• ஹாய் மக்களே! நம் Nectar Novels தளத்திற்கு நல்வரவு🙏😍😍 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள் nectarnovels.ss@gmail.com 🩷 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...👇 வேதா விஷால் & அனன்யா🙏💖

52. ஆசை குறைஞ்சுதா - புவனா மாதேஷ்

SudhaSri

Administrator
Staff member
Jun 16, 2024
452
16
43
india
ஆசை குறைஞ்சுதா


காதில் விடாமல் கேட்ட குறட்டை சத்தத்தில் கண் விழித்தார் சொக்கநாதனின் மனைவி யசோதா..


கண்களை அழுத்தித் தேய்த்துக் கொண்டே எழுந்தமர்ந்தவர்க்கு குறட்டை விட்டபடி உறங்கிக் கொண்டிருந்த கணவனைப் பார்க்க ஆசையாக இருந்தது.


தினமும் எழுந்ததும் யசோதாவின் மனதில் எழும் ஆசை தான் இது… ‘உறங்கி கொண்டிருப்பவர்களை ரசிக்க கூடாது’ என்று சிறு வயதிலிருந்தே சொல்லி சொல்லி பழக்கி விட்டதாலோ என்னவோ மனதின் இப்படியான ஆசையை அடக்கி விடுவார்..




இன்றைக்கும் அப்படி தான் அடக்க நினைத்தார்...' சும்மா இருக்க மாட்ட, இந்த வயசுல ரசி, ருசின்னுட்டு இருக்க" என்று ஒரே அதட்டாக அதட்ட, இன்றைக்கு ஏனோ யசோதாவின் மனம் பலமாக முரண்டு பிடித்தது...


‘அப்படி என்ன சொல்லிட்டான்னு இப்படி அதட்டற நீ?... உன் புருஷனை தானே ரசிக்க சொல்றேன், அடுத்தவன் புருஷனையா ரசிக்க சொல்றேன்’ அவரது மனம் சண்டைக்கு கிளம்ப, இப்பொழுது அடங்கி போவது யசோதாவின் வேலையாகி போனது…


மனதின் பிடிவாதமான பேச்சில் நகத்தைக் கடித்துக் கொண்டே ‘ அப்படியா சொல்ற?’ என்று வேறு கேட்டார்…


‘இது போதுமே எனக்கு’ என நினைத்த மனமோ ‘ம்ம், ஆமாங்குறேன்… புருஷனை ரசிக்கிறதுக்கு எதுக்கு வயசுங்கிறேன்… ரசிக்கணும்னு தோணும் போதே ரசிச்சு போடணும் யசோ... இதெல்லாம் தள்ளி வைக்கக் கூடாது’ என்று வேறு சொல்ல, இதழ்களை அழுத்திக் கடித்துக் கொண்டே நாணி கோணிக் கணவரைப் பார்த்தார்...


வெற்று மேனி, பாதி வழுக்கை தலை,பெரிய தொப்பை, இறங்கிய வேஷ்டி, திறந்த வாயில் ஜலவாயோடு உறங்கி கொண்டிருந்தவரைப் பார்த்ததும் புரையேறியது யசோதாவிற்கு..


அதிலும் அவரது கணவர் வரட்டு வரட்டென்று அக்கூலை சொறிய ஒரே ஓட்டமாக அறையிலிருந்து வெளியில் ஓடி வந்துவிட்டார்.


சித்திரை வெயில் பல்லைக் காட்டிக் கொண்டிருந்ததின் விளைவு தான் இப்படி நாற்றம் வருகிறது என நினைத்தவர் 'இனிமே கணவனை ரசி, கண்டதை ருசின்னு சொல்லிட்டு என் பக்கம் வந்து பாரு மிதிக்கிறேன்" தன்னை வலுக்கட்டாயமாக பார்க்க வைத்த மனதினை வறுத்துக் கொண்டே வீட்டின் முற்றத்திலிருந்த குளியலறைக்குள் நுழைந்து கொண்டார்...


குளியலறையிலிருந்து வெளியில் வந்தவரின் பார்வை சோஃபாவில் மகனோடு அமர்ந்திருந்த வெளிநாட்டு மருமகளின் மேல் விழுந்தது... அவளிடம் பேசுவதும், பேசாமல் செல்வதும் ஒன்று தான் என்று நினைத்தவர் "தம்பி, இரண்டு பேருக்கும் காப்பி போடறேன்" மகனிடம் கூறிவிட்டு சமையலறைக்குள் நுழைந்தவர், குளிர்சாதன பெட்டியிலிருந்த பாலை எடுத்து செல்ஃப்பில் வைத்துவிட்டு, நீரை பருகினார்…


அச்சணம்,


தூக்கம் வரல மாமா

காக்க வைக்கலாமா

ஆக்கிவச்ச சோத்த

ஆறப் போடலாமா...


என்ற பாடலை ஆங்கிலம் கலந்த தமிழில் சத்தமாக பாடினாள் அவரது மருமகள்... அதைக் கேட்டதும் நீரை அருந்தி கொண்டிருந்த யசோதாவிற்கு புறையேற, வாயிலிருந்த நீரை, மனைவியின் பாட்டைக் கேட்டதும் பதறியடித்து சமையலறைக்குள் ஓடி வந்த மகன் மீது துப்பி விட்டார்...


மகன் எதிரில் வருவான் என்று எதிர்ப்பார்க்காதவர் "ஐயோ தம்பி" என்று பதறி மகனின் முகத்தை துடைத்து விட்டார்...



வெட்கம் பிடிக்குது பொறுத்துக்கையா

அது விலகி போனதும் எடுத்துக்கையா


கண்களை மூடி, கையை மேலே உயர்த்தி தானொரு பாடகி என்ற ரீதியில் பாடிக் கொண்டிருந்தவளை தாயும், மகனும் ஒரு சேரப் பார்த்தனர்


பாட்டு என்னவோ அதே நிலா காயுது தான்.. ஆனால் என்ன? வார்த்தைகள் தான் அவளிடத்தில் தடுமாறிக் கொண்டிருந்தது.


"என்ன கன்றாவி டா இது..." மருமகளை பார்த்தபடி கேட்டார் யசோதா.


"பேச்சு வாக்குல தமிழ் பாட்டு கத்து இருக்கேன்னு சொன்னா மம்மி, நானும் பாடுன்னு சொன்னேன். ஏதாவது ஒரு தமிழ் பாட்டு பாடுவான்னு நினைச்சு தான் பாடுன்னு சொன்னேன்.ஆனால் அந்த ஏதாவது ஒரு பாட்டு, இந்த பாட்டுன்னு தெரியாம போச்சு மம்மி" பாவமாக கூறிவனைப் பார்த்து சிரித்தார் யசோதா...


"சிரிக்காதீங்க மம்மி, டாடி எழறதுக்குள்ள அவளைப் போயி ஸ்டாப் பண்ணுங்க" அவசரப் படுத்தினான்.


"நீயே போயி நிறுத்த வேண்டியது தானே டா"


"பொண்டாட்டிட்ன்னு வந்துட்டா தமிழ்க்காரியா இருந்தாலும் சரி, இங்கிலீஷ்காரியா இருந்தாலும் எல்லாரும் ஒண்ணு தான் மம்மி... இப்ப நான் போயி பாடின வரைக்கும் போதும் வா போலாம்னு சொன்னா அவ்வளவு தான்... உனக்காக கத்துக்கிட்டேன். நீ காதுல கூட வாங்கிக்க மாட்டேங்குறேன்னு கத்துவா?" அலறினான் மகன்...


"நான் பேசற தமிழ் வேற அந்த புள்ளைக்கு புரிய மாட்டேங்குதே டா... நான் ஒண்ணு சொல்ல, அவளோன்னு சொல்லன்னு போகும்… காலங்காத்தல அந்த புள்ளைக் கிட்ட மாட்டி விடறயே டா…” கையை உதறி கூறிக் கொண்டே கூறியவரிடம்


“பிளீஸ் மா… நார்மல் த

தமிழ்ல பேசுங்க அவளுக்கும் புரியும்” என்றவன் தாயை பின்னாலிருந்து தள்ள, மகனை முறைத்துக் கொண்டே மருமகளின் எதிரில் சென்று நின்றார்..


மாமியாரை பார்த்ததும் வெள்ளந்தையாக சிரித்தாள் ஒலிவியா .


“ஒலிவியா, இப்படியெல்லாம் பாடுவீயா? உன் குரலுக்கு இந்த பாட்டு நல்லா இருக்கே" என்றதும் இங்கே சமையலறையில் நின்றிருந்த தமிழ் தலையில் அடித்துக் கொண்டான்.


‘ பாட்டை நிறுத்த சொன்னா காம்ப்லிமெண்ட் கொடுத்துட்டு இருக்கு இந்த மம்மி வேற ‘ மனதில் நொந்து கொண்டபடி


"பாட்டை நிறுத்திட்டு என்கூட வேலை செய்ன்னு கூப்பிடுமா? மாமியார் கொடுமையெல்லாம் கேள்வி பட்டு இருக்கியா இல்லையா?" மெல்லிய குரலில் புலம்ப, மகனை பாவமாக பார்த்து வைத்தார் யசோதா...


"வாவ் ரியலி அத்தை? நல்லா இருக்கா? உங்க பையனுக்காக நான் கத்துக்கிட்ட பாட்டு" என்றவள் ட் "த்" த்தாகவும் 'த் ' ட்டையாகவும் ஒலித்தது...


"ஹிஹிஹி" அசட்டு சிரிப்போடு மகனைப் பார்க்க, அவனோ பல்லைக் கடித்தான்..


'பொண்டாட்டி கிட்ட இவன் பேச மாட்டீங்கிறான்... நம்மளை நடுவுல இழுத்து விட்டுட்டு இவன் வேடிக்கைப் பார்க்கிறான் ' மனதில் புலம்பிக் கொண்டே மருமகளை பார்த்தார்.



அவளோ காதிலிருந்த ப்ளூடூத்தை சரி செய்தபடி "இந்த ஹம்மிங் சரியா இருக்கான்னு பாருங்க அத்தை" என்றவள்


"ம்ம் ம்ம் ம்ம் அஹ்ஹ் சச்சச்ச அஹ்ஹ் சச்சச்ச(தும் தும் தும் )

ச் சி" என்று பாட்டிற்கு ஏற்ப பாட, அவளது ராகத்தில் யசோதா திருதிருவென்று விழித்தார் என்றால் தமிழ் சமையலறை சுவற்றில் "ஐயோ ஐயோ வென்று" முட்டிக் கொண்டான்..



தண்ணீர் கேட்குமே கண்ணே

தாகம் தனிஞ்சதா

அத்தான் தேவை நான் தந்தேன்

ஆசை குறைஞ்சுதா..


இவளது பாட்டிலும், மகனது படபடப்பிலும், இவருக்கு சிரிப்பு வர, வாயில் கை வைத்து சிரித்தபடி மகனை ஓரக்கண்ணால் பார்த்தார்...


"மம்மி... நிறுத்துன்னு சொல்லு மா..." அவன் இன்னும் அலற…


குரலை செருமிக் கொண்டே “ஒலிவூ இந்த பாட்டை உனக்கு யார் சொல்லிக் கொடுத்தா” அதிமுக்கியமான கேள்வியை கேட்டு வைக்க,


“உங்க பையன் தான் அத்தை…” என்றாளே பார்க்கலாம் அம்மா, மகன் இருவருக்கும் வெறும் வாயிலேயே புரையேறியது…


“எங்க ஃபர்ஸ்ட் நைட்டுல” அடுத்து அவள் சொல்லும் முன்பே சமையல் அறையிலிருந்து வேகமாக வெளியில் வந்தவன் சோபாவை பின்னாடியிருந்தே தாண்டியப்படி “அடியே ரத்தினி அக்னி கோத்ரி… போதும் டி வா போவோம்…” என்றான் படபடக்க


“என்ன? ஏன்” முறைத்தாள் இவள்


“அங்க பாடுவோம் மா… நமக்கான பாட்டு இது” கைகளை கோர்த்து மெல்லிய குரலில் கூறினாலும் யசோதாவிற்கு கேட்க தான் செய்தது.


மூக்கை ஆள்காட்டி விரலால் வருடிக் கொண்டே சிரிப்பை அடக்க நினைத்தவருக்கு அது முடியாமல் போக, சட்டென அறைக்குள் நுழைந்து கொண்டார்…


அறைக்குள் நுழைந்தவருக்கு சிரிப்பை அடக்க முடியவில்லை… இவரது முதலிரவில் கணவன் பாடிய பாட்டும் இது தானே? என நினைத்தவருக்கு தன்னையும் மீறி சிரிப்பு வர, அங்கே உறக்கத்தில் இருந்த சொக்கு பட்டென கண்களை திறந்து “ஐயோ அம்மா காட்டேரி” என்று கத்த...


கணவரின் கத்தலில் இடுப்பில் கைவைத்து முறைத்தார் யசோதா…


மனைவியின் முறைப்பில் தலையை சொரிந்து கொண்டே"நான் என்ன டி பண்ணுவேன்... காலங்காத்தல பேய் மாதிரி முன்னாடி நின்னு சிரிச்சுட்டு இருந்தா பயமா இருக்காதா" என்கவும் இன்னும் முறைத்தார் யசோதா…


மனைவியின் முறைப்பை கண்டுக் கொள்ளாமல் எழுந்து நின்றவர் தளர்ந்த வேஷ்டியை இறுக்கி கட்டியப்படி "ஆமா, காலங்காத்தால அப்படி என்ன சிரிப்பு அம்மணிக்கு" எனக் கேட்டார்...


‘ வாடி சொக்கு, ஷோக்கா மாட்டினீயா?’ என நினைத்துக் கொண்டே


"அதுவா..." என இழுத்தார் யசோதா…


"ம்ம்..." அந்த ம்ம் மில் இழுக்காம சொல்லு என்ற செய்தி இருந்தது..


கணவனை ஓரக் கண்ணால் பார்த்துக் கொண்டே "இந்த சீரியல்ல, கதையெல்லாம் வருமே, ஹீரோவை ஹீரோயின் ரசிக்கிற மாதிரி... அப்படி நீங்க தூங்கும் போது ரசிக்க நினைச்சேன்.. பெரிய தொப்பை, பாதி வழுக்கை மண்டை, வாய் நிறைய ஜலவாய்ன்னு பார்க்க பார்க்க,சிரிப்பு வந்துட்டு..” என்றது மட்டுமல்லாமல் வாய்விட்டு சிரிக்க, இப்பொழுது முறைக்கும் முறை சொக்குவிற்கானது…


கணவனை கடுப்பேற்றி விட்ட சந்தோசத்தில் அங்கிருந்து வெளியில் வர, மகனின் அறை பூட்டிக் கிடந்தது..


“ஒலிவியா, இப்படியெல்லாம் பாடுவீயா?” முன்பு மருமகளிடம் கேட்டது இப்பொழுது நினைவு வர, இன்னும் புன்னகை அவருக்கு…


அன்றைக்கு காலையில் மலர்ந்த சிரிப்பு இரவு வரைக்குமே வாடவில்லை யோசதாவிற்கு…


‘தினமும் எழுந்ததும் கணவனை ரசிச்சா, நாள் முழுக்க சிரிக்கலாம்’ என்ற மனதின் பேச்சிற்கு பெரியதாக சிரித்து வைத்தார் யசோதா.
 

Author: SudhaSri
Article Title: 52. ஆசை குறைஞ்சுதா - புவனா மாதேஷ்
Source URL: Nectar Novels-https://nectarnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.

Mrs Beenaloganathan

Active member
Mar 21, 2025
265
18
43
46
Bangalore
ஆசை குறைஞ்சுதா....

ஆசையா பாக்க
சொல்லுதா மனசு
அழகை ரசிக்க
சிந்திக்க பெருசு
அலற வைக்குது
சொற்ப வயசு.....
 
  • Haha
Reactions: saranya sathish