• ஹாய் மக்களே! நம் Nectar Novels தளத்திற்கு நல்வரவு🙏😍😍 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள் nectarnovels.ss@gmail.com 🩷 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...👇 வேதா விஷால் & அனன்யா🙏💖

மழைக்கு ஏங்கிய மாந்தளிரே -9

SudhaSri

Administrator
Staff member
Jun 16, 2024
538
51
43
india

மழைக்கு ஏங்கிய மாந்தளிரே — அத்தியாயம் 9​

“குழலினிது யாழினிது என்ப தம்மக்கள்
மழலைச்சொல் கேளா தவர்.”


மாதவன் வீட்டில் அன்று திருவிழாக் கோலம். சட்டப்படி நிலா அவர்களின் மகளான பிறகு நடக்கும் முதல் கொண்டாட்டம் அது. அவளது முதல் பிறந்தநாள் விழா. கூடவே, நெருங்கிய சொந்தங்களுக்கும் நட்புகளுக்கும் அவளை அறிமுகம் செய்யும் விழா.

அக்ஷராவும் நிலாவும் சமீபத்தில் மொட்டை அடித்து, சிறு முடியுடன் கூடிய தலையுடன், ஹேர் பேண்ட் உபயத்தில் பூவுடன் காலையிலேயே ஹாலின் நடுவே வந்து நின்றார்கள். ஒரே மாதிரியான பட்டுப் பாவாடை அவர்களை இன்னும் அழகாகக் காட்டியது. காதில் மாமன் போட்ட குட்டி ஜிமிக்கி அடிக்கடி அசைந்து அழகுக்கு அழகு சேர்த்தது. அக்காவின் கையைப் பிடித்தபடி தள்ளாடிக் கொண்டு நின்றாள் நிலா.

அவர்களைக் கண்டதும் குபீரென்று சிரித்து விட்டான் மாதவன்.

“அப்பாஆஆ! சிரிக்காதீங்க!” என்று உதட்டைப் பிதுக்கினாள் அக்ஷரா. அக்கா கத்தியதைப் பார்த்து, ஏனென்று தெரியாமலே தானும் சேர்ந்து கத்தினாள் நிலா.

“சிரிக்காதீங்க மாது” என்று கணவனின் தோளில் தட்டினாள் ஸ்வேதா. “பாவம் பிள்ளைங்க. உங்க வீட்டு வழக்கத்தால தான் இந்தக் கோலம்.”

“நான் அவங்களைப் பார்த்துச் சிரிக்கலை ஸ்வீட்டி. நான் தப்பிச்சதை நினைச்சுச் சிரிக்கிறேன்.” கண்ணில் வழிந்த நீரைத் துடைத்தபடி சொன்னான் மாதவன்.

“அது சரி. உங்க கவலை உங்களுக்கு..”

“பின்னே? ஒத்தைப் பிள்ளைக்கு மொட்டை அடிக்கக் கூடாது, இரண்டு பேரா தான் அடிக்கணும்னு எங்க வீட்டு ரூல். இதுக்கு என்ன காரணமா இருக்கும்னு நினைக்கிற?” மனைவியைப் பார்த்து கண்ணடித்தவனின் குரலில் தெரிந்த விஷமத்தை ஸ்வேதா கண்டுகொண்டாள்.

“உங்க குடும்ப வழக்கம் எனக்கு எப்படி தெரியும்?” எனது நழுவப் பார்த்தவளை அவன் விடவில்லை.

“ஏதாவது கெஸ் பண்ணு.”

“எப்படியும் ஏடாகூடமா எதையாவது சொல்லப் போறீங்க. அதையும் நீங்களே சொல்லிடுங்களேன்.”

“ஏடாகூடமா, நோ ஸ்வீட்டி! நான் ஒரு அப்பாவி. என்னைப் போய் இப்படி சொல்லிட்டியே.. இது நியாயமா..?”

“போதும்.. போதும்.. உங்க நடிப்பு. சட்டுன்னு விஷயத்தை சொல்லுங்க. இல்லேன்னா நான் கிளம்பறேன், நிறைய வேலை இருக்கு.’

“ஓகே.. ஓகே.‌ இதைக் கேளு.. நீயே சொல்லு, அந்த காலத்தில டஜன் கணக்கில வரிசையா பெத்திருப்பாங்க. மொட்டை போட்டா ஊருக்கே விருந்து வைக்கணும். அத்தனைக்கும் தனித்தனியா மொட்டை போட்டு கறி விருந்து வைக்க எவ்வளவு செலவாகும். அதையெல்லாம் சமாளிக்கத் தான் இப்படி ஒரு வழக்கத்தை ஏதோ ஒரு தாத்தா க்ரியேட் பண்ணி வச்சிருக்காரு. எல்லாருக்கும் வசதியா இருந்ததால அதை ஃபேமிலி ரூல் புக்குல சேர்த்துட்டாங்க. எப்படி நம்ம கண்டுபிடிப்பு?”

“ம்.. சகிக்கல..” என்றாலும் ஸ்வேதாவிற்கு அடக்க முடியாமல் சிரிப்பு வந்தது.

“இந்தக் காலத்தில இது எப்படி சாத்தியமாகும்? இரண்டாவது பிள்ளை வர லேட் ஆறது தனி. ஒரு பிள்ளை போதும்னு இருக்கும் போது பழைய ரூல எப்படி ஃபாலோ பண்றது? முதல் பிள்ளையோட சேர்த்து அப்பாவும் மொட்டை அடிக்கணும். நிலா மட்டும் நம்ம வீட்டுக்கு வரலைன்னா.., ஓ மை காட்!”

“அதுவும் நல்லா தான் இருந்திருக்கும்” என்று சிரிப்பை அடக்கிக் கொண்டாள் ஸ்வேதா. “உங்களுக்கும் ஒரு ஹேர் பேண்ட் வாங்கி, மல்லிகைப் பூ நானே வச்சு விட்டிருப்பேன்.”

“அந்தக் கோலத்துல நான் கல்யாண மண்டபத்துல மைக்கைப் பிடிச்சா, அடுத்த நாளே நம்ம க்ளையன்ட்ஸ் எல்லாம் ஓடியிருப்பாங்க.”

“இப்போ யாரு ஓடறாங்க தெரியுமா? மூணு வருஷமா ஆசையா வளர்த்த முடி. ஸ்கூல்ல யாரோ ஒரு ரோஹன் இவளை ‘மொட்டை பாஸ்’னு கூப்பிடறானாம். ஒரு மாசமா ஸ்கூலுக்குக் கிளம்பும் போதெல்லாம் அழுகை” என்று மகளைக் கை காட்டினாள் ஸ்வேதா.

“ரோஹன் கிட்ட சொல்லு அஷூ” என்று மகளைத் தூக்கிக் கொண்டான் மாதவன். “இது சாதாரண மொட்டை இல்லை. குலதெய்வம் கொடுத்த ஸ்பெஷல் ஹேர்கட்னு.”

“அந்த வழக்கத்துக்கு இந்த வீட்டுல பலியான ஒரே ஆள் நான் தான்” என்றபடி காபி டம்ளருடன் உள்ளே வந்தார் புருஷோத்தமன். “இவன் ஒருத்தன் தான் பொறந்தான். ரெண்டாவது வர்ற வழியைக் காணோம். இவனுக்கு மூணு வயசு ஆனதும், பேரன் முடி கண்ணை மறைக்குதுன்னு எங்க அம்மா ஒரே பிடிவாதம். குலதெய்வம் கோயில்ல இவனோட சேர்த்து என்னையும் உட்கார வச்சு மொட்டை அடிச்சுட்டாங்க. அப்போ நான் காலேஜ்ல புது லெக்சரர். அடுத்த நாள் கிளாஸுக்குள்ள நுழைஞ்சா, பின் பெஞ்சுல இருந்து பல்ப் வந்தாச்சுன்னு ஒரு குரல். மூணு மாசம் காலேஜ் முழுக்க எனக்கு அந்தப் பேரு தான்!”

“யாரு தான் இந்த வழக்கத்தைக் கண்டுபிடிச்சாங்களோ” என்று அலுத்துக் கொண்டார் அவர்.

“இது உங்க வீட்டு வழக்கம் தான் சார். எங்க வீட்டுல இருந்து நான் கொண்டு வந்தது இல்லை.” என்று சிரித்தார்.

ஹேமா. ““யெஸ் பாஸ்” என்று உடனே சரணடைந்தார் புருஷோத்தமன். எல்லோரும் சிரித்தார்கள்.

ஒரு மாதத்துக்கு முன்பு, நிலாவின் பதினொன்றாவது மாதத்தில், குடும்பத்தோடு குலதெய்வம் கோயிலுக்குப் போயிருந்தார்கள். தாய்மாமன் முறைப்படி அரவிந்தன் தான் இரண்டு பிள்ளைகளையும் தன் மடியில் உட்கார வைத்துக் கொண்டான். வைஜயந்தியும் குஷியும் அவனோடு வந்திருந்தார்கள். அவன் கொண்டு வந்த தாய்மாமன் சீர்த் தட்டில் இரண்டு பட்டுப் பாவாடைகள், இரண்டு ஜோடி குட்டித் தங்கத் தோடுகள், பழங்கள், பூக்கள்.

கோயில் நாவிதரின் கத்தி தலையில் பட்டதுமே வீறிட்டு அழுதாள் அக்ஷரா. ‘என் முடி! என் முடி!’ என்று அவள் போட்ட சத்தம் கோயில் முழுக்கக் கேட்டது. நிலாவோ, மாமாவின் சட்டைப் பொத்தானைப் பிடித்துக் கொண்டு, தலையில் நடப்பதைப் பற்றிக் கவலையே இல்லாமல் உட்கார்ந்திருந்தாள். காது குத்தும் போது மட்டும் இரண்டு பேரும் சேர்ந்து அழ, ஆளுக்கொரு கற்கண்டுத் துண்டை வாயில் போட்டுச் சமாதானம் செய்தாள் வைஜயந்தி. சந்தனம் பூசிய இரண்டு குட்டித் தலைகளையும் மடியில் வைத்துக் கொண்டு அரவிந்தன் சிரித்த சிரிப்பை, ஸ்வேதா தன் போனில் படம் பிடித்து வைத்திருந்தாள்.

தமயந்தி வரவில்லை. தாமோதரன் மட்டும் தனியாக வந்து, ஒதுங்கி நின்று பார்த்து விட்டுப் போனார்.

இப்போது ஒரே மாதிரியான அந்த இரண்டு குட்டித் தலைகளையும் மாறி மாறிப் பார்த்துக் கொண்டிருந்த ஹேமா மெல்லச் சொன்னார். “வயித்துல சுமந்து பிறந்தாலும் பேத்தி தான். வேற வழியில நம்ம வீடு தேடி வந்தாலும் பேத்தி தான். நம்ம வீட்டு வழக்கத்தை முழுசாக்கினதே இவ தான்.”

“அத்தை, நீங்க இப்படியெல்லாம் பேசினா எனக்கு அழுகை வந்துடும்” என்றாள் ஸ்வேதா.

“நோ நோ! அழுகை செக்மென்ட் இன்னைக்கு ஷெட்யூல்லயே இல்லை!”

வழக்கம் போல மைக் இல்லாமலே, நிலாவின் காலியான பால் பாட்டிலை மைக்காகப் பிடித்துக் கொண்டு ஆங்கர் அவதாரம் எடுத்திருந்தான் மாதவன்.

“ஹலோ இரண்டு மேடமும் கொஞ்சம் சவுண்ட குறைங்க. இன்னைக்கு இந்த வீட்டுல நான் சொல்றது தான் சட்டம்!”

“இன்னைக்கு ஒரு நாள் மட்டும்” என்றார் ஹேமா.

“அதுவும் சாப்பாடு வர்ற வரைக்கும் தான்” என்று சேர்த்துக் கொண்டாள் ஸ்வேதா.

மனைவியையும் அம்மாவையும் கவனிக்காதது போலப் பாவனை செய்தவன், பால் பாட்டிலை உயர்த்தினான். “லேடீஸ் அண்ட் ஜென்டில்மென்! இன்னைக்கு ப்ரோக்ராம் ஷெட்யூல்! ஒண்ணு, நம்ம வி.ஐ.பியோட அஃபீஷியல் இன்ட்ரடக்ஷன்! இரண்டு, கேக் கட்டிங்! மூணு, சாப்பாடு!” என்றவன், ஏதோ ரகசியம் சொல்வது போலக் குரலைத் தாழ்த்தினான். “இதுல மூணாவது தான் ரொம்ப முக்கியம். ஏன்னா முதல் இரண்டுக்கும் வர்றவங்க எல்லாரும், உண்மையில மூணாவதுக்காகத் தான் வர்றாங்க!”

“எனக்கு கேக் தான் பிடிக்கும்!” என்று கத்தினாள் அக்ஷரா.

★★★★★

மாலையில் வீடு நிறைந்தது. அரவிந்தனும் வைஜயந்தியும் குட்டி குஷியுடன் முதலில் வந்தார்கள். அடுத்து தேவராஜனும் அருந்ததியும் விக்ரமனோடு வந்து இறங்கினார்கள். நியதி ஹாஸ்பிடலில் இருந்து நேராக வருவதாகச் சொல்லியிருந்தாள். ஒரு பெரிய பரிசுப் பையுடன் வாசுதேவனும் சுகந்தாவும் வந்து சேர்ந்தார்கள். அர்ஜுனும் ஆஷாவும், ஸ்வேதாவின் கல்லூரித் தோழிகள் சிலரும், இரு வீட்டுச் சொந்தங்களும் வந்து சேர, ஹால் களை கட்டியது. ஆதித்யாவின் கையைப் பிடித்தபடி, புது ஸ்கார்ஃபுடன் மெதுவாக உள்ளே நுழைந்தாள் ஸ்ரேயா. ஆடைக்குள் மறைந்திருந்த சர்ஜரியின் தழும்பு யார் கண்ணிலும் படவில்லை. ஆனால் அவள் நடையில் ஒரு நிமிர்வு தெரிந்தது.

நிலாவின் கழுத்தில் ஒரு தங்கச் சங்கிலியை அணிவித்தார் அருந்ததி. “என் செல்லக் குட்டி! பாட்டியை ஞாபகம் இருக்கா?” என்று அவர் கொஞ்ச, அவர் காதில் மின்னிய வைரத்தோடை பிடித்து இழுத்துத் தன் பதிலைச் சொன்னாள் நிலா.

அக்ஷராவுக்கென்றே ஒரு பெரிய பெட்டியைத் தூக்கிக் கொண்டு வந்திருந்தான் அர்ஜுன். உள்ளே ஒரு பிங்க் நிற பார்பி கிச்சன் செட். “பிறந்த நாள் தங்கச்சிக்குன்னா, அக்காவுக்குக் கிஃப்ட் இல்லாம இருக்கலாமா?”

“அர்ஜுன், வீடு ஏற்கனவே டாய் ஷோரூம் மாதிரி இருக்கு!” என்று அலறினாள் ஸ்வேதா.

“அப்போ இன்னொரு பிராஞ்ச் திறந்துடலாம்” என்று கண்ணடித்தான் அவன்.

தாமோதரனோடு கடைசியாக உள்ளே நுழைந்தார் தமயந்தி. ஒரு கடமையை முடிக்க வந்தவரைப் போல சோஃபாவின் நுனியில் அமர்ந்தவரின் பார்வை, பேத்திகள் இருவரின் தலையிலும் போய் நின்றது.

“பார்த்தீங்களா இந்தக் கோலத்தை?” என்று கணவனின் பக்கம் சாய்ந்து முணுமுணுத்தார் அவர். “அஷூவுக்குத் தோளைத் தாண்டி வளர்ந்திருந்த முடி. ஒத்தையா மொட்டை அடிக்கக் கூடாதாம், ரெண்டு பேரா தான் அடிக்கணுமாம். இன்னொரு பிள்ளை வரலைன்னா அப்பனையும் கூட உட்கார வச்சு அடிப்பாங்களாம். இப்படி ஒரு வழக்கத்தை நான் கேள்விப்பட்டதே இல்லை.”

“தமா, அடக்கி வாசி. சம்பந்தி வீட்டு வழக்கம் அது.”

“நான் என்ன தப்பா சொல்லிட்டேன்? என் பையன் மடியில வச்சுத் தான் மொட்டை அடிச்சாங்க. அதுக்குக் கூட என்னை யாரும் கூப்பிடலை.”

“கூப்பிட்டாங்க. நீ தான் வரலை” என்றார் தாமோதரன், முகத்தில் எந்த மாற்றமும் இல்லாமல்.

அதற்குப் பதில் சொல்லாமல் முகத்தைத் திருப்பிக் கொண்டார் தமயந்தி.

ஸ்ரேயாவையும் ஆதித்யாவையும் பார்த்ததும் அருகில் வந்தான் விக்ரமன். “வாங்க. எப்படி இருக்கீங்க?”

“நல்லா இருக்கேன் விக்ரம்.” ஒரு நொடி தயங்கிய ஸ்ரேயா, அவனுக்கு மட்டும் கேட்கும்படி குரலைத் தாழ்த்தினாள். “அடுத்த ட்ரீட்மெண்ட்…”

“அதை அடுத்த வாரம் ஓபிடில நிதானமா பேசலாம்” என்று புன்னகைத்தான் அவன். “இன்னைக்கு நீங்க நிலாவோட சித்தி மட்டும் தான்.”

“லேடீஸ் அண்ட் ஜென்டில்மென்!” பால் பாட்டில் மைக் மீண்டும் களத்தில் இறங்கியது. நிலாவைத் தூக்கி எல்லோருக்கும் முன்னால் நிறுத்தினான் மாதவன். “ஐட்டம் நம்பர் ஒண்ணு! இவங்க தான் மிஸ் நிலா மாதவன். எங்க வீட்டோட இரண்டாவது இளவரசி. இன்னைக்கு அஃபீஷியலா உங்க எல்லாருக்கும் அறிமுகம் ஆகறாங்க!”

அப்பாவின் கையில் இருந்தபடி எல்லோரையும் பார்த்துத் தன் குட்டிக் கையை ஆட்டினாள் நிலா. கைதட்டல் எழுந்தது.

அந்தக் கைதட்டலுக்கு நடுவிலும், ஹாலின் ஓரத்தில் உட்கார்ந்திருந்த தூரத்துச் சொந்தக்காரப் பெண்மணிகள் இருவரின் முணுமுணுப்பு தெளிவாகவே கேட்டது.

“யாரு பெத்த புள்ளையோ, எந்த ஊரோ… அதுக்கு இவ்வளவு தடபுடலா?”

“பிறந்த நாள்னு கொண்டாடறாங்களே, அந்தத் தேதியே நிஜமான்னு யாருக்குத் தெரியும்?”

அந்த வார்த்தைகள் மாதவனின் காதிலும் ஹேமாவின் காதிலும் விழாமல் இல்லை. ஆனால் இருவரின் முகத்திலும் புன்னகை துளி கூடக் குறையவில்லை. நிலாவின் கையை ஆட்டி எல்லோருக்கும் ‘ஹாய்’ சொல்ல வைத்துக் கொண்டிருந்தான் மாதவன்.

தமயந்தியின் காதிலும் அது விழுந்தது. அவர் வாய் திறக்கவில்லை. ஆனால் மகளை நோக்கித் திரும்பிய அவர் கண்கள் தெளிவாகப் பேசின. ‘பாத்தியா? இது ஆரம்பம் தான். இனிமே இப்படி நிறைய நடக்கும்.’

அம்மாவின் பார்வையை ஒரு நொடி சந்தித்தாள் ஸ்வேதா. பிறகு மாதவனின் கையிலிருந்த நிலாவை வாங்கி, அந்தக் குட்டித் தலையில் ஒரு முத்தம் வைத்தாள். அதற்கு மேல் அவள் எதுவும் சொல்லவில்லை.

நியதி வந்த பிறகு தான் கேக் வெட்ட வேண்டும் என்று ஸ்வேதா பிடிவாதமாக இருந்தாள். காத்திருந்த அந்த அரை மணி நேரம், சோஃபாவில் அமர்ந்து நிலாவையே கூர்ந்து பார்த்துக் கொண்டிருந்தார் தேவராஜன். பிறகு மெதுவாக ஆரம்பித்தார். “ஸ்வேதா, பாப்பா ராத்திரி எத்தனை மணிக்குத் தூங்கறா?”

“அதை ஏன் கேட்கறீங்க அங்கிள். பன்னிரண்டு மணி வரைக்கும் அவளுக்குக் கச்சேரி தான்.”

“பன்னிரண்டு மணியா?” நிமிர்ந்து உட்கார்ந்தார் தேவராஜன். “பேபீஸுக்கும் ஸ்லீப் ஹைஜீன் வேணும்மா. ஏழு மணிக்கே லைட்டை டிம் பண்ணணும். மொபைல் ஸ்க்ரீன் கண்ணுலயே படக் கூடாது. அப்புறம்…”

அதற்கு மேல் அவரைப் பேச விடவில்லை மாதவன். சட்டென்று அவர் முன்னால் வந்து நின்று இரு கைகளையும் கூப்பினான். “அங்கிள், தயவு செஞ்சு இன்னைக்கு லீவ் விடுங்க!” என்று கெஞ்சியபடி அவர் காலில் விழப் போவது போலக் குனிந்தான்.

“டேய், டேய்! என்னடா பண்றே?” என்று சிரித்தபடி காலை இழுத்துக் கொண்டார் தேவராஜன்.

“ஆண்டவா!” என்று நெற்றியில் அடித்துக் கொண்டார் அருந்ததி. “எந்த வீட்டுக்குப் போனாலும் இவருக்கு இதே பேச்சு தான். போன வாரம் பெருமாள் கோயில்ல, விடியக்காலையில நாலு மணிக்கு எழுந்திருக்கிற பட்டர் கிட்டயே ஸ்லீப் க்ளாஸ் எடுத்தார்.”

“நாலு மணிக்கு எழுந்தா ராத்திரி ஒன்பது மணிக்காவது தூங்கணும்னு தானே சொன்னேன்? அதுல என்ன தப்பு?”

“தப்பே இல்லை ராஜ். ஆனா அவர் உங்க கிட்ட கேட்டது பிரசாதம் வேணுமான்னு மட்டும் தான்.”

எல்லோரும் சிரிக்க, ஸ்வேதாவின் மடியிலிருந்து எக்கி தேவராஜனின் மூக்கைப் பிடித்து இழுத்துச் சிரித்தாள் நிலா. அந்த நொடியே தன் தோல்வியை ஒப்புக் கொண்டார் அந்த ஸ்லீப் டாக்டர்.

அதே நேரத்தில் அவசரமாக உள்ளே வந்தாள் நியதி.

“ஸாரி! ஸாரி! ஒரு டெலிவரி கேஸ் இழுத்துடுச்சு.”

“சரியான நேரத்துக்குத் தான் வந்திருக்க. இப்போ தான் கேக் வெட்டப் போறோம்” என்றார் ஹேமா.

“மெழுகுவர்த்தியை ஊதும் உரிமையை யாருக்கும் விட்டுக் கொடுக்கத் தயாராக இல்லை அக்ஷரா. நிலாவின் குட்டிக் கையைத் தன் கையோடு சேர்த்துக் கத்தியைப் பிடித்தான் மாதவன். கேக் வெட்டப்பட்டதும், அதிலிருந்து ஒரு கைப்பிடியை அள்ளி அப்பாவின் முகத்தில் அப்பினாள் நிலா. ‘ஹேப்பி பர்த்டே’ பாட்டு சிரிப்பில் கரைந்து போனது.

கூட்டம் கொஞ்சம் கலைந்த போது, நிலாவின் அருகே வந்து நின்றாள் ஸ்ரேயா. அவளைப் பார்த்ததும் நிலா கைகளை நீட்டினாள். அந்தப் பிஞ்சுக் கையை மெல்ல வருடி விட்டுப் பின்னால் நகர்ந்தாள் ஸ்ரேயா. அவள் தோளில் தன் கையை வைத்துக் கொண்டான் ஆதித்யா.

அடுத்து நியதியைப் பார்த்துச் சிரித்தாள் நிலா. மெதுவாகக் குழந்தையைத் தன் கைகளில் தூக்கிக் கொண்டாள் நியதி. பாலும் மஞ்சளும் கலந்த அந்த வாசனை. ஒரு நொடி கண்களை மூடிக் கொண்டாள் அவள். ஹாஸ்பிடலில் ஆயிரக்கணக்கான குழந்தைகளைப் பிறக்க வைத்தவள் தான். ஆனால் இன்று ஏதோ ஒரு வித்தியாசமான உணர்வு.

“அடுத்தது நீங்க தான் அண்ணி” என்று மெதுவாகச் சிரித்தாள் வைஜயந்தி.

“ம்ம்” என்று கண்களை எட்டாத ஒரு புன்னகையுடன் தலை நிமிர்ந்தாள் நியதி.

சுகந்தா, மகளின் முகத்தில் வந்து போன ஏக்கத்தை ஒரே நொடியில் கண்டுபிடித்து விட்டார். எதற்காக இந்த ஏக்கம் என்று புரியவில்லை. விக்ரமனின் பார்வையும் மனைவியைக் கண்டு கொண்டது. நியதியின் அருகில் வந்து குழந்தையை வருடியபடி அவள் காதருகில் மெல்லச் சொன்னான்.

“நமக்கும் முதல்ல பொண்ணு தான் வேணும் நிதி.”

நியதி தலையசைத்தாள். அவள் கண்கள் மட்டும் நிலாவிடமிருந்து விலகவில்லை.

★★★★★

இரவு எட்டு மணிக்கு விருந்தினர்கள் ஒவ்வொருவராகக் கிளம்பிக் கொண்டிருந்தார்கள். வாசலில் செருப்பை மாட்டிக் கொண்டிருந்த தமயந்தி, திரும்பி வந்து ஒரு சின்ன வெல்வெட் பெட்டியை ஸ்வேதாவின் கையில் திணித்தார்.

“பிறந்த நாளுக்கு வெறுங்கையோட வர முடியுமா?”

திறந்து பார்த்தாள் ஸ்வேதா. உள்ளே ஒரு ஜோடி சின்ன வெள்ளிக் கொலுசுகள். சிறு வயதிலிருந்து அம்மா எப்போதும் நகை வாங்கும் அதே கடையின் பெட்டி.

அங்கேயே உட்கார்ந்து நிலாவின் கணுக்கால்களில் அவற்றை மாட்டினாள் அவள். ஒரு நொடி குனிந்து பார்த்தார் தமயந்தி.

“கொஞ்சம் லூஸா தான் இருக்கும். அப்போ தான் நிறைய நாள் போட முடியும்” என்று முணுமுணுத்தவர், யார் முகத்தையும் பார்க்காமல் காரை நோக்கி நடந்தார். அவர் பின்னால் நடந்த தாமோதரனின் உதடுகளில் ஒரு மெல்லிய சிரிப்பு.

கொலுசு மாட்டிய கால்களை உதைத்து உதைத்துச் சிரித்தாள் நிலா. மெல்லிய சலங்கை ஒலி எழுந்தது. எங்கோ ஒரு மனதின் மூடிய கதவை மெல்லத் தட்டுவது போல இருந்தது அந்த ஒலி.

மாதவனும் ஸ்வேதாவும் ஒருவர் முகத்தை பார்த்துக் கொண்டார்கள். இது ஒரு தொடக்கம் என்பது இருவருக்குமே புரிந்தது.
 

Author: SudhaSri
Article Title: மழைக்கு ஏங்கிய மாந்தளிரே -9
Source URL: Nectar Novels-https://nectarnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
  • Love
Reactions: Goms

Goms

Member
Apr 28, 2025
98
15
18
Chennai
ஒரு வருஷத்துக்கு அப்புறம் ஒரு சின்ன கொலுசு சொல்லிடுச்சு தமயந்தியின் மாற்றத்தை 😍 ஸ்வேதா மாதவன் சூப்பர் 😍
நியதியின் நிலை என்ன??🤔