• ஹாய் மக்களே! நம் Nectar Novels தளத்திற்கு நல்வரவு🙏😍😍 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள் nectarnovels.ss@gmail.com 🩷 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...👇 வேதா விஷால் & அனன்யா🙏💖

48. மன்னா... இது ஆண்ட்ராய்டு காலம்! - சாஹித்யா வருண்

SudhaSri

Administrator
Staff member
Jun 16, 2024
452
16
43
india
மன்னா... இது ஆண்ட்ராய்டு காலம்!



நம் கதையின் நாயகன் சந்துரு.. அவனுக்கு வாழ்க்கையில் ரெண்டே விஷயம் தான் முக்கியம்..

ஒண்ணு அவனோட ஐபோன்.. இன்னொன்னு அவனோட அரை லூசுத் தனம்.. அன்னைக்கு ராத்திரி 12 மணி.. ஊரே தூங்கிட்டு இருக்கறப்ப இவன் மட்டும் தெருவுல போயிட்டு இருந்தான்..

காரணம் ராத்திரி 12 மணிக்கு சுடுகாட்டுப் பக்கம் போயி செல்ஃபி எடுத்து போட்டா பத்தாயிரம் பணம் தர்றோம்னு வந்த ஒரு அறிவிப்புல.. இவன் தான் வீராதி வீரனாச்சே.. போட்டோ எடுத்துப் போட்டு அந்த பணத்தை வாங்கி ஊர் சுத்தலாம்னு பிளான் பண்ணி கிளம்பிட்டான்..

சுடுகாட்டுக்குப் போக ஒரு பழைய சிதிலமடைஞ்ச சிவன் கோவிலைக் கடந்து தான் போகணும்.. கோவில்கிட்ட போனதும் வீடியோவை ஆன் பண்ணி "ஹலோ காய்ஸ்.. இப்போ நாம இருக்கறது..." என்று பேச ஆரம்பிச்சு ஒரு அடி எடுத்து வெச்சான்.

டப்புன்னு ஏதோ ஒரு பள்ளத்துக்குள்ள சறுக்கிட்டு போயிட்டே இருக்கான்.. "அய்யோ அம்மா.. என்னைய எவனாவது காப்பாத்துங்கடா.. பத்தாயிரம் பணம் போச்சே" என்று கத்திக்கிட்டே கண்ணை மூடி திறந்தா திடீர்னு ஒரு பெரிய வெளிச்சம்.

கண்ணைச் கசக்கிட்டு மறுபடியும் கண்ணைத் தொறந்து பார்த்தா ஒரு பட்டு மெத்தையில படுத்துருக்கான்.. ஆனா அந்த மெத்தை தரையில கிடக்கு..

என்னடா இதுனு சுத்தி பார்க்கறான்.. பெரிய பெரிய தூண்கள், அதனோட ஓரத்துல கையில வாள் வெச்சு நின்னுருக்கற வீரர்கள், அப்புறம் மேல பார்த்தா ஏதோ சீரியல் செட் மாதிரி ஒரு ராஜ சபை.

பெரிய மீசையோட ஒருத்தர் சிம்மாசனத்துல உட்கார்ந்துருக்காரு.. இவனைப் பார்த்துட்டு "யாரடா இந்த விசித்திரப் பிறவி.? இவன் ஏன் வித்தியாசமாக உடை அணிந்திருக்கிறான்.?" என்று கத்தினார்.

மெதுவாக எழுந்த சந்துரு "யோவ் யாருடா நீங்க.? எந்தப் படத்தோட சூட்டிங் இது.? சுந்தர் சி படமா.? இல்ல நாடகம் ஏதாவது எடுக்கிறீங்களா.?" என்று அவருக்கு மேல் கத்தினான்.

இதில் கோபமுற்று "மன்னாதி மன்னன்.. பராக்கிரமசாலி.. மங்கலநாட்டு மகாராஜா மகாபலி சக்கரவர்த்தியிடமே குரலை உயர்த்துக்கிறாயா.? இவனை இழுத்துச் சென்று கழுவில் ஏற்றுங்கள்.." என்று உத்தரவிட்டார்.

சந்துருவுக்கு மெதுவாக பல்பு எரிய, 'டேய் சந்துரு... நீ எங்கேயோ வந்துட்டடா..இது சூட்டிங் இல்ல.. நிஜமான அரசர் காலம் போல.?' என்று திருதிருவென முழித்தான்.

வீரர்கள் அவனைப் பிடிக்க வர, சரியாக அந்நேரம் அவனுக்கு ஒரு போன் கால் வர, ஐபோன் ரிங்டோன் அலறுது.. கூடவே அந்த பிளாஷ் லைட்டும் மின்னுது.

அவ்வளவுதான் வீரர்கள் "மந்திரவாதி.. இவன் மந்திரவாதி!" என்று அலறியபடி பின்னால் ஓடிட, மன்னரே சிறிது பயந்து சிம்மாசனத்துக்கு பின்னால் மறைந்து நின்றார்.

இப்போது சந்துருவுக்கு ஒரு தைரியம் வந்தது. ஐபோனை வைத்து எப்படியாவது இவர்களை சமாளித்து விடலாம் என்று.

தொண்டையை செருமி "நான் மேலோகத்துல இருந்து வர்ற ஆண்ட்ராய்டு தேவன்.. என் முன்னாடி வாள் வெச்சு நின்னுருக்கறவன் எல்லாம் வீரன் இல்லை.. என்கிட்ட வாள் இல்லாம பேசறவன் தான் பெரிய வீரன்.." என்று ஏதோ பேச வேண்டும் என்பதற்காகவே பேசினான்.

"இவன் என்ன கூறுகிறான்.? நாவசைவில் வராத பெயர்களை கூறுகிறான்.. அப்படியென்றால் உன் கையில் இருக்கும் அந்த மின்னும் பெட்டி என்ன.?"

"இதுவா மன்னா.. இப்போது இதுதான் பிரபஞ்சத்தின் கண்ணாடி.. இதுல உலகம் முழுக்க இருக்கிற வித்தைகளைப் பார்க்கலாம்.. இதோ உங்களுக்கும் காட்டுகிறேன்.. பாருங்கள்.." என்றவன் கேமராவை ஆன் பண்ணி மன்னரின் முகத்தினருகில் வைத்தான்.

அவன் கூறுவது புரியவில்லை என்றாலும் தன் முகத்தை அந்த சின்னப் பெட்டியில பார்த்ததும் "ஆஆஆஆ.. யாரது.? எனக்குள்ளே ஒரு சிறிய மன்னாதி மன்னனா.? இதென்ன மாயாஜாலம்.?" என்று மன்னர் ஆச்சரியப்பட, சந்துருவோ 'ஹஹஹஹ நல்லா சிக்கிக்கிட்டாருடோய்ய் இந்த மொக்கை ராஜா' என்று குதூகலித்தான்.

மன்னர் மகாபலி சக்கரவர்த்தி மெதுவாக சிம்மாசனத்தை விட்டு இறங்கி வந்து சந்துருவின் ஐபோனை ஒரு விசித்திரப் பொருள் போல் பார்த்தார். அவரின் கூரான பார்வையில் சந்துருவுக்கு பயம் மீண்டும் தொற்றிக் கொள்ள, அவரின் பார்வையில் இருந்து தப்பிக்க "மன்னா.. இது வெறும் ஆரம்பம் தான்.. இதுல இன்னும் பல வித்தைகள் இருக்குது.. ஆனால் இதைப் பயன்படுத்த உங்களுக்குத் தகுதி வேண்டுமே.? அந்த தகுதி உங்களிடம் இருக்கா.?" என்று கேட்டான்.

ஆவலாக மன்னரும் "உமக்கு இந்த மங்கல நாட்டின் பொன்னும் பொருளும் வேண்டுமா.? இல்லையென்றால் அந்தப்புரத்து அழகிகளைப் பரிசாகத் தரவா.?" என்று அவன் என்ன கூறினான் என்றே புரியாமல் கேட்டார்.

அதில் எல்லாம் ஆர்வம் இல்லாத இவன் அவசர அவசரமாக "ஐயோ அதெல்லாம் வேண்டாம் மன்னா.. எனக்குத் தேவை ஒரு நல்ல சாப்பாடு தான்.. அதுவும் விதவிதமாக வேணும்.. அப்புறம் உங்கள் அரண்மனையில் ஒரு சார்ஜிங் பாயிண்ட்.. ச்சே அதைய எப்படி சொல்றது.? ஹான் மின்னல் சக்தியைச் சேமிக்கும் வசதி இருக்குதா.?" என்று வினவினான்.

அவன் பேசுவதே அவருக்கு புரியவில்லை. இதில் இவன் வேறு சார்ஜிங் பாயிண்ட் வேணும்னு சொல்றான்.. அந்த காலத்துல யாருடா உனக்கு கரெண்டு வெச்சுருந்தாங்கனு சொன்னாங்க..

அவன் கேட்டது புரியாமல் குழப்பத்துடன் தன் மந்திரி பக்கிரிசாமியை பார்த்தார் மன்னர்.

பக்கிரிசாமி என்பவர் அந்த ஊர் அறிவாளி. அவரிடம் கேட்டு விட்டு தான் அடுத்த வேலைகளையே செய்வார் இந்த மீசைக்கார மன்னர்.

அவரும் யோசிப்பது போல் தன் தாடியைத் தடவிக்கொண்டே "மன்னா இவர் மின்னல் தேவன் என்கிறார்.. நமது கொல்லர் பட்டறையில் நெருப்பு இருக்கிறதல்லவா அதை வைத்து மின்னல் தயாரிக்க கூறவா என்று கேளுங்கள்" என்றார்.

'அடேய் நீங்களே ஒரு பேரை வெச்சுக்கிட்டா எனக்கு என்னடா மரியாதை.? நான் ஆண்ட்ராய்டு தேவன் என்கிறேன்.. இவன் என்னடானா மின்னல் தேவன் என்கிறான்.. அட சும்மா இருங்கடா.. இது மட்டும் அந்த மின்னலுக்கு கேட்டுச்சு ஊரு மொத்தத்தையும் மின்னி மின்னி சாவடிச்சுரும்' என்று புலம்பினான்.

பின்பு "சரி.. அதையை அப்புறம் பார்த்துக்கலாம்.. மன்னா உங்க சபை கலைஞர் ஒருவரை கூப்பிடுங்க.. அவரை வெச்சு நான் ஒரு மேஜிக் காட்டுகிறேன்" என்று கூறிட, "நீங்கள் கூறுவது எமக்கு விளங்கவில்லை.. இப்பொழுது எம்மை என்ன செய்ய கூறுகிறீர்கள்.?" என்று புரியாத பாவனையில் வினவினார் மன்னர்.

'அய்யோடா இவங்க பேசறது எனக்கு தான் புரியல.. ஆனா ஒன்னு இவங்களுக்கு புரியற மாதிரி பேசி பேசி எனக்கு நாவு வெளில வந்துரும் போல.?' என்று நொந்து "மன்னா உங்கள் சபை கலைஞர் ஒருவரை வர சொல்லுங்க.. இல்லை இல்லை இங்கு அழையுங்கள்.. அவரை வைத்து மேஜிக்... அய்யய்யோ இதைய எப்படி சொல்றது.? ஹான் குறளி வித்தை காட்டுகிறேன்.." என்று எப்படியோ விளக்கிக் கூறினான்.

மன்னரும் அரசவை நடன மங்கை ரம்பாவை அழைக்க கூறினார். மன்னரின் கட்டளைக்கிணங்க ரம்பாவும் மேடைக்கு வந்தாள்.

அவளின் அழகிய நடையில் சந்துருவுக்கு ஜொள்ளு ஊற்றினாலும் 'டேய் வேண்டாம்டா வேணாம்.. இந்த புள்ளயை இந்த மீசைக்காரன் தான் வெச்சுருப்பான்.. நமக்கு எதுக்கு வம்பு.?' என்று நினைத்து தலையை உலுக்கியவன் தன் போனை எடுத்து பில்டரை ஆன் செய்தான்.

அதில் டெடி பியர் பில்டரை ஆன் செய்து அவளின் முகத்தினருகில் வைத்திட, திரையில் ரம்பாவின் முகத்திற்குப் பதில் ஒரு கரடிக்குட்டி நடனமாடுவதைப் பார்த்த மன்னர் "அடேங்கப்பா.. பெண்ணைக் கரடியாக மாற்றும் வித்தை தெரிந்தவனா நீ.? தளபதியாரே இவரிடம் ஜாக்கிரதையாக இருங்கள்.. ஒருவேளை உங்களை பன்றியாக மாற்றி விடப் போகிறார்.." என்று கூறி சிரிக்க, சபையே அதிர்ந்தது.

தளபதிக்கு மட்டும் சந்துரு மேல் பயங்கரக் கடுப்பு. "மன்னா இவன் ஏதோ தந்திரம் செய்கிறான். இவனைச் சிறையில் அடைப்பதே முறை.." என்று கத்தினான்.

சந்துருவும் சும்மா இருப்பானா என்ன.? "மிஸ்டர் தளபதி இங்க பாருங்க" என்று கூறி போனில் புலி கர்ஜிக்கும் சத்தத்தை அதிக வால்யூமில் போட்டான். அந்த அமைதியான சபையில் ஸ்பீக்கரில் இருந்து வந்த புலியின் சத்தத்தைக் கேட்டதும் வீரர்கள் அனைவரும் "புலி வருது.. புலி வருது.." என்று பதறினார்கள்.

சிரிப்பை அடக்கிக் கொண்டு சந்துருவோ "மன்னா இது வெறும் சத்தம் தான்.
நான் நினைத்தால் இங்கேயே ஒரு போர்க்களத்தை உருவாக்க முடியும்.." என்று கெத்து காட்டினான்.

மன்னர் தளபதியை முறைத்து விட்டு "மின்னல் தேவரே.. உமது சக்தி அபாரமானது.. உமக்கு என்ன வேண்டும்.? அந்தபுரத்து அழகிகளை வர கூறவா.?" என்று கேட்டார்.

'அய்யய்யே எப்ப பார்த்தாலும் இதுவா.? என் அம்மாவோட சுத்தமான கலப்பிடம் இல்லாத வளர்ப்பு நானு.. எனக்குனு வர்றவளுக்கு உண்மையா இருக்கணும்னு நினைக்கறவன்டா.. என்னைய போய்...?' என்று நொடித்து "எனக்குப் பசிக்குது.. ஏதாவது ஸ்பெஷலா இருக்கா.?" என்று கேட்டான்.

அவன் கூறுவது புரியாமல் மன்னரும் "என்னது.?" என்று கேட்க, "ஹான் அதான் விதவிதமான சாப்பாட்டு வகைகள்.. என்று விவரித்துக் கூறினான்.

உடனே மன்னரும் "மந்திரியாரே மிளகாய் வற்றல் குழம்பையும் முருங்கைக்காய் கூட்டையும் இவருக்கு பரிமாற கூறுங்கள்.. அதன் சுவை இவரின் நாவில் அமர வேண்டும்.." என்று கட்டளையிட்டார்.

இதைக் கேட்டதும் பக்கென்றானது அவனுக்கு.. 'என்ன ஸ்பெஷல்னா மிளகாய் குழம்பா.? அடேய் உங்க ஸ்பெஷலா தீயை தான் வெக்கணும்டா.. இந்த பீட்சா பர்கர் எல்லாம் இல்லையா.? அட்லீஸ்ட் பேல் பூரி, பானி பூரியாச்சும் குடுங்களேன்டா.. இது இல்லைனா என் நாக்கே செத்து போயிரும்..' என்று விடாமல் புலம்பினான்.

பின்பு 'சரி ஏதோ ஒண்ணு சாப்பிட கிடைச்சா போதும்' என்ற ரீதியில் அவன் அமர, பேண்ட் பாக்கெட்டில் ஏதோ குத்தியது. என்னவென்று தொட்டுப் பார்த்தவனின் கண்கள் ஆனந்தத்தில் மின்னியது.

இரவில் பசிக்கும் என்று மேகி மசால் பாக்கெட்டை வாங்கி வைத்திருந்தான்.. இப்போது அது தான் அவனுக்கு கடவுளாக தெரிந்தது.

அந்த மிளகாய் வத்தல் குழம்பில் மேகி மசால் பொடியை தூவிட, "ஏய் என்ன செய்கிறாய்.?" என்று கேட்ட மன்னரிடம் "இப்போ இந்த குழம்பை சாப்பிட்டு பாருங்க.." என்றிட, புரியாது மன்னரும் அவனைப் பார்த்தார்.

தன்னைத் தானே தலையில் தட்டிக் கொண்டு "இப்பொழுது உணவை சாப்பிடுங்கள் மன்னரே.. அமிர்தம் என்றால் என்னவென்று நீவீர் உணர்வீர்.." என்று தூய தமிழில் மொழி பெயர்த்தான்.

'அடேய் மோடி உன்னால தான்டா இவங்ககிட்ட என்னால தமிழ்ல பேசவே முடியல.. இதுல நான் தமிழன்டானு கெத்து காட்டிட்டு இருக்கேன்.. நீயே இவங்ககிட்ட வந்து தான் தமிழை கத்துக்கணும்..

நீ என்னடானா எங்களைய தமிழையே மறக்க வெக்கற நிலைமைல நாட்டை வெச்சுருக்க.? உன்னால தான்டா இங்க நானு இவ்ளோ கஷ்டப்படறேன்.. தமிழ்ல பேசறதே ரொம்ப கஷ்டமா இருக்கு.. இதுல இந்தி திணிப்பு வேற.. ச்சைக் அதெல்லாம் ஒரு நாடா.?' என்று மனதினுள் நினைத்துக் கொண்டான்.

குழம்பைச் சாப்பிட்ட மன்னர் கண்கள் சொருகிப் போனது.

"ஆகா இது என்ன சுவை.? தேவாமிர்தத்தை விடச் சிறப்பாய் இருக்கிறதே.. தேவரே இதன் பெயர் என்ன.? உண்மையில் நீங்கள் தேவன் தான்.." என்றிட, "இதன் பெயர் தான் எம்.எஸ்.ஜி மாயாஜாலம்.. இதை உண்டால் மூளை வேலை செய்யும்.. ஆனால் முடி கொட்டி விடும்" என்றான்.

மன்னர் மகிழ்ச்சியில் "இன்று முதல் நீரே நமது அரசவையின் தலைமைத் தந்திரவாதி.. உமக்கு ஒரு தனி அந்தப்புரம் ஒதுக்கப்படும்.. அதற்கு முன்னால் உன் கைகள் முழுவதும் தங்க காப்பு அணிய வேண்டும் என்றிருக்கிறது.." என்று புல்லரித்தவர் "யார் அங்கே.? இதற்கு ஏற்பாடு செய்யுங்கள்.." என்று உத்தரவும் இட்டார்.

'எதே தங்ககாப்பா.? அதுவும் இந்த மேகி மசாலாவுக்கா.? அடேய் மீசைக்காரனே தங்கம் என்ன விலை விற்குதுனு உனக்கு தெரியுமாடா.? நான் இப்படி தங்ககாப்பு போட்டிருந்தா ஜிஎஸ்டி வரி போட்டே மொத்த தங்கத்தையும் சுருட்டிருவாங்கடா.. எங்க காலத்துல செருப்புக்கு கூட ஜி.எஸ்.டி வரி இருக்குடா.. அதுக கிட்ட இதைய தாரை வார்க்கறதுக்கு நீயே பத்ரமா வெச்சுக்கலாம்..' என்று புலம்பாத குறை தான்.

இருந்தும் 'அப்பாடா நம்ம காலத்துல தான் செட்டிலாக முடியல.. ஒரு வழியா இங்கையாவது செட்டில் ஆவோம்.. ஆனா சார்ஜ் தீர்ந்துட்டா என்ன பண்றது.? இங்க 5G டவர் கூட இல்லையே' என்று கவலைப்பட்டான்.

சந்துருவுக்கு அரண்மனையில் ராஜ மரியாதை கிடைத்தது.. விதவிதமான பழங்கள், பட்டு ஆடைகள் என்று வாழ்க்கையும் ஜாலியாகப் போய்க் கொண்டிருந்தது. ஆனால் அவனது ஐபோன் திரையில் தெரிந்த அந்தச் சிவப்பு நிற 1% பேட்டரி குறியீடு தான் அவனுக்கு எமனாகத் தெரிந்தது.

'சார்ஜ் தீர்ந்துட்டா இந்த உலகம் என்னைத் தந்திரவாதின்னு நம்பாது.. வெறும் தொந்தரவாதினு நினைச்சு கழுவில ஏத்திரும்' என்று பயந்தான்.

அந்நேரம் தளபதியார் அங்கே வந்தார். "தேவரே.மன்னர் உங்களை நந்தவனத்திற்கு அழைக்கிறார்.. அங்கே இருக்கும் ஒரு அபூர்வமான சிலையிடம் உங்கள் மந்திரக் கண்ணாடியை வைத்து அதன் சக்தியைப் பெருக்க வேண்டுமாம்.." என்றார்.

'ஆத்தாடி மாட்டிட்டோம்..' என்று வியர்த்திட, "தளபதியாரே இப்போது கிரக நிலைகள் சரியில்லை.. மின்னல் தேவன் இப்போது ஓய்வில் இருக்கிறார்" என்று மழுப்பினான்.

ஆனால் அவரோ "ஏன் தேவரே உங்கள் கையில் இருக்கும் அந்த மாயப் பெட்டியின் வெளிச்சம் மங்கிவிட்டதோ.? ஒருவேளை உங்கள் மந்திர சக்தியும் காலாவதி ஆகிவிட்டதோ.?" என்று எள்ளலுடன் வினவினார்.

சுதாரித்த சந்துரு "தளபதியாரே இது பவர் சேவிங் மோட்.. அதாவது மந்திரவாதிகள் தியானம் செய்வது போல் இந்தப் பெட்டியும் இப்போது தியானம் செய்கிறது.. இதைக் கிளறினால் பிரபஞ்சமே வெடித்துவிடும்.." என்றான் பாருங்களேன்.

இதைக் கேட்டதும் அவரும் பின் வாங்க வேண்டியதாயிற்று.

அன்று இரவு அரண்மனையின் உப்பரிகையில் அமர்ந்து நிலவைப் பார்த்துக் கொண்டிருந்தான் சந்துரு.

'இங்கேயே இருந்தா பொழப்பு ஓடிடும் தான்.. ஆனா டேட்டா கார்டு இல்லாம.. வைஃபை இல்லாம.. முக்கியமா ஒரு டீக்கடை கூட இல்லாம எப்படி வாழ்றது. என்ன தான் இருந்தாலும் நம்ம காலம் நம்ம காலம் தான்..' என்று வருத்தப்பட்டான்.

திடீரென்று வானத்தில் ஒரு மின்னல் வெட்டியது. சந்துருவின் கையில் இருந்த ஐபோன் தானாகவே ஆன் ஆகி சிக்னலும் கிடைத்திட, "ஏய் இங்க எப்படிடா சிக்னல் கிடைச்சது.?" என்று ஆச்சரியமான நேரம் போனில் இருந்து ஒரு நீல நிற ஒளி கிளம்பி அவனைச் சுற்றியது.

அடுத்த வினாடி பலமான சத்தத்துடன் ஒரு பள்ளத்துக்குள் விழுவது போல் உணர்ந்தான் அவன்.

"டேய் எந்திரிக்கிறீயா.? இல்லையா.? நைட்டு எத்தனை மணிக்கு தான் தூங்குவ.?" என்று அவனின் அன்னை பத்ரகாளியாக மாறி கத்தினார்.

அவனும் கண்ணைத் திறந்து பார்க்க, தன் அறையில் படுத்திருந்தான். அருகில் அவனது ஐபோனும் நூறு சதவீதம் சார்ஜில் இருந்தது.

'அப்போ இதெல்லாம் கனவா.? ச்சே..' என்று ஏமாற்றத்துடன் எழுந்திட, அவனின் பேண்ட் பாக்கெட்டில் பழைய காலத்துத் தங்க நாணயம் இருந்தது..

அதன் ஒரு பக்கம் மன்னர் மகாபலியின் உருவமும், மறுபக்கம் ஒரு ஆண்ட்ராய்டு பொம்மையின் உருவமும் செதுக்கப்பட்டிருந்தது.

சிரித்துக்கொண்டே "இதைய வித்தா ஐபோன் 16 ப்ரோ மேக்ஸ் வாங்கிடலாம்.." என் குதூகலத்துடன் தங்க நாணயத்தை எடுத்துக் கொண்டு கிளம்பினான்.



சுபம்.
 

Author: SudhaSri
Article Title: 48. மன்னா... இது ஆண்ட்ராய்டு காலம்! - சாஹித்யா வருண்
Source URL: Nectar Novels-https://nectarnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
  • Haha
Reactions: Mrs Beenaloganathan

Mrs Beenaloganathan

Active member
Mar 21, 2025
265
18
43
46
Bangalore
மண்ணா இது ஆண்ட்ராய்டு காலம்…”


நிறைய பணம் வேண்டி புகைப்படம் எடுக்க செல்ல
நிலம் திறந்து விழுங்கியபோது
நேரே கடந்த காலம் சென்றான்....


நாட்டின் மன்னர் காலம் அது
நம் மொழியே
நமக்குத் தெரியாத
நாளும் அழியும் நேரத்திலும்
நினைவாக வந்தது....


நேரம் மாறி வந்தான் மீண்டும்
நவீன உலகம் நோக்கி…

நெஞ்சில் ஒரு நிம்மதி
“நடப்பது கூட நன்றுதான்” என்ற உணர்ச்சி…
நாணயமாய் GST வந்தாலும்
நாள்தோறும் சுமை இருந்தாலும்…
நாளை குறை சொல்லும் நாமே
நேற்றை பார்த்து பயந்தோம்....


நகைச்சுவை போல இருந்தாலும்
நாட்டின் நிலை அதேதான்…

நாள்கள் மாறினாலும்
நடக்கும் கதைகள் மாறவில்லை....

“நவீன காலமே நல்லது…”
நரகமாய் நினைத்த இக்காலம் கூட
நேற்றை விட நிம்மதிதான்… 📱✨