• ஹாய் மக்களே! நம் Nectar Novels தளத்திற்கு நல்வரவு🙏😍😍 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள் nectarnovels.ss@gmail.com 🩷 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...👇 வேதா விஷால் & அனன்யா🙏💖

நாணங்களும் எதற்காக? 11

VedhaVishal

Administrator
Staff member
Jun 17, 2024
69
331
83
Chennai
நாணங்களும் எதற்காக? 11


நெற்பயிர் நன்கு கதிர் பிடித்து விளைந்து நிற்க‌ வேண்டுமெனில், பொதிப் பருவத்தில் அதற்குத் தேவையான நீரும் உரமும்‌ பூச்சி பொட்டு அண்டாத பாதுகாப்பும் அதி அவசியம்.
பயிர்களுக்கு மட்டுமின்றி ஏனைய உயிர்களுக்கும் இயற்கை விதி இதுவே.

எதிர்காலக் கனவுகள், தன் விருப்பம், பெற்றோரின் எதிர்பார்ப்பு, தேர்வுகள், சூழல்கள், சமூகம் தரும் அழுத்தங்கள், வளர்ந்தும் வளராத‌ விடலை மனதின் உடல், உணர்வு மற்றும்‌ ஆண், பெண் உறவு‌ குறித்தான சஞ்சலங்கள், சந்தேகங்கள், உடல், மன, பார்வை மாற்றங்களை‌ அறிந்து கொள்ளும் ஆர்வம், அழகு மற்றும் தோற்றம் பற்றிய உயர்வு அல்லது தாழ்வு மனப்பான்மை, பொறாமை, நல்ல அல்லது எல்லாம்‌ தெரிந்தவனா(ளா)கக் காட்டிக் கொள்ளும் முனைப்பு என பதின் பருவத்தின் சிக்கல்கள் ஏராளம்.

இதைக் கடந்து வந்த பெரும்பாலானவர்களுக்குத் தங்கள் பிள்ளைகள் என்று வருகையில் இதைக் கையாளத் தெரிவதில்லை.

உருக்கி வடிவம் தரவேண்டிய கண்ணாடியை உளியால் செதுக்குவது கையைப் பொசுக்குவதோடு அந்தக் கண்ணாடியே உருத்தெரியாது சிதைந்து விடும்.

பதின் பருவத்தின் தொடக்கத்தில் இருந்த சின்மயியும் விளிம்பில்‌ நின்ற சிங்கபிரானும் மென்சிக்கலான ஒரு சூழலில் பரசுராமின் கண்களில் பட்டது‌ விதியன்றி வேறென்ன?

பரசுராமுக்கு‌ எப்படி பாலாமணியின்‌ நிமிர்வும் தன்னம்பிக்கையும் திடமும்‌ பிடிக்காதோ, அதேபோல் சிங்கபிரானையும் ரவிசோமனையும் அவருக்கு அறவே பிடிக்காது.

அவர்களிடமும் தங்கள் வயதுக்கான சலுகைகளும் பிடிவாதங்களும் உண்டு என்றாலும், அம்மாவிடம் அனுசரணை, பாலாமணி‌ வீட்டில் இல்லாத‌ நேரத்தில் பொறுப்பாக வீட்டு வேலைகளைச் செய்வது, படிப்பு, மற்றவர்களிடம் பழகும் விதம், அங்கிருந்த‌ மற்ற குடித்தனக்காரர்கள் சின்னதாக ஏதாவது வேலை சொன்னால்‌ உதவுவது என அம்மாவின் வளர்ப்பைப் பிரதிபலித்தவர்களை பரிபூரணமாக வெறுத்தார்.

சின்மயி பள்ளியிலிருந்து திரும்பி விட்டதை அறியாத பரசுராம், தன் வீட்டிலிருந்து கையில் எதையோ‌ சுருட்டியபடி வெளியே வந்த சிங்கபிரானை பார்த்த நொடியில் அவன் எதையோ திருடி வந்ததாக‌ எண்ணி “நில்லுடா அங்க… திருட்டு ராஸ்கல்… எத்தனை நாளா இந்தப் பழக்கம்…‌ இதைத்தான் கத்துக்‌ குடுக்கறானா‌ ஐஐடில…”

அந்த நேரத்தில் பரசுராமை அங்கு‌ எதிர்பார்க்காத சிங்கபிரான் உரத்த குரலில்‌ அவர் வைத்த‌ குற்றச்சாட்டில் நின்ற‌ இடத்திலேயே நிற்க…

அவர் அவனை‌ நெருங்கி, அவன்‌ கையில் இருந்ததைப் பிடுங்கவும், தன் வீட்டினுள் காத்திருக்கும் சின்மயியின் நினைவு வர, சிங்கபிரான் தன்னிச்சையாகத் தன் கைகளைப் பின்னே இழுத்ததில் தடுமாறிய பரசுராம் மூர்க்கமானார்.

“என் வீட்ல திருடிட்டு, என்னையே தள்ளி விடுவியாடா…‌ களவாணிப் பயலே….” என்றபடி அவன் மீது பாய்ந்தவர், அவன்‌ கையில் இருந்ததை முரட்டுத்தனமாகப் பிடித்து இழுக்க, ஒரு டவலுக்குள் சுருட்டி வைக்கப்பட்ட சின்மயியின் மிடி‌ ஃப்ராக் மற்றும் அவளது உள்ளாடைகள்‌ அனைத்தும் திசைக்கொன்றாய்‌ சிதறி விழுந்தது.

சிங்கபிரானின் கையில்‌ தன் மகளின் உடையை, அதுவும் உள்ளாடைகளுடன்‌ பார்த்த‌‌ பரசுராமின் அதிர்ச்சியும் ஆத்திரமும்‌ எல்லை மீற, பளாரென அறைந்தார்.

இவரது சத்தம்‌ கேட்டு, பின் போர்ஷனில் இருந்து வந்து என்னவென்று‌ பரசுராமிடம்‌ விசாரித்த ஒரு‌ பெரியவரிடம்‌ அவர் விளக்குவதற்குள், வாசல் வழியாக சளசளவென்ற பேச்சும் சிரிப்புமாகத் திரும்பி வந்த‌ பெண்கள் அனைவரும் பரசுராமின் கைப்பிடியில் பட்டையான விரல் தடம் பதிந்து சிவந்த முகத்துடன் கலங்கி நிற்கும் சிங்கபிரானைக் கண்டு சட்டென அமைதியானார்கள்.

பதறி‌ய கல்யாணி “என்னாச்சுன்னா, என்னடா‌ சிங்கம்… ஏன் இப்டி இருக்க?”

“இன்னும்‌ என்ன ஆகணும்…‌ உன் அருமை‌ சிஷ்யன் நம்ம வீடு புகுந்து திருடி இருக்கான்… அதுவும்‌ என்னத்தை…‌உன் பொண்ணோட ட்ரெஸ்ஸை… ஜட்டி‌ உள்பட…”

பரசுராமனின் அண்ணன் மனைவி கீதா “பெருமாளே, இதென்ன… சிங்கம் நல்ல‌ பையனாச்சே…”

பருவ வயதில் இருந்த பவானியையும் தம்பி மகளையும் பாதுகாப்பதாக எண்ணிக் கண்காணித்தவர், சின்னப் பெண்ணான சின்மயியை சுதந்திரமாக விட்டதற்கான பழியை சுலபமாக‌ மனைவியின் மேல் சுமத்தினார்.

பரசுராம் கல்யாணியைக் காட்டி “எல்லாம்‌ இவளாலதான்… இவ குடுக்கற‌ இடம்தான். பொண் குழந்தைகள்‌ எங்க போறா, யாராட பேசறா, என்ன பண்றான்னு பாக்காம கண்ட கண்ட நாயை நம்பினா இப்படித்தான். ஏன்டீ… வீட்டைத்‌ திறந்து போட்டு உனக்கு அப்படி‌ என்ன பெருமாள்‌ கேக்கறேன்… பக்தி தட்டுக் கெட்டு போறது”

பரசுராமின்‌ தாய் “பரசு, எல்லாருக்கும்‌ எதிர்க்க என்னதிது… முதல்ல அந்தப் புள்ளைய விடு சொல்றேன்… கல்யாணி, என்னன்னு கேளு”

கீழே வீசிக் கிடந்த தன் மகளின்‌ உடுப்புகளைப் பார்த்த அதிர்ச்சியில் இருந்த கல்யாணியால் கூட இப்போது கணவனைத் தவறாக‌ நினைக்க முடியவில்லை. அவர் பார்த்ததை வைத்து, ஒரு தந்தையாக அவர் செய்தது சரிதானே என்றே தோன்றியது.

கல்யாணி டீச்சர் தன் அருகில் வருவதைப் பார்த்த சிங்கபிரானுக்கு,
பரசுராம் தன்னைத் திருடன் என்று அழைத்ததை விட, தவறான சமயத்தில் தப்பான மனிதரிடம் மாட்டிக்கொண்ட அந்த நிலையிலும், தன் வீட்டினுள் காத்திருக்கும் சின்மயியை எண்ணிக் கவலையாக இருந்தது.

‘பாவம் புல்புல்…. வயிறு வலிக்கறதுன்னா. யூனிஃபார்ம் ஸ்கர்ட் முழுக்க ஸ்டெய்ன் (கறை)‌வேற’

‘ஆமா, டீச்சர் கிட்ட புல்புல் ஏஜ் அட்டென்ட் பண்ணிட்டான்னு நான் எப்டி சொல்றது?’

‘இவர் வேற நகராம இங்கேயே நிக்கறார்’

இதற்குள் அவனை நெருங்கி இருந்த கல்யாணி

“என்ன சிங்கம்‌ இதெல்…”

சிங்கபிரானின்‌ வீட்டுக்குள்ளிருந்து, “ச்சிங்கா…‌ , என் ட்ரெஸ்‌ஸை தாடா” என்ற சின்மயியின் குரலில் கல்யாணியின் கேள்வி மட்டுமின்றி, வீடே‌ ஸ்தம்பித்தது.

கதைகள், சினிமா, ஊடகங்கள், சமூக வலைத்தளங்கள், ஆறு மாத ஹாஸ்டல் வாசம், ஸ்ரீரங்கம் போன்றதொரு பழமையான ஊரில், பல குடித்தனக்காரர்களுக்கு நடுவே வளர்ந்து, அவர்களின்‌ பார்வை, எண்ணவோட்டம், விமரிசனம், அதற்கு‌ அவர்கள் உபயோகிக்கும் வார்த்தைகள் எல்லாம் பரிச்சயமான, இன்னும் பதினெட்டு வயது நிறையாத‌ சிங்கபிரான், கண்களை இறுக‌ மூடிக்கொண்டான்.

அங்கே குழுமி இருந்த ஐந்து வீட்டுப் பெண்களும் பரசுராமும் பின் வீட்டுப் பெரியவரும் ஒரே சமயத்தில் அதிர்ந்து போய் சிங்கபிரானை நோக்கினர்.

அவர்களது பார்வை புரிய,
திருட்டை விட மிக மோசமான குற்றச்சாட்டுக்கு‌த் தான் ஆளாகப் போவதை சிங்கபிரான் உணர்ந்தான். சின்மயியின் உடல் நிலையை, தன் மீது தவறில்லை என்பதை விளக்க அவன் வார்த்தைகளைத் தேட, கல்யாணி சிங்கபிரானின் வீட்டுக் கதவைத் தள்ள, அது உள்பக்கம் தாழிடப்பட்டிருந்தது.

அவ்வளவுதான்.‌ சிங்கபிரானுக்கு பயந்து சின்மயி அவனது வீட்டுக்குள்ளேயே ஓடி‌ ஒளிந்து இருக்கிறாள்‌ என்று‌ தானாகவே முடிவுக்கு‌ வந்த பரசுராம்‌, எதிர்ப்பின்றி‌ திகைத்து நின்றவனை சரமாரியாகத் தாக்கினார். கையில் கோடாரி இல்லாத குறை மட்டும்தான்.

இதற்கிடையில் அவர் உதிர்த்த வசவுச் சொற்களே வெட்கிக் கருகியது.

“அவ உன் வீட்டுக்குள்ள உன்னையே உள்ள விடாம இருந்து உங்கிட்டயே உடுப்பு கேக்கறான்னா, அவளை நீ எந்த நிலமைல‌டா நிறுத்தி இருக்க… அவ வயசென்ன…‌உன் வயசென்ன… பிஞ்சுலயே வெம்பிப் பழுத்த தத்தாரி நாய்”

பரசுராமின் அம்மா “போறும்டா பரசு, படாத இடத்துல பட்டு ஏதானும் ஆயிடப் போறது… கீதா, நீ பாலாமணியை வரச்சொல்லி ஃபோன் பண்ணு… கல்யாணி, நீ‌ போய் சின்மயியைப் பாரு” என்றார்.

“சின்மயி, கதவைத் திற”

அம்மாவின்‌ குரல் கேட்டதும், படாரென கதவைத் திறந்தவள், தனக்கான மீட்பரைக் கண்டதைப் அழுதாள். நிமிடத்தில் அவள்‌ நிலையைப்‌‌ புரிந்து கொண்ட‌ கல்யாணி,

“அம்மா, இங்க‌‌ வாங்கோ” என‌ மாமியாரை அழைக்க, கூடவே அவளது‌‌ ஓர்ப்படியும் வந்தார்.

கல்யாணி சின்மையியை சிங்கபிரானின்‌ வீட்டுக்கு உள்ளேயே அழைத்துச் சென்று விசாரித்தார். பள்ளியில்‌ நடந்ததை விவரித்தவள்,

“ச்சிங்கா எங்கம்மா, அவனை ட்ரெஸ்‌‌ எடுத்துண்டு வரச்‌சொன்னேன்”

பரசுவின் தாயார் “பெருமாளே, அவசரப்பட்டு‌ பரசு அந்தப் புள்ளையை இப்படி…”

கல்யாணி மகளைக் குளியலறைக்கு அனுப்ப, கீதா “நான்தான் அப்பவே சொன்னேனே, சிங்கம் தங்கமான‌ பையன்னு” என்று சான்றிதழ் வழங்கினார். வெளியில் வந்து சின்மயி புஷ்பித்ததைப்‌ பிரகடனம் செய்தார்.

“சின்னதோன்னோ, பரீட்சைக்கு நடுவுல இப்படி ஆகவும் ரொம்ப பயந்துட்டா. இங்க வந்தா சிங்கம்தான் இருந்துருக்கான். சின்மயிக்கு அவன்தான்‌ ரொம்ப க்ளோஸ் ஆச்சே… அவங்கிட்ட சொல்லி‌ இருக்கா… அவனும்…”‌

வாசலில் ஆட்டோ வந்து நிற்க, வேகமாக இறங்கி ஓடி வந்த பாலாமணி, முகம் கசங்கி, வீங்கிய உதடு துடிக்க, அழுகையை அடக்கிய படி நின்ற மகனைப் பார்த்துப் பதறினாள்.

“என்னடா சிங்கம், … யார் உன்னை அடிச்சது… அடிக்கற அளவுக்கு நீ என்ன பண்ணின?”

“...ம்மா…”

“சொல்லுடா”

பரசுராம்‌ “அவன் என்ன‌ சொல்றது, நான்‌ சொல்றேன். அப்பன் வளர்த்த‌ புள்ளையா இருந்தா பொம்பளை கிட்ட எதைப் பேசணும், என்ன‌ பேசணும், எப்படி நடந்துக்கணும்னு‌ தெரிஞ்சிருக்கும். பொம்பளை‌ மாதிரி வீட்டு வேலை‌ பார்த்த பழக்கத்துல பெரிய்ய‌ பொம்பளை மாதிரி‌ நாப்கினை எடுத்துத் தந்திருக்கான்…”

மதிய நேரம் தாண்டியதில் பள்ளி, கல்லூரிகளில் இருந்து வீடு திரும்பி இருந்த ரவி, ஹரி, பவானி, சின்மயியின் பெரியப்பாவின் இரண்டாவது மகன், மற்ற போர்ஷன் குழந்தைகள் என அநேகரும் வேடிக்கை பார்த்தபடி நிற்க, ரவி தாயின் அருகில் வந்து நின்றான்.

பரசுராம் உச்சஸ்தாயியில் கத்துவதைக் கேட்டு கல்யாணி & கோ வெளியில் வந்தனர். அம்மா தடுத்தும், மனைவி கெஞ்சியும், மற்றவர் சொல்லியும் கேளாது, மென்மேலும் வார்த்தைகளைச் சிதற விட்ட பரசுராம்,

“விதவை வளர்த்த பிள்ளை ஒழுக்கமா இருக்கும்னு பார்த்தா, இந்த வயசுலயே வேண்டாததைச் செய்யறது… கம்மனாட்டி வளர்த்தது கழிசடையா நிக்…”

எத்தனை திடமான‌ பெண் என்றாலும், சொல்பவருக்கு எதைச்‌ சொல்லவும் உரிமையோ தகுதியோ இல்லை. தன்னைத் தூண்டி‌ப்‌ பேச வைக்க‌வென்றே சொன்ன பொய் என்று தெரிந்தாலும், தன்‌ கையறு‌ நிலையை, தன்‌ வளர்ப்பை, நடத்தையை பரசுராம்‌ நேரடியாகத் தாக்கிப் பேசியதில் முதலில் உறைந்து நின்ற பாலாமணி அவருக்குப் பதில் தருவது கழிவு நீரில் கல்லெறிவதற்குச் சமம் என்று புரிய, அடுத்து என்ன என்பது போல் மகனைப்‌ பார்க்க…

அம்மாவைத் தவறாகப் பேசியவரின்‌ நெஞ்சில் கை‌ வைத்து வெறுப்புடன்‌ தள்ளிய சிங்கபிரான், விறுவிறுவென வாசலை நோக்கி நடக்க, பரசுராமின் சட்டையைப் பிடித்த பதினைந்து வயது ரவிசோமன்,

“அப்பா வளர்த்த புள்ளை பொறுப்பா, ஒழுக்கமா‌ இருக்கணும்னா… உன்னை வளர்த்தது உங்கப்பா இல்லையா?” என்றவன்,

“வாம்மா, போகலாம்” என பாலாமணியின் கைபிடித்துத் தங்கள் வீட்டுக்குள் செல்ல… தலைக்குக் குளித்துத் துண்டு கட்டி, அவர்கள் வீட்டு‌ முன்னறைத் தரையில்‌ அமர்ந்து சின்மயி அழுது கொண்டிருந்தாள்.

குளித்துவிட்டு வந்து அம்மாவைத் தேடி எட்டிப் பார்த்தவள், சிங்கபிரானின் முகத்தைப் பார்த்து பயந்து‌ அங்கேயே இருந்து, தன் தந்தை‌ தாறுமாறாகப்‌ பேசியது‌ அனைத்தையும் கேட்டிருந்தாள்.

பரசுராம்‌ பேசியது சிங்கபிரானுக்குப் புரிந்த அளவிற்கு சின்மயிக்குப் புரியவில்லை. ஏனோ, பயமாக இருந்தது. பாலாமணியிடம்

“ச்சிங்கா‌ எங்க மாமி?”

எல்லா‌ப் பிரச்சனையும் அவளால்தான்‌ என்று நினைத்த ரவி “முதல்ல நீ வெளில போ” என்றான்.

அவள் கேட்கவும் சிங்கபிரானைத் தேடிப் போக வேண்டி எழுந்த‌ பாலாமணி

“சும்மா இருடா ரவி… அழாத சின்மயி. தைரியமா இருக்கணும். உன்னைப் பாக்காம சிங்கம் எங்க போவான்…வருவான். என்ன?”

“ம்…”

“நான் போய் அவனைப் பாக்கறேன். நீ அம்மா கிட்ட போ‌ சின்மயி”

தனியாக ஒதுங்க பயமாக இருப்பதாகச் சிங்கபிரானிடம் சொன்ன சின்மயிக்கு, அந்தச் சுதந்திரமும் ஸ்வாதீனமும் கல்யாணி உள்பட மற்றவர்களிடம் வரவில்லை.

வீட்டுக் கதவைப்‌பூட்டி, கைப் பை, ரவி சகிதம் பாலாமணி வாசலை நோக்கி நடக்கையில், சின்மயியை சற்றுத் தொலைவில் பின்தொடர்ந்த கல்யாணி, புழக்கடையில் இருந்த ‘உள்ளிற்கு’ அவளை அழைத்துச்‌ செல்வது தெரிந்தது.

அடுத்த மூன்றே நாள்களில்,
புகழியா பிள்ளைத் தெருவின் பழைய தனி வீடு ஒன்றைப் பார்த்துக் குடி போனார்கள். பாலாமணியின்‌ பெற்றோர்‌கள்தான் வந்து‌ வீட்டைக் காலி செய்து சாமான்களை‌ ஏற்றிச் சென்றனர்.

சின்மயி ‘ச்சிங்கா வரலையா…‌இனிமே இங்க வரவே மாட்டானா?’ என்று திரும்பத் திரும்ப‌ கேட்டதை‌ மகளிடம்‌ தெரிவித்த‌ பாட்டி,

“பாவம்டீ பாலா அந்தப் பொண்ணு. சிங்கம் இனிமே வர மாட்டானான்னு அத்தனை‌ ஏங்கிப்‌போய் கேக்கறது” என்றார்.

சிங்கபிரான் பள்ளியில் இருந்து வலியில் அழுது கொண்டே வந்தவளுக்கு உதவியதா, தன் வீட்டுக்குள் அனுமதித்ததா, அவள்‌ கேட்ட உடையை எடுத்து வரச் சம்மதித்து ஆளில்லாத‌ அவள் வீட்டிற்குச்‌‌ சென்றதா… இதில் எது தன் தவறு என்ற கேள்வியில் உழன்றான்.

இதற்கு முன் எத்தனையோ முறை கல்யாணி டீச்சரோ, பாட்டி, தாத்தாவோ, மற்ற‌ வீட்டுப்‌ பெரியவர்களோ… கூடத்தில், வாசல் திண்ணையில் மொட்டை மாடியில்‌ இருக்கையில், மூக்குக் கண்ணாடி, வாக்கிங் ஸ்டிக், ஆனந்த விகடன், குடிக்க தண்ணீர் என ஆள் இல்லா வீட்டிலிருந்து எதையாவது எடுத்து வரச்சொல்லிக் கேட்டிருக்கின்றனர்.

அது சரி எனில், சின்மயி கேட்டது மட்டும் எப்படித் தப்பாகும்? அப்படியானால், வீடு‌ என்பது பெரியவர்களுக்கானதா… குழந்தைகளுக்கு‌த் தன் வீட்டில் உரிமை, உடமை என எதுவும்‌ கிடையாதா? இந்த வீடு‌ அம்மாவுடையது மட்டும்தானா… அப்ப ரவியும் நானும்…

பாலாமணி “அதையே போட்டு ருஜிக்காம விட்டுத் தள்ளுடா சிங்கம். ரவிக்கு லீவு விட்டாச்சு. பாட்டி, தாத்தாவோட நாலு நாளைக்கு நாமும் மன்னார்குடிக்கு போய்ட்டு வரலாம், வா”

“...ம்மா…”

“நான் ஒன்னு சொல்லட்டுமா சிங்கம்… அவர் வீட்டுக்குள்ள இருந்து நீ வெளில வரதை‌ பார்த்து அந்த மனுஷன் கோபப்பட்டதும், சின்மயி ட்ரெஸ்ஸை பார்த்து சட்டுனு அடிச்சதும் கூட தப்பில்லை. அந்த நிலமைல எந்த அப்பாவும் அதைத்தான் செய்வார். ஆனா, விஷயம் புரிஞ்சதுக்குப் பிறகும் தப்பு தப்பா பேசினதுதான் தப்பு”

“...”

“இதுல அவர் உன்னையும் என்னையும் மட்டம் தட்டறதா நினைச்சு, ஒன்னும் தெரியாத, ரெண்டுங்கெட்டான்‌ வயசுல‌ இருக்கற தன் பொண்ணையும் சேர்த்துதான் அவமானப் படுத்தி இருக்கார்”

“...”

“அன்னிக்கு அவர் பேசினது சின்மயிக்கு முழுசா புரியும்போது அவகிட்ட அப்பாங்கற மரியாதையோ, அபிமானமோ துளிக்கூட இருக்காது.‌ ஆனா, பரசுராம் மாதிரி ஆட்களுக்கு அது புரியாது”

பாலாமணி சொன்னது போல்தான் நடந்தது. தனக்கு எதுவும் புரியும் வரை சின்மயி காத்திருக்கவில்லை. தந்தையுடன் பேசுவதை நிறுத்த, அவரால் சிங்கபிரான் திரும்ப வராது வெளியில் சென்றதே அவளுக்குப் போதுமானதாக இருந்தது.

பன்னிரெண்டு வயதில் ‘அப்பா’ என்ற அழைப்பதை நிறுத்தியவள்தான். எந்தவித விளிப்பும் இன்றி, அவசியமானதை பொதுவில் வைத்து உரக்கச் சொல்லுவதோடு சரி.

விடுமுறை முடிந்து சென்னைக்குப் புறப்படும் நாளன்று மாலை‌, பள்ளி விடும் நேரம், சின்மயிக்காகக்‌ வாசலில் காத்திருந்த சிங்கபிரான், தங்கள் வீடு இருக்கும் இடத்தைச் சொன்னான்.

“டோன்ட்‌ ஒர்ரி புல்புல். கவனமா படி. ‌டீச்சர் கிட்ட சொல்லு. ஓகே?”

“...”

“அழாத புல்புல்… எல்லாரும் பாக்கறா பாரு”

“புல்புல், எப்போதும் நீ ரவியோட‌ பேனாவை‌தானே கேட்ப… இது என்னோடது. நான் டென்த், ட்வெல்த், எல்லாம் இதுலதான்‌ எழுதினேன். இப்ப பாட்டும் ஸ்வரமும்‌ எழுத முயற்சி‌ பண்றேன். ரொம்ப லக்கியான பேனா புல்புல். இதை வெச்சுக்கோ”

“ச்சிங்கா…”

சின்மயியின் ‘ச்சிங்கா…’ என்ற கண்ணீருடன் கூடிய அந்த ஒற்றை விளிப்பில்…

‘நீ ஏன் போற, திரும்ப எப்ப வருவ, நாம எப்ப பார்க்கலாம், ஐ மிஸ் யூ, ஐ வில் மிஸ்‌ யூ’ போன்ற வாக்கியங்களும் உணர்வுகளும் அழுந்திக் கிடந்தன.

“நான் வருவேன் புல்புல். நிச்சயம் உன்னை வந்து பார்ப்பேன்” என்ற சிங்கபிரான் திரும்ப வந்தபோது பதினான்கு வருடங்கள் கடந்திருந்தது.

*********************

விஸிட்டர்ஸ் பார்க்கிங்கில் காரை நிறுத்திய சிங்கபிரான், அசையாது அமர்ந்திருந்த சின்மயியைத் தொட்டு‌ மெலிதாக உலுக்கினான்.

“இறங்கு‌ புல்புல்”

அவர்களது தரிப்பிடத்தில் ஹரியின் கார்‌ நின்றிருந்தது.

‘நல்லவேளை, வீடு திறந்திருக்கும்’

மின்தூக்கியில் நுழையும் முன்…

“புல்புல்”

“ம்”

“உனக்கு அன்ஈஸியா இருந்தா நான் வேணா கார்ல வெய்ட் பண்ணவா புல்புல்?”

சின்மயி முறைத்தாள்.

“ஈஸி… ஈஸி… ம்… ஒன்னு சொல்லவா?”

“??”

“முடிஞ்சவரை நான் பேச மாட்டேன். அவர் ஏதாவது ஏடாகூடமா சொன்னா, நோ கேரன்ட்டி. எனக்கு இருக்கற கோபத்துக்கு, நான் என்ன பேசுவேன், செய்வேன்னு எனக்கே தெரியாது புல்புல். உனக்கு ஓகேன்னா வரேன்”

“ஏதாவது பண்ணு. இப்ப பேசாம வா”

கதவு லேசாகத் திறந்திருக்க, சின்மயி அழைப்பு மணியை அழுத்தினாள். கதவைத் திறந்த பத்மினியின் முகத்தில் சிங்கபிரானைப் பார்த்ததில் முந்தைய நாளின் பரவசம் தெரிந்தது.

இருவரும் உள்ளே போய் நிற்க, வேகமாக வந்த ஹரி சிங்கபிரானுடன் கை குலுக்கினான். இடது பக்கம் கனைப்புச் சத்தம் கேட்க, ‘ட’ வடிவில்‌ உள்வாங்கி இருந்த பகுதியில் ஒற்றை‌ சோஃபாவில் கால் மேல்‌ கால் போட்டு வெகு அமர்த்தலாக அமர்ந்திருந்த பரசுராமின்‌ முகத்தில் தெரிந்த அத்தனையும் அலட்சியம்.

எத்தனை நேரம் நின்றாலும் இடையில் நிற்கும் பனிச்சுவரை‌ அடுத்தவர் உடைக்கக் காத்திருந்தனர்.
சிங்கபிரான் ஹரியைப் பார்க்க, அவன் எதையும்‌ பேசி கமிட் செய்ய‌ விரும்பாது, சூழலை‌ அவதானித்தபடி‌ இருந்தான்.

‘அசல் ஸ்ரீரங்கத்து திருவாழ்த்தான்’

பத்மினியின் முகத்தில் எல்லாம் பழையபடி‌ ஆகி, ‘எப்படியாவது ஃபிக்ஸ் இட்’ என்ற வரியும்
அவளும் ஹரியும் நேரத்தோடு‌ வீட்டுக்குப் போய்விட‌ வேண்டும் என்ற ஆவலும் தெரிந்தது. அதற்கு சாக்கு சொல்லவென்றே குழந்தையை விட்டு விட்டு வந்திருப்பாள் போலும்!

யார் முதலில், என்ன பேசுவது என்று எல்லோரும் தயங்கியதில் ஒருவித‌ அசௌகரியமான‌ மௌனம்‌ நீடித்தது. சதா சங்கீதத்தில் திளைக்கும் சிங்கபிரான் அந்த மௌனராகத்தில் பொறுமை இழந்து, சின்மயியைத் தன் முழங்கையால்‌ மெதுவாக இடித்தான்.

தன் ஒவ்வொரு அசைவும் எடைபோடப் படுவது தெரிந்த சின்மயிக்கு சிங்கபிரானை ஏன் அழைத்து வந்தோம் என்று தோன்றியது. தேவை இல்லாமல் பரசுராம் கக்கும் விஷம் அவனுக்கு எதற்கு?

இந்த வீட்டுக்கு முன்பணம் கொடுத்தது ஹரி. அவனுக்குத் திருமணம் ஆனபிறகும் சின்மயி வேலைக்குச்‌ செல்லும் வரை வாடகைப் பணத்தில் பாதியைக் கொடுத்தான். தன் ஸ்டைஃபன்டிலும் சொல்ப‌ வட்டியிலும் வீட்டு வாடகை, பராமரிப்பு, மளிகை, கேஸ், பணியாள், தன் படிப்பு என அனைத்தையும் இழுத்துப் பிடித்து சமாளித்தது சின்மயிதான். அவள் வேலையில் சேர்ந்த பிறகு, முழுதும் இவள்தான் பார்த்துக்கொள்கிறாள்.

பெங்களூரில் சொந்த‌ வீடு வாங்குவதை விடக் கடினம்‌ வாடகை கொடுப்பது. பரசுராமிடம் இந்த வரவு, செலவுகள் குறித்த அக்கறையோ, கவலையோ என்றுமே இருந்தது இல்லை. சின்மயி எப்படி சமாளிக்கிறாள், அத்தனை பணம் அவளுக்கு வருகிறதா என்ற‌ கேள்வியே அவரிடம் கிடையாது.

அவருக்கு இருக்கும் கிறுத்துருவத்துக்கும் குயுக்திக்கும் இது எதுவும் தெரியாது இருக்க வாய்ப்பில்லை. அவர் அதை‌ வெளிக்காட்டியது இல்லை, அவ்வளவே.

இதைத் தாண்டி, வாக்களித்தபடி இன்றளவும் மாதம் பிறந்தால், அவர் கைச்செலவுக்கென்று ஹரி தனியாகப் பணம் தருகிறான்.

காலணா சம்பாதிக்காதவருக்கு, பெற்றோர், உடன் பிறந்தோர், மனைவி, இப்போது பிள்ளைகள் என அவரது கடமையையும் நிறைவேற்றிக் கைச் செலவுக்கும் காசு குடுப்பதென்றால்… அதற்கும் ஒரு அதிர்ஷ்டம், குடுப்பினை வேண்டுமே!

‘எந்த ஜென்மத்துக் கடனோ…‌ இப்ப வட்டியோட வசூலிக்கறார்!’

தன்னை மீறிப் பெருமூச்சு விட்ட சின்மயியால் தந்தையின் பக்கம் பாராமலே அவரது உடல்மொழியை உணர முடிந்தது. அவரது தோரணையும் தெனாவட்டும்… அவர் ஏதோ தீர்ப்பு சொல்லப் போகும் மஹாராஜா போலவும், இவர்கள் எல்லோரும் குற்றவாளி‌ என்பதான பாவனையும்…

‘what an audacity?’

இப்போது‌ அப்பாவின மீதான கோபம், எரிச்சல் போன்ற நிலைகளைத் தாண்டி உள்ளே பெரும் ஆயாசம் பரவியது.

‘‘நேத்து ராத்திரி அவர் என்னை வெளில நிறுத்தினதை மறந்துட்டு இனியும் இந்த வீட்டில் என்னால்‌ இவருடன் இருக்க முடியுமா?’

‘வெளியே போ’ ன்னு என்னால அப்பாட்ட சொல்ல முடியுமா… எங்க போவார் அவர்?’

‘வாடகை கொடுக்கும் நான் ஏன் இங்கிருந்து போக வேண்டும்?’

‘அப்படி இங்க இல்லைன்னா எங்கே போறது… பிஜி? ஹாஸ்டல்? வேறொரு வீடு? ஹரியின் வீடு?’

‘எத்தனை நாள்?’

‘ஒருக்கால், அவரோட இங்கேயே இருந்தா ச்சிங்காவோட பேசாதே, பழகாதேன்னு‌ சொன்னா… சொன்னா என்ன சொன்னா… கட்டாயம் சொல்லுவார். என்னால முடியுமா? முதல்ல நான் ஏன் அதுக்கு ஒத்துக்கணும்?’

பள்ளியில் படித்த தி வான்டரர் (The Wanderer) என்ற, தன் வீட்டை, சுற்றத்தை, நாட்டை, சக வீரர்களை, போர்களை, போர்க்களத்தை விட்டு நாடோடியாய் திரியும் ஒருவனைப் பற்றிய கவிதை நினைவு வந்தது.

காடு, மலையெல்லாம் யாருமின்றித் தனியே அலைந்து திரிவதைப் போன்ற கற்பனையில் கழிவிரக்கம் மிக, கண்கள் நிறைந்து சற்றே தடுமாறியவளைப் பிடித்த சிங்கபிரான் “ஸ்டெடி புல்புல்” என்று அமர வைக்க முயல, உதறினாள்.

எழுந்து வந்து “என்னாச்சு சின்மயி?” என்றான் ஹரி.

“நத்திங்”

வேடிக்கை பார்த்த பத்மினியின் முகத்தில் சுவாரஸ்யம்.

ஹரியின் மொபைல்‌ ஒலிக்க “பவானி” என்ற அறிவிப்புடன் பேசுவதற்கு வெளியில் சென்றவன், திரும்ப வந்து, சின்மயியிடம்

“நீ வந்தாச்சான்னு‌ கேட்டா” என்றான்.

திடீரென பத்மினி “நீ ஏன்‌ சின்மயி எங்க கிட்ட வராம, அவரோட போன?”

“...”

“சின்மயி?”

“உங்க ரெண்டு பேரையும் எத்தனை தரம் கூப்பிட்டு இருக்கேன்னு மிஸ்ட் காலை‌ பார்த்தா தெரியும்” - சின்மயி.

சிங்கபிரானைச் சுட்டிய‌ பத்மினி “அவரைக் கொண்டு வந்து விடச்சொல்லி நேர அங்கயே‌ வந்திருக்கலாமே?”

கடுப்பான சிங்கபிரான் “நான் ஒன்னும் நேஷனல் பர்மிட் டாக்ஸி ஓட்டலை. டோன்’ட் ஈவன் ட்ரை‌ மீ” என்றான், பட்டென.

சிங்கபிரானின் ஆகிருதி, பர(ற)ந்த தலைமுடி, இப்போது வைத்திருந்த‌ Verdi ஸ்டைல் தாடி, முறுக்கி விடப்பட்ட மீசை, அவனது பிரபலம்… இவை அனைத்தையும் தாண்டி கூர்மையான பார்வை, அழுத்தமான அவனது குரல் எல்லாம் சேர்ந்து, பதில் பேச விடாது பத்மினியைக் கட்டிப் போட்டன.

ஆனால், அவளது கேள்வியால் தூண்டப்பட்ட பரசுராம், தன் திருவாய் மலர்ந்து அருளினார்.

“அதானே, அவன் ஏன் கொண்டு வந்து விடறான்… எங்க, எங்கன்னு காத்துண்டு இருந்தவனைத் தேடி இவளே போனா…”

“...”

அபத்தமான அவரது வாதத்தை ஏந்தி எதிர்வினையாற்ற விரும்பாத மற்றவரின் மௌனத்தை, ஆமோதிப்பாக நினைத்த பரசுராமின்‌ முகத்தில்‌ தெரிந்த‌ எகத்தாளத்தை உடைக்க விரும்பிய ஹரி

“அவ என்ன, தானா வேண்டி விரும்பியா போனா… வயசுப் பொண்ணை நடு‌ராத்திரில‌ வீட்டுக்குள்ள விடாம வெளில நிறுத்தினா, அவ என்ன‌ செய்வா?”

“என் பேச்சை‌ மீறிப்‌ போனா என்ன நடக்கும்னு‌ காட்டத்தான் அப்படி செஞ்சேன்”

“அது அவ வேலை பாக்கற ஹாஸ்பிடல் ஏற்பாடு‌ செஞ்சது. சிங்கம் பாடறான்னதும் நானும் பத்மினியும் கூட போய் இருந்தோம்.‌ இன்ஃபேக்ட், சின்மயியை இங்க ட்ராப்‌ பண்ணினதே நான்தான். இப்படி ஆகும்னு தெரிஞ்சுருந்தா‌ கூடவே அழைச்சுண்டு போய் இருப்பேன்”

“போயேன்… அவ‌ சரியானவளா இருந்தா, ஒன்னு இங்கயே‌ நின்னு‌ இருக்கணும். இல்லையா…”

கை முஷ்டியை இறுக்கிய சிங்கபிரான் “புல்புல்” என்று பல்லைக் கடித்தான்.

தந்தையின்‌ பேச்சு தந்த கோபம், ஆத்திரம், அவமானத்தில் முகம்‌ சிவந்த சின்மயியின் கட்டுப்பாடு உடைந்தது.

“அதென்ன ஹரி, சரியானவளா இருந்தா… என்னை ஜட்ஜ் பண்றதுக்கு இந்தாள் யாரு? என்‌ கேரக்டரை தப்பா பேசற உரிமையை‌ யார்‌ குடுத்தா? இதுவரைக்கும் நமக்கு ஏதாவது செஞ்சதா விரலை மடக்க‌ சொல்லு… பார்ப்போம்”

“...”

“ஹரி, நீயும் பவானியும் புடிக்காம விலகி இருக்கேள். பரவாயில்ல. அம்மா போன அன்னிக்கு நடந்தது, உங்க ரெண்டு பேருக்கும் மத்தவா சொல்லிதான் தெரியும். இவர்‌ பேசினதை எல்லாம்‌ நான் கூடவே இருந்து பார்த்திருக்கேன். அத்தனையும் தெரிஞ்சும், இத்தனை வருஷமா ஒரு பேரன்ட்டா என் கூட இருக்கார்னு பொறுமையா‌ இருந்தேன் ஹரி…”

“ வேண்டாம் சின்மயி. பழசைப் பேசி உன்னை நீயே வருத்திக்காதடீ”

“முடியல ஹரி… எப்டி.. எப்டி… ராத்திரி முழுக்க நான் வெளில நிக்கணுமா… ஏன், எங்கம்மா மாதிரி தற்கொலை பண்ணின்டா இன்னும் சந்தோஷமா இருக்கும், இல்லையா? ஸாரி, இந்தாள்‌ சொன்னதும்‌ காவேரில குதிக்க‌ நான் ஒன்னும் கல்யாணி இல்ல. சின்மயி”

ஹரி‌ ”கூல் டவுன் சின்மயி… நாம பேசலாம்”

“பேச எதுவும்‌ இல்ல ஹரி. எனக்கு‌ இந்தாளோட‌ பேசவும்‌ வேண்டாம், இருக்கவும்‌ வேண்டாம்”

மகளின் பேச்சில்‌ ஆங்காரம் மிக, பரசுராம் “இருக்க‌ வேண்டாம். போகட்டும். போய்‌ திண்டாடி, தெருப் பொறுக்கி சீழ்ப்பட்டாத்தான்‌ புரியும்”

ஹரி தந்தையிடம் “இதெல்லாம் என்ன பேச்சு?” என்று‌ சீற…

சிங்கபிரான் “போதும் புல்புல், போகலாம்‌ வா” என அவள் கையைப் பற்ற…

பரசுராம் “பாரு… என்‌ கண்ணு‌ முன்னாடியே இப்படின்னா… பொட்டிப் பாம்பா இருக்கறவ இன்னிக்கு இத்தனை பேசறான்னா அவன் குடுக்கற‌‌ தைரியத்துலதானே… இது ரெண்டும் சரியில்லை, உருப்படா…”

அருகில் இருந்த சிறிய டீப்பாயை (Peg table) காலால்‌ எட்டி‌ உதைத்த சிங்கபிரான்,

“ஆமாய்யா… பத்து‌வயசுல இருந்து‌ உம் பொண்ணை லவ் பண்றேன். என்ன‌ செய்வ… ம்… என்ன‌ செய்வ? உன்னால‌ ஒரு ம****யும் ***** முடியாது” என்று சீறியவன், தன் இடக்கையால் முடியை இழுத்து, கை விரித்துக் காட்டினான்.

அதிர்ந்த சின்மயி “ச்சிங்கா…!?”

“எனக்கு மட்டும் இல்ல‌ புல்புல். உனக்குமே இது மதியாதார் வாசல்தான். உன் படிப்பு, உத்தியோகம், நீ காட்டற அக்கறை, உன் சின்சியாரிடி, உனக்குதான் யாரோ பட்டம் கட்டின மாதிரி சமைச்சுப் போடறது… எதுக்கும் இங்க மதிப்பில்லை புல்புல். உன்னை என்னவோ அடிமை மாதிரி நினைச்சுப் பேசறது… திஸ் ஈஸ் டோட்டல் அப்யூஸ் புல்புல். இதுக்கு மேல உன்னை இங்க‌ விட்டுட்டுப் போனேன்னா, என்னாலயே என்னை மன்னிக்க‌ முடியாது…”

“...”

“பத்தே நிமிஷம்…‌உனக்குத்‌ ரொம்ப தேவையானதை… பேங்க் பேப்பர், சர்ட்டிஃபிகேட் மாதிரி… எடுத்துண்டு வா, நான் வெய்ட் பண்றேன்”

ஹரி “அவசரப்படாத சிங்கம்… கொஞ்சம் பொறுமையா…”

ஹரியைக்‌ கூர்ந்து பார்த்த‌ சிங்கபிரான்‌ “இது நீ பேசி இருக்க வேண்டியது ஹரி. இன்னும் என்ன பொறுமை? பொறுப்பும் பொறுமையும் புல்புலுக்கு மட்டும்தானா?”

எம்.டி படித்து, குழந்தை மருத்துவராக இருக்கும் சின்மயி, எது தவறு, எது சரி என்று குழம்பி அயர்ந்து நின்றாள்.
​
 

Goms

Member
Apr 28, 2025
80
4
18
Chennai
சின்மயிக்கு உண்மையிலேயே குழப்பான சூழ்நிலை, என்ன செய்ய போறா???
இந்த பரசுராமுக்கு சீக்கிரம் ரொம்ப ந...ல்...ல மு...டி...வா காட்டுங்க.
 

kothaisuresh

Active member
Jun 19, 2024
160
17
28
Chennai
உட்கார்ந்து அடுத்தவன் தயவுல உடம்பை வளர்த்து இதுவும் பேசுவ, இன்னும் பேசுவ😡😡😡😡😡😡,
இன்னும் என்ன குழப்பம் உனக்கு கிளம்பி சிங்காவோட போயிட்டே இரு புல்புல்