• ஹாய் மக்களே! நம் Nectar Novels தளத்திற்கு நல்வரவு🙏😍😍 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள் nectarnovels.ss@gmail.com 🩷 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...👇 வேதா விஷால் & அனன்யா🙏💖

ஆடுமடி தொட்டில் இனி - 6

SudhaSri

Administrator
Staff member
Jun 16, 2024
536
44
43
india
ஆடுமடி தொட்டில் இனி - 6



ராஜா முத்தையா ஹால், சென்னை. "மாதவன் வெட்ஸ் ஸ்வேதா" என்ற போர்ட் மண்டபத்தின் வாசலில் வித்தியாசமான முறையில் மலர்களால் அமைக்கப்பட்டு இருந்தது. வரவேற்பு நேரம் நெருங்கி விட்டதால் மண்டபத்தின் பார்க்கிங் ஏரியா பல விதமான கார்களால் நிறைந்து வழிந்தது. இனிவரும் கார்களுக்காக "வாலே" பார்க்கிங் டோக்கன்களுடன் ஆட்கள் தயாராக நின்றனர்.



புருஷோத்தமன் வாசலில் நின்று அனைவரையும் அன்புடன் வரவேற்றுக் கொண்டு இருந்தார். அருகில் தேவராஜன் நண்பருக்கு உதவியாக நின்று கொண்டு இருந்தார். ஹேமாவுக்கு உதவியாக அருந்ததி நிச்சதாம்பூல சீர் தட்டுக்களை அடுக்கிக் கொண்டு இருந்தார்.



"மாம்! ஆன்ட்டி! நான் எப்படி இருக்கேன்?"



அழகான பீச் கலரில் ரஃபில்ட் ஆர்கன்சா புடவையில் இடுப்பில் அதற்கேற்ற மாடர்ன் ஒட்டியாணம் அணிந்து பொருத்தமான அலங்காரங்களுடன் வந்து நின்ற வைஜயந்தியை யாரது என்பது போல இருவரும் பார்க்க, மாதவனிடம் ஏதோ சொல்வதற்காக அவன் அறைக் கதவைக் தட்டிய அரவிந்தனின் வாய் "வாவ்! கார்ஜியஸ்!" என்றது. அவனுக்காக அறைக் கதவை திறந்த மாதவன்,



"அட! இந்தப் பொண்ணு யாருன்னு தெரியலையே? எங்கேயோ பார்த்த மாதிரி தான் இருக்கு? ஆனால் எங்கேன்னு தான் ஞாபகம் வரலை" என்றபடி அவளருகில் வந்தான்.



"ம்ச்சு. போங்க. எல்லாரும் இப்படி கிண்டல் பண்ணினா நான் போய் காஸ்ட்யூம் மாத்திக்கிறேன்." காலைத் தரையில் உதைத்தபடி சிணுங்கியவளைத் தோளோடு அணைத்துக் கொண்ட மாதவன், "ஹேய்! வைஜூ! நோ.. நோ.. கோபம் ஓகே. நீ பாட்டுக்கு அழுது வைக்காதே, அப்புறம் மேக் அப் எல்லாம் கரைஞ்சு சந்திரமுகி மாதிரி ஆகிடுவ" என்று ஓட்டினான்.



"அண்ணா!.."



"சும்மா இரு மாதவா. அழகா இருக்க டா வைஜூ. இன்னைக்கு எல்லார் கண்ணும் உன் மேல தான் இருக்கப் போகுது பாரேன். இரு உங்க அங்கிளைக் கூப்பிடுறேன், இந்த புடவையை வாங்கும் போது ஆயிரம் கோளாறு சொன்னார். இப்போ சொல்லட்டும் அவர் செல்லப் பொண்ணுக்கு எப்படி இருக்குன்னு."



அரவிந்தனின் மனம் ஹேமா சொன்னதை நன்றாக உள்வாங்கிக் கொண்டது.





"இந்த கலர்… ஐ லவ் இட் ஆன்ட்டி.. அண்ணி தான் சூஸ் பண்ணினாங்க.. நான் அண்ணி கிட்ட காட்டிட்டு வரேன்...."



"அப்படியே அவ ரெடியா பாரும் மா.. டைம் ஆகுது.. ஸ்டேஜூக்குப் போகணும்." வைஜயந்தியை அனுப்பி வைத்த ஹேமா மகனிடம் திரும்பினார். "மாதவா! உன் கோட் அங்கே ஷெல்ஃப்ல இருக்கு. போட்டு சீக்கிரம் ரெடி ஆகு."



அப்போது தான் அருகில் நின்ற அரவிந்தனைக் கண்டவர் என்ன விஷயம் என பார்த்தார்.



"ஸ்வேதா ரெடி ஆன்ட்டி. மாப்பிள்ளை ரெடியான்னு பார்க்கத் தான் வந்தேன். ரிசப்ஷனுக்கு மாலை மாப்பிள்ளை ரூம்ல இருக்கு, அதை எடுத்துட்டு போகணும்"



"ஓ.. ஓகே பா.. இன்னும் பத்து நிமிஷத்துல வரோம்." தட்டுக்களைச் சரிபார்த்து உறவினர்களை அழைத்துக் கொண்டு மாதவனுடன் மாப்பிள்ளை வீட்டார் மண்டப வாசலுக்குப் போனார்கள்.



தமயந்தியும் தாமோதரனும் அருகில் நிற்க, அரவிந்தன் வந்து மாலை போட்டு அவனை உள்ளே அழைத்தான். மைத்துனி முறையில் இருந்தவர்கள் ஆரத்தி எடுக்கத் தயாராக இருந்தனர். வரவேற்பில் இருந்த ஒரு மேசையில் விதம் விதமான ஆரத்தி தட்டுகள் அடுக்கி வைக்கப் பட்டிருந்தது.



பலவிதங்களில் வண்ண வண்ணக் கற்கள், அழகான வண்ண மணிகள், கோல்டன் நிற ரிப்பன், கலர் கலரான வலைகள், தஞ்சாவூர் பெயின்டிங் செய்த தட்டுகள், அதற்கு பயன்படுத்தும் குந்தன்ஸ், அழகான கோல்டன் மற்றும் வொயிட் மெட்டல் தட்டுக்கள், அவற்றில் பலவித வடிவங்கள், மெல்லிய மூங்கிலால் தயாரான கூடைகள் என ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதத்தில் கவனத்துடன் செய்யப்பட்டிருந்தது. ஆரத்தி தட்டுக்களில் வைக்கப்படும் அகல் விளக்குகளில் எண்ணை விட்டு திரி போடுவது எல்லாம் இப்போது செய்வதில்லை. மிகப் பெரிய ராட்சச மின் விசிறிகள், ஏ.சி. வசதி உடைய மண்டபமாக இருந்தால் விளக்கு அணைய நேரிடும். அதற்கு பதிலாக பேட்டரி அகல் விளக்கை வைத்திருந்தார்கள்.



முதல் ஆளாக ஆரத்தி எடுக்க வேண்டிய ஸ்ரேயா அந்த இடத்திலேயே இல்லை. தாமோதரன் மனைவியை முறைக்க, "அவ கிட்ட சொல்லிட்டு தான் வந்தேங்க. இப்போ வந்திடுவா."



அடுத்த இரண்டு நிமிடங்களில்



பெண் மாப்பிள்ளை முகங்களை வைத்து அழகுபடுத்தப்பட்ட ஆரத்தி தட்டை ஏந்தி ஒய்யாரமாக நடந்து வந்த ஸ்ரேயாவைக் கண்டு அங்கே இருந்த அனைவரும் முகம் திருப்பி ஏதேதோ திசையில் பார்வையை அலைய விட்டார்கள். ஸ்வேதாவின் உடன் பிறந்த தங்கையை அப்படி அல்ட்ரா மாடர்ன் தோற்றத்தில் எதிர்பார்த்திராத வயதானவர் எல்லாம் முகம் சுழித்தனர். ஆளாளுக்கு முணுமுணுக்கவும் செய்தனர். தாமோதரன் அப்போது தான் உள்ளே நுழைந்த அவரது நண்பரை வரவேற்கும் சாக்கில் வாசல் பக்கம் சென்று விட்டார்.



மெரூன் நிறத்தில் கவர்ச்சிகரமான ஆஃப்-ஷோல்டர் கவுன் அணிந்திருந்தாள். அந்த கவுன் அவளுக்கென்றே பிரத்யேகமாகத் தயாரிக்கப்பட்டது என்பதைப் பார்ப்போர் எவரும் சொல்லி விடுவார்கள். அவ்வளவு கனக்கச்சிதமாக இருந்தது. அவள் பேரழகி என்று அவளது ஒவ்வொரு அசைவிலும் எடுத்துக் காட்டியது.



தோள் வரை வளர்ந்திருந்த முடியை, அலை அலையாக விட்டிருந்தாள்.. எத்தனை பாட்டில் ஹேர் ஸ்பிரே காலியானதோ தெரியவில்லை. கழுத்தில் ஒற்றை இழைகள் கொண்ட வைர நெக்லஸ், அதற்குப் பொருந்தக்கூடிய காதணிகள், சிறிய பிரேஸ்லெட்டுடன் கால்களில் ஹை ஹீல்ஸ் செருப்பு என்று அந்த உடைக்கேற்ற அலங்காரங்களும் பிரமாதமாகவே இருந்தது.



மாப்பிள்ளைக் கோலத்தில் அவள் முன்னே நின்ற மாதவனுக்கு எப்போதடா உள்ளே போவோம் என்றிருந்தது. அவன் அருகில் நின்ற வைஜயந்தியையும் ஸ்ரேயாவையும் ஒப்பிட்டுப் பார்க்க நினைத்த மனத்தை அடக்கி வருங்கால மைத்துனியிடம் பார்வையைச் செலுத்தினான். ஸ்ரேயா ஃபேஷன் டிசைனர் என்பது அவனுக்குத் தெரியும். இந்த உடை அவளுடைய தயாரிப்பாகக் கூட இருக்கலாம். அவளது திறமையையும் உழைப்பையும் பறை சாற்றிய அந்த உடையை அவள் அணியத் தேர்ந்தெடுத்த நிகழ்வு தான் பொருத்தமாக இல்லை.



இப்படி ஆளாளுக்கு அவளைப் பார்த்து முகம் சுழிக்க அவளோ அப்போது தான் உள்ளே நுழைந்து கொண்டு இருந்த விக்ரமனை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டு நின்றாள். டார்க் கிரே கலர் சூட்டில் ஆறரை அடி உயரத்தில் மாப்பிள்ளை போல இருந்தவனை கண் இருக்கும் யாரும் திரும்பிப் பார்க்க தான் செய்வார்கள்.



ஆனால் அவனோ முகத்தில் எந்த உணர்ச்சியும் இல்லாமல் வந்தவன், மாதவனின் அருகில் வந்தவுடன் புன்னகை பூசிக் கொண்டான். அவனைத் தோளோடு அணைத்து,



"ஹேய் மேடி! ஆவ்சம் மேன்.. கலக்கலா இருக்கே மாப்பிள்ளை" என்றான்.



"அது சரி.. நீ என்ன ரொம்ப சீக்கிரம் வந்துட்ட?" என்றவாறு அவனைப் பார்த்த மாதவன் நண்பனை ஓட்டினான். "அட..நீ விக்ரம் தானே... மாப்பிள்ளை தோழன்னா மாப்பிள்ளையை விட நல்லா இருக்கணும்னு யாருடா கண்டு பிடிச்சா? நீ எதுக்கும் என்னை விட்டுக் கொஞ்சம் தள்ளியே நில்லு. இன்னைக்கு நான் தான் ஹீரோ!"



"ஷ்ஷ். மாதவா! இப்படி ஆளாளுக்கு டையத்த வேஸ்ட் பண்ணினா எப்போ உள்ள போறது? ஸ்ரேயா! நீ என்னம்மா சிலை மாதிரி நிக்கற? ஆரத்தியை சுத்து. எப்படின்னு தெரியும் தான" என்ற ஹேமா



"ஹான்.. தெரியும் ஆன்ட்டி.. க்ளாக் வைஸ் த்ரீ டைம் சுத்தணும். அவ்வளவு தானே?" என்றவள்



முகத்தில் சிரிப்புடன் முன்னே வந்து விக்ரமனைப் பார்த்துக் கொண்டே மாதவனுக்கு ஆரத்தி எடுத்தாள். எடுத்து முடித்தவள், அவன் கொடுத்த கிஃப்ட் பாக்ஸை வாங்கிக் கொண்டு, "ஹாய் மேடி! வெல்கம்! டு அவர் ஃபேமிலி" என்று மாதவனைத் தோளோடு அணைத்து விடுவித்தாள்.



அவள் மேலும் எதையோ ஆரம்பிக்க,



"போதும் மா.. ஆரத்தி எடுத்தாச்சுல்ல. அடுத்த ஆளுக்கு வழியை விடு." அங்கே இருந்த பாட்டிகள் கண்டிப்பாகச் சொல்லிவிட, "ஓ.. ஐயாம் ஸாரி.. ஸீ யூ ஆன் தி ஸ்டேஜ் மேடி!" என்று சொல்லி விட்டு விக்ரமனை நோக்கி ஒரு மோகனப் பார்வை வீசிப் போனாள். நம்ம ஆளு அதையெல்லாம் கண்டுகொண்டால் தானே, அவர் தான் விசுவாமித்திரன் மோடுக்கு எப்போதோ சென்று விட்டாரே.





அனைவரும் ஆரத்தி எடுத்து முடித்ததும் மண்டபத்தினுள் காலெடுத்து வைத்த மாதவனை அவனது வருங்காலம், அதாங்க நம்ம ஸ்வேதா எதிர் கொண்டு அழைத்தாள். மாதவனுக்கு இடப்புறம் நின்ற வைஜயந்தி முன்னே வந்து தனது கையில் வைத்திருந்த மாலையை அணிவித்து மாதவன் அருகில் அவளை நிற்க வைத்தாள். அதன் பிறகு மணமக்கள் இருவரையும் பிடித்துக் கொண்ட புகைப்படக் கலைஞர் முழுதாகப் பத்து நிமிடங்களைச் செலவழித்து அவர்களைத் தனது கேமராவில் அடக்கினார்.



அதற்காகவே காத்திருந்தார் போல் இசை நிகழ்ச்சி ஆரம்பமானது.



"ஹலோ எவ்ரிபடி..‌ ஆனந்தராகம் - வாத்தியக் குழுமம் உங்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறது. நாளை மணநாள் காண இருக்கும் மாதவன் மற்றும் ஸ்வேதாவின் விருப்பப் பாடல்களை இசைக் கருவிகளின் வாயிலாக வழங்கக் காத்திருக்கிறோம். கர்னாடிக் & சினி மெலடிகளின் கலவையான ஃப்யூஷன் இசையை கீபோர்டு, வயலின், கிட்டார், புல்லாங்குழல், மிருதங்கம், தபேலா போன்ற மென்மையான இசைக்கருவிகள் மற்றும் சிறப்பு விளைவுகளுடன் (special effects), கேட்டு மகிழுங்கள். புல்லாங்குழல் இசையுடன் நிகழ்ச்சியைத் தொடங்குவோம். தாங்க் யூ."



"பூங்கதவே தாள் திறவாய்

பூவாய் பெண் பாவாய்

பொன் மாலை சூடிடும்

பூவாய் பெண் பாவாய்" என்ற இசையை ரசித்தபடி மாதவனும் ஸ்வேதாவும் கைகோர்த்து மேடையை நோக்கி நடக்க, அங்கே திருமண நிகழ்வுகள் ஆரம்பமாகியது.



மேடையில் மாதவனும் ஸ்வேதாவும் நடுவே நிற்க, ஸ்வேதாவின் அருகில் வைஜயந்தியும் மாதவனின் அருகில் விக்ரமனும் நின்று அவர்களை விதம் விதமாக ஃபோட்டோக்களுக்கு போஸ் கொடுக்க வைத்தார்கள். அவர்களைக் கீழே இருந்து பார்த்த ஸ்ரேயா வேகமாக மேடையேறி வந்தாள். தமக்கையின் புறம் செல்லாமல் விக்ரமனின் அருகில் வேகமாக வர, "எக்ஸ்யூஸ் மீ மேடி.. ஒரு எமர்ஜென்சி.. ஃபோன் பண்ணிட்டு வந்துடறேன்." என்று மேடையை விட்டு மின்னலாக இறங்கி இருந்தான் அவன்.



விக்ரமனின் செய்கையில் கோபம் கொண்ட ஸ்ரேயா, மாதவனைப் பார்த்துச் சிரித்தபடி அவனருகில் நெருங்கி நிற்க, மாதவனின் முகம் கடுத்தது. "வைஜூ! இந்த மாலைல என்ன தான் பிரச்சினைன்னு பாரு. கழுத்தில ஏதோ கடிக்கிற மாதிரியே இருக்கு" என்று வைஜயந்தியை அழைத்துத் தன் அருகில் நிறுத்திக் கொண்டான். வேறு வழியின்றி தமக்கையின் புறம் வந்த ஸ்ரேயா, "இங்கே கால் கடுக்க நிக்கணும்னு உங்களுக்கு தான் தலையெழுத்து. நான் எதுக்கு இங்கே? இன்டீசன்ட் ஃபெல்லோஸ்!" நொடித்துக் கொண்டவளாக கீழே இறங்கினாள்.



சற்று நேரம் கழித்தே அங்கே நடந்த விஷயத்தை உணர்ந்து கொண்ட ஸ்வேதாவின் முகம் வாடியது. மேடையில் நடந்த அனைத்தும் தந்தையுடன் பேசிக் கொண்டு இருந்த அரவிந்தனின் கண்களில் விழுந்து வைத்ததில் அவன் முகம் கோபத்தில் சிவந்தது. அவனது பார்வையைத் தொடர்ந்த தாமோதரனும் நொந்து போனார்.



"இவளை என்ன தான் பண்றதுன்னு தெரியலையே பா. எல்லாம் உங்க அம்மா கொடுக்கிற இடம். கூடப் பிறந்த அக்கா கல்யாணத்துக்கு இப்படியா வருவா. சொந்தக் காரங்களுக்கு பதில் சொல்ல முடியல. வாயைத் திறந்து எதுவும் சொல்லவும் முடியாது. உங்க அம்மா வரிஞ்சு கட்டி வந்துடுவா. கடவுள் தான் காப்பாத்தணும்."



"அப்பா! அவ டிரெஸ் கூட பெரிய பிரச்சினை இல்லை. இந்த காலத்தில இதெல்லாம் சகஜம் தான். இன் ஃபேக்ட் நிறைய இடத்தில கல்யாணப் பொண்ணு கூட இப்படி உடுத்தறாங்க. அதுவும் இந்த டிரெஸ்ஸை அவளே கஷ்டப் பட்டு டிசைன் பண்ணி இருக்கா.. அவளோட டேலன்ட் நல்லாவே தெரியுது. ஆனால் மாடர்ன்னு நினைக்கிற அவளோட பிஹேவியர்… அதைத் தான் கொஞ்சம் மாத்தணும்.. இப்போ கவனிக்கலேன்னா... "



"நீ சொல்றது புரியுது அரவிந்தா. இப்போ ஸ்வேதா கல்யாணம் நல்ல படியா நடக்கணும். அது தான் முக்கியம். நீ போய் கொஞ்ச நேரம் ஸ்வேதா கிட்ட நில்லு. பாவம் அவ முகம் வாடிப் போச்சு. நான் போய் வந்தவங்களைக் கவனிக்கிறேன்."



மணமக்களுக்கு ஜூஸை எடுத்துக் கொண்டு மேடை நோக்கி வந்தவன் மணமக்களின் பொருத்தத்தை வியந்த படி வந்தான். இருவருமே தங்க நிறத்தில் மேட் ஃபினிஷ் செய்யப்பட்ட உடைகளை அணிந்திருந்தனர். எம்பிராய்டரி, ஜாலி வொர்க், ஆரி வொர்க், ஸ்டோன் வொர்க் என்று மாதவனின் ஷெர்வானியும் ஸ்வேதாவின் லெஹங்காவும் வின்டேஜ் லுக்குடன் காண்பவர் மனதைக் கொள்ளை கொண்டது.



ஜூஸூடன் மேடை ஏறியவன் செய்ய வந்த வேலையை அவனுக்கு முன்பே வைஜயந்தி செய்து கொண்டு இருந்தாள்.



"அண்ணா! இந்த அண்ணியைப் பார்த்தியா? கோல்ட் கலர் டிரெஸ்ல அப்படியே தங்கச் சிலை மாதிரி ஜொலிக்கிறாங்க பாரு. ஓ.. எனக்குப் புரிஞ்சிடுச்சு. இந்தப் பக்கம் திரும்பினா, அப்புறம் கண்ணு ரெண்டும் அண்ணி கிட்ட ஃபெவி க்விக் போடாமலே ஒட்டிக்கும். பிச்சு எடுக்கற கஷ்டம் ‌‌எங்களுக்கு வேண்டாம்னு நினைக்கிற போல. உன்னோட நல்ல எண்ணம் எனக்குப் புரியுது. இருந்தாலும் ஒரு தடவை திரும்பிப் பாரு. அண்ணி! நீங்களும் தான். நாங்க மேட் ஃபார் ஈச் அதர்னு டிரெஸ்லயே காட்டி இருக்கீங்க பாருங்க. அப்படியே இந்த ஜோதா அக்பர்ல வர்ற ஐஸ்வர்யா... "



பேசிக்கொண்டே சென்றவள் நிறுத்தி விட்டாள். அவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு எவ்வளவு நேரம் மெய்மறந்து நின்றார்களோ, அரவிந்தன் வந்து அவர்களைத் தரை இறக்கினான். வைஜயந்தி சொன்னது போல அரவிந்தனின் கண்கள் அவளோடு ஒட்டிக் கொள்ள விரும்பியது. கஷ்டப்பட்டு பார்வையைத் திருப்பியவன், "மாதவன்! கெஸ்ட் எல்லாம் கியூல நிக்கறாங்க. இந்த ஜூஸைக் குடிச்சிட்டு தெம்பா நில்லுங்க. ஸ்வேதா பி சியர்ஃபுல். திஸ் இஸ் யுவர் டே. Don't give importance to unnecessary things (தேவையில்லாத விஷயத்துக்கு முக்கியத்துவம் கொடுக்காத)" என்று தங்கைக்குப் புரியும் விதத்தில் சொல்லி விட்டு விருந்தினர்களை வரவேற்கத் தயாரானான்.



ஒரு பக்கம் ரிசப்ஷன் களைகட்ட, மணமக்கள் அவ்வப்போது அவர்களின் பிரத்யேக உலகத்தில் பிரவேசிக்க, அவர்களை வைஜயந்தி தரை இறக்க, இன்னொரு புறம் தமயந்தி தனது கலகத்தை ஆரம்பித்து வைத்தார். மணமகன் அறையில் தனியே அகப்பட்ட ஹேமாவிடம் தனது நக்கீரர் வேலையைக் காட்டிக் கொண்டு இருந்தார்.



"எவ்வளவு கஷ்டப்பட்டு இந்த பிள்ளைகளை எல்லாம் தயார் பண்ணினேன். ஒவ்வொரு தட்டுக்கும் எவ்வளவு செலவாச்சு தெரியுமா? பதினாறு பேர் ஆரத்தி எடுத்தாங்க. இங்கே பதினைந்து கிஃப்ட் தான் வந்திருக்கு. நாங்க தான் முதல்லயே பதினாறுன்னு சொல்லிட்டோமே, அப்புறம் எப்படி ஒன்னு மிஸ் ஆகும்?" அவர் குரலை உயர்த்த, ஹேமா ஆடிப் போனார்.



நிச்சயதார்த்த சீர் வரிசைத் தட்டுகள் சரியில்லை, என்று ஏற்கெனவே ஒரு ரவுண்டு குறை சொல்லி முடித்திருந்தார். இருபத்தைந்து வெள்ளித் தட்டுகளில் தங்கம், வைரம் எல்லாம் வைத்த சீர் அவர்களின் ரேஞ்சுக்கு இல்லை என்றால் அவர்களின் ரேஞ்ச் தான் என்ன என்று கேட்கத் தோன்றியது. இப்போது யாரும் இந்தப் பேச்சை கவனித்தால் என்ன ஆகும் என்ற கவலை வேறு ஹேமாவுக்கு. அதைப் பற்றிய அக்கறை ஏதும் இல்லாமல் தமயந்தி வழக்காட, ஹேமாவை மீட்கும் ஆபத்பாந்தவனாக அருந்ததி அங்கே வந்தார்.



என்ன விஷயம் என்று அறிந்தவர், "ஹேமா! இந்த கிஃப்ட் பதினைஞ்சு தான். பொண்ணோட சொந்தத் தங்கைன்னு ஸ்ரேயாவுக்கு மட்டும் கோல்ட் செயின் வாங்கி இருந்தோமே. மத்தவங்களுக்கு எல்லாம் வெள்ளில தானே கிஃப்ட். ஸ்ரேயாவோட செயினை ஆரத்தி எடுத்த உடனேயே மாதவனே அவ கையில கொடுத்துட்டானே, மறந்துட்டியா?" என்றவர் தமயந்தியைப் பார்த்த பார்வையில் அவர் ஊமையாக வெளியேறினார்.



"என்ன ஹேமா இது? இப்படி எதுக்கெடுத்தாலும் இவங்க குறை சொல்லிட்டு இருந்தால் நீ வாயை மூடி இருக்கணும்னு அவசியம் இல்லை. ஒரு தடவை திருப்பி பதில் கொடுத்துப் பாரு, அடுத்து வரவே மாட்டாங்க. பாவம் இவங்க பையனுக்கு பொண்ணு கொடுக்கப் போற சம்பந்தி." அருந்ததி மேடம்.. உங்களுக்கு நீங்களே பாவம் பார்க்கிற நிலைமை... என்ன செய்ய..



"ஸ்வேதாக்கு ரொம்ப ஸாஃப்ட் நேச்சர் அருந்ததி. நான் கொடுக்கிற பதில் அவள் மனசைக் கஷ்டப்படுத்திடக் கூடாது. நம்ம வீட்டுல அவ இயல்பா பழகணும். இதுக்கு முன்னாடி இவங்க பேசும் போதெல்லாம் அவ எவ்வளவு சங்கடமா ஃபீல் பண்ணினா தெரியுமா? இனிமேலும் அது தேவையில்லையே."



"அட.. நீ சூப்பர் மாமியாரா இருக்கியே.. ஸ்வேதா பொண்ணு லக்கி தான். எதுக்கும் டென்ஷன் ஆகாமல் இரு. நாம நல்லதையே நினைப்போம், எல்லாம் நல்ல படியா நடக்கும். இப்போ, மேடைக்கு போகலாம் வா. பசங்க தேடுவாங்க." அதன் பிறகு திருமணம் முடிந்து மணமக்கள் வீடு திரும்பும் வரை ஹேமாவின் நிழல் போலவே அருந்ததி இருக்கத் தமயந்தி அடக்கி வாசித்தார். அவ்வப்போது வாயைத் திறந்தவரை, திறக்காமலே இருந்திருக்கலாம் என்று நினைக்க வைத்தார் அருந்ததி.



இந்த உரையாடலைக் கேட்டிருந்த அரவிந்தனின் மனதில் சொல்ல முடியாத சங்கடம் பரவியது. வைஜயந்தி அவனுக்குள் ஒரு பாதிப்பை ஏற்படுத்தி இருக்க, தாயின் நடவடிக்கைகளை பார்க்கும் போது இது நடக்குமா என்று பயமாக இருந்தது.



'இந்த அம்மா ஏன் இப்படி இருக்காங்க? என்ன தான் பிரச்சினை அவங்களுக்கு?' என்று அவன் மண்டையைப் பிய்த்துக் கொண்டது தான் மிச்சம். தமயந்தி தொட்டதற்கெல்லாம் கோளாறு சொல்லி கலகம் செய்வதே தொழிலாக இருந்தார். முகூர்த்த பட்டில் ஜரிகை கம்மி, புடவை நிறம் இன்னும் கொஞ்சம் பளிச்சென்று இருந்திருக்கலாம், தாலிக் கொடியில் ஒரு முகப்பு வைத்திருக்கலாம், மைத்துனனுக்கு வாங்கிய மோதிரம் காற்று போல லேசாக இருக்கிறது என்று பட்டியல் நீண்டு கொண்டே போனது. அருந்ததி மூலம் அதற்கெல்லாம் சரியான பதிலும் கிடைத்துக் கொண்டு தான் இருந்தது.



மாதவன் வீட்டினர் அதைக் கண்டு கொள்ளாமல் இருந்தாலும் ஸ்வேதாவின் முகம் வாடிவிட்டது.



ஒரு வழியாக ஸ்வேதா புகுந்த வீடு செல்ல, அங்கேயும் வந்து மாப்பிள்ளையின் அறையைப் பார்க்க வேண்டும் என்ற தமயந்தியை வேற்றுக் கிரக வாசி போல எல்லாரும் பார்த்தனர். இரவுக்கென எந்த அலங்காரங்களும் தேவை இல்லை என்று மணமக்கள் ஸ்ட்ரிக்டாகக் கூறிவிட்டதால் மாதவனின் அறை எப்போதும் போல இருந்தது.



"நம்ம ரூமுக்கு நீ வரும் போது, அது எப்போதும் எப்படி இருக்குமோ அப்படித்தான் இருக்கணும்னு நான் நினைக்கிறேன். நீ பார்த்து உனக்குத் தேவையான மாடிஃபிகேஷன் பண்ணிக்கோ!" என்று சொல்லி இருந்தான் மாதவன். அவன் மனைவியை வரவேற்கும் விதமாக சில சர்ப்ரைஸ்களைத் தானே ஏற்பாடு செய்து விட்டு அவன் காத்திருக்க, இது என்ன இன்ஸ்பெக்ஷன் என்று அவன் முகம் சுளித்தான். இப்போது அவனது மாமனார் உதவிக்கு வந்தார்.



"தமா! என்ன இது? இப்போ எதுக்கு மாப்பிள்ளை ரூமுக்குப் போகணும்னு அடம் பிடிக்கிற? நமக்கு இன்னும் மண்டபத்தில நிறைய வேலை இருக்கு. பொண்ணைக் கொண்டு வந்து மாமியார் வீட்டுல விட்டாச்சு. இனிமேல் அவங்க பார்த்துப்பாங்க. நீ கிளம்பு!"



"அதெப்படி நான் பொண்ணைப் பெத்தவ, எல்லாத்தையும் முதல்ல இருந்தே கவனிக்கணும். என் பொண்ணு வாழப் போற ரூமைப் பார்த்தால் என்ன தப்பு? இப்போ விட்டுட்டு அப்புறம் வருத்தப் படற மாதிரி ஆகிடக் கூடாது." சற்றும் யோசிக்காமல் பேசிய மனைவியின் வாயை எப்படி மூடுவது என்று தெரியாமல் திகைத்தார் தாமோதரன்.



குடும்பமாக மாப்பிள்ளை வீடு வர வேண்டும் என்று ஸ்ரேயாவையும் அழைத்து வந்திருந்த மனைவியின் போக்கில் அவருக்கு உடன்பாடு இல்லை. மண்டபத்தில் விக்ரமன் இருந்த நேரம் முழுவதும் ஸ்ரேயா ஏதோ ஒரு காரணத்திற்காக அவனிடம் சென்றதும் அவன் வெகு நாசுக்காக அவளை ஒதுக்கியதையும் அவரும் கவனித்துக் கொண்டு தான் இருந்தார்.



ஸ்ரேயாவின் நடவடிக்கைகளில் தமயந்திக்கும் பங்கு இருக்கிறது என்பதையும் அறிந்தே இருந்தார். இப்போது அவரது கவலை எல்லாம் மகனைப் பற்றியது. வைஜயந்தியிடம் அவனது மனம் சென்றாலும் கஷ்டப்பட்டு அதைத் திசை திருப்ப அவன் செய்யும் முயற்சிகளை அவர் கவனித்திருந்தார். அவருக்கும் வைஜயந்தியைப் பிடித்திருந்தது. தமயந்தியைப் போல ஒரு மாமியார் அந்தப் பெண்ணுக்கு தேவையா என்றும் இருந்தது.



ஸ்ரேயா விஷயத்தை தாமோதரன் மறுத்தால் அரவிந்தனின் விஷயம் கண்டிப்பாக தமயந்தியால் மறுக்கப்பட்டுவிடும். ஒரு வேளை, பெண் கொடுத்து பெண் எடுக்கலாம் என்று தமயந்தி‌ யோசிக்கவும் வாய்ப்பு இருக்கிறது. காலம் தான் பதில் சொல்ல வேண்டும் என்று நினைத்தவாறு மனைவியைச் சமாளித்து மாதவன் வீட்டில் இருந்து அழைத்து வந்தார்.



மாதவன், மறுவீடு என்று மாமியார் வீட்டுக்கு காலையில் போய் சாயங்காலம் திரும்பி விட்டான். எப்படியும் சில நாட்கள் தங்குவான், அவனிடம் விக்ரமன் பற்றி பேச வேண்டும் என்று நினைத்த ஸ்ரேயாவுக்கு பெருத்த ஏமாற்றம். அன்றிரவே அவர்கள் தேனிலவு செல்ல, வழியனுப்ப வந்த ஸ்ரேயா கிடைத்தது வாய்ப்பு என்று விக்ரமனின் விவரங்களை மாதவனிடம் கேட்டாள்.





"ஃபார் வாட், ஸ்ரேயா?"



"ஐ திங்க் ஐ லவ் ஹிம் மேடி. எனக்கு அவனை ரொம்பவே பிடிச்சிருக்கு. அவன் கிட்ட டைரக்டா சொல்லலாம்னு தான். அவன் மொபைல் நம்பர் கொடுத்தால் போதும்."



"ஸாரி டு ஸே திஸ் ஸ்ரேயா. அவன் பெர்மிஷன் இல்லாமல் என்னால நம்பர் கொடுக்க முடியாது. எதுக்கும் நீ உங்க வீட்டுல முதல்ல பேசு. அது தான் சரி." அவனுக்கு விக்ரமனைப் பற்றி நன்றாகத் தெரியும். ஸ்ரேயா மாதிரி மாடர்ன் பெண்கள் அவனைக் கவர்ந்து விட முடியாது என்பது அவனது எண்ணம். ஸ்ரேயாவின் அன்பு உறுதியானதென்றால் பெற்றோரிடம் பேசட்டும். அப்படி இல்லாமல் விக்ரமனின் தோற்றத்தில் வந்த ஈர்ப்பு என்றால் அது மாறிக் கொண்டே இருக்கும் என்பது மாதவனின் எண்ணம். பார்ப்போம், ஸ்ரேயா நியதிக்குப் போட்டியாக வருவாளா என்று..



நாட்கள் கடந்து செல்ல, விக்ரமன் தனது மேற்படிப்புக்கான ஏற்பாடுகளை செய்து கொண்டு இருந்தான். புருஷோத்தமன் அதற்குரிய உதவிகளைச் செய்து கொண்டு இருந்தார். அந்த உதவிகளை எல்லாம் கல்லூரியிலே பெற்றுக் கொண்டான் மாதவனின் திருமணத்திற்குப் பின் ஒரே ஒரு தடவை ஒரு தீசிஸ் விஷயமாகப் புருஷோத்தமனைப் பார்க்கச் சென்றான்.



அன்று தான் ஸ்வேதாவின் கர்ப்பம் உறுதி செய்யப்பட்டிருந்தது. அவளது பிறந்த வீட்டினர் அனைவரும் வந்திருக்க, ஸ்ரேயாவின் முகத்தில் இவனைப் பார்த்தும் பல்ப் எரிந்தது. அவனிடம் பேச வேண்டும் என்று அவளால் ஆன எல்லா முயற்சிகளையும் செய்தாள். அன்று யூ டர்ன் போட்டவன் தான் மறந்தும் அங்கே தனியாகச் செல்லவில்லை.



தினமும் நியதியை வகுப்பில் பார்க்கும் பொழுதெல்லாம் காதலைச் சொல்லி விடலாமா என்று மனம் யோசிக்கவே செய்தது. அப்போதெல்லாம் அவள் தோழிகளிடம் பேசியது ஞாபகம் வரும். அதன் பிறகு துள்ளும் மனதை மூடி வைத்தவன், தனது பார்வையை மாற்றிக் கொண்டான். எல்லோரையும் பார்ப்பது போலவே அவளையும் பார்த்து வைத்தான்.



தோழிகளிடம் வாய் வலிக்கத் தத்துவம் பேசிய நியதி, படிப்பு முடியும் நேரம் நெருங நெருங்க அவனது ஒற்றைப் பார்வைக்காக ஏங்க ஆரம்பித்தாள். இருவரும் ஏதோ ஒரு தயக்கத்தில் உழன்று மனதைத் திறப்பதற்கான சாவியைத் தேடிக் கொண்டே இருந்தனர். காலம் காத்திருக்காமல் ஓட, மகளிர் மருத்துவத்தில் மேல்படிப்பு படிக்க அவள் தயாராக, அவன் தனது ஆராய்ச்சியைத்‌ தொடங்கி இருந்தான்.
 

Author: SudhaSri
Article Title: ஆடுமடி தொட்டில் இனி - 6
Source URL: Nectar Novels-https://nectarnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.