• ஹாய் மக்களே! நம் Nectar Novels தளத்திற்கு நல்வரவு🙏😍😍 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள் nectarnovels.ss@gmail.com 🩷 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...👇 வேதா விஷால் & அனன்யா🙏💖

ஆடுமடி தொட்டில் இனி - 8

SudhaSri

Administrator
Staff member
Jun 16, 2024
536
44
43
india
ஆடுமடி தொட்டில் இனி - 8



"யாரது எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கே.. அட.. நம்ம ஸ்வேதா! வா வா வா.. என்ன ஒரு அதிசயம்." கதவைத் திறந்து கொண்டே தங்கையை வரவேற்றான் அரவிந்தன்.



"அவ முதல்ல உள்ள வரட்டும்.. அப்புறம் உன் விசாரணையை ஆரம்பி. இப்போ எனக்கு வழிய விடு" தமயந்தி மகனை நகற்றி விட்டு வேகமாக உள்ளே சென்றார்.



"உள்ள வாம்மா ஸ்வேதா. இப்படி வந்து உட்காரு" மகளை அழைத்து வந்து மூவர் அமரும் படியான இருக்கையில் நடுவில் அமர்த்தித் தானும் ஒரு புறம் அமர்ந்து கொண்டார் தாமோதரன்.



தங்கையின் மறுபுறம் அமர்ந்த அரவிந்தன்.. "எப்படி டா இருக்க? கொஞ்சம் வெயிட் லாஸ் ஆனது மாதிரி தெரியுதே?" என்று அக்கறையுடன் விசாரித்தான்.



"அது.. வாமிட் பண்ணிட்டே இருக்கேன் அண்ணா.. இனிமேல் தான் வெயிட் போடும்னு ஆன்ட்டி சொன்னாங்க.."



"அது சரிஇஇஇ.. மாதவன் உன்னை எப்படித் தனியா விட்டான். பாக்கெட்லயே வச்சிட்டு சுத்துவானே! எப்போ ரிலீஸ் பண்ணினான்?"



"அண்ணா!" என்று ஸ்வேதா சிணுங்கினாள்.



"அதென்ன டா பாக்கெட்ல வச்சுட்டு சுத்தறது?" தாமாதரன் மகனிடம் சந்தேகம் கேட்டார்.



"அதுவா பா… உங்களுக்கு தெரிஞ்சிருக்க வாய்ப்பில்லை தான்.. லேடீஸ் எல்லாம் முந்தானைல புருஷனை முடிஞ்சு வச்சிருக்காங்கன்னு சொல்வாங்களே… அதோட மேல் (male) வெர்ஷன் இது. முந்தானைக்கு பதிலா பாக்கெட்"



"ஹா.. ஹா.. ஹா.. கரெக்டா தான் சொல்றப்பா. மாப்பிள்ளை நம்ம ஸ்வேதாவ அப்படித்தான் பாக்கெட்டுக்குள்ள போட்டு வச்சிருக்கார். ஹா.. ஹா.. ஹா.."



"அப்பா! நீங்களுமா?"



"அதென்ன மா நீங்களுமான்னு கேட்கிற.. நாங்க உண்மையைத் தானே சொல்றோம். கல்யாணம் ஆகி ஒரு வருஷம் ஆகப் போகுது. மறுவீடு, தலை தீபாவளி இப்படி எல்லாமே வந்து போச்சு. ஆனால் நீங்க என்ன பண்ணீங்க, ஒரு நாளுக்கு மேல இங்கே தங்கவே இல்லை. தனியா என்னைக்காவது நம்ம வீட்டுக்கு வந்திருக்கியா? மாப்பிள்ளை உன்னை அடை காக்கிறது மாதிரி. கூடவே வந்து கூட்டிட்டுப் போய்டுவார். இரண்டு நாள் எங்க பொண்ணோட இருக்கணும்னு சொன்னா, எங்க வீட்டுல வந்து எத்தனை நாள் வேணும்னாலும் இருங்கன்னு சொல்லுவார். அதான் எங்களுக்கு இன்னும் டவுட்டாவே இருக்கு."



நீளமாகவே ஒரு தந்தையின் ஏக்கத்தை வெளிப் படுத்தினார் தாமோதரன். அந்த வீட்டில், தமயந்தி சீரியலே கதி என்று இருப்பார். அரவிந்தனின் வேலை இரவும் பகலும் மாறி மாறி வரும். தந்தையிடம் ஒரு ஹாய், ஒரு பை சொல்லிவிட்டுப் போய் விடுவான். வருடத்தின் பாதி நாட்களுக்கு மேல் வெளிநாட்டு வாசம். அப்போது அந்த ஹாய் - பைக்குக் கூட பஞ்சமாகிப் போகும்.



ஸ்வேதா தான் தந்தையிடம் நிறைய நேரம் செலவழிப்பவள். அவளது வேலையில் நிறைய நேரமும் கிடைக்க க்வாலிட்டி டைம் என்று தந்தையும் மகளும் வரைமுறை இல்லாமல் பேசிக்கொண்டு இருப்பார்கள். அவளது திருமணத்திற்குத் பின் வீட்டில் தனிமையை உணர ஆரம்பித்தார் தாமோதரன். அது தான் இப்படி ஆதங்கமாக வெளி வந்தது.



ஆனால் ஸ்வேதாவோ, புகுந்த வீட்டில் தாய் தந்தையாக நடந்து கொள்ளும் மாமியார் மாமனாரின் பாசத்தை அனுபவித்ததில் தந்தையின் ஞாபகம் பெரிதாக இல்லை. அது தான் தினமும் பேசிக் கொள்கிறோமே என்று தான் நினைத்தாள். தந்தை தன்னை இந்த அளவு மிஸ் செய்திருப்பார் என்று அவள் கனவிலும் நினைத்துப் பார்க்கவே இல்லை. இப்போது அவரது ஆதங்கம் கண்டு மனம் வருந்தினாள்.



"ஸாரி பா. எனக்கு இது தோணவே இல்லை. டெய்லி ஃபோன்ல பேசிக்கிறோமேன்னு தான் நினைச்சேன். வாரம் ஒரு தடவை நேர்ல நீங்களே வந்தீங்களா.. அதான் எனக்கு எதுவும் தோணவே இல்லை.. ப்ளீஸ் பா.. நீங்க ஃபீல் பண்ணாதீங்க. லாஸ்ட் ஃபைவ் மன்ந்த்ஸா பெட் ரெஸ்ட்ல வேற இருக்கட்டும்னு சொல்லிட்டாங்க. ஐயாம் ரியலி ஸாரி பா! ஸாரி அண்ணா!"



மிகவும் உணர்ச்சி வசப்பட்டு பேசினாள் ஸ்வேதா.



"எதுக்கு டா ஸாரி எல்லாம் கேட்டுட்டு.. நாங்க உன்னைக் கேலி பண்ணக் கூடாதா?" தங்கையின் முகத்தில் குற்ற உணர்வைக் கண்டு அரவிந்தன் மாற்றி யோசித்தான்.



"அதானே! பதினைந்து நாளைக்கு பெர்மிஷன் கொடுத்திருக்கார். பார்ப்போம், எத்தனை நாளைக்கு உன்னைப் பார்க்காமல் இருக்க முடியுதுன்னு.. "



"கரெக்ட் பா! இப்போ தான் இந்த பக்கம் எல்லாம் திடீர்னு வேலை வரும். பார்க்கலாம், முழுசா பதினைஞ்சு நாளும் இங்கே இருக்காளான்னு? எப்படியும் இது வரை மாமியார் வீட்டுக்கு வராத மாதவன் இப்போ டான்னு ஆஜர் ஆகப் போறான் பாருங்க."



மகளுக்கு மாதுளை ஜூஸுடன் வந்த தமயந்தி அரவிந்தனின் கடைசி வார்த்தைகளை கேட்டுக் கொண்டே அருகில் வந்தார். "இந்தா ஸ்வேதா. ஜூஸைக் குடி. மதியத்துக்கு என்ன வேணும்னு சொல்லு, செஞ்சிடறேன்." மகளிடம் பேசி விட்டு மகனிடம் திரும்பினார்.



"ஏன் டா.. நம்ம பொண்ண ஒரு பதினைந்து நாள் கூட நம்ம வீட்டுல விட மாட்டாரா.. அப்படி என்ன தான் இருக்கு அந்த வீட்டில.. என்ன இருந்தாலும் அம்மா வீடு மாதிரி வருமா? மாசமா இருக்கிற பொண்ணுக்கு அம்மா கிட்ட தான் எதையும் கேட்டு வாங்கி சாப்பிட முடியும்."



'அம்மா வீடு மாதிரி வராது தான். அதிர்ந்து பேசத் தெரியாத மாமியார், அன்பான மாமனார், அவரிடம் ஸ்வேதா உரிமையுடன் பேச முடிகிறது.. எல்லாத்துக்கும் மேல மை டியர் மாது.. அங்கே அவளை துச்சமாக மதிக்கும் அம்மா இல்லை, பட்டிக்காடு என்று வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் குத்தும் தங்கை இல்லை.. ஸோ.. அது அம்மா வீடு மாதிரி வராது தான்..' ஸ்வேதா மனதுக்குள் கவுன்டர் கொடுத்தாள். வெளியே சொல்லி வம்பை விலை கொடுத்து வாங்க அவள் தயாராக இல்லை.



"அம்மா! அவளுக்கு கல்யாணம் ஆகிடுச்சு. அது அவ வீடு.. என்ன இருக்குன்னு கேட்கறீங்க? எல்லாமே இருக்கு மா. ஏதோ ஹேமா அத்தை அவளுக்கு எதுவுமே செய்யாதது மாதிரி பேசறீங்க.. அந்த வீட்டில எல்லாமே இவ இஷ்டத்துக்கு தான் நடக்குது.. பேசணுமேன்னு எதையாவது பேசாதீங்க.." அரவிந்தன் தாயின் பேச்சை ரசிக்கவில்லை.



"தமா! நீ எதுக்கும் கொஞ்சம் பேசறதுக்கு முன்னாடி யோசிச்சு பேசு. மாசமா இருக்கிற பொண்ணு கிட்ட எதையாவது பேசி டென்ஷன் ஏத்தி விடாத!" எந்த நேரத்தில் இப்படிச் சொன்னாரோ தெரியவில்லை. தேவதைகள் ததாஸ்து என்றன.



"ஆமா, நீங்க என்னைக்கு தான் நான் சொல்றதைச் சரின்னு சொல்லி இருக்கீங்க. இப்போ சொல்றதுக்கு.. கல்யாணம் ஆகி வருஷம் ஆகலை.. என் பொண்ணு கிட்ட எனக்கு உரிமை இல்லேன்னு சொல்ல அவன் யாரு? ஏகப்பட்ட கண்டிஷன் போட்டு அனுப்பறான். இவன் தான் அதிசயமா கல்யாணம் பண்ணி பிள்ளை பெத்துக்க போறான்…"



மரியாதை எல்லாம் தேய்ந்து காணாமல் போனது. தமயந்தி பேசிக்கொண்டே செல்ல ஸ்வேதாவுக்கு தொண்டையை அடைத்தது. அவளையே பார்த்துக் கொண்டிருந்த அரவிந்தனும் தாமோதரனும் என்ன செய்து தமயந்தியின் வாயை மூடுவது என்று யோசிக்க ஆரம்பித்தார்கள்.



"அம்மா! மா! வெயிட்.. வெயிட்.. வெயிட்.. இப்போ ஏதோ சொன்னீங்களே.. அதை அப்படியே ரிப்பீட் பண்ணுங்க.."



"என்னத்த டா ரிப்பீட் பண்ணச் சொல்ற?" எரிச்சலை அப்படியே வார்த்தைகளில் காட்டினார் தமயந்தி.



"அதான் மா.. கல்யாணம் ஆகி வருஷம் ஆகலை.. எனக்கு தான் பொண்ணு மேல உரிமை அதிகம்னு சொன்னீங்களே அதைத் தான்…"



"ஆமாம் டா.. எத்தனை தடவை கேட்டாலும் அதைத் தான் சொல்லுவேன்.. அது தான் சரியும் கூட.. ஆமா.. நீ எதுக்கு இத்தனை தடவை கேட்கற?"



"நோட் பண்ணி வச்சிக்கறேன் மா.. ஃப்யூச்சர்ல யூஸ் ஆகும் பாருங்க.. "



தமயந்தி மகனது பொடி வைத்த பேச்சைப் புரிந்து கொள்ள முடியாமல் அவனைப் பார்க்க, "நாளைக்கு நம்ம வீட்டுக்கு ஒரு பொண்ணு மருமகள்னு வருவால்ல.. ஒரு வேளை எனக்கு வரப்போற மாமியார் உங்களை மாதிரி இல்லாமல் தத்தியா இருந்தா என்ன செய்ய.. நானே டிப்ஸ் எல்லாம் எடுத்துக் கொடுக்கலாம் பாருங்க.. அதான்.. " என்றான்.. மனதுக்குள் வருங்கால மாமியாரிடம் ஒரு மன்னிப்பையும் வேண்டினான்.



"ஹூம்.. ஒன்னும் சொல்றதுக்கு இல்லை.. அம்மா ஸ்வேதா! நீ எதுவும் மனசுல வச்சுக்காத மா. இதையெல்லாம் மாப்பிள்ளை கிட்ட சொல்லி அவர் மனசைக் கஷ்டப்படுத்திடாத. எல்லாம் நல்ல படியா நடக்கணும்னு ஆண்டவனை வேண்டிக்கோ.." மகளின் தலையை வருடி விட்டு எழுந்து சென்றார் தாமோதரன்.



தந்தையைத் தொடர்ந்து அரவிந்தன் தங்கை அருகில் வந்தான். "ஆமா ஸ்வேதா! அப்பா சொல்ற மாதிரி நீ எதுவும் ஃபீல் பண்ணாத.. ரிலாக்ஸ்டா இரு.. மேடிக்கு இங்கே வந்துட்டேனு சொல்லிட்டியா?" சரியாக அதே நேரத்தில் ஸ்வேதாவின் அலைபேசி அழைக்க, "அவனுக்கு ஆயுசு நூறு தான் போ.. ரூம்ல போய் பேசு.."



"ம்ம்.. சரிண்ணா!" என்று மொபைல் அழைப்பை ஏற்றுக் காதில் வைத்தவாறே அவளது அறையை நோக்கிச் சென்றாள் ஸ்வேதா. அப்போது தான் எழுந்து வந்த ஸ்ரேயா அவளைத் தழுவிக் கொண்டாள். "ஹேய்.. ஸ்வே.. நீ எப்போ வந்த? எப்படி இருக்க? வந்த உடனே காதுல மொபைலோட சுத்த ஆரம்பிச்சிட்டியா? உனக்குத் தான் கல்யாணம் ஆகிடுச்சில்ல.. அப்புறமும் என்ன தான் பேசறீங்க?"



"இப்போ தான் ஜஸ்ட் ஃபிவ்டீன் மினிட்ஸ் முன்னாடி வந்தேன் ரேயா. அப்பாவும் அண்ணனும் பேசிட்டு இருந்தாங்க. அதான் ஹால்லயே உட்கார்ந்துட்டேன்.." நேரில் இருந்த தங்கைக்கும் மொபைலில் இருந்த கணவனுக்கும் சேர்த்து பதில் சொன்னாள்.



"அவ கிட்ட சொல்லு.. கல்யாணம் ஆகி ஐம்பது வருஷம் ஆனாலும் என் ஸ்வீட்டி கிட்ட பேசறதுக்கு எனக்கு விஷயம் இருக்கும்னு" ஸ்ரேயா கேட்ட கேள்விக்கு மாதவன் பதிலளிக்க, என்ன தான் செய்ய என்று முழித்துக் கொண்டு நின்றாள் ஸ்வேதா.



"ஓ.. ஃபோன்ல ஆத்துக்காரரா.. ஓகே ஓகே யூ கேரி ஆன்.." என்று தங்கை வழிவிட நிம்மதியாக கணவனிடம் பேச ஆரம்பித்தாள்.



இப்படி பிறந்த வீட்டில் அவளது முதல் நாள் ஒரு வழியாகக் கழிந்தது. 'இன்னும் பதினாலு நாள் இருக்கே.. ஹப்பா.. இப்பவே கண்ணைக் கட்டுதே' என்று நொந்து போனாள் அவள். அந்த அளவுக்கு ஒரே நாளில் கணவனும் தாயும் அவளைப் படுத்தி இருந்தார்கள்.



அரவிந்தன் சொன்னது போல் அடுத்த ஞாயிற்றுக்கிழமை காலை விடிந்தும் விடியாத நேரத்தில் வந்து கதவைத் தட்டினான் மாதவன்.



"ஹி.. ஹி.. இந்தப் பக்கம் ஒரு வேலையா வந்தேன் ஸ்வீட்டி.. அப்படியே உன்னைப் பார்த்துட்டுப் போகலாம்னு.." அசடு வழிய நின்றவனைக் கண்டு அரவிந்தன் உருண்டு புரண்டு சிரித்தான்.



சாயங்காலம் வரை மாமியார் வீட்டில் இருந்த மாதவன், தனது வருகை மாமியாருக்கு மகிழ்ச்சி தரவில்லை என்று புரிந்து கொண்டான். காலை உணவின் போதே அதை உணர்ந்து கொண்டவன், வெளிநாட்டில் இருந்து வந்திருக்கும் நண்பனை நீண்ட நாள் கழித்து பார்க்கப் போகிறேன் என்று கிளம்பி விட்டான். மதிய உணவை முடித்துக் கொண்டு மூன்று மணி அளவில் திரும்ப வந்தவன், சிறிது நேரம் மாமனார் மற்றும் மைத்துனனுடன் பேசிக்கொண்டு இருந்தான்.



"டேக் கேர் டா! பி ஹேப்பி!" என்று மனைவியிடம் சொல்லி விட்டு, ஆறு மணிக்கெல்லாம் கிளம்பி விட்டான்.



படுக்கையில் புரண்ட படி அன்றைய நிகழ்வுகளைக் கோர்வையாக யோசித்த ஸ்வேதாவுக்கு கஷ்டமாக இருந்தது. விளைவு மாதவன் அவனறியாமல் மனைவியின் டென்ஷனை ஏற்றி விட்டு வந்திருந்தான்.



*****



"வைஜூ இன்னும் வரலையா அருந்ததி?" என்று கேட்டவாறே உள்ளே நுழைந்தார் தேவராஜன்.



இப்போது வைஜயந்தி தனது இன்டர்ன்ஷிப்பில் இருந்தாள்.



"வந்துட்டாளே! டெர்ரேஸ்ல இருக்கா."



"ஓ.."



"என்ன விஷயம் ராஜ்? வந்ததும் வராததுமா பொண்ணைத் தேடறீங்க?"



"ஒரு முக்கியமான விஷயம் பேசணும். அவளும் இருந்தால் பெட்டர்னு தோணிச்சு. அவளோட லைஃப் பத்திய விஷயம்.. முடிவெடுக்க அவளுக்கு ரைட்ஸ் இருக்கே. ஒரு வேளை ஏற்கனவே அவ மனசுல ஏதாவது எண்ணம் இருந்தால், நாம குழப்பம் பண்ணிடக் கூடாது பாரு."



"எனக்குத் தெரிஞ்சு அப்படி எல்லாம் எதுவும் இல்லை. இருந்தாலும் அவ வரட்டும், இந்தாங்க. காஃபி எடுத்துக்கோங்க. நாமளும் டெர்ரேஸ்கு போயிடலாமா?"



"இல்ல மா. அவளே வரட்டும். நீ இப்படி உட்காரு. விக்ரம் கால் பண்ணினானா?"



"இல்லையே! அவன் வீக் டேஸ்ல கூப்பிடறதே இல்லை. சன்டே தான் பேசுவான்."



"ஆமா டாடி. சன்டே ஆனா ஸ்விட்சர்லாந்த என்ஜாய் பண்ணாம, மணிக் கணக்கா பேசி நம்ம கழுத்தை அறுக்கிறதே வேலையா வச்சிருக்கான். இவனை எல்லாம் ஏன் ஸ்விஸ் அனுப்பி வச்சீங்க? சரியான... கரெக்டா தான் விசுவாமித்திரன்னு பேர் வச்சிருக்காங்க." அண்ணனைப் பற்றிய புகார் பட்டியலோடு வந்தாள் வைஜயந்தி.



"ஹா ஹா.. கரெக்டா தான் பேர் வச்சிருக்காங்க. ஆனால் அவனோட மேனகையைப் பார்த்துட்டான். யாருன்னு கேட்டா வாயைத் திறக்க மாட்டேன்கிறான். இப்போ இன்டர்ஷிப் பண்ற யாரோ ஒரு பொண்ணு தான். யாருன்னு தெரியலையே!"



"ஏம்மா! நீங்க ஒரு பொண்ணு.. பேரென்ன.. ஹான்.. நியதின்னு அடிக்கடி சொல்றீங்களே.. அவ தான் என் அண்ணியா இருக்குமோ?"



"எதை வச்சு சொல்ற?"



"உங்க கிட்ட ஏகப்பட்ட டவுட்டு கேட்கறான்னு சொல்வீங்களே.. ஒரு வேளை நீங்க யாருன்னு அவளுக்கு தெரிஞ்சிருக்கலாம். மாமியாரை காக்கா அடிக்க முயற்சி பண்ணலாம்."



"சே.. சே.. அப்படி எல்லாம் தெரியலை. அவளுக்கு கைனீக்ல எம்எஸ் பண்ணனும்னு ஆசை. அதனால நிறைய கேள்வி கேட்கறா.. ஆனால் நீ சொல்றது மாதிரி இருந்தால் நல்லாத்தான் இருக்கும். இரண்டு பேரும் நல்ல மேட்ச்."



"அம்மாவும் பொண்ணும் நான் பேச வந்த விஷயத்தை டைவர்ட் பண்ணி வேற டாராக்ல போயிட்டு இருக்கீங்க. அப்புறம் எனக்கு சொல்ல வந்தது மறந்து போயிடும்."



"ஸாரி டாடி.. யூ ப்ரோசீட்.. நான் வாயை மூடி காதைத் திறந்து வச்சாச்சு."



"உனக்கு ஒரு வரன் வந்திருக்கு டா. விக்ரம் கிட்ட கேட்ட அதே கேள்வியை தான் உன் கிட்டயும் கேட்கப் போறேன். நீ யாரையாவது செலக்ட் பண்ணி இருக்கியா? இல்லை நாங்க மாப்பிள்ளை பார்க்கலாமா? நீ சொல்லப் போற பதிலை வச்சுத் தான் நான் மேலே பேசலாமா வேண்டாமான்னு முடிவு பண்ணனும்."



"கல்யாணமா.. அதுக்கு இப்போ என்ன அவசரம் டாடி?"



"இது நான் கேட்ட கேள்விக்கு பதில் இல்லை.."



"ஸாரி டாடி. எனக்கு இது வரைக்கும் அப்படி யாரையும் தோணலை. இனிமேல் தோணுமான்னும் தெரியாது."



"அப்போ நாங்க மாப்பிள்ளை பார்க்கலாம்னு எடுத்துக்கலாமா?"



"ம்ம்..."



"நம்ம மாதவனோட ப்ரதர் இன் லா அரவிந்தனுக்கு வைஜுவைப் பிடிச்சிருக்கும் போலத் தெரியுது. இன்னைக்கு தாமோதரன் நம்ம ஹாஸ்பிடல் வந்திருந்தார். அவருக்குமே இதில இஷ்டம் இருக்கு."



"நான் கூட மாதவன் கல்யாண சமயத்தில நோட்டிஸ் பண்ணினேன் ராஜ். அரவிந்தனோட கண்ணு வைஜு போற இடமெல்லாம் போச்சு. ஆனால் அவனே ட்ரை பண்ணி வேற பக்கம் பார்க்க ஆரம்பிச்சான். தாமோதரன் என்ன சொன்னார்? அரவிந்தன் கன்ஃபர்மா சொன்னானா?"



"ஆமா.. எந்த சந்தேகமும் இல்லாமல் அவனுக்குப் பிடிச்சிருக்கு. ஆனால்..."



பெற்றோர் இருவரும் பேசிக்கொண்டு இருக்க, வைஜெயந்தி அரவிந்தனின் முகத்தை அவளது நினைவடுக்குகளில் தேடிக் கொண்டு இருந்தாள். தந்தை ஆனால் என்று நிறுத்தியதும் அவளது கவனம் கலைந்தது.



"ஆனால் என்ன.. ராஜ்.. தமயந்திக்குப் பிடிக்கலையா? எனக்கே அரவிந்தனுக்குப் பொண்ணு கொடுக்கலாம்னு தோணும் போதே தமயந்தியை நினைச்சு கொஞ்சம் யோசனையாத் தான் இருக்கு."



"அந்த மாதிரி யோசனைக்கு அவசியம் இல்லை அருந்ததி. அவங்க கொஞ்சம் வாய் பேசறாங்களே தவிர மத்தபடி ஹார்ம்லெஸ் தான்."



"அதானே.. அவங்களுக்கு அவ்வளவு சீன் எல்லாம் கிடையாது மா. பார்க்கத் தான் டெரர் மாதிரி இருக்காங்க. ஆனால் டம்மி பீஸு!" இடைப் புகுந்த மகளை அருந்ததி பார்த்த பார்வையில் அவள் கப்பென்று வாய் மூடிக் கொண்டாள்.



"அப்போ வேறென்ன தான் பிரச்சினை?"



"அதைத் தான் எப்படிச் சொல்றதுன்னு புரியலை.. அரவிந்தனுக்கு.. ஏற்கனவே இரண்டு வருஷத்துக்கு முன்னாடி ஒரு நிச்சயதார்த்தம் பண்ணி கல்யாணம் நின்னு போயிருக்கு. தப்பு பொண்ணு மேல தான்னு சொல்றாங்க. ஆனால் நாம நாலையும் யோசிக்கணுமே!'



"ஒரு வேளை அதனால தான் அரவிந்தன் ஒதுங்கி போனான் போல இருக்கு. அந்தப் பையனைப் பார்த்தால் தப்பானவனாத் தெரியலையே."



"எனக்கும் அது தான் தோணுது. வைஜு! நீ என்ன நினைக்கிறம்மா? உனக்கு அரவிந்தன் மேல அபிப்பிராயம் இருந்தால் நாம மேற்கொண்டு விசாரிக்கலாம்."



"எனக்கு என்ன சொல்றதுன்னு தெரியலையே டாடி. நீங்க பார்த்து யாரைக் காட்டினாலும் எனக்கு ஓகே தான். அது அரவிந்தனா இருந்தாலும் சரி. என் கிட்ட பேசின வரைக்கும் அரவிந்தன் நல்லவரா தான் தெரியறார் டாடி. ப்ரோசீட் பண்ணனும்னு நினைச்சால் பழைய விஷயத்தை எதுக்கு கிளறி விடணும். நீங்களே டிசைட் பண்ணுங்க டாடி."



தனது நிலையைத் தெளிவாகவே சொல்லி விட்டாள் வைஜெயந்தி. அவளுக்கு பழைய விஷயம் தேவை இல்லாமல் இருக்கலாம், ஆனால் பெற்றவர்கள் அப்படி இருந்துவிட முடியாதே.



ஆனால் யார் பேசினால் சரியாக இருக்கும் என்றும் புரியவில்லை. விக்ரமன் இருந்தால் பேசி இருக்கலாம். நட்பாகப் பேசி அவனது மனதைத் தெளிவாக அறிந்து கொண்டிருக்கலாம். இப்போது என்ன செய்வது என்று நினைக்கும் போதே மாதவன் நினைவுக்கு வந்தான். அடுத்த நொடியே மாதவனை அழைத்து விட்டார் தேவராஜன்.



"ஹாய் அங்கிள்! ஹௌ ஆர் யூ? என்ன ஒரு அதிசயம்? என்னை எல்லாம் ஞாபகம் வச்சிருக்கீங்க?"



"எல்லாம் என் நேரம். உன் அப்பா கூட சேர்ந்து நீயும் கெட்டுப் போயிட்ட போல இருக்கே. கல்யாணம் ஆகி ஒரு வருஷம் கூட ஆகலை, விருந்துக்கு வந்துட்டு போனது. அப்புறம் இந்தப் பக்கம் தலை வச்சுப் படுக்காத நீ என்னைச் சொல்ற? எனக்கு கல்யாணம் ஆகி முப்பது வருஷம் ஆகப் போகுதே.. நான் எப்படி இருப்பேன்னு யோசிக்க வேண்டாமா?"



"இதைப் பேசறதுக்குத் தான் அவனைக் கூப்பிட்டீங்களா?" அருந்ததி முறைக்க, மாதவனிடம் விஷயத்தை பகிர்ந்து கொண்டார் தேவராஜன்.



"என்ன பண்ணலாம் மாதவா? உன் ஒப்பீனியன் என்ன? அரவிந்தன் எந்த மாதிரி? வைஜுக்கு அந்த வீட்டில செட் ஆகுமா? பழசை யெல்லாம் கேட்கலாமா கூடாதா? வைஜு வேண்டாம்னு சொல்றா" தந்தையாக அவர் கேள்விகளை அடுக்கிக் கொண்டே போக, வைஜுவைத் தங்கையாக நினைக்கும் மாதவன் என்னடா இது சோதனை என்று நினைத்துக் கொண்டு இருந்தான்.



"மாதவா!.. லைன்ல இருக்கியா?"



"ஹான்.. யெஸ் அங்கிள்.. நீங்க சொன்னதைத் தான் யோசிச்சிட்டு இருக்கேன். நான் அரவிந்தன் கிட்ட முதல்ல பேசிட்டு அவனோட மைன்ட்செட் என்னன்னு தெரிஞ்சுக்கறேன். அப்புறம் பார்க்கலாம்" என்று முடித்து விட்டான்.



அதன் படியே அரவிந்தனிடம் பேசியவன், அடுத்து செய்த காரியம் அவன் மனைவி மற்றும் குழந்தையின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தி விட்டது.



*******

அன்று நியதிக்கும் அவளது தோழி ஒருத்திக்கும் லேபர் வார்டில் ட்யூட்டி இருந்தது. விதம் விதமான பிரசவங்களையும் பெண்கள் படும் பாட்டையும் கண்டவளுக்கு மனதைப் பிசைந்தது. அதே சமயம் குழந்தையின் முகம் பார்த்த அந்தப் பெண்களின் முகம் மலர்ந்து போனதையும் கண்டு வியந்தாள்.



அந்தச் சின்னஞ்சிறு சிசுக்களின் புன்னகையும் அழுகையும் மனதைக் கொள்ளை கொண்டது.





குழந்தைகளைக் குளிப்பாட்டி வந்த பிறகு அவர்களின் கையில் டேக் மாட்டி, பெற்றவளிடம் கொண்டு போய் பாலருந்த விட்டு ஒவ்வொரு விஷயத்தையும் ஆச்சர்யமாக பார்த்துக் கொண்டு இருந்தாள்.



திடீரென்று அங்கே ஏற்பட்ட பரபரப்பை அறிந்தவள், ஓரமாக நின்றாள். என்னவாக இருக்கும் என்று யோசிக்கும் போதே டாக்டர்.அருந்ததி வேகமாகக் காரிடாரில் கிட்டத்தட்ட ஓடி வருவதைக் கண்டாள். கூடவே, புரோஃபசர் புருஷோத்தமன்.



"லேபர் ரூம்ல பெட் காலியா இருக்கா..எதுக்கும் தியேட்டரை ரெடி பண்ணுங்க. க்விக்.. பீடியாட்ரீசியனை வரச் சொல்லுங்க.." இப்படி ஏகப்பட்ட அறிவுரைகளுடன் அவர் உள்ளே விரைய, எமர்ஜென்சி கேட்டில் வந்து நின்ற ஆம்புலன்சில் இருந்து சுயநினைவு இல்லாத நிலையில் ஸ்வேதாவை ஸ்ட்ரெச்சரில் தூக்கி வந்தனர். மனைவியின் முகத்தைத் தடவி அவளை எழுப்ப முயற்சி செய்தபடி ஓடி வந்த மாதவனின் முகம் வெளுத்துக் கிடந்தது.



அரவிந்தனும் தாமோதரனும் மாதவனைக் காணப் பயந்தவர்களாக ஒடுங்கிப்போய் நிற்க, அந்த நிலையிலும் தெனாவெட்டாக மாப்பிள்ளையைப் பார்த்துக் கொண்டு இருந்தார் தமயந்தி.



விஷயம் கேள்விப்பட்டு ஓடி வந்த ஹேமா இறுகிப் போய் நின்ற மகனைப் பார்த்து மனம் துடித்தார். மெதுவாக அவன் அருகில் வந்து தோளைத் தொட, அன்னையின் தொடுகை உணர்ந்து திரும்பியவன் அவரைக் கட்டிக் கொண்டு அழுதான்.



"தைரியமா இருக்கணும் மாதவா! நல்லதே நடக்கும்னு நினை." என்று மகனுக்கு ஆறுதல் சொன்ன ஹேமா உள்ளூர நடுங்கிக் கொண்டு இருந்தார்.



"மாதவன் உங்களை உள்ளே கூப்பிடறாங்க!" என்று வந்த அழைப்புக்கு வேகமாகத் தலையை அசைத்து மறுத்தான் அவன்.



"மாதவா! நீயே இப்படி இருந்தால் ஸ்வேதாவோட நிலையை யோசிச்சுப் பாரு. நீ பக்கத்தில இருந்தால் அவளுக்கும் கொஞ்சம் தைரியமா இருக்கும். போப்பா!"



"ம்ம்.." என்று அரைகுறை மனதோடு உள்ளே சென்றவனுக்கு அங்கே காத்திருந்த செய்தி அவனை உயிரோடு கொன்று போட்டது.
 

Author: SudhaSri
Article Title: ஆடுமடி தொட்டில் இனி - 8
Source URL: Nectar Novels-https://nectarnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.