• ஹாய் மக்களே! நம் Nectar Novels தளத்திற்கு நல்வரவு🙏😍😍 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள் nectarnovels.ss@gmail.com 🩷 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...👇 வேதா விஷால் & அனன்யா🙏💖

மழைக்கு ஏங்கிய மாந்தளிரே -10

SudhaSri

Administrator
Staff member
Jun 16, 2024
539
53
43
india
மழைக்கு ஏங்கிய மாந்தளிரே -10


“உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே

இடுக்கண் களைவதாம் நட்பு.”


ரேடியேஷன் யூனிட்டின் காத்திருப்பு அறையின் ஒரு மூலையில் லேப்டாப்புடன் உட்கார்ந்திருந்தான் ஆதித்யா. கடந்த இருபது நாட்களாக, தினமும் காலை ஒன்பது மணிக்கு அவன் இங்கே வந்து விடுவான். ஸ்ரேயா உள்ளே இருக்கும் அந்த இருபது நிமிடங்களில் தன் ஸ்கெட்ச்களை முடித்துக் கொண்டிருப்பான். அவள் வெளியே வரும் போது ஏதேனும் ஜுஸுடன் காத்திருப்பான்.


இன்று அவள் வெளியே வந்ததும், கையில் இருந்த நோட்டுப் புத்தகத்தை அவளிடம் காட்டினான். அதில் இருபத்தொரு டிக் மார்க்குகள் இருந்தன. “ட்வென்டி ஃபைவ் செஷன்ஸ்ல இன்னைக்கு ட்வென்டி ஃபர்ஸ்ட். இன்னும் நாலு தான் பாக்கி.”


ரேடியேஷனால் அவளது நெஞ்சுப் பகுதியில் தோல் சிவந்து போயிருந்தது. இரவில் எரிச்சல் தாங்காமல் அவள் நெளிவதைப் பார்த்து விட்டால், ஒரு வார்த்தை கூடப் பேசாமல் எழுந்து போய், ஒரு கூலிங் ஜெல்லை எடுத்து வந்து மெதுவாகத் தடவி விடுவான். அதைத் தவிர வேறு எதுவும் அவளுக்குத் தேவைப்படவில்லை.


“இன்னும் நாலு நாள் தான் ஸ்ரேயா. அடுத்து என்ன செய்யணும்னு டாக்டர் சொல்லுவார்” என்றாள் அவளுடன் இருந்த நர்ஸ்.


“உங்களுக்கு தெரியாதா? வழக்கமா என்ன செய்வாங்கன்னு சொல்லுங்களேன்.” ஸ்ரேயாவின் குரலோடு கண்களும் கெஞ்சின.


நர்ஸ் முதலில் கொஞ்சம் தயங்கினாள். பின்னர் மேலோட்டமாக விவரம் சொல்வதில் தவறில்லை என்று முடிவு செய்து பேசினாள். “கொஞ்ச நாளைக்கு ஹார்மோன் தெரபி கொடுப்பாங்க. அது எத்தனை வருஷத்துக்குன்னு டாக்டர் தான் முடிவு செய்வார்.”


“வருஷமா!” என்று அதிர்ந்தாள் ஸ்ரேயா. அருகில் இருந்த ஆதித்யா அமைதியாக அவளைத் தோளோடு அணைத்துக் கொண்டான். இது பற்றி ஏற்கனவே ஆராய்ந்து ஐந்து வருடங்கள் வரை அந்த சிகிச்சை இருக்கலாம் என்று தெரிந்த வைத்திருந்தான்.


அன்றிரவு அவளுக்குத் தூக்கம் வரவில்லை. அருகில் படுத்திருந்த ஆதித்யாவும் தூங்கவில்லை என்பது அவளுக்குத் தெரிந்தது. அவன் மூச்சு சீராக இல்லை.


“நீ ஏன் தூங்கலை?”


“நீ தூங்கலை. நான் எப்படித் தூங்கறது?”


“ஆதி, அந்த டேப்லெட்டை வருடக்கணக்கில் சாப்பிடணும்னா, அது வரை நான் ப்ரெக்னன்ட் ஆக முடியாதில்லையா?”


அவன் அமைதியானான். சில விநாடிகள் கழித்து ஒரு கேள்வியைக் கேட்டான்.


“உனக்கு பேபி வேணுமா ஸ்ரேயா?”


“எனக்குத் தெரியலை. இரண்டு வருஷம் முன்னாடி வரைக்கும் நோ பேபின்னு சொல்லிட்டு இருந்தவ நான். இப்போ அந்த ஆப்ஷனே இல்லாம போகும் போது தான் அது எவ்வளவு வலிக்குதுன்னு புரியுது.” அவள் குரல் உடைந்தது.


அவள் கையைப் பிடித்துக் கொண்டான் ஆதித்யா. “நாளைக்கு விக்ரம் கிட்ட கேட்கலாம். இதை இன்னைக்கு ராத்திரியே நாம முடிவு பண்ண வேண்டியதில்லை.”


இருட்டில் அவன் முகத்தையே சில நொடிகள் பார்த்துக் கொண்டிருந்தாள் ஸ்ரேயா.


“நீ ரொம்பவே மாறிட்டே ஆதி.”


“அப்படியா!” என்று அவள் பக்கம் திரும்பிப் படுத்தான் அவன்.


“ஒரு வருஷம் முன்னாடி இப்படி ஒரு பேச்சு வந்திருந்தா, நீ பேச்சை மாத்தியிருப்ப. கோபமா ஏதாவது பேசிட்டு எழுந்து வெளியே போயிருப்ப, இல்லேன்னா லேப்டாப்பைத் திறந்து உட்கார்ந்திருப்ப.”


“உண்மை தான்.” சற்று நேரம் அமைதியாக இருந்தான் அவன்.


அவள் எதுவும் சொல்லவில்லை. அவன் கையை இன்னும் கொஞ்சம் இறுக்கமாகப் பிடித்துக் கொண்டாள்.


“சரி, தூங்கு. காலையில ரேடியேஷன் இருக்கு.”


அவன் தோளில் தலை சாய்த்துக் கொண்டாள். அவன் கையை விடாமலே கண்களை மூடினாள். சில வருடம் என்ற அந்தக் கணக்கு, அந்த நொடியில் கொஞ்சம் பக்கமாகத் தெரிந்தது.


★★★★★


மறுநாள் காலை, சிக்கலான ஒரு அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக முடித்து விட்டு தனது அறையில் வந்து அமர்ந்தான் விக்ரமன். மிகவும் களைப்பாக இருந்தது. மேசையின் மீதிருந்த தண்ணீர் பாட்டிலை எடுத்த போது அவன் பார்வை அங்கிருந்த ஒரு ஃபைலின் மேல் விழுந்தது. உமா, வயது முப்பத்தெட்டு.


ஒரு நொடி அந்தப் பெயரையே பார்த்துக் கொண்டிருந்தான் அவன். தன் இரண்டு பிள்ளைகளுக்கும் இன்னும் சமைத்துக் கொடுக்க வேண்டும் என்று அன்று ஓபியில் அவனிடம் கேட்டவள்.


கீமோவுக்குப் பிறகு உடம்பின் எதிர்ப்பு சக்தி குறைந்ததால், இரண்டு நாட்களுக்கு முன்பு அவளை அட்மிட் செய்திருந்தார்கள். ஃபைலின் மேலேயே அன்று காலை எடுத்த ப்ளட் ரிப்போர்ட் இருந்தது. வெள்ளை அணுக்களின் எண்ணிக்கை ஆபத்தான அளவுக்குக் குறைந்திருந்தது. அவன் புருவங்கள் சுருங்கின.


அதற்குள் மேசையில் இருந்த இன்டர்காம் அலறியது.


“டாக்டர், ஃபோர்த் ஃப்ளோர், பெட் ட்வெல்வ். உமாவுக்கு ஹை ஃபீவர். ரொம்ப மூச்சு வாங்குது. ஆக்சிஜன் அளவும் குறைஞ்சுட்டே வருது.”


“உடனே ஆக்சிஜன் மாஸ்க் போடுங்க. வர்றேன்.”


தண்ணீர் பாட்டிலைத் திறக்கக் கூட இல்லை. களைப்பை மறந்து எழுந்தவன், லிஃப்ட்டுக்குக் காத்திருக்காமல் படிகளில் ஏறி ஓடினான்.


வேகமாக மூச்சு வாங்கிக் கொண்டிருந்தாள் உமா. கட்டிலின் அருகே பதற்றத்தோடு நின்றிருந்தான் அவள் கணவன். ஸ்டெதஸ்கோப்பை அவள் நெஞ்சில் வைத்ததுமே விக்ரமனுக்குப் புரிந்து விட்டது. இரண்டு நுரையீரல்களிலும் இன்ஃபெக்ஷன் பரவியிருந்தது. மாஸ்க் வழியாக ஆக்சிஜன் போய்க் கொண்டிருந்த போதும், மானிட்டரில் ஆக்சிஜன் அளவு ஒவ்வொரு நொடியும் இறங்கிக் கொண்டிருந்தது. பிபியும் குறையத் தொடங்கியிருந்தது.


“உடனே ஆன்டிபயாடிக் ஆரம்பிங்க. ஐசியூல பெட் ரெடி பண்ணச் சொல்லுங்க. இப்போவே ஷிஃப்ட் பண்றோம்.”


பத்து நிமிடத்தில் ஐசியூவுக்கு மாற்றப்பட்டாள் உமா. ஐசியூ டாக்டர் ரவியும் விக்ரமனும் சேர்ந்து அதிக அளவில் ஆக்சிஜன் கொடுத்துப் பார்த்தார்கள். அரை மணி நேரம் கழித்தும் அவள் நிலைமையில் எந்த முன்னேற்றமும் இல்லை.


“வென்டிலேட்டர்ல போட்டுத் தான் ஆகணும் விக்ரம். இதுக்கு மேல வெயிட் பண்ணினா ரிஸ்க்” என்றார் ரவி.


ஆக்சிஜன் இவ்வளவு குறைந்திருக்கும் நிலையில், தொண்டை வழியாக மூச்சுக் குழாய்க்குள் ஒரு குழாயைச் செலுத்துவது சின்ன விஷயம் இல்லை என்பது விக்ரமனுக்குத் தெரியும். அந்த வேலைக்கென்றே உள்ள மருத்துவர் செய்வது தான் சரி. உடனே அர்ஜுனுக்குப் போன் செய்தான். காலையில் அந்த ஐந்து மணி நேர சர்ஜரியில் அவனோடு நின்றிருந்த அர்ஜுன், வேறெந்தப் பணியும் இல்லை என்று சற்று கண்ணயர்ந்த வேளையில் விக்ரமனின் அழைப்பு வந்தது. ஐசியூ வாசலில் காத்திருந்த உமாவின் கணவன், விக்ரமனைப் பார்த்ததும் எழுந்து நின்றான்.


“சார், உமாவோட நுரையீரல்ல இன்ஃபெக்ஷன் பரவியிருக்கு. கீமோவால அவங்க உடம்புல எதிர்ப்பு சக்தி ரொம்பக் குறைஞ்சிருக்கு. மாஸ்க் வச்சும் ஆக்சிஜன் ஏறலை. அவங்களை வென்டிலேட்டர்ல வைக்கணும்.”


வென்டிலேட்டர் என்ற வார்த்தையைக் கேட்டதுமே அவன் முகம் வெளிறிப் போனது. வென்டிலேட்டரில் வைப்பது என்றால் மரணத்துக்கு அழைப்பு விடுப்பது போல என்ற எண்ணம் நம் ஊரில் பலருக்கும் உண்டு. உமாவின் கணவனும் அதற்கு விலக்கல்ல.


“வேண்டாம் டாக்டர்… வென்டிலேட்டர்ல வச்சா திரும்பி வர மாட்டாங்கன்னு எல்லாரும் சொல்றாங்களே…”


“அப்படி இல்லை சார்.” நிதானமாகச் சொன்னான் விக்ரமன். “வென்டிலேட்டர் ஒரு மெஷின் தான். இப்போ அவங்க நுரையீரலால தனியா மூச்சு விட முடியலை. அந்த வேலையைக் கொஞ்ச நாளைக்கு மெஷின் பார்த்துக்கும். அதுக்குள்ள மருந்துகள் இன்ஃபெக்ஷனோட போராடணும். முதல்ல அவங்க உயிரைப் பிடிச்சு வைக்கணும். அதுக்கு அப்புறம் தான் மத்த ட்ரீட்மென்ட் எல்லாம் கொடுக்க முடியும்.”


ஒரு நொடி நிறுத்தியவன், அவன் கண்களை நேராகப் பார்த்தான். “ஆனா நான் உங்க கிட்ட எதையும் மறைக்க விரும்பல. உமா இப்போ இருக்கிற நிலைமையில இது எவ்வளவு தூரம் கை கொடுக்கும்னு என்னால உறுதியா சொல்ல முடியல. எங்களால முடிஞ்ச எல்லாத்தையும் செய்வோம். அது மட்டும் நிச்சயம்.”


சில நொடிகள் எதுவும் பேசவில்லை அவன். பிறகு தழுதழுத்த குரலில் சொன்னான். “அவ உங்களை ஒரு தம்பி மாதிரின்னு தான் சொல்லுவா டாக்டர். விக்ரம் தம்பி பார்த்துக்குவார்னு. நீங்க வந்து பேசின ஒவ்வொரு தடவையும் அவளுக்கு ஒரு தைரியம். நீங்க சொல்றதைச் செய்யுங்க.”


சிஸ்டர் நீட்டிய சம்மதப் படிவத்தில் நடுங்கும் கையால் கையெழுத்திட்டான் அவன்.


உமாவின் மூச்சுக் குழாய்க்குள் குழாயைச் செலுத்தி, அதை வென்டிலேட்டரோடு இணைத்தான் அர்ஜுன். உமாவுக்காக அந்த மெஷின் மூச்சு விடத் தொடங்கியது. குறைந்து கொண்டே போன பிபியைத் தூக்கிப் பிடிக்க ட்ரிப்பில் மருந்து ஏறியது. ஓபியில் காத்திருந்த நோயாளிகளை டாக்டர் பிரகாஷ் பார்த்துக் கொண்டார். அன்று மதியம் விக்ரமன் ஐசியூவை விட்டு நகரவே இல்லை.


மாலை ஐந்தரை மணிக்கு, எத்தனை மருந்துகள் கொடுத்தும் பிபி இறங்கிக் கொண்டே போனது. மானிட்டரில் பல்ஸ் மெல்ல மெல்லக் குறைந்தது. வெளியே வந்த விக்ரமன், உமாவின் கணவன் முன் நின்றான்.


“சார், அவங்க ஹார்ட் பீட் ரொம்ப வீக் ஆகிட்டு வருது. ஹார்ட் நின்னா உடனே சிபிஆர் கொடுத்து துடிக்க வைக்கப் பார்ப்போம்.”


“எதுவானாலும் பண்ணுங்க டாக்டர்” என்று விக்ரமனின் கையைப் பற்றிக் கொண்டான் உமாவின் கணவன்.


பத்து நிமிடத்தில் மானிட்டர் நீண்ட ஒலி எழுப்பியது. “கோட் ப்ளூ!” விக்ரமன் உமாவின் நெஞ்சை அழுத்தத் தொடங்கினான். அழைப்பைக் கேட்டு ஓடி வந்த அர்ஜுன் தலைமாட்டில் நின்று மூச்சைக் கவனித்துக் கொண்டான். ரவி மருந்துகளைச் சொல்லிக் கொண்டிருந்தார். இரண்டு நிமிடத்துக்கு ஒரு முறை கைகள் மாறின. மூன்று நிமிடத்துக்கு ஒரு முறை இதயத்தைத் தூண்டும் ஊசி ஏறியது. ஒவ்வொரு முறை நிறுத்திப் பார்த்த போதும் மானிட்டரின் கோடு நேராகவே இருந்தது.


முப்பத்தைந்து நிமிடம் கழித்து, விக்ரமனின் தோளில் கை வைத்தான் அர்ஜுன். “விக்கி… போதும்.”


கைகளை எடுத்தான் விக்ரமன். சுவர்க் கடிகாரத்தைப் பார்த்தான். “டைம் ஆஃப் டெத், சிக்ஸ் ஃபார்ட்டி.”


இரண்டு மாதங்களாக அவளது ஒவ்வொரு ரிப்போர்ட்டையும் அவன் சரிபார்த்திருந்தான். கீமோ மருந்தின் அளவு, ஸ்கேன்கள் என்று எல்லாமே சரியாகத் தான் போய்க் கொண்டிருந்தன. ஒரே ஒரு இன்ஃபெக்ஷன் எல்லாவற்றையும் சில மணி நேரங்களில் முடித்து வைத்து விட்டது.


ஐசியூ வாசலில் நின்றிருந்தான் உமாவின் கணவன். விக்ரமனின் முகத்தைப் பார்த்ததுமே அவனுக்குப் புரிந்து விட்டது.


“டாக்டர்…” என்றான் அவன்.


“ஐ ஆம் ஸாரி” என்றான் விக்ரமன் மெல்ல. அவனால் வேறேதும் பேச முடியவில்லை.


உமாவின் கணவன் சுவரோடு சாய்ந்து அப்படியே அமர்ந்து விட்டான். வீட்டில் அம்மாவுக்காகக் காத்திருக்கும் இரண்டு பிள்ளைகளிடம் என்ன சொல்வது என்ற கேள்வி அவன் முகத்தில் தெரிந்தது. வாய் திறக்க முடியாமல் அப்படியே நின்றான் விக்ரமன்.


எவ்வளவு நேரம் அப்படி நின்றானோ, அவன் தோளில் மீண்டும் ஒரு கை விழுந்தது. அர்ஜுன்.


“வா விக்கி.” ஒரு கேள்வி கூடக் கேட்காமல் நண்பனை டாக்டர்ஸ் லவுஞ்சுக்கு அழைத்துப் போய், அவன் கையில் ஒரு காபியைத் திணித்தான் அர்ஜுன். பக்கத்தில் ஒரு சாண்ட்விச் பாக்கெட்டையும் வைத்தான். “காலையில அஞ்சு மணி நேரம் உன் கூட தியேட்டர்ல நின்னவன் நான். சாப்பிட்டு ஒரு சின்ன தூக்கம் போட்டேன். நீ நேரா ஓபிக்கு ஓடினே. உடனே இங்கே வந்திருக்க. ஏதாவது வாய் சாப்பிட்டியா?”


விக்ரமன் பதில் சொல்லவில்லை. காலையில் இருந்து தண்ணீர் கூடக் குடிக்கவில்லை.


“அதான் தெரியுமே. முதல்ல இதைச் சாப்பிடு. அப்புறம் நேரா வீட்டுக்குப் போ.”


“அர்ஜுன், நான்…”


“இன்னும் ஒரு வார்த்தை பேசினா, இப்போவே அங்கிளுக்குப் போன் பண்ணுவேன். உங்க பையன் அர்த்த ராத்திரில இருந்து ஒரு வாய் தண்ணி கூடக் குடிக்காம வேலை பார்க்கிறான்னு சொல்லுவேன். அப்புறம் உனக்கு ஒரு வாரத்துக்கு ஸ்லீப் க்ளாஸ் தான். தேவையா?”


அந்த நிலையிலும் விக்ரமனின் உதடுகளில் ஒரு சின்னப் புன்னகை வந்து போனது.


டெத் சர்டிஃபிகேட்டில் கையெழுத்திட்டு, அந்தக் குடும்பம் கிளம்பும் வரை மருத்துவமனையிலேயே இருந்து விட்டு விக்ரமன் வீடு வந்து சேர்ந்த போது மணி ஒன்பதைத் தாண்டியிருந்தது. ஒரு டெலிவரி கேஸுக்காக நியதி இன்னும் ஹாஸ்பிடலில் தான் இருந்தாள்.


உடை கூட மாற்றாமல் ஹால் சோஃபாவில் மனச்சோர்வுடன் அமர்ந்து, அணைந்து கிடந்த டிவி திரையை இலக்கில்லாமல் வெறித்தபடி இருந்தான் அவன். திரும்பத் திரும்ப அதே கேள்விகள் தான் மனதுக்குள் சுற்றி வந்தன. எங்கே தவறினோம்? எந்த நாளில்? எந்த ஸ்கேனில்?


பக்கத்தில் இருந்த சாய்வு நாற்காலியில் அமர்ந்திருந்த தேவராஜன், மகன் உள்ளே நுழைந்ததுமே கையில் இருந்த புத்தகத்தை மூடி வைத்திருந்தார். பத்து நிமிடங்களுக்கு மேலாக அவனையே பார்த்துக் கொண்டிருந்தவர், பிறகு மெல்லச் சொன்னார்.


“ஆஃப் பண்ணின டிவியில உனக்கு எந்தப் பதிலும் கிடைக்காது விக்ரமா.”


திடுக்கிட்டுத் திரும்பினான் விக்ரமன். “டாட்…”


“வா, சாப்பிடலாம்.”


“பசிக்கலை டாட். நீங்க சாப்பிடுங்க.”


“பசிக்குதா இல்லையான்னு நான் கேட்கலை. சாப்பிட வான்னு சொன்னேன்.” எழுந்து அவன் அருகில் வந்தார் அவர். “அர்ஜுன் ஃபோன் பண்ணினான். நீ நேத்து ராத்திரில இருந்து ஒரு வாய் தண்ணி கூடக் குடிக்காம வேலை பார்த்தியாம். அதுக்கு மேல அவன் எதுவும் சொல்லலை.”


விக்ரமனின் உதட்டோரம் லேசாக வளைந்தது. “சொன்னதைச் செஞ்சுட்டான்.”


“நல்ல ஃப்ரெண்ட். இப்போ எழுந்து வா.”


மறுக்க முடியாமல் எழுந்து சென்று ஒரு அவசர குளியல் போட்டு வந்தவனைச் சாப்பாட்டு மேசையில் உட்கார வைத்தார் தேவராஜன். அவன் தட்டில் சூடான சாதத்தைப் போட்டு, மிளகு ரசத்தை ஊற்றித் தானே பிசைந்து, பக்கத்தில் ஒரு அப்பளத்தையும் வைத்தார். சின்ன வயதில் காய்ச்சல் வந்த நாட்களில் அப்பா இப்படித் தான் பிசைந்து கொடுப்பார் என்பது விக்ரமனுக்கு நினைவுக்கு வந்தது.


சாப்பிடும் போது பேச்சு இல்லை என்பது அந்த வீட்டின் விதி. அன்று அந்த விதி விக்ரமனுக்கு ஒரு வசதியாகவே இருந்தது. யாருக்கும் எதையும் விளக்க வேண்டியதில்லை. முதல் வாய் தொண்டைக்குள் இறங்கிய பிறகு தான், தனக்கு எவ்வளவு பசித்திருக்கிறது என்பதே அவனுக்குப் புரிந்தது. தட்டு காலியானதும், எதுவும் பேசாமல் இன்னும் கொஞ்சம் சாதம் போட்டு ரசத்தை ஊற்றினார் தேவராஜன். இந்த முறை அவன் மறுக்கவில்லை.


கை கழுவியவன் நேராக மொட்டை மாடிக்குப் போய் ஊஞ்சலில் அமர்ந்தான். சில நிமிடங்கள் அவனைத் தனியாக விட்ட தேவராஜன், பிறகு மெல்லப் படியேறி வந்து அவன் அருகில் அமர்ந்தார். ஊஞ்சல் மெதுவாக ஆடியது. நீண்ட நேரம் இருவரும் எதுவும் பேசவில்லை.


“எல்லாமே சரியா போயிட்டு இருந்தது டாட். பட், .”


யார் என்றோ, என்ன ஆனது என்றோ தேவராஜன் கேட்கவில்லை. நோயாளியின் விவரங்கள் மருத்துவமனையின் சுவர்களுக்குள்ளேயே இருக்க வேண்டியவை என்பது அந்த இரண்டு மருத்துவர்களுக்குமே தெரியும். மகனின் தோளில் கை வைத்தார் அவர்.


“எல்லாத்தையும் கரெக்டா தான் பண்ணினோம் டாட். ஆனா…”


“எல்லாத்தையும் கரெக்டா பண்ணினாலும் சில சமயம் அப்படித் தான் ஆகும்.”


சற்று நிறுத்தியவர் கேட்டார். “உன் சர்வீஸ்ல இது முதல் தடவை இல்லையே விக்ரமா?”


“இல்லை. ஆனா ஒவ்வொரு தடவையும் இது தான் முதல் தடவை மாதிரி இருக்கு.”


“அப்படித் தான் இருக்கணும். என்னைக்கு இது உனக்குச் சாதாரணமா தோண ஆரம்பிக்குதோ, அன்னைக்குத் தான் நீ பயப்படணும்.” ஊஞ்சலை மெல்ல ஆட்டியபடி தொடர்ந்தார் அவர். “தூக்கம் வரலைன்னு என் கிட்ட வர்றவங்கள்ல டாக்டர்களும் நிறைய பேர் இருக்காங்க விக்ரமா. அதுல பல பேர், இப்படி ஒரு நாளை யார் கிட்டயும் சொல்லாம வருஷக்கணக்கா உள்ளேயே பூட்டி வச்சவங்க தான். நீ அப்படி ஆகக் கூடாது. அந்த பேஷன்ட்டைப் பத்தி நீ எனக்கு எதுவும் சொல்ல வேண்டாம். உனக்கு எப்படி இருக்குன்னு மட்டும் சொல்லு. அது போதும்.”


சில நொடிகள் கழித்து மெல்ல வந்தது அவன் குரல். “தோத்துப் போன மாதிரி இருக்கு டாட். அவங்களுக்கு என்னால ஹெல்ப் பண்ண முடியாம போச்சே.”


“உன்னால முடிஞ்சதை அதை நீ செஞ்சிருப்பே. உன்னை எனக்குத் தெரியும். மத்தது உன் கையில இல்லை.” மகனின் பக்கம் திரும்பி அமர்ந்தார் தேவராஜன்.


“இந்த வேலையில நீ எல்லா உயிரையும் ஜெயிக்க முடியாது விக்ரமா. நீ தேர்ந்தெடுத்த துறையே அப்படிப்பட்டது தான். அங்கே ஜெயிக்கிற நாளும் வரும், தோக்கிற நாளும் வரும். ஒவ்வொரு தடவையும் இப்படித் துவண்டு போயிட்டா, நாளைக்கு உன் ஓபில உனக்காகக் காத்திருக்கிறவங்களுக்கு யார் இருப்பா?”


விக்ரமன் பதில் சொல்லவில்லை.


“எதையாவது திரும்பிப் பார்க்கணும்னா, நாளைக்கு நிதானத்தோட உட்கார்ந்து பாரு. நடு ராத்திரியில மைன்ட் குழப்பமா இருக்கும் போது தனியா உட்கார்ந்து தேடாதே. அந்த நேரத்துல நம்ம மூளை சின்னதை எல்லாம் பெருசாக்கிக் காட்டும். கடைசியில எல்லாத்துக்கும் உன்னையே குற்றவாளியா நிறுத்திடும்.”


சிரிக்க முயன்றான் விக்ரமன். ஆனால் அந்தச் சிரிப்பு கண்ணீரில் கலந்து போனது. மகனின் தோளை இறுகப் பற்றிக் கொண்டு, எதுவும் பேசாமல் அவன் அருகிலேயே அமர்ந்திருந்தார் தேவராஜன்.


மணி பதினொன்றை நெருங்கிய போது கீழே கார் சத்தம் கேட்டது. ஹாலில் யாரையும் காணாமல் நேராக மாடிக்கு ஓடி வந்தாள் நியதி. களைப்பையும் மீறி அவள் முகம் ஜொலித்துக் கொண்டிருந்தது.


“மாமா! விக்ரம்! இன்னைக்கு நான் ரொம்ப ஹேப்பியா இருக்கேன். ஒரு டெலிவரி… ட்ரிப்ளெட்ஸ்! அதுவும் நார்மல் டெலிவரி!”


“மூணு பேரா!” என்று நிமிர்ந்து உட்கார்ந்தார் தேவராஜன். “அடடா! அந்த அப்பா அம்மாவுக்கு இனிமே ரெண்டு வருஷத்துக்குத் தூக்கமே கிடையாது. சீக்கிரமே என் கிட்ட அப்பாயின்ட்மென்ட் வாங்க வேண்டியிருக்கும்.”


தன்னையும் அறியாமல் விக்ரமனுக்குள் இருந்த டாக்டர் விழித்துக் கொண்டான். “மூணு பேருமா நார்மல்? இந்த காலத்துல இது ஆச்சரியம் தான். எப்படி நிதி?”


“அடுத்த வாரம் சிசேரியன் பண்றதா இருந்தோம். இன்னைக்கு சாயங்காலமே வலியோட வந்துட்டாங்க. வந்தப்போவே முதல் பேபியோட தலை கீழே இறங்கியாச்சு. இனி நார்மலாவே பார்க்கலாம்னு அத்தை முடிவு பண்ணினாங்க. ஏதாவது ஆனா உடனே சிசேரியன் பண்ண எல்லாத்தையும் ரெடியா வச்சுக்கிட்டு, தியேட்டர்லயே டெலிவரி பார்த்தோம். அத்தை பக்கத்துலயே நின்னாங்க. ஆனா மூணு பேபியையும் என்னையே எடுக்க விட்டாங்க!” அவள் கண்கள் மின்னின.


“இருபது நிமிஷத்துக்குள்ள மூணு பேரும் வெளியே வந்துட்டாங்க விக்ரம். அத்தை இன்னும் அங்க தான் இருக்காங்க. நீ கிளம்பு, நான் பார்த்துக்கறேன்னு என்னை அனுப்பிட்டாங்க.”


“கங்கிராட்ஸ் நிதி. ப்ரௌட் ஆஃப் யூ” என்றான் விக்ரமன் மெல்ல.


அப்போது தான் மாடியின் மங்கிய வெளிச்சத்தில் அவன் முகத்தைச் சரியாகப் பார்த்தாள் நியதி. சிவந்திருந்த அவன் கண்களைக் கண்டதும் அவள் குரலில் இருந்த உற்சாகம் மெல்ல அடங்கியது.


நியதி எதுவும் கேட்கவில்லை. ஊஞ்சலில் அவன் மறுபக்கம் அமர்ந்து, அவன் கையைத் தன் கைகளுக்குள் எடுத்துக் கொண்டாள்.


சற்று நேரம் இருவரையும் பார்த்துக் கொண்டிருந்த தேவராஜன், பிறகு மெல்லச் சொன்னார். “‘உறங்குவது போலும் சாக்காடு உறங்கி விழிப்பது போலும் பிறப்புன்னு வள்ளுவர் சொல்லியிருக்கார். பாரு, வாழ்க்கையைச் சொல்ல அவருக்குக் கூட என் சப்ஜெக்ட் தான் தேவைப்பட்டிருக்கு.”


நியதியின் உதடுகளில் ஒரு சின்னப் புன்னகை வந்து போனது.


“சாவுங்கிறது ஒரு தூக்கம் மாதிரி. பிறப்புங்கிறது அந்தத் தூக்கத்துல இருந்து முழிக்கிற மாதிரி.” மகனின் தோளைத் தட்டிக் கொடுத்தார் அவர். “இன்னைக்கு ஒருத்தர் தூங்கிட்டாங்க. மூணு பேர் கண் முழிச்சிருக்காங்க. ரெண்டையும் ஒரே நாள்ல நீங்க ரெண்டு பேரும் பார்த்திருக்கீங்க. இது தான் வாழ்க்கை விக்ரமா. இதுல நமக்குப் பிடிச்ச பக்கத்தை மட்டும் எடுத்துக்க முடியாது.”


“மாமா, மணி பதினொண்ணைத் தாண்டியாச்சு. உங்க ரூல் என்னாச்சு?” என்றாள் நியதி.


“என் பையன் தூங்கலைன்னா எனக்கு எப்படித் தூக்கம் வரும்? அது ஒரு ஸ்லீப் டாக்டரோட பயங்கரமான டிஃபெக்ட்” என்று மெல்லச் சிரித்தபடி எழுந்தார் அவர். “இப்போ நீ வந்துட்டே மா. இனி இவன் உன் பொறுப்பு.”


படியை நோக்கி நடந்தவர், ஒரு நொடி நின்று மகனைத் திரும்பிப் பார்த்தார். “இன்னைக்குத் தூக்கம் வரலைன்னா பரவாயில்லை விக்கி. ஒரு ராத்திரி தூங்கலைன்னா ஒண்ணும் ஆகாது. தூங்கியே ஆகணும்னு மட்டும் போராடாதே. போராடினா தான் தூக்கம் இன்னும் தூரமா ஓடிப் போகும்.”


நியதியைப் பார்த்துத் தலையசைத்து விட்டு இறங்கிப் போனார் தேவராஜன்.


அவன் தோளில் தலையைச் சாய்த்துக் கொண்டாள் நியதி. ஊஞ்சல் மீண்டும் மெதுவாக ஆடத் தொடங்கியது.


“இது ஒரு விசித்திரமான வேலை இல்லையா நிதி?”


“ம்.”


அவள் கையை இறுகப் பிடித்துக் கொண்டான் அவன். சிறிது நேரத்தில் அவன் தோளிலேயே தூங்கிப் போனாள் நியதி. அவளை மெல்ல எழுப்பி அறைக்கு அழைத்துப் போனான் அவன். அன்றிரவு விக்ரமனுக்குத் தூக்கம் வரவில்லை. ஆனால் அப்பா சொன்னது போல, அதோடு அவன் போராடவும் இல்லை.


★★★★★


ஸ்ரேயாவின் கடைசி ரேடியேஷன் முடிந்த அன்று, அவளையும் ஆதித்யாவையும் தன் அறைக்கு அழைத்தான் விக்ரமன். சிகிச்சைக்குப் பிறகு கவனிக்க வேண்டியவற்றை அவன் சொல்லி முடித்த பிறகும், ஸ்ரேயா எதையோ கேட்கத் தயங்குவது போலிருந்தது.


“எதுவானாலும் கேளுங்க ஸ்ரேயா. உங்க டவுட்ஸை க்ளியர் பண்ணத் தான் இந்த செஷன்.”


“பேபி” என்று ஒரே வார்த்தையில் கேட்டாள் அவள்.


ஒவ்வொரு வார்த்தையையும் தேர்ந்தெடுத்து நிதானமாகப் பேசினான் விக்ரமன். “ஏற்கனவே சொன்ன மாதிரி, இந்த டேப்லெட் சாப்பிடும் போது கன்சீவ் ஆகக் கூடாது. அதுல மாற்றம் இல்லை. ஆனா இப்போ ஒரு ரிசர்ச் நடந்துட்டு இருக்கு. பதினெட்டுல இருந்து முப்பது மாசம் வரைக்கும் டேப்லெட் சாப்பிட்ட பிறகு, இரண்டு வருஷம் வரைக்கும் அதுக்கு ஒரு பிரேக் கொடுத்துட்டு குழந்தைக்கு ட்ரை பண்ணலாம்னு அந்த ஸ்டடி சொல்லுது. பேபி பிறந்த பிறகு மறுபடியும் டேப்லெட்டைத் தொடரணும். அப்படிப் பண்ணினவங்களுக்கு இதுவரைக்கும் கேன்சர் திரும்ப வர்ற ரிஸ்க் அதிகமாகலைன்னு காட்டியிருக்காங்க.”


ஸ்ரேயாவின் கண்கள் ஒளிர்ந்தன. “அப்போ சான்ஸ் இருக்கா?”


“ஆமா. நிச்சயமா சான்ஸ் இருக்கு. கீமோவுக்கு அப்புறம் உங்க உடம்புல இன்னும் எவ்வளவு கருமுட்டைகள் இருக்குன்னு முதல்ல பார்க்கணும். அதுக்கு உங்க கைனகாலஜிஸ்ட்டை ஒரு தடவை பாருங்க. உங்க டாக்டர்ஸோட பேசி, அடுத்து என்ன பண்ணலாம்னு அவங்க சொல்லுவாங்க. ஆனா ஒரு விஷயம் மட்டும் உறுதி. வழி இருக்கு. அது மூடிப் போச்சுன்னு நினைக்க வேண்டாம்.”


ஸ்ரேயாவின் கையைப் பிடித்துக் கொண்டான் ஆதித்யா. அன்று, முதல் முறையாக அவள் அழவில்லை.


“தேங்க்ஸ் விக்ரம்” என்றாள் அவள்.


விக்ரமன் அந்த நன்றியைப் புன்னகையுடன் தலையசைத்து ஏற்றுக் கொண்டான்.


இரண்டு வாரங்கள் கழித்து, அருந்ததியைப் பார்த்து விட்டு ஆதித்யாவுடன் நியூயார்க் கிளம்பினாள் ஸ்ரேயா. விமான நிலையத்தில் அம்மாவைக் கட்டிக் கொண்டாள். தமயந்தியும் கண்ணீருடன் மகளை இறுக அணைத்துக் கொண்டார். இருவரும் எதுவும் பேசவில்லை. மனதில் ஒரு நம்பிக்கையோடு, ஆதித்யாவின் கரம் பிடித்துப் பிறந்த நாட்டுக்கு விடை கொடுத்தாள் ஸ்ரேயா.


★★★★★


அதற்குப் பிறகு மாதங்கள் ஓடியிருந்தன.


ஒரு நாள் இரவு பதினொன்றரை மணிக்கு அகிலாவின் மொபைல் ஒலித்தது. திரையில் நியதியின் பெயர் மின்னியது.


“அகில்ஸ்… தூங்கிட்டியா?”


“இல்லை. சொல்லு.” என்று கொட்டாவி விட்டாள் அகிலா. “.”


“ஒண்ணுமில்லை… சும்மா தான் கூப்பிட்டேன். இப்போ தான் ஒரு டெலிவரி முடிஞ்சது. பேபி ரொம்ப அழகா இருந்துச்சு. அந்த அம்மா அழுதுட்டே சிரிச்சாங்க… இல்லை, அது இல்லை. உனக்கு ஞாபகம் இருக்கா, ஃபர்ஸ்ட் இயர்ல நாம… சரி விடு. நாளைக்கு உனக்கு டியூட்டி இருக்கா? இல்லை… நீ தூங்கு. நான் அப்புறம் பேசறேன்.”


தலையும் இல்லாமல் வாலும் இல்லாமல் வந்து விழுந்த அந்த வார்த்தைகளில் அகிலாவின் தூக்கம் முழுவதுமாகக் கலைந்து போனது.


“நிதி, ஃபர்ஸ்ட் இயர்ல இருந்து இன்னைக்கு வரைக்கும் நீ ஒரு கேள்வியைக் கூடப் பாதியில விட்டதில்லை. இப்போ ஒரே நிமிஷத்துல நாலு வாக்கியத்தைப் பாதியில விட்டுட்டே.” அவள் குரல் கண்டிப்பாக மாறியது. “நாளைக்கு சாயங்காலம் உன் ஓபி முடியும் போது உன் ரூம்ல இருப்பேன். இப்போ டியூட்டி முடிஞ்சதும் போய்த் தூங்கு.”


மறுநாள் மாலை, சொன்னபடியே நியதியின் ஓபி அறைக்குள் நுழைந்தாள் அகிலா. கேன்டீனில் வாங்கி வந்த இரண்டு கப் காபியில் ஒன்றை நியதியின் முன் வைத்து விட்டுக் கதவைச் சாத்தியவள், எதிரே இருந்த நாற்காலியில் அமர்ந்தாள்.


“இப்போ சொல்லு. முதல்ல இருந்து.”


நியதி உடனே பதில் சொல்லவில்லை. அவள் பார்வை மேசையின் மேலிருந்த ஒரு சிறிய ஃப்ரேமின் மேல் நின்றது. அதைக் கவனித்த அகிலா ஃப்ரேமைக் கையில் எடுத்தாள். அதில் ஒரு குழந்தையின் கையை ஒரு தாயின் கை பிடித்திருந்தது. அது ஒரு ஸ்டாக் ஃபோட்டோ தான். ஆனால் அதன் ஓரத்தில் நியதியின் கையெழுத்தில் ஒரு சின்ன வரி இருந்தது. ‘ஒரு நாள்.’


ஃப்ரேமை மெதுவாகக் கீழே வைத்தாள் அகிலா. அவளது பார்வை தோழியைக் கேள்வி கேட்டது.


“ஒன்றரை வருஷம் ஆச்சு அகில்ஸ்.” காபி கப்பை இரண்டு கைகளாலும் இறுகப் பற்றிக் கொண்டாள் நியதி. “கல்யாணம் ஆனதுல இருந்தே நாங்க எந்த ப்ரிகாஷனும் எடுக்கலை. பேபி எப்போ வந்தாலும் சந்தோஷம்னு தான் இருந்தோம். இந்த மாசம் அடுத்த மாசம்னு காத்திருக்கேன். ஒவ்வொரு மாசமும் டெஸ்ட்ல அதே ஒற்றைக் கோடு தான்.”


“பீரியட்ஸ் ரெகுலரா வருதா?” என்று கேட்ட போது அகிலா ஒரு தோழியாகக் கேட்கவில்லை, ஒரு டாக்டராகக் கேட்டாள்.


“இல்லை. சில மாசம் நாப்பது நாள், சில மாசம் அம்பது நாள். ‘நைட் டியூட்டி, ஸ்ட்ரெஸ்’னு நானே எனக்கு டயக்னாசிஸ் எழுதிக்கிட்டேன்.”


“டெஸ்ட் ஏதாவது பண்ணினியா?”


“ஒண்ணு கூடப் பண்ணிக்கலை.” தலையைக் குனிந்து கொண்டாள் நியதி. “ரிசல்ட் என்ன சொல்லுமோன்னு பயம். டெய்லி என் பேஷண்ட்ஸ் கிட்ட பயப்படாம டெஸ்ட் பண்ணுங்க, ரிலாக்ஸ் பண்ணுங்க, டைம் கொடுங்கன்னு சொல்றேன். அது எவ்வளவு ஈஸியான அட்வைஸ்னு இப்போ தான் புரியுது.” அவள் குரல் தழுதழுத்தது. “டெய்லி இந்தக் கையால ஒரு பேபியை டெலிவர் பண்றேன். ஒவ்வொரு தடவையும் அம்மாவோட நெஞ்சுல வைக்கிறேன். அப்புறம் வீட்டுக்குப் போய் என் கையைப் பார்க்கிறேன். வெறுமையா இருக்கு. நேத்து ராத்திரி தாங்க முடியலை. அதான் உனக்குக் கூப்பிட்டேன்.”


“விக்ரமுக்கு இது தெரியுமா?”


“இதை நான் விக்ரம் கிட்ட முழுசா சொன்னதே இல்லை. நமக்கும் ஒரு நேரம் வரும்னு அவர் சமாதானப்படுத்துவார். நான் ஆமான்னு சிரிச்சு வைப்பேன். இந்த வெறுமையை அவர் கிட்ட காட்டினா அவர் இன்னும் கஷ்டப்படுவார். ஏற்கனவே அவருக்கு எவ்வளவோ ஸ்ட்ரெஸ். சில நாள் ஒரு வாய் தண்ணி கூடக் குடிக்காம வேலை பார்க்கிறார். சில ராத்திரி தூங்காமலே விடிஞ்சுடுது.”


சற்று நேரம் தோழியையே பார்த்துக் கொண்டிருந்தாள் அகிலா. பிறகு காபியை ஒரு மிடறு குடித்து விட்டுக் கேட்டாள். “நியதி, இதே கதையோட ஒரு பேஷண்ட் உன் கிட்ட வந்தா நீ என்ன சொல்லுவே?”


“ஒரு வருஷம் ட்ரை பண்ணியும் ஆகலைன்னா ஹஸ்பண்ட், வைஃப் இரண்டு பேருக்கும் டெஸ்ட் பண்ணணும். பீரியட்ஸ் ரெகுலரா இல்லைன்னா அவ்வளவு நாள் கூடக் காத்திருக்க வேண்டாம். ப்ளட் டெஸ்ட், ஸ்கேன்…” பாடம் ஒப்பிப்பது போலச் சொல்லிக் கொண்டு வந்தவள், பாதியில் நிறுத்தினாள்.


“பாத்தியா டி. உனக்கு எல்லாமே தெரியும்” என்றாள் அகிலா. “தெரிஞ்சும் ஒன்றரை வருஷமா பண்ணாம இருக்கிறது தான் பிரச்சினை. இது உன் ஒருத்தியோட விஷயம் இல்லை. இரண்டு பேரோட விஷயம். ப்ராப்ளம் யார் பக்கம்னு டெஸ்ட் பண்ணாம யாருக்குத் தெரியும்? இரண்டு பேரும் சேர்ந்து ஷீலா மேடம் கிட்ட போங்க. இந்த விஷயத்துல அவங்களை விட்டா ஆள் இல்லை. ஆனா அதுக்கு முன்னாடி, இதை விக்ரம் கிட்ட முழுசா சொல்லு. சொல்லாம இருக்கிறது நல்லது இல்லை நியதி. அது தப்பு.”


அந்த வார்த்தையை மனதுக்குள் ஒரு முறை சொல்லிப் பார்த்தாள் நியதி.

காபி கப்பைக் கீழே வைத்தாள் அகிலா.


“இன்னொண்ணு. நீ இப்போ என்ன சொன்னேன்னு கவனிச்சியா? அவர் தண்ணி குடிக்காம வேலை பார்க்கிறார். தூங்காம உட்கார்ந்திருக்கார். நீ ஒன்றரை வருஷமா ஒரு டெஸ்ட் கூடப் பண்ணிக்கலை. உன் விசுவாமித்திரன் டெய்லி எத்தனை பேஷண்ட்ஸ் கிட்ட கொஞ்சம் முன்னாடியே வந்திருக்கலாமேன்னு சொல்றார்? அவர் தன் உடம்பைக் கடைசியா எப்போ செக் பண்ணினார்? நீ?”


நியதியிடமிருந்து பதில் வரவில்லை.


“நீங்க இரண்டு பேரும் ஊருக்கெல்லாம் வைத்தியம் பார்க்கிறீங்க. உங்க உடம்பை மட்டும் பார்க்கிறதில்லை. நாம டாக்டர்ஸே இப்படி இருந்தா, அப்புறம் நாம எப்படி அடுத்தவங்களுக்கு அட்வைஸ் பண்ண முடியும்?”


நீண்ட நேரம் எதுவும் பேசவில்லை நியதி. பிறகு மெல்லத் தலையசைத்தாள். “இந்த ஞாயிற்றுக்கிழமை. அந்த நாள் எங்களுக்கானது. அன்னைக்குச் சொல்றேன்.”


“சொல்லிட்டு எனக்கு மெசேஜ் பண்ணு” என்றபடி எழுந்தாள் அகிலா. “இல்லேன்னா ஆபரேஷன் விசுவாமித்திரன் நோட்டுப் புத்தகத்தை எடுத்துட்டு நானே உங்க வீட்டுக்கு வருவேன். அதுல இன்னும் நிறைய பக்கம் காலியா இருக்கு.”


நியதி பல நாட்கள் கழித்து அந்த மாலையில் மனம் விட்டுச் சிரித்தாள்.


அன்றிரவு குளியலறையில் ஒரு விஷயத்தைக் கவனித்தாள் நியதி. ரொம்பச் சின்ன விஷயம் தான். லேசாக ஒரு ரத்தக் கசிவு இருந்தது. ஒரு நிமிடம் நின்று யோசித்தாள். பீரியட் வர இன்னும் நாட்கள் இருந்தன. ஹார்மோன் மாற்றங்களால் சில சமயம் இப்படி வருவது உண்டு. போன மாதமும் இதே மாதிரி லேசாக வந்திருந்தது. தொடர்ந்து இது போல் வந்தா உடனே வந்து காட்டுங்க என்று தன் பேஷண்ட்ஸிடம் சொல்வது அவள் நினைவுக்கு வந்தது. கூடவே மாலையில் அகிலா கேட்ட கேள்வியும் காதில் ஒலித்தது.


‘ஒரு பாப் ஸ்மியர் டெஸ்ட் பண்ணிக்கணும்.’ தனக்குத் தானே சொல்லிக் கொண்டு விளக்கை அணைத்தாள். அவள் மனம் முழுவதும் அந்த ஞாயிற்றுக்கிழமையில் தான் இருந்தது. ‘அவன் கிட்ட எப்படிச் சொல்றது? என்ன சொல்றது?’ என்ற கேள்விகளில் அலைந்து கொண்டிருந்தது.


அந்தச் சின்னத் துளி ரத்தத்துக்குக் காரணமான ஒன்று, அவள் உடம்பை மெல்ல மெல்ல ஆக்கிரமித்துக் கொண்டிருந்தது.


மற்றவர்களின் உடம்பைப் பார்த்துக் கொள்வதில் காட்டும் அக்கறையில் ஒரு துளியைக் கூட, விக்ரமனும் நியதியும் தங்கள் உடம்பின் மீது காட்டியதில்லை. அந்த அக்கறையின்மை அவர்களை எங்கே கொண்டு செல்லப் போகிறதோ?

 

Author: SudhaSri
Article Title: மழைக்கு ஏங்கிய மாந்தளிரே -10
Source URL: Nectar Novels-https://nectarnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
  • Like
Reactions: kothaisuresh