• ஹாய் மக்களே! நம் Nectar Novels தளத்திற்கு நல்வரவு🙏😍😍 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள் nectarnovels.ss@gmail.com 🩷 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...👇 வேதா விஷால் & அனன்யா🙏💖

நாணங்களும் எதற்காக? 8

VedhaVishal

Administrator
Staff member
Jun 17, 2024
64
274
83
Chennai
நாணங்களும் எதற்காக? 8


கோ
லாலம்பூர் விமான நிலையத்தில் வந்து நின்ற ட்ரக் ஒன்றில் விக்ரம் ஜோயலும் கேசவும் இசைக்கலைஞர்கள் மற்றும் டூர் மேனஜர்களின் உதவியுடன் பல அளவுகளில் இருந்த பெட்டிகளில் பேக் செய்யப்பட்ட இசைக்கருவிகளை ஏற்றிக்கொண்டிருக்க, கிருஷ்ணன் மேனனும் சிங்கபிரானும் ஏர்போர்ட் மேனேஜர், அவர்கள் வந்த ஏர்லைன்ஸ்‌ மேனேஜர் என நான்கைந்து அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருந்தனர்.

எதிர்பாராமல் அவர்களது இசைக்கருவிகள் இருந்த‌ இரண்டு பெட்டிகள் இன்னும் வந்து சேரவில்லை. விசாரிக்க, தவறுதலாக ஃபிளைட் மாற்றி ஏற்றி இருந்தனர். வந்தவற்றிலும்
ஒன்று உடைந்து, உள்ளே இருந்த சிதார் சிறிய விரிசல்களுடன் வந்திருந்தது. இத்தனை வருடங்களில் இப்படி எதுவும் நடந்ததில்லை. அதுவும்‌, இந்தப் பகுதியில் தவறுகள் நடப்பது ரொம்பவே அரிது.

முன்பே ஜுரத்தோடு இருந்த சிங்கபிரான் இன்னுமே சூடு ஏறிப்போய் சத்தம் போட்டான்.
கேசவை வரச்சொல்லி‌ மெஸெஜ் அனுப்பிய மேனன்,

“மச்சான், ஞான் நோக்கும்டா. டென்ஷன் வேண்டாம். நீ கொஞ்சம்‌ உக்காருடா” என‌ சிங்கபிரானை அடக்க,
“ட்ரூப்‌ கெஸ்ட் ஹவுஸுக்கு கிளம்பிப் போயாச்சு” என்ற அறிவிப்புடன் கேசவ், ஜோயல் இருவருமே உள்ளே வந்தனர்.

ஏர் லைன்ஸில் மாலைக்குள் லக்கேஜை வரவழைக்க ஏற்பாடு செய்வதாகக் கூறினர். சிதாருக்கு நஷ்ட ஈடு தருகிறேன் என்றதும்‌ சிங்கபிரான் எழுந்து வந்து எகிறினான்.

சச்சின் தன் சொந்த பேட்டால் விளையாடுவதைப் போல்தான் கலைஞர்களுக்கு அவர்களது இசைக் கருவிகளும். பழகிய வாத்தியத்தில் கண்ணை மூடிக்‌ கைகளை மேவுவர். வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம்தான். ஆனாலும், சரியான ஆயுதம் தரும் பலமும்‌ பலனும் வேறல்லவா?

மொபைலைக் கூட ஆன் செய்யாது, இதையே பேசியவன், அறைக்கு‌ வந்து திறந்து‌ பார்க்க, பாலாமணியும் சின்மயியும் கணக்கற்று அழைத்திருந்தனர்.

அம்மாவிடம் “வந்தாச்சும்மா. ஆல் குட். தூங்கி எழுந்து பேசறேன்” என்றான்.

சின்மயிக்கு அழைக்க, அவசர குரலில் “சொல்லு சிங்கா… ரீச் ஆயாச்சா, ஜுரம் பரவாயில்லையா?”

“நாங்க கெஸ்ட் ஹவுஸ் வந்தாச்சு. லக்கேஜ் ட்ரான்ஸிட்ல கொஞ்சம் பிராப்ளம். ஃபீவர் இருக்கு. தூங்கணும்”

“டேக் ரெஸ்ட் ச்சிங்கா”

“ம்… நீ ஏன் புல்புல் மூச்சு வாங்க டென்ஷனா பேசற?”

“...”

“புல்புல்?”

“அது…. குளிக்கப் போனேன்… அதான்…”

“...”

“ச்சிங்கா…”

“ம்… ஈரத்தோட‌ நிக்காத புல்புல். Get dressed up. நான் அப்புறம் பேசறேன், பை”

“!!?@_#*?”

அலைபேசி நீண்ட நேரம் அழைக்கவும், சிங்கபிரானாகத்தான் இருக்க வேண்டும் என ஈரத்துடன், கையில் கிடைத்ததைச் சுற்றியபடி, ஓடி வந்து, அதுவரை நின்றுகொண்டு பேசிய சின்மயி பொத்தென தரையிலேயே அமர்ந்துவிட்டாள்.

‘அடப்பாவி! ஒருவேளை கற்பனை பண்ணி இருப்பானோ?’

சிங்கபிரானின் தொனியில், அவனது சிரித்த முகம் சிவந்து விகசிப்பதைக் கற்பனையில் கண்ட சின்மயி அவனே எதிரே நிற்பதைப்போல் கூச்சம் மேலிட, தன்னையறியாது கைகளைக் குறுக்கில் கட்டிக்கொண்டாள்.

‘இந்த ச்சிங்கா என்ன இப்டிலாம் பேசறான்…’

மீண்டும் அலைபேசி ஒலிக்க, அவனேதான்.

“புல்புல்”

“ம்…”

“இப்ப எதுக்கு இவ்ளோ ஷாக்? அப்புறம் என் ஜுரம் உனக்கும் ஒட்டிக்கும்”

“!!?”

“எங்க, ஒரு ஆல் த பெஸ்ட் சொல்லு பார்க்கலாம்”

“ஆல் தி பெஸ்ட் ச்சிங்கா.‌ மருந்து சாப்டு.‌ வெந்நீர் குடி. டேக் கேர்”

“தட்’ஸ் மை கேர்ல். பை பேபி”

“ம்… பை”

‘பே…பியா… என்னாச்சு இவனுக்கு?’

‘ஏன், அவன் என்ன‌ சொல்றான்னு தெரியாதா உனக்கு… அவ்வளவு அப்பாவியா‌ நீ?’

நேற்று முதலே சின்மயிக்கு‌ பயமாக, குழப்பமாக, கலக்கமாக இருந்தது. முதலில் அவன்‌ பேச்சில் அவ்வப்போது தெறித்த குறிப்புகளை அவள் அத்தனை உணரவில்லை. போகப்போகப் புரிந்தாலுமே, விளையாட்டாய்‌ சீண்டுகிறான் என நினைத்துக் கண்டு கொள்ளாமல் கடந்தாள்.

அதைவிட அவன் கழுத்தில் புரளும் கூழாங்கல் டாலரையாவது அழகு, ஸ்டைல், சிறுவயது ஞாபகம் என்ற கணக்கில் சேர்க்கலாம். நேற்று அவன் அறையில் பார்த்தவை?

நிச்சயமாக அவை நட்பை மட்டும் சொல்லவில்லை என்பது உறுதி.

‘ஏன், அதெல்லாம் இல்லைன்னாலும் ச்சிங்காவோட பேச்சும் உடல்மொழியும் எதை பிரதிபலிக்கறதுன்னு புரியாமலா கிடக்க நீ?’

ஓரளவு பெரிய‌‌ பவுச்சில்‌ இருந்தவை அனைத்தும் அவளுடையவை அல்லது அவள் அவனுக்குத் தந்தவை.

அவிழ்க்க வராது இரண்டு துண்டாக சிங்கபிரான் கத்தரித்த ரிப்பனில் அழகாக பூ முடிச்சிட்டு (bow) அதை எப்போதோ கணக்கு நோட்டில் வட்டம் வரைவதற்காக சின்மயி தந்த சிறிய வளையலில் (அது ஒரு சாதாரண ரப்பர் வளையல்) மாட்டி ஒரு குட்டிப் பளபளா கண்ணாடிப் பர்ஸில்…

சிங்கபிரானுக்கும் ரவிக்கும்
East, Bag, world, orange, grapes, deer என முதல் வகுப்பில் இருந்த சின்மயி தனக்குத்‌ தெரிந்த ஆங்கில வார்த்தைகளில் டிக்டேஷன் எழுத வைத்துத் திருத்தி, அதில் ரவிக்கு Goodம் சிங்கபிரானுக்கு V.Good ம் எழுதி, ஸ்டார் வரைந்து கையெழுத்து என்ற பெயரில் அவள் டீச்சரைப் போல் கிறுக்கி இருந்த பேப்பர்கள் லேமினேஷனுக்குள்ளே…

ரவிசோமனின் கையெழுத்து அச்சடித்தது போல் அத்தனை அழகாக இருக்கும். அவனது பென்சில் அல்லது பேனாவால்தான் அவன் அழகாக எழுதுகிறான் என்று நினைத்து கெஞ்சி, சண்டை போட்டு, பாலாமணியின் “போனாப்‌போறாடா… சின்னக் குழந்தைதானே” என்ற சிபாரிசுடன் வாங்கிக்‌கொள்ளும் சின்மயி, பின்னும்‌ தன்‌ கையெழுத்து அதேபோல் இருக்க, அழுவாள்.‌ இது‌ ஒரு‌முறை‌ அல்ல, வாரத்திற்கு இரண்டு மூன்று‌ முறை‌ நடக்கும் நிகழ்வு.

சிங்கபிரான் ஏதோ பொக்கிஷம் போல் பாதுகாத்து வைத்திருந்த தன் பொருள்களைப்‌ பார்த்ததில் இனம்புரியாத உணர்வும் நினைவுகளும் நெஞ்சை அழுத்த, எடுத்தவற்றை‌ மீண்டும்‌ சரியாக உள்ளே‌ வைக்கவென பவுச்சைக் கையில் எடுக்க, அப்போதுதான் அதைக் கவனித்தாள்.

பாதுகாப்பாக தெர்மகோலில் பதித்து வைக்கப்பட்டிருந்த அழகான, அளவான ஃபோட்டோ ஃப்ரேம் அது. தேக்கோ, ரோஸ்வுட்டோ நல்ல மரத்தில் வெகு நேர்த்தியான வேலைப்பாடு செய்து இழைத்திருந்தது.

அதல்ல விஷயம். அது தாங்கி இருந்த பெயின்ட்டிங்கில் இருந்தது விசேஷம்.

சின்மயிக்கு அப்போது ஏழு வயதிருக்கும். பின் போர்ஷனில் குடி இருந்தவர்களின் மகனுக்குத் திருமணம் நிச்சயித்தனர்.

உணவும் நிச்சயமும் கூடத்தில்தான் நடந்தது. ‘ஊர்ல கல்யாணம், மார்ல சந்தனம்’ என்பதை‌ப் போல், முந்தைய‌ நாள் மாலை போண்டோ, கேசரியுடன் தொடங்கி நிச்சயத்தன்று இரவு‌ வரை ஆறு வீட்டினருக்கும் சாப்பாடு பொதுவில்தான்.

கோடை விடுமுறை வேறு‌ என்பதால் எல்லார்‌ வீட்டுப் பிள்ளைகளும் முழு ஈடுபாட்டோடு விழாவை சிறப்பித்தனர். விழாவிற்கு ஏற்பாடு செய்திருந்த புகைப்படக்காரர் பாரபட்சமின்றி படம் எடுத்துத் தள்ளி இருந்தார். அவர்களும் எதையும் ஒதுக்காது ப்ரின்ட் போட்டு, அவரவரது வீட்டினரிடம் கொடுத்திருந்தனர்.

அதில் சின்மயியும் சிங்கபிரானும் மற்ற‌ குழந்தைகளுடன் இருப்பதைத் தவிர, தனித்து ஒரு புகைப்படம் இருந்தது.

அந்த ஓவியத்தில் இருந்த சிறுவயது ராதா- கிருஷ்ணரின் முகங்கள் மட்டும் அந்தப் ஃபோட்டோவில் இருந்த சின்மயி மற்றும் சிங்கபிரானுடையது. அத்தனை அழகாக‌ இருந்த அந்த ஓவியம்‌, சின்மயியிடம் ஏற்படுத்திய அதிர்வை ரிக்டரில் அளக்கலாம்.

சுலபமாகப் பார்க்க ஹேதுவாக, மேலே தெர்மகோல் இன்றிக் கண்ணாடியால் மூடி இருந்தது.
‘தினமும் பார்ப்பானோ?’

‘யார் கிட்ட குடுத்து வரையச் சொல்லி இருப்பான்?’

‘பாலா மாமிக்குத் தெரியுமா?’

திரும்பிப் பார்க்க, சிங்கபிரான் உறங்கி இருந்தான்.

சத்தம் போடாது‌ இழுப்பறையை மூடி‌, அவன் சொன்னதை எடுத்து வைத்தவளுக்ப் அடங்குவேனா என்றது படபடப்பு.

‘ராதா கிருஷ்ணர்!’

‘என்ன மாதிரி ஒரு சிந்தனை இது?’

‘இது போல வரையணும்னு ச்சிங்காக்கு எப்ப, எப்டி தோணி இருக்கும்?’

‘ராதையும் கிருஷ்ணனும் எல்லையில்லாத அன்பின், ஆத்மார்த்தமான நட்பின், பரஸ்பர நம்பிக்கையின், பரிபூரண சரணாகதியின், இயற்கையில் சாஸ்வதமான ஆண், பெண் ஐக்கியத்தின் நிரந்தர அடையாளம் அல்லவா?’

‘அந்த இடத்தில் நானும் ச்சிங்காவுமா?!?’

சின்மயியின் மனநிலை, இது சரியா, தவறா, அதைச் செய்யலாமா கூடாதா போன்‌ற கேள்விகளைக் கடந்து அவள் நெஞ்சை நிறைத்து நின்றது சிங்கபிரானின் அன்பு.

அவன் வீட்டிலிருந்து கிளம்பி கோவிலுக்குச் சென்று சிறிது நேரம் அமர்ந்திருந்தாள். உள்ளே நுழைந்ததுமே பவானி‌

”ஏன்டீ‌ சின்மயி, எங்களுக்கு‌ செண்பகப் பூ வாங்கிண்டு‌ வரலையா?” என்றாள்.


பூ உபயம் பாலாமணி என்று சொல்லமுடியாது “மறந்துட்டேன். நாளைக்கு வாங்கிண்டு வரேன்” என்றாள்.

வீட்டில் யாரிடமும் அதிகம் பேசவில்லை. பேசப் பிடிக்கவில்லை. சலனமற்று இருக்க விரும்பியவளுக்குப் பிறரது சத்தமும் சளசளப்பும் ரசிக்கவில்லை. போய் அமைதியாகப் படுத்துவிட்டாள்.

சிங்கபிரானும் செண்பகப்பூவும் தங்கள் இருப்பை நினைவூட்டிக்கொண்டே இருந்ததில் உறக்கமே அரைகுறை. இதில்‌ ச்சிங்கா வேறு காலையிலேயே அடுத்த அத்தியாயத்தை ஆரம்பித்து விட்டான்.

கதவைத் தட்டும் ஓசையும் தொடர்ந்து பவானியின் அழைப்பும் கேட்டதில் சின்மயி கலைந்தாள். அவர்களை அழைத்துச் செல்ல பாஸ்கர் வருவதாக திடீரென முடிவு செய்து இன்று‌ வருகிறான். அடுத்த ஆறு மாதங்கள் கடலில் என்பதால், குடும்பத்துடன் நேரம் செலவழிக்கவென வருகிறான். வார இறுதியில் கிளம்பி விடுவர்.

வெளியில் ஏக சத்தமாய்‌ பேச்சுக் குரல் கேட்டது. ‘பாஸ்கரோட ஃப்ளைட் லேண்டிங்கே பதினோரு மணிக்குதானே…இப்ப‌ யாரு?’

மளமளவென இரவு உடை‌ ஒன்றை மாட்டிக்கொண்டு வெளியே வர, மாமாவும், மாமியும் வந்திருந்தனர். இந்த முறை திடீரென பாஸ்கர் நாலு மாதத்திலேயே

மீண்டும் கடலுக்குச் செல்வதால், அவனைக் காண‌ வந்திருப்பர் என‌ எண்ணியபடி
வரவேற்றாள்.

விறைப்பாக, முறைப்பாக‌ அமர்ந்திருந்த அப்பா பரசுராமின் முகத்தில் அலட்சியமும்‌ வெறுப்பும் மண்டிக் கிடந்தது. மாமாவிடமும் அதற்குச் சற்றும் குறையாத உதாசீனம் தெரிந்தது.

வேலை, சம்பாத்தியம், கரிசனம், தன்மை, இணக்கம் என எதுவுமே இல்லாதவருக்குத் தங்கையின் கணவன் என்ற ஒரே காரணத்திற்காக‌ப் பிடிக்கிறதோ இல்லையோ வருடக்கணக்கில் மரியாதை கொடுத்தவர்தான்.


தன்னையே மாய்த்துக்கொண்ட தங்கையோடு மாப்பிள்ளைக்கான மரியாதையும் காவேரியில் போய்விட்டது.

சாமரம் வீசும் பணிவோடு மாமியின் அருகில் அமர்ந்திருந்த பவானி‌யைக் கண்ட சின்மயி சிரிப்பை அடக்கிக்கொண்டாள்.

‘வாழ்க்க நாடகமா…’

மாமா அரசு உதவிபெறும் பள்ளியில் ஆசிரியராக இருந்து ஓய்வு பெற்றவர். பென்ஷன் வருகிறது. உறையூரில் பூர்வீக வீடு இருக்கிறது. நல்ல தனியார் பொறியியல் கல்லூரியில் பாஸ்கரை இன்ஜினீயரிங் படிக்க வைத்தார்.

அவரால் இயன்ற அளவு தங்கை கல்யாணிக்கு உதவி இருக்கிறார். மாமியும் அதற்கு மறுப்பு சொன்னதில்லை. நாத்தனாரின் நிலை அறிந்து, கிரேட் A கெஸட்டட் ஆஃபீஸர் மகனுக்கு எதையுமே கேட்காது, பவானியைக் கல்யாணம் செய்துகொள்ளச் சம்மதித்தவர். யார் செய்வார்கள்?

கடற்படைத் தளத்தில் மிகப்பெரிய குவார்ட்டர்ஸ். வேலையாளுக்குக் கூட பின்னால் வீடு இருக்கிறது.

ஆறு மாதம் கடலில், ஆறு மாதம் கரையில் என்றிருக்கும் பாஸ்கரும் சரி, கணவன் இல்லாது வருடத்தில் ஆறுமாதம் தனித்திருக்கும் பவானியும் சரி, மாமா, மாமியைத் தங்களோடு வந்து இருக்கும்படி அழைத்ததாகத்‌ தெரியவில்லை.

மாமி ஒருமுறை “அவா‌ ஸ்டைல் அவாளோட. அங்கெல்லாம் எனக்கு சரிப்பட்டு வராதுடீ சின்மயி. நம்ம வீடுதான் நமக்கு சரி. முடிஞ்சா செய்யலாம். இல்லையா சிவசிவான்னு படுத்துண்டு இருக்கலாம். யாரும் என்னவும் சொல்ல முடியாது‌ பாரு” என்றாள்.

சின்மயி ‘அங்குள்ள சூழலுக்கு பாஸ்கரையும் பவானியையும் மாமா மாமியின் இயல்பும் எளிமையும் சங்கடமாக உணரச்செய்கிறது போலும்’ என்று எண்ணினாள்.

காஃபி கலந்து கொடுத்தவள், குக்கரில் பொங்கல் வைத்து, சட்னிக்குத் தேங்காய் உடைத்துக் கீறுகையில், குளித்துவிட்டு வந்த மாமி “எங்கிட்டக் குடு சின்மயி” என்றார்.

“இருக்கட்டும் மாமி. இந்த ஒரு வேலைதானே”

“சரி, மத்யான சமையலுக்கு என்ன காய்கறி னு சொல்லு. அதையாவது நறுக்கறேன்”

“கொஞ்ச நேரம் சும்மா இருக்க முடியாதா உங்களால… அதெல்லாம் வெளில‌ சொல்லியாச்சு. சரியா பன்னண்டு மணிக்கு டாண்ணு சாப்பாடு வந்துடும். சூடா சாதம் மட்டும் வெச்சா போறும் மாமி”

“ஏன்டீ, நாங்க ரெண்டு பேர் அதிகப்படின்னா காசு குடுத்து சாப்பாடு‌ வாங்கற…‌ நான் சமைக்க மாட்டேனா?”

“அதுக்கில்ல மாமி. எல்லா நாளும் என்னால சமைக்க முடியல. எமர்ஜன்ஸின்னு ஃபோன் வந்தா எப்ப வேணா ஹாஸ்பிடல் போகணும். நடுவுல எனக்கு ஜுரம் வேற. ஹரி ஃபேமிலியும் இங்கதான் இருந்தா. அதான் ஈஸியா இருக்குமேன்னு..”

பெருமூச்சு விட்டவர் “புரியறது. வேலைக்கு போறவளை சமைக்க விடறதும் தினமும் சாப்பாடை வரவழைச்சு உக்கார்ந்து இடத்தைத் தேய்க்கறதும் நன்னாவா இருக்கு… இதுல பதினஞ்சு வயசுப் பொண்ணு வேற…‌என்னத்தைக் கத்துக்கும்?”

“...”

“அதைவிடு. இன்னிக்கு‌ சனிக்கிழமை. நீ ஹாஸ்பிடல் போகணுமா… ரெண்டு நாள் எங்களோட இருக்கக் கூடாதா?”

“நாளைக்கு முழுசும் உங்களோடதான். அதென்ன ரெண்டு நாள் கணக்கு… இங்கதான்‌ கொஞ்சநாள் இருக்கறது…”!

“இருக்கலாம்தான். உங்கப்பாக்கும் மாமாக்கும் ரெஃபரி உத்தியோகம் பாக்கறது யாரு?”


சிரித்த சின்மயி‌ காஃபிப் பொடி, சர்க்கரை டப்பாக்களை காட்டியவள் “நான் போய் ரெடி ஆகறேன் மாமி” என புறப்பட்டுச் சென்றாள்.

********************

சின்மயி ஹாஸ்பிடலுக்குள் நுழையும்போது சரியாகத் தன் காரை போர்ட்டிகோவில் நிறுத்தி, செக்யூரிடியிடம் சாவியைக் கொடுத்துவிட்டு அவளுடன் இணைந்து நடந்த சஞ்சய் தேசாய் அந்தக் கார்ப்போரேட் மல்டி ஸ்பெஷாலிடி மருத்துவமனையின் உரிமையாளர்களில் ஒருவரின் மகன். மருத்துவமனையின் நிர்வாகி. சிறந்த வியாபாரி.

“ஹாய் சின்மயி”

“ஹாய் ஸர்”

“மார்னிங் லெவன் தர்ட்டிக்கு ஒரு மீட்டிங் இருக்கு. டூ அட்டென்ட்”

என்று விட்டு அவன் மின்தூக்கியில் நுழைந்து கொள்ள, சின்மயி கீழ்த் தளத்திலேயே இருந்த குழந்தைகளுக்கான புறநோயாளிகள் பகுதியை நோக்கி நடந்தாள்.

‘மேனேஜ்மென்ட்‌ கூட்டத்துக்கு நான் எதுக்கு?’ என்ற சின்மயியின் யோசனையை குழந்தைகள் ஆக்கிரமித்துக் கொண்டனர். மூன்றாம் மாடியில் இருந்த கான்ஃப்ரன்ஸ் அறைக்குப் பத்து நிமிடங்கள்‌ தாமதமாகச் சென்றாள்.

மருத்துவமனையின் நிர்வாகிகள், தலைமை மற்றும் சீனியர் மருத்துவர்கள் நிறைந்திருக்கக் கிடைத்த இடத்தில் தயக்கத்துடன் அமர்ந்துகொண்டாள்.

ஆகஸ்ட் மாதம் குழந்தைகளுக்கான தடுப்பூசி விழிப்புணர்வு மாதம். பிறந்த குழந்தைக்கு பிசிஜி முதல் பதின் பருவத்துப் பெண் குழந்தைகளுக்கு கருப்பை வாய் புற்று நோய்க்கான தடுப்பூசி வரை அவற்றின் அவசியம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் மாதம்.

இவர்களது குழுமத்திலிருந்நு குழந்தைகளுக்காகக் கட்டப்பட்ட தனி மருத்துவ வளாகத்தின் திறப்புவிழா ஆகஸ்ட் மாதத்தில் வரவிருக்கிறது.

அதை விளம்பரப் படுத்தவும் தடுப்பூசி விழிப்புணர்வை முன்னிறுத்தி தொண்டு நிதி திரட்டவும் திட்டமிட்டனர்.

ஆலோசனைகள் வரவேற்கப்படுகிறது என்றதுமே, மருத்துவர்கள் அனைவரும்
அவரவரது ஆசைகளை கருத்துக்களாக முன் வைத்தனர். மெல்லிசையில் தொடங்கி, மூவி ஷோ, ஸ்டார் கிரிக்கெட், ஸ்டாண்ட் அப் காமெடி, மேடை நாடகம், டான்ஸ், அவர்களே நாடகம் போடுவது வரை ஐடியாக்கள் ஆயிரம்.

சஞ்சய்‌தேசாய்‌ “இதெல்லாம் வேலைக்கு ஆகுமான்னு பார்க்கணும். சிலதை பெரியவங்க ரசிக்க மாட்டாங்க. சிலது இளைஞர்களுக்குப் பிடிக்காது. பெரியவங்கதான் கொடையாளர்கள். சின்னக்குழந்தைகளும் யங்ஸ்டர்ஸும்தான் அவங்களை ப்ரோக்ராமுக்கு அழைச்சிட்டு வருவாங்க. அதனால, ரெண்டு தரப்பையும்‌ திருப்தி செய்யற மாதிரி ஒரு நிகழ்ச்சி வேணும். ஃபார் எக்ஸாம்பிள், மசாலா கேஃப், நந்தகோவிந்தம், நாதம்‌ மியூஸிகா மாதிரி ட்ரெண்டியாவும் இருக்கணும், ட்ரெடிஷனலாவும் இருக்கணும்”

“அதே ஸார்… அவுதே ஸார்… யெஸ்‌ஸார், கரெக்ட் ஸார், யு ஆர் ரைட் ஸார்” என பலமாக ஆமோதித்தனர்.

தேமே என வேடிக்கை பார்த்தவள் “டாக்டர் சின்மயி, உங்க‌ சஜஷன் என்ன?” என்ற சஞ்சய் தேசாயின் குரலில் எழுந்தே நின்றுவிட்டாள்.

“ஸர்…”

“ஐ திங்க்… நாதம் ம்யூஸிகா‌ ராக் பேண்டோட சிங்கர் சிங்கபிரான் உங்களுக்கு ரொம்பப் பரிச்சயம்னு நினைக்கறேன். ஆம் ஐ ரைட்?”

“ஸர்…” என்றவளின் தலை தன்னைப்போல் ஆடியது.

‘இவனுக்கு யார் சொன்னது… ச்சிங்கா இங்க‌ வந்தது கூட இல்லையே…’

அனைவரின் முகத்திலும் ‘இவளுக்கு எப்படி ஒரு‌ செலிபிரிட்டி‌ பாடகனான சிங்கபிரானைத் தெரியும்?’ என்ற கேள்வி இருந்தது. சின்மயிக்கு அவர்களின் சந்தேகத்தைத்‌ தீர்க்கும் எண்ணம் இம்மியும் இல்லையாதலால், சஞ்சயே பேசட்டும் என்று நின்றாள்.

அதற்குள் மருத்துவமனையின் ஃபினான்ஷியல் டைரக்டர் “அவங்க ரொம்ப காஸ்ட்லியாச்சே சஞ்சய், லட்சக்கணக்குல‌ கேட்பாங்களே”

“வசூலும் அதுக்குத் தகுந்து ஆகும் இல்லையா… என்ன சின்மயி, உங்களால அவர் கிட்ட பேச முடியுமா? நீங்க கேட்டு சொன்னா, நான் போய் ஃபைனலைஸ் பண்றேன்”

“அவர் ட்ரூப்போட மலேஷியா போய் இருக்கார். வர ரெண்டு வாரம் ஆகும் ஸார்”

“நோ ப்ராப்ளம். நமக்கு டேட் கொடுக்க அவர்‌ ஒத்துக் கிட்டா மத்ததை பின்னால பேசிக்கலாம்”

“ஷ்யூர் ஸர்…” என்றவளின் இழுவையில் சஞ்சயே

“எதாவது சொல்லணுமா சின்மயி?”

“சிங்கபிரானோட ஈவென்ட், ரேட் பத்தி எல்லாம் எனக்கு எதுவும் தெரியாது ஸர். அவர் என் சைல்ட்ஹுட் ஃப்ரெண்ட். அவ்வளவுதான். இன்ஃபேக்ட், இதுவரை நான்‌ அவரோட கான்சர்ட்டை நேர்ல‌ பார்த்தது கூட கிடையாது”

‘சிங்கபிரானுக்கு நான் கியாரண்டி இல்லை’ என டிஸ்கி போட்டவளைப் பார்த்துப் புன்னகைத்தவன் “ஐ அன்டர்ஸ்டாண்ட்” என்றான்.

கூட்டம் கலைய “ஒரு நிமிஷம் சின்மயி” என்றவன், சிங்கபிரானிடம் சில கேள்விகளுக்கு பதில் கேட்டு வருமாறு சொன்னான்.

தயங்கியவள் “அவர் என் ஃப்ரெண்டுனு உங்களுக்கு எப்டி..?”

“சிம்பிள் அல்காரிதம். ரீல்ஸ்ல பார்த்தேன். எனக்கு உங்களைத் தெரியும். நாதம் ம்யூஸிகாவை நான் ஃபாலோ பண்றேன். நீங்க வர‌ ரீல்ஸ் சஜஷன்ல வந்தது. அஷ்டே”

“...”

‘அப்ப என்னைத்‌ தெரிஞ்ச யாரெல்லாம் அந்த ரீல்ஸை பார்த்திருப்பாங்களோ தெரியலேயே… அப்டி என்ன இருக்கு அதுல… எப்ப‌, யாரு எடுத்தது?’

மீண்டும் குழந்தைகள் வார்டுக்கு‌ ரவுண்ட்ஸ்‌ சென்றவள், எடை‌ குறைவாக இருந்ததால், NICU எனப்படும் பிறந்த குழந்தைகளுக்கான தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு வந்த புத்தம் புதிய குழந்தையைப் பார்க்க‌ ஓடினாள்.

உணவை ஆர்டர் செய்வதால், கடந்த பத்து நாளாகவே லஞ்ச் ஹாஸ்பிடல் கேன்டீனில்தான். அதையும் ஜூஸ், சான்ட்விச் என முடித்துக் கொள்வாள். இன்று அதற்கும் மனமின்றி, ஜுரத்துடன் தனியே இருக்கும் பாலாமணியைப் பார்க்கச் சென்றாள்.

இப்போது சற்றுத் தெம்பாக இருந்தார். துணைக்கு நாகமணி வந்திருந்தார்.

பாலாமணி “சாப்பிட்டியாடீ?” என்றதிலேயே சின்மயி நிறைந்து நெகிழ்ந்தாள்.

பரங்கிக்காய் சாம்பார், புடலங்காய் கூட்டுடன் சாப்பாடு போட்டார்.

*******************

சின்மயி இரவு ஒன்பதரைக்கு க்ளீனிக்கில் இருந்து வரும்போது மறக்காமல் செண்பகப் பூ வாங்கிவந்தாள்.

மாமா, மாமி, பாஸ்கர், பவானி, ஹரி, பத்மினி, மூன்று பிள்ளைகள் என வீடே நிரம்பி வழிந்தது.

அவர்கள் அனுப்பிய உணவோடு வெங்காய பக்கோடாவும் கேசரியும் இருந்தது. பேரன் கேட்டான் என மாமி செய்தாராம்.

“பாஸ்கருக்கு போளி வேணுமாம். சாமான்லாம் வாங்கியாச்சு” என்றார் சந்தோஷமாக. இந்த லிஸ்ட் அவர்கள் இருக்கும் வரை தொடரும் என்பது புரிந்தது. இதில் ஊரிலிருந்து‌ வரும்போதே திரட்டுப்பால், முள்ளு‌ முறுக்குடன் வந்திருந்தார். முதல் முறையே பாஸ்கரோடு சென்ற உறுகாய்கள் தனி.

பிள்ளையும் பேரனும் பிடித்ததைச் சமைக்கச் சொல்லிக் கேட்பதில், தன்னை அவர்கள் உபயோகப் படுத்துவது புரிந்தோ, புரியாமலோ தனக்குக் கிடைத்த முக்கியத்துவத்தை நினைத்து இந்திய‌ அம்மாக்களின் இலக்கணப்படி
அகமகிழ்ந்தார் மாமி.

இதில் பவானியின் “முடிஞ்சா செய்ங்கோ மாமி’ வேறு…

‘ஹிப்போக்ரெட்ஸ்’

நடப்பதை வேடிக்கை பார்த்த பரசுராமின் முகத்தில் கல்யாணப் பூசணி காய்த்திருந்தது. சின்மயிக்கு அவர் பட்டென ஏதாவது சொல்லி விடுவாரோ என்ற கவலை வேறு.

சின்மயி பெண்கள் உள்ளே, ஆண்கள் வெளியே என தானே முடிவு செய்து, படுக்கையை விரித்துவிட்டாள்.

மறுநாள்‌ காலையிலேயே காஃபியும் கையுமாய் மாமா கல்யாணப் பேச்சை எடுத்துக் கலகத்துக்கு வழிவகுத்தார்.

“ஹரி, சின்மயி படிப்பை முடிச்சு ஒரு வருஷம் ஆகப்போறது. வேலை, க்ளீனிக் ரெண்டுமே நல்ல இடத்துல செட் ஆகி இருக்கு. வயசும் ஏறிண்டே போறது. வரன் ஏதானும் பார்த்தியா?”

‌ஹரி “மாமா…”

“எனக்குத்‌ தெரிஞ்சா நானும் சொல்றேன். இப்பல்லாம்தான் கம்ம்யூட்டர்லயே வரன் பார்க்கறாளே… அதுல எதுலயாவது…”

பவானி “டாக்டருக்கு டாக்டரைதான் பார்க்கணுமோ?”

மாமா “மொதல்ல வரன் பார்க்கத் தொடங்கணும். மத்தது எல்லாம் அப்புறம்…”

பத்மினி “ஒருவேளை சின்மயி யாரையாவது விரும்பறாளோ என்னவோ… கிட்டத்தட்ட எட்டு, ஒம்போது வருஷம் படிச்சிருக்கா… வேலைக்குப் போயே வருஷம் ஒன்னாகப்…”

“படிக்கவும், படிச்சது பாழாகாம இருக்கவும் வேலைக்கு அனுப்பறது ஆள்புடிக்கறதுக்கா… தன்னை மாதிரியே எல்லாரையும் நினைச்சுக்கறது… அதென்ன ஸ்திரமில்லாம அப்படி ஒரு புத்தி… இதுக்குதான் பொண்களை…” என பரசுராம் உரத்த குரலில் ஆத்திரமாகக் கத்த…

பத்மினி ஸ்விட்ச் போட்டதுபோல் கண்ணைக் கசக்க…


குறுக்கே புகுந்த ஹரி,
“பத்மினி என் ஒயிஃப். அவளோட மரியாதை எனக்கு முக்கியம். பார்த்துப் பேசச் சொல்லுங்கோ மாமா” என தந்தைக்கு மேல் இரைந்தான்.

பவானி “முதல்ல இவர் அபிப்பிராயத்தை யாரு கேட்டா… முன்னாடி எங்கம்மா, இப்ப சின்மயின்னு பொம்பளை சம்பாதிச்சு வயிறு வளர்க்கறவருக்கு வாய் என்ன வேண்டிக் கிடக்கு?”

மாமா “பொண்ணு மேல அத்தனை அக்கறை இருக்கறவர் தானே வரன் பார்த்துக் கல்யாணம் பண்ண வேண்டியதுதானே?”

பொதுவாக எதிலும் தலையிடாத பாஸ்கர்
“இந்த வீட்டு சரித்திரமும் பூகோளமும் தெரிஞ்சதுமே வரன்லாம் வரிசைல வந்து நிக்க மாட்டான்?” என்றதில் இருந்த ஏளனம்…

பரசுராம் “விருந்தாளின்னா வந்தமா, சாப்ட்டமா போனமான்னு இருக்கணும். அதைவிட்டு…”

பவானி “ஆமா, இங்க அப்டியே பஞ்ச பட்ச பரமான்னமும் மாப்பிள்ளை மரியாதையும் தட்டுக்கெட்டுப்‌ போறது…”

இந்தப் பேச்சு இப்போது வேண்டாம் எனத் தடுக்கப் பார்த்துப் படுதோல்வி அடைந்த சின்மயி, எழுந்து போய் கையில் இருந்த ஆறின காஃபியை சிங்க்கில் கவிழ்த்தவள், அறைக்குள் சென்றுவிட்டாள்.

‘இன்னும் வராத‌ வரனுக்கே இப்படி…’

‘கல்யாணம் பண்ணி வைன்னு நான் கேட்டேனா?”

‘பேசாம எமர்ஜென்ஸின்னு சொல்லிட்டு வெளியே போயிடலாமா?’

‘இப்பன்னு பார்த்து இந்த ச்சிங்கா கூட ஊர்ல இல்ல’

வெளியில் எல்லோரும் இன்னும் கத்திக் கொண்டிருக்க, வாசல் கதவை படாரென‌ அடித்து மூடும் சத்தம் கேட்டது. பரசுராம்தான் வெளியேறினார். எதிர்த்துச் சண்டையிடவும் விஷயம் வேண்டுமல்லவா?

அவர் வெளியேறியதும் அமைதி ஆவதற்கு பதில் அவரைப் பற்றி விரிவாகப் பேசினர். சின்மயிக்கு அதுவும் வலித்தது.

********************

“நீ என்ன செய்வியோ எனக்குத் தெரியாது. இன்னிக்கு நாம‌ மீட் பண்றோம். ஐ’ம் பிக்கிங் யூ அப் அட் லெவன் தர்ட்டி. பீரியட்” என்ற சிங்கபிரான் சின்மயி பதில் பேசும் முன்பே அழைப்பைத் துண்டித்திருந்தான்.

சிங்கபிரான் தன் குழுவினருடன் பயணம் முடித்துத்‌ திரும்பி‌ ஒரு வாரமாகிறது. அவன் தினமும் அழைப்பதும் இவள் சாக்குபோக்கு சொல்லித் தவிர்ப்பதுமாய் இருக்கின்றனர்.

பாஸ்கரும் பவானியும் வெகுநாளாக வீடு வாங்க எண்ணி இருந்தனர். இந்த முறை பார்த்தவற்றில் ஒன்று பிடித்துப் போக, உடனடியாக முன் பணம் கொடுத்து புக் செய்யவும் அதற்கான அடிப்படை ஆவணங்களைத் தயார் செய்யவும் தன் விடுப்பை ஒரு வாரம்‌ நீட்டித்தான்.

மகன் வீடு வாங்க பத்து லட்ச ரூபாய் கொடுப்பதாகச் சொன்ன மாமா மட்டும் இரண்டு நாள்களுக்கு வங்கி வேலையாகத் தனியே உறையூர் சென்று வந்தார்.

ஞாயிறன்று‌ எல்லோரும்‌ புறப்பட்டுச்‌ சென்றிருக்க, இரண்டு நாளாய் வீட்டில் அமைதியோ‌ அமைதி.

வீடு முழுவதும் மனிதர்கள், மருந்துவமனை, க்ளீனிக் என எல்லா‌ நேரமும் மக்கள் சூழ பிஸியாக இருந்ததில், சரிவரப் பேசக்கூட நேரமின்றி இருந்த சின்மயியை இப்போது புதிதாக முளைத்த மெலிதான‌ தயக்கமும் குறுகுறுப்பும் வேறு தடுத்தது. தானே அவனைத் தவிர்ப்பதும் பிடிக்காது தவித்தவள், இன்று‌ OPDயும் இல்லையாதலால் ஒரு மணியாகக் காத்திருந்தாள்.

சஞ்சய் தேசாய்‌ கேட்டதை சிங்கபிரானிடம்‌ முன்பே தெரிவித்திருக்க, ‘அதான் எல்லாருக்கும் தெரிஞ்சு போச்சே’ என்றவன், நேரே ஹாஸ்பிடல் வாசலுக்கே வந்துவிட்டான்.

அவளைப் பார்த்ததுமே “ஏன் புல்புல், ரெண்டு வாரத்துல
இவ்ளோ இளைச்சிருக்க?”

“நானா, நோ வே”

“எங்க, எப்டி ஒல்லியாயிருக்கன்னு நான் சொல்லட்டுமா?”

சின்மயி “வேணாம், வேணாம்” என வேகமாக மறுக்கவும் சிங்கபிரான் வாய்விட்டுச் சிரித்தான்.

வண்டி அவன் வீட்டை நோக்கிப் போகாமல் வேறு திசையில் பயணிக்க, கேள்வியாகப் பார்த்தவளை “கேசவ், சித்தி, சித்தப்பா எல்லாரும் இருக்கா. அதான். நாம லாங் ட்ரைவ் போகலாம்”

கார் மைசூர் செல்லும் சாலையில் பயணித்தது. வாரநாள், மதிய நேரம், மழை என்பதால் போக்குவரத்து சற்றே எளிதாக இருந்தது. அவ்வப்போது பேசியபடி பயணித்தனர்.

“புல்புல், அந்த வாட்டர் பாட்டிலை குடு”

“...”

“புல்புல்”

சத்தமில்லாது போகவும், தூங்கிவிட்டாளோ என்று திரும்பிப் பார்த்த சிங்கபிரானுக்கு ஏகத்துக்கும் சிரிப்பு.

ஜீன்ஸ், அரைக் கை சட்டை அணிந்து, தலைமுடி விரிந்திருக்க, தாடியை மழித்து, மீசையை முறுக்கி விட்டிருந்தவனையே இலக்கின்றிப் பார்த்துக்கொண்டிருந்தாள் சின்மயி.

அவள் வலது‌ மணிக்கட்டில் தட்டியவன் “புல்புல், காரை ஓரமா நிறுத்தவா, நீ நிதானமா பார்க்கலாம்” என அவளுமே சிரித்துவிட்டாள்.

“அதெல்லாம் ஒன்னும் இல்லை போடா…” என்றவள், முகத்தை வெளிப்பக்கம் திருப்பிக்கொண்டாள்.

“ப்ரோக்ராம் சார்ட், தேதி, எல்லாம் ஜோயல்தான் பார்த்துப்பான். எனிவேஸ், அந்த சஞ்சயை ஸ்டூடியோக்கு வரச்சொல்லு”

“சரி”

நடுவில் காரை நிறுத்தி, சின்மயி கொண்டு வந்த சப்பாத்தியும் மிக்ஸ் வெஜிடபிள் கறியும் சாப்பிட்டனர்.

“யூ குக் கிரேட் புல் புல்”

அவன் வாங்கிவந்த சாக்லேட்டுகளைத் தந்தான். நல்ல லெதரில் ஒரு கைப்பை வாங்கி வந்திருந்தான்.

“இப்ப எதுக்கு ச்சிங்கா?”

“எப்ப தந்தா எதுவும் சொல்லாம வாங்கிப்ப?”

மாலை நாலு மணி போல் நஞ்சன்கூடு நஞ்சுண்டேஸ்வரர் கோவிலுக்குச் சென்றனர். சதுர்யுக மூர்த்தி. ஈசனின் சான்னித்யத்தில் அசாத்ய அதிர்வலைகள்.

மாலை நேர தீபாராதனைகள் நடக்க, சிங்கபிரான் ராவணன் இயற்றிய சிவதாண்டவ ஸ்தோத்திரத்தைப் பாடினான்.

அங்கே வந்திருந்த‌ சிலர் வேறு ஏதாவது பாடும்படி கேட்க, சோஜுகாதா சோஜு மல்லிகே என்ற சிவன் மீதான கன்னட நாட்டுப்புறப் பாடலைப் பாடவும், அவர்களுக்கு அத்தனை சந்தோஷம்.

திரும்பி வருகையில் திடீரென சிங்கபிரான் “நான் மலேஷியா கிளம்பினதுல இருந்து ஏன் புல்புல் எங்கூட சரியாவே பேசலை… எனிதிங் ராங்?”

“நத்திங் ச்சிங்கா…”

மனதில் அந்த ஓவியம் உறுத்தியதில், சின்மயியின் பதிலில் திடமில்லை. அதைக் கண்டுகொண்ட சிங்கபிரானுக்குக் காரணம்தான் தெரியவில்லை.

“ம்ஹும்… சம்திங் ஈஸ் நாட் ஆல்ரைட் வித் யூ. போகும்போது பவானி ஏதாவது சொன்னாளா? ஹரி? இல்ல,.. வழக்கம்போல உங்கப்பாவா?”

‘நீதான்’ என்று சொல்ல முடியாமல் சின்மயி அமைதியாக இருந்தாள். சிங்கபிரான் அவனது பயணம் குறித்துச் சொன்னான்.

“நீ சொல்லு, இங்க என்ன நடந்தது?”

சின்மயி, பாஸ்கர் மீண்டும் வந்தது, பவானி வீடு வாங்கியது, மாமா, மாமியின் வருகை என ஒப்பித்துக் கொண்டே வந்தவள், தினசரி உணவை வெளியில் வாங்கியதைக் கூடச் சொல்லி இருந்தாள்.

“நல்ல வேலை செஞ்ச புல்புல்… ஆனா, அதனாலதான் மெலிஞ்சிருக்க போல”

“இருக்கலாம்”

“வேற?”

சிங்கபிரானிடம்‌ தானாகவே எதையும் சொல்லும்‌ பழக்கமுள்ள சின்மயி, “அதை ஏன் கேக்கற ச்சிங்கா, மாமா எனக்கு வரன் பார்க்கணும்னு சொல்ல, ஆளாளுக்குப் பேசன்னு ஒரு அரைநாள் ஒரே கலவர…. ஏ…ய்ய்ய்… ச்சிங்கா, என்னாச்சு, ஏன் சடன் பிரேக் போட்ட?”

சீட்பெல்ட்டைத் தாண்டி முன்னால் போய் பின்னால் வந்த சின்மயி படபடப்புடன் சிங்கபிரானைப் பிடித்துக்கொள்ள…

அவள் நாடியைப் பற்றித் தன்னை நோக்கித் திருப்பியவன் “வரன், கிரன், டாக்டர், பேஷன்ட்டுனு எவனையாவது பார்த்த… பார்க்கக்கூடாது… அன்டர்ஸ்டாண்ட்?”
 

saradhavasan

Active member
Oct 3, 2024
90
14
28
சென்னை
செம மிரட்டலா இருக்கே.. இத இத இததான் எதிர்பார்த்தேன்..செம ச்சிங்கா...
பரசுராம்மின் கும்மி பாட்டு க்காக காத்திருக்கேன்