• ஹாய் மக்களே! நம் Nectar Novels தளத்திற்கு நல்வரவு🙏😍😍 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள் nectarnovels.ss@gmail.com 🩷 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...👇 வேதா விஷால் & அனன்யா🙏💖

53. கல்யாண மேளா - லலிதா சங்கர்

SudhaSri

Administrator
Staff member
Jun 16, 2024
452
16
43
india
கல்யாண மேளா

"ரேவதி! நேத்திக்கு உனக்கு அனுப்பிச்ச ஐடியைப்பார்த்தியா? பொண்ணோட நட்சத்திரம் பொருந்தறதுன்னு சொன்னேனே! இன்னும் பேசலையா நீ? அது பொண்ணோட அம்மா நம்பர்ங்கறதுனாலதான் உன்னைப்பேசச்சொன்னேன்."

"ஆமாம் போங்கோ! ஒரே வெறுப்பா இருக்கு. எத்தனை தடவை, இப்படி எத்தனை பேருக்கு போன் பண்ணி, பண்ணி மூக்கொடை படறது?"

"நான் என்ன கேக்கறேன்? நீ என்ன சொல்ற?"

"வழக்கம்போல அந்தப்பொண்ணோட அம்மா ஜாதகம் பொருந்தலைன்னு சொல்லிட்டா. எனக்குப்போறும் போறும்ன்னு இருக்குப்பா."

'என்னவளே! அடி என்னவளே என் இதயத்தைதொலைத்துவிட்டேன்!' செல் ஒலித்தது.

அக்கா! என்ன சொல்றேள்? நிஜம்மாவா? அங்க போனா நல்லது நடக்கும்கறேளா?

ம்ம்ம்! அப்படியா சொல்றேள்?

ஓ! கேக்கவே ரொம்ப சந்தோஷமா இருக்கு. உங்க வாய் முகூர்த்தம் பலிக்கட்டும். நான் கண்டிப்பா போய் பாக்கறேன்.

சரிக்கா பத்தென்ன? இருபது காப்பி எடுத்துண்டு போறேன். ஏதோ நம்ம குழந்தைக்கு நல்லது நடந்தா சரி.

ரேவதி செல்லை அணைத்தாள். கண்கள் விரிய கணவனிடம் வந்தாள்.

"இங்க பாருங்கோ! வர்ற வாரம் ஞாயித்துக்கிழமை பாண்டுரங்கன் கோயில் மண்டபத்துல கல்யாண மேளாவாம். நாம கண்டிப்பா போகணும்."

"அது என்ன கல்யாண மேளா?"

"உலகத்துல இருக்கற எல்லா இடத்துல இருந்தும் வரன்கள் வருமாம். அங்கேயே ஜாதகப்பரிவர்தனை நடக்கப்போறதாம். உங்க அக்கா போன்ல சொன்னா ஒரு பத்து ஜாதகக்காப்பி எடுத்துக்கச்சொன்னா. நான் இருபது எடுத்துக்கலாம்னு இருக்கேன்."

"அது எதுக்கு? நாமதான் மாட்ரிமோனில பதிஞ்சிருக்கோமே!"

"பொல்லாத மேட்ரிமோனி..! அதப்பத்தி பேசாதீங்க. பழைய மகாலிங்கபுரம் சார்டோட கால் தூசி பெறுமா இந்த அம்மஞ்சல்லிக்குப் பெறாத மாட்ரிமோனில்லாம்? மகாலிங்கபுரம் சார்ட் ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணுன்னு இருந்தபோது எல்லா கல்யாணங்களும் தங்குதடையில்லாம நடந்தது. எப்போ இந்த மழைல முளைச்ச காளான்கள் மாதிரி திரும்பினபக்கமெல்லாம் மாட்ரிமோனி வந்ததோ வரன் பார்த்து கல்யாணம்ங்கறதே துர்லபமா போயிடுத்து. வர்ற ஞாயித்துக்கிழமை கல்யாண மேளால நடக்கப்போறதே வேற..! பிள்ளையைபெத்தவாளும், பெண்ணைப்பெத்தவாளும் நேருக்குநேர் பார்த்து ஜாதகத்தைபரிமாறிக்க வசதியா கல்யாண மேளா நடக்கபோறது, நம்ம பையனுக்கும் ஒரு விடிவு வரப்போறது. இப்போதான் எனக்கு நிம்மதி."

"ரேவதி! அது எப்படி மாட்ரிமோனில கிடைக்காத பொண்ணுங்க அங்க மட்டும் கிடைப்பாங்க."

"நீங்க இப்படி ஏடாகூடமா குறுக்குக்கேள்வி கேப்பீங்கன்னு எனக்குத் தெரியும். அதாவது மாட்ரிமோனில பதிய வசதியில்லாத அல்லது விருப்பமில்லாதவங்கள்லாம் அங்க வருவாங்கன்னு உங்க அக்காதான் சொன்னா. முதல்ல நல்லது நடக்கும்னு நம்புங்கப்பா. நெகட்டிவா பேசாதீங்கோ."

"சரி சரி நம்பறேன். நம்ப பையனுக்கு நல்லது நடந்தா எனக்கும் சந்தோஷம்தான்."

அந்த ஞாயிறு காலை வழக்கத்தை விட வேகமாக விடிந்தது. பாண்டுரங்கனை சேவித்துவிட்டு அதனருகே இருந்த மண்டபத்திற்குள் ரேவதி தன் கணவனுடன் காலடி எடுத்துவைத்தாள். 'அடடா! ரவியையும் கூட்டிண்டு வந்திருக்கலாமோ? வந்திருந்தா இங்கயே பொண்ணைப்பார்த்து பேசி முடித்திருக்கலாம். பேசாம அவனை போன் பண்ணி வரச்சொல்வோம். வேண்டாம் வேண்டாம் முதல்ல நாம பொண்ணைப்பார்த்து எல்லாம் நல்லபடியா முடியட்டும்.'

மண்டபத்திற்குள் கட்டுக்கடங்காத கூட்டம். ரேவதி உள்ளுக்குள் பூரித்துப்போனாள். 'இதை, இதைத்தான் நான் எதிர்பார்த்தேன். கைதட்டாத குறையாக குதூகலித்தாள்.'

அங்கு மூன்று இடங்களில் டேபிள், சேர் போட்டு அமர்ந்திருந்தவர்களிடம் கூட்டம் அள்ளியது. குஜராத் மாங்கல்யம், டெல்லி கல்யாணம், ஓவர்சீஸ் திருமண பந்தம் எல்லா ஜாதக பரிவர்த்தனைகளிலும் முன்பதிவு செய்ய அவர்கள் அறிவுறுத்தவும் மடமடவென அதை தானும் கணவனுமாக பதிவேற்றினாள்.

அதற்குள் மேடையிலிருந்து மைக்கில் அறிவிப்பு. ஜாதகத்தைப்பதிஞ்சவங்கள்லாம் வரிசையா உட்காருங்க.

ரேவதி ஓடிச்சென்று அமர்ந்துகொண்டாள். ஆனால் அங்கு மக்கள் நிக்கக்கூட இடமில்லாமல் நின்றுகொண்டிருந்தனர். 'அப்பப்பா! என்ன கூட்டம்! என்ன கூட்டம்! கடவுளே! ரொம்ப நன்றிப்பா!'

மைக்கில் அந்த மனிதர் தொடர்ந்தார்.

பிள்ளையைபெத்தவாள்லாம் அமைதியா, பொறுமையா நான் சொல்றதைகேளுங்கோ. நான் சொல்றமாதிரி செஞ்சா உங்க பிள்ளைக்கு சீக்கிரம் வரன் அமைஞ்சுடும்.

முதல்ல உங்களுக்கு ஜாதகம் பொருந்தி பொண்ணு வீட்டுக்கு நீங்க தகவல் சொல்லும்போது அவங்க உங்ககிட்ட பொருந்தலைன்னு சொன்னா நீங்க டப்புன்னு போனை வைக்கக்கூடாது.

"அப்படியா பரவால்ல. இருந்தாலும் உங்க பொண்ணு எங்க வீட்டுக்கு மருமகளா வர்றதுக்கு நாங்க குடுத்து வைக்கல. உங்க பொண்ணு எங்க இருந்தாலும் நல்லா இருக்கட்டும். அவளுக்கு நல்ல வரன் அமையட்டும்னு வேண்டிக்கறேன்." "இப்படிச்சொல்லி நீங்க போனை வைக்கணும் அப்பத்தான் அந்தப்பொண்ணுக்கு வரன் அமைய தாமதமானா அடுத்த சுத்துல உங்க ஞாபகம் வரும். உங்க பையனுக்கு பொண்ணு குடுக்கற நினைப்பு அவங்களுக்கு வரலாம்."

அடுத்ததா வரன் அமையறமாதிரி நெருங்கி வரும்போது பேச்சை அளவா பேசணும் நிறைய பேசி உளறிக்கொட்டக்கூடாது. "என் பையன் உங்களுக்கு மாப்பிள்ளை இல்ல, பையன் மாதிரி. எங்க பையன் உங்களையும் அப்பா அம்மா மாதிரி பார்த்துப்பான். கல்யாணத்துக்கப்புறம் நீங்களும் எங்க கூடவே இருக்கலாம்" அப்படின்னு பெருந்தன்மையா பேசணும்.

மேடையில் அந்தமனிதர் தொடர்ந்து அறிவுரைகளை ஒருமணிநேரத்திற்கும் மேலாக தொடர்ந்தபடி இருந்தார்.

இருக்கையில் அமர்ந்திருந்த ரேவதிக்கு ஏனோ மதிய நேரத்தில் வயிறு முட்ட சாப்பிட்டுவிட்டு பள்ளிக்கூடத்தில் பிடிக்காத பாடத்தை தூங்கிவழிய கேட்டுக்கொண்டிருந்த அந்தநாள் ஞாபகம் வந்து இம்சித்தது. 'இந்த மனிதர் பாடம் நடத்துவதை எப்போது நிறுத்துவார்? அது ஏன் பிள்ளையைப்பெத்த நமக்குமட்டும்தான் எல்லாப்பாடமுமா? அப்ப பொண்ணைப்பெத்தவங்களுக்கு?' அவள் கேள்விக்கு பதிலில்லை.

ஒருவழியாக இரண்டுமணிநேரம் கழித்து அறிவுரைப்பாடம் முடிந்தது. ஜாதகப்பரிவர்த்தனை ஆரம்பம். ரேவதி தன் கையில் இருந்த இருபது ஜாதகக்காப்பிகளையும் எண்ணி சரிபார்த்துக்கொண்டாள். 'இது போதும்தானே! பத்தலேன்னா?' அவளுக்குள் சம்சயம்.

சரி! இப்போ பொண்ணோட அப்பா அம்மால்லாம் இங்க வாங்க.

மொத்த மண்டபமும் அவர்களை ஆவலுடன் பார்த்தது. மொத்தம் பத்தே பத்து பேர்.

'அப்போ மண்டபத்துல இருக்கற மத்த எல்லாரும் பிள்ளையை பெத்தவங்களா? முன்னூறு மாப்பிள்ளைங்களுக்கு பத்தே பத்து பொண்ணுங்கதானா? கடவுளே!'

இப்போ நான் ஒவ்வொரு ஜாதகமா எடுத்து அதோட டீடைல்ல ஒண்ணொண்ணா சொல்லுவேன். யாருக்கெல்லாம் ஒத்துவருதோ கையை தூக்கலாம். அப்படியே ஒவ்வொண்ணா சொல்லிட்டே வரும்போது பொருந்தாதவங்க கையை இறக்கிட்டே வரலாம்.

பொண்ணோட நட்சத்திரம் ஸ்வாதி. ரேவதி கையை தூக்கினாள். வயசு. 30 தூக்கின கையை இறக்கினாள். சே! நம்ம பையன் வயசே இருந்தாக்கூட பண்ணிடலாம். ஒரு ரெண்டு வயசு கம்மியா இருந்திருக்கக்கூடாதோ!

"பொண்ணு M.ed படிச்சுருக்கா. PG படிச்ச மாப்பிள்ளையை எதிர்பார்க்கறாங்க." அதைக்கேட்டு சிலர் கைகளை கேழே இறக்கினர். கடைசியாக தூக்கிய இரு கைகள் மிஞ்சவும். இப்போ நீங்க ரெண்டுபேரும் இந்தப்பெண்ணோட அம்மாகிட்ட ஜாதகத்தை வாங்கிக்கோங்க." இரு மாப்பிள்ளைவீடுகளும் தங்களின் ஜாதகத்தைப்பறிமாற துள்ளிக்குதித்து ஓடின.

இப்படியாக வரிசையாக பத்து வரனும் தங்களுக்குபொருத்தமான வரங்களைத் தேடி அறிவித்து முடிந்தது. அனைத்து வரன்களும் 30 வயதுக்கு மேல். அவள் கையில் இருந்த இருபது ஜாதகக்காப்பிகளும் அவளைப்பார்த்து பல்லை இளித்தன. கடவுளே! கொண்டுவந்ததுக்கு ஒரே ஒரு ஜாதகத்தைக்கூட குடுக்க கொடுத்துவைக்கலையே!

அறிவிப்பு தொடர்ந்தது.

இப்போ இந்த மண்டபத்துல இருக்கற வரன் தேடும் மணமகன்கள் தங்களை மேடையில் வந்து அறிமுகப்படுத்திக்கொள்ளலாம்.

ரேவதி மேடையை நோக்கி ஓடினாள். நான் என் பையனைப்பத்தி சொல்லலாமா?

இல்ல. இல்ல. அதை நாங்கள் அனுமதிக்க முடியாது அப்புறம் முன்னூறு பேரும் உங்க பசங்களைப் பத்தி சொன்னா எல்லாரும் எப்போ வீட்டுக்கு போறது? உங்க பையன் இருந்தா வரச்சொல்லுங்க. அவன் தனியா மேடையேறி பேசட்டும்.

அச்சச்சோ! என் பையன் கூச்சப்படுவானே!

கூச்சம்லாம் பட்டா முடியுமா? பையனை வரச்சொல்லுங்க. முடியாதா? அமைதியா போய் உக்காருங்க.

வந்திருந்த மணமகன்கள் தங்களைப்பற்றி சொல்வதற்கு வரிசைகட்டி நின்றார்கள்.

அறிவிப்பாளர் தொடர்ந்தார் இப்போ இங்க நிக்கற மணமகன்கள் தங்களைப்பத்தி விரிவா சொல்லப்போறாங்க. அதுக்கு முன்னாடி என்னைப்பற்றி நான் சொல்லி இந்த அறிமுகப்படலத்தை முதலில் நானே தொடங்கி வைக்கறேன்.

மண்டபம் சட்டென அமைதியானது.

"என் பெயர் வரதராஜன். எனக்கு வயசு அம்பது. பிறந்த வருடம்: 1975 . நல்ல வேலை, கை நிறைய சம்பளம், வீடு, கார், எல்லாம் உண்டு. கல்யாணம் ஆன, ஆகாத, விதவை, விவாகரத்தான எந்தப்பெண்ணாக இருந்தாலும் என்னைப்பிடித்திருந்தால் என்னைத்தொடர்பு கொள்ளலாம். என் தொலைபேசி எண்..!" அவர் சொல்லச்சொல்ல ரேவதிக்கு கண்ணை இருட்டிக்கொண்டு வந்தது.

'கல்யாணமாகி குழந்தைகுட்டிகளோடு இருப்பாரென்று நினைத்த இந்த மனிதருக்கே வரன் வேணுமாமே! கடவுளே!' அவள் மட்டுமல்ல அங்கிருந்த அனைவருமே வாயடைத்துப்போயினர்.

கூட்டம் பெருமூச்சு விட்டுக்கொண்டது.

அடுத்தடுத்த வரன்கள் தங்களைப்பற்றி நம்பிக்கையுடன் தெரிவிப்பதை கேட்பதற்கு கூட்டத்திற்குப்பொறுமையில்லை. சாரிசாரியாக மனிதர்கள் வெளியேறியபடி இருந்தனர். பெண்ணைத்தேடி வந்த எங்களுக்கு இந்த ஆம்பளைப்பசங்களைப்பற்றி தெரிஞ்சு ஆகப்போவதென்ன என்ற அவர்களின் ஆதங்கம் தவறில்லைதான். ரேவதிக்குத்தான் மனசு கேக்கல. கடைசி வரை அமர்ந்திருந்து அத்தனை குழந்தைகளின் அறிமுகங்களையும் கேட்டபடி இருந்தாள். அவளும் ஒரு மகனைப்பெற்றவளாச்சே!

ஒருவழியாக அறிமுகப்படலம் முடிந்தது. நேரமாயிடுத்து. ரேவதி வாசலை நோக்கி விரைந்தாள். வாசலைக்கடைக்கும்போது ஒரு பெரியவர் ஒரு இளைஞனைப்பார்த்து சொன்னது அவள் காதில் அறைந்து ஒலித்தது.

"இங்க பாருடா! என்ன பண்ணுவியோ ஏது பண்ணுவியோ தெரியாது முதலில் ஒரு பெண்ணைத்தேடிப்பிடிச்சு காதலிக்கப்பாரு. நீ காதலிச்சு கல்யாணம் பண்ணினாத்தான் உனக்கு கல்யாணம் நடக்கும்னு நினைக்கறேன் இல்லேன்னா வேலைக்காகாது. "

'ஆமாம்! இவர் சொல்றது சரிதான். நம்ம குழந்தையை நாம சொல்றதைக்கேட்கும் சத்புத்திரனா வளர்த்ததுதான் தப்போ? சமத்தா படிச்சிண்டிருந்த குழந்தையை படிப்பெல்லாம் அப்பறம் பாத்துக்கலாம் முதல்ல காதலின்னா சொல்ல முடியும்? அப்படியே சொன்னா அது நல்லாவா இருக்கும்? என்னவோ போடா மாதவா!'





 

Author: SudhaSri
Article Title: 53. கல்யாண மேளா - லலிதா சங்கர்
Source URL: Nectar Novels-https://nectarnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.