?"



"சகிக்கலை... உள்ளே வா.. எப்போ வந்த? கார் வந்த சத்தமே கேட்கலையே?"



"அது... நான் தான் கொஞ்சம் முன்னாடியே நிறுத்தி இறங்கிட்டேன்."



"அது சரி..‌எவ்வளவு நேரமா இப்படி வாசல்ல நிக்கற? பெல் அடிக்க வேண்டியது தானே. இல்லை யாரையாவது கால் பண்ணி இருக்கலாம். நான் இப்போ வரலேன்னா எவ்வளவு நேரம் வெளியே நின்னுருப்ப?" அண்ணனின் பெட்டிகளை எடுத்துக் கொண்டு உள்ளே சென்றாள்.



"அம்மாவும் அப்பாவும் நாள் பூராவும் கல்யாண வேலைல பிஸியா இருப்பாங்க. அசந்து தூங்கறவங்களை எதுக்கு எழுப்பணும்னு தான் பெல் அடிக்கலை. அப்புறம் ஸ்ரேயா இடி விழுந்தாலும் எட்டு மணிக்கு முன்னாடி எழுந்திருக்க மாட்டா.. அப்புறம் நீ..."



"நான்... ம்ம்.. சொல்லு"



"வழக்கமா சீக்கிரம் எழுந்திருப்ப தான்.. இன் ஃபேக்ட் நீ தான் சேவலையே எழுப்பி கூவச் சோல்லுறயோன்னு கூட எனக்கு டவுட்டு உண்டு.. இப்போதும் அப்படியே இருக்க முடியுமா?"



"ஏன் இப்போ என்ன.. அதே ஸ்வேதா தான்" என்றவள் அவனது முகத்தில் தெரிந்த குறும்பைக் கவனித்து, " ஹேய். நீ வேற ஏதோ நினைச்சிருக்க... மரியாதையா சொல்லிடு" என்று மிரட்டினாள்.



"அதுவா டா..எப்படியும் ராத்திரி முழுக்க மேடியோட சங்கீத ஸ்வரங்கள்னு ஆரம்பிச்சு விடியற வரை கடலை போட்டு இருப்ப. இப்போ தான் தூங்க ஆரம்பிச்சவளை எதுக்கு டிஸ்டர்ப் பண்ணிட்டு.. எல்லாம் ஒரு நல்ல எண்ணம் தானே டா. அண்ணனை சந்தேகப் படற பார்த்தியா?"



ஸ்வேதா இடுப்பில் கை வைத்து அண்ணனை முறைக்க, அவளைத் தோளோடு அணைத்தவன், தலையைப் பாசமாக வருடினான்.



"நான் ஏர்போர்ட்லயே ப்ரஷ் பண்ணிட்டேன். கொஞ்சம் காஃபி கொண்டு வா டா. குடிச்சிட்டு ஒரு குட்டித் தூக்கம் போடறேன்."



"இதோ வரேன் ணா" என்றவள் அடுத்த ஐந்து நிமிடத்தில் காஃபியோடு வந்தாள்.



காஃபியை ரசித்துக் குடித்த அரவிந்தன் வாசல் கதவு திறக்கும் சத்தத்தில் திரும்பினான். சாவகாசமாகக் கதவை மூடி விட்டு உள்ளே வந்த ஸ்ரேயா, "ஹாய் அரவிந்த்! என்ன அர்த்த ராத்திரியில வந்திருக்க? குட் நைட்.. காலைல பேசலாம்" என்று சம்பிரதாயமாகக் கேட்டு அவனது பதிலைக் கூட எதிர்பாராமல் அவளது அறைக்குள் சென்றாள்.



அதிர்ச்சி விலகாமல் அமர்ந்திருந்த அண்ணனை உலுக்கினாள் ஸ்வேதா. "நீ போய் ரூம்ல படுண்ணா. இப்போ தானே வந்திருக்க. மெதுவா கவலைப் படலாம். எழுந்திரு."



"இவ எங்க போயிட்டு வராம்மா? என்ன டிரஸ் இது?"



"எல்லாம் அவளோட பொட்டீக் கு தான். ராத்திரில தான் புதுசு புதுசா டிசைன்ஸ் அவ மூளைக்குள்ள உதிக்குதாம். அதனால கம்ப்ளீட் நைட் ஷிஃப்ட் தான். இரண்டு மணி மூனு மணிக்கு வருவா...நேத்து கல்யாணத்துக்கு போடற டிரஸ்ல வேலை இருக்குன்னு போனா.. இப்போ அது தானே ஃபேஷன்."



"எல்லாம் இந்த அம்மா கொடுக்கிற இடம். இவளைச் சொல்லி குத்தமில்லை. இது எங்க போய் முடியப் போகுதோ!' எழுந்து சென்ற அண்ணனைப் பார்வையால் தொடர்ந்த ஸ்வேதா, மொபைலை எடுத்து அண்ணன் சொன்ன வேலையைத் தொடங்கினாள்.



அது தான் மாதவனுடன் கடலை போடுவது...
 

Author: SudhaSri
Article Title: ஆடுமடி தொட்டில் இனி - 4
Source URL: Nectar Novels-https://nectarnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.