• ஹாய் மக்களே! நம் Nectar Novels தளத்திற்கு நல்வரவு🙏😍😍 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள் nectarnovels.ss@gmail.com 🩷 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...👇 வேதா விஷால் & அனன்யா🙏💖

44 - டாடி ஸ்மார்ட் - அ. கௌரி சங்கர்

VedhaVishal

Administrator
Staff member
Jun 17, 2024
84
328
53
Chennai
"டாடி ஸ்மார்ட் "

எனக்கு பண்டிகைகள் என்றாலே ஒரு அலர்ஜி. பண்டிகைகள் கொண்டாடுவதில் அலர்ஜி கிடையாது. என்ன தான் கொண்டாட்டத்தில் பிரியம் இல்லை என்று வீட்டு மனிதர்களிடம் முகத்தை தூக்கி காட்டிக்கொண்டாலும், அன்றைய தினத்தன்று கிடைக்கும் பஜ்ஜி, வடை, அல்வா, பூரி இத்யாதி உண்பதில் ஒரு அலாதி இன்பத்தை யாருக்கும் தெரியாமல் அனுபவிக்கும் வழக்கம் எனக்கு உண்டு என்பதை இப்பொழுதே உங்களுக்கு மட்டும் சொல்லி வைத்து விடுகிறேன்.
பண்டிகைகள் என்றாலே பெண்களுக்கு கொண்டாட்டம்; சிறுவர்களுக்கு கொண்டாட்டம்; சிறுமிகளுக்கு கொண்டாட்டம்; ஒரே ஒரு பண்டிகை மட்டும் வருட ஆரம்பத்திலேயே வயிற்றில் புளியை கரைக்க ஆரம்பித்துவிடும். அது தான் அந்த தீபாவளி.
இந்த வருட தீபாவளி முடிந்தவுடனே, அடுத்த வருட தீபாவளிக்கும் சில திட்டங்கள் தீட்டினால் தான் கரை சேர முடியும். திட்டம் என்றாலே பைசா தான்; குடும்பத்தில் உள்ள நபர்களுக்கு தகுந்தவாறு, இந்த பட்ஜெட் மாறுபடும்; இதுவரை இந்த பட்ஜெட் குறைந்து போனதாக சரித்திரம் இல்லை. ஒரு காலத்தில் ஆயிரத்தில் முடிந்த பட்ஜெட் தற்போது ஐம்பதாயிரம் வரை நீண்டு கிடக்கிறது.

தீபாவளிக்கு சரியாக இரண்டு வாரங்கள் இருந்தன. பெண்கள் கில்லாடிகள். இரண்டு வாரங்களுக்கு முன்பு சென்றால் பழைய சரக்குகள் கிடைக்கும்; இரண்டு வாரங்கள் என்றால் புதிய சரக்குகள். அதன் பிறகு மீண்டும் பழைய சரக்குகள் என்று ஷேர் மார்க்கெட் தரத்திற்கு அளவுகோல் வைத்து காரியம் சாதிப்பார்கள். தீபாவளிக்கு இரண்டு மாதங்களுக்கு முன்பில் இருந்தே அவர்கள் வயதையொத்த சிநேகிதிகளிடம் Conference மோடில் மணிக்கணக்காக பேசிப்பேசி துல்லியமான முடிவு எடுத்து வைப்பதில் அவர்கள் வல்லவர்கள்.

அன்று சனிக்கிழமை; விடிகாலை எட்டு மணி; எழுந்து பல் துலக்கி, குளித்து டிபன் சாப்பிட்டு முடித்து வீட்டின் முன்புறம் இருந்த மாமரத்தின் கீழே சாய்வு நாற்காலியில் அமர்ந்து கொண்டு நாளிதழில் வெளியாகியிருந்த ராசி பலன் பார்க்கத்தொடங்கினேன். மனைவியின் குரல் கேட்டது.
"என்னங்க; அரை மணி நேரத்தில் நாம் தி. நகர் போறோம்; அங்கெ தீபாவளிக்கு பசங்களுக்கும், நமக்கும் துணிமணிகள் எடுக்கிறோம்; மதியம் அங்கேயே சாப்பிடுறோம்; சாயந்திரம் திரும்பி வர்றோம்."
"என்னம்மா இது, பொசுக்குன்னு சொன்னா எப்படி ? "
"இதுல என்னங்க இருக்கு; ஹூம், கிளம்புங்க."
" டியர், தப்பா நினைச்சிக்கிடாதே; நீங்க எல்லோரும் போயிட்டு வாங்க; வேணும்கிற பணம் இல்லேன்னா, கார்டு தந்திடுறேன். எனக்கு மணிக்கணக்கா ஜவுளிக்கடையில் நின்னு கிட்டு இருக்க முடியாது; ஏற்கனவே மூட்டு வலி உசிரை வாங்குது. நான் வீட்டிலேயே “ரிலாக்ஸ்” பண்ணிக்கிடுறேன்."
"ஒரு நிமிஷம். நான் சொல்றதை கேளுங்க. நாம நிறைய கடைகளுக்கு போகல; ஒரே ஒரு கடைக்குத்தான் போறோம்; புதுசா தொடங்கியிருக்காங்க; பேரு - "டாடி ஸ்மார்ட்” - சொல்லப்போனால் அப்பாக்களுக்கு புடிச்ச இடம். "
"அம்மிணி; நீங்க போயிட்டு வாங்க." - சொல்லிவிட்டு ஆறாம் பக்கம், மூன்றாம் பத்தியில் படித்தும் படிக்காமலும் விட்டு விட்டு வந்த வாக்கியத்தை ஒருவழியாக தேடி, மூக்கை நுழைத்தவனுக்கு, காதில் குறுகுறுத்தது - "அது என்ன “டாடி ஸ்மார்ட்"? - போய் பார்த்துட்டு வந்தா தான் என்ன?"
சட்டென்று உச்ச ஸ்தாயியில், ஒரு குரல் கொடுத்தேன். "எம்மா; நானும் வரேன்".
பசங்களுக்கு ஒரே உற்சாகம்; "அம்மா, நம்ம டாடியும் வராராம்".
அடுத்த ஒரு மணி நேரத்தில், உபேர் புக் செய்து, தி. நகர். பேருந்து நிலையத்திற்கு ஒன்பதரைக்கே வந்து சேர்ந்தோம்; இப்படி கடை திறக்கும் நேரத்தில் வந்தாத்தான், கொஞ்சமாவது துணிகளை பார்க்க முடியும்; எல்லாம் மனைவியின் திட்டங்கள் தான். அப்படியே ரங்கநாதன் தெருவையும் தாண்டி, ராமநாதன் தெருவில் மூக்கை நுழைத்ததுமே ஒரு பிரமாண்டமான கட்டிடம் தெரிந்தது. தென்னை மர உயரத்திற்கு ஒரு போர்டு மாட்டி வைத்திருந்தார்கள் - "டாடி ஸ்மார்ட் ".
நுழைவாயில் அசத்தலாக இருந்தது.
நுழைந்தவுடன், ஆண்களை தனியாக ஓரங்கட்டினார்கள்; பெண்களை தனியாக ஓரம் கட்டினார்கள். ஒரே மாதிரியான சேலைகள் உடுத்திய அழகிய இளம் மங்கைகள் நமது குடும்ப பெண்களுக்கு ஆரத்தி எடுத்தார்கள்; குங்குமப்பொட்டு வைத்தார்கள்; பூ சூடி விட்டார்கள்; அப்படியே இனிப்புகளை பெண்களின் வாய்களில் ஊட்டி விட்டார்கள். நமது பெண்களின் தோள்களில் இளம் வயது தோழிகளுக்கு சவால் விடும் வகையில் கைகளைப்போட்டுக்கொண்டு பெண்களை கடையின் பிரதான பகுதிக்கு கூட்டிக்கொண்டு செல்ல ஆரம்பித்தனர்.
இந்த ஆரம்ப கட்ட உபசரிப்புகளிலேயே நமது பெண்கள் முற்றிலும் மயங்கி, கண்டிப்பாக ரூபாய் 10 ஆயிரத்திற்கு குறையாமல் துணி வாங்கினால் தான் ஸ்டேட்டஸ் keep up பண்ண முடியும் என்று மனதில் உறுதியை எடுத்துக்கொண்டார்கள். இதைப்பார்த்தவுடனே, வீட்டு வியாபாரத்தின் உச்சகட்ட லிமிட் வியாபாரம் என்னவாக இருக்கமுடியும் என்று என்னுடைய மனது நான் அறியாமலே தீர்மானித்துக்கொண்டது.
ராசிபலனில் நம்ம ராசிக்கு சொல்லியிருந்த பலன்கள் அப்படியே நினைவுக்கு வந்து திமிறிக்கொண்டு இருந்தன. "எதிர்பாராத செலவுகள் உங்கள் கைகளை அதிகம் பிசையவைக்கும் ."
பிரதான ஹாலை கடந்து, அடுத்த கட்டத்திற்கு செல்லும் வழி இரண்டாக பிரிய ஆரம்பித்தது.
இப்போது பெண்கள் விலகிச்செல்ல, உயர் ரக வேஷ்டிகள் அணிந்த மூன்று ஆண் ஊழியர்கள் என்னை வழி மறித்தார்கள்; ஒருவர் பேச ஆரம்பித்தார்:
"அண்ணே; நீங்க துணி எடுக்கணும்னு நினைச்சா அவுங்க கூட அந்த வழியா போங்க; “ரிலாக்ஸ்” பண்ணனும்னா, எங்க கூட வாங்க;"
எந்தவிதமான மறுப்பும் சொல்லாமல், நான் இரண்டாவது வழியை தேர்ந்தெடுத்து விட்டேன். அந்த ஊழியர் என்னை மிக்க "மரியாதையுடன்" கூட்டிக்கொண்டு சென்றார். இருவரும் லிப்ட் மூலம் பயணம் செய்தோம். ஆறாவது மாடிக்கு வந்து சேர்ந்தோம்.
…..
வாசலைத்தாண்டியவுடனே, திகைப்புக்கு மேல் திகைப்பு. கண்களின் முன்பாக விரிந்து இருந்தது ஒரு பெரிய ஹால்; அதை கிட்டத்தட்ட எட்டு பகுதிகளாக பிரித்து வைத்து இருந்தார்கள். வங்கிகளைப் போன்று போர்டுகள் தலைக்கு மேல் தெளிவாக தொங்கிக்கொண்டு வழிகாட்டிக்கொண்டு இருந்தன.
ஊழிய நண்பர் முதல் பகுதிக்கு என்னைக் கூட்டிக்கொண்டு சென்றார்; ஒரு பெரிய வட்ட மேசை போடப்பட்டு இருந்தது; மேசையைச்சுற்றிலும் இருபது நாற்காலிகள் இருந்தன. மேசையின் மீது தினசரிகள் மற்றும் வாரப்பத்திரிகைகள் கிடந்தன. பத்து நபர்கள் நாற்காலிகளில் அமர்ந்திருந்து, பத்திரிகைகள் படித்துக்கொண்டிருந்தார்கள்.
ஊழியர் என்னிடம் சொன்னார்: "விரைவில் வேலை முடிந்து விடும் என்று தீர்மானிக்கும் குடும்ப தலைவர்கள், அவர்களுக்கு விருப்பமான புத்தகங்கள், பத்திரிகைகள் போன்றவற்றை இங்கு அமர்ந்து படித்து விட்டு சென்று விடுவார்கள்." (அதாவது இன்னும் சில நொடிகளில் வருகின்ற பேருந்துகளுக்காக ஒற்றைக்காலில் பேருந்து நிறுத்தங்களில் நின்று கொண்டு இருப்பவர்கள் போன்றவர்கள் இவர்கள்.)
அடுத்ததாக இரண்டாவது கட்டத்திற்கு கூட்டிக்கொண்டு சென்றார்.
அங்கு ஆறு சோபாக்கள் கிடந்தன. நன்றாக இரண்டு கால்களையும் நீட்டிக்கொண்டு அமர்ந்து கொள்ளலாம்; கால்களை மிகவும் சௌகரியமாக வைத்துக்கொள்ளுவதற்கென்ற தனித்தனியாக டீப்பாய்கள். ஒரு சோபாவுக்கு மூன்று நபர்கள் வீதம் கிட்டத்தட்ட 18 நபர்கள் அமரலாம்; ஐந்து நபர்கள் தங்கள் மொபைல் போன்களை நோண்டிக்கொண்டு இருந்தார்கள்; இன்னும் ஐந்து நபர்கள் கால்களை நன்றாக நீட்டிக்கொண்டு தியானத்தில் இருந்தார்கள். ஒரு சிலர் உண்மையாகவே உறங்கிக்கொண்டு இருந்தார்கள். தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற தென்னிந்திய மொழிகளில் அவர்கள் விடும் குறட்டை சத்தங்கள் திடீர் திடீர் என்று ஏறிக்கொண்டும், இறங்கிக்கொண்டும் இருந்தன. அவர்களை பார்த்தவுடன், ரயில்களில் மேல் படுக்கைகளில் உறங்கிக்கொண்டு, அருகில் உள்ளவர்களை சுத்தமாக உறங்க விடாமல் செய்யும் குறட்டை ஆசாமிகளின் நினைவுகள் வந்து போயின.
"வீடுகளில் கிடைக்காத ஒரு நிம்மதியான உறக்கம் இங்கு கிடைக்கிறதே," என்ற ஒரு நினைப்பும் என்னுடைய நெஞ்சை மயிலிறகு போன்று வருடத்தொடங்கியது.
அடுத்ததாக நண்பர், மூன்றாவது கட்டத்திற்கு கூட்டிக்கொண்டு சென்றார்.
அங்கு ஒரு நீளமான மேசை இருந்தது. நான்கு ஜோடிகள் எதிர் எதிர் நாற்காலிகளில் அமர்ந்து கொண்டு செஸ் ஆடிக்கொண்டு இருந்தார்கள்; தங்கள் முகங்களை மிகவும் சீரியசாக வைத்துக்கொண்டு இருந்தார்கள். அவர்கள் அருகில் நின்றுகொண்டு அவர்கள் விளையாடுவதை பார்த்த என்னை அவர்கள் எள்ளளவும் கவனித்த மாதிரி தெரியவில்லை.
இன்னொரு மேசை அருகில் கேரம் போர்டு விளையாடிக்கொண்டு இருந்தார்கள் நான்கு ஆசாமிகள். அனைவரும் 60 வயதை தாண்டியவர்கள். ஒரே கூச்சலும், சத்தமும் வந்து கொண்டிருந்தது. இத்தனை உற்சாகத்தை அவர்கள் தங்கள் வாழ்நாட்களில் அனுபவித்து இருப்பார்களா என்ற சந்தேகமும் வந்து போனது. இவர்கள் கூச்சலை கேட்டு, மற்ற கட்டங்களில் இருந்த ஆசாமிகள் அப்போதைக்கப்போது தலைகளை உயர்த்திப்பார்த்து புன்முறுவல் செய்து விட்டு தங்கள் வேலைகளில் கவனம் செலுத்த தொடங்கினர்.
இப்போது நான்காவது கட்டம் வந்தது.
ஒரு சுவற்றில் கட்டப்பட்டு இருந்த துணியால் ஆன திரையில் நிறைய பலூன்கள் கட்டி வைக்கப்பட்டிருந்தன. ஒருவர் நீண்ட துப்பாக்கி ஒன்றை வைத்துக்கொண்டு பலூன்களை சுடுவதற்காக நின்று கொண்டு இருந்தார். பெசன்ட் நகர் கடற்கரை மற்றும் தீவுத்திடல் பொருட்காட்சி போன்ற இடங்களில் பலூன் சுடும் விளையாட்டுகள் நடத்துவார்கள் - அதே தான் இதுவும். இரண்டு நபர்கள் தங்கள் திறமைகளை சோதித்துக்கொண்டு இருந்தார்கள். அருகில், சிறிது தூரம் தள்ளி ஒருவர் கையில் வைத்திருந்த பந்துகளை ஒன்று ஒன்றாக எடுத்து, குறி பார்த்து, தூரத்தில் வைத்திருந்த காலி டப்பாக்கள் மேல் எறிந்து கொண்டு இருந்தார்.
அடுத்ததாக ஒரு மேசையின் மீது ஒரு கிளிக்கூண்டு இருந்தது. அதில் இருந்த கிளியை வெளியில் வரவழைத்து, கிளி ஜோஸ்யம் சொல்லிக் கொண்டிருந்தார் ஜோசியர். ஜோஸ்யம் கேட்பதற்கு ஆறு நபர்கள் வரிசையில் காத்திருந்தனர்.
என்னுடைய திகைப்பு எளிதில் அடங்குவதாக தெரியவில்லை. ஐந்தாவது கட்டமும் வந்தது. விரிப்புகள் அடங்கிய பத்து கட்டில்கள் கிடந்தன. மூன்று நபர்கள் உறங்கிக்கொண்டிருந்தனர்.
இப்போது கடைசி கட்டத்திற்கு நண்பர் கூட்டிக்கொண்டு வந்தார். வாழ்க்கைக்கு மிகவும் தேவையான கட்டம் இது. இங்கு காபி, தேநீர், வடை, பஜ்ஜி, சமோசா மற்றும் பிஸ்கெட்டுகள் விற்கும் ஸ்டால்கள் இருந்தன.
என்னை கூட்டிக்கொண்டு வந்த நபர் சொல்ல ஆரம்பித்தார்.
"சார், எங்க முதலாளி ரொம்ப நல்லவர்ங்க; வெளி நாடுகளுக்கு சென்று வந்தவர்; கஷ்டப்பட்டு முன்னேறியவர். ஜவுளிக்கடைகளில் மற்றும் நகைக்கடைகளில், இப்படி குடும்பத்திற்காக உழைத்து, உதவும் கணவன்மார்கள் மற்றும் ஆண்கள், வீட்டுப்பெண்கள் தங்கள் வியாபார வேலைகளை முடித்துக்கொண்டு வரும் வரையில் நின்று கொண்டும், அருகில் உள்ள கம்பங்களில் சாய்ந்து கொண்டும், மணிக்கணக்காக சிரமப்படுவதைக் கண்டு அவர்களுக்கு ஓய்வு தரும் வகையிலும், பயன் தரும் வகையிலும் இந்த மாதிரியான ஏற்பாடுகளை கொண்டு வந்தார். இந்த அமைப்பு வெளி நாடுகளில் ஒரு சில கடைகளில் மட்டுமே உள்ளன. இந்தியாவில் வேறு எங்கும் இந்த அமைப்புகள் இதுவரை வந்த மாதிரி தெரியவில்லை.
இங்கு நீங்கள் பயன்படுத்தும் எந்த சேவைகளுக்கும் பணம் தரவேண்டியதில்லை. அத்தனையும் இலவசம் தான். உணவும் கூட இலவசம் தான். இரவு கடை மூடும் வரை நீங்கள் இங்கு தங்கலாம்; படிக்கலாம்; விளையாடலாம், தூங்கலாம். “
….
நண்பர் சொல்லிவிட்டு, விறு விறுவென்று அடுத்த “குடும்பத்தலைவரை” கூட்டிக்கொண்டு வர சென்று விட்டார். சில வினாடிகள் அவரை பார்த்துக்கொண்டு இருந்த நான் முதல் கட்டத்திற்கு சென்றேன்; அரை மணி நேரம் பத்திரிகைகளை படித்தேன்; ராசி பலன்கள் பார்த்தேன். வீட்டில் நான் படித்துக்கொண்டு இருந்த பத்திரிகை வேறு - இந்த பத்திரிகை வேறு. அன்றைய தினம் சிறப்பாக அமையும் என்று எனக்கு ராசி பலன் சொன்னது.
அப்படியே, ஒரு “லுக்” விட்டேன். அணைத்து ஆண்களும் தங்களை மறந்து ஜென் மனோ நிலையில், படித்துக்கொண்டோ, விளையாடிக் கொண்டோ, தூங்கிக்கொண்டோ இருந்தார்கள். அவர்களுடைய ராசி பலன்களும் நன்றாகத்தான் அமைந்திருக்கும் என்று தோன்றியது.
இப்போது இரண்டாவது கட்டத்திற்குச்சென்று, சோபாவில் சாய்ந்து கொண்டு மொபைல் போனை நோண்டினேன். அப்படியே மூன்றாவது கட்டத்திற்குச்சென்று, ஒரு நபரிடம் செஸ் விளையாடினேன். கேரம் நமக்கு ஒத்து வராது என்று தோன்றியதால், அந்த மேசையை விட்டு விலகி நடக்க முயன்றேன். அதற்குள் நான்காவது நபரை தேடிக்கொண்டிருந்தவர்கள் என்னைப்பிடித்து இழுத்து உட்கார வைத்தார்கள். எனக்குத்தெரிந்தவரையில் குழிக்குள் காய்களை போட முயன்றேன். என்னுடைய கூட்டாளியை வெற்றிகரமாக தோற்க வைத்தேன்.
"படக்" என்று ஒரு விண்ணப்பத்தை எடுத்து என் முன்னால் வைத்தார் ஒருவர். என்னுடைய பார்வையை பார்த்து விட்டு சொன்னார்; "நாங்க அடிக்கடி இங்கே வந்து கொண்டு இருக்கிறோம். எங்களுக்கும் இப்படி விளையாடுறதுல சந்தோசம்; மனைவிமார்களுக்கும் வாரம் ஒருமுறை இங்கு வந்து துணிமணிகள் வாங்குகிற சந்தோசம். நாங்க "டாடி ஸ்மார்ட் கேரம் அங்கத்தினர்கள் சங்கம்," என்று தொடங்கியிருக்கிறோம். நீங்களும் மெம்பெர் ஆகிடுங்க. காசு எதுவும் தரவேண்டாம்."
இப்படி சங்கம் ஆரம்பிக்கும் அளவுக்கு இந்த சேவை “குடும்பத்தலைமகன்களை” கவர்ந்து விட்டதே என்ற சிந்தனை தோன்ற, நாடி நரம்புகள் புல்லரித்து சிலிர்த்தன. "ஆண்களின் சொர்க்கம்" என்று சொன்னால் மிகையாகாது என்று மனதிற்குள் சொல்லிக்கொன்டேன்.
பிறகு, பலூன் தளத்திற்குச்சென்று, துப்பாக்கியால் 20 குண்டுகளை காலி செய்தேன். பலூன்கள் அப்படியே சாய்ந்து தொங்கிக்கொண்டு இருந்தன. சில பலூன்கள் என்னுடைய "குறிபார்க்கும் திறமையை" பார்த்து தங்களுக்குள் நகைத்தன. அடுத்ததாக பந்துகளை வீசி டப்பாக்களை காலி செய்ய முயன்றேன். இரண்டு பந்துகள் கிழிந்து தொங்கி ஒரு மூலையில் ஒதுங்கின. டப்பாக்கள் அப்படியே குந்திக்கொண்டிருந்தன.
கிளி ஜோஸ்யம் பார்ப்பதற்கு பத்து நபர்கள் காத்துக்கொண்டிருந்ததால், அப்படியே அடுத்த கட்டத்திற்கு நகர்நதேன். இப்படி இரண்டு மணி நேரங்களை காலி செய்தேன்.
படுக்கை ஒன்றை reserve செய்து அதில் கால்களை நீட்டி படுத்தேன்; ஒரு மணி நேரம் உறங்கி போனேன்; நேரம் மணி ஒன்றாக இருந்தது. பலகாரக்கடைகளுக்கு சென்று ஒரு தயிர் சாதம் வாங்கி சாப்பிட்டேன். மெதுவடை சாப்பிட்டேன்.
மீண்டும் முதல் கட்டத்திற்கு சென்று புத்தகங்கள் படித்தேன். இப்படி ஆறு கட்டங்களுக்கும் அன்றைய தினம் இரண்டு முறை சென்று வந்தேன்.
மாலை ஆறு மணியாகியது. ஆனால் நேரம் மிகவும் பயனுள்ளதாக கழிந்தது போன்று எனக்கு தோன்றியது. ஒரு சமோசாவை தின்று விட்டு காபி குடித்து முடிக்கவும், போன் மணியடித்தது.
டியர் மனைவி தான்.
"என்னங்க; துணி வாங்கி முடிச்சிட்டோம். கடைக்கு வெளியே வந்துடுங்க. வீட்டிற்கு புறப்படலாம்."
"அம்மிணி; அதுக்குள்ளாறவா முடிச்சிட்டீங்க? இன்னும் இரண்டு மணி நேரங்கள் இருந்து பொங்கலுக்கும் சேர்த்து வாங்கிட்டு வரணும்னாலும் வாங்க. நான் கடை மூடுறவரைக்கும் கூட இங்கு காத்திருக்கிறேன்."
மனைவியின் மெண்டல் வாய்ஸ் எனக்கு கேட்டது - "இந்த ஆசாமிக்கு இப்ப என்னாச்சு?"
.....
ஆறு நாட்கள் கழிந்தன.
வழக்கம் போல நம்ம வீட்டு மாமரத்திற்கு கீழே அமர்ந்து கொண்டு பத்திரிக்கையில் நான்காம் பக்கத்தில் பிரிண்ட் ஆகியிருந்த ராசி பலனை துழாவிக்கொண்டு இருக்கும்போது மொபைல் போன் மணியடித்தது.
முன் பின் தெரியாத ஒரு நபர். (எப்படி நம்ம போன் நம்பர் இவருக்கு கிடைத்திருக்கும் ?)
"யாராக இருக்கும்?"
"சார், நீங்கள் முகநூலில் விலாவாரியாக எழுதியிருந்த “டாடி ஸ்மார்ட் ” பற்றிய பதிவை படித்தேன். ஒரு வழியாக உங்கள் மொபைல் போன் நம்பரை தேடிக்கண்டு பிடித்து விட்டோம். இன்னைக்கே நாங்க குடும்பத்தோடு அங்கெ போகலாம்னு இருக்கோம். சரியான விலாசம் கொடுக்க முடியுமா சார்?"
……
"பொடேர்" என்று உச்சந்தலையில் மரத்தில் இருந்து ஒரு மாங்காய் விழ, நான் கண் விழித்துப்பார்க்க, அப்போது தான் எனக்கு தெரிந்தது - கடந்த ஒன்றரை மணி நேரமாக நாற்காலியில் இருந்தவாறே, கனவு கண்டு உறங்கியிருக்கிறேன் என்று.
 

Author: VedhaVishal
Article Title: 44 - டாடி ஸ்மார்ட் - அ. கௌரி சங்கர்
Source URL: Nectar Novels-https://nectarnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.