• ஹாய் மக்களே! நம் Nectar Novels தளத்திற்கு நல்வரவு🙏😍😍 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள் nectarnovels.ss@gmail.com 🩷 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...👇 வேதா விஷால் & அனன்யா🙏💖

49. வெட்கக் கீற்று - அனுராதா ஜெய்ஷங்கர்

SudhaSri

Administrator
Staff member
Jun 16, 2024
450
16
43
india
வெட்கக் கீற்று

**********************

காலை காபி அதிசயமாக மிகவும் நன்றாக இருந்தது. அதுவே பாலாவுக்கு சற்று பீதியைக் கொடுத்து அந்தச் சுவையை அனுபவிக்க முடியாத அளவுக்கு கிலியைக் கிளப்பியது. பிரவுன் கலரில் பால் கலந்த ஒரு சூடு திரவத்தைக் குடித்தே பழக்கப் பட்டவனுக்கு அன்றைய காபி ஏதோ முக்கியமான நிகழ்வு நடக்கப் போகிறது என்பதை உணர்த்தியது. பூகம்பம் வருவதற்கு முன்னரே விலங்குகள் உணர்ந்து கொள்வது போல கவனத்துடன் தயாரிக்கப் பட்டிருக்கும் காபி அடுத்து வரப்போகும் பேராபத்தின் முன் அறிகுறியாகவே தோன்றியது. ஐந்து வருட மணவாழ்க்கை அத்தகைய ஆபத்துகளை உணரும் சக்தியைக் கொடுத்து இருந்தாலும் முழுமையாக என்ன என்பதை கணிக்கும் சக்தியையோ தற்காப்புத் திறங்களையோ இன்னும் கற்றுக் கொடுக்கவில்லை. அல்லது பாலா இன்னும் கற்றுக் கொள்ளவில்லை.

“ ஏங்க , சூடு ஆறிப் போகறதுக்குள்ள காப்பீயைக் குடிங்க.”

மனைவி சுந்தரியின் அன்பு வார்த்தைகள் பயத்தை ஊர்ஜிதம் செய்தன.

“ காபி ரொம்ப நல்லா இருக்கு சுந்தரி .” மனது சொல்ல வேண்டாம் என்று நினைத்தும் வார்த்தைகள் பாலகுமாரின் வாயிலிருந்து தாங்களாகவே வெளியில் குதித்தன.

“ இருக்காதா பின்னே, ஆசையா உங்களுக்காக போட்டு இருக்கேன்ல ?”

“ அப்போ தினமும் ஆசையா போடறது இல்லையா?” தைரியமாகக் கேட்டே விட்டான்.

“ம்க்கும்.. என்னை ஏதாவது சொல்லலைனா உங்களுக்குப் பொழுதே போகாதே?” சிணுங்கினாள். அவன் அப்படிச் சொன்னதற்கு வழக்கமாக அவள் ஒரு சின்ன கரகமோ கதாகளியோ ஆடி இருக்கவேண்டும். ஆனால் அமைதியாக இருந்தது பாலகுமாரின் சகல புலன்களையும் தயார் நிலைக்குத் தள்ளியது.

“ ஏங்க , உங்ககிட்டே ஒரு விஷயம் சொல்லணும்.”

பாலாவிற்கு ஆபத்து சைரன் ஒலிக்கத் தொடங்கியது.

“ என்னம்மா?”

“ நான் ஒரு போட்டியிலே கலந்துக்கப் போறேன். நான் அதுல ஜெயிக்கிறது உங்க கையில்தான் இருக்கு.” அவன் தலைமுடியை விரல்களால் கலைத்தாள் .

“என் கையிலா?” அதிர்ச்சியில் அவனுக்கு கடைசி மடக்கு காபி புரையேறியது.

“மெல்லங்க.” அவன் முதுகைத் தட்டினாள்.

“ என்ன போட்டின்னு கேளுங்க.”

“ எப்படி இருந்தாலும் நீ சொல்லத்தானே போற .”

“ சொல்லுவேந்தான் . அதுக்காக, நான் சொன்ன உடனே , ‘ ரொம்ப சந்தோஷம் சுந்தரி, ஆல் தி பெஸ்ட் . உனக்காக நான் எது வேணும்னாலும் செய்வேன்’ அப்படின்னு நீங்க சொல்ல வேண்டாமா?”

பாலாவிற்கு அவள் கரகம் ஆட சலங்கைகளை எடுத்து விட்டது புரிந்தது.

“ நான் சொல்லாமலே நீதான் என் மனசைப் படிச்சுடுவியே , சரி, என்ன போட்டி சொல்லு.”

“ வெட்கப்படற போட்டிங்க.”

“ என்னாது வெக்கமா? அதுக்கும் நமக்கும் என்ன சம்பந்தம் சுந்தரி? அதுக்கு எல்லாம் ஏன் பேர் கொடுக்கிற?” பாலாவிற்கு நல்ல காபி கிடைத்ததன் காரணம் புரிந்து விட்டது.

“ இப்போ என்ன கஷ்டமா சொல்லிட்டேன்னு இப்படி குதிக்கறீங்க ? உங்களை ஆயிரக்கணக்குல செலவு செஞ்சு புடவை நகையா வாங்கச் சொன்னேன்?

நான் வெக்கப் படற மாதிரி ஒரு போட்டோ எடுத்து அனுப்பணும். அவ்வளவுதான்

போட்டியே. அது உங்களால முடியாதா?”

“ நீ அதெல்லாம் கேட்டிருந்தாக் கூட வாங்கி இருப்பேன். என்னை மாரத்தான் போட்டியில ஓடச் சொல்லு. பழக்கமே இல்லைன்னாலும் எப்படியோ உயிரை கையில் பிடிச்சுக்கிட்டாவது ஓடி முடிக்கிறேன். ஆனா நீ வெக்கப் படறதுக்கு நான் என்னம்மா செய்ய முடியும்? முன்ன பின்ன வெக்கப்பட்டு இருக்கியா நீ?”

“ என்னங்க இப்படி சொல்றீங்க? ஒரு பொண்ணா பிறந்தவளுக்கு , பொண்டாட்டியா ஆனவளுக்கு வெக்கப்பட வராதா ? என்னை கிண்டல் பண்றீங்க. உங்களுக்கு விருப்பம் இல்லைன்னா சொல்லிடுங்க. அதுக்காக என் பெண்மையை நக்கல் பண்ணாதீங்க.” கரகத்திற்கு சுருதி சேரத் தொடங்கியது.

“ அப்படிச் சொல்லலைமா. பொதுவா இந்த காலத்துல பொண்ணுங்க எல்லாரும் நிமிர்ந்த பார்வை, நேர் கொண்ட நடைன்னு பாரதியோட புதுமைப் பெண்களா திரியறீங்களா? அதான் வெக்கப்படுவதெல்லாம் டி என் ஏ லவே இருக்கா இல்லையானு ஒரு சந்தேகம் வந்துடுச்சு, உன்னைத் தனியா சொல்லலை தங்கம்.”

சமாதானக் கொடி பட்டொளி வீசிப் பறந்தால்தான் சாப்பாடு கிடைக்கும் என்பதை உணர்ந்த சாமர்த்தியசாலியாகப் பதில் சொன்னான் பாலா.

“ சும்மா பூசி மழுப்பாதீங்க. உங்களுக்கு எனக்கு உதவி செய்ய இஷ்டம் இருக்கா இல்லையா?” குரலின் தொனி சலங்கை காலில் ஏறி விட்டதை உணர்த்தியது.

"ஏம்மா இப்படி படுத்தற என்னை ? ஒரு போட்டியில் பேர் கொடுக்கறதுக்கு முன்னாடி அது நம்மளால முடியுமா அப்படின்னு யோசிச்சு பெயர் கொடுக்க மாட்டியா?"

" இப்போ உங்களால என்ன ஜெயிக்க வைக்க முடியுமா முடியாதா? ஒவ்வொருத்தவங்க உலகத்துல பொண்டாட்டிக்காக என்னெல்லாமோ செய்றாங்க.உங்களால் இந்த சின்ன விஷயம் கூட செய்ய முடியாதா? சரி, விடுங்க. நான் கொடுத்து வச்சது அவ்வளவுதான். ஒரு டான்ஸ் ரீல் வேணும்னா நானே எடுத்துப் போட்டுட்டு போயிட்டே இருப்பேன். பெரிய காமிரா வச்சுட்டு சின்ன புழு பூச்சி எல்லாம் அழகா எடுக்கறீங்களே, என்னை எடுக்கவும் ஒரு சான்ஸ் கொடுக்கலாம்னு நினைச்சேன். "

அவளது பிரம்மாஸ்திரமான கண்ணீர் பாய நான் ரெடி என்று இரண்டு கண்களிலும் தயாராக நின்றது. பாலா தனது அத்தனை தற்காப்பு அஸ்திரங்களும் பயனற்றுப் போனதை உணர்ந்தான்.

" நான் செய்ய தயாரா இருக்கேன் தாயே. நீதான் ஒத்துழைக்கணும். யார் நடத்துற போட்டி அது ? அந்தப் போட்டி விதிமுறையை எடுத்து நீயே தயவு செஞ்சு ஒரு வாட்டி சத்தம் போட்டு படி."

சடாரென கிரிக்கெட் மைதானத்தில் இரவு விளக்குகளைப் போட்டது மாதிரியான ஒரு ஒளி அவள் முகத்திலிருந்து கிளம்பியது. பிரம்மாஸ்திரங்கள் மின்னலாய் மறைந்தன.

“ அப்பாடி, ஒரு விஷயத்துக்கு உங்களை ஒத்துக்க வைக்க என்ன பாடு பட வேண்டியிருக்கு. துணி மலர் புடவைக் கடையும் மின்மினி நகைக்கடையும் பெண்கள் தினத்துக்காக இந்தப் போட்டி அறிவிச்சு இருக்காங்க. படிக்கிறேன், கேளுங்க.

‘வெட்கம் - மின்னலாய் ஒரு வினாடிக்கும் குறைவாகத் தோன்றி மறையும் வெட்கக் கீற்றுடன் கூடிய தங்கள் புகைப்படத்தை பெண்கள் அனுப்ப வேண்டும்.

தலையைக் குனிந்து கொண்டு கால் விரலால் தரையில் பள்ளம் தோண்டுவது, மண்வாசனை ரேவதி போல இரு கைகளாலும் முகத்தை மூடிக்கொண்டு ஒரு கையை மட்டும் திறந்து மூடி கண்ணாமூச்சி காட்டுவது, வெட்கப்படுவதாக நினைத்துக் கொண்டு வாயை மூடிக்கொண்டு கொப்பளிப்பது போன்ற போஸ்கள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது.

இந்தப் போட்டிக்காகவே எடுக்கப்பட்ட சமீபத்திய புகைப்படமாக இருக்க வேண்டும். திருமண புகைப்படங்கள் ஏற்றுக் கொள்ளப் பட மாட்டாது.’

அவ்வளவுதாங்க. சின்னதா வெக்கப்படற மாதிரி ஒரு போஸ் கொடுக்கறேன் எடுங்க. முடிஞ்சுது.”

எவ்வளவு பெரிய விஷயத்தை இவ்வளவு சுலபமாக சொல்லி விட்டாளே என்று இருந்தது பாலாவுக்கு.

"அந்தச் செல்ல வெட்கம், வெட்கப்பட்டது கூட தனக்கோ அடுத்தவங்களுக்கோ தெரியாம மின்னி மறையற அந்த வெட்கம்.. அதை உன்னால கொண்டு வர முடியுமா சொல்லு. நான் உன்னை ஆயிரம் ஃபோட்டோ

எடுக்கிறேன் ".

“ கொஞ்சம் பொறுங்க. லைட்டா மேக்கப் போட்டுட்டு வரேன்.”

பாலா ஒரு குட்டித் தூக்கம் போடத் தயார் ஆனான்.

“ ஏங்க . எழுந்திரிங்க. அதுக்குள்ள தூக்கமா? “ அவனைப் பிடித்து உலுக்கினாள்.

“ நீ ரெடியா?”

“ முதல்ல போயி முகத்தைக் கழுவிட்டு வாங்க. தூங்கி வழியறீங்க.”

“ நீதான் அழகா இருக்கணும். போட்டோ எடுக்கிறவன் எப்படி இருந்தா என்ன ? சரி, வெக்கப் படற போஸ் கொடு. நான் ரெடி.”

"இப்படி பண்ணினா சரியா இருக்குமா பாருங்க.”

"ஐயோ, சுந்தரி, தாங்க முடியல. பயமா இருக்கு."

“ அதை டெலீட் செய்யுங்க. எனக்கே சகிக்கலை .”

சுந்தரி வித விதமாக வெட்கப்பட முயன்று பார்த்தாள்.

"ஏங்க, அந்த மாதிரி வெட்கப்படறது அவ்வளவு கஷ்டமா என்ன?"

" உன்ன பார்த்தா அப்படித்தான் தோணுது."

" சரி, இப்ப முயற்சி பண்றேன். எடுத்துப் பாருங்க".

"எப்படி வந்து இருக்குன்னு நீயே பாரு"

" என்னங்க இது இவ்வளவு கண்றாவியா இருக்கு? எனக்கு என்னமோ உங்க கேமரா தான் சரி இல்லன்னு தோணுது."

" டிஎஸ்எல்ஆர் கேமரா இது. அதுக்கு மேல நான் எதுவும் சொல்லத் தயாரா இல்லை."

திடீரென சுந்தரி வேறு ஒரு வழியைப் பிடித்தாள்.

"ஏங்க, என்னை வெட்கப்படற வைக்கிறது உங்க பொறுப்பு தானே ?"

"அதெல்லாம் நான் முயற்சி செஞ்சு எப்போவோ முடியாதுன்னு கைவிட்ட சமாச்சாரம்மா. "

"எப்ப நீங்க அந்த மாதிரி எதேனும் சொல்லி நான் வெக்கப்படலை?"

"எத்தனையோ முறை முயற்சி பண்ணி இருக்கேன், நடக்கலையே !"

"அதுதான் சொல்லுங்கன்னு கேட்கிறேன்".

" நம்ம நிச்சயதார்த்தம் போது யாருக்கும் தெரியாம உன்னை பார்த்து லேசா கண்ணடிச்சேன். அதுக்கு நீ நியாயமா வெட்கப்பட்டு இருக்கனும். இல்ல ஒரு சின்ன புன்னகையாவது கொடுத்து இருக்கணும். ஆனா நீ என்ன செஞ்ச ?"

"என்ன செஞ்சேன்?"

" ஆமா என்னைக் கேளு. உன் பக்கத்தில் நின்ன உன் தோழியைப் பாத்து கண்ணடிக்கிறேன்னு நினைச்சுட்டு சந்திரமுகி மாதிரி கண்ணை உருட்டி உருட்டி என்னைப் பாத்து முறைச்சே . அன்னைக்கு சப்தநாடியும் ஒடுங்கினவன் தான்".

"சரி விடுங்க. அதுக்கு எத்தனை முறை சாரி சொல்லி இருக்கேன். அப்புறம் வேற எப்போ ?"

"நம்ம ஃபர்ஸ்ட் நைட் அன்னிக்கி வெக்கப்பட்டு உள்ள நுழைவேன்னு எதிர்பார்த்தேன். நீ என்னடான்னா நிலைப்படி கால் தடுக்கி என் மேல வந்து மோதுன. "

“ ஆமா, உங்க வீட்டுல ஆகி வந்த அறை , ஆவியில வெந்த அறைன்னு ஒரு சுரங்க அறையை முதலிரவுக்காக ரெடி செஞ்சு வச்சு இருந்தாங்க. ராஜா காலத்து கதவு மாதிரி அவ்வளவு பெரிய நிலைப்படி இருக்குனு எனக்கு எப்படித் தெரியும்?”

"உன் தம்பி கல்யாணத்தின் போது அவ்வளவு கூட்டத்துக்கு நடுவுல கஷ்டப்பட்டு உன்கிட்ட வந்து உன் காதுல இந்த புடவையில் ரொம்ப அழகா தேவதை மாதிரி இருக்கேன்னு சொன்னேன்."

"ஆமா சொன்னீங்க."

" நீ என்ன செய்தே? அப்படியே திரும்பி என்னைப் பாத்து முறைச்சு அப்ப இவ்வளவு நாள் உங்க கண்ணுக்கு சாத்தான் மாதிரி தெரிஞ்சேனான்னு கேட்டே.”

"அப்படியல்லாமா இருந்து இருக்கேன். நீங்க பாவம்தாங்க. ரொம்ப சாரிங்க . இப்ப ஏதாவது சொல்லுங்க. வெக்கப்பட முடியுதான்னு பார்க்கிறேன்".

"உத்தரவாதம் எல்லாம் தர முடியாது. முயற்சி பண்ணி பாரு . ஒரு முறை என்னை அத்தான்னு கூப்பிடேன். "

"என்னது அத்தானா? அப்படி எல்லாம் நான் உங்களை எப்போ கூப்பிட்டு இருக்கேன்?"

" அதனாலதான் சொல்றேன்.முயற்சி செஞ்சு பாரு."

" அத்தான் .."

" இப்படி ஹலோ வாட்ச்மேன் அப்படின்னு கூப்பிடுற டோன்ல கூப்பிட்டா வெட்கம் எப்படி வரும் ? கேட்கிற எனக்கே பயம் வருது. கொஞ்சம் சாஃப்ட்டா, மென்மையா, இப்பதான் என்னை முதல் முறையா பார்த்து கூப்பிட போற மாதிரி மனசில் நினைச்சுட்டு முயற்சி பண்ணி பாரு."

"அ..அ ..அத்த்..விடுங்க. எனக்கு வர மாட்டேங்குது."

" இந்த படத்தைப் பாரு , அத்தான்னு சொல்ல முயற்சி பண்ணும்போது ஒரு முறை நீ ஒரு சின்ன எக்ஸ்பிரஷன் காமிச்சு இருக்கே, பாரு இதுதான் வெட்கம். இதை அனுப்பிச்சு விடு. உனக்குதான் பரிசு ."

"ஐயோ, நான் இவ்வளவு அழகாவா இருக்கேன்.”

"இதைப் பார்க்கத்தானம்மா நான் இவ்வளவு காலமா முயற்சி பண்ணிட்டு இருக்கேன்."

" போங்க!”

" அட! இதோ இந்த போட்டோவையும் சேர்த்து அனுப்பு."

பாலாவிற்கு சுந்தரி குதித்துக் கொண்டு போகும் வேகத்தை வைத்து மத்திய உணவு பிரியாணிதான் என்பது உறுதி ஆயிற்று.

*****

அனுராதா ஜெய்ஷங்கர் .
 

Author: SudhaSri
Article Title: 49. வெட்கக் கீற்று - அனுராதா ஜெய்ஷங்கர்
Source URL: Nectar Novels-https://nectarnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.

Mrs Beenaloganathan

Active member
Mar 21, 2025
265
17
43
46
Bangalore
வெட்கக் கீற்று

போட்டியில் கலந்து கொள்ள
பெருமையோடு நின்றாலும்
பெண்ணியம் பேசும் வார்த்தையில்
பழகாத வெட்கம்.....

புருஷன் புகைப்படம் எடுக்க
பக்கம் நின்று தயங்கும் அவள்…
பார்வை தாழ்த்தி சிரிக்க
படம் எடுக்க ஒரு நொடி
பதறி நின்று திண்டாடினாள்....

பின்னும் அந்த
வெட்க சிரிப்பு
படத்திலே உயிராய்
பதிவானது....

பழக்கம் மாறினாலும்
பண்பு எங்கோ மறையவில்லை…
பெண்ணின் வெட்கக் கீற்று
பருவம் கடந்தும் உயிரோடு தான்… 🌸✨