• ஹாய் மக்களே! நம் Nectar Novels தளத்திற்கு நல்வரவு🙏😍😍 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள் nectarnovels.ss@gmail.com 🩷 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...👇 வேதா விஷால் & அனன்யா🙏💖

45 - கோழிக்கறி குழம்பு - ராமலட்சுமி சரவணன்

VedhaVishal

Administrator
Staff member
Jun 17, 2024
87
335
53
Chennai
கோழிக்கறி குழம்பு

“இந்த லீவுக்கு பிள்ளைங்களை கூட்டிட்டு ஊருக்கு போயிட்டு வா” - சொன்ன கணவனிடம் முகத்தை தூக்கினாள் சுந்தரி.

“அங்கெல்லாம் போக முடியாதுங்க. ஒரே வெயில். பயங்கர வெக்கையா இருக்கும். போதாததுக்கு ரெண்டு நேரம் கரண்ட் கட் பண்ணுவான். நடுல சட்டவுன் வேற பண்ணுவான். குடிக்கிற தண்ணி உப்பா இருக்கும். அடுப்படில நிக்க முடியாது. பயங்கர ஹீட்டா இருக்கும். எத்தனை வாட்டி குளிச்சாலும் வேர்க்கும். நான் போக மாட்டேன். வேணா நீங்க போயிட்டு வாங்க” என அடுக்கினாள் அவள்.

“எது? நானா? நீ இல்லாமலா?” சிரித்தான் அவள் கணவன் முருகன். அவளும் சேர்ந்து சிரித்தாள்.

இதில் சிரிக்க என்ன இருக்கிறது என்றால் நாற்பத்தைந்து வயது சுந்தரிக்கு இருந்தது. அவள் கணவனுக்கும் தான். ஏனெனில் அவள் போக மறுப்பது தன் கணவன் ஊருக்கு அல்ல. அவளின் சொந்த ஊருக்கு.

சுந்தரி என்பது அவள் பிறந்த காலத்தில்…காலத்திலும் பிரபலமான பெயர்.

“நல்ல ஊரு உங்க ஊரு” மனைவிக்கு தன் ஊர் பிடித்து விட்டதில் சந்தோசமாக சொன்னவன் வேலைக்குக் கிளம்பிவிட்டான்.

தானே சிரித்துக் கொண்டே சுந்தரி தன் எட்டோ ஒன்பதோ - அந்த வயதுக்குப் போனாள். அப்போதெல்லாம் பிள்ளைகள் தெருவே, ஊரே தனியாக சுற்றிக் கொண்டு இருந்தாலும் ஒரு பயமும் இல்லை. ஏன் பயமே இல்லை. பள்ளிக்கூடம் போய்விட்டு வீட்டுக்கு வந்து சாப்பிட்டுவிட்டு தெருவில் விளையாடப் போய்விடுவார்கள். வீட்டுக்கு வர்றியா? இல்லையா? என்று அம்மாக்களும் பாட்டிகளும் போராடித்தான் அவர்களை மீண்டும் வீட்டுக்குள் இழுக்க வேண்டும். சனி, ஞாயிறு விடுமுறைகளில் சொல்லவே வேண்டாம். அதே ஊரில் உள்ள நண்பர்கள் வீடு, உறவின நண்பர்கள் வீடு, அவர்கள் வீட்டு தோட்டம், ஊரில் உள்ள செடி கொடிகள், மரம் மட்டைகள், புதிதாக கட்டப்படும் வீடுகளின் கட்டுமான பணிகள், அரிதாக சில வீடுகளில் வளர்க்கும் கிளிகள் ( அப்போது கிளி வளர்க்க தடை கிடையாது ) புறாக்கள்..ம்! அவர்கள் அதிசயமாக வேடிக்கை பார்க்காத விஷயங்களே இல்லை. இப்போது போல சில வக்கிரர்களின் அதிர்ச்சிகள் எதுவும் அப்போதும் அவர்கள் ஊரில் இல்லாததால் குழந்தைகளை வெளியில் விளையாட விடுவதில் ஒரு கவலையும் இல்லை பெற்றோருக்கு.

இப்போது வேலைக்கு போகும் சுந்தரி பிள்ளைகளை பள்ளி தவிர வெளியே விடுவதில்லை. பள்ளிக்கும் பிள்ளைகளை பேருந்தில் போகச் சொன்ன அவள் கணவரிடம் கெஞ்சி கூத்தாடி அவரையே கொண்டுவிட வைத்து இருந்தாள்.

அந்த தொன்னூறுகளில் மிடி உடை சுந்தரி குட்டியின் ஊருக்கு வந்த புதிது. பெட்டிக்கோட் போட்டு சட்டையும் மிடியும் அணிந்து இவள் தெருவில் விளையாடிக் கொண்டு இருக்கும் போது அம்மா வந்து வீட்டுக்கு வா என அடம் பிடிப்பார். இவள் கெஞ்சல் கொஞ்சல்களுக்கு செவி சாய்க்காமல் அவர் இவளை அழைத்துச் செல்ல ஒற்றைகாலில் நிற்பார். “வர்றியா? இல்லையா?” என இவள் பாவாடையை பிடித்து இழுப்பார். மிடி அணியும் நாட்களில் அப்படி அம்மா மிடியை இழுத்தால் கழற்றி கொடுத்துவிட்டு அங்கிருந்து ஓடிவிடுவாள். இப்போது ஏதோ நகைச்சுவையில் அப்படி வந்தது பார்த்ததும் அதுதான் நினைவு வந்தது சுந்தரிக்கு.

இப்போது வேலைக்கும் வெளியேயும் புடவை மட்டும் தான். வீட்டில் பாரம்பரியமான நைட்டி தான் எப்போதும்.

அது மட்டுமா? அந்த காலத்தில் வாடகை சைக்கிள் ஓட்டாமல் சிறுபிராயம் நிறைவு பெறாதே? வாடகை சைக்கிளில் ஊரையே ஒரு மணி நேரத்தில் ஒரு ரூபாயில் சுற்றியதும் சுந்தரிக்கு நினைவு வந்து sili அதே ஊரில் வயதுக்கு வந்த பின் வீட்டை விட்டு வெளியே விடவில்லை. வளரிளம் பருவ சுந்தரி சைக்கிளை மறந்துவிட்டாள்.

இப்போதோ சைக்கிள், பைக், ஸ்கூட்டி, கார் எல்லாம் வீட்டில் இருந்தும் ஒன்றும் ஓட்டத் தெரியாமல் பேருந்தில் வேலைக்கு போய் வருகிறாள். ஓட்ட விடவில்லை உடலில் இருந்த வியாதிகளும் அவை தந்த பயமும்.

சுந்தரி வீட்டு வேலைகளை முடித்துவிட்டு ரீல்ஸ் பார்க்க ஆரம்பித்தாள். அவள் இன்னொரு மனம் பிள்ளைக் கால இனிய நினைவுகளை தொடர்ந்தது.

சுந்தரிக்கு ஒரு அக்கா உண்டு. சுமதி. இவளை விட இரண்டு வயது அதிகம். பொறுப்பும் அதிகம். புத்திசாலி. சீர்மையும் திறமையும் உடையவள். அவள் ஒன்று செய்தால் அது தப்பாக இருக்காது என்பது போக அது சரியாதான் இருக்கும் என்று அடித்துக் கூறும் அளவு சிறப்பானவள். அதில் சுந்தரிக்கு கொஞ்சம் எரிச்சல்தான்.

இப்போது அதே அக்காவிடம் தான் வேலை, குடும்பம் உள்ளிட்ட அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு கேட்டுக் கொண்டு இருக்கிறாள் சுந்தரி. அவை சரியாகவும் இருக்கும்.

ஆனால் அப்போது அப்படி நினைக்க மாட்டாள் சுந்தரி குட்டி. இவர்கள் வீட்டில் புது புடவை வாங்கினால் முதலில் சுமதிதான் கட்டுவாள். கட்ட சொல்லுவார் இவர்களின் அம்மா. எதைச் செய்தாலும் சுமதிக்கே இவர்கள் வீட்டில் முதலிடம். முக்கியமாக இவர்கள் அப்பாவை ‘சுமதியப்பா’ என்றுதான் இவர்கள் அம்மாவே குறிப்பிடுவார். அதில் ஏக கடுப்பு சுந்தரி குட்டிக்கு.

“அப்போ என் அப்பா யாரு?” என்று ஒரு விடுமுறை நாளில் ஒருமூச்சு ஆர்ப்பாட்டம் செய்து மணிக்கணக்கில் வீட்டினரை அல்லாட வைத்த பெருமை சுந்தரி குட்டியை சாரும். இவளின் அடாவடியை கேட்டு சிரித்துக் கொண்டே இருந்தார் இவர்கள் அன்னை. அதில் இன்னும் கடுப்பாகி கத்திக் கொண்டிருந்தவள் வேலைக்கு போய்விட்டு வீட்டுக்குள் நுழைந்த அப்பாவைக் கண்டு முகத்தை சிலுப்பினாலும் உள்ளுக்குள் பயந்தாள்.

இவள் பிரச்னையைக் கேட்டுவிட்டு அப்பாவும் “அடக் கழுத” என்றபடி சிரித்துக் கொண்டே மீண்டும் வேலையாக வெளியே போய்விட்டார்.

அதெல்லாம் ஒரு இனிய காலம். வீட்டின் இளவரசி தானும் தான் என்று அறியாத, அதே நேரத்தில் வீட்டில் நன்றாக சொகுசும் அனுபவித்த காலம். பெற்ற குழந்தைகள் அனைவரையும் குலசாமி எனக் கொண்டாட்டிய பெற்றவர்களை பெற்றவர்கள் தாங்கள் என்று அறியாத காலம். வீட்டில் அம்மா ஒரு வேலை சொன்னால் காதிலே விழாத மாதிரி இருந்து அவரை ஆத்திரப்பட வைத்த காலம்.

அதையே அவளின் பிள்ளைகளும் செய்ய நொந்து நைந்து போன காலம் இப்போது.

அதெல்லாம் இருக்கட்டும். எல்லாம் சரியாக செய்யும் சுமதி அக்கா ஒரு பிழைக்கு உடந்தையாக இருந்தாள் என்பதில் ஏக மகிழ்ச்சி சுந்தரி குட்டிக்கு.

அது என்னவென்றால்….

சுந்தரியின் வீட்டில் அப்போது கோழிகள் வளர்த்தார்கள். மூன்று கோழிகள் என்று நினைவு. அதை இவர்கள் பாட்டியும் சுமதி அக்காவும் பராமரித்து வந்தனர். ஒருநாள் அதில் ஒரு கோழி ஊர் மேயப் போனது. அக்கம் பக்கத்தினர், “உங்க கோழி எங்க வீட்டுக்குள்ள ஓடுது. புடிங்க சீக்கிரம்” என இவர்கள் பாட்டிக்கு வேப்பிலை அடித்தார்கள். உடனே மிஷன் கோழி பிடித்தல் ஆரம்பம் ஆனது.

சோல்ஜர்ஸ் பாட்டியும் அக்காவும் கோழியை வீடு வீடாக தூரத்தி அவர்கள் வீட்டுப்பக்கம் மடை மாற்றினர். பாவப்பட்ட கோழி கொல்லைப்புறமாக வீட்டுக்குள் வர முயற்சி செய்தது. அதை அடைக்க வேண்டுமே? இப்படியே மீண்டும் ஓடி விட்டால்?

சோல்ஜர் பாட்டி, “நான் பொறவாச (புறவாசல்) கதவுகிட்ட வீட்டுக்குள்ள நிக்கேன். நீ கோழியை பொறவாசல்ல வெளியே இருந்து வீட்டுக்குள்ள தொரத்து. கோழி உள்ளே வந்ததும் நான் கதவை மூடுறேன். கோழியை புடிச்சிட்டு உனக்கு கதவு திறந்து விடுறேன்” என்பதான தன் திட்டத்தை அக்காவிடம் விவரித்தார். இதெல்லாம் விளையாடிவிட்டு தண்ணீர் குடிக்க வந்த சுந்தரி கேட்டும் கேட்காமலும் கொஞ்ச நேரம் நின்று விட்டு பண்டம் எடுத்து சாப்பிட போய் விட்டாள். இவர்கள் பேசுவது அரைகுறையாக காதில் விழுந்தது.

புரிகிறதா? எதற்கு சுமதிக்கு இவ்வளவு மதிப்பு என்று. கொஞ்சமும் வீட்டின் மேல் அக்கறை இல்லாமல் ஊரை சுற்றிவிட்டு மதிப்பு வேறு கேட்கும் இந்த சுந்தரிக்கு.

கோழி பிடி வீரர்கள் களத்தில் தீவிரமாக பணியாற்றியதில் கோழி வீட்டுக்குள் செல்ல புறவாசல் கதவருகில் வந்து எட்டிப் பார்த்தது. அதன் தலை தெரிந்ததும் பாட்டி கதவை வீட்டுக்கு உட்பக்கம் திறக்க, சுமதி வெளிப்பக்கம் இருந்து அதே கதவை இழுத்து மூட, ( கோழியை வீட்டுக்குள் தள்ளி கதவை சாட்றுகிறாளாம்) இவர்களின் அடிபிடியில் கோழியின் தலை கதவிடுக்கில் மாட்டி அது பரலோகம் போனது.

மிஷன் சக்ஸஸ்! கோழி பிடிப்பட்டது. சடலமாக.

செத்த கோழியை என்ன செய்வது? அன்று வெள்ளிக் கிழமையாக இருந்தும் கோழிக் குழம்பு தான். இவர்கள் போராட்டத்தை பார்த்துக் கொண்டு ‘பே’ என நின்றாள் சுந்தரி. ஆனால் கோழியை குழம்பு வைப்பார்கள் என நினைக்கவில்லை அவள். அதுவும் பாவம் தானே? பிழைத்து கொள்ள வேண்டும் என்றுதான் நினைத்திருந்தாள் சுந்தரி குட்டி.

கோழியை சுத்தம் செய்வதும் பாட்டியும் சுமதி அக்காவும் தான். அன்று கோழி செத்தது குறித்து இருவருக்கும் சண்டை. துண்டுகளாக்கப்பட்ட கோழியை வைத்துக் கொண்டு ‘உன்னால்தான் கோழி செத்துச்சு’ என்று இருவரும் மாறி மாறி சண்டையிட அம்மா “கறியை கழுவியாச்சா? இஞ்சி பூண்டு தாளிச்சாச்சு” என்றார்.

காராசேவை ‘சபக் சபக்’ என்று சவைத்துக் கொண்டு கோழிக் குழம்புக்கு காத்திருந்தாள் சுந்தரி குட்டி. கொன்றால் பாவம் தின்றால் போச்சுதானே? எப்படியோ போய் சேர்ந்துவிட்டது. அதை அம்மா குழம்பு வைத்தால் சாப்பிடுவதை விட என்ன வேலை?

அம்மா படுத்திய அவசரத்தில் கோழியை தூக்கி கொடுத்துவிட்டாள் பத்து வயது சுமதி.

அம்மாவும் கோழியை இஞ்சி பூண்டில் போட்டு வதக்க செம வாசனை. குழம்பு தயாரானதும் முதல் ஆளாக அம்மா வைத்த சாப்பாட்டு தட்டின் முன் அமர்ந்து சாப்பிட ஆரம்பித்த சுந்தரி குட்டி சொக்கியே போனாள்.

“இன்னிக்குதாம்மா கோழிக் குழம்பே சூப்பரா இருக்கு”

மாய்ந்து மாய்ந்து சாப்பிட்டாள் குட்டி.

“அப்பாவுக்கும் தம்பிக்கும் வை” என அம்மா இவள் கையை பிடித்து தடுக்கும் அளவு கோழிகறியை வெட்டினாள் அவள்.

“அப்பாவுக்கும் தம்பிக்குமா? அப்போ அக்கா? பாட்டி?”

அம்மா அசைவம் சாப்பிடுவதில்லை என்பதால் அவரைக் கேட்கவில்லை. அவருக்கு ஏதாவது மரக்கறி சமைத்து இருப்பார். அப்பாவும் அசைவத்துடன் மரக்கறியும் கேட்பார்.

இவள் இங்கே கேட்க, சுமதி அக்கா திருட்டு முழி முழித்துக் கொண்டு குறும்பு சிரிப்புடன் இவள் சாப்பிடுவதை பார்த்துக் கொண்டே நின்றாள்

“எனக்கு வேண்டாம்மா” அவசர அவசரமாக சொன்னாள் சுமதி.

“ஏன்?”

“வேண்டாம்னா வேண்டாம்” இன்னும் அவசர சிரிப்புடன் சொன்னாள் சுமதி.

“அப்போ உம் பங்கும் எனக்குதான்” சுந்தரி சந்தோசமாக சாப்பிட்டாள்.

“சாப்பிடு சாப்பிடு”

சுமதியின் குரலில் நக்கல் இருந்ததோ? சுந்தரி அதை கவனிக்கவில்லை. சாப்பாட்டில் கவனமாக இருந்தாள்.

அதன் பின்னர் சில நாட்கள் கழித்து, அம்மா ஒரு ஞாயிறில் கோழிக் குழம்பு செய்து இருந்தார். இது கடையில் வாங்கிய கோழி.

“அம்மா, இந்தக் கொழம்பு அன்னிக்கு மாதிரி இல்லியே? அன்னிக்குதான் சூப்பரா இருந்துச்சு” சாப்பிட்டுக் கொண்டே சொன்னாள் சுந்தரி.

“என்னிக்கு?” பரிமாறிக் கொண்டே கேட்டார் அம்மா.

“அதான் அன்னிக்கு நம்ம கோழி செத்துச்சே? அன்னிக்கு வச்சியே? அந்தக் கொழம்பு” அன்றைய குழம்பு நினைவில் இன்றைக்கும் முகம் மலர்ந்தாள் சுந்தரி குட்டி.

“அன்னிக்கா? அன்னைக்கு கோழியை உங்க பாட்டியும் அக்காவும் கழுவறேன்னு கொண்டுட்டு போய் கழுவவே இல்லை. நானும் அப்படியே தாளிச்சிட்டேன். அதான் அம்புட்டு ருசி!” சிரிப்புடன் சொன்னார் அன்னை.

“அதான் அன்னிக்கு அவ சாப்பிடலியா. பாட்டியும் எனக்கு வேண்டாம்னு மரக்கறி சாப்டுச்சா?” அதிர்ந்து போய் கேட்டுக் கொண்டே அப்போது அங்கே உலாத்திய பாட்டியை பார்த்தாள் சுந்தரி.

அவர் இவளை கண்டு கொள்ளாமல் வெற்றிலையை உரலில் இடித்துக் கொண்டு இருந்தார்.

திரும்பி அக்காவைப் பார்க்க, சுமதி நக்கலாக ஆனந்தமாக சிரித்தாள்.

சுந்தரி முகத்தில் ஈ ஆடவில்லை.

இப்போது…

டோன்ட் வாஷ் மீ பிஃபோர் குக்கிங் - என உரித்த முழுக்கோழி சொல்வதான ரீல்சை பார்த்துக் கொண்டிருந்த சுந்தரி பக்கென்று சிரித்துவிட்டாள்.

ம்! அவள் அக்கா அப்போதும் சரியாகத்தான் செய்திருக்கிறாள் போல.
 

Author: VedhaVishal
Article Title: 45 - கோழிக்கறி குழம்பு - ராமலட்சுமி சரவணன்
Source URL: Nectar Novels-https://nectarnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.